எச்சரிக்கை
Have a great day.
Wednesday, August 31, 2022
பிள்ளையாரும் கிருஷ்ணனும் பட்ட பாடு!
Monday, August 22, 2022
தாத்தாவுக்கு வெண்டைக்காய் நகைகள்
ஒரு வாரமாக வயிறு வழக்கம்போல் தன் வேலையைக் காட்டி விட்டது. அதோடு கோகுலாஷ்டமியும் வந்து விட்டுப் போயாச்சு. படங்கள் எல்லாம் எடுக்கவே இல்லை. குட்டிக் குஞ்சுலு நான் கோலம் போட்டுவிட்டுக் காய்ந்த பின்னர் காவி இடும்போது தானும் கூடவே வந்து நான் இடுவதைப் பார்த்துக் கொண்டு அதே போல் தானும் காவி இட்டு உதவி செய்தது. அப்புறமாத் தாத்தாவுடன் எங்கள் தளத்தில் எல்லாருடைய வீட்டையும் பார்த்துக் கால் வைச்சிருப்பதையும் கிருஷ்ணா உம்மாச்சியின் பிறந்த நாளை ஏன் இப்படிக் கால் வைச்சுக் கொண்டாடுகிறாங்க என்றும் கேட்டுக் கொண்டது. அன்னிக்குத் தான் கொடைக்கானலில் இருந்து திரும்பி இருந்ததால் அதோட அப்பாவுக்கு ஜுரம். போன தரம் வந்திருக்கும்போதும் ஜூரம். இன்னிக்கு இப்போது குஞ்சுலுவுக்கும் நல்ல ஜுரம்.
Tuesday, August 16, 2022
குஞ்சுலு அப்டேட்ஸ்
Monday, August 01, 2022
ஆரூரா! தியாகேசா! என்னே உன் நிலைமை! பகுதி 9
கமலாம்பிகை சந்நிதிக்குப் போகும் முன்னரே, அங்கே தனிக்கோயிலாக இனொரு அம்மன் சந்நிதி உள்ளது. நீலோத்பலாம்பிகை என்னும் அல்லியங்கோதை என்னும் திருநாமம் கொண்ட அம்மன் அருகிலேயே தோழிப் பெண் கந்தனைத் தூக்கிக்கொண்டு. பிள்ளையை அருமையாய் அம்மை தொட்டுக்கொண்டிருக்கும் வண்ணம் காட்சி அளிக்கிறாள். இங்கேயே பள்ளியறையும் என்பது குறிப்பிடத் தக்கது. இல்லைனா இந்த சந்நிதியைப் பார்த்திருக்கத் தவறி இருக்கும். அவ்வளவு அவசரம். கோயில் ஊழியர்கள் சீக்கிரம், சீக்கிரம் என அவசரப் படுத்து கமலாம்பிகை சந்நிதிக்கு விரைந்தோம். பெரிய கோயிலின் வெளிச்சுற்றில் கமலாம்பிகை தனியாகக் கோயில் கொண்டுள்ளாள். தனிக்கோயில் என்றால் தனிதான். தனியான மதில் சுவரைத் தாண்டி உள்ளே சென்றால் தனிக் கொடிமரம், பலிபீடம், நந்தி. வடகிழக்குத் திசையை நோக்கி அமைந்துள்ளதாய்ச் சொல்கின்றனர். எனக்கு இந்தத் திசைக்குழப்பம் அதிகம் உண்டு என்பதால் அதைச் சரியாய்க் கவனிக்கவில்லை.
நம் உடலின் மூலாதாரமே திருவாரூர் எனச் சொல்கின்றனர். அந்தத் திருவாரூர்க் கோயிலிலும் கமலாம்பிகையின் கோயில் அமைப்பு சந்திரயோகம் என்று திருமந்திரம் சொல்லும் யோகதத்துவங்களின் அமைப்பில் உள்ளதாய்க் கூறுகின்றனர். (அம்பாள் உபாசகர்கள் தான் இது பத்தி விளக்கணும், விளக்கலாம் என்ற விதி இருந்தால்) நம்ம நண்பர் அங்கே உச்சிஷ்ட கணபதி என்ற பெயரில் இருக்கார். அவர் கிட்டே அம்மாவைப் பார்க்க அநுமதி வாங்கிண்டு உள்ளே போனால், அநிந்திதை, கமலினி(ஆமாங்க சுந்தரரின் இரு மனைவியரே தான்) அவங்க துவாரபாலகிகளாய் இருக்கிறாங்களாம். இந்தக் கோயிலில் மட்டுமா? எல்லாக் கோயிலிலுமா? தெரியலை!
யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் வலக்கையில் மலரோடு, இடக்கையை இடுப்பில் வைத்தவண்ணம், மேல் கரங்கள் அக்ஷமாலை, பாசம் ஏந்திய வண்ணம் காக்ஷி அளிக்க, ஒரு காலை மடக்கி, மற்றொரு காலைத் தொங்கவிட்டவண்ணம் காக்ஷி கொடுக்கிறாள் கமலாம்பிகை. முக்கியமான, முதன்மையான சக்தி பீடம் என்றும் ஞானசக்தி பீடம் எனவும் சொல்கின்றனர். பிராஹாரத்தில் சங்கரநாராயணி, ராஜராஜேஸ்வரி ஆகியோர் காணப்படுகின்றனர். பிராஹாரம் சுற்றி வரும்போது மேல் திசையில் காஸ்யபலிங்கர் சந்நிதிக்கு அருகே அக்ஷரபீடம். இந்த அக்ஷரபீடத்தைப் பார்த்தால் பிண்டி போன்ற அமைப்போடு உருவமற்று இருப்பதால் சட்டென யார் கண்ணையும், கருத்தையும் கவராத வண்ணம் இருக்கிறது. நாங்க சொல்லியே சிலர் தெரிந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. திருவாசி இருப்பதால் ஓரளவு இது முக்கியமான ஒன்று எனப் புரிந்து கொள்ளலாம். உற்றுக் கவனித்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.
நல்லவேளையா இங்கே வந்த குருக்கள் தீப ஆராதனை காட்டினதில் பீடத்தின் எழுத்துக்கள் கொஞ்சம் புரிய வந்தன. கீழே தாமரை போன்ற அமைப்பில் செதுக்கப் பட்டு, சுற்றித் திருவாசி. அதிலே எழுத்துக்கள். கிரந்தம் எனத் தோன்றுகிறது. ஓரளவு தான் கிட்டே போகமுடியும். உள்ளே போகமுடியாது என்பதால் பின்னாலும் எழுத்துக்கள் இருந்தால் அது தெரியவில்லை. நம் உடலின் ஆறு ஆதாரங்களும் இந்த 51 அக்ஷரங்களில் அடங்குவதாகவும், இதையே யோக சாதன அக்ஷரபீடம் என்றும் சொல்கின்றனர். வெகு நுணுக்கமான தத்துவங்கள் அடங்கிய ஒன்று. என் சிறு மூளைக்குள் ஓரளவு எழுத்துக்களும், அதன் முக்கியத்துவமும் மட்டுமே ஏறியது. இங்கேயே கொஞ்சம் தள்ளி சரஸ்வதியும் குடி கொண்டுள்ளாள். ஞானத்தைக் கமலாம்பிகையும், மொழி வல்லமையை அக்ஷரபீடமும், கல்வியை சரஸ்வதியும் தருவதாய் ஐதீகம். இப்படி ஒரே கோயிலிலேயே இவை அனைத்தும் அமைந்ததாய் மற்ற எந்தக் கோயிலிலும் காணமுடியாது என்று சொல்கின்றனர். நல்லவேளையாய் இங்கே கொஞ்சம் பார்க்க முடிந்தது. என்றாலும் கோயிலின் சேவகர் கையில் சாவியை வைத்துக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தது மனதில் தைத்துக்கொண்டிருந்ததால், அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல் திருவாரூர்ப் பயணம் அமைந்தது.
***********************************************************************************
இத்துடன் 2010 ஆம் ஆண்டில் சென்ற திருவாரூர்ப் பயணக் கட்டுரை முடிஞ்சிருக்கு. ஏனெனில் பாதியிலேயே திரும்பி விட்டதால் முழுவதும் பார்க்கலை. இப்போப் போனப்போக் கேட்கவே வேண்டாம். தரிசனம் செய்வதே பெரும்பாடாக இருந்தது. இன்னொரு முறை எல்லாம் வாய்க்கப் போவதில்லை. இன்னும் இங்கே ரௌத்ர துர்கை, நவகிரஹ சந்நிதி, ருண விமோசனர் (லிங்க வடிவில்) ஆகிய முக்கியமான சந்நிதிகள் உள்ளன. அவற்றை எல்லாம் பற்றி விரிவாக எழுத முடியலை என்பது வருத்தமாக இருக்கிறது.
