எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 13, 2019

ஶ்ரீராமனுக்கு ஜெயமங்களம்!

இன்று ஶ்ரீராமநவமி. ஶ்ரீராமனுக்கு ஜன்ம தினம். பாவம் ராமன்!   ஓர் அரசகுமாரனாகப் பிறந்து காட்டில் வாழ்ந்தான். மனைவியைப் பிரிந்தான்.  மனைவியோடு மீண்டும் சேர்ந்ததும் மீண்டும் பிரிவதற்காகவே! இப்படி வாழ்நாள் முழுவதும் உழன்றுவிட்டுப் பின்னர் போய்ச் சேர்ந்தான். இருந்தவரையிலும் தான் ஓர் அவதார புருஷன் என்பதை அறிந்தவன் இல்லை. நல்ல கடுங்கோடையில் பிறந்திருக்கிறான்.  அவன் பிறந்த நாள் எல்லோரும் அசுபம் எனக்கருதும் நவமி திதியில் வருகிறது. பெரும்பாலும் ஜன்ம நக்ஷத்திரங்களே பிறந்தநாளைக்கு என எல்லோருக்கும் வைத்திருக்க நம் முக்கியமான இஷ்ட தெய்வங்கள் ஆன ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் திதியைத் தான் எடுத்துக் கொள்கிறோம்.  சிவனுக்கும், விஷ்ணுவுக்குமோ முறையே திருவாதிரை, திருவோணம் ஆகிய நக்ஷத்திரங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன.

 ஒரு சில ஊர்களில் ஶ்ரீராமனின் பிறந்தநாளைப்  பங்குனி அமாவாசை அன்றிலிருந்து  ஆரம்பித்துக் கொண்டாடி தசமியோடு முடிப்பார்கள். அன்று பட்டாபிஷேஹம் செய்வார்கள். ஆனாலும் ஶ்ரீராமநவமிப் பிரசாதங்கள் எனில் மிகவும் எளிமையானது. இந்தக் கோடைக்கு ஏற்றது. பருப்புப் பாயசம், சுண்டல், நீர்மோர், பானகம். இவை தான். வடை தட்டுவது எல்லாம் நம் தேவைக்கு ஏற்ப. உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கும் விதத்தில் பிரசாதங்கள். அநேகமாய் நாம் கொண்டாடும் அனைத்துப் பண்டிகைகளின் பிரசாதங்களும் இப்படித் தான் அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்றாற்போன்ற தானியங்கள் அடங்கிய உணவு வகைகளாகவோ அல்லது பக்ஷண வகைகளாகவோ இருக்கும்.  அதிலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்கும் உணவாகவும் இருக்கிறது. பானகம் அருந்துவதால் தாகம் தணிவதோடு இல்லாமல் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் செய்யும்.வேக வைத்துச் சாப்பிடும் சுண்டல் மூலம், கால்ஷியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கும். புரதம், இரும்புச் சத்து குறித்துச் சொல்லவே வேண்டாம். நீர்மோர் அஜீரணத்தைப் போக்குவதோடு உடலில் ஏற்படும் உப்புச் சத்துக்குறைவையும் போக்குகிறது. கோடைக்கு இவை ஏற்றவை!

இதே கிருஷ்ணன் பிறந்த நாள் எனில் நல்ல கடும் மழைக்காலத்தில் நள்ளிரவில் வரும்! அவன் பிறந்ததும் அஷ்டமி திதியில். கடுக் முடுக் எனக் கடித்துச் சாப்பிடும்படியான பக்ஷணங்கள். குழந்தையாகப் பல லீலைகள் புரிந்ததாலும் சாப்பாடு, பாயசம், பக்ஷணம், பால், வெண்ணை, மோர், தயிர் போன்றவற்றில் ஈடுபாடு இருந்ததாலும் பெரும்பாலும் அவற்றை ஒட்டியே நம் பிரசாதங்கள் இருக்கின்றன. அதிலும் மழைக்காலக் குளிருக்கென உடலைச் சூடு பண்ணும் விதத்தில் அமைந்த பிரசாதங்கள். எனினும் கண்ணன் மானுடனாகப் பிறந்தாலும் தன் ஒவ்வொரு செய்கையிலும் அவன் தான் அவதாரம் என்பதைக் காட்டிக் கொண்டே இருந்தான்.

கிருஷ்ணனோ எனில் ஶ்ரீராமனுக்கு நேர்மாறாகவே இருந்தான். ஒருதாரக் கொள்கையுடன் ராமன் இருந்தான் எனில் கிருஷ்ணனுக்கோ ருக்மிணி, சத்யபாமை, ஜாம்பவதி என மூன்று மனைவியர். போதாக்குறைக்கு ராதை என்னும் கோபிகா ஸ்த்ரீ. இவளைத் தவிர்த்தும் கோபிகைகள் அனைவரும் கண்ணனையே நினைத்தனர் என்பது தனி விஷயம். அதன் தத்துவார்த்தமும் வேறே! ஆனாலும் கிருஷ்ணனை ஓர்ஸ்த்ரீலோலனாகச் சித்திரிக்க இந்தக் கருத்தைப் பலர் எடுத்துக் கையாளுகின்றனர். மீராபாய் தன்னைச் சந்திக்க மறுத்த ஹரிதாஸிடம் சொன்னதைப் போல கிருஷ்ணனின் ராஜ்ஜியத்தில் அவன் ஒருவனே புருஷன்! மற்ற அனைவருமே பெண்டிர் தான்! இதன் உள்ளார்ந்த பொருளைப் புரிந்து கொள்ளுதல் கொஞ்சம்கடினம்.  எப்படி ஆனாலும் நாம் நம் வாழ்வில் ஶ்ரீராமனையும், கிருஷ்ணனையும் மறக்காமல் இருந்து வருகிறோம். நாம இப்போ வந்த வேலையைப் பார்ப்போமே!

இன்னிக்கு ஶ்ரீராமநவமிக்கு எங்க வீட்டில் செய்த பிரசாதங்கள் படத்துடன் வெளியிடப்படுகிறது.  எங்க வீட்டு ராமர் தான் இணையத்தில் ரொம்பவே பிரபலமாச்சே. என்றாலும் மறுபடி அவர் படத்தைப் போடுகிறேன்.


ராமர் மேலே, கீழே ஶ்ரீதேவி, பூதேவி சமேதரான பெருமாள்


   பிரசாதங்கள், சாதம், பருப்பு, பாயசம், உளுந்து வடை, பாசிப்பருப்புச் சுண்டல், நீர் மோர், பானகம். வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய்.  சுண்டலையே தொட்டுக்க வைச்சுண்டாச்சு என்பதால் வேறே காய் பண்ணலை! நாளை தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.  காலையிலே நாளைக்கு வர முடியாது.

அதோடு கோலாப்பூர் போனது, சென்னைப் பயண விபரங்கள் எல்லாம்  மெதுவாகத் தான் வரும். உடனே எல்லாம் எழுத நேரமில்லை.  வேறே வழியே இல்லை. நெல்லைத் தமிழர் பொறுத்துக்கத் தான் வேண்டும். வீட்டில் வேலையும் முக்கியம். அதோடு பண்டிகைகளும் வேறே!  ஒரு காலத்தில் இந்த "எண்ணங்கள்" வலைப்பக்கமே 2,3 பதிவுகள் போட்டிருக்கேன். இப்போக் கணினியில் உட்காரும் நேரமும் குறைவு! 

Friday, April 12, 2019

சும்மா ஒரு திப்பிச வேலையும், ஒரு நல்ல வேலையும்!

தம்பி குடும்பம் போன வாரம் வந்தப்போ அவங்களுக்கு எதுக்கும் பயன்படும்னு வெந்தய தோசைக்கு அரைச்சு வைச்சிருந்தேன். என்ன? என்ன? நெல்லைத் தமிழரே, செய்முறையா?  என்னோட முறை வெந்தய தோசையே தனி! அதுக்கு அப்புறமா வருவோம்.  முடிஞ்சாச் சுட்டி தரேன். இருங்க, வரேன்!

இங்கே, பார்த்துக்கோங்க  நெல்லைத் தமிழரே, சும்மாச் சும்மாக் கேட்கக் கூடாது, செரியா?

