எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 12, 2019

ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ!

(ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ  (மீள் பதிவு!)

அம்மா என்பவள் இருந்தாலே போதும்,குழந்தை நிம்மதி அடைந்துவிடுகின்றது. வாயிலில் விளையாடப்போனாலும் சரி, படுத்துத் தூங்கும்போதும் சரி, பள்ளி சென்றாலும் சரி, அம்மா என்பவளின் இருப்பே குழந்தைக்கு மன உறுதியையும் நிம்மதியையும் தருகின்றது. தரவேண்டும். ஏனெனில் இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் இன்றளவும் குழந்தையைப்பெறுவதற்குப் பெண் தான் தேவை. அம்மா என்பவள் ஆதார சுருதி! மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி! மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. பூமியானது எப்படி இத்தனை உயிர்களையும், தனக்குப் பாரம் சிறிதும் இல்லை என்பது போல் தாங்குகின்றதோ அவ்வாறே ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் மாறாத பாசம் காட்டுவாள். தாயன்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு துறவி ஆனாலும் தாயன்பை மட்டும் விடவே முடியாது. இந்த உலகை ரட்சிக்கும் சக்தியே அன்னை என்னும் மாபெரும் சக்தி.

துறவி ஆன ஆதிசங்கரரே அன்னை என்னும் மாபெரும் சக்தியைக் கண்டு ஒதுங்கவில்லை. துறவி ஆனாலும் அன்னைக்கு மகனே என்பதை நிரூபித்தார். அன்னையின் கடைசிக் கணத்தில் அவள் அருகே இருந்தார். அன்னையைப் பல துதிகளால் துதியும் செய்தார். அன்னையின் துயரங்களை விவரித்தார் அதிலே. தன்னை வயிற்றில் கர்ப்பம் தரித்ததில் இருந்து அன்னை பட்ட கஷ்டங்கள், தன்னை வயிற்றில் வளர்க்க வேண்டி எடுத்துக் கொண்ட ஆகாரங்கள், மருந்துவகைகள், பிறக்கும்போது ஏற்பட்ட வலி, வேதனைகள், பிறந்த குழந்தையை இரவும், பகலும் போற்றிப் பாதுகாத்து ஆகாரங்கள் கொடுத்து வளர்த்தது, நோய் வந்தால் காப்பாற்றியது என்று எத்தனையோ குறிப்பிடுகின்றார் தன் மாத்ரு பஞ்சகத்தில்:

"அம்மா, என்னைக் கருவில் ஏற்றபோது உனக்கு உடம்பு வேதனை ஏற்பட்டிருக்குமே?
அம்மா, என்னைக் கர்ப்பத்தில் தரித்ததும், மசக்கை ஏற்பட்டு வாந்தி எடுத்து அவதிப் பட்டீர்களே?
பின்னர் எனக்கு நன்மை பயக்கும் என விழுதியிலைக்கஷாயம் விளக்கெண்ணயோடு சேர்த்துச் சாப்பிட்டீர்களே?
அம்மா, என்னை வளர்க்க வேண்டி உங்களுக்குப் பிடிக்காத ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொண்டீர்களே?
ஐந்து மாதங்கள் ஆனதும் உப்பு, காரங்களைக் குறைத்துக் கொண்டு ஆஹாரங்களையும் குறைத்துக் கொண்டீர்களே?
அம்மா, ஏழு மாதம் ஆகிக் குழந்தை அசைய ஆரம்பித்ததும், அதன் காரணமாய்ப் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, வயிற்றில் குழந்தை சுற்றி வரும்போது ஏற்படும் மயக்கம் தரும் வேதனையைப் பொறுத்துக்கொண்டீர்களே?
அம்மா, பிறந்தபோது ஏற்படும் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், என்னைக் காப்பாற்ற இரவு, பகலாய்க் கண்விழித்து எனக்கு உணவளித்து, ஜலமல துர்க்கந்தங்களைப்பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, எனக்குக் கணை, மாந்தம் போன்ற வியாதிகள் வந்து வாடும்போது தக்க மருந்துகளோடு இறைவனையும் பிரார்த்தித்து எனக்குப் பத்திய உணவிட்டுக் காத்தீர்களே?
அம்மா, நான் பிறந்தது முதல் துறவியாகும் வரை நீங்கள் எனக்குச் செய்ததுக்கு நான் திரும்பச் செய்வது இது ஒன்றே!"

