இந்த வாரம் திங்கள் அன்று எதிர்பாராவிதமாகக் குலதெய்வம் கோயிலுக்குப் போக நேர்ந்தது. ஒரு பிரார்த்தனை ஒன்று இருந்தது. அதற்காக அம்பிகைக்குச் சூலம் வாங்கிச் சார்த்தி அபிஷேஹம் செய்ய வேண்டி இருந்தது. சூலம் கைக்குக் கிடைத்ததும் உடனே அவசரம் அவசரமாகப் பூசாரி, கோயில் ட்ரஸ்டி ஆகியோருடன் பேசித் திங்களன்று வருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டோம். அதன் படி திங்கள் காலை ஐந்தரை மணிக்குக் கிளம்பி! (எங்கே வண்டி லேட்) கும்பகோணம் போய் அங்கே கும்பேஸ்வரர் கோயில் தெருவில் மங்களாம்பிகாவில் சகிக்க முடியாத ஒரு டிஃபனைச் சாப்பிட்டு அதை விட மோசமான சிகரி காஃபி (கவனிக்கவும் டிகிரி காஃபி இல்லை! சிகரி காஃபி) குடித்துவிட்டு ஊர் நோக்கிச் சென்றோம். போன முறைகள் எல்லாம் போனப்போ நேரே குலதெய்வம் கோயிலுக்கு மட்டும் போயிட்டுத் திரும்பிட்டோம்.
ஆகவே இம்முறை கருவிலி கோயில்கள், அங்கே காத்தாயி அம்மனுக்கு இப்போ 2,3 வருஷமாகக் கோயிலை விஸ்தரித்துக் கட்டி நன்றாக வழிபாடுகள் நடந்து வருகின்றன. அங்கேயும் போகணும்னு நினைச்சால் நம்மவருக்கு ஏனோ தெரியலை, நேரம் ஆயிடும்னு சொல்லிட்டார். கருவிலி சற்குணேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழி தான் காத்தாயி அம்மன் கோயில். ஆனால் இறங்கலை. நான் மட்டும் தனியா இறங்கி என்ன செய்யறது? நேரே கருவிலி கோயிலுக்குப் போயிட்டோம். அங்கே குருக்கள் அம்மன் சந்நிதியில் அபிஷேஹ ஆராதனைகள் செய்து முடித்து அலங்காரம் செய்து கொண்டிருந்தார். சரியான நேரத்துக்குப் போயிட்டோம். முதலில் ஒரு தரம் சற்குணேஸ்வரரைப் பார்த்தோம். குருக்கள் இல்லை என்பதால் அம்மன் சந்நிதிக்குப் போய் அங்கே தரிசனம் முடித்துக்கொண்டு மறுபடி ஸ்வாமி சந்நிதி வந்து மறுபடி தீபாராதனைகள் பார்த்துட்டுக் கிளம்பினோம். செல்லைக் காரிலேயே சௌகரியமாய் வைச்சுட்டதாலே படங்கள் எடுக்கலை. இஃகி,இஃகி,இஃகி!
அந்தத் தெருவில் திரும்பினால் ஒரே அதிர்ச்சி. பெரிய பெரிய ஜல்லிக்கற்கள் பரப்பித் தண்ணீர் வீட்டு ரோடு போடும் லாரி வந்து அதைச் சீர் செய்து கொண்டிருந்தது. கார் எப்படி உள்ளே போகும்னு கவலை! பின்னர் எப்படியோ ஓரமாகப் பார்த்து டிரைவர் ஓட்டிச் சென்றார். கோயிலுக்குப் போனதும் அங்கே சமீபத்தில் தான் பாலாலயம் கட்டி இருக்காங்கனு கேள்விப் பட்டோம். எங்களுக்கும் அழைப்பு வந்தது. ஆனால் போகலை. அநேகமாக ஆவணி மாதம் கும்பாபிஷேஹம் இருக்கலாம்னு சொன்னாங்க. அங்கே போய் உடனே பூசாரியை அம்மனுக்கு அபிஷேஹம் செய்து சூலத்தைச் சார்த்தச் சொன்னோம். அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து அம்மனுக்குப் புடைவையையும் கட்டிச் சூலத்தையும் சார்த்தினார். ட்ரஸ்டி முன்னிலை வகித்து எல்லாவற்றையும் நடத்திக் கொடுத்தார். பின்னர் தீபாராதனை முடிந்து பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு ஊருக்குத் திரும்பினோம். திரும்பும்போது கும்பகோணத்தில் ராயாஸ் ரைஸ் அன்ட் ஸ்பைஸசில் சாப்பிட்டோம். சகிக்காத சாப்பாடு அவர் சாப்பிட்டார். அங்கே தயிர்சாதம் என்பது நீர் ஊற்றின பழையதில் ஒரு கரண்டி மோர் விட்டாப்போல் இருக்கும். வேண்டாம்னு சொன்னால் கேட்கலை.