Wednesday, July 27, 2022
கணினி படுத்தும் பாடு
கணினியில் வேலை செய்கையில் அடிக்கடி இணைய இணைப்புப் போய் விடுகிறது. இது தோஷிபா மடிக்கணினியில். வாங்கிப் பனிரண்டு வருடங்கள் ஆகின்றன. அதில் ஓ.எஸ். வின்டோஸ் 7 பிரிமியம். ஒரு வேளை அதனால் இணையம் சரியாக வேலை செய்யவில்லையோ? ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இந்தப் பிரச்னை. இணையச் சேவை கொடுப்பவரைக் கூப்பிட்டுக் கேட்டதில் அவர் கணினி தான் சரியில்லை என்கிறார். காலை ஏழு ஏழரை மணி வரை சுமாராக வரும். அப்போது ஏதேனும் பார்த்துக்கொண்டாலோ/எழுதிக் கொண்டாலோ உண்டு. இல்லை எனில் மதியமெல்லாம் வருவதே இல்லை. நேரம் தான் வீணாகப் போகிறது. இணைய இணைப்பு என்னமோ இருக்கும். ஆனால் கணினியைத் திறந்து க்ரோமில் ஜிமெயில் இணைப்புக் கேட்ட உடனே இணைய இணைப்புப் போய்விடும். திரும்ப இணைப்பைப் பெற்று மறுபடி ஜிமெயிலுக்குள் நுழைந்தால் சிறிது நேரம் சரியாக இருக்கும். உடனே போய்விடும். டிஎன் ஏஸ் செர்வர் சரியில்லை என்றும் நெட்வொர்க் மாறி விட்டது என்றும் எரர் செய்திகள் வரும். மறுபடி மறுபடி கணினியில் இணையத்தை இணைத்தாலும் எந்த வேலையும் செய்ய முடியாது ஒரு வரி தட்டச்சுவதற்குள்ளாக இணையம் போய் விடும். கணினி மருத்துவரைக் கூப்பிட்டு இருக்கேன்.
இணையச் சேவை கொடுப்பவர்கள் வந்து பார்த்துட்டுக் கணினி தான் பிரச்னை என்று சொல்கின்றனர். ஏதோ ஒண்ணு. எனக்கு அந்த மடிக்கணினியை ரொம்பப் பிடிக்கும். ரொம்பவே சமரசம் செய்து கொள்ளும். என் கைவாகிற்கு ஏற்றாற்போல் இருக்கும். இது இப்போத் தட்டச்சிக் கொண்டிருப்பது 2017 ஆம் ஆண்டில் வாங்கின டெல் மடிக்கணினி. அதிலிருந்து இப்போ எழுதறேன். இதில் ஈ கலப்பை மூலம் தட்டச்சினால் எழுத்துப் பிழைகள் நிறைய வருது என்பதால் ஒவ்வொரு முறையும் சுரதாவில் தங்கிலீஷில் அடிச்சு அதை மாற்றி இங்கே போடணும். ஆனால் இணையம் பிரச்னை இதில் இல்லை. ஆகவே அந்த மடிக்கணினி தான் பிரச்னை போல. 12 வருஷம் ஆச்சே. ஆனால் எதுக்கும் மருத்துவரும் வந்து பார்க்கட்டும்னு இருக்கேன்.
இந்த மடிக்கணினியை அம்பேரிக்காவில் இருந்து கொண்டு வருகையில் நம்மவர் பாக் பேக்கைத் தோளில் மாட்டிக்காமல் ட்ராலியில் மேல் தட்டில் வைச்சுட்டார். அது கீழே விழுந்ததில் ஹார்ட் டிஸ்கில் பிரச்னையோனு நினைக்கிறேன். கொஞ்சம் மெதுவாகவே வேலை செய்யும். பாட்டரி வேறே சார்ஜ் ஆகலையாம். செய்தி வருது. பரவாயில்லைனு இதிலேயே வேலை செய்யலாம்னு செய்யறேன். பார்ப்போம். அதுக்கு மறு வாழ்வு உண்டா இல்லையானு! இன்னிக்கோ நாளைக்கோ தான் கணினி மருத்துவர் வருவார். வந்ததும் தான் என்னனு தெரியும்.
