எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 27, 2022

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே!

 முகநூலில் "மத்யமர்" குழுமத்தில் வாரா வாரம் ஒரு தலைப்புக் கொடுத்து எழுதச் சொல்றாங்க. எழுதிய பதிவுகளில் வெளியிட்டவற்றில்  சிறந்த பதிவைத் தேர்ந்தெடுத்து அதற்கு இந்த வாரத்துச் சிறப்புப் பதிவு என்னும் சான்றிதழ் கொடுக்கறாங்க. மத்யமரில் அநேகமாக அனைவருமே ஐம்பதுக்கு மேற்பட்டவர்களாகத் தான் இருக்காங்க. ஐம்பதுக்குக் கீழேயும் இருந்தாலும் அது ஏதோ பத்து, இருபது சதவீதமாக இருக்கலாமோ என்னமோ. இந்தச் சான்றிதழையும் அந்தப் பதிவு இந்த வாரத்துச் சிறப்புப் பதிவாக ஆகவும் எல்லோரும் போடும் போட்டியும், என்னோடது தேர்ந்தெடுக்கலைனு சிலரும், திரும்பத் திரும்ப சிலரே தேர்ந்தெடுக்கப்படுவதாக மற்றவர்களும் சேர்ந்து கொண்டு குழந்தை மாதிரி வருந்துவதும் , ஒருவருக்கொருவர் சண்டை/விவாதங்கள் பண்ணிக் கொள்வதும் ரொம்பவே ஆச்சரியமா இருக்கு.

நான் மத்யமர் ஆரம்பித்த நாளில் இருந்து அதில் இருந்தாலும் ரொம்பவே அதில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. எனக்கேற்றாற்போல்  பயன்படுத்திக் கொள்ளவெல்லாம் இல்லை. என்னோட டைம்லைனுக்கு வரும் பதிவுகளைப் படிப்பேன். பிடிச்சிருந்தா கருத்து/இல்லைனா கடந்துடுவேன். அவ்வளவே. மற்றபடி இந்தப் போட்டியில் எல்லாம் கலந்துக்கறதில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவரவருக்கு உள்ள வலியைப் பற்றி (உடல் வலி அல்ல, மனோ வலி) எழுதி இருந்ததைப் பார்த்தால்/படித்தால்! மனிதரில் இத்தனை கொடூரமானவங்களும் உண்டா என்றே ஆச்சரியமும்/கவலையும்/அச்சமும் ஏற்படுகிறது. உறவுகள் ஒருவருக்கொருவர் போட்டுக் கொள்ளும் சண்டைகள் கூடப் பகிரப்படுகிறது. சம்பந்தப்பட்டவங்க இதை எல்லாம் படிச்சால் ஏற்படும் அல்லது ஏற்படப் போகும் பின் விளைவுகள்! யோசனையா இருக்கு! முகநூலே கொஞ்ச நேரம் பொழுதுபோக்காய் வந்துட்டுப் போகலாம்/ அவ்வளவு தான். முத்தெல்லாம் அபூர்வமாகவே கிட்டும். அதிலும் சிலர் இரவெல்லாம் கண் விழித்து மத்யமரைப் பார்த்து/படித்துக் கருத்துப் போட்டு! எல்லோருக்குமே வேலை இருக்குமே! தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு மொபைல் பார்ப்பதால் காலையில் எழுந்திருப்பதிலிருந்து ஆரம்பித்து வரிசையாக எல்லாமும் நேரம் ஆயிடாதோ? !!!!!!!!!!!!!!!!!!!!!!!

போகட்டும். இப்போது எங்கே பார்த்தாலும் 83 திரைப்படம். ஆர் ஆர் ஆர் திரைப்படம், காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படம் ஆகியவை பற்றியே பேச்சு. 83 திரைப்படம் 1983 ஆம் ஆண்டில் நாம் நாட்டுக் கிரிக்கெட் அணி வாங்கிய உலகக்கோப்பை பற்றிய படமாம். தமிழிலும் வந்துவிட்டதாம். நமக்கெல்லாம் அதை மூலையில் ஒதுக்கும்போது பார்க்கக் கிடைச்சாலே பெரிய விஷயம். ஆர் ஆர் ஆர் ராஜமௌலி படம் போல! பிரம்மாண்டமாய் இருப்பதாய்ச் சொல்றாங்க. க்தை என்னனு எல்லாம் தெரியலை. ஏதோ பொழுதுபோக்குப் படமாக இருக்கலாமோ என்னமோ! இது அநேகமாக எல்லா மொழிகளிலும் டப்பிங் எடுத்திருப்பாங்க போல! சிலர் மட்டும் மிகவும் ஈடுபாட்டுடன் எந்தப் படம் வந்தாலும் பார்த்துவிட்டு விமரிசனங்கள் எழுதிடறாங்க. ஆச்சரியமா இருக்கு. காஷ்மீரி ஃபைல்ஸ் படம் ஆங்கில சப் டைட்டில்களுடன் கூடிய இந்திப்படம். ஆனால் இப்போது தமிழில் டப்பிங் செய்யப் போவதாய்ச் செய்திகள் பார்த்தேன். யார் செய்யப் போறாங்களோ தெரியலை! படத்தின் ஜீவன் கெட்டுப் போகாமல் இருந்தால் சரிதான்!