  இப்போத் திப்பிசத்தைப் பார்க்க வேண்டாமா? அந்த வெந்தய தோசை மாவில் தம்பி மனைவி அவங்களுக்கு தோசை வார்த்தது போக மிச்சம் வைச்சிருந்தார். அதை நாங்க சென்னையிலிருந்து ஶ்ரீரங்கம் வந்தன்னிக்கு ராத்திரி எங்க இரண்டு பேருக்கும் தோசை வார்க்க எடுத்துக் கொண்டேன். இம்முறை பல்லவனும் சீக்கிரமாய் வர, உம்மாச்சி மாதிரி ஒரு ஆட்டோக்காரர் வந்து சுருக்கு வழியில் கூட்டிப் போகிறேன்னு வந்து சாமான்களையும் தூக்கிக் கொண்டு எங்களை அதிகம் நடக்க விடாமல் அழைத்துப் போனார்.  அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்! இல்லைனா அந்த நடைமேடை முழுவதும் சுமார் அரைகிமீட்டராவது இருக்கும், நடந்து போய்ச் சுரங்கப்பாதையில் கீழே இறங்கி மேலே ஏறி, அம்மாடி, இதுக்கே மூச்சு வாங்குதே! பெட்டியை எல்லாம் தூக்கிக் கொண்டு ஏறுவதும், இறங்குவதும்?  சென்னை போனால் இந்தப் படிகளில் ஏறி இறங்க முடியலைன்னே , இதுக்காகவே நாங்க மாம்பலத்தில் இறங்காமல் எழும்பூரில் போய் இறங்கிட்டு இருக்கோம்.ஆனால் இங்கே ஶ்ரீரங்கத்தில் இறங்கித் தானே ஆகணும்! { சென்னையில் எழும்பூரில் இரண்டாவது நடைமேடையில் வெளியே வரும் பக்கம் எஸ்கலேட்டர் அருகே லிஃப்ட் இருப்பதையும் இம்முறை பார்த்தேன். ஆனால் போகலை. வெளியேறும் வழி கிட்டத்தான் இருந்தது.}

நாங்க வந்தது ஏசி என்பதால் ஒண்ணு இஞ்சின் பக்கம் வரும், இல்லைனாக் கடைசியில் கார்ட் வான் பக்கம் வரும். இறங்கறச்சே கார்ட் வான் பக்கம். எங்க பெட்டிக்கு அப்புறமா ஒரு முன்பதிவில்லாப் பயணம் செய்யறவங்க ஏறும் பெட்டி, அதுக்கப்புறமா கார்ட் வான்!  கீழே இறங்கறச்சேயே அந்த ஆட்டோக்காரர் கவனிச்சிருக்கார் போல! உடனேயே ரங்க்ஸிடம் வந்து தான் விரைவில் கொண்டு விடுவதாகச் சொல்லவே ஏற்கெனவே சுரங்கத்தை நோக்கி நடக்க ஆரம்பிச்சிருந்த என்னை ரங்க்ஸ் அழைத்தார். அந்த ஆட்டோக்காரர் சொன்னதைக் கேட்டு சபலம் வந்தாலும் எங்காவது இரண்டரை அடி உயரத்தில் படி இருக்குமோனு சந்தேகம் என்னை விடலை. அவரைக் கேட்டேன். நிச்சயமா இல்லைனு சத்தியமே பண்ணினார். ஆட்டோவில் கொண்டு விடப் பணமும் அதிகம் கேட்கவில்லை. அது வேறே சந்தேகம், கவலை. நல்லவங்களா இருப்பதில் கூட இந்தக்காலத்தில் சந்தேகப்பட வைக்குது பாருங்க! :) அவருடன் நடந்தோம். அங்கிருந்து முதல் நடைமேடை போய்ச் சிறிது தூரத்திலேயே ஓர் இடைவெளிச் சந்து தெரிய அதன் வழியே கொஞ்ச தூரத்திலேயே ஸ்டேஷன் ரோடின் ஒரு பக்கம். அங்கே ஆட்டோக்கள் நின்று கொண்டிருந்தன. நம்ம ஆட்டோக்காரர் எங்க சாமான்களை அவர் வண்டியில் வைத்துவிட்டு மறுபடி வந்து எங்களை அழைத்துச் சென்றார். ஆகவே அன்னிக்கு எட்டு நாற்பதுக்கே வீட்டுக்கு வந்தாச்சு. ஏற்கெனவே நான் வீட்டில் தான் சாப்பாடுனு முடிவு பண்ணி இருந்ததால் தோசை வார்த்துத் தக்காளித் தொக்கு (நான் மட்டும்), அவர் புளிக்காய்ச்சல், மிளகாய்ப் பொடியோடு சாப்பிட்டாச்சு.  மாவு கொஞ்சம் மிச்சம். மறுநாள் அதை வார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கலை. 

ஆகவே நேற்றிரவு என்ன பண்ணலாம்னு மண்டை குடையவேதக்காளிகள் ஊருக்குப் போகும்போது வாங்கியவை வீணாகும் நிலையில் இருந்ததைப் பார்த்தேன்.நாம யாரு? உடனே  மண்டையில் உதித்தது ஒரு எண்ணம்! தக்காளி தோசை செய்தால் என்ன?அப்போ இருக்கிற மாவை என்ன பண்ணுவதாம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! யோசித்ததில் மூளையில் பளீரென எல் ஈடி பல்ப் எரிய உடனடியாக அதைச் செயலாற்றத் துவங்கினேன். நல்ல தக்காளிகளாக நான்கு பொறுக்கிக் கொண்டு அதில் தக்காளியின் கண்ணை மட்டும் வெட்டி எடுத்துட்டு மிச்சத்தோடு மி.வத்தல், தேங்காய்த் துருவல், பெருங்காயம், உப்புச் சேர்த்து நன்கு விழுதாக அரைத்தேன்.

ஏற்கெனவே இருந்த மாவோடு ஒரு கிண்ணம் ரவை, ஒரு கரண்டி கோதுமை மாவு சேர்த்தேன். அரைத்த விழுதையும் போட்டுக் கலந்து விட்டுப் பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் கருகப்பிலை, கொத்துமல்லியோடு சேர்த்துக் கலந்தேன். தோசைகளாக வார்த்தேன். நேத்திக்குப் பாடு ஆச்சு. புதிய முறையில் தக்காளி தோசையும் பண்ணியாச்சு! இதை வெறும் ரவை, அரிசிமாவு, மைதா அல்லது கோதுமை மாவோடு கூட ஒரு தரம் முயற்சி பண்ணனும்னு இருக்கேன். :)))))  தொட்டுக்கக் காலம்பர வைச்ச குழம்புக் கருவடாம் போட்ட குழம்பு!

                           
                              பாத்திரத்தில் மிச்ச தோசை மாவு. பக்கத்தில் மிக்சி ஜாரில் அரைத்த தக்காளி விழுது!

               
                            கூடச் சேர்த்த ஒரு கிண்ணம் ரவையும் ஒரு கரண்டி கோதுமை மாவும்.


வெங்காயம் பொடியாக நறுக்கியது


எல்லாவற்றையும் மாவில் போட்டுக் கலக்கணும்.


இதோ தோசை வார்த்தாகி விட்டது! 


ஹிஹிஹி, இது என்ன இன்னிக்கு ஒரே சமையலா இருக்கேனு பார்த்தீங்களா?  அதே தான். ஊருக்குப் போறச்சே வாங்கி வைச்ச கத்திரிக்காயை நேத்திக்குக் கறி பண்ணினாலும் நாலு மிச்சம் இருந்தது. அதில் இன்னிக்குக் கத்திரிக்காய் சாதம் பண்ணினேன். ஆரம்பிக்கையில் படம் எடுக்கும் எண்ணமோ போடும் எண்ணமோ இல்லை. கத்திரிக்காய் வதங்கும்போது தான் படம் எடுத்துப் போடும் எண்ணம் வர சரினு கறி நிலைமையில் கத்திரிக்காய் இருக்கும்போதே படம் எடுத்தேன்.

பின்னர் அதில் சாதம், மசாலா பொடி எல்லாம் போட்டுக் கலக்கும்போது எடுத்த படம். பச்சைக் கொத்துமல்லி தூவி விட்டு வெள்ளரிக்காய்த் தயிர்ப்பச்சடியுடன் சாப்பிட்டாச்சு!