இப்போதைக்குப் போயிட்டு வரேன். இதில் இத்தனை நாழி தட்டச்சி இருப்பதால் இணையம் ஒரு நிமிஷம் கூடப் போகாததால் அந்த மடிக்கணினி தான் பிரச்னைனு நினைக்கிறேன். பார்க்கலாம். அதில் நிறையவே சேமிப்புகள் இருக்கு. எல்லாத்தையும் இதில் மாத்தணும். வேலை நிறையவே இருக்கும். :)))) ஆனால் இணைய இணைப்புப் பிரச்னை இல்லைனு புரிஞ்சிருக்கு. ஆகவே கணினியை என்னனு கேட்கணும். முந்தைய திருவாரூர்ப் பதிவுக்குப் பதில் கொஞ்சம் மெதுவா வரும். வரேன் இப்போ. ஒரு மாதிரி மனசுக்கு ஆறுதல் ஏற்பட்டிருக்கு. மூணு நாளா ஒரே மண்டைக்குடைச்சல்.
ஒரு விதத்தில் மத்தியானங்களில் படிக்கிறேன். ஆனால் பொன்னியின் செல்வன் டீசர் அதுக்கான கருத்துகள், பாழ்நெற்றி ஆதித்த கரிகாலன், சோழ அரசர்களைப் பார்த்ததால் பொன்னியின் செல்வனையே லக்ஷத்துப் பதினோராம் முறையாகப் படிச்சுட்டு இருக்கேனாக்கும். முதல் பாகம் முடியப் போகுது. நடுநடுவில் வீட்டில் மாவிளக்குப் போட்டது, வீடு சுத்தம் செய்தது குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தம் செய்தது,எனப் பல்வேறு வேலைகள். ஆகவே மத்தியானம் மட்டும் தான் படிக்க முடிஞ்சது.:( நான் நினைக்கிறேன், இந்தப் புதுக்கணினிக்குத் தன்னை அடிக்கடி பயன்படுத்துவதில்லை என்பதில் கோபம் வந்து இப்படிப் பண்ணி இருக்குமோ? இப்போது இதில் தானே எல்லாம் பண்ணணும்.
Monday, July 25, 2022
ஆரூரா! தியாகேசா! என்னே உன் நிலைமை! பகுதி 8
திருவாரூரில் தங்கி இருந்து அனைத்தையும் பார்க்கக் குறைந்தது இரண்டு நாட்களாவது வேண்டும். நாங்க அன்னிக்கு மட்டும் தங்கணும்னு தான் நினைச்சிட்டு இருந்தோம். ஆனால் அன்னிக்குக் காலம்பரக் கிளம்பினதுமே எட்டுக்குடியில் அவர் விழுந்ததும், எல்லா நிகழ்ச்சி நிரலும் மாறிவிட்டது. சீக்கிரமாய்க் கும்பகோணம் போயிட்டு ஊரைப் பார்க்கப் போகலாம் என்று தோன்றிவிட்டது. என்றாலும் வீதிவிடங்கர் வந்த வரலாற்றைத் தெரிந்து கொண்டோம். வன்மீகநாதர் என்னும் புற்றிடங்கொண்டாரைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டாமா? அவர் வரலாறு பின் வருமாறு:
புண்யபூமியான குருக்ஷேத்திரம். மாபெரும் யாகம் ஒன்று நடக்க ஏற்பாடு ஆகிறது. யாகத்தைச் செய்யப் போகிறவர்களும் சாமானியர்கள் அல்ல, தலைமை ஏற்பவரும் சாதாரணமானவர் அல்ல. யாகத்தைச் செய்யப் போகிறவர்கள் தேவாதிதேவர்கள். தலைமை ஏற்பவரோ சாட்சாத் மஹாவிஷ்ணுவே. பொருட்கள் சேகரிக்கப் பட்டன. யாகத்தின் மூலம் கிடைக்கப் போகும் பெருமையும், புகழும் அனைவருக்கும் சமம் என முன் கூட்டியே தீர்மானிக்கப் பட்டது. ஆனாலும் யாகம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையில் ஓய்வு எடுக்காமல் இருப்பவரே மிகச் சிறந்தவர் எனச் சொல்லவேண்டும் என்பதற்கும் ஒத்துக்கொண்டனர். அனைவரும் யாகத்தின் தலைமைப் பதவியான யக்ஞ-மான் பதவிக்கு (இன்றைய யஜமான் இதிலிருந்து வந்ததே) திருமாலே ஏற்றவர் என முடிவு செய்தனர். யாகத்தை இறுதிவரையிலும் ஓய்வே இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார் திருமால்.