கொஞ்ச நாட்களாக நேரம் ஏதோ உருப்படியாய்ப் போய்க் கொண்டு இருக்கிறது. எத்தனை நாளைக்கோ தெரியலை. ஆனால் பதிவு எழுதத் தான் மனசே வரலை. எதை எழுதினாலும் ஈடுபாட்டுடன் எழுதணும்.  எங்கே! பாதியில் ஓர் அலுப்பு வருகிறது. என்னத்தை எழுதி என்ன பலன்? எதுவும் மாறப்போவதில்லை என்று ஆற்றாமை வருகிறது. அதிலும் கோயில்கள் விஷயத்தில் மாநில அரசின் நடவடிக்கை மனதை வருத்துகிறது. கோயில்களின் வருமானத்தை வைத்துக் கொண்டு பக்தர்களுக்கு எவ்வளவோ சௌகரியங்கள் பண்ணித் தரலாம். இதிலே ஒரு வேளை கூட விளக்கேற்றி நிவேதனம் பண்ண முடியாத கோயில்கள் பல இருக்கின்றன. அவற்றுக்குச் செலவு செய்யலாம்.  எல்லோரும் அர்ச்சகர்கள் ஆகணும் என்பதில் காட்டும் முனைப்பைக் கோயில்களின் வருவாயை நல்லபடியாச் செலவு செய்வதைலும் காட்டலாம். சம்ஸ்கிருதம் வேண்டாம் என்கின்றனர்.  கிரந்தம் வேண்டாம் என்கின்றனர். இவை இரண்டும் இல்லாமல் தமிழகச் சரித்திரத்தைப் புரிந்து கொள்வது எப்படி? அதோடு இல்லாமல் இதைச் சொல்கிறவர்களின் குழந்தைகள்/பேரக்குழந்தைகள் படிப்பது மும்மொழிகளில் தான். பொது மக்களைத் தான் படிக்க வேண்டாம் என்கின்றனர். 

அந்தக் காலத்தில் மணிப்ரவாளம் என ஒரு நடையே உண்டு. அதைப் புரிந்து கொள்ள முடியலைனால் கல்வெட்டுக்களில் உள்ள கிரந்த எழுத்துக்களைப் புரிந்து கொள்ள முடியலைனால் எப்படிச் சரித்திரத்தைப் புரிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியும்? மொழி விஷயத்தில் மக்கள் விருப்பத்துக்கு விட வேண்டும். இங்கே யாரும் இன்னொரு மொழியைக் கற்றுத் தான் ஆகணும்னு கட்டாயப்படுத்தலை. விருப்பமுள்ளவர்கள் கற்றுக்கொள்ளலாம் என்றே சொல்லப்படுகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டு மாணவர்கள் நிலை மிக மோசம். தமிழும் தெரியவில்லை. ஆங்கிலமும் புரியவில்லை. டேஞ்சர் என்னும் ஆங்கிலச் சொல்லை ஒரு ஆங்கில ஆசிரியப் பெண் "டங்கர்" எனச் சொல்லிக் கொடுக்கிறதாக ஒரு வீடியோ சில ஆண்டுகள் முன்னர் சுற்றியது. அது எத்தனை தூரம் நிஜமோ தெரியலை. சைகாலஜியை  (Psychology) பிசைகாலஜி என உச்சரிப்பவர்கள் இன்னமும் இருக்காங்க என்பதே நிஜம்.

இப்போது தமிழ் படிப்பவர்கள் எவரும் கம்பராமாயணமோ, சிலப்பதிகாரமோ, நாலடியாரோ, ஏலாதி, திரிகடுகம் போன்றவையோ படிப்பதில்லை. தற்காலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளே பாடமாக இருக்கும் போல! அதனாலும் மாணவர்களின் தமிழறிவு முற்றிலும் மோசமாக ஆவதோடு பொது அறிவும் வளர்வதில்லை.  ஒரு சில கால் சென்டர்களில் வேலை செய்யும் பெண்களுக்கோ/ஆண்களுக்கோச் சின்னச் சின்ன ஆங்கில வார்த்தைக்குக் கூட அர்த்தம் புரிவதில்லை. நம் பெயரைக் கூடத் தப்பில்லாமல் ஆங்கிலத்திலோ/தமிழிலோ அவர்களால் எழுத முடிவதில்லை.  அதோடு அவங்களுக்குப் பழைய சரித்திரமோ, மன்னர்களோ, அவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டுகளோ, தமிழ் படிப்பவர்கள்/படித்தவர்கள்  எழுபதுகள் வரை தமிழ்நாட்டில் சிறப்பாக இருந்ததோ தெரிய நியாயமில்லை. உ.வே.சா. என்றாலோ தமிழ்த்தாத்தா என்றாலோ புரிஞ்சுக்கறவங்க யாரும் இல்லை. யாரது? யாரோட தாத்தா என்பார்கள்! 

