எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 03, 2019

எங்கெங்கோ சென்றோம்! செல்கிறோம்! பயணங்களில் நாங்கள்!


ஜெய ஜெய விட்டல

மேற்கண்ட சுட்டியில் 2008 ஆம் ஆண்டில் ஐஆர்சிடிசியின் "பாரத் தர்ஷன்" சுற்றுலா மூலம் பண்டரிபுரம் சென்று வந்தது குறித்துப் பார்க்கலாம். அப்போ பண்டர்பூர் மட்டுமில்லாமல் மந்த்ராலயம், நாசிக், பஞ்சவடி, க்ருஹ்ணேஸ்வரர், சனி சிங்கனாப்பூர், ஷிர்டி, பண்டர்பூர் ஆகிய இடங்கள் போனோம். பஞ்சவடியில் இருந்து மேலே கோதாவரி பிறக்கும் இடமும் போய்ப் பார்த்தோம். அது முழுக்க முழுக்க ரயில் பயணம். சென்னை மவுன்ட்ரோடில் "ட்ராவல்ஸ் டைம்" என்பவர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்டு ஏழு போகிகள் பயணிகளுக்கும் ஒரு போகி சமையலுக்கும், ஒரு போகி மற்ற சாமான்களுக்கும், கூடப் பயணம் செய்யும் ஊழியர்களுக்கு எனவும் ஒதுக்கப்பட்டு இந்த ரயில் முழுவதும் சுற்றுலாப்பயணிகளுக்கு எனவே குறிப்பிட்ட இடங்களிலிருந்து கிளம்பும். ஆங்காங்கே பயணிகள் ரயிலுக்குச் சுற்றுலாவுக்கு வந்து சேர வேண்டிய இடத்தினை நாம் முன்பதிவு செய்யும்போதே சொல்லி விடுவார்கள். மதுரையில் இருந்து கிளம்பும் இந்த வண்டி, நடுவில் திருச்சியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னையில் எழும்பூரில் பயணிகளை ஏற்றிக்கொள்ளும்.


அதன் பின்னர் சுற்றுலாப் பயணத்திட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் அருகில் உள்ள ஊர்களுக்குத் தான் பயணம். வேறே நடுவில் பயணிகள் யாரையும் ஏற்காது. நிற்க வேண்டிய ரயில் நிலையங்கள் முன் கூட்டியே ரயில்வே அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி நடுவில் நிற்க வேண்டி இருந்தால் ரயிலில் இருந்து தகவல்கள் அனுப்புவார்கள். அவர்களுக்கு அனுமதி கிட்டினால் எந்த நிலையத்தில் நிற்கக்கேட்டார்களோ அங்கே நிற்கலாம். பேருந்துகளில் போக வேண்டிய இடங்களுக்குச் சுமார் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திவிட்டு நம் கையில் 2நாட்களுக்கு உட்பட்ட துணிகள், கைப்பைகள், பணம் முதலியன மட்டுமே எடுத்துவரச் சொல்லுவார்கள். மற்ற சாமான்களை ரயிலிலேயே வைத்து விடலாம். ரயிலில் பாதுகாப்பு ஊழியர்கள் இருப்பதால் சாமான்கள் பத்திரமாக நம்முடைய இருக்கையிலேயே பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கும். கவலை இல்லாமல் சென்று சுற்றிவிட்டு வரலாம். மூட்டையைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டாம். இது சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இந்திய ரயில்வே செய்து வரும் பல சேவைகளின் ஒன்று என்றாலும் பயணச்சீட்டு, சாப்பாடு, ஆங்காங்கே தங்குமிடம், சில இடங்களில் செல்ல வேண்டியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்படும் ஏ.சிவோல்வோ பேருந்து ஆகியவற்றையும் சேர்த்துக் கணக்குப் போட்டுக் குறைந்த பட்சத் தொகையே வாங்கினார்கள். தங்குமிடம் நமக்குத் தனியாக வேண்டுமெனில் அவர்களிடம் சொன்னால் 3 நக்ஷத்திரத்துக்குக் குறைவில்லாமல் ஏதேனும் ஓர் ஓட்டலில் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். அதற்கான கட்டணம் தனி! நமக்கு வேண்டிய சாப்பாடெல்லாம் அங்கேயே வந்துவிடும். இம்மாதிரி ஓட்டல்களில் தங்குபவர்களுக்கெனத் தனியான வோல்வோ பேருந்தும் இருக்கும்.