ஊரிலே அனைவரும் விலகிவிட்ட போதிலும் அன்னைக்குத் தீ மூட்டி அந்திமக் காரியங்களைச் செய்தார் சங்கரர். அத்தகைய சக்தி படைத்த அன்னையைப் போற்றுவோம்.

"ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸுதி ஸமயே துர்வர சூலவ்யதா
நைருச்யே தநுசோஷணம் மலமயீ சய்யா சஸாம் வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரன க்லேசஸ்ய யஸ்யாக்ஷம்
தாதும் நிஷ்க்ருதி முந்ந தோநி தநய: தஸ்யை ஜநந்யைநம:

குருகுலுமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்நே மாதரஸ்து ப்ரணாம"

கிட்டத்தட்டப் பட்டினத்தடிகள் எனப்படும் பட்டினத்தாருக்கும் இதே அனுபவம். தன் தாய் இறந்ததும் பச்சை வாழைமட்டைகளை வைத்தே இவரும் தாய்க்குத் தீ மூட்டினார். அப்போது பாடிய பாடல்கள்  ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகத்தை ஒத்திருக்கும்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்

வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

மாத்ரு பஞ்சகத்தில் சில இடங்களில் அர்த்தம் மாறி இருக்கலாம், பொதுவான அர்த்தங்களையே எழுதி இருக்கின்றேன். கடைசியில் கொஞ்சம் மாறும். குருகுலவாசத்தின் போதே ஆர்யாம்பாளூக்குச் சங்கரர் துறவியாகிவிடுவது போல் கனவு கண்டதாய்ச் சொல்கின்றார் இங்கே. மேலும் தாய்க்குத் தொடர்ந்து தன்னால் திதிகள் கொடுக்க முடியாதே எனவும் வருந்துகின்றார். தன்னைத் தாய் எவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாள் என்பதையும் நினைவு கூர்ந்து வேதனைப் படுகின்றார். இத்தனையும் செய்யும் தாய்க்குத் தான் செய்யப் போவது இது ஒன்றே என்று தன் தாய்க்குத் தான் செய்யப் போகும் கடைசிச் சடங்குகளை நினைத்து வருந்துகின்றார். அனைத்தும் செய்யும் தாய் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றே. மாறாத பாசம் ஒன்றே. ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்குத் தக்க வசதிகள் இருந்தும் பிள்ளைகளை வளர்ப்பதில் அத்தனை சந்தோஷம் அடையவில்லை, கொஞ்சம் தொந்திரவாகவே கருதுகின்றனர். தியாகம் தேவை இல்லை, தாய்மை தேவை. அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது. இதுக்கு மேல் எழுதினால் கல்லெறி விழும்னு நினைக்கிறேன்.

தாயுமானவராய் இருந்து தன் குழந்தைகளை வளர்த்துப் படிக்க வைத்துத் திருமணமும் செய்து கொடுத்துச் சிறப்பாகக் கடமை ஆற்றிய கில்லர்ஜி அவர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள். அவரை இவ்வளவு பொறுப்பாக வளர்த்த அவர் அன்னைக்கும் நம் நமஸ்காரங்கள்.

50 comments:

 1. சங்கரரின் அம்மா, அவரை துறவறம் மேற்கொள்ளவிடாமல் தடுத்தபோது, நீ இறக்கும் தருவாயில் வந்து ஈமச் சடங்குகள் செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு துறவறம் மேற்கொண்டதாக அல்லவோ நான் படித்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. யார் இல்லைன்னாங்க?

   Delete
 2. துறவறம்மேற் கொண்டாலும் அன்னை பாசத்தை விட முடியாது என்பதற்கு உதாரணம் சங்கரர், பட்டினத்தார்.
  அவர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டது அருமை.