நாங்க அந்த ஓட்டலுக்குச் சாப்பிடப் போன காரணமே கழிவறை அங்கே தான் சுத்தமாக இருக்கும் என்பது தான். ராயாஸ் லாட்ஜிற்குப் பின்னால் இருக்கும் சத்தார் ரெஸ்டாரன்ட் போகலாம்னு ரங்க்ஸ் சொன்னார். ஆனால் அங்கே ஆர்டர் பண்ணிச் சாப்பிடணும். நேரம் ஆயிடும் என்பதால் மாமாங்கக்குளக்கரையில் இருக்கும் இதற்குப் போனோம். ஓட்டுநர் சாப்பாடு சாப்பிட, அவர் தயிர்சாதம் வாங்கிக் கொண்டு அப்படியே வைக்க, நான் ரொம்ப யோசனையுடன் ஸ்வீட் லஸ்ஸி மட்டும் கேட்டேன். அந்த ஓட்டல் ஊழியர் சனா பூரி சாப்பிடுங்க. ஃபில்லிங்காக இருக்கும்னு சொன்னார். சரினு அரை மனதாக அதை ஆர்டர் பண்னினேன். வந்தது. சுடச்சுடச்சுடச்சுட/ பெரிய பூரி. அந்த மாவில் 2 அல்லது 3 பண்ணி இருக்கலாம். சனாவும் முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு ஓட்டல்களில் கொடுக்கும்படி ஒரே க்ரேவியாக இல்லாமல் நிறையக்கொண்டைக்கடலைகள், பெரிய கிண்ணம் என்ன ஒன்று. வெங்காயம் சாலட், எலுமிச்சம்பழம் எல்லாம் கொடுக்கலை. தயிர்ப்பச்சடியும் கொடுக்கலை. வடக்கே இதெல்லாம் கொடுப்பதோடு கூடுதலாக வெஜிடபுள் ஊறுகாயும் கொடுப்பாங்க. அந்தப் பூரியைச் சாப்பிட்டுவிட்டு டிப்ஸோடு சேர்த்து பில்லைக் கொடுத்துட்டுக் கிளம்பினோம்.
வரும் வழியில் தஞ்சை வந்து ஊரை விட்டுக் கிளம்பிச் செல்லப் போகும் ஒண்ணு விட்ட நாத்தனாரை எல் ஐசி காலனியில் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது ஐந்தரை மணி ஆகிவிட்டது.
அப்படி எல்லாம் கருவறையில் சென்று படம் எடுக்கலாமா? நாம் எடுப்பதே தவறு என்பார்களே...
ReplyDeleteகருவறையில் படமெடுப்பது தவறல்ல என்பது என் கட்சி.
Deleteபக்தர்கள் எடுக்க ஆரம்பித்தால் யாரும் பெருமாளை தரிசனம் செய்ய முடியாது.
வைரமுடி உத்சவத்தில் நூற்றுக்கு 80 பேர் மொபைலில் படம் எடுத்தாங்க. இது தரிசனத்துக்கு இடைஞ்சல்.
கருவறையில் படம் எடுப்பது சரியல்ல என்பதே என் கட்சியும். முன்னால் இருந்த பூசாரி, (இப்போ இருப்பவரின் அப்பா) எங்களை உள்ளே கூட விட்டதில்லை. இவர் கைக்குக் கோயில் வந்ததும் கொஞ்சம் கொஞ்சம் வளைந்து கொடுக்கிறார். ஆனாலும் நான் கருவறைக்குள் போகவில்லை. அவர் தான் போய் எடுத்துக் கொடுத்தார். என்னால் இப்போல்லாம் மாவிளக்குப் போடக் கூட அம்மன் முன்னால் போய்ப் போடப் படி ஏறமுடியவில்லை. வெளியே தான் போடறேன்.:( நான் எடுத்த படம் வெளியே இருந்து எடுத்தது/எல்லாமே!
Deleteமுதல் கமெண்ட்டுக்கே ரோபோ டிக் வந்து விட்டது!
ReplyDeleteஎன்னைப்பொறுத்த வரையிலும் கூட கும்பகோணம் காஃபி களையிழந்துபோய் பல நாட்கள் ஆயின!