நாங்க அப்போப் போனது தான். அதன் பின்னர் அம்மாதிரிச் சுற்றுப் பயணத்தில் போகவே இல்லை. மொத்தம் ஐநூறில் இருந்து எழுநூறு நபர்கள் வரை இந்தப் பயணத்தில் கலந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன். ஒரு போகிக்கு எழுபது நபர்கள் குழந்தைகளையும் சேர்த்து. ஏழு போகி என்பதால் குறைந்தது ஐநூறு பயணிகள். அவர்களுக்கான ஊழியர்கள். ஒவ்வொரு பெட்டிக்கும் இரு பாதுகாவலர்கள். சாப்பாடு பரிமாறுபவர்கள் ஒரு பெட்டிக்கு இருவர் என சுமார் பதினைந்து நபர்கள் சமைப்பவர்கள். சுத்தம் செய்பவர்கள். என எழுநூறு பேருக்குக் குறையாது.  அப்போதே நாங்க ஏசி கேட்டிருந்ததால் அடுத்து வந்த சில பயண ஏற்பாடுகளில் ஏசி 3 இணைக்கப்பட்டு எங்களுக்குத் தனியாகத் தகவல் எல்லாம் கொடுத்திருந்தார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியலை  அதன் பின்னால் நம்மவருக்கு அது பிடிக்கவில்லை என்பதால் எந்தப் பயணமும் அதன் பின்னர் ட்ராவல் டைம்ஸ் மூலமோ ஐஆர்சிடிசி மூலமோ மேற்கொள்ளவில்லை.

ஐஆர்சிடிசியும் இத்தகைய சேவையைத் தனியாகச் செய்கிறது என்றாலும் ஏசி பெட்டி கிடையாது என்பதோடு தங்குமிடமெல்லாம் டார்மிடரி மாதிரித் தான் கிடைக்கும். தனி அறை எல்லாம் வாங்கிக்கொள்ள முடியாது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல இம்மாதிரிப் பயணத்திட்டங்கள் மூலம் செல்வது சிறப்பு! ஆனால் எங்களுக்கு அதன் பின்னர் வாய்க்கவில்லை. அதன் பின்னர் இந்தப் பயணங்களிலேயே போகவில்லை. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் செல்லவே இல்லை. 2015 ஆம் ஆண்டில் ஒடிசா, கொல்கத்தா சென்ற அனுபவத்தில் கொல்கத்தாவில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகவே 3 மணி நேரம் பிடித்ததைப் பார்த்து வெறுத்துப் போய் விட்டோம். அதுவும் தனியாகத் தான் போனோம்.  நாங்க குழுவாகப் போன பயணம் ஒரு சில யாத்திரைகள் மட்டும் தான் இருக்கும். திருக்கயிலை யாத்திரை, அஹோபிலம் யாத்திரை, முதன் முதல் மந்த்ராலயம் சென்றது. அவங்க நவபிருந்தாவனும் கூட்டிச் சென்றனர். நவ பிருந்தாவன் தரிசனம் முடித்துத் திரும்பும்போது படகில் வந்தப்போ நட்ட நடுவில் முதலை மடுவில் படகின் நங்கூரம் மாட்டிக்கொண்டு படகு நகராமல் பிரச்னை செய்யப் பின்னர் 2,3 பரிசல்காரர்களை அழைத்து அந்தப் பரிசல்கள் மூலம் எங்க படகைக் கயிறு கட்டிக்கரை வரை இழுத்துச் சென்ற அனுபவமும் உண்டு.  ஔரங்காபாத் போனப்போ அஜந்தா, எல்லோரா சென்றது மஹாராஷ்ட்ரா சுற்றுலாச் சேவை மூலம்.எல்லோரா எழுதினேன். அஜந்தா எழுதவில்லை. எல்லோராப் பயணம் தனியாகப் போகணும். அஜந்தா மட்டும் தனியாக ஒரு நாள் பயணம். அது தனியாய்ப் போனோம்   துவாரகை, சோம்நாத், டகோர் துவாரகா போன்றவை எல்லாமும் தனியாகவே சென்றோம்.  அதன் பின்னர் வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு சில யாத்திரைகள், திருவண்ணாமலை சென்றது ,வேலூர், ஶ்ரீபுரம், ரத்தினகிரி போனது போன்றவை குழுவாகச் சென்றவை. மற்ற யாத்திரைகள் எல்லாம் அநேகமாய் நாங்க இரண்டு பேருமாகவே சென்றிருக்கிறோம். பத்ரிநாத், ஹரித்வார், ரிஷிகேஷ் போனதெல்லாம் தனியாய்த் தான். அயோத்தி, சித்ரகூட், நைமிசாரண்யம், கான்பூர் வால்மீகி ஆசிரமம் சென்றதெல்லாம் தனியாய்த் தான். அதற்கும் முன்னர் சுமார் 20 வருடங்கள் முன்னரே காசி, கயா , அலஹாபாத் சென்றதும் தனியாய்த் தான்.

