எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 23, 2021

வந்தோமே! வந்தோமே! கல்யாணத்துக்கு வந்தோமே!

 எனக்கு ஏற்பட்ட குழப்பத்திலும், கவலையிலும் தம்பி பையரிடம், இதுக்குத்தான் உன்னைச் சீக்கிரமா வானு சொன்னேன். இப்போப் பாரு! இங்கே கும்மிருட்டா இருக்கு. வெளிச்சமே இல்லை. நாங்க எங்கே வந்து உன்னைப் பார்ப்பது? அல்லது நீ எப்படி வந்து எங்களைக் கூட்டிப் போவாய்! ஒண்ணுமே புரியலை என்று படபடத்தேன்.  பின்னர் நானும் ரங்க்ஸுமாகக் கலந்து ஆலோசித்தோம். நல்லவேளையாக ஒரு மெழுகு வர்த்தி எடுத்து வந்திருந்தார். அதை ஏற்றிவிட்டு அந்த வெளிச்சத்தில் அவர் வெளியே சென்று ஒரு ஆட்டோ பிடிப்பதாகவும், அந்த ஆட்டோ ஓட்டலுக்கு வரேன்னு சொன்னால் நேரே ஓட்டலுக்குப் போயிடலாம் எனவும் இல்லை எனில் தம்பி பிள்ளை எங்கே இருக்கானோ அங்கே போகலாம்னும் சொன்னார். உடனே தம்பி பிள்ளையைக் கூப்பிட்டால் அவரும் அந்த நேரம் எங்களைத் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்திருக்கார். ஆகவே அவர் எங்களைத் தொடர்பு கொண்டு துரைசாமி சப்வே அருகே வர மூடியுமானு கேட்க, எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. துரைசாமி சப்வே அருகே போவதே கஷ்டமாச்சே என நினைத்தபடியே கொஞ்சம் பயந்ததோடு அல்லாமல் சில நாட்கள் முன்னர் சப்வேயில் மூழ்கி இறந்த பெண் மருத்துவர் நினைவும் வந்து தொலைத்தது. ஆகவே அவரிடம் நான் துரைசாமி சப்வேக்கு எல்லாம் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். மறுபடி குழப்பம். அவரும் யோசனையில் ஆழ்ந்து போக நாங்களும் யோசிக்க ஆரம்பித்தோம்.

பின்னர் மறுபடி யோசித்ததில் தம்பி பையரே எங்களை அழைத்து எங்களை ஆர்யகௌடா ரோடு அயோத்யா மண்டபம் அருகே வர முடியுமா எனக் கேட்டார். அவசரமாக ரங்க்ஸைக் கலந்து ஆலோசித்ததில் அந்தப் பக்கம் மேடு எனத் தெரியவும் தம்பி பையரிடம் சரி எனச் சொன்னேன். உடனே அவரும் தாங்கள் காருடன் அயோத்யா மண்டபம் அருகே காத்திருப்பதாகவும் எங்களை ஓர் ஆட்டோ பிடித்துக்கொண்டு அங்கே வந்து சேரும்படியும், அங்கிருந்து அவர்கள் எங்களை ஓட்டலுக்குக் கூட்டிச் செல்வதாகவும் சொன்னார். உடனே மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாமான்களை மாடிப்படி அருகே கொண்டு வைத்துவிட்டுப் பூட்டுவதற்குத் தயாராகக் கதவை வைத்துவிட்டு அந்தக் குறைந்த வெளிச்சத்திலேயே நம்மவர் ஆட்டோவைத் தேடிச் சென்றார். மாடிப்படி அருகே ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு நான் சாமான்களுக்குக் காவலாக உட்கார்ந்திருந்தேன். பின்னால் இன்னொரு குடித்தனத்தின் வாயில் கதவு. இவர் போனவர் வரவே இல்லை. மெழுகுவர்த்தி காற்றில் அணையவா என பயமுறுத்திக் கொண்டிருந்தது. மணியைப் பார்த்தால் அப்போத் தான் ஆறு மணி ஆகப் போகிறது. ஆனால் இருட்டு என்னமோ நடு இரவு மாதிரி என்பதோடு அரை மணி நேரம் தான் கழிந்திருக்கிறது என்பதும் எனக்கு என்னமோ நாள்கணக்காகக் காத்திருப்பது போலவும் தெரிந்தது.

சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோவின் வெளிச்சம் காம்பவுண்டுச் சுவர்களில் பட்டு நான் உட்கார்ந்திருந்த இடத்தில் பிரதிபலிக்கக் கடவுளை இவர் ரங்க்ஸ் கொண்டு வந்த ஆட்டோக்காரராய் இருக்கணுமேனு வேண்டிக் கொண்டேன். இதுக்குள்ளாகப் பின்னாலிருந்து "யாரது?" என்னும் பெண்குரல் கேட்கத் திரும்பிப் பார்த்த நான் அங்கே நின்றிருந்த மாமியிடம், நாங்கள் பக்கத்து அபார்ட்மென்டுக்குத் தங்க வந்ததையும் இப்போ இங்கே மின்சாரம் இல்லை என்பதாலும், சாப்பாடு கிடைக்கவில்லை என்பதாலும் ஓட்டலுக்குப் போவதாய்ச் சொன்னேன். அதுக்குள்ளே ரங்க்ஸே வந்துவிட்டார். அவர் கொண்டு வந்த ஆட்டோத் தான் அது. அந்த மாமி உடனே தன் கையிலிருந்த டார்ச்சை அடித்து நல்ல வெளிச்சம் காட்டச் சாமான்களை மெதுவாக ரங்க்ஸ் ஆட்டோவில் ஏற்ற ஆட்டோக்காரர் அவற்றை ஆட்டோவில் நாங்கள் உட்கார இடம் இருக்கும்படி விட்டுவிட்டுக் கவனமாக வைத்தார். பின்னர் நான் ஏற வசதியாக ஆட்டோவை வாயிலுக்கு அருகே மேடான படியில் கொண்டு வந்து நிறுத்த நான் ஏறிக்கொண்டேன். மாடிக்கு வாடகைப் பணம் கொடுக்கச் சென்றிருந்த ரங்க்ஸ் அங்கிருந்து அந்த  மாமி காட்டிய வெளிச்சத்தில் ஆட்டோவுக்கு வந்து சேர்ந்து ஏறிக்கொண்டார். ஆர்யகௌடா ரோடை நோக்கி ஆட்டோ சென்றது. இல்லை, இல்லை ஊர்ந்தது.

ஆட்டோக்காரர் ஏற்கெனவே சொல்லிட்டார். தண்ணீரைப் பார்த்துப் பயப்படாதீங்க. நான் கவனமாக மெதுவாகப் போய் உங்களைக் கொண்டு சேர்த்துவிடுவேன். இரண்டு, மூன்று தெருக்கள் சென்றதும் இவ்வளவு தன்ணீர் இருக்காது. கவனமாக உட்காருங்க என்றார். ஆட்டோ மெல்ல, மெல்ல, மெல்ல, மெல்லச் சென்றது. தண்ணீர் இரு பக்கங்களிலும் வாரி அடித்தது. முன்னாலும் அப்படியே எண்ணினாற்போல் ஒரு சில ஆட்டோக்களும் ஒரே ஒரு காரும் தள்ளாடித் தத்தளித்துக் கொண்டிருந்தன. கிரி ரோடு, ஜூபிலி ரோடு தாண்டிக் கொஞ்சம் மேடான பகுதி வந்ததும் அங்கெல்லாம் மின்சாரமும் இருந்தது. தண்ணீரும் அவ்வளவாய்த் தேங்கவில்லை. சுமார் ஒரு அரை மணி நேரப் பயணத்தில் (சாதாரண நாட்களில் அவ்வளவெல்லாம் ஆகாது) ஆர்யகௌடா ரோடு அயோத்யா மண்டபம் வந்துவிட்டோம்.  நாலைந்து கார்கள் நின்று கொண்டிருந்தன. தம்பி பையர் எந்தக்காரில் இருக்கார்னு ஆட்டோக்காரர் கேட்க, நாங்கள் வெளியே தலையை நீட்டிக் கைகளை ஆட்டினோம். உடனே தம்பி பையரும் காரை விட்டு வெளியே வந்து கைகளை அசைத்துக் காட்ட,  அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