இங்கே அவற்றை எல்லாம் பாடமாக வைக்காமல் அந்தத் தமிழறிஞர்களின் பெயரில் உள்ள அடையாளங்களை நீக்குவதில் தான் முன்னே நிற்கின்றனர். அந்தக்காலத்தில் அடையாளங்கள் இல்லாமல் யாரும் இருந்ததில்லை. அதை ஓர் பெருமையாகவே கருதினார்கள். ஆனால் இப்போது இம்மாதிரி விஷயங்களில் முனைந்து செயல்படுத்துவதைத் தமிழறிஞர்களுடைய புத்தகங்களைப் பாடமாக வைப்பதில் இல்லை. முதல்லே இந்தக் காலத்துத் தமிழாசிரியர்களுக்கே தமிழ் நன்றாகத் தெரியுமா என்பதே சந்தேகம்.  கொஞ்ச காலம் முன்னால் ஆயுத எழுத்து என்றால் என்ன எனக் கேட்டதற்கு ஒரு மாணவன் "அது ஒரு திரைப்படம்" என பதில் சொன்னதும், பின்னர் தூண்டித் தூண்டிக் கேட்டதில் ஒரு வழியாகத் தமிழில் உள்ள எழுத்து அது என்பதையே அப்போது தான் புரிந்து கொண்டனர். கேவலம்!  இந்த அழகில் தமிழ் படித்து இவங்கல்லாம் நாளைய பிரஜைகளாக வந்து தமிழைக் காப்பாற்றப் போகிறார்கள்.  பெரிய பீத்தல் தான் இருக்கு. தமிழ் மிகத் தொன்மையான மொழி/ எங்கள் மொழி தான் மிகவும் மூத்தது, தமிழர்கள் எனில் அவங்க தனியானவர்கள். என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில் காட்டும் வீரம் தமிழைக் காப்பாற்றுவதில் இல்லை.  உண்மையிலேயே இதிலும் நாம் தனியானவர்களே. நம் மாநிலத்தில் தான் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு! தமிழரை வஞ்சிப்பதாகச் சொல்லுகின்றனர். ஆனால் மற்ற மாநிலங்களில் ஹிந்தி கற்கத் தடை இல்லை. கேரளாவில் ஹிந்தி கற்றே ஆகவேண்டும் எனத் திருவனந்தபுரத்தில் இருக்கும் திரு ஜெயக்குமார் சந்திரசேகரன் அவர்கள் சொல்கிறார். ஆனால் தமிழ்நாட்டில்? அண்டை மாநிலங்களுடைய படிப்பின் தரத்தோடு நம் படிப்பின் தரத்தை யாராவது ஒப்பிட்டுப் பார்த்திருப்பார்களா? சந்தேகமே!

37 comments:

  1. தமிழர்கள் வாய்ச் சொல்லில் வீரர்கள் மற்றபடி காரியத்தில் ஒன்றுமில்லை. இந்தியாவிலேயே தமிழர்களுக்கு மட்டுமே ஹிந்தி தெரியாது.

    அரபிக்காரன் பேசுகிறான், சூடானி பேசுகிறான், ஈரானி பேசுகிறான் தமிழன் அவர்களிடம் பதில் தெரியாமல் முழிக்கிறான்.

    //பதிவு எழுதத் தான் மனசே வரலை. எதை எழுதினாலும் ஈடுபாட்டுடன் எழுதணும்//

    இப்படிச் சொல்லியே எழுதி தள்ளி விட்டீர்களே...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கில்லர்ஜி, உண்மையில் எழுத இருந்த விஷயமே வேறே! எங்கோ ஆரம்பிச்சேனா! அது எங்கோ போய்விட்டது என்றாலும் சொல்லி இருப்பதிலும் உண்மை இருக்கு தானே! :))))

      Delete
    2. இது உங்கள் தளம். உங்களுக்கோ கில்லர்ஜிக்கோ மறுப்புத் தெரிவிப்பது என் நோக்கமல்ல.என் கருத்தை மட்டுமே முன் வைக்கிறேன்.

      இந்தியாவில் தமிழனுக்கு மட்டுமே இந்தி தெரியாதா? கணக்கெடுத்தது யார்?

      கில்லர்ஜி எத்தனை மாநில மக்களுடன் பேசிப் பார்த்தார்?

      இந்தி மொழி படித்து இந்தியாவெங்கும் வேலை தேடிக்கொண்டவர்கள் எத்தனை பேர்?

      இந்தி தெரிந்தவர்கள் பல்லாயிரக் கணக்கில் கூலி வேலை செய்யத் தமிழ்நாடு வருவது ஏன்?