கத்திரிக்காய் சாதம் செய்யத் தேவைப் பட்ட பொருட்கள்:

மி.வத்தல் 4, தனியா அல்லது கொத்துமல்லி விதை, இரண்டு டேபிள் ஸ்பூன், இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், எள் ஒரு டீஸ்பூன்,  பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு, சோம்பு ஒரு டீஸ்பூன், சின்னத் துண்டு லவங்கப்பட்டை, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய்,  மசாலாக்களில் போடும் பூ ஒரு டீஸ்பூன் அளவுக்கு அல்லது நான்கு ஐந்து பூக்கள், தேங்காய்த் துருவல்  ஒரு டேபிள் ஸ்பூன்
ஆனால் நான் இந்தப் பொடியை இதில் சொல்லி இருக்கும் முறையில் எல்லாம் செய்து வைச்சுக்கலை. ஏற்கெனவே மிவத்தல், கொ.ம.விதையோடு கபருப்பு, உபருப்பு, மிளகு, வெந்தயம் போட்டு வறுத்து அரைத்த பொடி இருந்தது. இது எப்போவுமே என்னிடம் தயார் நிலையில் இருக்கும். ஆகவே நான் இன்று சோம்பு, மசாலாப் பூக்கள், கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை ஆகியவற்றை மட்டும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு பொடி செய்து கொண்டேன். அதைத் தனியாகவே வைத்தேன். தேங்காய்த் துருவலையும் வாணலியில் சூட்டில் போட்டுப் பிரட்டினேன். 

கத்திரிக்காய், வெங்காயம் நறுக்கிக் கொண்டு கடாயில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அதில் கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை தாளித்துக் கொண்டு பெருங்காயம் , கருகப்பிலை சேர்த்தேன். பின்னர் வெங்காயத்தைப் போட்டு வதக்கினேன். அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தேன். வெங்காயம் சீக்கிரம் வதங்கும். பின்னர் கத்திரிக்காய்களைப் போட்டு மஞ்சள் பொடி, கால் டீஸ்பூன் மி.பொடி, கால் டீஸ்பூன் தனியாப் பொடி போட்டு மூடி வைத்து வதக்கினேன். கத்திரிக்காய் நன்கு வதங்கியதும் தேவையான உப்பைப் போட்டுக் கூடவே சாதத்தையும் சேர்த்தேன். 


ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த மிளகாய், தனியா சேர்த்த மசாலாப்பொடியோடு தேங்காய்த் துருவல், புதிதாக அரைத்த கரம் மசாலாப்பொடி ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி விட்டு சாதத்தில் போட்டுக் கலந்தேன். தேவையான உப்பும் சேர்க்கணும் இப்போத் தான்! வேணும்னா ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக்கலாம். புளிப்பு வேண்டுமெனில் அம்சூர் பவுடர் அரை டீஸ்பூன் இறக்கும்போது போடலாம். அல்லது எலுமிச்சம்பழம் பிழியலாம். பச்சைக்கொத்துமல்லி பொடியாக நறுக்கித் தூவினால் கத்திரிக்காய் சாதம் தயார்! என்னிடம் அம்சூர் பவுடர் இல்லை. எலுமிச்சம்பழம் இருந்தது. ஆனாலும் சேர்க்கவில்லை. அப்படியே  சாப்பிட்டோம். நன்றாகவே இருந்தது.

Thursday, April 11, 2019

சென்னைக்குத் தேஜஸான பயணம்!

அடுத்தடுத்துப் பயணங்கள், வீட்டில் உறவினர் வருகை எனக் கடந்த இரண்டு மாசமாக ஒரே மும்முரமான நாட்களாகப்  போய் விட்டன. சென்ற மாதம் கோல்ஹாப்பூர் சென்று விட்டு வந்ததுமே உடம்பு ஒரே சோர்வாகத் தான் இருந்தது. ஆனால் இந்தச் சென்னைப் பயணம் தவிர்க்க முடியவில்லை. அம்பத்தூர் வீட்டை விற்றது சம்பந்தமான ஒரு வேலை முடிய வேண்டி நாங்க அங்கே போயே ஆகவேண்டிய கட்டாயம். ஆகவே ஏப்ரல் ஏழாம் தேதி நெருங்கிய உறவினர் ஒருவரின் பேத்திக்குக் கல்யாண நிச்சயதார்த்தம் நடந்தது. அதை ஒட்டியே போகலாம் எனச் சனிக்கிழமை ஆறாம் தேதிக்குத் தேஜஸில் முதல் முறையாகப் பயணம் செய்யத் திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்குப் பயணச்சீட்டு முன் பதிவு செய்தோம். திரும்பி வர ஒன்பதாம் தேதியன்று மதியம் பல்லவன். அன்று தேஜஸ் கிடையாது என்பதோடு அது சென்னையில் இருந்து கிளம்புவது காலை ஆறு மணிக்கே! எங்களுக்கோ வேலை முடிய ஒரு மணி ஆகி விடும். ஆகவே பல்லவன் தான் சரி வரும். 


எங்கள் இருக்கைகளில் இருந்து தேஜஸ் உட்புற அமைப்பின் ஒரு பகுதி! 

முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. முதல் வகுப்பை இதிலே எக்சிக்யூடிவ் க்ளாஸ் எனச் சொல்கின்றனர். சாப்பாடு ரயிலில் வருகிறது என்றாலும் நாம்  பயணச்சீட்டு வாங்கும்போதே சாப்பாடு வேண்டுமா வேண்டாமா, சைவமா, அசைவமா என எல்லாம் குறிப்பிட வேண்டும். சாப்பாடு வேண்டுமெனில் அதற்கும் சேர்த்துப் பயணச்சீட்டுத் தொகையில் வாங்கி விடுவார்கள். இல்லை எனில் பயணச்சீட்டின் விலை கொஞ்சம் குறையும். எங்களுக்கு மூத்த குடிமக்களுக்கான பயணச் சீட்டு என்பதால் ஒருவருக்கு சாப்பாடும் சேர்த்து 720ரூபாய் ஆகி விட்டது! இருவருக்கும் சேர்த்து 1440 ரூபாய். ஒருவருக்கான பயணச்சீட்டு சுமார் 1400 வரை ஏசி. உட்காரும் வசதி கொண்ட பெட்டிக்கு. படுக்கை வசதி இல்லை. இதைத் தவிர்த்து எக்சிக்யூடிவ் வகுப்பு மட்டுமே! அதற்கான தொகை இன்னமும் அதிகமாக ஆகும்.


                                                            இது எதிர்ப்பக்கம்


தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கின்றனர் விமானங்களில் இருப்பதைப் போல். 

ஆனால் படங்கள் அதிகம் இல்லை. தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிப் படங்கள் வந்தாலும் தமிழில் வெள்ளிவிழா, மற்றும் அதற்கும் முன் உள்ள இரண்டு, மூன்று படங்களும், ஹிந்தியில் அமர், அக்பர், அன்டனி, ஆனந்த் போன்ற பழைய படங்களுமே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நல்லவேளையா ப்ருத்வி ராஜ்கபூர், சோபனா சமரத் நடிச்ச ராமாயணம் என்று காட்டவில்லை. சும்மாத் திறந்து பார்த்து ஒரு நோட்டம் விட்டு விட்டு மூடி விட்டேன். அநேகமா எல்லோருமே அப்படித் தான்.

நாங்கள் போய் உட்கார்ந்த சில நிமிடங்களில் முதலில் எப்போதும் போல் குடிநீர் விநியோகம், சாப்பாடு உள்ள பயணச்சீட்டுக்காரர்களுக்கு. மற்றவர்கள் விலை கொடுத்து வாங்கலாம் என எண்ணுகிறேன். அதன் பின்னர் லேசான ஆகாரம் என்னும் பெயரில் ஆலு புஜியா,  உ.கி. சமோசா, ஒரு 20/20 பிஸ்கட் பாக்கெட், ஒரு சின்ன சாக்லேட் ஆகியவை அடங்கிய ஒரு தட்டைக் கொடுத்தார்கள். அதன் பின்னர் காஃபியா, தேநீரா எனக் கேட்டுக் கொண்டு காஃபி எனில் காஃபி பாக்கெட், சர்க்கரை, பால் பவுடர் பாக்கெட் ஒரு காஃபி கப்போடு விநியோகம் செய்த பின்னர் ஃப்ளாஸ்குகளில் நிரப்பப்பட்ட வெந்நீரை ஊற்றிக் கொடுத்தனர். எல்லாம் விமான சேவையைப் போல் தான். 