எனினும் அவர் மனதின் ஓரத்தில் கொஞ்சம் செருக்கும் இருந்தது. தேவர்களை விட்டு விலக நினைத்தார். யாகத்தின் குண்டத்தில் இருந்து பலவகையான அஸ்திரங்கள் வந்தன. வில் ஒன்றும் வந்தது. வில் திருமாலின் இடக்கரத்தைப்போய் அடைய, அஸ்திரங்கள் அவர் வலக்கரத்துக்குச் சென்றது. தேவர்களை இதன் மூலம் அடக்க நினைத்தார் திருமால். மெல்ல மெல்ல அவர்களை விட்டு விலகி இந்தத் தலத்தை அடைந்தார். பராசக்திபுரம் என்ற பெயரால் அப்போது அழைக்கப் பட்டு வந்த இந்தத் திருத்தலத்திற்கு வந்த திருமால் சோர்வு மிகுதியால் வில்லின் நுனியைத் தன் தாடையில் அழுத்தியவண்ணம் தூங்கிவிட்டார். அப்போது தேவர்கள் திருமாலிடமிருந்து தப்பவேண்டி குலகுருவான பிரஹஸ்பதியின் ஆலோசனையின் பேரில் செல்லுருவில் பூமியைத் துளைக்க ஆரம்பித்தனர். துளைக்கும்போது வில்லின் கீழ்க்கயிறு அறுந்து போக வில்லின் நாண் அறுந்து திருமாலின் தலை துண்டானது.
ஏழு உலகுக்கும் சென்ற அந்தத் தலை திரும்பத் திருமால் படுத்திருக்கும் இடமே வந்து விழுந்தது. பயந்து போன தேவர்கள் ஈசனைத் துதிக்க, அவர்கள் துளைத்த பூமியிலிருந்து பெரும் சப்தத்தோடு சிவலிங்க ரூபமாக ஈசன் வெளியே வந்தார். அவரை அனைவரும் அபயம் கேட்க அஸ்வினிதேவர்கள் உதவியுடன் திருமாலின் தலையை உடலோடு பொருத்துமாறு சொல்ல, அவ்விதமே திருமாலின் தலை பொருத்தப் பட்டது. தனக்குத் தலை வழங்கிய ஈசனைத் துதித்தாராம் திருமால். பின்னர் மது, கைடபரை வதம் செய்த திருமாலைத் திருமணம் புரியவேண்டி இந்த மூலட்டானேஸ்வரரைத் துதித்துத் தவம் இருந்தாளாம் ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி. அவள் தவம் இருந்ததாலேயே இந்த ஊர்க் குளம் கமலாலயம் எனப் பெயர் பெற்றது என்று சொல்வார்கள். மேலும் இந்தத் தலத்தில் தான் இந்திரனின் ஆலோசனைப்படி தசரதன் வன்மீகநாதர் என்னும் புற்றிடம் கொண்டாரைத் தரிசித்துச் சென்றானாம். அதன் பின்னரே புத்ரகாமேஷ்டியாகம் செய்து ராமர் முதலான நாலு புத்திரர்களையும் பெற்றான் என்றும் ஐதீகம்.
கமலாம்பாள் தொடர்கிறாள்.
**********************************************************************************
சென்ற முறை 2010 ஆம் ஆண்டில் சென்றபோது காலங்கார்த்தாலே எட்டுக்குடி கோயிலில் நவகிரஹ சந்நிதியில் விளக்குப் போட்டுப் பிரதக்ஷிணம் செய்ய ஏறிய நம்ம ரங்க்ஸ் இறங்கும்போது கீழே விழுந்து நல்லவேளையாக எக்கச்சகமாக எதுவும் ஆகலை. என்றாலும் கழுத்தில் ஏற்கெனவே இருந்த பிரச்னை கீழே விழுந்த அதிர்ச்சியில் அதிகம் ஆகிவிட்டது. கோயிலில் நவகிரஹ சந்நிதியில் கூட்டம் கூடி விட்டது. மெதுவாகச் சமாளித்துக் கொண்டு எழுந்து கொண்டார்.