அதன் பின்னர் கார் ஓட்டுநர் வந்து என்னை மட்டும் அழைத்துக் கொண்டு முன்னால் உட்கார்த்தி வைத்து விட்டுப் பின் எல்லோருமாய்ச் சாமான்களை ஏற்றிக் கொண்டு டிக்கியில் வைத்து விட்டு ஆட்டோக்காரருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டோம். நூறு ரூபாய் கேட்டார் ஆட்டோக்காரர். பேரமே பேசாமல் கொடுத்துட்டோம். பின்னர் வண்டி அங்கிருந்து கிளம்பி லக்ஷ்மண் ஸ்ருதி வழியாக வந்து சுற்றிச் சுற்றிச் சுற்றி மெயின் ரோடில் இருந்த ஓட்டலுக்குப் பின் வழியாகக் கூட்டி வந்து சேர்த்தார். ஒன்வே என்பதோடு மழைத் தண்ணீரைத் தவிர்க்கவும் வேண்டி அப்படி வர நேர்ந்தது.  ஓட்டலில் வந்து கீழே இறங்கியதுமே வீல் சேர் வேண்டுமானு ஓட்டல் ஊழியர் கேட்க வேண்டாம்னு சொல்லிட்டு மெல்ல மெல்ல நடந்தேன். கூடவே தம்பி பையர் அறை எண்ணைச் சொல்லி என்னையும் ரங்க்ஸையும் அறையில் கொண்டு சேர்க்கச் சொல்லி ஊழியரிடம் சொல்ல அவர் எங்களை அழைத்துச் சென்றார். அங்கே தம்பியும், தம்பி மனைவியும் எங்களை வரவேற்றார்கள். நாங்கள் எங்கள் அறைக்குச் சென்றோம். கொஞ்ச நேரத்தில்  தம்பி பையர் சாமான்களை ட்ராலியில் ஏற்றி இன்னொரு லிஃப்ட் மூலம் எங்கள் அறைக்கு எடுத்து வந்து சேர்த்தார். தம்பி பையரிடம் சூடாய்க் காஃபி வாங்கிக் கொடுனு சொல்லிவிட்டு அங்கிருந்த படுக்கையில் கை,கால்களை நீட்டிப் படுத்துவிட்டேன். பின்னே? மத்தியானம் பதினோரு மணியில் இருந்து படுக்கை கொள்ளாமல் அங்கேயும் இங்கேயும் அந்த இருட்டில் போய்க்கொண்டும் பேசிக்கொண்டும், யோசித்துக் கொண்டும் சாப்பாடு என்னும் பெயரில் எதையோ கொரித்துக் கொண்டும் இருந்தாச்சு. இப்போத் தான் உடல் ஓய்வு கேட்டது. அசதி தெரிந்தது.

26 comments:

  1. பத்து நிமிடங்களுக்குள் செல்ல வேண்டிய டியதுக்கு அரைமணிநேரம்!  சாலையும் மழையும் அப்படி.  ஆட்டோக்காரர் நல்லவராகத்தான் இருந்திருக்கிறார்.  நம் சௌகர்யத்துக்கு இப்படி வளைந்து கொடுப்பவர்கள் சிலரே.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சரியாக இருந்திருந்தால் நடந்து செல்லும் தூரம் தானே! நல்லவேளையாக ஆட்டோக்காரர் நல்லவராகக் கிடைத்தார்.

      Delete
  2. 2015 வெள்ளத்தின் போது இப்படிதான் கரண்ட் இல்லாத திக்திக் இடத்திலிருந்து கரண்ட் இருந்த தொலைதூரத்துக்கு ஒரு இனோவா வண்டி பிடித்துச் சென்றோம்.  அவர் கேட்ட காசு அதிகம்தான்.  ஆனாலும் வேறு வழியில்லை.  அப்போது அங்கு சென்றதும் படுத்தவுடன் வந்த தூக்கமும் நிம்மதியும்...   அப்பாடா...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஶ்ரீராம். அந்த நிம்மதிக்கு ஈடு, இணை இல்லை.