      அரபு நாடு போகிறவன் அரபு மொழி படிக்கணும்.ஈரான் போறவன் அந்த நாட்டு மொழி படிக்கணும். இந்தி எதற்கு?

      அமெரிக்கா ஜப்பான் ஜெர்மன் பிரெஞ்சு நாட்டுக்காரனெல்லாம் இந்தி பேசுகிறான் என்றுகூடச் சொல்வீர்களோ!

      ஆங்கிலத்தில் போல அறிவியல் தொழில் நுட்பச் செல்வங்கள் இந்தியில் இருக்கறதா அதைப் படிப்பதற்கு?

      மாநில மக்களுக்கே, அதாவது மண்ணின் மைந்தர்க்கே வேலை தர வேண்டும் என்னும் முழக்கமும் ஆங்காங்கே ஓங்கி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

      இந்தி வெறியர்கள் ஆதிக்க வெறி பிடித்து அலைவது தெரியாதா உங்களுக்கெல்லாம்?

      அரிப்பெடுத்தவன் சொரிந்துகொள்கிறான். தேவைப்படுகிறவன் இந்தி படிப்பான்.

      இந்தி தேவையில்லை என்பவர்களை மட்டம் தட்டுவதில் அற்ப சந்தோசம் கிடைக்கிறதோ?!

      வாய்ப்பளித்தமைக்கு நன்றி.




      Delete
    3. வாங்க பசி பரமசிவம் ஐயா! நீங்கள் சொல்வது எல்லாம் இங்கே புகட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கருத்துகளே! ஆதிக்க வெறியில் யார் இங்கே வந்து நம்மை ஆள்கின்றனர்? இந்தி தெரிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கிலே இங்கே வருவது கடந்த 20 வருடங்களில் அதிகமாகவே இருக்கிறது தான். அதற்குக் காரணம் வருபவர்களில் பெரும்பாலோர் ஹிந்தி பேசினாலும் அவர்களில் பெரும்பாலோர் பங்களா தேஷ், ரோஹிங்கியா மக்கள் என மிகவும் வறுமையில் இருப்பவர்களே. அவங்களுக்கு இங்கே கூலிவேலையானும் கிடைத்தால் போதும். பிஹாரில் இருந்தும் வறுமையில் உழலும் மக்கள் வருகின்றனர். இங்கே கூலி வேலை செய்வதால் அவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. இங்கே அவர்களை வைத்து வேலை வாங்குவது நம் தமிழ் மக்கள் தானே! அவங்களிடம் கேட்டுப் பாருங்க. நம் தமிழ் மக்களை வேலைக்கு வைத்தால் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்களன்று எவரும் வேலைக்கு வரமாட்டார்கள். செவ்வாயன்றிலிருந்து தான் வருவார்கள். வாரம் முடிகையில் வெள்ளியன்றே பலர் விடுமுறை எடுக்கின்றனர். சம்பாதிக்கும் பணம் அவங்களுக்கு டாஸ்மாக்கிற்கே செலவாகி விடுகிறது. ஆனால் இந்த மக்களோ சம்பாதிக்கணும் என்னும் வெறியில் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதோடு அவர்களுக்குத் தமிழ் மக்களுக்குக் கொடுப்பதில் பாதி ஊதியம் கொடுத்தால் போதும் என அவர்களை வேலைக்கு வைக்கும் முதலாளிகள் கருதுகின்றனர். அதோடு இல்லாமல் இங்கே தமிழ்நாட்டிலிருந்தும் தமிழக மக்கள் வடக்கே வேலைக்குச் செல்வதில்லையா? சென்றிருக்கிறார்கள்/இன்னமும் செல்கின்றனர். தில்லியில் சேலத்து மக்கள் உழைப்புக்கு அஞ்சமாட்டார்கள் என்பதால் அவர்களில் பலரும் தில்லியிலேயே இருந்து வேலை பார்த்தார்கள். அது ஒரு காலம். அரபு நாடு மொழியாகட்டும், ஈரான் மொழியாகட்டும். எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் ஹிந்திக் கலப்பு இருக்கும்போல! ஆகவே அவங்களும் ஹிந்தியை உடனடியாகப் புரிஞ்சுக்கறாங்களே! இந்தியில் அறிவியல் தொழில் நுட்பச் செல்வங்கள் இல்லை என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? மருத்துவப் படிப்புக்கே ஹிந்தி மொழியில் பல அறிவியல் கலைச்சொற்கள் வந்திருக்கின்றன என்பது தெரியுமா? அந்த அளவுக்குத் தமிழில் வரலை என்பதும் தெரியுமா? இந்தி தேவை இல்லை என்பவர்களைப் பார்த்துப் பரிதாபம் தான் படுகிறேனே தவிர்த்து அதில் அற்ப சந்தோஷம் என்ன கிடைக்கும்? ஏனெனில் நஷ்டம் எனக்கு இல்லையே! படிக்காதவங்களுக்குத் தான் நஷ்டம். ஹிந்தி வேண்டாம் என்று சொல்லும் தலைவர்களின் குழந்தைகள் அனைவரும் சிஷ்யா பள்ளியில், பத்மா சேஷாத்ரி பால பவன், கேந்திரிய வித்யாலயா, சர்ச் பார்க் கான்வென்ட் என எல்லா மொழிகளையும் கற்பிக்கும் பள்ளிகளிலேயே படிக்கின்றனர். திரு ஸ்டாலின் அவர்களின் பேரன், பேத்திகள் சிஷ்யா பள்ளியில் படிப்பதாக அவரே சொல்லி இருக்கிறார்/அந்தப் பள்ளியின் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டபோது. கனிமொழி அவர்களின் ஒரே மகன் அடையாறு கேந்திரிய வித்யாலயாவில் ஹிந்தி, சமஸ்கிருதம் இரண்டும் படித்தார். தயாநிதி மாறன், கலாநிதி மாறன் போன்றவர்களும் ஹிந்தி நன்றாக எழுத, பேச, படிக்கத் தெரிந்தவர்களே! இதைத் தவிர்த்து முதலமைச்சரின் மகள் நடத்தும் வேளச்சேரி பள்ளியில் மாணவ/மாணவிகள் தமிழில் பேசினால் அபராதம் என்பதோடு அங்கே மத்திய அரசு பாடத்திட்டம் தான் மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. ஹிந்தி கட்டாயம் உண்டு. நீங்களும் நானும் தான் இந்த அரசியல்வாதிகளின் வாய் ஜாலத்தில் மயங்கி நம்மை நாமே கெடுத்துக் கொண்டு இருக்கோம். இதை உணரும் அன்றே தமிழக மக்களின் மனோநிலை மாறத் தொடங்கும். ஹிந்தி மொழி பேசினால் இந்தியாவெங்கும் வேலைக்குச் செல்ல முடியும் என்பதும் உண்மையே!

