எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 12, 2021

மலை ஏற்றத்தில் ஜெயிச்சேன்.!

 தம்பியின் இரண்டாவது மகனுக்கு ஏப்ரலில் திருமணம் நிச்சயமானது. அப்போவே நவம்பரில் கல்யாணம் என முடிவு செய்திருந்தார்கள். எனக்கு என்னமோ ஆரம்பத்தில் இருந்தே அது நல்ல மழைக்காலமே எனத் தோன்றியது. தம்பியிடம் சொல்லி ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பருக்குள் திருமணத்தை முடிக்குமாறு சொன்னேன். ஆனால் முடியலை. அதோடு அப்போது என் உடல்நிலையும் மோசமாக இருந்ததால் எல்லோருக்குமே அப்போத் திருமணத்தை வைத்திருந்தால் என்னால் கலந்துக்க முடியுமானு யோசிச்சாங்க.  ஆகவே நவம்பரில் தான் திருமணம் என்பது உறுதி ஆகிவிட்டது. இருந்தாலும் செப்டெம்பர் வரை என் உடல்நிலை பூரண குணம் அடையாததால் கல்யாணத்திற்குப் போக முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் கடந்து இறைவன் அருளால் நான் ஓரளவுக்கு நடமாடவும் வீட்டு வேலைகளைக் கவனிக்கவும் ஆரம்பித்தேன்.

முதலில் தீபாவளி அன்றே சென்னை கிளம்பும்படி இருந்தது. ஆகவே அதற்கேற்றாற்போல் திட்டம் போட்டுக் கொண்டோம். தம்பி வீட்டில் தங்குவதற்கான வசதிகள் இல்லை. வீடு சின்னது. இருப்பது ஒரு கட்டில். கல்யாண சமயம் என்பதால் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும். அந்தச் சமயம் போய் நம்மையும் அவங்களே கவனிக்குமாறு உட்கார வேண்டாம் என்பதால் என் மைத்துனர் மூலம் அவர் அலுவலகத்தின் ஹாலிடே ஹோம்(உண்மையில் அது செர்வீஸ் அபார்ட்மென்ட்) ஏற்பாடு செய்து விட்டார். அதுவும் தம்பி வீட்டருகேயே ஒரு கிலோ மீட்டருக்குள் இருந்ததால் போய்வரவும் வசதியாக இருக்கும் என்று அதையே உறுதி செய்து கொண்டு தம்பிக்கும் தெரிவித்தோம். 


எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. ஆறாம் தேதி சனிக்கிழமை கிளம்புவதாகத் திட்டம். வெள்ளியன்றே வழியில் சாப்பிடுவதற்கான காலை உணவைத் தயார் செய்து கொண்டோம். மதியம் சாப்பிடத் தம்பி வீட்டிற்குப் போயிடலாம். அதோடு அன்று தான் வெங்கடாசலபதி சமாராதனை வைத்திருந்தார்கள். திங்களன்று சுமங்கலிப் பிரார்த்தனை. அப்போதே மழை சென்னையில் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுதும் ஆரம்பித்து விட்டது. என்றாலும் யாரும் இவ்வளவெல்லாம் மோசமாக ஆகும்னு நினைக்கவில்லை போல. ஆனால் இங்கிருந்து நாங்கள் கிளம்புகையில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் எங்கள் தளத்தில் எங்களுடன் இருக்கும் அண்டை வீட்டார் என் உடல் நிலை குறித்து ரொம்பவே கவலையைத் தெரிவித்தார்கள். அதோடு மழையும் சேர்ந்து கொள்ளவே அனைவருக்கும் கவலை தான். பார்த்துப் போங்க,பார்த்துப் போங்க என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள். எங்கள் வீட்டில் வீட்டு வேலைகளில் உதவும் பெண்ணுக்கும் கவலை.  "மாமி! பத்திரமா இருங்க. கையில் ஸ்டிக் இல்லாமல் நடக்காதீங்க. மழைத்தரையில் பார்த்துக் காலை வைங்க. மேடு, பள்ளம் தெரியாமல் போயிடும்." என்றெல்லாம் சொல்லி எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்.