இப்படிக் குழுவாகப் போக வாய்க்கவே இல்லை! தனியாகவே சென்று வருகிறோம். குழுவாகப் போவதில் ஒரு சில நன்மைகள் உண்டு என்றாலும் சில சமயம் குழுவினரின் தாமதங்களால் அல்லல்படுவதும் உண்டு. எங்களுக்கு சனி சிங்கனாப்பூரில் அப்படி ஒருவரால் மணிக்கணக்காய்த் தாமதம் ஆகி அன்றிரவு உணவு உட்கொள்ள முடியவில்லை! இம்மாதிரிப்பிரச்னைகள் உண்டு.  இப்படிப் போய் வந்த எல்லாப் பயணங்களையும் எழுதினேனா எனில் இல்லை.  . இந்த ட்ராவல் டைம்ஸ் பயணமும் முழுக்க முழுக்க எழுதவில்லை! என்ன காரணம் என்றால் தெரியவில்லை. 2008 ஆம் ஆண்டிலேயே போய் வந்தோம். ஆனால் இதைக் குறித்துக் குறிப்பிட்டதோடு சரி! விபரமாக எழுதவே இல்லை.  இப்போப் போன பயணமும் தனியாகத் தான் போனோம்.  முதல் முறை பண்டர்பூர் போனதில் இருந்தே மறுபடியும் போக எண்ணம். ஆனால் சில முறைகள் மும்பை சென்றும் அங்கிருந்து பண்டர்பூர் போக முடியவில்லை. கடந்த ஓரிரு வருடங்களாகவே கோலாப்பூர் செல்லவேண்டும் என்னும் எண்ணமும் இருந்து வந்தது. இரண்டையும் சேர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் எனச் சில வருஷங்களாகவே திட்டமிட்டுத் திட்டமிட்டுக் கடைசியில் ஒரு வழியாக ரங்க்ஸ் என்னைக் கேட்காமல் அவரே முடிவு செய்துவிட்டு 3 மாதம் முன்னாடியே விமானப் பயணத்துக்கான சீட்டு, ரயில் பயணத்துக்கான சீட்டு என வாங்கி விட்டார். அதிலே ரயில் பயணத்துக்கான சீட்டு வாங்கியதில் அந்த ரயிலையே ரயில்வே துறையினர் ரத்து செய்து விட்டதாகத் தகவல் வந்தது. உடன் ஆரம்பித்தது பிரச்னைகள்!

34 comments:

  1. //நம்மவருக்கு அது பிடிக்கவில்லை // - எதுனால? ஏதேனும் ஸ்பெசிஃபிக் காரணம் இருக்கா? இப்போவும் இதுமாதிரி ரயில்வேல ஆர்கனைஸ் பண்ணறாங்களா இல்லை டிராவல் ஏஜென்சி பண்ணுதா?

    ஆரம்பமே நல்லா இருக்கு..... ஆனா படங்கள் மிஸ்ஸிங்.

    ReplyDelete
    Replies
    1. ///ஆரம்பமே நல்லா இருக்கு..... ஆனா படங்கள் மிஸ்ஸிங்.//

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நெல்லைத்தமிழன் கட்டுரையில படம் வராதாக்கும்:) நேக்கு டமில்ல டி எல்லோ:))

      Delete
    2. தொடர்ந்து ஒரு வாரம்,பத்து நாட்கள் ரயில் பயணம் என்பதால் உடல் நலம் பாதிப்பு வருகிறது என்பதால் பிடிக்கலை நெ.த. இப்போவும், எப்போவும் ஐஆர்சிடிசி பண்ணுகிறது. ட்ராவல் டைம்ஸ் குறிப்பிட்ட சில ஊர்களுக்கே ஸ்பான்சர் எடுத்துக்கறாங்க. அது குறித்து தினசரிகளில் விளம்பரம் வரும். இல்லைனா ட்ராவல் டைம்ஸில் கேட்டாலும் சொல்லுவாங்க. முன்னால் ட்ராவல் டைம்ஸ் அலுவலகம் மவுன்ட்ரோடு ஸ்டேட் வங்கிக்கு அருகில் உள்ள சந்தில்/தெருவில்(ஆனந்த் தியேட்டர் செல்லும் வழி) இருந்தது. இப்போவும் அங்கே இருக்கானு தெரியலை.

