அன்னை ராஜராஜேஸ்வரி படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக மணிராஜ் தளம்
நவராத்திரி இரண்டாம் நாளன்று அம்பிகையை திரிபுரா வாக வழிபட வேண்டும். சிலர் கௌமாரியாகவும் வழிபடுவார்கள்.
படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக மணிராஜ் தளம்:
பெயர்கள் தான் வேறு, அம்பிகையின் ஸ்வரூபம் ஒன்றே. இன்றைய தினம் அம்பிகையை ராஜ ராஜேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும். மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிபுராவாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்றும் மஞ்சள், சிவப்பு மலர்கள் அம்பிகைக்கு ஏற்றது. கொன்றைப்பூக்கள் கிடைத்தால் விசேஷம். இன்று வழிபடவேண்டிய தேவி ப்ரஹ்மசாரிணி ஆவாள்,
ப்ரஹ்மசாரிணி படத்துக்கு நன்றி கூகிளார்
ஆகையால் துளசி பத்ரம் கிடைத்தாலும் நன்று, மஞ்சள் வஸ்திரத்தைக் குழந்தைக்கு அணியத் தரலாம்.
அரிசி மாவு அல்லது கோதுமை மாவினால் கட்டங்கள் அல்லது பூக்கள் நிரம்பிய கோலம் போடலாம். மஞ்சள் நிறமுள்ள சாமந்திப் பூக்களும் மஞ்சள் நிறமுள்ள முல்லைப் பூக்களும் அர்ச்சனைக்கு உகந்தவை. இன்றைய நிவேதனம் காலையில் புளியோதரை. மாலையில் பயறுச் சுண்டல்.
புளியை எலுமிச்சை அளவு எடுத்து ஊற வைத்துக் கொண்டு சாறு எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு (நல்லெண்ணெய்) மி.வத்தல், கொத்துமல்லி விதை, பெருங்காயம் வறுக்கவும். இன்னொரு வாணலியில் எண்ணெய் விடாமல் எள், கடுகு, வெந்தயம் வறுக்கவும். இவற்றை வறுத்த மி.வத்தல், தனியாவோடு சேர்த்துப் பொடித்து வைக்கவும். கல்சட்டி அல்லது உருளி அல்லது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு முதலில் தேவையான மி.வத்தலைப் போட்டுக் கறுப்பாக ஆகும்வரை வறுக்கவும். இம்முறையில் மி.வத்தலில் காரம் அதிகம் புளிக்காய்ச்சலில் இறங்காது. மிளகாய் கறுப்பானதும் கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை என அவரவர் விருப்பம் போல் தாளிக்கவும். கருகப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும். மஞ்சள் பொடி தேவையான அளவு சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் தேவைப்படும். கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றிக் கொண்டு உப்புச் சேர்க்கவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது வறுத்துப் பொடித்த பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். புளிக்காய்ச்சலுக்கு வெல்லம் சேர்ப்பவர்கள் சேர்க்கலாம். கொதித்துச் சேர்ந்ததும் கீழே இறக்கி வைக்கவும்.
சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி வைக்கவும். ஆறியதும் ஒரு டேபிள் ஸ்பூன் புளிக்காய்ச்சலைப் போட்டு நன்கு கலக்கவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் சாதம் அல்லது புளிக்காய்ச்சல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
பயறுச் சுண்டல்: முதல் நாள் இரவே பயறை ஊற வைக்கவும். மறுநாள் காலை இரண்டு மூன்று தரம் களைந்து வைக்கவும். பின்னர் சுண்டல் செய்யும் நேரத்தில் ஒரு குக்கரில் தேவையான அளவு ஜலம் வைத்துப் பயறை மீண்டும் நன்கு களைந்து உப்புச் சேர்த்து வேக வைக்கவும். நான்கு விசில் கொடுத்தால் போதுமானது. பின்பு குக்கரைத் திறந்து ஜலத்தை வடிகட்டி விட்டுச் சுண்டலுக்குத் தாளிக்க வேண்டும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம், மிவத்தல், கருகப்பிலை தாளிக்கவும். வெந்த பயறை அதில் கொட்டவும். தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடி சேர்க்கலாம். சற்று நேரம் சுண்டலை வதக்கிக் கொண்டு தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். நன்கு கிளறவும். நிவேதனம் செய்த பின்னர் பரிமாறவும்.
50 கிராம் வெண்ணெய், உப்பு அரை டீஸ்பூன், சர்க்கரை 50 கிராம் போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும்.
அதில் ஒரு கிண்ணம் மைதா மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் ரவை, அரைக்கிண்ணம் கோதுமை மாவு சேர்க்க வேண்டும். மாவுக் கலவை முழுவதும் தேய்த்த வெண்ணெய், சர்க்கரைக் கலவையோடு சேர்ந்ததும் அரைக்கிண்ணம் பாலை விட்டுப் பிசைந்து ஊற வைக்கவும். சுமார் இரண்டு மணி நேரம் ஊறட்டும். அதன் பின்னர் சப்பாத்திக்கல்லில் போட்டு சப்பாத்திகளாக இட்டு டைமண்ட் மாதிரி வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு எண்ணெய் காய்ந்ததும் வெட்டி எடுத்தவற்றைப் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும். நன்கு சிவப்பாக வரும் வரை வேக விடலாம். பின்னர் நிறம் மாறிக்கும். முதல்நாள் தித்திப்புச் செய்யணும் என்பதற்காகவும் இது செய்து கையில் வைத்துக் கொண்டால் மதிய நேரத்தில் வருபவர்களுக்குக் கொடுக்க ஏதுவாக இருக்கும் என்பதாலும் இதைச் செய்து வைத்திருக்கிறேன்..
நாளைதானே இரண்டாம் நாள்? புளியோதரையில் காரம் இருக்க வேண்டும் எனக்கு. ஆரோக்ய சமையல் ஹேமா புளியோதரையில் எள் போட மாட்டார்கள் என்றும் அதற்கு ஒரு காரணமும் சொன்னார்.
ReplyDeleteநாளைய வழிபாடு குறித்து அறியாதவர்கள் முதல்நாளே தெரிஞ்சு வைச்சுக்கலாமே! அதான் ஒரு நாள் முன்னாடியே போட்டுடறேன். :) எள் வாசனைக்குத் தான். ஏன் வேணாம்னு சொல்றாங்க! காரணம் என்னனு சொல்லுங்க. புளிக்காய்ச்சலில் நான் வெல்லம் சேர்க்க மாட்டேன். அதுக்காக ரொம்பக் காரமும் இருக்காது!
Deleteஇராஜராஜேஸ்வரி அவர்கள் நினைவு ஒவ்வொரு விழாவின் போதும் வரும்.தினம் ஒரு பதிவு பக்தி பதிவு போட்டார்கள்.
ReplyDeleteநாளைய வழிபாடு நிவேத்னம் என்று பதிவு அருமை.
ஆமாம், :( கடைசியில் அவங்க இறந்தது கூட ரொம்ப தாமதமாத் தான் தெரிய வந்தது! :(
Deleteபுளிக்காய்ச்சல் செய்முறை அருமை. ஃபுல்ஸ்டாப்பைக் கவனிக்காமல் "ஒரு ஸபூன் தேவைப்படும் புளிக்கரைசலை ஊற்றிக்கொண்டு.." - அப்போ மீதிப் புளிக்கரைசலை என்ன பண்ணறதுன்னு நினைச்சேன். சக்கர் (ரை) போளி கேள்விப்பட்டிருக்கிறேன். ஷங்கர்பாளி கேட்டதில்லை.
ReplyDeleteஹாஹாஹா, புளிக்கரைசல் ஒரு ஸ்பூன்? ஹெஹெஹெஹெஹெ, சக்கரைப் பேடானு சொல்லலாம், நெல்லைத் தமிழன்! அதோட செய்முறை ஏற்கெனவே போட்டிருக்கேன். இருந்தாலும் மறுபடி சொல்றேன். :)
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteவரவுக்கு நன்றி.
Deleteஷங்கர்பாளி - புதிதாய் இருக்கிறது. தொடர்கிறேன்.
ReplyDeleteஅட? மராட்டி நண்பர்களே இல்லையா? அவங்க உணவில் இது முக்கிய இடம் பிடிக்குமே. எல்லாம் நம்ம மைதாமாவு பிஸ்கட் தான் வெங்கட்! :)
Deleteஇம்முறை எதோ இரண்டு நாட்கள் எக்ஸ்ட்ராவாகக் கிடைத்துள்ளதாகச் சொன்னார்களே..
ReplyDeleteபுளியோதரை இப்படியும் செய்வதுண்டு என்றாலும் எங்கள் ஊர் பக்க ப் (நெல்லை) புளியோதரை வித்தியாசமானது. நோதனியா, நோ எள்ளு...
கீதா
நான் எள் சேர்ப்பதில்லை! தனியா உண்டு! :) உங்க செய்முறையையும் கொஞ்சம் சொல்லுங்க, எப்படினு செய்து பார்ப்போம்.
Delete