  தாயாகி வந்தார் தாயுமானவர்.
  தாயின் பெருமை சொல்லும் பதிவு அருமை.

  கன்றினுக்குச் சேதா
  கனிந்திரங்கல் போல எனக்கு
  என்றுஇரங்கு வாய் கருணை
  எந்தாய் பராபரமே
  என்கிறார் தாயுமானவர்.

  அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
  தாயின் கருணையை பரிவை சேர்த்து கொடுத்து கடமை ஆற்றும் தாயுமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  நம் தேவகோட்டை ஜிக்கு இந்த வாழ்த்து உண்டு. தாயுக்கு தாயாய் இருந்து தந்தையின் கடமையை ஆற்றி விட்டார்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி! அருமையான பாடலைப்பகிர்ந்துள்ளீர்கள். ஆம், உண்மையில் கில்லர்ஜி இத்தகைய பெருமைக்கு உரியவரே! அவருக்குத் தான் வாழ்த்துகள் சொல்லி இருக்கணும்.தக்க சமயத்தில் நீங்கள் நினைவூட்டியதுக்கு நன்றி.

   Delete
  2. சேர்த்துட்டேன், கோமதி, நன்றி.

   Delete
 3. சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் அம்மா... அருமை... என்றும் அன்னையர் தின வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி டிடி. தினம் தினம் அன்னையர் தினம் தானே! வாழ்த்துகளுக்கு நன்றி.

   Delete
 4. அன்னையர் தினம் என்றால் இப்படியா அம்மா செத்துப்போன புலம்பல்களை எழுதவேண்டும். உங்கள் அம்மா உங்களுக்கு கற்றுக்கொடுத்த சில நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். அது சரி உங்கள் பிள்ளைகள் வாழ்த்து தெரிவித்தார்களா?.

  ReplyDelete
  Replies
  1. அவரவர் பார்வையில் இது இருக்கிறது ஜேகே அண்ணா,ஒரு தாய் தன் பிள்ளையை வயிற்றில் சுமக்கும்போது படும் கஷ்டங்களை இப்படிப் பாடலாக வடித்துச் சொல்வதைக் கேட்கும்போது தன்னையும் அறியாமல் கண்ணீர் வரும். இதைத் தவிர்த்து கயாவிலும், மாத்ரு கயாவிலும் அன்னைக்குப் பிண்டம் வைக்கும்போது சொல்லும் மாத்ரு ஷொடசி ஸ்லோகமும் இருக்கிறது. இவை எல்லாமே அன்னையின் பெருமையைச் சொல்வது என்னும் கோணத்திலே தான் பார்க்க வேண்டும்.

   Delete
  2. எங்க வீட்டில் என்னோட, அவரோட பிறந்த நாட்கள் மற்றும் எங்கள் கல்யாண நாள் எல்லாமே இப்போக் குழந்தைகள் விபரம் தெரிந்த பின்னர் வாழ்த்துத் தெரிவிப்பதில் கொண்டாடுவது தான்! ஆகவே இம்மாதிரியான நாட்கள் எதையும் நாங்கள் அனுசரிப்பதில்லை என்பதே உண்மை! :))))

   Delete
  3. ஜே கே ஐயாவின் கருத்தை படு பயங்கரமாக வழிமொழிகிறேன்...
   கீசாக்கா இந்தப் புலம்பலை தனியாக ஒருநாளில் வைத்திருக்கலாம்... நாங்களும் சேர்ந்து அழுதிருப்போம்:(...

   Delete
  4. நெருப்புன்னா வாய் வெந்திடுமா என நினைச்சேன் அதிரடி! நீங்க இவ்வளவு தூரம் மனம் வருந்துவீர்கள் என நினைக்கலை! ஏனெனில் இங்கே அநேகமா ஃபேஸ்புக், வாட்சப்பில் எல்லாம் இதான் பகிர்ந்திருக்கிறார்கள்!

   Delete
 5. வணக்கம் சகோதரி

  இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள். பாடல்கள் அருமை.