      Delete
  2. //தமிழ்நாட்டு மாணவர்கள் நிலை மிக மோசம் தமிழும் தெரியவில்லை ஆங்கிலமும் புரியவில்லை//
    நிலை இப்படி இருக்க அதில் சிறக்க முய்ற்சி எடுக்க வேண்டுமே தவிர இன்னொரு மொழியை படிக்க சொல்வது எந்த வகையில் சரியாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. சொல்லுபவர்களின் குழந்தைகள் எல்லாம் 2,3 மொழிகளை எளிதாகக் கற்கிறார்கள். அவர்கள் யாரும் அரசுப் பள்ளியில் படிப்பதில்லை. பக்தி இலக்கியத்தை ஒதுக்கியதாலேயே பல மாணவர்களுக்கு எதுவும் தெரியலை/புரியலை. நாங்கல்லாம் பள்ளியில் படிச்சப்போ கம்பராமாயணமும் படிச்சோம், பெத்லஹேம் குறவஞ்சியும் படிச்சோம், சீறாப்புராணமும் படிச்சோம். இப்போ எதுவுமே இல்லை. மனித நீதி என்ன என்பதே புரியாமல் வளர்கின்றனர். ஆங்கிலம் வெளிநாட்டு மொழி. அதை ஏற்கையில் இந்திய மொழியான ஹிந்தியை விருப்பமுள்ள மாணவ/மாணவியர் படிப்பதில் என்ன தப்பு? யாருக்கு வேணுமோ அவங்க படிச்சுக்கறாங்க.

      Delete
    2. 3 வது மொமி தப்பு என்று சொல்லவில்லை இங்கு... ஆனால் முதல் 2 மொழியும் புரியவில்லை தெரியவில்லை என்கிற போது மூன்றாவதிற்கு அவசியம் ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி

      Delete
    3. கற்றலில் குறைபாடு இல்லை மதுரைத்தமிழரே! கற்பித்தலில் தான் குறைபாடுகள். ஆகவே மாணாக்கர்களுக்குத் தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும், ஹிந்தியாகட்டும் நல்லபடி இலக்கியங்களைத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தால் சின்ன வயதில் இருந்தே மாணவ/மாணவியர் 3 மொழி என்ன, நான்கு மொழி கூடக் கற்பார்கள். அம்பேரிக்காவில் எங்க பேத்திகள்(மூத்தவர்கள்) இரண்டு பேரும் ஸ்பானிஷ்/ப்ரெஞ்ச் மொழிகள் கற்றார்கள். அங்கங்கே எது தேவையோ அதைச் சொல்லிக் கொடுக்கும்போது கற்பதில் தவறு என்ன?

      Delete
  3. என்ன... புலம்பல் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் என்னவோ சொல்ல வந்து எதையோ சொல்லிண்டு இருக்கேன்.

      Delete
  4. 83 படம் சூப்பர். ஒன்றிப் பார்க்க முடிந்தது.

