(
ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ (மீள் பதிவு!)
அம்மா என்பவள் இருந்தாலே போதும்,குழந்தை நிம்மதி அடைந்துவிடுகின்றது. வாயிலில் விளையாடப்போனாலும் சரி, படுத்துத் தூங்கும்போதும் சரி, பள்ளி சென்றாலும் சரி, அம்மா என்பவளின் இருப்பே குழந்தைக்கு மன உறுதியையும் நிம்மதியையும் தருகின்றது. தரவேண்டும். ஏனெனில் இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் இன்றளவும் குழந்தையைப்பெறுவதற்குப் பெண் தான் தேவை. அம்மா என்பவள் ஆதார சுருதி! மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி! மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. பூமியானது எப்படி இத்தனை உயிர்களையும், தனக்குப் பாரம் சிறிதும் இல்லை என்பது போல் தாங்குகின்றதோ அவ்வாறே ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் மாறாத பாசம் காட்டுவாள். தாயன்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு துறவி ஆனாலும் தாயன்பை மட்டும் விடவே முடியாது. இந்த உலகை ரட்சிக்கும் சக்தியே அன்னை என்னும் மாபெரும் சக்தி.
துறவி ஆன ஆதிசங்கரரே அன்னை என்னும் மாபெரும் சக்தியைக் கண்டு ஒதுங்கவில்லை. துறவி ஆனாலும் அன்னைக்கு மகனே என்பதை நிரூபித்தார். அன்னையின் கடைசிக் கணத்தில் அவள் அருகே இருந்தார். அன்னையைப் பல துதிகளால் துதியும் செய்தார். அன்னையின் துயரங்களை விவரித்தார் அதிலே. தன்னை வயிற்றில் கர்ப்பம் தரித்ததில் இருந்து அன்னை பட்ட கஷ்டங்கள், தன்னை வயிற்றில் வளர்க்க வேண்டி எடுத்துக் கொண்ட ஆகாரங்கள், மருந்துவகைகள், பிறக்கும்போது ஏற்பட்ட வலி, வேதனைகள், பிறந்த குழந்தையை இரவும், பகலும் போற்றிப் பாதுகாத்து ஆகாரங்கள் கொடுத்து வளர்த்தது, நோய் வந்தால் காப்பாற்றியது என்று எத்தனையோ குறிப்பிடுகின்றார் தன் மாத்ரு பஞ்சகத்தில்:
"அம்மா, என்னைக் கருவில் ஏற்றபோது உனக்கு உடம்பு வேதனை ஏற்பட்டிருக்குமே?
அம்மா, என்னைக் கர்ப்பத்தில் தரித்ததும், மசக்கை ஏற்பட்டு வாந்தி எடுத்து அவதிப் பட்டீர்களே?
பின்னர் எனக்கு நன்மை பயக்கும் என விழுதியிலைக்கஷாயம் விளக்கெண்ணயோடு சேர்த்துச் சாப்பிட்டீர்களே?
அம்மா, என்னை வளர்க்க வேண்டி உங்களுக்குப் பிடிக்காத ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொண்டீர்களே?
ஐந்து மாதங்கள் ஆனதும் உப்பு, காரங்களைக் குறைத்துக் கொண்டு ஆஹாரங்களையும் குறைத்துக் கொண்டீர்களே?
அம்மா, ஏழு மாதம் ஆகிக் குழந்தை அசைய ஆரம்பித்ததும், அதன் காரணமாய்ப் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, வயிற்றில் குழந்தை சுற்றி வரும்போது ஏற்படும் மயக்கம் தரும் வேதனையைப் பொறுத்துக்கொண்டீர்களே?
அம்மா, பிறந்தபோது ஏற்படும் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், என்னைக் காப்பாற்ற இரவு, பகலாய்க் கண்விழித்து எனக்கு உணவளித்து, ஜலமல துர்க்கந்தங்களைப்பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, எனக்குக் கணை, மாந்தம் போன்ற வியாதிகள் வந்து வாடும்போது தக்க மருந்துகளோடு இறைவனையும் பிரார்த்தித்து எனக்குப் பத்திய உணவிட்டுக் காத்தீர்களே?
அம்மா, நான் பிறந்தது முதல் துறவியாகும் வரை நீங்கள் எனக்குச் செய்ததுக்கு நான் திரும்பச் செய்வது இது ஒன்றே!"
ஊரிலே அனைவரும் விலகிவிட்ட போதிலும் அன்னைக்குத் தீ மூட்டி அந்திமக் காரியங்களைச் செய்தார் சங்கரர். அத்தகைய சக்தி படைத்த அன்னையைப் போற்றுவோம்.
"ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸுதி ஸமயே துர்வர சூலவ்யதா
நைருச்யே தநுசோஷணம் மலமயீ சய்யா சஸாம் வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரன க்லேசஸ்ய யஸ்யாக்ஷம்
தாதும் நிஷ்க்ருதி முந்ந தோநி தநய: தஸ்யை ஜநந்யைநம:
குருகுலுமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்நே மாதரஸ்து ப்ரணாம"
கிட்டத்தட்டப் பட்டினத்தடிகள் எனப்படும் பட்டினத்தாருக்கும் இதே அனுபவம். தன் தாய் இறந்ததும் பச்சை வாழைமட்டைகளை வைத்தே இவரும் தாய்க்குத் தீ மூட்டினார். அப்போது பாடிய பாடல்கள் ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகத்தை ஒத்திருக்கும்.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்
மாத்ரு பஞ்சகத்தில் சில இடங்களில் அர்த்தம் மாறி இருக்கலாம், பொதுவான அர்த்தங்களையே எழுதி இருக்கின்றேன். கடைசியில் கொஞ்சம் மாறும். குருகுலவாசத்தின் போதே ஆர்யாம்பாளூக்குச் சங்கரர் துறவியாகிவிடுவது போல் கனவு கண்டதாய்ச் சொல்கின்றார் இங்கே. மேலும் தாய்க்குத் தொடர்ந்து தன்னால் திதிகள் கொடுக்க முடியாதே எனவும் வருந்துகின்றார். தன்னைத் தாய் எவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாள் என்பதையும் நினைவு கூர்ந்து வேதனைப் படுகின்றார். இத்தனையும் செய்யும் தாய்க்குத் தான் செய்யப் போவது இது ஒன்றே என்று தன் தாய்க்குத் தான் செய்யப் போகும் கடைசிச் சடங்குகளை நினைத்து வருந்துகின்றார். அனைத்தும் செய்யும் தாய் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றே. மாறாத பாசம் ஒன்றே. ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்குத் தக்க வசதிகள் இருந்தும் பிள்ளைகளை வளர்ப்பதில் அத்தனை சந்தோஷம் அடையவில்லை, கொஞ்சம் தொந்திரவாகவே கருதுகின்றனர். தியாகம் தேவை இல்லை, தாய்மை தேவை. அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது. இதுக்கு மேல் எழுதினால் கல்லெறி விழும்னு நினைக்கிறேன்.
தாயுமானவராய் இருந்து தன் குழந்தைகளை வளர்த்துப் படிக்க வைத்துத் திருமணமும் செய்து கொடுத்துச் சிறப்பாகக் கடமை ஆற்றிய கில்லர்ஜி அவர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள். அவரை இவ்வளவு பொறுப்பாக வளர்த்த அவர் அன்னைக்கும் நம் நமஸ்காரங்கள்.