      Delete
    3. அதிரடி நிஜம்மாவே தமிழில் "டி" தான். கேலிக்குச் சொல்லி இருந்தாலும் அதுதான் உண்மை. எல்லாவற்றிலும் படங்களைச் சேர்க்க முடியாது!

      Delete
  2. குழுவாக செல்வதே மிகவும் பிடிக்கும்... அந்த மகிழ்ச்சியே தனி...

    இதே போல் ஒருமுறை சுற்றுலா ஏற்பாடு செய்து, கடைசி நேரத்தில் போக முடியாமல் போனது குறித்து மிகவும் வருத்தம் அடைந்ததை நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. குழுவாகவும் போயிருக்கோம். தனியாகவும் போயிருக்கோம். பொதுவாப் பயணங்கள் அதிகம் செய்திருக்கோம்.

      Delete
  3. சுவாரஸ்யமாக இருக்கிறது சொல்லிய விதம்... இது தொடரும்தானே ?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கில்லர்ஜி! நல்லா இருக்கு!

      Delete
  4. சுற்றுலா பயணங்கள் குழுவினரொடு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்ததில்லை..

    ///அந்த ரயிலையே ரத்து செய்து விட்டார்கள்..////

    அத்தனை விசேஷம்....

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, துரை, தண்டவாளத்தில் பராமரிப்புப் பணி காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதாகக் கோலாப்பூர் ஸ்டேஷன், புனே ரயில்வே ஸ்டேஷன் ஆகியவற்றில் போட்டிருந்தனர். :))))

      Delete
  5. இப்போது ஐ.ஆர்.சி.டி.சி. மிகச் சிறப்பான சில பயணங்களை ஏற்பாடு செய்கிறார்கள். நன்றாகவே இருக்கிறது எனக் கேள்வி. இதுவரை அப்படியான குழு பயணங்களில் - குறிப்பாக ஐ.ஆர்.சி.டி.சி. பயணங்கள் செல்லவில்லை. எல்லாமே தனித்தனியே ஏற்பாடு செய்து செல்லும் பயணங்கள் தான்.

    நல்ல தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஆமாம், நாங்களும் அந்தத் தளத்தில் போய்ப் பார்ப்போம் அடிக்கடி. ஆனால் தேதிகள் எங்களுக்குச் சௌகரியமில்லாத தேதிகளாக வந்துடும். அதோடு அதிக நாட்கள் ரயில் பயணம் என்றால் இப்போல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு! சென்னைக்கு ரயிலில் போகவே யோசனையா இருக்கு!

      Delete
  6. ஊருக்கு போறதே ஜாலி ஒரு ஹாப்பினஸ் தான் அதிலும் இப்படி க்ரூப்பா போவது அதிக உற்சாகத்தை தரும் .எங்க ஊரில் காரிலேயே தான் நாங்க பிரயாணம் ..ஒரு வசதி இங்கே பெட் பிரெண்ட்லி ஹோட்டல்ஸ் இருப்பதால் பூஸ் களும் ரெண்டு வருஷமுன் எங்களோட வந்தாங்க டூ டேஸ் ட்ரிப்புக்கு :) தொடருங்கள் நாங்களும் பயணிக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், அம்பேரிக்காவிலும் எல்லோரும் செல்லங்களை அழைத்துக் கொண்டு சுற்றுலா வருவதைக் கண்டிருக்கேன். அங்கெல்லாம் கார் பிரயாணம் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அநேகமாய்க் காரிலேயே அக்கம்பக்கம் ஊர்களுக்கெல்லாம் போயிட்டு வந்திருக்கோம்.

