நடராஜனும், ரங்க ராஜனும் என்றால் யாருன்னு நினைச்சீங்க? நம்ம ஸ்ரீரங்கத்தில்
கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதரையும், சிதம்பரத்தில் கோவில் கொண்டிருக்கும்
நடராஜரையும்தான் சொல்கிறேன். சைவர்களின் கோயில் சிதம்பரம் என்றால்,
வைணவர்களின் கோயில் ஸ்ரீரங்கம் என்று எல்லாருக்கும் தெரியும். நமக்கெல்லாம்
பிறப்பு, இறப்பு என்று இருக்கிற மாதிரி இவங்களுக்குக் கிடையாது. சிவன் காலத்துக்கு எல்லாம் காலன் என்று சொல்லப் படும் காலகாலன் என்றால் விஷ்ணுவோ என்றால் எங்கும் பரவி, வியாபித்து, எல்லாரையும் படைத்துக் காத்து அருளுபவர். "ஷ்ரவண" என்று
சொல்லப் படும் திருவோண நட்சத்திரத்தின் அதி தேவதையான விஷ்ணுவை நாம்
ஆராதித்தோமானால் அந்த நட்சத்திரத்தையும் ஆராதித்த மாதிரி ஆகும். அது போல் சிவனை
ஆராதித்தோமானால் அவர் அதிதேவதையாக இருக்கும் "திருவாதிரை" நட்சத்திரத்தை ஆராதித்த மாதிரி ஆகும். இதில் சிவன் சற்றுச் சூடாகவும், விஷ்ணு சற்றுக் குளிராகவும் இருக்கிறார். எப்படின்னு பார்த்தால் இந்த உலகிலேயே குளிர்ச்சியும் இருக்கிறது. சூடும் இருக்கிறது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஒன்றை வைத்துத் தான் மற்றது. வேறுபாடு கிடையாது. நம்ம உடம்பிலேயே இரண்டும் இருக்கிறது. சூடு மட்டும் அதிகம் ஆனால் "காய்ச்சல்" என்கிறோம். குளிர்ச்சி அதிகம் ஆனாலோ நாமே இருக்க மாட்டோமே!
ஆகவே இரண்டும் இருக்க வேண்டும்.குளிரின் சூட்சும ஆற்றல் விஷ்ணு என்றால், சூடின் சூட்சும ஆற்றல் சிவன் ஆவார். பனி படர்ந்த கைலையில் இருக்கும் சிவன் சூடாகத் தானே இருக்க வேண்டும்? பாற்கடலில் இருக்கும் மஹாவிஷ்ணுவோ அதற்கேற்பக் குளிர்ச்சியாக இருக்கிறார் அல்லவா? ஒரே பொருளின் இரண்டு பகுதிகளான இவர்கள் இருவரும் ஒருவரே! அவர்தான் சங்கரநாராயணன் என்று சொல்கிறோம். "உமையொரு பாகன்" என்றும், "அர்த்த
நாரீஸ்வரர்" என்றும் சொல்கிறோம். என்னடா வென்று பார்க்கிறீர்களா? ச்யாமளனும் அவனே! ச்யாமளையும் அவளே! நாராயணனும் அவளே! நாராயணியும் அவனே! மாயனும் அவனே! மாயையும் அவளே! வைஷ்ணவனும் அவளே! வைஷ்ணவியும் அவனே!
சிவசக்தி பேதத்தில் புருஷ சக்திதான் திருமாலாக வணங்கப் படுகிறது. பொதுவாகப் பெண்களை வலப்பக்கமாய்ப் படுக்கச் சொல்வதுண்டு. பள்ளி கொண்டிருக்கும் எம் பெருமாளைப் பாருங்கள். வலப்பக்கமாய்த்தான் ஒருக்களித்துப் படுத்திருப்பார். இவர் நன்கு
தூங்க, ஆடவல்லானோ ஆடிக் கொண்டிருக்கிறான். எப்படிப் பட்ட ஆட்டம்? ஆனந்தக் கூத்து ஒரு சமயம்,ஆக்ரோஷக் கூத்து ஒரு சமயம், அமைதியான நடனம் ஒரு சமயம்,
பக்தர்களுக்கு அருள ஒரு சமயம். நாமே பாருங்க, நமக்கு மனதுக்குப் பிடித்த ஒரு
காரியம் நடந்தாலோ., அதிக மகிழ்ச்சியான மன நிலையிலோ ஆடலாம், பாடலாம்,.
குதிக்கலாம் போல் இருக்குன்னு சொல்வோம். சிலபேர் ஆடிப்பாடிக் குதிக்கவும் செய்வோம். தூக்கமும் மன நிம்மதியில் தான் நல்லாத் தூங்கினேன்னு சொல்வோம்.
இந்த இடையறா ஆட்டமும் சரி, அந்த இடையறாத் தூக்கமும் சரி எதுக்கு? நம்மை
உய்வித்து வாழ்வாங்கு வாழ வைக்கத்தான். காலை எப்போ வருது? மாலை எப்போ
வருது? இரண்டும் எப்போ சேருது? எப்போ பிரியுது? யாராலும் சொல்ல முடியுமா? முதலில் மாலை வந்ததா? இரவு வந்ததா? அல்லது காலை வந்ததா? பகல் வந்ததா? பதில் சொல்ல முடியுமா? இரண்டும் ஒரே சமயம் வருகிறது, வந்தது போல் போகிறது. இருள் நீங்கினால்
கவலை இல்லை. ஒளி வந்தால் களிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சி. ஆகவே கவலையற்ற நிலையை ஸ்ரீரங்கநாதனின் திருப்பள்ளியும், களிப்புற்ற நிலையை நடராஜரின் திரு நடனமும் நமக்கு உணர்த்துகின்றது. இரண்டுமே பொன்னரங்கம், பொன் சபை ஆகும்.
எங்கும் வியாபகமாய் இருக்கும் திருமால் ரங்கராஜனாய்த் திருவரங்கத்தில் கவலையற்ற நிலையில் திருப்பள்ளி கொண்டிருக்கிறார். "பூலோக வைகுண்டம்" எனப்படும் ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் மாதம் 30-ம் தேதி சனிக்கிழமை அன்று "வைகுண்ட ஏகாதசி"ப் பெருநாள்
கொண்டாடப் படுகிறது. நடராஜரோ என்றால் சிதம்பரத்தில் நம் எல்லாருடைய
நலனுக்காகவும் களிப்புற்ற நிலையில் இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கிறார். ஜனவரி 3-ம் தேதி புதன் அன்று "பூலோகக் கைலாயம்" என்று அழைக்கப் படும் சிதம்பரத்தில் "ஆருத்ரா தரிசனம்" நடைபெறுகிறது. அனைவரும் சிவ, விஷ்ணு பேதங்களை மறந்து, சிவசக்தி ஐக்கியத்தை நினைத்து ஒன்றில்லாமல் மற்றது இல்லை என்றப் பேருண்மையைப் புரிந்து கொண்டு இருவரையும் வணங்கி இறை அருள் பெறுவோமாக.
பதிவுக்கு நன்றி அம்மா.....
ReplyDeleteஆரூர் நறுமலர் நாதன்
அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால் திருவிளக்கிட்டமை
நீணா டறியுமன்றே.
திருவோணதிற்கு இவ்வளவு முக்கியத்துவம் உள்ளது இன்று அறிந்தேன்.இங்கும் அருகிலுள்ளக் கோவிலில் இவ்வருடம் 30ம் தேதிக் காலை முதல் 31ம் தேதிக் காலை வரை விஷ்ணு சகஸ்ரநாமம் இடைவிடாது கூறி பூஜை செய்ய உள்ளனர்.வீகென்ட் ஆவதால் போகவும் சந்தர்ப்பம்.லிவர்மோர் என்ற ஊரில் உள்ளக் கோவிலில் மிக அருமையாக ஒவ்வொரு பூஜையும் விமரிசையாக நடக்கும்.உங்கள் பிராத்தனைகளில் எங்களையும் நினைத்துக் கொள்ளுங்கள். இனி வரும் வருடம் அனைவருக்கும் நன்மையாக ,வளமாக,மகிழ்ச்சியாக அமையப் பிரார்த்தனை செய்வோம்.--SKM
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவியே
ReplyDeleteஇந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.
இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்
கீதா,எல்லா ராஜாக்களும் நமக்கு நல்லது செய்யட்டும்.