நாங்க சென்னைக்குக் கிளம்புவது உறுதியானதுமே ஶ்ரீராமிற்கு வாட்சப் மூலம் தகவல் தெரிவித்தேன். நாங்கள் சனிக்கிழமை காலையே வரப் போவதால் அன்று மாலையோ அல்லது மறுநாள் ஞாயிறன்றோ பார்க்கலாம் எனச் சொன்னேன். என்னால் அவங்க குடியிருப்புக்குப் போக முடியாது. அது இருப்பது இரண்டாம் தளம் என்பதோடு லிஃப்ட் வசதி எல்லாம் இல்லை/ ஆகவே தான் அவரை வரச் சொன்னேன். கூடவே அவரோட பாஸையும் அழைத்து வருமாறு சொல்லி இருந்தேன். ஏன்னா ஶ்ரீராமை எனக்கு அடையாளம் தெரியணும் இல்ல? அதான்! எல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டது. நாங்கள் சர்வீஸ் அபார்ட்மென்டை அடைந்ததுமே ஶ்ரீராமுக்குத் தொலைபேசித் தகவல் தெரிவித்து ஞாயிறன்று வரும்படி சொல்லணும்னு முடிவு செய்து கொண்டேன். ஏனெனில் திடீரென சனிக்கிழமை தி.நகரில் ஒரு முக்கிய வேலை வந்து விட்டது. சனிக்கிழமை காலை ஐந்தரை மணியிலிருந்து ஆறுக்குள் கிளம்ப முடிவு செய்து கொண்டு  Drop Taxi க்குத் தொலைபேசியில் நாங்கள் சென்னை செல்வதற்காக வண்டியை முன்பதிவு செய்து கொண்டோம். விமானத்தில் போனால் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து அங்கே இருக்கும்/கிடைக்கும் டாக்சியை புக் செய்து கொண்டு தம்பி வீட்டிற்கூ மேற்கு மாம்பலம் வரணும். அதோடு இல்லாமல் இப்போதெல்லாம் விமானப் பயணச்சீட்டின் விலையை அதிகரித்து விட்டார்கள். ஒருத்தருக்கேப் பத்தாயிரம் ஆகும்போல! ஆகவே விமானத்தைத் தவிர்த்து விட்டோம்.


ரயில், பேருந்து எல்லாம் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது. ரயில் எனில் திருச்சியில் நான்கு அல்லது ஆறாவது நடை மேடை. ஶ்ரீரங்கத்தில் முதல் நடைமேடை என்றாலும் ரயில் நிற்கும் 2 நிமிடங்களுக்குள்ளாக சாமான்களையும் தூக்கிக் கொண்டு ஏறணும். அப்படித்தான் போய்க் கொண்டிருந்தோம். ஆனால் இரண்டு வருஷங்களாகவே அப்படிப் போவதில்லை. இரண்டு பேருக்கும் சாமான்களைத் தூக்கிக் கொண்டு அந்த நடைமேடை முழுவதும் நடந்து சென்று ரயிலில் ஏறும் அளவுக்குத் தெம்பில்லை. ஶ்ரீரங்கத்தில் போர்ட்டர் என்பவரே இல்லை. திருச்சியில் கூப்பிட்டால் கூட வருவதில்லை. ஆகவே காரில் செல்வதே நல்லது என்று முடிவு செய்தோம். சனிக்கிழமை காலை எழுந்து குளித்துக் காஃபி குடித்துத் தயார் ஆனோம். வண்டியும் நேரத்தில் வந்து விட்டது. இங்கேயே அம்மா மண்டபம் சாலையில் இருக்கும் நம்ம ஃபேவரிட் பிள்ளையாருக்கு ஒரு சிதறு காய் போட்டு விட்டுப் பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.