      Delete
  7. rஎயின் பயணம் என்பதே ஒரு தனிசுகம்தான் கீசாக்கா. நீஇங்களும் நிறையவே செய்திருக்கிறீங்க எனத் தெரியுது, நாங்களும் பிறந்ததிலிருந்து ரெயின் பயணம் தான் ஆனாலும் அலுக்கவில்லை. இங்கு பிளேனைவிட ரெயின் கட்டணம்தான் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. என்னோட ரயில் பயண அனுபவங்கள் நான் எழுதியது பாதி கூட இல்லை அதிரடி! இங்கே இப்போது விமானக்கட்டணமும், ரயிலில் ஏசி, முதல்வகுப்புக் கட்டணமும் கிட்டத்தட்ட ஒன்று! ஆகவே நாங்க பெரும்பாலும் அதிக தூரமான இடங்களுக்கு விமானப் பயணமே விரும்புகிறோம். சில சமயம் முன்கூட்டிப் பதிவு செய்தால் விலை குறைச்சலாகவும் கிடைக்கும்.

      Delete
  8. எங்களுக்கு குழுவாகச் செல்வதை விட தனியாக நம் குடும்பமாக செல்வதே பிடிக்கும், ஏனெனில் அதில் சுகந்திரமும் அதிகம், நம் விருப்பப்படி உணவோ எதுவோ வாங்கலாம் .. ரெஸ்ட் எடுக்கலாம்.. கதைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு விதத்தில் இரண்டிலும் சில சுகங்களும் உண்டு. சில துன்பங்களும் உண்டு. ஆனால் குடும்பமாகச் செல்வதால் ஒருவருக்கொருவர் கவனிப்பு இருக்கும். விரும்பிய வண்ணம் ஓய்வு எடுக்கலாம். எல்லாமும் உண்டு தான்!

      Delete
  9. ///என்னைக் கேட்காமல் அவரே முடிவு செய்துவிட்டு///

    இதனால மனதில திட்டியிருப்பீங்க நல்லா:)) அதனால

    //அதிலே ரயில் பயணத்துக்கான சீட்டு வாங்கியதில் அந்த ரயிலையே ரயில்வே துறையினர் ரத்து செய்து விட்டதாகத் தகவல் வந்தது. உடன் ஆரம்பித்தது பிரச்னைகள்!///
    பிரச்சனை ஆகிடுச்சோ.. இப்போ பத்துத் தடவை கேட்டிருப்பீங்களே மாமாவை.. என்னிடம் கலந்து பேசி ரிக்கெட் வாங்கியிருக்கலாமெல்லோ என ஹா ஹா ஹா:))

    ReplyDelete
    Replies
    1. திட்டலை, ஆனால் உள்ளூர பயம் இருந்து கொண்டே இருந்தது அதிரடி, அதிலும் திருநெல்வேலிப் பயணத்தில் உடம்பு ரொம்பப் படுத்தியதால் இங்கே கொஞ்சம் அதிக தூரம் போறோமே எனக் கவலையாகவே இருந்தது. மாமாவிடம் பத்துத் தரம் இல்லை ஒரு தரம் கூடக் கேட்டுக்கலை! ஏனெனில் அவர் முடிவு செய்துட்டால் அப்புறம் என்ன சொன்னாலும் மாற்ற மாட்டார்!

      Delete
    2. ஏனெனில் அவர் முடிவு செய்துட்டால் அப்புறம் என்ன சொன்னாலும் மாற்ற மாட்டார்!//

      ஆ ஆ ஆ ஆ!! மாமாவைப் பார்த்தால் அப்படித் தெரியவே இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  10. //கோலாப்பூர்//

    இது இந்தியாவிலயோ.. நான் ஸ்பெல்லிங்கு மிசுரேக்கு என நினைச்சுட்டேன்ன் கோலாலம்பூரை:))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா அதிரடி, கோல்ஹாப்பூர்னு சொல்லி இருக்கலாமோ? இங்கே தான் மஹாராஷ்ட்ராவில் உள்ளது.

      Delete
  11. இனிய காலை வணக்கம் கீதா மா. வணக்கம் தனபாலன், நெல்லைத்தமிழன்.
    எவ்வளவு இடங்கள் போய் வந்திருக்கிறீர்கள்...அத்தனை பதிவும் படித்தேனா..நினைவில்லை.