அதை அடுத்து சுமார் ஆறரை மணி போல ப்ரெட் ஸ்டிக்ஸ், உப்பு, மிளகுத்தூள், வெண்ணெய்ப் பாக்கெட் கொடுக்க ஆரம்பித்தனர். உடனே சூப் வரப் போகிறது என்பது புரிந்தது. ஆனாலும் இது ரொம்பச் சீக்கிரமாக இருப்பதாக நினைத்தேன். ஆனால் சூப் சுமார் பத்து நிமிஷம் கழித்தே வந்தது.  சூடாகவும் நன்கு கெட்டியாகவும் இருந்த அந்தத் தக்காளி சூப்பை உப்பு, மிளகு பொடி, வெண்ணெய் சேர்த்துக் கொண்டு ப்ரெட் ஸ்டிக்கும் சேர்த்துக் கொண்டு ரசித்துக் குடித்தோம். அதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்தே சாப்பாடு வந்தது. சாப்பாடு வந்ததுமே அதை உணவு உண்ணும் சிறிய மேசையைத் திறந்து மேலே வைத்ததால் கைப்பை கீழே மாட்டிக் கொண்டது. செல்லை எடுக்க முடியவில்லை.ஆகவே சாப்பாடு படம் எடுக்க முடியலை. என்ன பெரிசாக் கொடுத்துட்டாங்க! :)

விரட்டி போன்ற இரு மைதா ரொட்டிகள், ஏதோ மிக்சட் வெஜிடபுள் சப்ஜி, தால், (காரமில்லாமல் இருந்த ஒரே சமாசாரம்) ஊறுகாய், பாஸ்மதி ஃப்ரைட் ரைஸ், தயிர் (நல்லதயிர்) இருந்தது. ரொட்டியை நடுவில் மட்டும் பிய்த்துச் சாப்பிட்டுவிட்டு சப்ஜியைப் பேருக்குத் தொட்டுப் பார்த்து விட்டு அந்த பாஸ்மதி ரைஸைக் கொஞ்சம் தாலில் போட்டுச் சாப்பிட்டுவிட்டு மீதத்தை வைத்து விட்டேன். தயிர் சாப்பிட்டேன். சாப்பாடு முடிந்து அரைமணிக்கெல்லாம் நல்ல அருமையான வனிலா ஐஸ்க்ரீம் வந்தது. அளவிலும் சரி, தரத்திலும் சரி ஐஸ்க்ரீமுக்கு என்னோட ஓட்டு+ முழு ஆதரவு1
**********************************************

நாலாம் தேதி இரவே சென்னையில் இருந்து கிளம்பி தம்பி குடும்பம் இங்கே ரங்கநாதர் கோயிலில் சில பிரார்த்தனைகளை நிறைவேற்ற வந்தார்கள். இஃகி, இஃகி, இங்கே தான் குழப்பமே ஆரம்பம். நாங்க பயணச்சீட்டு வாங்கறச்சே பத்தாம் தேதி புதனன்று தம்பி வீட்டில் நடக்க இருந்த ஓர் நிகழ்வைக் குறித்துக் கேட்டதில் அது ஒத்திப்போடப்பட்டது என்றதும் நாங்கள் திருச்சியில் இருந்து கிளம்பும் தேதியை மாற்றாமல் திரும்பி வரும்போது உள்ள  எங்கள் பயணத்தைச் சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒன்பதாம் தேதிக்கு மாற்றினோம். ஆனால் அவங்க திட்டம் என்ன என்பதைக் கேட்கவே இல்லை. அதன் பின்னர் தான் ஏதோ பேச்சில் தெரிய வந்தது, அவங்க நாலாம் தேதி கிளம்பி வரப்போவது!  அ.வ.சி இருபக்கமும்.  முதலில் நாங்க எங்க மைத்துனர் வீட்டுக்குப்போய்த் தங்குவதாக இருந்தது. ஆனால் அதிலும் சில, பல எதிர்பாரா நிகழ்வுகள். ஆகவே தம்பி வீட்டுக்கே செல்லலாம் என முடிவு செய்தோம். அவங்க நாலாம் தேதி வந்து விட்டு ஏழாம் தேதி இரவு கிளம்புவதாகத் திட்டம். ஆனால் நாங்க ஆறாம் தேதிக்குப் பயணச் சீட்டு வாங்கிட்டோம். இஃகி, இஃகி, என்ன செய்யறது. சாதாரண ரயில் என்றாலோ சாதாரணச் சீட்டு என்றாலோ பயணத்தை ரத்து செய்யலாம். ஆனால் முன்னெல்லாம் தேதியைத் தள்ளிப் போடும் வசதி இருந்தது என்பதால் அதை முயற்சி செய்தால் ஆன்லைனில் வாங்கிய பயணச்சீட்டுகளுக்கு அந்த வசதி இல்லை என ஐஆர்சிடிசியில் இருந்து பதில் வரவும் ரத்து செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் மேலும், மேலும் ரயில்வே சட்டதிட்டங்களைத் தோண்டியதில் இப்போதெல்லாம் பயணச்சீட்டை வாங்கினால் பயணம் அந்தக் குறிப்பிட்ட தேதியில் செய்யவில்லை எனில் ரத்து செய்வதைத் தவிர வேறே வழியில்லை என்றும் இது ஆன்லைனில் வாங்கிய பயணச் சீட்டுகளுக்கு மட்டுமில்லாமல் கவுன்டரில் வாங்கினவற்றுக்கும் செல்லும் என்றும் தெரிய வந்தது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

தம்பி குடும்பத்தை ஶ்ரீரங்கத்தில் விட்டுவிட்டு நாங்க சனிக்கிழமை மதியம் சுமார் 3 மணி அளாவில் திருச்சி ஜங்க்ஷன் போனோம். அங்கே போனால் தேஜஸ் எக்ஸ்பிரஸ் 3ஆம் நடைமேடை என அங்குள்ள டிஸ்ப்ளேவில் செய்தி வந்தது. சரினு பாட்டரி காரைக் கூப்பிட்டால் இதோ, அதோனு சொல்லிக் கொண்டே ஒரு வழியாக மூன்றரை மணிக்கு 3 ஆம் எண் நடைமேடைக்குக் கொண்டு விட்டார். இத்தனைக்கும் ஒரு நபருக்கு 30 ரூ பணம் வாங்கிப்பார். இலவசம் எல்லாம் இல்லை. வண்டி கொஞ்சம் தாமதமாகத் தான் வந்தது. எல்லோரும் நல்லபடியா ஏறும் முன்னர் கதவு சார்த்தாமல் இருக்கணுமேனு பிள்ளையாரை வேண்டிக் கொண்டேன். நாங்களும் எப்படியோ ஏறி விட்டோம். 

இந்த வண்டிக் கழிவறைகள் பயன்படுத்த நம் மக்களுக்குத் தெரியவில்லை/புரியவில்லை. ஆகையால் மதுரையில் இருந்து வரும்போதே ஒரு பக்கத்துக் கழிவறை பயன்படுத்தத் தகுதி இல்லாமல் இருந்தது. வண்டியில் இருந்த மேலாளரிடம் புகார் செய்ததில் இந்தவண்டியில் சுத்தம் செய்யும் ஆட்கள் வரமாட்டார்கள் எனவும், கழிவறையில் ஃப்ளஷ் டாங்க் ஏர் ப்ளாக் ஆகிவிட்டதாயும் கூறினார். ஒரு பக்கத்துக் கழிவறை மட்டுமே பயன்படுத்தும்படி ஆகி விட்டது.  வண்டி ஆட்டத்தில் வெஸ்டிப்யூல் தாண்டிச் செல்வது முடியவும் இல்லை. அதோடு இல்லாமல் சாப்பாடு பரிமாறுப்வர்கள் அவர்கள் பங்குக்கு மிச்சம் இருப்பதை எல்லாம் அந்தக் கழிவறையில் கொட்டுவதால் கழிவறைச் சுவர் எல்லாம் கறை மயம்!

ஒன்பதரைக்குச் சென்னை எழும்பூர் வரணும்.  ஆனால் வண்டி விரைவு வேகம் அதிகம் காரணமாக எட்டரைக்கே தாம்பரம் வர அங்கிருந்து மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டு ஒன்பது இருபதுக்கு எழும்பூர் வந்தது. வழக்கமான நாலாம் எண் நடைமேடை இல்லாமல் 2 இல் வந்தது. அதுவும் வெளியே செல்ல வசதி தான். 

Thursday, April 04, 2019

பயணங்கள் குறித்த விபரங்கள்! இங்கே எல்லாம் போயிருக்கீங்களா?