கீழே விழுந்ததற்கு முக்கியக் காரணம் காலை வேளையில் நவகிரஹங்களுக்கெல்லாம் (அன்று சனிக்கிழமை) எண்ணெய்/பால்/சந்தனம் போன்றவற்றால் அபிஷேஹ ஆராதனைகள் நடைபெற்றிருந்தன. அந்த நீரும் பாலுமாக எண்ணெயுடன் சேர்ந்து புத்தம்புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்ட படிகளில் விழுந்திருந்தது. அதில் கால் வைக்கவும் சறுக்கி விட்டிருக்கிறது. பக்கத்தில் பிடித்துக்கொள்ள எதுவும் இல்லை. படிகளின் கடைசியில் எதிரே இருந்த சூலம் ஒன்றூ தான். நல்லவேளையாகக் குப்புற விழாமல் சமாளித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். ஆதி காலங்களில் கோயில்களில் இதற்காகத் தான் கல்லால் ஆன படிகளைப் போட்டிருப்பார்கள். ஆனால் நம்ம அறமற்ற நிலையத்துறை அரசு அவற்றை அகற்றிவிட்டுப் புதுப்பிக்கிறேன் என்னும் பெயரில் வழுக்கும் டைல்ஸ்களைப் போட்டு விடுகிறது. பலரும் சொல்லி விட்டார்கள். அதோடு இல்லாமல் அந்தக் கல்படிகளில் பலவும் கல்வெட்டுக்கள். சரித்திரம் சொல்லும் படிகள். அவற்றை எல்லாம் காணாமல் அடித்துவிட்டார்கள்.
இந்தக் காரணத்தால் எட்டுக்குடிக்குப் பின்னர் திருவாரூருக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போனோம். ஆனால் அவரால் முடியவில்லை. ஆகவே திருவாரூருடன் பயணத்தை முடித்துக் கொண்டு கும்பகோணம் திரும்பி அன்றிரவு வண்டியிலேயே சென்னை திரும்பிட்டோம். அம்பத்தூரில் பிசியோ தெரபி சுமார் ஒரு மாதம் எடுத்துக்க வேண்டி வந்தது.
இம்முறை திருவாரூரில் கமலாம்பிகையைத் தரிசனம் மட்டுமே! சுற்றி எல்லாம் வரவில்லை. அக்ஷர பீடம் பார்க்கவில்லை. :( இதுவே பெரிய விஷயம் என்றாகி விட்டது.
Sunday, July 17, 2022
ஆருரா! தியாகேசா! என்ன உன் நிலைமை! பகுதி 7
இங்கே கடைசிப் பதிவு (இம்முறை எழுதிய பதிவின் சுட்டி)
மதிய நேரத்து வழிபாடு நடந்து கொண்டிருந்தது. முதலில் நாங்கள் வன்மீக நாதர் என்னும் புற்றிடங்கொண்ட நாயகரைத் தரிசிக்கச் சென்றோம். அபிஷேஹங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆகவே அங்கே திரை போட்டிருந்தது. கமலாம்பிகையைப் பார்ப்பதென்றால் அதுக்குத் தனியாகப் போகணும். கொஞ்சம் நேரம் ஆகும். ஆகவே கோயிலிலேயே குருக்கள் வீதிவிடங்கரையும் தியாகராஜரையும் முதலில் பார்க்குமாறு சொல்லவே அங்கே சென்றோம். பூவம்பலம் என்னும் பெயருக்கொப்பப் பூக்களால் மிக மிக அழகாய் அலங்கரிக்கப் பட்டிருந்தது. நடுவில் இருந்த குமாரன் பூக்களால் மறைக்கப் பட்டிருந்தான். வெளியே தெரியவில்லை. நாதமும், பிந்துவும் சேர்ந்து பிறந்த கலை வெளியே உடனே தெரியாதன்றோ?
தியாகராஜரைப் பார்க்கப் பார்க்க மனம் பரவசம் அடைந்தது. இன்னதென்று புரியாத ஓர் உணர்வு. அவருக்குப் பின்னால் இருந்த ஒரு சிறு மேடையில் ஒரு வெள்ளிப் பெட்டி இருந்தது. அலங்காரங்கள் செய்து பூக்கள் சார்த்தி வைக்கப் பட்டிருந்த அந்தப் பெட்டியில் தான் வீதிவிடங்கர் இருப்பதாய்ச் சொன்னார்கள். வன்மீக நாதருக்கு அபிஷேஹம் முடிந்ததும், வீதி விடங்கருக்கு அபிஷேஹம் நடக்கும் என்றும் இருந்து பார்த்துவிட்டுப் போங்கள் என்றும் சொன்னார்கள். கூட்டமும் அதிகம் இல்லை. நானும் முன்னால் போய் நின்று கொண்டிருந்தேன். திரும்ப மனம் வரவில்லை. பத்துப் பதினைந்து பேர் உள்ளூர் மக்கள் இருந்தனர். ஒருத்தர் வீதி விடங்கர் பத்தின கதையைச் சொல்ல ஆரம்பிக்க, கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன். வன்மீக நாதருக்கு அபிஷேக ஆராதிகள் முடிந்து இங்கே ஆரம்பம் ஆயிற்று.