    காஷ்மீர் பக்கம் போகவில்லை என்று நம்புகிறேன்.
    பண்டரி நாதனைப் பற்றியும் படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி,எல்லாத்துக்கும் பதிவு போடவில்லை. இதில் எழுதாமல் விட்ட பயணங்கள் இன்னும் அதிகம். காஷ்மீர்ப் பக்கம் எண்பதுகளிலேயே போயிட்டு வந்திருக்கணும். இவருக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. இத்தனைக்கும் அங்கே உதாம்பூரில் போய் இருக்கீங்களானு கேட்டாங்க! ஶ்ரீலங்கா கூடப் போறீங்களானு கேட்டாங்க! அந்தமான்! இப்படி வலுவில் வந்தவற்றை வேண்டாம்னு விட்டிருக்கோம்.

      Delete
  12. பயண அனுபவங்கள் மிக அருமை. ஐஆர்சிடிசியின் மூலம் எங்கள் அண்ணி போய் வருகிறார்கள் நன்றாக இருப்பதாய் சொல்கிறார்கள்.என் தங்கை காசி போனாள் (போன வருடம்) தனியாக அறைகள் ஏற்பாடு செய்து கொடுத்தாக சொன்னாளே!

    நாங்கள் மனோகர் டிராவலஸ் மூலம் இலங்கை கைலை, முக்தி நாத், சார்தம், கர்நாடகா சுற்றுலா எல்லாம் அவர்களுடன்.

    சில இடங்கள் நாங்கள் மட்டும், சில குழந்தைகளுடன், கல்கத்தா, காசி எல்லாம்
    உறவுகளுடன் என்று போய் இருக்கிறோம்.

    ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அனுபவங்கள் தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, போயிட்டு வரவங்க எங்களிடமும் சொல்லுவாங்க! ஆனால் தனி அறை வேண்டுமெனில் நாம் பயணச்சீட்டு வாங்கும்போதே எழுதிக் கொடுக்கணும் என்பதே நாங்க கேள்விப் பட்டது. மற்றபடி கல்யாணச் சத்திரங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் தங்க வைக்கின்றனர். நாங்க தனி அறை எடுத்துத் தான் தங்கினோம். மந்த்ராலயம், நாசிக், ஷிர்டி, பந்தர்பூர்(பண்டரிபுரம்) போன்ற ஊர்களில். மற்ற ஊர்களில் தங்கும்படி ஏற்படவில்லை.

      Delete
  13. இதுக்கு முன்ன துளசியோட கமென்டைப் போட்டேன்...வந்துதான்னு தெரியல...மீண்டும் போடறேன்.. - கீதா

    நிறைய இடங்கள். நிறைய பயணங்கள். நிறைய அனுபவங்கள் இல்லையா? சென்ற பதிவில் படங்கள் எல்லாம் பார்த்தேன். சமீபத்திய பயணம் போலும். பதிவு இனிதானோ? தொடர்கிறோம்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், அனுபவங்கள் அதிகம் தான்! அதுவும் கூட்டுக் குடும்பம் வேறேயே! எண்பதுகளில் மாற்றலில் சென்றபோதெல்லாம் மாமியார், மாமனாரைக் கூடவே அழைத்துச் சென்றோம். அது தனி அனுபவம்! :))))))

      Delete
  14. அக்கா ரயில் பயணம் என்றால் அது ஒரு தனி அனுபவம். அதுவும் குழுவோடு என்றால். எனக்கு இரண்டுமே பிடிக்கும். குழுவோடு என்றாலும் சரி தனியாக என்றாலும். பெரிய குழு என்றால் அதில் சில அசௌகர்யங்கள் இருக்கும் தான் ஆனால் நம் வீட்டுக் குழுவோடு சென்றால் அது தனி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடம் கற்பிக்கும்.

    நிறைய பார்த்திருக்கீங்க. ...சமீபத்தில் போனது கோலாப்பூர்? லக்ஷ்மி கோயிலா? நானும் போயிருக்கேனே கோலாப்பூர் லக்ஷ்மிகோயில்...ஆனால் படம் அப்படித் தெரியலியெ...சரி பதிவு பார்த்தா தெரியப் போகுது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கோல்ஹாப்பூர் மஹாலக்ஷ்மி கோயில் தான் தி/கீதா! பதிவு போடணும், போடறேன்.

      Delete
  15. ம்.. அப்புறம்...? என்று கேட்கும்படியாக சுவையாக எழுதியிருக்கிறீர்கள். அடுத்த பதிவும் வந்து விட்டது போல ? வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, நீங்க ரொம்பவே பிசி! எப்போவுமே மெதுவாத் தான் வருவீங்க! மெதுவா வாங்க! நானும் அதை விட மெதுவா பதில் சொல்லி இருக்கேன். :))))

      Delete