  அன்னைக்கு துறவியானலும் அவர் தன் பிள்ளைதானே. ஒரே பிள்ளை.. அதுவும் தவமிருந்து பெற்ற பிள்ளை.. துறவறம் பெறத்தான் போகிறார் என்று தெரிந்தாலும் உள்ளுக்குள் சற்று சலனம் உண்டாகி இருக்குந்தானே.! இருப்பினும் முதலை பிடியிலிருந்து தப்பித்து தன் மகன் நலத்தோடு இருக்கட்டுமென நினைத்தது அந்த தாய்மனம்.

  பட்டிணத்தாருக்கு பற்றற்ற அறிவுரைகளை இறுதியில் வழங்கியது அவர் அன்னை தான். இருப்பினும் அவர் தள்ளி நின்று பாடிய பாடலில் தீ மூட்டி தன்னுடல் தகனிக்கும் போது அந்த ஆன்மா அமைதியடைந்திருக்கும். அங்கும் தாய் பாசம் நிறைந்திருந்தது. அழகான பாடலை பகிர்ந்திருக்கிறீர்கள். பாடல் வரிகளின் தாக்கம்உண்மையிலேயே மனதில் உருக்கத்தை ஏற்படுத்தி கண்களில் நீரை வரவழைக்கிறது.

  சகோதரர் கில்லர்ஜி அவர்களுக்கும் அன்னையின் இடத்திலிருந்து, அவர் தம் கடமைகளை செவ்வனே முடித்து வைத்த பாங்கிற்கும், பொறுமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, வருகைக்கும் விரிவான விமரிசனத்துக்கும் நன்றி. கிட்டத்தட்ட துறவிகள், ஆன்மிக பக்தர்கள் அனைவர் அனுபவமும் ஒன்றாகவே உள்ளன. ஆதி சங்கரர் போலப் பட்டினத்தார் அனுபவித்தார் எனில் ஆதி சங்கரரின் சௌந்தரிய லஹரி போலவே அபிராமி பட்டரின் அந்தாதியும் அமைந்துள்ளது. இரண்டையும் ஒப்பிட்டு எழுத ஆரம்பித்தது பாதியிலேயே நிற்கிறது. அம்பிகையின் அருள் இருந்தால் தானாக முடியும்.

   Delete
 6. கண்களில் நீர் முட்டுகிறது....

  இறக்கி வைக்க முடியாத சுமை மனதில்...
  பொது வெளியில் சொல்லத் தெரியவில்லை...

  இவ்வேளையில் அன்பின் திரு .கில்லர்ஜி அவர்களை நினைவு கூர்ந்தது சிறப்பு...

  மனமெல்லாம் பந்தபாசம் மண்டிக் கிடக்க
  அவனுக்கோ தாய் தந்தையரின் அருகிருக்க இயலவில்லை எனில்

  அந்த மானிடனின் தலையெழுத்தை என்ன என்று சொல்வது?..

  கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்..
  கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்...

  என்பார் கவியரசர்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை, மகள், மருமகன், பேத்தியோடு விடுமுறை இனிமையாகக் கழிந்து வரும் என நம்புகிறேன். உங்கள் நொந்த உள்ளத்துக்குப் பேத்தியை விடப் பெரிய ஆறுதல் ஏதும் இல்லை. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி..

   Delete
 7. அன்னையர் தின சிறப்புப்பதிவு நன்றாய் இருக்கிறது. கில்லர்ஜியைக் குறிப்பிட்டிருப்பது பொருத்தம். எனது வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், கில்லர்ஜியை நினைவூட்டியது கோமதி தான். ஆகவே எல்லாப் பெருமையும் அவருக்கே போகணும். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 8. பட்டினத்தார் பாடலை நேரிலியே பார்க்கும் கொடுமையை அனுபவித்தேன்.
  அன்பு அம்மாவை அக்னி பகவான் ஆவலுடன் எடுத்துக் கொண்டான். இதுதான்
  வாழ்வு.
  எல்லா அன்னையருக்கும் நோய் நொடி இல்லாத வாழ்வை பகவான் அருளட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, அம்மாவை மறக்க முடியுமா? அந்தக் காலத்து அம்மாக்களைப் போல் என் அம்மாவும் 15 வயதில் திருமணம் ஆனவர் தான். 40 வருஷம் முடிவதற்குள்ளாகப் புற்று நோய் அவரைக் கொண்டு போய் விட்டது! என்ன ஒரு ஆறுதல்னா எங்க 3 பேர் திருமணத்தையும் பார்த்துப் பேரன்கள், பேத்தியையும் பார்த்தார்.