கும்மோணத்தில் இன்பா காபி? என்ற கடைக்கு ஆட்டோ டிரைவர் கூட்டிச் சென்றார். நன்றாக இருந்தது. இதனைப் பற்றி எழுதறேன்.
Deleteஹாஹாஹா, ஶ்ரீராம், ரோபோ கொஞ்ச நாட்களாக என்னைப் பயமுறுத்தவில்லை.
Deleteநெல்லை! இன்பா காஃபி? எங்கே? நீங்களே கேள்விக்குறி போட்டுக் கேட்டிருக்கீங்களே! :)
ராயாஸ் நாங்களும் சென்று ஏமாந்தோம். அதை எழுதி இருந்தேன் என்று ஞாபகம்! கூகு ரிவியூவில் எனக்கு அவர்கள் பதில் சொல்லி இருந்தார்கள்!
ReplyDeleteராயாஸ் லாட்ஜிங்கிற்குப் போனால் ஏமாந்திருக்க வேண்டியதில்லை. பின்னால் அருமையான ரெஸ்டாரன்ட். இது சாலையிலே இருக்கு என்பதாலும் டிஃபன்/சாப்பாடு இரண்டும் உடனே கிடைக்கும் என்பதாலும் போனோம். நாங்க போனப்போ டிஃபன் இல்லைனு சொல்லிட்டாங்க. சோளா/பூரி மட்டும் தான். நான் லஸ்ஸியோடு முடிச்சுக்கப் பார்த்தால் அவர் சோளா/பூரிக்கு யோசனை சொல்லிவிட்டார். சாதாரணமாக நான் மனசு மாற மாட்டேன். அன்னிக்குக் காலை மட்டமான இட்லிகளைச் சாப்பிட்டதில் நொந்து போயிருந்தேன். ஒரே பசி.
Deleteதஞ்சை எல் ஐ சி காலனி!
ReplyDeleteஎனக்கு பழைய நினைவுகள் வருகின்றன. மேரீஸ் கார்னர் கான்வென்ட் பள்ளியிலிருந்து இதயெல்லாம் தாண்டிதான் நான் மெடிக்கல் காலேஜ் குவார்ட்டர்ஸ் செல்லவேண்டும்!
மேரீஸ் கார்னர் உங்களுக்குத் தெரியுமா?
Deleteஎனக்கு மேரிஸ் கார்னர் எல்லாம் தெரியாது. இந்த எல்.ஐ.சி காலனிக்கு அடிக்கடி போனதால் நன்றாகத் தெரியும்.
Deleteதரிசனம் நலமாக இருந்ததில் மகிழ்ச்சி நானும் தரிசித்து கொண்டேன்.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteதிடீர் பயணம் குறித்த தகவல்கள் சிறப்பு. நல்லதே நடக்கட்டும்.
ReplyDeleteநன்றி வெங்கட்!
Deleteகீதாக்கா படங்கள் நல்லாருக்கு. அம்மன் அழகு. பச்சை சார்த்தி!
ReplyDeleteஅது சரி செல்ஃபோன் காரில் வைத்துவிட்டு படங்கள் எப்படி எடுத்தீர்கள்? (நெல்லை வந்து சொல்வார், கீதாரெங்கன் கா அது உங்களுக்குத் தெரியாதா? கீ சா மேடம் முன்னாடி எடுத்த படங்களைப் போட்டிருப்பாங்கன்னு!! - ஹலோ நெல்லை, முன்னாடி எடுத்த படம் நா இந்த அழுக்கெல்லாம் இருக்காதே படத்துல அழுக்கு தெரிகிறதே....)
கீதா
உங்க சந்தேகத்தைச் சொல்லி, என்னை மாட்டிவிடப் பார்க்கறீங்க. நானே முதலிரண்டு பளீச் படங்களைப் பார்த்துவிட்டு திகச்சுப்கோய் உட்கார்ந்திருக்கேன்.
Deleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! தி/கீதா, முதலில் போனது கருவிலி கோயிலுக்கு. அப்போத் தான் செல்லைக் காரிலேயே வைச்சுட்டுப் போயிட்டேன். ஆகவே திரும்பச் சென்று (அது ஒரு அரை மைல் நடக்கணும். ) செல்லை எடுத்து வரச் சோம்பல். அங்கே தான் படம் எடுக்கலை. இங்கே பரவாக்கரை வந்தப்புறமாப் பெருமாள் கோயிலில் இறங்கறச்சேயே செல்லைக் கைகளில் எடுத்துக் கொண்டே இறங்கினேன். இன்னும் பெருமாள் கோயிலில் வேணுகோபால ஸ்வாமி/ஆஞ்சி எல்லோரையும் எடுத்திருந்தேன். அதெல்லாம் போடலை. கொஞ்சம் இருட்டாத் தெரியுது.