வழியில் கார் செல்லும்போதே காலை உணவை முடித்துக் கொண்டு கொண்டு சென்றிருந்த காஃபியையும் குடித்தோம். ஓட்டுநருக்குக் காலை உணவுக்காகப் பணம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி விட்டோம். அவ்ர் சாப்பிட்டு வந்ததும் எங்குமே நிற்காமல் வண்டி சென்றது. நடுவில் ஒரே ஒரு முறை கழிவறை செல்வதற்காக ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தினார். அவ்வளவே. அச்சரபாக்கம் வரை ஆங்காங்கே தூற்றல் தான். அச்சரபாக்கத்தில் இருந்து போக்குவரத்தும் அதிகம். மழையும் பெய்து கொண்டிருந்தது. ஓட்டுநரும் அலைபேசியில் பேசிக் கொண்டே வந்தார். ஆகவே பத்து மணிக்கு அச்சரபாக்கத்தை அடைந்தாலும் மாம்பலம் போய்ச் சேரப் பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அங்கே போய் துரைசாமி சுரங்கப்பாதை அருகே இருந்த வெங்கடாசலம் தெருவில் உள்ள நாங்கள் தங்க வேண்டிய சர்வீஸ் அபார்ட்மென்டைக் கண்டுபிடித்தோம். நல்லவேளையாகத் தெரு முனையிலேயே இருந்தது. உள்ளே போனோம். நன்கு சுத்தம் செய்து வைத்திருந்தார்கள். படுக்கைகளுக்கெல்லாம் புதிய விரிப்புகள் போடப்பட்டு நன்றாகவே இருந்தது. பெரிய சமையலறை. அங்கேயும் அநேகமாக அடுப்பைத் தவிர்த்து, மளிகை சாமான்களைத் தவிர்த்து எல்லாப் பொருட்களும் இருந்தன. 

நாங்கள் கொண்டு போயிருந்த இன்டக்‌ஷன் ஸ்டவை அங்கே பொருத்தி வேலை செய்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டு மற்றச் சாமான்களையும் வைத்துவிட்டுத் தம்பிக்கு நாங்கள் வருவதைத் தொலைபேசிச் சொல்லலாம் எனில் அவங்க எல்லோருமே பூஜையில் மும்முரம் போல! சரினு ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு தம்பி வீட்டுக்குச் சென்றோம். அவர் இருப்பது முதல் மாடி. சுமார் 20 படிகள். நடுவில் வேறே சில,பல படிகள். எல்லாவற்றையும் எப்படி ஏறப் போகிறேனோ என்று எல்லோரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். ஆட்டோ போனதுமே வாசலில் பேசிக் கொண்டிருந்த தம்பி பையர்/கல்யாண மாப்பிள்ளை பார்த்துட்டுச் சாமான்களை வாங்கிக் கொண்டு மேலே போய்த் தெரிவித்தார். மேல் படியில் தம்பியின் பெரிய பிள்ளை, நடுவில் லான்டிங்கில் தம்பி, பின்னால் நம்ம ரங்க்ஸ் என நின்று கொண்டு என்னைக் கண்காணித்தார்கள். ஹிஹிஹி! எல்லோருக்கும் பயம்! விழுந்துடப் போறேனேனு. வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள்.  இதுக்குள்ளே நம்மவர் படிகளில் நடுவில் காலை வை. ஓரத்தில் வைக்காதே என்றெல்லாம் நான் வாழ்க்கையிலேயே  முதல் முதல் மாடி ஏறப்போவதாக நினைத்துக்கொண்டு சொல்லிக் கொடுத்தார். மெதுவாகப் படிகளில் ஏறினேன். இதுக்குள்ளே மேலே இருந்து யாரோ பிடிச்சுக்கோ என்று சொல்ல, நான் கடுமையாக மறுக்க ஒரு வழியாக அரை மணி நேரத்திற்குள்ளாக எல்லாப் படிகளையும் ஏறி விட்டேன். கயிலை யாத்திரையிலோ, அஹோபிலம் சென்றபோதே அல்லது கிஷ்கிந்தாவிலோ கூட இத்தனை சந்தோஷம் அடைந்ததில்லை. ஏனெனில் அதெல்லாம் மிகக் கடுமையான மலை ஏற்றம். இங்கே கயிலையை விட மோசமான மலை ஏற்றம் என நினைத்துக் கொண்டு அப்பாடா! ஜெயிச்சுட்டோம் என நினைத்த வண்ணம் வீட்டுக்குள்ளே போனோம். 