      Delete
  3. நான் நிஜமாகவே ரொம்பவே பயந்தேன் கீதாக்கா இதன் முந்தைய பகுதி வாசித்து. துரைசாமி சப்வே எல்லாம் நோ சான்ஸ். அந்த இடம் எல்லாம் மழைக்காலத்தில் ஆபத்து. எப்படி போயிருப்பார்கள் என்று...ஹப்பா நல்ல வேளையாக ஆட்டோ கிடைத்து தம்பி பையரைப் பார்த்து ஒரு வழியாக ஹோட்டல் போய்ச் சேர்ந்துவிட்டீர்களே. கரண்டும் இல்லாமல் ரொம்பவே கஷ்டம்தான்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கும் உள்ளூர பயம் தான். ஆட்டோக்காரர் அவ்வப்போது தைரியம் சொல்லிக்கொண்டே கூட்டிச் சென்றார். இல்லைனா பிரச்னை தான்.

      Delete
  4. அந்த ஆட்அம்டோக்காரர் ரொம்ப நல்லவராக இருந்திருக்கிறாரே! நல்ல விஷயம். உங்களுக்குத் தோதாக ஏற வசதியாக நிறுத்தி, தண்ணீர் பற்றி ஆறுதலாகச் சொல்லி...நல்ல விஷயம்.

    மற்றொரு பயம் என்னவென்றால் பெரும்பாலும் ரோடு நோண்டுவது, கழிவுநீர் குழாய் மூடிகளைத் திறப்பது எல்லாம் இந்த மழைக்கு முன்னர்தான் செய்வாங்க....அது மூடவும் மாட்டாங்கள் குழிகள் கூட அப்படியெ இருக்கும். தண்ணீர் தேங்கும் போது எது எங்கிருக்கு என்றே தெரியாது. அதுவும் ஆபத்து இல்லையா அதுவும் கரண்டும் இல்லாமல்...இதெல்லாம் மனதில் தோன்றியது.

    நல்ல காலம் பத்திரமாகப் போய் ரீச் ஆகிட்டீங்க...அதுவரை டென்ஷன் தான்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பயங்கர டென்ஷன் தான். அதோடு நீங்க சொன்னாப்போல் எங்கானும் பள்ளம், மேடு தெரியாமல் போயிடப் போறோமேனு கவலையும் கூட. மாமா காலை டிஃபன் வாங்கச் செல்லும்போதும் எனக்குள் அந்த பயம் அதிகம் இருந்தது. அதே போல் ஆட்டோவைத் தேடிச் செல்லும்போதும் கவலை தோன்றியது.

      Delete
  5. எத்தனை எத்தனை சிரமங்கள்...
    நினைக்கவே வருத்தமாக இருக்கின்றது...

    இயற்கையின் சீற்றம் ஒருபுறம் .. இன்னும் திருந்தாத அயோக்கியர்கள் மறுபுறம்...

    நல்லவர்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நாங்க எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இறைவன் காட்டிய வழியில் தான் போகிறது துரை. என்றென்றும் அவன் எங்களைக் காத்து ரக்ஷித்து வருகிறான்.

      Delete
  6. விவரிப்பு திகில் படம் பார்த்தது போலிருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி, ஆனால் இதை எல்லாம் ஓரளவுக்கு ஏற்கெனவே அனுபவிச்சிருக்கோம்.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    இந்த மழை வெள்ளத்தில் ரொம்பவே சிரமபபட்டு விட்டீர்கள் எனத் தெரிகிறது. நல்லவேளை.. அந்த ஆட்டோகாரர் நல்லவராக அமைந்து உங்களுக்கு சிரமமின்றி ஏறவும், சாமான்களை ஏற்றி இறக்கவும் உதவியிருக்கிறார். அவரின் மனித நேயம் சிறப்பானது. நீங்கள் கையோடு ஒரு மெழுகு வர்த்தி கொண்டு போனது நல்ல செயல். எதுவும் தற்சமயத்திகு உதவும். "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்னும் பழமொழிகள் பொய்யல்லவே..! நாங்களும் வெளியூர்களுக்கு செல்லும் போது இப்படி ஏதாவது பயனுள்ள பொருட்களை நான் கவனமாக எடுத்துச் செல்வேன்.