தில்லையில் ரத்தின சபாபதிக்குச் செய்வது போல் விஸ்தாரமாய் இருக்கும் என நம்பிக்கொண்டிருந்தேன். அங்கே எல்லாவித அபிஷேஹங்களும் நடக்கும். ஆண்டவன் ஆடிக்கொண்டிருப்பதால் அதற்கு இடையூறு நேராவண்ணம் மனதிலேயே மந்திரங்கள் ஜபிப்பார்கள் தில்லையிலும். அது போல் இங்கேயும் அஜபா நடனம் ஆயிற்றே. மனதிலேயே மந்திரம் ஜபித்தாலும் அபிஷேஹம் நடைபெற்றது எனக்கு அவ்வளவாய் மனதுக்குத் திருப்தியைத் தரவில்லை. என்னமோ அவசரம், அவசரமாய்ப் பாலை ஊற்றிவிட்டுப் பின்னர் தண்ணீரையும் ஊற்றினார்கள். பின்னர் ஒரு அலங்காரம் இல்லை, எதுவும் இல்லை, வீதிவிடங்கரைத் துடைத்துப் பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டார்கள். தீபாராதனை எடுத்தார்களா? சரியாய்த் தெரியவில்லை.
ஒரே ஏமாற்றமாய் இருந்தது. சரி அதுதான் போகட்டும் என்றால் இங்கே தேவாரமோ, திருவாசகமோ எதுவும் யாராலும் பாடப்படவில்லை. எத்தனை பதிகங்கள் இந்தக் கோயிலுக்கு என்றே? நாயன்மார்கள் அதிகப் பதிகங்கள் பாடியதே இந்தக் கோயிலின் மீது தான் என முதலிலேயே அதற்காகவே குறிப்பிட்டேன். ஆனால் யாருமே வாயைத் திறக்கவில்லை. எந்த ஓதுவாரும் கோயிலுக்கென இல்லையா எனக் கேட்க நினைத்தேன். நம்ம ம.பா. சரி, சரி, வா, போகலாம்னு கூப்பிட்டுக் கொண்டு, கமலாம்பிகை சந்நிதி மூடிடுவாங்களாம், அப்புறம் பார்க்க முடியாதுனு இழுத்துக்கொண்டு கிளம்பினார். அரை மனசாய் எந்த விபரமும் யாரிடமும் கேட்கமுடியலையேனு வருத்தத்தோடு கமலாம்பிகையைத் தரிசிக்கச் சென்றோம். வழியிலேயே ஒரு குருக்கள் நடை சார்த்தியாச்சு எனச் சொல்ல என்னடா இதுனு திகைத்தோம். ஆனாலும் கூட வந்த ஒரு சில உள்ளூர் மக்கள் அவங்களோடு வரச் சொல்லவே நாங்களும் பின்னால் நடந்தோம். மற்ற வர்ணனைகள், விளக்கங்கள் தொடரும்.
************************************************************************************
இது கடந்த 2010 ஆம் ஆண்டு போனப்போக் கிடைத்த தரிசனங்களைக் குறித்து எழுதின பதிவு. இந்த முறை கமலாம்பிகையைத் தரிசித்ததோடு சரி. பிரகாரமெலலம் சுத்தலை. அடுத்து அவை பற்றிய விபரமான பதிவு வரும்.காலை வேளை என்பதால் இம்முறை கமலாம்பிகை சந்நிதி மூடவில்லை. செல்லும் வழியிலேயே இருக்கும் இன்னொரு அம்பிகை சந்நிதிக்கு இம்முறை போகவே இல்லை. குருக்கள் நேரே கமலாம்பிகையைப் பார்க்க அழைத்துச் சென்று விட்டார். அங்கே உச்சிஷ்ட கணபதிக்கு அர்ச்சனை இருந்ததே!ஆ