Deleteஇனிய தரிசனம்..
ReplyDeleteஅன்னை நல்லோர் அனைவரையும் காத்தருள்வாளாக...
திடீரென்று அமைந்த பயணம் நேர்த்திக்கடன் முடிவடைய அம்மனின் பெர்மிஷன் கிடைத்து முடித்துவிட்டது மகிழ்வான விஷயம் கீதாக்கா. குலதெய்வம், பரவாக்கரை, அம்மன் கோயில் என்று.
ReplyDeleteநல்ல தரிசனம் எல்லாக் கோயில்களும் கிடைத்திருப்பதற்கு அம்மன் மனது வைத்து. இனிய தருணங்கள் தொடரட்டும்.
கீதா
இதுல குலதெய்வம் தரிசனத்தைவிட ஹோட்டல்கள் உணவு பற்றி அதிகமா எழுதியிருக்காங்களோ?
Deleteஆமாம் தி/கீதா. திடீரென அமைந்தது தான் இந்தப் பயணம். பிரார்த்தனையும் நல்லபடியாய் முடிந்தது. அனைவரையும் அம்மன் அருள் காப்பாற்றட்டும்.
Deleteநெல்லை, உணவு பத்தி நான் எங்கே எழுதி இருக்கேன்?
// கும்பேஸ்வரர் கோயில் தெருவில் மங்களாம்பிகாவில் சகிக்க முடியாத ஒரு டிஃபனைச் சாப்பிட்டு அதை விட மோசமான சிகரி காஃபி (கவனிக்கவும் டிகிரி காஃபி இல்லை! சிகரி காஃபி) குடித்து விட்டு.. //
ReplyDeleteஇதைத்தான் அன்றைக்கு திங்கக் கிழமை சொல்லி இருந்தேன்..
பாரம்பரிய சுவைகளையும் இழந்து கொண்டு இருக்கின்றோம்..
ஆடம்பரம்.. அலங்காரம்..
நம்மிடம் உள்ள பணத்தைப் பிடுங்குவது ஒன்றே குறி இன்றைய உணவகங்களுக்கு..
ஹாஹாஹா! துரை! எனக்கு அன்னிக்குப் புரியலை! எங்கேயுமே இப்போப் பாரம்பரியச் சுவை என்பது சுத்தமாய் இல்லை. முற்றிலும் இழந்துவிட்டோம். இதே மங்களாம்பிகாவில் கும்பேஸ்வரர்சந்நிதி (தெற்கே) ஒரிஜினல் கடை (இடிந்து இருந்தது. அதிலேயே கொஞ்ச மாசங்கள் ஓட்டினார்கள்) பெரியவர் இருந்தப்போப் பசும்பால் காஃபி சாப்பிட்டிருக்கோம். கொட்டற மழை மேலே உள்ள ஓடுகளின் வழியே தலையில் சொட்டும். அப்போ உட்கார்ந்து எங்க பையர்/மாட்டுப்பெண், நாங்க எல்லோரும் டிஃபன் எல்லாம் சாப்பிட்டிருக்கோம். அந்தச் சுவை இப்போ இல்லை. :(
Deleteபடங்கள் அழகு.
ReplyDeleteநீங்க, சாப்பாடு சூப்பர்னு சொல்லணும்னா நீங்களே பண்ணி, அது ஒரு நாள் அமைந்தால்தான் உண்டு போலிருக்கிறது. ஹிஹிஹி
நெல்லை, நீங்க சொல்வது ரொம்ப சரி. நீங்க இந்த மங்களாம்பிகையை ரொம்பவே சிலாகித்துப் பேசினதாய் மாமா சொன்னார். அன்னிக்கே நினைச்சேன், இது திராபை என! இஃகி,இஃகி,இஃகி, என் மைத்துனரும் அப்படித் தான் சொன்னார். மாமா தேடிக் கொண்டு திங்களன்று போனப்போவே இது திராபைனு முடிவாயிடுத்து. :)))))
Deleteஉண்மையில் நாம சமைச்சுச் சாப்பிடறச்சே ஒரு திருப்தி வரத்தான் செய்யுது. இன்னிக்குப் பாருங்க கீரைத்தண்டு சாம்பார், கும்பகோணத்தில் வாங்கிய புது ஈயச்செம்பில் தக்காளி ரசம், உ.கி.பொடிமாஸ், கரைத்த மோர், துண்டம் மாங்காய். இதல்லவோ சொர்க்கம்! :)))))
Deleteகுலதெய்வம் கோயிலுக்கு அப்போ அப்போ போறீங்களோ... பதிவு எழுத முடியுது.