    எப்படியோ கல்யாண மண்டபத்திற்கு பத்திரமாக சென்று சேர்ந்தது குறித்து மிகவும் சந்தோஷம். இனி மழையை பற்றி கவலையிருந்தாலும், திருமணம் முடிந்து ஊர் திரும்பும் வரை வெள்ளத்தைப்பற்றி கவலையிருந்திருக்காது. ஆனாலும் இப்படி மழை காலத்தில் திருமணங்கள் வைத்துக் கொண்டால், கொஞ்சம் கஸ்டந்தான் தரும். முன்பெல்லாம் இந்த மழைப் பற்றி அவ்வளவாக கவலை இராது. அப்போதெல்லாம் ஐப்பசி, கார்த்திகை மாதங்களின் மழை மட்டுந்தான் பயமுறுத்தும். இப்போதுள்ள மக்களின் சுயநலங்கள் மிகுந்த அஜாக்கிரதையினால், வெள்ளங்கள் வேறு பயமுறுத்துகிறது.

    என் இளைய மகன் திருமணமும் இந்த நவம்பர் மழையில்தான். திருச்சியில் உங்களூரில் வைத்துதான் நடைபெற்றது. சென்னையிலிருக்கும் எங்கள் உறவினர்கள் மழையை காரணம் காட்டி அவ்வளவாக வரவில்லை. என்ன செய்வது?

    மேலும் உங்கள் தம்பி பையரின் திருமண வைபவங்கள் பற்றி நீங்கள் சொல்ல கேட்பதற்கு ஆவலாக உள்ளேன். குழந்தைகளுக்கு எங்கள் ஆசிர்வாதங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. சத்திரத்துக்குச் செவ்வாய்க்கிழமை காலை தான் போனோம். அதுவரை எதிரே இருந்த இந்த ஓட்டலில் தங்கி இருந்தோம். எப்படியோ எல்லாம் நல்லபடியாக முடிந்தன. எங்க பையர் திருமணமும் நல்ல மழைக்காலத்தில் இதே போல் அடுத்தடுத்துப் புயல் தாக்கிக்கொண்டிருந்த சமயம் டிசம்பரில் நடந்தது, அதுவும் சென்னை வேளச்சேரி பகுதியில். பலரும் தொலைபேசியில் கல்யாணம் உண்டா? மாப்பிள்ளை அம்பேரிக்காவில் இருந்து வந்தாச்சா என்றெல்லாம் கேட்டனர். கல்யாணத்தன்னிக்கு ஒரு புயல் கரையைக் கடக்கும்னு சொன்னதால் நாங்கள் ஞாயிற்றுக்கிழமை கல்யாணத்திற்கு வெள்ளி இரவே சத்திரத்துக்குப் போய்விட்டோம். ஆனால் மழை, வெள்ளம் வரவில்லை. புயல் பலவீனம் அடைந்து கல்யாணம் சிறப்பாக நடந்தது. வெளியூரிலிருந்து வரவேண்டியவர்கள் கூட வந்து சேர்ந்தார்கள்.

      Delete
  8. நல்ல ஆட்டோகாரர் கிடைத்தார், இறைவன் வழிதுணையாக நல்லவரை அனுப்பி இருக்கிறார்.
    வெளியூர் பயணத்தில் என் கணவர் டார்ஜ் கண்டிப்பாய் எடுத்து வைத்து இருப்பார்கள், முன்பு தீபெட்டி, மெழுகுவர்த்தி எல்லாம் உண்டு. இப்போது டார்ஜ் இருக்கும், செல்லில் டார்ஜ் இருக்கிறது இப்போது அதில் சார்ஜ் இருந்தால் அதை பயன்படுத்தி கொள்ளலாம்.
    மழை காலத்தில் திருமணம் ,அதுவும் புயல் திடீர் என்று வருவது மிகவும் கஷ்டம் .