18 comments:

  1. சுவாரஸ்யமாக அனுபவங்களை விவரித்திருக்கிறீர்கள்! தொடர்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ! தொடர்ந்து வரப் போவதற்கும் நன்றி.

      Delete
  2. ஹா.. ஹா.. வெற்றி தங்களது மற்ற நிகழ்வுகளும் வெற்றியடையட்டும் தொடர்ந்து சொல்லுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி,தொடர்ந்து வாங்க! உங்களத்தனை கற்பனைத் திறன் இல்லைனாலும் நடந்தவற்றை விவரிக்கலாமே!

      Delete
  3. வணக்கம் சகோதரி

    தங்களை காணவில்லையே என நினைத்தேன். சென்ற பதிவின் கருத்துரை பதிலில் மதியம் உங்கள் பயணம் குறித்து தெரிவித்திருப்பதை பார்த்ததும் திருமணம் குறித்து விசாரிக்க வரலாம் என எண்ணும் போது நீங்கள் சென்று வந்த பயணம் குறித்து விலாவாரியாக பதிவே போட்டு விட்டீர்கள்.தலைப்பு நன்றாக உள்ளது.

    எப்படியோ வெற்றிகரமாக இந்த மழையில் பயணித்து, அதுவும் சிரமமான படிகளில் ஏறி, இறங்கி சென்று வந்துள்ளீர்கள். தம்பி பையரின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்திருக்கும் என நினைக்கிறேன். மணமக்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். எப்படியும் தொடரும் பதிவுகளில் சொல்லத்தான் போகிறீர்கள். இருந்தாலும், என் அ.கு.பு விசாரிக்கத் தூண்டுகிறது.:)

    எப்போதுமே உங்கள் அனுபவங்களை சுவாரஸ்யமாக சொல்லும் உங்கள் திறனை எண்ணி நான் வியக்கிறேன். ரசிக்கிறேன். மிகுதி நிகழ்வுகளையும் தாங்கள் சொல்வதை கேட்க தொடர்கிறேன். காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. தலைப்பைப் பாராட்டியதுக்கு நன்றி, உங்கள் வாழ்த்துகளை மணமக்களுக்குத் தெரிவித்து விடுகிறேன். பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      Delete
  4. நிஜமாகவே இமாலய சாதனைதான். எங்கே ஆளையே காணோமே, அம்ப்ரிகாவிற்கோ, ஆப்பிரிக்காவிற்கோ பறந்து விட்டீர்களோ என்று நினைத்தேன். இந்த மழையில் பயணித்து வந்திருக்கிறீர்களை... அதைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா பானுமதி, நீங்க என்னோட பதிவுக்கு உடனுக்குடன் வருவதால் நான் அதிர்ச்சியில் காணாமல் போய்விட்டேன்! இஃகி,இஃகி,இஃகி! :)))) அப்புறமா அது அம்ப்ரிகா இல்லையாக்கும், அம்பேரிக்கா! இப்போ நான் போனால் உடல் நலமில்லாமல் இருக்கும் பெண்ணிற்கு உதவியாய் இல்லாமல் உபத்திரவமாக இருக்கும். பார்க்கப் போனால் ஜூன்/ஜூலையில் போவதற்கு இருந்தோம், அதற்குள்ளே இங்கே அமர்க்களங்கள். :( ஆப்ரிக்காவுக்குப் போவதெனில் ஏகப்பட்டக் கட்டுப்பாடுகள். முக்கியமாய்த் தடுப்பு ஊசிகளே ஐந்தாறு போட்டுக்கணும். ஆகவே ஆப்ரிக்காவை நினைச்சுக் கூடப் பார்ப்பதில்லை. மகன் இங்கே வந்தால் தான் உண்டு. :(

      Delete
  5. அனுபவத்தை சுவாரசியமாக எழுதியிருக்கீங்க.

    ஆரம்பமே இணையப் படங்கள் போலத் தெரிவதால் ஶ்ரீராம், பாஸ் இவர்களோடு உங்க படங்களைப் போட மாட்டீங்க. நானும் அவங்க எப்படி இருப்பாங்கன்னு யோசிக்கிறேன்.