    இன்று ஆர் ஆர் ஆர் படம் தமிழில் பெங்களூரில் பார்த்தேன் (2 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு தியேட்டரில் சென்று பார்க்கும் படம்). மசாலாப் படம். பார்க்கப் பிடித்திருந்தது. பாகுபலி போல பிரம்மாண்டமாக இருந்தாலும், ஒரு முறைக்கு மேல் பார்க்க அலுப்புத்தட்டும் என்று நினைக்கிறேன். பாகுபலி (2 பாகங்களையும், ஒவ்வொன்றையும்) நாலைந்து முறை தியேட்டரில் பார்த்தேன், பெரிய ஸ்க்ரீன் தொலைக்காட்சியில் இரு முறை பார்த்திருப்பேன். அந்த அளவு மனது ஆர் ஆர் ஆர் இல் ஒன்றாது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் இணையத்தில் கிடைக்குதா? அல்லது நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் மூலம் தான் பார்க்கணுமா? நான் பாகுபலியே பார்த்தது இல்லை. இதிலே ஆர்.ஆர்.ஆர். பார்த்தால் மட்டும் என்ன புரியப் போறது?

      Delete
  5. இந்த அரசுக்கு கோயில்களைப் பற்றி அக்கறை கிடையாது. அதை எவ்வாறு சீர்குலைக்கலாம் என்பதில்தான் அக்கறை. கோயில் வேலையாட்களுக்கு 30-80 ஆயிரத்துக்குமேல் சம்பளத்தில் பணி அமர்த்தறாங்க, பிற மதத்தைத் சேர்ந்தவர்களையும். ஆனால் கோயிலுக்கு என்று எதையும் செய்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது? இப்போது அவங்களுடைய ஒரே வேலை சிதம்பரம் கோயிலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு/தீர்ப்பு எல்லாம் தீக்ஷிதர்களுக்கே ஆதரவாக உள்ளன. மறுபடியும் அங்கே தமிழில் தேவார, திருவாசகங்கள் ஓதுவதில்லை என்னும் குற்றச் சாட்டு. எனக்குத் தெரிந்து அந்த ஒரு கோயிலில் தான் தர்மபுரம் ஆதீனத்தால் நியமிக்கப் பட்ட ஓதுவார்கள் பஞ்சப்புராணமும் ஓதுவார்கள். நான்கு வருஷங்கள் முன்னர் ஓர் பெண்மணி ஓதுவாராக நியமிக்கப்பட்டிருந்தார். தினமும் எல்லாக் கால வழிபாட்டிலும் தேவார திருவாசகங்கள் உண்டு. அந்த அந்த நாயனாரின் பிறந்த தினத்தன்றோ அவருடைய நக்ஷத்திரத்திலோ அவர் புனைந்த தேவாரப் பாடல்களைப் பாடி ஆரத்தி எடுப்பார்கள். இதில் மாணிக்கவாசகரின் திருவாசகம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொரு வாசகத்துக்கும் ஒவ்வொரு ஆரத்தி! நடராஜருக்கும் மாணிக்கவாசகருக்கும் காட்டுவார்கள். மெய் சிலிர்க்கும். தேவார, திருவாசகங்கள் ஓதுவதே இல்லை என்போருக்கு அவை என்ன/எப்படி இருக்கும், என்பதெல்லாம் தெரிந்திருக்காதுனு நினைக்கிறேன். தெரிந்திருந்தால் சொல்ல மாட்டார்கள்.

      Delete
  6. அருமையான கருத்துக்களை அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள் - வழக்கம் போல!..

    மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
  7. @ கில்லர் ஜி..

    // அரபிக்காரன் பேசுகிறான், சூடானி பேசுகிறான், ஈரானி பேசுகிறான் தமிழன் அவர்களிடம் பதில் தெரியாமல் முழிக்கிறான்.. //

    நான் இருந்த கம்பெனியில் பிலிப்பினோ காந்தி பேசுவாள்..

    பங்களா தேசிகளுக்கு ஹிந்தி சரியாக வராது.. அதுகளுக்கு வேலை நம்மைப் பார்த்து ஊளையிடுவது..

    ஷொனார் பங்ளா.. - என்று அங்கேயே கும்மி..குத்தாட்டம்..

    பாரதத்தின் கொடைகள் வேண்டும்..ரயில் இஞ்சின்கள் வேண்டும்.. ஆனாலும்

    ஹிந்து ஒயிக..
    இந்தியா ஒயிக!.. தான்!..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அவர்களில் பலரும் துரோகிகளும் உண்டு. ஆனால் அவங்க பேசும் மொழியால் நமக்கு அவங்க யார், இன்னார் எனத் தெரிந்து கொள்வதில்லை. ஈரோடு, திருப்பூர்ப் பக்கங்களில் ஒரு சின்ன காலனியே இருக்கு என்கின்றனர். :(

      Delete
  8. மதர்

    ஆயுத எழுத்துன்னா சினிமாதான். தமிழில் இருக்கும் எழுத்து ஆய்த எழுத்து. அஃகேனம் என்ற பெயரும் உண்டு. ஆயுத எழுத்து தமிழில் உள்ள எழுத்தொன்றின் பெயர்ன்னு சொன்னாத்தான் தப்பு.

    அந்த சினிமா பார்க்கலை, இந்த சினிமா பார்க்கலைன்னு பதிவு போடற உத்தி பிரமாதம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கொத்து, கண்ணு வைக்காதீங்க என்னோட திறமையைப் பார்த்துட்டு! :))))))))))))))))))))

      Delete
  9. மத்யமர் குழுவில் நானும் இருக்கிறேன்.  அங்கு எதுவும் பகிர்ந்ததில்லை.  நிறைய பேர் நிறையவே எழுதுவதை பார்த்திருக்கிறேன்.  நானும் உங்களை போல செலெக்டிவாக சிலவற்றைப் படிப்பதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. நானும் அதிகம் ஏதும் பகிர்வதில்லை. பார்ப்பனவற்றிலும் பெரும்பாலோர் அவங்க பதிவுக்குத் தான் முன்னுரிமை, இவங்க பதிவுக்குத் தான் லைக்ஸ், கமென்ட்ஸ், இவங்களுக்குத் தான் பொட்டி கொடுபபங்க என ரொம்பவே பரிதாபமாகப் புலம்புவதைப் பார்க்கையில் சிப்பு சிப்பாக வருது. :)))))

      Delete
  10. 83 படம் நான் பார்த்து விட்டேன்.  என் மகன்கள் அது ரிலீஸானதும் தியேட்டரில் சென்று பார்த்து வந்தார்கள்.  நன்றாகவே இருக்கிறது.  ஓடிட்டி தளங்களில் வேறு சில படங்களும் பார்ப்பதுண்டு.RRR முதலில் பார்க்கும் ஆர்வம் வரவில்லை.  இப்போது கொஞ்சம் தோன்றுகிறது.  தியேட்டரில் பார்ப்பேனா, தெரியாது.  ஆனால் ராஜமௌலி படங்களை தியேட்டரில் பார்த்தால்தான் நன்றாய் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு இவை எதையும் நான் பார்க்கப் போவதில்லை ஶ்ரீராம்.

      Delete
  11. கொஞ்ச நாட்களாய் உருப்படியாய் நேரம் போய்க்கொண்டிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? நிறைய படிக்கிறீர்களா? என்னிடம் என்னுடைய பெரிய குறை படிக்காமல் இருப்பது! ஆனால் படிக்க நிறைய வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கொஞ்சம் படிக்கிறேன். சில விட்டுப் போன பதிவுகளை எழுத ஆரம்பிச்சிருக்கேன். அதோடு மின்னூலுக்கான சில புத்தகங்களை எடிட் செய்கிறேன். ஏதோ கொஞ்சமானும் உருப்படியாய்ச் செலவு செய்யலாமே!

      Delete
  12. என் மகன் கூட தமிழில் எதையும் படிப்பதில்லை.  தமிழில் என்று இல்லை, புத்தகங்கள் படிப்பதே வீண் எனும் எண்ணம் இருக்கிறது அவனுக்கு.  அவனுடைய கருத்துகள் எனக்கு ஏற்புடையதாக இல்லை.  ஆனால் நான் மறுத்து பேசுவதில்லை.  அவனாகவே அல்லது அவர்களாகவே உணரும் காலம் வரும்.

    ReplyDelete
    Replies
    1. தமிழில் எதையும் படிக்காதது எங்க குழந்தைகளுக்கு உண்டு. ஆனால் அவர்கள் புத்தகங்களும் படிக்கிறார்கள். இணையத்திலும் தேடிப் படிக்கிறார்கள். படிக்காமல் இருப்பதில்லை.

      Delete
  13. மனமே இல்லை என்று பதிவு நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    முகநூலில் இருந்தாலும் நீங்கள் சொல்லியிருக்கும் குழு எதுவும் தெரியவில்லை. சும்மா பார்ப்பதோடு என் மாணவர்களுக்கான சில வீடியோ பதிவுகள் போடுவதோடு இப்போது சரி.

    நீங்கள் சொல்லியிருப்பது போல் கேரளத்தில் ஹிந்தியும் உண்டு.

    காஷ்மிரி ஃபைல்ஸ் பற்றி மட்டும் அறிந்தேன் மற்றவை தெரியவில்லை.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன். எத்தனையோ முன்னுதாரணம் கேரளாவில் உண்டு. அதில் இந்தப்படிப்புச் சுதந்திரமும், அரசு அதில் தலையிடாமல் இருப்பதும். இங்கே தான் தமிழர்கள்/தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு படிப்பிலும் சரி, வேலைகள் செய்வதிலும் சரி, உழைப்பதிலும் சரி மக்களைச் சோம்பேறியாக்கி விட்டார்கள். :(

      Delete
  14. கீதாக்கா, படங்கள் பார்க்கவில்லை. ஆன்லைனில் இருக்கின்றன போலும். காஷ்மிரி ஃபைல்ஸ் ஏதொ ஒரு லிங்கில் ஃப்ரீயாகவே இருக்கிறது என்று நட்பு சொன்னார் லிங்க் அனுப்புகிறேன் என்று சொன்னார். கேட்க வேண்டும்

    நீங்கள் சொல்லியிருக்கும் ஆதங்கம் எல்லாமே அரசியல் கலந்தது. அதனால் பாதிப்பு குழந்தைகளுக்குத்தான். இங்கும் கன்னடம் தெரியவில்லை என்றாலும் ஹிந்தியை வைத்துப் பிழைத்துவிடலாம் கன்னடமே ஹிந்தி கலந்து பேசுபவர்களும் இருக்கிறார்கள். கன்னடத்தில் பல வார்த்தைகள் குறிப்பாகப் பாடல்கள் எழுதுபவர்கள் பழைய கன்னட மொழி வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் பலருக்கும் பாடலின் அர்த்தம் மேம்போக்காகப் புரிகிறதே அல்லாமல் வார்த்தையின் அர்த்தம் தெரியவில்லை. எல்லா மாநிலங்களிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. கல்லூரிக்குள் அடி எடுத்து வைக்கும் மாணவ மாணவியரை வைத்தே அவர்களின் அடித்தளம் எப்படி என்பதைச் சொல்லிவிடலாம்.

    எனக்கு இவர்கள் பேசும் கன்னடத்தை விட கன்னடப் பாடல்களின் அர்த்தம் புரிகிறது!!!

    மதுரா மதுரா நின்னிந்த ஜீவனே மதுரா, மனிதே (தமிழில் கிட்டத்தட்ட) மனசார (தமிழிலும் அதே) பீசி (வீசி) முளுகுதே (மூழ்கிறதே) இப்படி...ஆனால் அருகில் இருக்கும் கல்லூரிப் பெண் சொல்வது இந்தப் பாடலில் ஓல்ட் கன்னடா. எனக்குத் தெரியாது என்று!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம், உங்களுக்குக் காஷ்மீரி ஃபைல்ஸ் லிங்க் கிடைச்சால் எனக்கும் அனுப்பி வைங்க. :) சந்தடி சாக்கிலே விண்ணப்பம் போட்டுக்கிறேன். இப்போ உலகமயமாக்குதலின் விளைவு இந்த மாதிரித்தாய் மொழியில் பேசுவதையும் படிப்பதையும் கேவலமாக நினைப்பது. என்ன செய்யலாம்.

      Delete
    2. லிங்க் எனக்கும்!

      Delete
  15. கேரளத்தில் ஒரு நல்ல விஷயம் கீதாக்கா, பள்ளிக்காலத்தில் யூத் ஃபெஸ்டிவல் நடத்துகிறார்கள் ஒவ்வொரு வருடமும். அதில் கண்டிப்பாகக்கவிதை போட்டி அதாவது கவிஞர்களின் கவிதைகளை அவர்களது ஒலிப்போடு சொல்ல வேண்டும்....அது பொல பிறமொழிக் கவிதைகளையும் சொல்லும் போட்டி....இருக்கிறது.

    இதெல்லாம் அவர்களுக்கு பல எழுத்தாளர்களை அறிய உதவும். யூத் ஃபெஸ்ட் கல்லூரிப் படிப்பிற்குச் சேர்வதற்கு ஒரு கூடுதல் தகுதி. மதிப்பெண்கள்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிந்து சென்னையிலும் இம்மாதிரி யூத் ஃபெஸ்டிவல் எல்லாம் உண்டு என்றாலும் ஆக்கபூர்வமாக நடக்கிறாதா என்பது தெரியலை. இங்கே தான் பள்ளிக் குழந்தைகளில் இருந்து அரசியல் கட்சிகளைச் சார்ந்து விடுகிறார்களே! ஆகவே அதை ஒட்டித் தான் எல்லாமும் நடக்கும் என்னும்போது பொதுவான முன்னேற்றம் எப்படி ஏற்படும்?

      Delete
  16. மத்யமர் குழு குறித்து முகநூலில் சில பதிவுகள் பார்த்ததுண்டு. குழுவில் நான் இல்லை. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ சென்றிருக்கிறது பதிவு. சில விஷயங்கள் அதிக அளவில் அரசியல் செய்யப்பட்டு விடுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், சிலரின் பதிவுகள் உண்மையாகவே சுவாரசியம். சில பதிவுகள் சிப்புச் சிப்பாய் வரும். :)))) எப்படியோ அவ்வப்போது நல்ல பொழுதுபோக்கு! :))))

      Delete