ReplyDeleteஇந்தப் புத்தாண்டில் பதிவுகள் பெருகிப் பின்னூட்டங்கள் இன்னும் நிறைய வந்து வலையில் மகிழ்ச்சியோடு இருக்க இருவரும் உதவட்டும்.
வாழ்த்துகள். அன்புடன்,
கீதா!
ReplyDeleteஇந்த ஆருத்ரா தரிசன விழா ஈழத்தில் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் என் அழைக்கப்படும் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும்;80 க்கு முற்பட்டகாலங்களில் இந்தியாவிலிருந்து நாதஸ்வரகானம்; சமய உரைகள் ஒழுங்குசெய்வார்கள். மறக்கமுடியாத மிகச் சிறப்பான விழா!! பதிவுக்கு நன்றி
இனிய புதுவருட வாழ்த்துக்கள்
யோகன் பாரிஸ்
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் கீதா அம்மா.
ReplyDeleteவிஷ்ணுவும் சிவனும் ஒன்று என்பது ராமாயணத்தில் கூறியது போல வேறு எங்கும் அவ்வளவு அழகாகக் கூறப்படவில்லை. அது பற்றி கூற நான் போட்ட இந்தப் பதிவிலிருந்து கோட் செய்கிறேன். ராமாயணத்தின் விசேஷம் என்னவென்றால், ராமருக்கு சேவை செய்யவே சிவன் தனது அம்சமாகிய அனுமனை அனுப்பி வைக்கிறார். அதே போல சிவபெருமான் ராமபிரானது இஷ்ட தெய்வம்.
ReplyDelete"ராமர் இலங்கை நோக்கிச் செல்லுமுன் சிவனுக்கு பூஜை செய்கிறார். அவருடைய இஷ்ட தெய்வமல்லவா சிவன். ராமரின் பூஜையை சிவனும் பார்வதியும் வானுலகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கீழிருந்த வண்ணம் ராமரும் அவர்களை அவ்வப்போது புன்முறுவலுடன் பார்க்கிறார். பூஜை முடிந்ததும் ராமர் அனுமனிடம் தான் பூஜை செய்த இடம் இனி ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் எனக் கூறுகிறார். அந்தப் பெயரின் காரணம் குறித்து அனுமன் வினவ, ராமர் முதலில் ராமேஸ்வரன் பெயருக்கு பொருள் கூறுகிறார். அதாவது யார் ராமனுக்கு ஈஸ்வரனோ அவனே ராமேஸ்வரன் என்று.
அப்போது சிவன் பார்வதியை நோக்கிக் கூறுகிறார்: "உமா, பார்த்தாயா எவ்வாறு என் பிரபு ராமபிரான் ராமேஸ்வரனின் அர்த்தத்தை சாமர்த்தியமாக மாற்றி விட்டார்" என்று. விஷ்ணுவின் தங்கை பார்வதிக்கு அண்ணன் புகழ் கேட்டு ஒரே பெருமை. இருப்பினும் தெரியாதது போலக் கேட்கிறார்.
"அப்படியா சுவாமி, ராமேஸ்வரன் யார் என்று நீங்கள்தான் கூறுங்களேன்" என்று. அதற்கு சிவன் அவர்கள் கூறுகிறார். "யாருடைய ஈஸ்வரன் ராமனோ அவனே ராமேஸ்வரன்" என்று. உமை அவர்கள் "அப்படியா, உங்கள் இருவரில் யார் கூறுவது சரி" என்று கேட்க, சிவன் "நான்தான், ஏனெனில் நான் கள்ளம் கபடமற்றவன் (போலானாத்) அல்லவா என்று கூற, உமையின் புன்னகை இன்னும் விரிகிறது. சிவனின் திருவிளையாடல்கள் அவருக்கு ஞாபகம் வந்திருக்கும் போல.
ராமர் கீழிருந்து வானத்தை நோக்கி வணங்க, சிவன் வானத்திலிருந்து அவருக்கு பதில் வணக்கம் போடுகிறார். இவை அத்தனையும் ராமானந்த் சாகரால் எடுக்கப்பட்ட ராமாயணத் தொடரில் எண்பதுகளில் நான் பார்த்தேன். ஹிந்தி எனக்கு நன்றாகத் தெரியுமாதலால் நான் இக்காட்சியை முழுமையாக ரசித்தேன்."
அன்புடன்,
டோண்டு ராகவன்