இன்று சிவராத்திரி. முதலில் சிவராத்திரி என்றால் என்ன? சிவபெருமான் லிங்க வடிவாகத் தோன்றிய காலம் தான் லிங்கோற்பவ காலம் என்று சொல்லப் படுகிறது. அந்த லிங்கோற்பவம் நடந்த நேரம் இரவு 11-30 மணிக்கு மேல் 1-00 மணி வரையாகும். லிங்கோற்பவம் நடந்த தலம் திருஅண்ணாமலை ஆகும். சிவலிங்கம் பற்றிய விளக்கங்கள் எல்லா ஞான நூல்களிலும், முக்கியமாகத் திருமூலர் திருமந்திரத்திலும் சொல்லி இருக்கிறார்கள். சம்ஸ்கிருதத்தில் ஸ்காந்த புராணம் என்னும் கந்த புராணத்திலும் சொல்லப் பட்டிருக்கிறது. அது என்ன என்றால் வழிபாடு மூன்று வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. அவை உருவ வழிபாடு. இப்போது நாம் செய்து வருவது உருவ வழிபாடு ஆகும். இன்னொன்று அருவுருவ வழிபாடு. மற்றது அருவ வழிபாடு ஆகும். அருவ வழிபாடு என்பது உருவமற்ற பரம்பொருளைக் குறிக்கிறது என்று நம் எல்லாருக்கும் நன்கு தெரியும். "பார்க்கும் பொருளெல்லாம் பரம்பொருளாகப் பார்ப்பது" என்பதும் அருவ வழிபாட்டைச் சேர்ந்தது ஆகும். எல்லாமே இறைவன் என்ற நிலையை ஞானிகளும், மஹான்களும் தான் அடைய முடியும் என்பதால் நம்மைப் போன்ற சாமானிய மனிதருக்காக ஏற்பட்டது உருவ வழிபாடு. இரண்டுக்கும் இடைப்பட்டது அருவுருவ வழிபாடு. இதில் உருவம் இருக்கும். ஆனால் அவயங்கள் இருக்காது. அருவமாக இருக்கும். இந்த அருவுருவ வழிபாட்டைக் குறிப்பது தான் சிவலிங்கத்தை நாம் வழிபடுவது ஆகும்.
இதை எப்படிச் சொல்வது என்றால் இவ்வுலகாகிய பூமியைப் பெண்ணாக எடுத்துக் கொண்டால் ஆகாயம் என்பது அதனுடன் இணைந்த ஆணாகும். அது போல் லிங்கம் இருக்கும் பீடம் ஆவுடையாள் எனப்படும் அம்பிகை என்றால் லிங்கமாகிய பாணம் சர்வேஸ்வரன் ஆகிறான். ஆகாயத்தை நாம் தினமும் பார்க்கிறோம். அதன் வடிவம் என்ன? நம்மால் சொல்ல முடியாது. வடிவம் புலப்படுவதும் இல்லை. ஆனால் கவிழ்த்து வைக்கப் பட்ட மரக்காலைப் போல் இருக்கும் இந்த ஆகாயத்துக்கு இது தான் உருவம் என நாம் நினைத்துக் கொள்கிறோம். இவ்வுலகம் பூராவும், அனைத்துமே இந்த ஆகாயம் என்னும் கூரையின் கீழ் தான் இருக்கின்றன, நாம் உட்பட. இந்த அண்ட லிங்கமாகிய ஆகாயத்துக்கு அபிஷேஹம் செய்ய ஏற்பட்டவை தான் கடல் கள். ஆகாய லிங்கம் எவ்வளவு பெரிதோ அத்தனைக்கும் தேவைப்படும் அளவு நீர் நிறைந்த சமுத்திரங்கள் இருக்கின்றன. அபிஷேஹம் முடிந்த ஆகாய லிங்கத்திற்கு நட்சத்திரங்களே பூக்களாகவும், மாலைகளாகவும் ஆகின்றன. ஆடையோ எனில் எட்டுத் திக்குகளாம். இதைத் தான் திருமூலர் தன் திருமந்திரத்தில் சொல்லி இருக்கிறார். (எனக்குத் திருமந்திரம் பூராவும் தெரியாது. சிவராத்திரி மஹிமையில் படித்தது பற்றித் தான் எழுதுகிறேன்.)
சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை எனப்படும் திரு மந்திரத்தில் திருமூலர் சொல்கிறார். "தரை உற்ற சக்தி, தனி லிங்கம் விண்ணாம் திரை பொரு நீரது மஞ்சன சாலை வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே." என்று லிங்கத்தின் அருவுருவத்தை வர்ணிக்கிறார். திருமூலர் சிவனை நேரில் கண்டவர் எனக் கூறுவார்கள். 63 நாயன்மாரிலும் ஒருத்தராகப் போற்றப் படுகிறவர். இவரது காலத்தைப் பற்றிய தகவல்கள் சற்று முரணாக இருக்கின்றது. திருமூலரின் வாக்குப்படி நாம் அனைவரும் இருப்பது ஒரே கூரையின் கீழ். பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் அடிமுடியைத் தேடியதும், பிரளய காலம் முடிந்து இரவு நேரத்தில் 4 ஜாமமும் அம்பிகை இறைவனைப்பூசித்ததும் சிவராத்திரி எனச் சொல்லப் படும் மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசி அன்று தான். பொதுவான நியதிப்படி பகல் பொழுது ஈசனுக்கும், இரவுப் பொழுது அம்பிகைக்கும் உரியது. சிவராத்திரி அன்று மட்டும் அம்பிகை தனக்கு உரிய இரவை ஈசனுக்கு அளித்து அவர் பெயரால் வழங்கச் செய்கிறாள். சிவம் வேறு அறிவு வேறு அல்ல என்பார்கள். அறிவே சிவம். நம்முடைய அறிவால் அறிந்து கொண்ட சிவனைப் போற்றித் துதிப்போம்.
"தென்னாடுடைய சிவனே போற்றி, போற்றி!!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, போற்றி!!"
2008 ஆம் ஆண்டில் எழுதிய பதிவின் மீள் பதிவு.
தெரியாத விடயங்கள் முன்பும் படித்த நினைவு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமுன்னரும் மீள் பதிவு போட்டிருந்தேனோ நினைவில் இல்லை. 2008 ஆம் ஆண்டில் நீங்க பதிவுலகுக்கு வரலை. :)))))
Deleteஅன்புள்ள கீதாம்மா, சிவராத்திரி பதிவு அருமை! சிவபெருமானது கருணை அனைவரையும் காக்கட்டும். இந்த நாளை பற்றிய சிறப்பு தெரிந்து கொண்டேன். நன்றி மா.
ReplyDeleteவாங்க வானம்பாடி, கருத்துக்கு நன்றி.
Deleteசிவராத்திரி சிறப்புகள் மிக அருமை.
ReplyDeleteசிவராத்திரியில் சிவனை வழிபட்டு அனைத்து நன்மைகளும் அவன் அருளால் கிடைக்கட்டும்.
நன்றி கோமதி.
Deleteசொல்லியிருக்கும் விஷயங்கள் மிகவும் சிறப்பு.
ReplyDeleteஎன் மதிற்குகந்த இறைவன் நாள். இன்று விரதம். பூஜை முடித்துவிட்டு கோயிலுக்குச் சென்று எல்லா கால பூஜையும் தரிசனம் செய்ய வேண்டும். இறைவன் சித்தம்
துளசிதரன்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி துளசிதரன். உங்கள் விருப்பம் போல் கோயிலில் தரிசனம் நடைபெற்றிருக்கும் என நம்புகிறேன்.
Deleteசிவராத்திரியின் மகிமை அருமை. சின்ன வயதில் நாம ஜெபம் எல்லாம் செய்து முழித்ததுண்டு. அதன் பின் இல்லை. எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும். போர் நிற்க வேண்டும். அமைதி நிலவ வேண்டும்.
ReplyDeleteகீதா
ஆமாம், போர் நின்று அமைதி நிலவப் பிரார்த்திப்போம் தி/கீதா.
Deleteஇப்போதுதான் படிக்கிறேன். மீள்பதிவு முன்பு போட்டிருந்தீர்களா என்று நினைவில்லை. தகவல்கள் சிறப்பு. ஓம் நமச்சிவாய.
ReplyDeleteஅப்படியா? மீள் பதிவு போட்டதாக நினைவு. பாராட்டுக்கு நன்றி,
Deleteமிக மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!!
ReplyDeleteநன்றி மனோ சாமிநாதன். இப்போத் தான் ஊறுகாய்ப் படம் எடுத்திருக்கேன். இனி ஶ்ரீராமுக்கு அனுப்பித் திங்கட்கிழமை பதிவில் சேர்த்தால் சரியாக வராது என்பதால் என்னோட பதிவிலேயே போடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
Deleteசிவராத்திரி பகிர்வு சிறப்பு.
ReplyDeleteசிவராத்திரி குறித்த தகவல்கள் மிகவும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete