எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 04, 2022

கன்யாதானம் செய்வதென்றால் என்ன?

 
மத்யமர் குழுமத்தில் ஒரு சிநேகிதி (பெயரெல்லாம் நினைவில் இல்லை) அவருடைய மகள் தன்னைக் கன்யாதானம் செய்வதைப் பற்றிய கேள்வியைக் கேட்டிருந்தார். அவருடைய கேள்வியின் அர்த்தம் "பெண் என்ன பொருளா?" தானம் செய்ய! என்பதே ஆகும். பெண் ஒரு பொருள் அல்ல. மனுஷி தான். ஆனால் அவளுக்குத் தான் சக்தியே அதிகம். ஆதார சுருதி. பெண் இல்லாமல் சிருஷ்டி ஏது? எத்தனையோ கண்டு பிடித்த நம் விஞ்ஞானிகளால் இன்னமும் ஆண் தான் பிள்ளை பெற வேண்டும் எனக் கண்டு பிடிக்க முடியவில்லை. செயற்கைக் கருவானாலும் அதைத் தாங்க ஒரு பெண் தான் தேவைப்படுகிறாள். 

சுமார் நூறு, நூற்று ஐம்பது வருடங்கள் முன்னர் பெண் என்றால் பெற்றவர்கள் பாரம் என நினைத்த காலம் உண்டு. அதற்கு முன்னரும் அப்படி எல்லாம் பெண்ணை வளர்க்கவில்லை. அதன் பின்னர் தற்போதைய காலத்திலும் பெண்கள் அப்படி வளர்க்கப்படவில்லை. ஆனால் தற்காலத்தில் சொல்லும் சுதந்திரம் என்பது வேறு. உண்மையான சுதந்திரம் வேறு. அது தனியாக இன்னொரு சமயம் பேசிக்கலாம். இப்போக் கல்யாணங்களில் பெற்ற பெண்ணைப் பெற்றோர் தானமாகக் கொடுப்பது பற்றித் தானே பேசணும். பொதுவாக அன்னதானம் சிறப்பு என்றாலும் உயிருடன் உள்ள ஒரு பெண்ணை ஒரு ஆண்மகனுக்கு தானமாகக் கொடுக்கும் தந்தை மிகச் சிறப்பானவர். பெண்ணும் ஆணும் சேர்ந்தே இல்லறம் நடத்திக் குழந்தைகளைப் பெற்று அற வழியில் அவரவர் தர்மப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதே திருமணத்தின் முக்கியக் குறிக்கோள். இன்றைய ஆடம்பர நவ நாகரிகத் திருமணங்களில் அப்படி இல்லை என்பது வேறு விஷயம்.

இப்போக் கன்யாதானம் குறித்த சில விபரங்களைப் பார்ப்போம். ஒரு பெண்ணை தானம் செய்து கொடுப்பதன் மூலம் தானம் செய்பவரின் முந்தைய பத்துத் தலைமுறைகள், பிந்தைய பத்துத் தலை முறைகள், அவருடைய தலைமுறை ஆக மொத்தம் 21 தலைமுறைகளுக்குக் கரை சேர்க்கும் என்பது அப்போது சொல்லப்படும் மந்திரங்கள் மூலம் தெரிய வருகிறது என்கிறார்கள். 

"தசானாம் பூர்வேஷாம்

தசானாம்பரேஷாம்,

மம ஆத்மனஸ்ச

ஏகவிம்சதி குல உத்தாரண" என ஆரம்பிக்கும் ஸ்லோகம் மேலும் நீண்டு மேலும் உன் குலத்து வம்ச விருத்திக்காகவும் நான் என் பெண்ணை என் குலவிளக்கை உனக்குக் கன்யாதானமாகக் கொடுக்கிறேன் எனப் பெண்ணின் தந்தை சொல்லுவார். இதே ஆண் பிள்ளை எனில் அவர் செய்யப்போகும் கர்மாவின் மூலமே அந்த ஒரு தலைமுறைக்கு மட்டுமே நிவர்த்தி. ஆனால் கன்யாதானமோ கொடுக்கும் குடும்பத்தின் 21 தலைமுறைகளை கரை சேர்த்து விடும்.

பொருளை தானமாகக் கொடுத்தாலோ, கால்நடைகள், ஆபரணங்கள், வஸ்திரங்கள், பூமி போன்ற எந்தப் பொருளை தானமாய்க் கொடுத்தாலும் பின்னாட்களில் நாம் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். எவ்வகையிலேனும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் பெற்ற பெண்ணை தானமாகக் கொடுத்த பின்னர் அந்தப் பெண்ணை நாம் மீண்டும் நமக்கெனப் பெற முடியுமா? தந்தை/தாய்/மகள் என உறவு நீடிக்கும் என்பது வேறு. ஆனால் பெண்ணை நாமே திரும்பப் பெற முடியாது அல்லவா? எப்படி தானம் கொடுப்பார்கள் தெரியுமா?

கல்யாணத்திற்கு வந்திருக்கும் நிறைந்த சபையில், பெரியோர்களின் முன்னிலையில் வேத மந்திரங்களின் கோஷத்தோடு நடைபெறும் கன்யாதானம். பெண் இருந்தாலே வீடு முழுமை பெறும் என்பது மறுக்கவோ/மறைக்கவோ முடியாத உண்மை.  இதைத் தான் மநுவும் சொல்லி இருக்கிறார்.  க்ருஹத்தில் முக்கியமானவள் க்ருஹணீ என்னும் பெண்ணுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கார்.  இருங்க, இருங்க, மநு அப்படி எல்லாம் சொல்லலைனு சொல்றவங்களுக்கு!  அதைத் தனியா வைச்சுப்போமா? மநு சொன்னதை யாருமே சரியாப் புரிஞ்சுக்கலை என்பதே உண்மை என்பதோடு இப்போ நிறுத்திப்போம். பெண்ணின் அப்பா பிள்ளையாரை வேண்டிக்கொண்டு மஹாவிஷ்ணுவைப் பூஜிப்பார்.  இங்கே இப்போது மாப்பிள்ளை தான் மஹாவிஷ்ணு சொரூபம்.  ஆகவே மாப்பிள்ளைக்குத் தான் ஆசனம் கொடுத்து வரவேற்று, பெண்ணின் அம்மா துணை செய்ய அவர் பாதங்களை அலம்பித் துடைத்து, பாலிட்டு, சந்தனம் குங்குமம் வைப்பார்கள்.  இதுக்கு எனப் பாலிடும் கிண்ணம்னு வெள்ளியிலே வாங்கி மாப்பிள்ளைக்குக் கொடுத்திருப்பாங்க. பின்னர் கிழக்கே பார்த்துப் பெண்ணின் அப்பா உட்கார்ந்து கொள்ளப் பிள்ளை எதிரே மாமனாரைப் பார்த்துக் கொண்டு நிற்பார். பெண் தந்தை மடியில் அமர்ந்திருப்பாள். பெண்ணின் அம்மாவும் அருகே இருப்பார்.


இப்போக் கன்யாதானம் நடைபெறுகையில் பெண்ணின் பெயரையும், பிள்ளையின் பெயரையும் தனித்தனியாக  மூன்று முறை சொல்லுவார்கள்.  மூன்று முறை சொல்வதன் மூலம் அது முழுமை பெறுகிறதாக ஐதீகம்.  அனைத்துப் பெரியோர்களுக்கும் தெரியும்படியாகப் பெண்ணின் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா ஆகியோரின் பெயரை வரிசைக்கிரமமாகச் சொல்வார்கள்.  உதாரணமாக எங்க பெண்ணின் கல்யாணத்தில், என் மாமனாரின் அப்பா பெயர் ஶ்ரீநிவாசன்.  ஆகவே ஶ்ரீவத்ஸ கோத்திர, ஶ்ரீநிவாச சர்மாவின் கொள்ளுப் பேத்தியும், குஞ்சிதபாதம் ஐயரின் பேத்தியும், சாம்பசிவ ஐயரின் பெண்ணும் ஆன என்று சொல்வார்கள்/சொன்னார்கள்.    அதே போல் பிள்ளை தரப்பிலும் பிள்ளையின் கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா ஆகியோரின் பெயர்கள் சொல்லி இன்னாரின் கொள்ளுப்பேரன், இன்னாரின் பேரன், இன்னாரின் மகன் என அறிவிக்கப்படும்.  இவருக்கு எங்கள் மகளை முழு மனதோடு தாரை வார்த்துக் கொடுக்கிறேன்னு அப்பா சொல்வார்.  மாப்பிள்ளைப் பெண்ணை தானம் வாங்கிக் கொள்வார். பின்னர் புதுப்பாயில் அமர்ந்து கொண்டு அக்னி வளர்க்கச் செல்வார்கள்.  பெண்ணின் அப்பா மாப்பிள்ளைக்கு மதுபர்க்கம் என்னும் தயிரில் தேன் கலந்த திரவத்தைக் கொடுப்பார்.  பசுமாடு தானம் கொடுக்கணும்னும் ஐதீகம்.  ஆனால் கொடுக்கிறதில்லை.  இந்த மதுபர்க்கம் தான் மாப்பிள்ளைக்கு ஆகாரம்.  என்றாலும் சிலரோட சம்பிரதாயப்படி இதன் பின்னர் மாப்பிள்ளைக்குச் சாப்பிடவும் கொடுப்பாங்க. எங்களுக்கெல்லாம் பெரிய  நாமம் தான்! :)))) அடுத்து மாப்பிள்ளைப் பெண்ணுக்குச் சில சுத்தி சமஸ்காரங்கள் செய்யணும்.

இவ்வளவு அர்த்தங்களும் புனிதங்களும் நிறைந்த கன்யாதானம் இன்றைய நாட்களில் வெறும் தானமாக மட்டுமே பார்க்கப்படுவது என்பது காலத்தின் கொடுமை அல்லவா? நமக்குத் தெரியலைனாலும் தெரிந்த/அறிந்த பெரியோரிடம் கேட்டுக் கொள்ளலாமோ? இதன் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. கூடியவரை தெரிந்தவரை விளக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இதைக் குறித்துப் பல பதிவுகள் போட்டிருக்கேன். முக்கியமாக என் கல்யாணம் குறித்த பதிவுகளையும் இந்த வலைப்பக்கம் பார்க்கலாம். பொதுவான தென்னிந்திய பிராமணக் கல்யாணங்கள் குறித்தும் பார்க்கலாம். 

தென்னிந்தியக் கல்யாண நடைமுறைகள்  2013 இல் எழுத ஆரம்பித்து சப்தபதி வரை எழுதி முடிச்சிருப்பேன். 

கல்யாணமாம் கல்யாணம் 2011 ஆம் ஆண்டில் எழுதிய என்னோட கல்யாண நினைவுகளை இங்கேயும் பார்க்கலாம். 

20 comments:

 1. இதையெல்லாம் புரிந்து கொள்ளும் மன நிலையில் எவரும் இல்லை..

  அன்றைக்குப் பெண்ணொருத்தி தொ.கா நிகழ்ச்சியில் பேசுகின்றாள்.. -

  என் இளமை.. என் வாழ்க்கை.. எப்படியும் வாழ்வேன்.. இப்படித் தான் வாழ வேண்டும் சொல்வதற்கு இந்த சமூகம் யார்?..

  ReplyDelete
  Replies
  1. கடைசி வரிதான் இக்காலப் பெண்களில் நாகரீகம் அடைந்ததாக நினைத்துக்கொள்ளும் பல பெண்களின் நினைப்பு

   Delete
  2. வாங்க தம்பி துரை. இப்போதைய பெண்கள் அப்படித்தான் பேசுகின்றனர். திருமண பந்தத்தின் அர்த்தமே புரிஞ்சுக்காமல் திருமணங்கள் நடக்கின்றன.