    நல்லபடியாக ஓட்டலுக்கு வந்து சேர்ந்து ஓய்வு எடுத்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி உண்மையிலேயே அந்த ஆட்டோக்காரர் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவரே! எல்லோரும் மறுத்துவிட்டுப் போகையிலே அவர் தான் கொஞ்சமும் கலங்காமல் வந்தார். நாங்களும் எப்போதும் டார்ச் கையில் வைத்திருப்போம். இம்முறை மறந்திருக்கு. செல்ஃபோனில் இருந்ததை நாங்கள் இருவருமே மறந்திருக்கோம்.

      Delete
  9. ஆட்டோக்காரர் நல்லவராக கிடைத்தது நீங்கள் செய்த புண்ணியம்தான். எப்படியோ ஓட்டலுக்கு நல்லபடியாக சென்று சேர்ந்தீர்களே? 2015 நவம்பரில் என் மருமகளின் பெரியம்மா மகனுக்கு டி.நகரில்  மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடந்தது.  முதல் நாள் மாலை சென்று விட்டு வந்தோம், மறுநாள் திருமணத்தன்று நல்ல மழை, ஆட்டோ, ஓலா, ஊபர்  கிடைக்காததால் முகூர்த்தத்திற்கு  போக முடியவில்லை. 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி கனடா குளிர் எப்படி உள்ளது? ஆமாம், உண்மையிலேயே புண்ணியம் கொஞ்சமானும் செய்திருப்பதால் தான் அன்று நாங்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற முடிந்தது. ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டு தண்ணீருள்ள பகுதிகளைக் கடக்கையில் திக், திக், திக் தான்! என் அண்ணா பையர் கல்யாணம், அண்ணா பெண் கல்யாணம் எல்லாம் நவம்பர், டிசம்பர் தான். ஆனால் அந்தக்குறிப்பிட்ட வருடங்கள் மழை அதிகம் பொழியவில்லை. நல்ல வெயிலாகவே இருந்தது.

      Delete
  10. நீங்கள் சொல்லியிருப்பதை பார்த்தால் பத்மாவதி கல்யாண மண்டபமா? 

    ReplyDelete
    Replies
    1. க்ரீன் பார்க் ஓட்டலுக்கு நேர் எதிரே விஜயா கார்டனில் நாகிரெட்டி ஹால்.

      Delete
  11. அன்பின் கீதாமா,

    எத்தனை கடினமான நேரம் அம்மா!!!
    மனசு உங்களுடன் சேர்ந்து தவித்து விட்டது.

    எப்படித்தான் சமாளித்தீர்களோ தெரியவில்லை:(
    பாவம் மாமா. இருட்டில் ஆட்டோ தேடி நீங்கள் காத்திருந்து
    பெரிய நரக வேதனை.:(

    2015 இல் நடந்த தம்பி மகள் கலயாணத்துக்கு வரமுடியாமல்
    பயணத்தை ரத்து செய்தது தான் நினைவில்.

    பத்திரமாக இருங்கள் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. உடம்பு தேவலையா? கண்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

      Delete
  12. ரொம்பவே கஷ்டமான பயணம். இந்த அனுபவம் இல்லாத்தால் அதன் வீரியம் மனதில் ஏறலை

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்குப் பல்வேறு விதங்களிலும் கடினமான அனுபவங்கள் நிறையவே உண்டு.

      Delete
  13. படிக்கும்போதே கடினமாக இருந்தது இப்படியும் சோதனைகள்.
    அந்த ஆட்டோரைவரின் சேவைதான் மனதை தொட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, எத்தனை கடினமானவற்றையும் எதிர்கொண்டு தானே ஆகணும். அந்த நேரம் கொஞ்சம் மனச்சோர்வு லேசாக எட்டிப்பார்க்கும்.அதை அதட்டி அமுக்கிட்டுத் தொடரணும்.

      Delete