இந்தப் பயணங்களில் சின்ன வயசில் திருப்பதி  போனவை எல்லாம் கணக்கில் இல்லை. அதன் பின்னர் சென்னை-மதுரை போனவையும் கணக்கில் இல்லை. திருமணம் ஆன பின்னர் தினசரி வேலைக்கு அம்பத்தூர்-தண்டையார்ப்பேட்டை போனதெல்லாம் கணக்கில் இல்லை. அதன் பின்னர் நம்ம ரங்க்ஸோட வேலை மாற்றத்தின் விளைவால் எழுபதுகளில் ராஜஸ்தான் சென்றதும், அங்கிருந்து ஒவ்வொரு முறை தமிழகம் வந்ததும் கணக்கில் வரவில்லை. ராஜஸ்தானில் இருந்து சிகந்திராபாத் சென்றது, பின்னர் சென்னை வந்தது, 80களில் மைசூர், "பெண்"களூர் பார்த்துவிட்டு அங்கிருந்து கோவா சென்றது, அதன் பின்னர் பிலாய், நாக்பூர் போனதெல்லாம் கணக்கில் இல்லை. எண்பதுகளிலேயே மீண்டும் ராஜஸ்தான் மாற்றலாகிப் போனது, 3 நாட்கள் ரயிலிலேயே பயணம் செய்தது, அதன் பின்னர் அங்கிருந்து விடுமுறைக்குத் தமிழகம் வந்தப்போ முதலில் ரயில் இஞ்சின் எரிந்து போய் மாற்ற நேர்ந்தது, பின்னர் அதே ரயில் டீரெயில் ஆகி நின்றது, வழியிலேயே காட்டுக்குள் மணிக்கணக்காகக்காத்திருந்தது. அங்கேயே அடுப்பு மூட்டிப் பக்கத்துக் கிராமத்தில் இருந்து பால் வாங்கி வந்து தேநீர் போட்டுச் சாப்பிட்டது. கிராமத்துப் பெண்கள் சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தது எல்லாமும் பசுமையாக நினைவில் உள்ளது.

நசிராபாதில் இருந்து திங்கட்கிழமை கிளம்பும் வண்டி, வியாழக்கிழமை தான் சரியான நேரத்துக்குச் சென்றாலே சென்னை அடையும். நசிராபாத்- காச்சிகுடா புதன் மாலை வரும். புதன் மாலை சார்மினாரைப் பிடித்தால் வியாழனன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் சென்னை சேரலாம். இப்போ ரயில் புறப்பாடு நேரங்கள் மாறி இருக்கலாம்.  ஆனால் நாங்களோ திங்கட்கிழமை கிளம்பி சனிக்கிழமை காலை வந்து சேர்ந்தோம்! நல்லவேளையாக அப்போ ரயில்வேயில் தபால், தந்தி அனுப்ப ஏற்பாடு செய்து தந்ததால் சென்னைக்கு எங்க அப்பாவுக்குத் தந்தி அனுப்பினோம். ரயில் கவிழ்ந்து விட்டதால் நாங்க தாமதமாக வந்து சேர்வோம் எனவும் சிகந்திராபாத் வந்ததும் மற்றொரு தந்தி அனுப்புவதாகவும் கொடுத்தோம்.இரு தந்திகளும் சரியாகப் போய்ச் சேர்ந்தன!  அப்படியும் நாங்கள் செல்லவேண்டிய ரயிலில் போக முடியாமல் அதன் பின்னர் சென்ற ஹைதராபாத் எக்ஸ்பிரஸில் நாம் பள்ளி போய் ரயில் ஏறி ஹிஹிஹி, முன் பதிவில்லாமல் சென்றதால் அங்கே போய்த் தான் ஏறிக்க முடியும். சிகந்திராபாதில் கூட்டம் அள்ளும். ஆகவே அங்கே போய்ப் போர்ட்டர் உதவியுடன் ஏறிக்கொண்டு சாமான்களையும் வைத்துக் கொண்டு ஒரு மாதிரி உட்கார்ந்து விட்டோம். பின்னர் வருபவர்கள் அவங்க பாடு! இஃகி, இஃகி, இஃகி! ஏனெனில் மறுநாளைக்கு மறுநாள் என் பெரிய மைத்துனரின் சீமந்தம்! கட்டாயம் போயே ஆகணும்!

அந்த முறைதான் முதல் முறையாக ராமேஸ்வரம்,கன்யாகுமரி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்குப் போனோம். இவை எல்லாம் அநேகமாய் மதுரையில் என் பெரியப்பா வீட்டில் தங்கிக் கொண்டு அங்கிருந்து பேருந்துகளில் சென்றது! ரயில் பயணங்களில் வரலை. ஆனால் சுற்றுலாவில் உண்டு. சுற்றுலாக்களில் முதல் முறை ராஜஸ்தானில் இருந்தப்போ சென்ற உதய்பூர், மவுன்ட் அபு, ஜெய்ப்பூர்ச் சுற்றுலாக்களும், இரண்டாம் முறையும் நசிராபாதிலிருந்து சென்ற ஜெய்ப்பூர், சிதோட்கட் சுற்றுலாவும் இருக்கு!

அதன் பின்னர் நசிராபாதிலிருந்து ஜாம்நகர் மாற்றல் ஆகி வந்தப்போவும் ரயில் ரோகோ! பிரச்னை! ரயில் நின்று நின்று கிளம்பிக் கொண்டிருந்தது. பகல்வேளை ஆதலால் எங்களுக்கு "பே(Bay)" நால்வருக்கானது கிடைக்காமல் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு உட்காரும் இடம் மட்டும் கிடைக்க, சாமான்களைப் பார்த்து மிரண்ட சகபயணிகள் சண்டைக்கு வர, எங்களை ரயிலில் ஏற்றி விட வந்த அலுவலக ஊழியர்கள் பதிலுக்குச் சண்டை போட ராணுவ  சகோதரர்கள் ரயிலில் ஏறி எங்களுக்கு மாற்றல் ஆகி இருப்பதைச் சொல்லிப் பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் பின்னர் ஒருவழியாகச் சமாதானம் ஆனது.

ஆனால் அந்த ரயில் நின்று நின்று போனதால் அஹமதாபாதுக்கு நேரத்துக்குப் போய்ச் சேரவில்லை. அங்கிருந்து நாங்கள் ஜாம்நகர் போகவேண்டிய ரயில் கிளம்பிப் போயே போய்விட்டது! மறு ரயில் மறுநாள் காலை தான். ஆனால் இரவு பத்து மணிக்கு ஜனதா ஒன்று (அப்போல்லாம் முழுக்க முழுக்க இரண்டாம் வகுப்பு மட்டுமே இருக்கும் பெட்டிகள் கொண்ட வண்டி) ஹாப்பா என்னும் ஜாம்நகருக்கு அருகிலுள்ள ஊருக்கு இருப்பதாகவும் அதற்கு முன்பதிவு தேவை இல்லை எனவும் ஏறிக்கலாம் எனவும் ரயில்வே அதிகாரி கூறினார். கிட்ட இருந்து ஏற்றி விடுவதாயும் கூறினார். நாங்க ஜாம்நகருக்குப் போக முதல் வகுப்பில் முன் பதிவு செய்திருந்தோம். ஆனால் இப்போது போகப் போவதோ இரண்டாம் வகுப்பு முன் பதிவுகள் அல்லாத பெட்டி! உட்கார இடம் கிடைக்குமா? சந்தேகம்! ஏனெனில் அப்போது அங்கே இருந்த ஓம்காரேஸ்வரர் கோயிலில் உற்சவம் நடந்து கொண்டிருக்க சாரி சாரியாக மக்கள் நடைப்பயணமாகவும், ரயில், பேருந்துப் பயணமாகவும் காவடிகளைத் தூக்கிக் கொண்டும், தூக்காமலும் போல் பம்! என்று கோஷமிட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இந்த அழகில் நாங்க எங்கே ஏறுவது? ஏறினாலும் எங்கே உட்காருவது? இப்படித் தான்! முதல் வகுப்பில் முன்பதிவு செய்துட்டு மூன்றாம் வகுப்பில் போவோம். இந்த மூன்றாம் வகுப்பு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது முற்றிலும் ஒழிக்கப்பட்டு இரண்டாம் வகுப்புப் பயணிகளும் மெத்தை தைத்த இருக்கைகள் பயன்படுத்துமாறு ரயில் பெட்டிகள் மாற்றி அமைக்கப்பட்டன.