ReplyDeleteஇப்போல்லாம் வேற பதிவே புதிதா எழுதுவதில்லை போலிருக்கே....
ம்ம்ம்ம்ம், எழுத விஷயங்கள் நிறைய இருந்தாலும் வேண்டாம்னு தவிர்க்கிறேன். உம்மாச்சிப் பதிவு போட்டால் எதிர்வினைகள் குறைவு இல்லையா? புதுசா எழுதக் கொஞ்சம் யோசனையா இருக்கு. சமீப காலங்களில் நிறையப் பேரின் முகநூல் ஐடி, வாட்சப் போன்றவை முடக்கப்பட்டுத் திரும்பக் கிடைத்தன. எனக்கெல்லாம் அதுக்கு என்ன செய்யணும்னே தெரியாது. ஆகவே கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருப்போமே!
Deleteஅவசரமாக சென்றது போல பதிவிலும் ஒரு அவசரம் தெரிகிறது.
ReplyDeleteஅவசரமாய் ஏற்பாடு பண்ணினோமே தவிர சனிக்கிழமையே கோயில்களுக்கு எல்லாம் தகவல் சொல்லி, ட்ரஸ்டியையும் வரச் சொல்லி ஏற்பாடு பண்ணி, ஞாயிறன்று வண்டிக்குச் சொல்லித் திங்களன்று கிளம்பினோம். வண்டி வரத் தான் லேட். 3 முறை ஓட்டுநர் பெயர்/தொலைபேசி எண்/ஓடிபி அனுப்பிக் கடைசியில் மூன்றாம் முறை தான் சரியாச்சு. அதே போல் பில்லும் 3 முறை வந்தது. :)))) அவசரமாய்ப் போயிருந்தாலும் எழுதும்போது நிதானமாய்த் தான் எழுதினேன்.
Deleteஇன்று கமெண்ட் போய் விட்டது என்று நினைக்கிறேன். முந்தைய பதிவிற்கு கமெண்ட் போட்ட பொழுது எரர் என்று வந்து விட்டது.
ReplyDeleteரொம்ப நாட்கள் கழிச்சு உங்களுடைய கருத்துரை இன்னிக்கு/இந்தப் பதிவுக்குத் தான் இரண்டு கருத்துரையாக வந்திருக்கு.
Deleteநான் போடும் கருத்துக்கள் ஏனோ போய்ச் சேருவதில்லை. இதை நான் எ.பி.யிலும் குறிப்பிட்டிருந்தேன்.என் தளத்திற்கு வந்து கருத்திட்டவர்களுக்கு கூட பதிலளிக்க முடியவில்லை.
Deleteகருத்திட முடிவதில்லை. எரர் என்று வருகிறது. இதை எ.பி.யிலும் குறிப்பிட்டிருந்தேன். என் பதிவிற்கு கருத்து கறியவர்களுக்கு நன்றி கூற முடியவில்லை.
Deleteஎனக்கும் சில சமயம் இப்படி நேரும். காணாமல் போகும் அநேகமாக.
Deleteகுலதெய்வக் கோவிலின் தரிசனம் கிடைத்தது நல்ல விஷயம். உங்கள் மூலம் எங்களுக்கும் கிடைத்தது.
ReplyDeleteதுளசிதரன்
மிக்க நன்றி துளசிதரன்.
Deleteகுலதெய்வம் வழிபாடு அருமை. சூலம் அழகாய் இருக்கிறது. பச்சை புடவையில் வெள்ளி சூலம் கையில் ஏந்தி அழகாய் காட்சி தருகிறார் அன்னை. அன்னை அனைவரையும் நலமாக வைக்கட்டும்.
ReplyDeleteஸ்ரீதேவி, பூதேவி தெரியவில்லை. பெருமாள் நன்றாக தெரிகிறார்.
நன்றி கோமதி. யாருமே சூலத்தைப் பற்றிச் சொல்லவில்லை. கவனிக்கலையோ? உங்கள் கருத்துரைக்கு நன்றி. ஶ்ரீதேவி, பூதேவி தெரியணும்னால் கருவறைக்கு உள்ளே போகணும். படி ஏற முடியாது. அவருக்கு மொபைலில் எடுக்க வரவில்லை. வீடியோ காலிலேயே எங்கேயானும் அழுத்தி மாத்திடுவார். :))))))
Delete