   Delete
 9. அன்னையர்தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வாழ்த்துச் சொல்லும் இடத்தில் எதுக்கு கீசாக்கா பட்டினத்தார் பாடல் போட்டீங்க... எனக்கு அதைக் கேட்டாலே நெஞ்செல்லாம் பதறும்... ஏனெனில் ஈமக்கிரியையின்போது சுண்ணம் இடிக்கும் போது இப்பாடல் பாஉவார்கள்...:(

  ReplyDelete
  Replies
  1. ரொம்பவே மென்மையான மனம் உங்களுக்கு! அன்னையின் பெருமையைச் சொல்லவே இதைப் பகிர்ந்தேன். அதனால் தானோ என்னமோ கில்லர்ஜி இந்தப்பக்கமே தலை வைச்சுப் படுக்கலை! வரவே இல்லை!

   Delete
  2. நான் அன்று வாசித்துவிட்டு லேட்டாக வந்து கருத்து சொல்வது என்றுமே அம்மாவின் நினைவு உண்டு என்றாலும் அன்று கொஞ்ச்ம கூடுதலாகிவிட்டது...

   கீதா

   Delete
  3. பலருக்கும் வருத்தத்தைக் கொடுத்திருக்குப் போல இந்தப் பதிவு. இதையே நான் ஏற்கெனவே 2,3 முறை மீள் பதிவாய்ப் போட்டிருந்தேன். ஶ்ரீராம் கூட 2014 ஆம் வருஷம் கருத்துச் சொல்லி இருந்தார். ஆனால் இம்முறை அனைவரிடமும் மாற்றம்.

   Delete
 11. ஆதி சங்கரர் சொன்ன இந்தவரிகளைச் சொல்லிதான் கயாவில் 16 பிண்டங்கள் -வைத்தோம் கண்களில் நீர் வழிய.

  ReplyDelete
  Replies
  1. ஆதி சங்கரர் எழுதியது மாத்ரு பஞ்சகம் என்னும் இந்த ஸ்லோகம். இன்னொன்று மாத்ரு ஷோடசி. பதினாறு பிண்டங்கள் வைக்க அநேகமா அதான் சொல்லி இருக்கணும். யார் எழுதினது என்பதைத் தான் மறந்துட்டேன். ஒரு வாரமா யோசிக்கிறேன். பிடிபடலை!

   Delete
 12. பட்டினத்தார் பாடல் மக்களைப் பெற்ற மகராசி பாடலை நினைவூட்டுகிறது. (தலைகீழாகச் சொல்கிறேனா?!!)- அன்னையைப்போலொரு தெய்வமில்லை...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு சினிமாப் பாடல்களில் அவ்வளவு அனுபவம் இல்லை.

   Delete
  2. ஶ்ரீராம்... எம் கே டியின் "அன்னையும் தந்தையும் தாயும்" பாடல் கேட்டிருக்கீங்களா?

   Delete
 13. பட்டினத்தார் பாடல் படிக்கப் படிக்க மனம் உருகுகிறது. முன்னை இட்ட தீ ரொம்ப பேமஸ். நேற்றிருந்தாள், வீட்டிலிருந்தாள்... வரிகள் கண்கலங்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. பட்டினத்தார் பாடல்கள் ஏற்கெனவே போட்டது தான். எல்லோருமே ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டிருக்கீங்க! :(

   Delete
 14. பட்டினத்தாரின் இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்து விடும். அதனால் இன்று படிக்கவில்லை.
  கில்லர்ஜியை குறிப்பிட்டது வெகு சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. நல்லது பானுமதி! மனதை வருத்தும் எதுவும் படிக்காமல் இருப்பதே நல்லது.