   Delete
 2. கல்யாணங்களில் நானும் இப்படி பெயர் சொல்வதையும், அதேபோல கோத்ரம் மாற்றும் மந்திரங்களையும் கவனித்திருக்கிறேன்.  அரைகுறையாகப் புரிந்தாலும் எப்படி சில விஷயங்கள் முறைப்படி வரிசைக்கிரமமாக நடைபெறுகின்றன என்று கவனித்திருக்கிறேன்.  கல்யாணம் என்று இல்லை, தர்ப்பணம், திவசம் முதலிய மாதந்திர பிரயோகங்களிலும் நம்மை நாம் ஐங்கப்படுத்திக் கொள்வதில் தொங்கி, இருக்குமிடம் சொல்வது, இந்தத் தலைமுறையை, வகையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வது, அப்புறம் ஹோமத்துக்கோ, அன்றைய தின நிகழ்ச்சியைச் செய்வதற்கோ துகுதி உடையவர்களாக நம்மை ஆக்கிக் கொள்வது என்று ஸ்டெப் பை ஸ்டெப்பாக வருவதை கவனித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாவற்றிலும் அர்த்தம் பொதிந்துள்ளது ஶ்ரீராம். அந்தக் காலங்களில் பலரும் சம்ஸ்கிருதம் கற்றவர்களாகவே இருந்தனர். இல்லைனா ஸ்தபதிகள் ஆகம சாஸ்திரங்களைப் படித்து அறிந்து கொண்டு அதற்கேற்றபடி கோயில்களைக் கட்டி இருக்க முடியுமா? எப்போ நாம் வடமொழி என்பதை வடக்கே இருந்து வந்த மொழினு புரிஞ்சுக்க ஆரம்பிச்சோமோ அப்போ இருந்தே தவறுகள்.

   Delete
 3. மிகவும் அரிதான இன்றைய நிலையில் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.

  இவைகளை உணர்ந்து கொண்டால் ஓரளவு விவாகரத்துகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

  இன்றைய தலைமுறைகளுக்கு இவைகளை காது கொடுத்து கேட்க நேரமில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் கில்லர்ஜி. கேலி செய்யும் இளைஞர்கள்/இளம்பெண்களே அதிகம். கூடியவரையிலும் நாம் வாயை மூடிக் கொண்டே இருக்கணும். :(

   Delete
 4. கன்யாதானம் பற்றிய சிறப்பான பதிவு.
  எங்கள் பக்கமும் திருமணம் , கன்யாதானம், சடங்குமுறைகள், அதன் காரணங்கள் எல்லாம் விரிவாக தெரிந்து கொள்ள புத்தகம் போட்டு இருக்கிறார்கள்.
  இப்போது "பிறப்பிலிருந்து இறப்பு வரை சடங்குமுறைகள்" என்று புத்தகம் போட்டு இருக்கிறார்கள்.
  எல்லோரும் தெரிந்து கொள்வதற்கு.

  நிறைய பேருக்கு வெவ்வேறு ஊரில் இருக்கிறார்கள் அங்கு இருக்கும் திருமணம் செய்து வைப்பவர்களுக்கு நம் சடங்கு முறைகளை சொல்ல் வேண்டி இருக்கிறது என்று இப்படி புத்தகம் போட்டு இருப்பது வசதியாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, நானும் படிச்சிருக்கேன். இது நல்லதே. இப்போ பிராமணர்களிலும் திருமணச் சடங்குகள், சப்தபதியின் அர்த்தம், பெண்ணுக்கும்/பிள்ளைக்கும் கை குலுக்க வேண்டிய நேரம் போன்றவற்றை அறிவித்துவிடுகிறார்கள். அல்லது சின்னக் கைப்புத்தகமாகக் கொடுக்கின்றனர்.

   Delete
 5. உங்கள் பதிவை புத்தகமாய் போட்டால் உங்கள் உறவினர்களுக்கு உதவும்.

  ReplyDelete
  Replies
  1. என்னோட கல்யாண நினைவுகள், மின்னூலாக Freetamil e-books மூலம் எப்போவோ வெளியிட்டு விட்டேன். மற்றச் சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றிய பதிவுகளைத் தொகுத்துப் போட வேண்டும்.

   Delete
 6. தேரா மன்னா!..

  தான் பிறந்த நாட்டினை ஆட்சி செய்த மன்னர்களையும் மாமனாரையும் கணவரையும் சொல்லியே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கண்ணகியை இங்கே நினைத்துக் கொண்டேன்..

  நன்றியக்கா..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை. ஆமாம், நம்மை நாமே அறிமுகம் செய்து கொள்ளும்போதே மூன்று தலைமுறைகளைச் சொல்லும் வழக்கம் உண்டு.

   Delete
 7. கான்செப்ட் நல்ல கான்செப்ட், கீதாக்கா

  ஆனால் பாருங்க நடைமுறையில், தானமா கிடைக்கிறதுனாலதான் தானமா கொடுத்த மாட்டைப் பல்லை பிடிங்கிப் பார்க்கறதுன்னு, பெண்களின் மனதைத் துன்புறுத்திப் பார்க்கிறாங்களோ? சில வீடுகளில்/குடும்பங்களில் உடல் ரீதியான துன்புறுத்தல்களும் இந்தக் காலத்திலும் இருக்கிறதே. ஏமாத்திக் கல்யாணம் என்றெல்லாம் கூட இருக்கத்தான் செய்கிறது. புனிதமான ஒரு நிகழ்வு. அதை மதிக்கத் தெரியாத குடும்பங்கள். வீட்டிற்கு மஹாலக்ஷ்மி வந்திருக்கா வந்த பெண்ணின் கண்ணுல தண்ணீ வரக் கூடாது, குடும்பக் குலவிளக்கு!!! என்று சொல்லுவது ஒருபுறம்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, நம்ம தமிழ்த்தாத்தா உ.வே.சா. காலத்திலும் அதற்குப் பின்னரும் சில ஆண்டுகள் வரையிலும் பெண்ணுக்குத் தான் ஆபரணங்கள், புடைவைகள் கொடுத்துப் பிள்ளை வீட்டார் மேலே பணமும் கொடுத்துத் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். தன் கல்யாணத்தால் தன் தந்தைக்கு ஏற்பட்ட கடன் பற்றித் தமிழ்த்தாத்தா தன்னுடைய சுய சரிதத்தில் விவரித்திருப்பார். பின்னால் ஆங்கிலப் படிப்பு அதிகம் ஆகி ஆங்கிலேயனிடம் உத்தியோகம் பார்க்கத் தொடங்கிய உடனே அனைத்து ஆண்களுக்கும் கொம்பு முளைத்துவிட்டது. கிட்டத்தட்ட இந்தக் காலகட்டத்தில் தான் பெண்களைக் கொடுமைப் படுத்துவது/படிக்க வைக்காமல் வீட்டில் வைப்பது என்னும் கொடுமைகள் தொடங்கித் தொடர்ந்து வருகின்றன.

   Delete
 8. அறியாத தகவல்கள் அறிந்து கொண்டேன்.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு துளசிதரன்.

   Delete
 9. @ கீதா..

  // தானமா கிடைக்கிறதுனால தான் பெண்களின் மனதைத் துன்புறுத்திப் பார்க்கிறாங்களோ?.. //

  சரியான சவுக்கடி..

  ReplyDelete
  Replies
  1. இந்த தானம் என்னும் சொல்லின் உண்மையான பொருளைத் தெரிஞ்சுக்கலை. அவ்வளவு தான். வேறே என்ன சொல்ல முடியும்? இப்போ உள்ள இலவசம் இல்லை இது.

   Delete
 10. கன்யா தானம் குறித்த தங்களது விளக்கம் மிகவும் சிறப்பு.

  ReplyDelete