இரவு முழுவதும் கண் வேறு விழித்திருக்கணும். இரவு பத்து மணிக்கு நடைமேடைக்கு வந்த ரயிலில் ஒரு மாதிரியாக சாமான்களை ஏற்றிவிட்டு நாங்களும் ஏறிக்கொண்டோம். கையில் எடுத்துப் போகும் சாமான்கள் நிறைய இருந்தன. துணிமணிகள் கொண்ட பெட்டிகள் நாலு பேருக்கும். சமையல் பாத்திரங்கள், சமையல் சாமான்கள் அடங்கிய இரு பெட்டிகள். காஸ் ஸ்டவ், பம்ப் ஸ்டவ், திரி ஸ்டவ் போன்றவை (மண்ணெண்ணெய் இல்லாமல்) அவை ஒரு அட்டைப் பெட்டியில். ராணுவ கன்டோன்மென்ட் என்பதால் போனதும் மண்ணெண்ணெய் கிடைச்சுடும், அடுப்பெரிக்கலாம் எரிவாயு வரும் வரை! வீடும் எங்களுக்கு நாங்க போகும் முன்னரே தயாராய் இருக்கும். ஆகவே வீட்டில் போய் இறங்கினதுமே பால் காய்ச்சலாம். அதுக்குத் தகுந்தாற்போல் நாட்கள் பார்த்திருப்போம். கிளம்புவோம். ஆனால் இந்த ரயில்வேக்
காரங்களுக்குத் தான் அதெல்லாம் தெரியறதில்லை. இருந்தாலும் நாங்க ஜமாளிச்சோமுல்ல! ரயிலில் ஏறிக்கொண்டதில் எனக்கு மட்டும் இடம் கிடைக்கவில்லை. மேலும் அது பெண்கள் பெட்டி! ஆகவே நானும், பெண்ணும் மட்டும் இங்கே இருந்தோம். பையரும், அப்பாவும் அடுத்த பெட்டியில்! நடுவில் மறைப்பாகப் போட்டிருந்த மரத்தடுப்பு வழியாக அவங்க அங்கிருந்து பார்த்து ஆறுதல் சொன்னார்கள். ஆனால் எங்களுக்கோ  மனசே ஆகலை. நாங்க நாலு பேரும் எப்போவும் ஒன்றாகவே பயணிப்போம். சண்டை, பூசல், சமாதானம், வெள்ளைக்கொடி எல்லாமும் உண்டு. அது இல்லாமல் இப்போது கஷ்டமாக இருந்தது.

கூடவந்த பயணிகள் பேச்சுக் கொடுத்தார்கள். அவங்க குஜராத்தியிலும், நாங்க ஹிந்தியிலுமாகப் பேசப் பேச்சு வார்த்தை நடந்து ஒரு மனதாக எங்களுக்கு இடம் கொடுக்கத் தீர்மானித்து உட்கார இடம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். தூங்குங்க பஹன் ஜி! சாமான்களை நாங்க பார்த்துக்கறோம்! என உபசாரங்களும் நடந்தன. அதுக்காகத் தூக்கம் வந்துடுமா என்ன? அதிகாலையில் போய்ச் சேர வேண்டியவங்க ரயிலை விட்டுட்டுப் பகல் பத்து மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். நேரே ஜாம்நகர் ரயில் நிலையத்தில் இறங்கி இருக்கணும். இங்கே ஹாப்பா நிலையத்தில் இறங்கிட்டோம். எங்களை வரவேற்க வந்தவங்க ஜாம்நகர் நிலையத்தில் பார்த்துட்டு வரலைனதும் வீட்டுக்குப் போயிட்டாங்க! இரண்டு பேருக்கு மட்டும் இந்த ரயிலில் எதுக்கும் பார்க்கலாம்னு தோண ஒரு ஒன் டன்னர் வண்டியில் வந்திருந்தாங்க. ஹிஹி,  எங்களைப் பார்த்து அவங்க முழிக்க, இவங்க நம்ம ஆஃபீஸ்தானானு ரங்க்ஸ் முழிக்க நாங்க தமிழில் பேசுவதைப் பார்த்து அங்கே வந்தவரில் ஓர் தமிழ்க்காரர் எங்களைக் கேட்க நாங்க தான் அவங்கனு சொல்லவே அவருக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சு! ஏனெனில் எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வண்டி திரும்ப யூனிட்டுக்குப் போய்விட்டது. இப்போ வந்திருக்கும் வண்டியில் எங்களை எப்படி ஏற்றுவது என்பது அவங்க கவலை! எங்களுக்கோ, ஏதோ வண்டி வந்திருக்கே, முதல்லே வீடு போய்ச் சேரலாம் என்று கவலை!

அந்த வண்டியிலேயே சாமான்களை ஏற்றிக்கொண்டு வண்டியிலும் ஏறி வீட்டுக்குப் போனது எல்லாம் தனிக்கதை! ராணுவ ஒன் டன்னரில் ஏறுவது ரொம்பக் கஷ்டம்! ஆனால் அப்போல்லாம் ரொம்பவே ஜிம்பிளாக ஏறி இருக்கேன்.  குஜராத்தில் இருக்கையில் சோம்நாத், துவாரகை, அஹமதாபாத் போன்ற ஊர்கள் சுற்றிப் பார்த்ததும், சபர்மதி ஆஸ்ரமம் சென்றதும் பசுமையாக நினைவில் இருக்கு! சபர்மதி நதிக்கரை அப்போ இருந்ததையும் இப்போ சென்ற வருடம் சென்றதையும் அப்போப் பார்த்த சபர்மதியையும் நினைத்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அஹமதாபாத் நகரே ஒளி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்ததோடு அல்லாமல் சாலைகள் மிகப் பிரமாதமாக இருந்தன. மிகப் பெரிய நகரமாக மாறி விட்டது குறிப்பிடத் தக்கது! நாங்க கடைசியாக பரோடா சென்றது 2010 ஆம் ஆண்டில்.

இன்னும் வரும்! அதுக்கப்புறமா மெதுவாத் தான் கோலாப்பூர் பத்தின கதை! :))))))

Wednesday, April 03, 2019

எங்கெங்கோ சென்றோம்! செல்கிறோம்! பயணங்களில் நாங்கள்!


ஜெய ஜெய விட்டல

மேற்கண்ட சுட்டியில் 2008 ஆம் ஆண்டில் ஐஆர்சிடிசியின் "பாரத் தர்ஷன்" சுற்றுலா மூலம் பண்டரிபுரம் சென்று வந்தது குறித்துப் பார்க்கலாம். அப்போ பண்டர்பூர் மட்டுமில்லாமல் மந்த்ராலயம், நாசிக், பஞ்சவடி, க்ருஹ்ணேஸ்வரர், சனி சிங்கனாப்பூர், ஷிர்டி, பண்டர்பூர் ஆகிய இடங்கள் போனோம். பஞ்சவடியில் இருந்து மேலே கோதாவரி பிறக்கும் இடமும் போய்ப் பார்த்தோம். அது முழுக்க முழுக்க ரயில் பயணம். சென்னை மவுன்ட்ரோடில் "ட்ராவல்ஸ் டைம்" என்பவர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்டு ஏழு போகிகள் பயணிகளுக்கும் ஒரு போகி சமையலுக்கும், ஒரு போகி மற்ற சாமான்களுக்கும், கூடப் பயணம் செய்யும் ஊழியர்களுக்கு எனவும் ஒதுக்கப்பட்டு இந்த ரயில் முழுவதும் சுற்றுலாப்பயணிகளுக்கு எனவே குறிப்பிட்ட இடங்களிலிருந்து கிளம்பும். ஆங்காங்கே பயணிகள் ரயிலுக்குச் சுற்றுலாவுக்கு வந்து சேர வேண்டிய இடத்தினை நாம் முன்பதிவு செய்யும்போதே சொல்லி விடுவார்கள். மதுரையில் இருந்து கிளம்பும் இந்த வண்டி, நடுவில் திருச்சியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னையில் எழும்பூரில் பயணிகளை ஏற்றிக்கொள்ளும்.