   Delete
 15. கீதாக்கா தாமதம்..ஸாரிக்கா..

  அழகான பதிவு சூப்பர். அனுபவித்து வாசித்தேன் அக்கா. தலைப்பு வெகு அருமை. ஜனஜீ ஜனனீ ஜகம் நீ அகம் நீ அந்தப் பாடல் நினைவுக்கு வந்தவிட்டது...கண்டிப்பாக இவ்வுலகிற்கே அன்னையாக விளங்கும் அந்த சக்தி தானே நம் எல்லோருக்கும் அம்மா!...

  மாத்ருபஞ்சகம் இப்பத்தான் தெரிந்து கொள்கிறேன் அக்கா. அர்த்தமும். பட்டினத்தாரின் வரிகள் மனதை என்னவோ செய்தது.

  ஆமாம் அக்கா தந்தையும் தாயைப் போல் குழந்தைகளை வளர்ப்பது அதை நான் பெரும்பாலும் கில்லர்ஜி போன்றவர்களை நினைத்த்துதான் சொல்வது தாயுமானவர்களுக்கும் வாழ்த்துகள் என்று. நீங்கள் தனியாகக் குறிப்பிட்டதும் சூப்பர்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மாத்ரு பஞ்சகமும் இருக்கு. மாத்ரு ஷோடசியும் இருக்கு. முதல்லே மாத்ரு ஷோடசி தான் போட நினைச்சேன். எழுதினவர் பெயர் மறந்துட்டதாலே போடலை. மார்க்கண்டேயரோ? ம்ம்ம்ம்ம்ம்? தி.வா.வைக்கேட்டால் தெரியும்.

   Delete
 16. நான் நேற்றே பதிவை வாசித்தேன் மனம் என்னவோ பல நினைவுகளுக்குச் சென்றுவிட்டது பதிவைப் படித்து கண்கள் கட்டியதே தவிர எழுதத் தோன்றவில்லை. அதனால் வேறு பலவற்றில் மனதைச் செலுத்த வேண்டியதானது.

  கடைசியில் நீங்க இன்றைய நிலை பற்றி சொல்லியிருப்பதும் உண்மைதான்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்தக் காலத்து அம்மாக்கள் மட்டுமல்ல தி/கீதா, அந்தக் காலத்து அம்மாக்களிலேயே பலர் மூத்த மகன் என்றால் கசக்கிப் பிழிந்து திருமணம் என்பதைக் கூட நினைக்கக் கூடாது என்றும் அப்படி நினைத்தால் குடும்பத்துக்குச் செய்யும் கேடு எனவும் பேசித் திருமணம் செய்து கொள்ள விடாமல் இருந்த அம்மாக்களைப் பார்த்திருக்கேன். இன்னும் சில அம்மா அப்படித் திருமணம் ஆகி விட்டால் மருமகளையும், பிள்ளையையும் வாழ விடாமல் படுத்துவதையும் பார்த்திருக்கேன். ஆகவே எல்லா அம்மாக்களும் எப்போதுமே தெய்வமாய் இருப்பதில்லை.

   Delete
  2. //எல்லா அம்மாக்களுமே எப்போதும் தெய்வமாக இருப்பதில்லை//- சுயநலம் யாரிடம் இருக்கோ அவங்க தாங்கள் ஏற்க வேண்டிய பாத்திரத்தை சரியாகச் செய்வதில்லைனு சொல்லலாமா?

   Delete
  3. ஆமாம், நெல்லைத் தமிழரே, எக்காலத்திலும்!

   Delete
 17. ஆதிசங்கரரும், பட்டினத்தாரும் துறவிகள். இருந்தும் அம்மாவிற்கு இறுதிச் சடங்கு செய்ய ஓடிவந்து, செய்து அரற்றியவர்கள். இருவருக்கும் அந்தந்த காலகட்டத்தில் ஜாதிக்காரர்களிடமிருந்தும், உறவுகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பு இருந்திருக்கும். துறவியாகிப்போன உனக்கு அம்மா எங்கிருந்தடா வந்தாள் என்பதாய். ஞானியர் இருவரும் சமூகத்தை அலட்சியம் செய்து, தங்கள் மனம்போல் செய்து சென்றனர். அம்மா என்பது பேரன்பு.