    அது சரி... ஶ்ரீரங்கத்திலிருந்து கட்டுச்சாதம் இட்லி மி பொடியா தயிர் சாதமா?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நெல்லை! நான் படங்கள் எடுக்கும்படியான சூழ்நிலையில் இல்லை. ஒரே டென்ஷன்! :( ஶ்ரீரங்கத்தில் இருந்து இட்லி, மி.பொ. தான் காஃபியோடு சேர்த்துக் கொண்டு போனோம். தயிர்சாதமெல்லாம் எடுத்துச் செல்லவில்லை. அன்னிக்குத் தம்பி வீட்டில் சமாராதனைச் சாப்பாடு! அங்கே கல்யாணம் முடிஞ்சு வரச்சே அன்னிக்கே கட்டுச்சாதமும் வைத்துவிட்டதால் அது கொடுத்தாங்க. அதோடு ஶ்ரீரங்கம் வந்தோம்.

      Delete
  6. என்னென்ன அனுபவங்கள் என்று பதிவில்தான் சொல்வேன் என்று சொல்லி விட்டீர்கள்.   எனவே தொடர்கிறேன்.  காருக்கு எவ்வளவு ஆனது என்று வாட்ஸாப்பில் சொல்லுங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், ஹிஹிஹி, பதிவில் எல்லாமே வரும். காருக்கு ஆச்சரியப்படும் விதமாகக் குறைச்சுத் தான் ஆச்சு! :) விபரங்கள் பின்னர் தருகிறேன்.

      Delete
  7. பின்னர் துரைசாமி பாலம் முழுவதும் தண்ணீர் நிரம்பி மூடினார்கள்.  அதற்கு அருகே என் நண்பரின் அலுவலகம் இருக்கிறது.  அவர் சென்ற சனிக்கிழமை என்னைப்  பார்க்கவும் வந்திருந்தார்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம் ரொம்பவே தைரியசாலி தான் உங்க நண்பர்!

      Delete
  8. சர்வீஸ் அபார்ட்மெண்ட் போன்றவைகளுக்கு என்ன வாடகை வாங்குகிறார்கள்?  அதுபற்றிய விவரங்களை சொல்லளவும்!

    ReplyDelete
    Replies
    1. சொல்லலாம் ஶ்ரீராம், ஆனால் நாங்க தங்கியது மத்திய அரசைச் சேர்ந்தது என்பதால் வாடகை மிக மிகக் கம்மி. ஆனால் மழை இல்லை என்றால் சௌகரியமானதே! பக்கத்திலேயே ஸ்டேஷன் ரோடு இருப்பதால் ஓட்டல்களுக்குப் பஞ்சமில்லை. உணவும் கிடைக்கும். கெஸ்ட் ஹவுஸ் எனில் அங்கேயே காஃபி, தேநீர், காலை ஆகாரம்,மதிய உணவு, மாலைத் தேநீர், இரவு உணவு ஆகியவை கிடைச்சுடும். கெஸ்ட் ஹவுஸ் சைதாப்பேட்டையில் இருந்ததால் தம்பி வீட்டிலிருந்து வெகு தூரம் என்பதால் வேண்டாம்னு சொல்லிட்டோம்.

      Delete
  9. நல்லபடியாக தடைகளை கடந்து தம்பி மகன் திருமணத்திற்கு போய் வந்து விட்டீர்கள்.

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    எல்லோரும் உங்கள் மேல் அக்கறை எடுத்து கவனாமக் போய் வர சொன்னது அறிந்து மகிழ்ச்சி.
    நல்லபடியாக ஸ்ரீரங்கம் வந்து விட்டது அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.
    உறவுகளுக்கு திருமணத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி தந்து இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி. மணமக்களிடம் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். ஆமாம், உண்மையாகவே அனைவரும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு கவலையுடனும் கொஞ்சம் உள்ளூர பயத்துடனுமே எங்களை வழி அனுப்பினார்கள். நான் எங்கேயாவது சொதப்பிடுவேனோனு நினைச்சாங்க. ஆனால் பிரச்னைகள் வேறு ரூபத்தில் வந்து சேர்ந்தன.

      Delete