அதன் பின்னர் சுற்றுலாப் பயணத்திட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் அருகில் உள்ள ஊர்களுக்குத் தான் பயணம். வேறே நடுவில் பயணிகள் யாரையும் ஏற்காது. நிற்க வேண்டிய ரயில் நிலையங்கள் முன் கூட்டியே ரயில்வே அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி நடுவில் நிற்க வேண்டி இருந்தால் ரயிலில் இருந்து தகவல்கள் அனுப்புவார்கள். அவர்களுக்கு அனுமதி கிட்டினால் எந்த நிலையத்தில் நிற்கக்கேட்டார்களோ அங்கே நிற்கலாம். பேருந்துகளில் போக வேண்டிய இடங்களுக்குச் சுமார் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திவிட்டு நம் கையில் 2நாட்களுக்கு உட்பட்ட துணிகள், கைப்பைகள், பணம் முதலியன மட்டுமே எடுத்துவரச் சொல்லுவார்கள். மற்ற சாமான்களை ரயிலிலேயே வைத்து விடலாம். ரயிலில் பாதுகாப்பு ஊழியர்கள் இருப்பதால் சாமான்கள் பத்திரமாக நம்முடைய இருக்கையிலேயே பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கும். கவலை இல்லாமல் சென்று சுற்றிவிட்டு வரலாம். மூட்டையைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டாம். இது சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இந்திய ரயில்வே செய்து வரும் பல சேவைகளின் ஒன்று என்றாலும் பயணச்சீட்டு, சாப்பாடு, ஆங்காங்கே தங்குமிடம், சில இடங்களில் செல்ல வேண்டியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்படும் ஏ.சிவோல்வோ பேருந்து ஆகியவற்றையும் சேர்த்துக் கணக்குப் போட்டுக் குறைந்த பட்சத் தொகையே வாங்கினார்கள். தங்குமிடம் நமக்குத் தனியாக வேண்டுமெனில் அவர்களிடம் சொன்னால் 3 நக்ஷத்திரத்துக்குக் குறைவில்லாமல் ஏதேனும் ஓர் ஓட்டலில் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். அதற்கான கட்டணம் தனி! நமக்கு வேண்டிய சாப்பாடெல்லாம் அங்கேயே வந்துவிடும். இம்மாதிரி ஓட்டல்களில் தங்குபவர்களுக்கெனத் தனியான வோல்வோ பேருந்தும் இருக்கும்.

நாங்க அப்போப் போனது தான். அதன் பின்னர் அம்மாதிரிச் சுற்றுப் பயணத்தில் போகவே இல்லை. மொத்தம் ஐநூறில் இருந்து எழுநூறு நபர்கள் வரை இந்தப் பயணத்தில் கலந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன். ஒரு போகிக்கு எழுபது நபர்கள் குழந்தைகளையும் சேர்த்து. ஏழு போகி என்பதால் குறைந்தது ஐநூறு பயணிகள். அவர்களுக்கான ஊழியர்கள். ஒவ்வொரு பெட்டிக்கும் இரு பாதுகாவலர்கள். சாப்பாடு பரிமாறுபவர்கள் ஒரு பெட்டிக்கு இருவர் என சுமார் பதினைந்து நபர்கள் சமைப்பவர்கள். சுத்தம் செய்பவர்கள். என எழுநூறு பேருக்குக் குறையாது.  அப்போதே நாங்க ஏசி கேட்டிருந்ததால் அடுத்து வந்த சில பயண ஏற்பாடுகளில் ஏசி 3 இணைக்கப்பட்டு எங்களுக்குத் தனியாகத் தகவல் எல்லாம் கொடுத்திருந்தார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியலை  அதன் பின்னால் நம்மவருக்கு அது பிடிக்கவில்லை என்பதால் எந்தப் பயணமும் அதன் பின்னர் ட்ராவல் டைம்ஸ் மூலமோ ஐஆர்சிடிசி மூலமோ மேற்கொள்ளவில்லை.

ஐஆர்சிடிசியும் இத்தகைய சேவையைத் தனியாகச் செய்கிறது என்றாலும் ஏசி பெட்டி கிடையாது என்பதோடு தங்குமிடமெல்லாம் டார்மிடரி மாதிரித் தான் கிடைக்கும். தனி அறை எல்லாம் வாங்கிக்கொள்ள முடியாது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல இம்மாதிரிப் பயணத்திட்டங்கள் மூலம் செல்வது சிறப்பு! ஆனால் எங்களுக்கு அதன் பின்னர் வாய்க்கவில்லை. அதன் பின்னர் இந்தப் பயணங்களிலேயே போகவில்லை. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் செல்லவே இல்லை. 2015 ஆம் ஆண்டில் ஒடிசா, கொல்கத்தா சென்ற அனுபவத்தில் கொல்கத்தாவில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகவே 3 மணி நேரம் பிடித்ததைப் பார்த்து வெறுத்துப் போய் விட்டோம். அதுவும் தனியாகத் தான் போனோம்.  நாங்க குழுவாகப் போன பயணம் ஒரு சில யாத்திரைகள் மட்டும் தான் இருக்கும். திருக்கயிலை யாத்திரை, அஹோபிலம் யாத்திரை, முதன் முதல் மந்த்ராலயம் சென்றது. அவங்க நவபிருந்தாவனும் கூட்டிச் சென்றனர். நவ பிருந்தாவன் தரிசனம் முடித்துத் திரும்பும்போது படகில் வந்தப்போ நட்ட நடுவில் முதலை மடுவில் படகின் நங்கூரம் மாட்டிக்கொண்டு படகு நகராமல் பிரச்னை செய்யப் பின்னர் 2,3 பரிசல்காரர்களை அழைத்து அந்தப் பரிசல்கள் மூலம் எங்க படகைக் கயிறு கட்டிக்கரை வரை இழுத்துச் சென்ற அனுபவமும் உண்டு.  ஔரங்காபாத் போனப்போ அஜந்தா, எல்லோரா சென்றது மஹாராஷ்ட்ரா சுற்றுலாச் சேவை மூலம்.எல்லோரா எழுதினேன். அஜந்தா எழுதவில்லை. எல்லோராப் பயணம் தனியாகப் போகணும். அஜந்தா மட்டும் தனியாக ஒரு நாள் பயணம். அது தனியாய்ப் போனோம்   துவாரகை, சோம்நாத், டகோர் துவாரகா போன்றவை எல்லாமும் தனியாகவே சென்றோம்.  அதன் பின்னர் வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு சில யாத்திரைகள், திருவண்ணாமலை சென்றது ,வேலூர், ஶ்ரீபுரம், ரத்தினகிரி போனது போன்றவை குழுவாகச் சென்றவை. மற்ற யாத்திரைகள் எல்லாம் அநேகமாய் நாங்க இரண்டு பேருமாகவே சென்றிருக்கிறோம். பத்ரிநாத், ஹரித்வார், ரிஷிகேஷ் போனதெல்லாம் தனியாய்த் தான். அயோத்தி, சித்ரகூட், நைமிசாரண்யம், கான்பூர் வால்மீகி ஆசிரமம் சென்றதெல்லாம் தனியாய்த் தான். அதற்கும் முன்னர் சுமார் 20 வருடங்கள் முன்னரே காசி, கயா , அலஹாபாத் சென்றதும் தனியாய்த் தான்.

இப்படிக் குழுவாகப் போக வாய்க்கவே இல்லை! தனியாகவே சென்று வருகிறோம். குழுவாகப் போவதில் ஒரு சில நன்மைகள் உண்டு என்றாலும் சில சமயம் குழுவினரின் தாமதங்களால் அல்லல்படுவதும் உண்டு. எங்களுக்கு சனி சிங்கனாப்பூரில் அப்படி ஒருவரால் மணிக்கணக்காய்த் தாமதம் ஆகி அன்றிரவு உணவு உட்கொள்ள முடியவில்லை! இம்மாதிரிப்பிரச்னைகள் உண்டு.  இப்படிப் போய் வந்த எல்லாப் பயணங்களையும் எழுதினேனா எனில் இல்லை.  . இந்த ட்ராவல் டைம்ஸ் பயணமும் முழுக்க முழுக்க எழுதவில்லை! என்ன காரணம் என்றால் தெரியவில்லை. 2008 ஆம் ஆண்டிலேயே போய் வந்தோம். ஆனால் இதைக் குறித்துக் குறிப்பிட்டதோடு சரி! விபரமாக எழுதவே இல்லை.  இப்போப் போன பயணமும் தனியாகத் தான் போனோம்.  முதல் முறை பண்டர்பூர் போனதில் இருந்தே மறுபடியும் போக எண்ணம். ஆனால் சில முறைகள் மும்பை சென்றும் அங்கிருந்து பண்டர்பூர் போக முடியவில்லை. கடந்த ஓரிரு வருடங்களாகவே கோலாப்பூர் செல்லவேண்டும் என்னும் எண்ணமும் இருந்து வந்தது. இரண்டையும் சேர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் எனச் சில வருஷங்களாகவே திட்டமிட்டுத் திட்டமிட்டுக் கடைசியில் ஒரு வழியாக ரங்க்ஸ் என்னைக் கேட்காமல் அவரே முடிவு செய்துவிட்டு 3 மாதம் முன்னாடியே விமானப் பயணத்துக்கான சீட்டு, ரயில் பயணத்துக்கான சீட்டு என வாங்கி விட்டார். அதிலே ரயில் பயணத்துக்கான சீட்டு வாங்கியதில் அந்த ரயிலையே ரயில்வே துறையினர் ரத்து செய்து விட்டதாகத் தகவல் வந்தது. உடன் ஆரம்பித்தது பிரச்னைகள்!

Monday, April 01, 2019

பிடிச்சவங்க பாருங்க, படிக்கலாம். வேணாம்னும் போகலாம்!


பிள்ளையார், பிள்ளையார்

உபநயனம்

யோகாசனம்

கதை கதையாம் காரணமாம், ராமாயணம்

சிதம்பர ரகசியம்

ராமனின் பாதையில் சிறு பயணம்

லலிதாம்பாள் சோபனம்

ஓம் நமச்சிவாயா


நேற்றிரவு குட்டிக்குஞ்சுலுவுக்காகக் காத்திருந்தப்போ சமீபத்திய புடைவைப் பதிவில் சில, பல கருத்துக்களை வெளியிட்டு பதில் கொடுத்துட்டு இருந்தேன். அப்போ திடீர்னு குஞ்சுலு ஆன்லைனில் வரவே கமலாவுக்குக் கொடுத்த கருத்தை பப்ளிஷ் செய்தேன்னு நினைச்சுட்டு உடனே ஸ்கைபுக்கு மாறிட்டேன். திரும்பப் பதிவுப்பக்கம் வரலை. அந்தக் கருத்துக் கொடுத்த பதில் வெளீயாகாமலேயே காக்காய் கொண்டு போயிருக்கு! பாவம் கமலா! பதிலை எதிர்பார்த்து ஏமாந்திருக்காங்க!

அது போகட்டும். இன்னிக்கு ஏன் இந்த மொக்கைன்னா ஒரு முகநூல் நண்பர் என்னோட மின்னூல்களை எல்லாம் கேட்டிருந்தார். அவருக்காகத் தொகுத்தப்போ அதை முகநூலில் போட்டுச் சேமிக்காமல் பதிவில் போட்டுட்டேன். எல்லோரும் பாருங்களேன். விரும்பினால் படிக்கலாம். இன்னும் ஏதாவது விட்டிருக்கானு இனிமேல் தான் பார்க்கணும். இப்போதைக்கு நினைவில் வந்தவற்றைக் கொடுத்திருக்கேன். எல்லாமே க்ரியேடிவ் காமன்ஸ் மூலம் வெளியானது.

இதிலே ஒரு வேடிக்கை என்னன்னா இதுக்காக என்னோட பெயரைப் போட்டுத் தேடினால் ஏற்கெனவே முகநூலில் "கீதா சாம்பசிவம்"னு ஒருத்தர் சென்னை, பெரம்பூரில் இருந்து இருக்கார். நல்லவேளையா அவர் படம் ப்ரொஃபைலிலே போட்டிருப்பதால் குழப்பம் வரலைனு நினைக்கிறேன். அவங்களும் எழுதறாங்களானு தெரியலை. நாம தான் நம்ம நண்பரைத் தானே ப்ரொஃபைலில் போட்டிருக்கோம். இது சுமார் பத்து வருடங்களுக்கும் மேல் இருக்கிறதால் பிரச்னை வராதுனு நினைக்கிறேன். ஏற்கெனவே முகநூலில் கீதா சுதர்சனத்தை நான் எனவும் என்னை கீதா சுதர்சனம் எனவும் நினைச்சுக் குழம்பியவங்க உண்டு. அவங்க கவிதை எழுதறவங்க! நம்ம கிட்டேப் போய்க் கவிதை எல்லாமா கேட்க முடியும்? அப்புறமா அவங்க கீதா எம்.சுதர்சனம்னு பேரை மாத்திட்டாங்க! இஃகி,இஃகி, நம்மால் ஆன உதவி! அந்த கீதா சாம்பசிவம் பத்தி மறுபடி மத்தியானமாத் தான்  போய்ப் பார்க்கணும். இப்போக் கிடைத்தக் கொஞ்ச அவகாசத்தில் சொந்த வேலைக்காகக் கணினியைத் திறந்தப்போ இந்த வேலையையும் சேர்த்துட்டேன். அப்புறமா வரேன். 

Sunday, March 31, 2019

ஜிங்குச்சா, ஜிங்குச்சா! பச்சைக்கலரு ஜிங்குச்சா! செவப்புக்கலரு ஜிங்குச்சா!


ஏற்கெனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு ஒரு தீபாவளி சமயம் போட்டிருக்கேன்.  கொஞ்சம் மாற்றி இந்தத் தலைப்புக் கொடுத்து மறுபடி போட்டிருக்கேன். இங்கே மூன்று புடைவைகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு புத்தம்புதிது. ஒன்று கட்டிக் கொண்டது. அதுவும் கீழே விழுந்தப்போ வாங்கிக் கட்டிக் கொண்டது. புடைவைகள் புதிது இரண்டும் எங்கே எடுத்திருப்பேன் என யாருக்கானும் யூகம் செய்ய முடியுதா? பார்க்கலாம்!


மேலே உள்ள படத்தில் புடைவைகள் நிறம் சரியாத் தெரியலைனு கீழே உள்ள படம் மறுபடி வேறே கோணத்தில் எடுத்தேன். ஜேகே அண்ணா இவற்றைப் பார்த்துட்டு என்ன கலர்னு சொல்லப் போறார்னு நினச்சுட்டு இருக்கேன். ஹிஹிஹி, இஃகி,இஃகி, அவருக்குனு தனியா ஏதேனும் நிறம் தோணும் பாருங்க!  கீழே விழுந்த புடைவை எதுனு தெரியுதா? ஏதேனும் யூகம் செய்ய முடியுதா?

இப்போ மறுபடி கோயில் படங்கள்! :)


இது நேற்றுப் போட்ட படம் தான்


கோட்டையின் நுழைவாயில்


அப்பாடா! இந்த முற்றம் தான் எவ்வளவு பெரிது?


இந்த உப்பரிகைகளில் அமர்ந்த வண்ணம் ராணிகளும் இளவரசிகளும் கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்கள் இல்லையா?




இந்த உப்பரிகையைப் பார்த்தால் இது தான் ராணிகள் அமரும் வண்ணம் அலங்காரமாக இருக்கிறாப்போல் இருக்கு. அப்போ எதிரே உள்ளதில் மற்றப் பெண்கள் அமர்ந்திருக்கலாம். அந்த வாசல் உள்ளே எங்கே போகிறது? தெரியலை! 


உள்ளே ஏதோ கோயில் போலத் தெரிகிறது. உள்ளே போய்த் தான் பார்க்கணும்.



கோயில் தான்! ஆனால் உள்ளே சந்நிதியைப் படம் எடுக்கக் கூடாதாம். அர்ச்சகர்கள் கடுமையாக மறுப்புத் தெரிவிக்கின்றனர். கோயிலின் உள்ளே விசாலமான கூடம்!


நடுக்கூடத்தின் மேல் கூரையின் அழகான சித்திர விசித்திர வேலைப்பாடுகள் கண்களையும் மனதையும் கவர்கின்றன. பலருக்கும் மேலே இப்படி ஒன்று இருப்பது தெரியவில்லை. அவங்க பாட்டுக்கு வந்து உம்மாச்சியைப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்காங்க. நமக்குத் தான் ஆஹா! இதெல்லாம் வரலாற்றுப் புகழ் பெற்ற இடமாயிற்றே! இங்கே அவர் நின்றிருப்பாரோ, அங்கே அவர் நின்றிருப்பாரோ என்றெல்லாம் தோணுது!

இப்போதைக்கு இந்தப் படங்களைப் பாருங்க. மற்றவை பின்னர்! :)))))