  இப்போதிருக்கும் சில அன்னைகளைப்பற்றி நான் இங்கே சொல்லக்கூடாது, இந்த நேரத்தில். சில தகுதியற்ற அம்மாக்களை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஆங்காங்கே காட்சிகள். இவள் பெண்ணே இல்லையே. எப்படி அம்மாவானாள் என நினைக்கவைத்த சம்பவங்கள். பெற்றதினால் மட்டும் ஒருத்தி அம்மா இல்லை. அதற்குமேலும் பல உண்டு, அந்த மூன்றெழுத்து பரிமாணத்துக்குள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், நீங்க சொல்லி இருப்பது சரியே! அதே போல் இவள் பெண்ணே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொள்ளும்/நடந்து கொண்ட அம்மாக்களை நானும் பார்த்திருக்கேன். மனசு கலங்கிப் போயிடும்.

   Delete
 18. பதிவின் ஆரம்ப படம் ரொம்ப அழகா இருக்கு .இதை பார்த்ததும் ஒரு நினைவு ஜெர்மன் கிண்டர்கார்ட்டனில் எங்க பொண்ணுக்கு ஸ்கூல் முடிஞ்சி கூட்டிட்டுவரும்போது ஷூ போட ஹெல்ப் பண்ணேன் அப்போ ஒரு ஜெர்மன் அம்மா என்னை கடிந்து கொண்டார் //இப்பவே பழக்கனு ம் அப்போதான் பிள்ளைகள் தங்கள் வேலையையே தாங்களே செய்வாங்கன்னு :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், அடிக்கடி பார்க்க முடியறதில்லை. என் குழந்தைகளையும் நான் அவங்க வேலையை அவங்களே செய்துக்கறாப்போல் தான் பழக்கினேன். (இப்போப் பேத்தியையும் ) குட்டிக்குஞ்சுலுவையும் அப்படியே பழக்கறாங்க!

   Delete
 19. ///எனக்கு இப்போல்லாம் உங்கள் அருகாமை தேவைப்படுது எப்போலாம் கஷ்டம் உணர்கிறேனோ அப்போதெல்லாம் என் அருகில் நீங்க இருக்கீங்க அதுக்கு மிகுந்த நன்றி// என்று என் மகள் சமீபத்தில் சொன்னாள் இந்த அன்பு வார்த்தைகள் முன் எல்லா கஷ்டமும் பறந்தே போச்சு .

  //அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது//
  பார்த்துக்கா :) கல்லு விழும் ஆனாலும் நானும் சொல்லிடறேன் தாய்மை மறைய காரணம் வேலை பளு ஸ்ட்ரெஸ்
  தங்களை முதன்மையாய் நினைப்பது இப்படி பல விஷயங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சல், நீங்கள் ஓர் அருமையான அம்மா என்பதை நாங்கள் அனைவருமே அறிவோமே. உங்கள் பெண்ணுக்கு மட்டுமல்ல, பல வாயில்லாப் பிராணிகளுக்கும்! தாய்மை மறையக் காரணம் நீங்க சொன்னதும் இருக்கலாம்.என்னைப் பொறுத்த வரை சுயநலம் தான் முக்கியக் காரணம்.

   Delete
 20. அன்னையர் தின வாழ்த்து. கில்லர்ஜி அவர்களுக்கும் .

  ReplyDelete
  Replies
  1. தாமதமானாலும் வாழ்த்துகளுக்கு நன்றி மாதேவி, கில்லர்ஜி சார்பிலும் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன்.

   Delete
 21. வணக்கம் சகோ
  விழி நிறைந்து நிற்கின்றேன்... பல இடங்களிலும் சகோ கோமதி அரசு அவர்கள் என்னை தாயுமானவர் என்று குறிப்பிட்டு வருகிறார்.

  இதற்கு நான் தகுதியானவனா... ? என்பதை நானறியேன்.

  இங்கு என்னைக் குறித்து எழுதிய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும், எனது தாமதமான அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete