எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 06, 2006

கார்த்திக் கேட்டது இதுவா?

முதலில் ஒரு சின்னக் கவிதை. எனக்குப் பிடிச்சது. இதை முன்னேயே எழுதிட்டு இருந்தப்போ திடீர்னு மின்சாரம் போயிட்டது. சேமிப்பில் போட்டேன். ஆனால் சரியாக சேமிப்பு ஆகவில்லை.முதலில் நிறைய எழுதி இருந்தேன். இப்போ திரும்ப எல்லாம் எழுதும்படி ஆயிடுச்சு. எல்லாம் HEAD LETTERதான் வேறே என்ன? அப்புறம் இணைய இணைப்பு வராமல் போய் ஒரே தொந்திரவுதான். இப்போ கூட அடிக்கிறச்சே ரொம்பத் தகராறு தான். தப்பு வராமல் அடிக்கிறவள் இப்போ சரியா எழுத்து விழாமல் ரொம்பவே திரும்பத் திரும்ப அடிக்க வேண்டி இருக்கு.இப்போ கவிதையைப் பார்ப்போம். இருக்கவே இருக்கு என்னோட புலம்பல்.இதோட மூணாவது முறையாப் போயிடுச்சு. எல்லாம் சேமிப்புக்கே போக மாட்டேங்குது. என்னன்னே தெரியலை.

"சிரிப்பினால் என் உதடுகள் அகன்றிருப்பதால்,
பாட்டினால் என் குரல் ஆழ்ந்து ஒலிப்பதால்,
இவ்வளவு நீண்ட காலம் என் வேதனையைப்
பொறுத்திருப்பதால் நான் துன்புறுகிறேன் என்று
நீ நினைக்காமல் போனாயா?

சிரிப்பினால் என் உதடுகள் அகன்றிருப்பதால்
என்னுள்ளிருந்து வருகின்ற அழுகை உனக்குக்
கேட்காமல் போயிற்றா?
நடனத்தில் என் பாதங்கள் திளைத்திருப்பதால்
நான் செத்துக் கொண்டிருக்கிறேன் என்று
உனக்குத் தெரியாமல் போயிற்றா?" இந்தக் கவிதையை எழுதியது நீக்ரோக் கவிஞர் லாங்ஸ்டன் ஹ்யூஸ் என்பவர். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் 'UNCLE TOM'S CABIN" என்ற ஆங்கிலத் துணைப்பாட நூல் படிக்கும் சமயம் எங்கள் ஆங்கில ஆசிரியை எங்களுக்குக் கற்பித்த பாடல் இது. இதன் ஆங்கில மூலம் தொலைந்து விட்டது. இப்போ கார்த்திக் கேட்டது மூன்றாவது முறையாக எழுதுகிறேன். எல்லாருக்கும் சுலபமாக இருப்பது எனக்கு என்னவோ ரொம்பவே கஷ்டப் பட வேண்டி இருக்கிறது. எல்லாம் பாதி எழுதும்போதே மின்சாரத் தடை வந்து விடுகிறது. சிலசமயம் உடனேயே வருகிறது. சிலசமயம் வோல்டேஜ் சரியில்லை. அதனாலே எங்க வீட்டு டி.வி. கூட இப்போ ரிப்பேருக்குக் காத்திருக்கிறது. சுதந்திரம் வந்து இவ்வளவு நாள் ஆகியும் ஒரு மின்சாரம் தடை இல்லாமல் ஒரே சீராக விநியோகம் செய்ய முடியவில்லை நம்ம அரசுகளால்.
**********************************************8
பிடிச்ச வாசனை: சின்னப் பூப்போன்ற குழந்தைகளிடம் இருந்து வரும் வாசனை. இப்போ உள்ள ஜான்ஸன்ஸ் பேபி சோப், பவுடர் இல்லை. ஒரிஜினல் ஸ்ரீவில்லிபுத்தூர் வாசனைச்சக்கைப் போட்டுத் தேய்த்துக் குளிப்பாட்டி விட்டச் சின்னக் குழந்தையின் வாசனை.
2.எங்க வீட்டுத் தோட்டத்தில் பவளமல்லிச் செடி இருக்கும்போது அதன் பூ இரவில் மலரும்போது அதோடு சேர்ந்து வரும் மல்லிகைப் பூவின் வாசனையும் சேர்ந்து.
3. பாக்குப் பழம் பழுக்கும்போது வரும் சுகந்தமான வாசனை.

பிடிக்காத வாசனை: சிகரெட்டின் துர்நாற்றம். பொதுவாய்த் தமிழில் நாற்றம் என்றால் நல்ல மணம், நறுமணம் என்று தான் அர்த்தம்.
பூண்டின் வாசனை.
சர்க்கரை ஆலைகளில் இருந்து வரும் கழிவுகளின் துர்நாற்றம்.

பிடித்த வேலை: எல்லா வேலையும் பிடிக்கும். பிடிக்காதுன்னு ஒண்ணும் கிடையாது. என்ன, என்னால் செய்ய முடிந்த வேலையாக இருக்கணும். அதான், பொதுவாய் நான் ஒரு workaholicனு தான் என்னோட பொண்ணு சொல்லுவா.
பிடிக்காத வேலை: சும்மா உட்கார்ந்திருப்பது தான் பிடிக்காத வேலை.ஏதாவது படிக்கவாவது படிக்கணும்.

பிடிச்ச படம்: பப்படம் தான். ஹிஹிஹி, பிடிச்ச படம் எல்லாம் முன்னாடியே எழுதி இருக்கேன். இருந்தாலும் நீங்க கேட்கிறதாலே சில விளம்பரப் படங்கள்.
1.ப்ரூ விளம்பரத்தில் வரும் பெண்ணின் "ஸ ஸ ஸ ஷுகர் போதுமாப்பா?" என்ற கேள்வியும், அவளோட அப்பாவின் பதிலும்.
2.அதே ப்ரூ விளம்பரப் பெண் தனக்குக் குழந்தை பிறக்கப் போவதைச் சின்னக் கப்பை வைத்துக் கொண்டு கணவனுக்குத் தெரியப் படுத்தும் இடம். அந்தப் பெண்ணின் இயல்பான நாணமும், மகிழ்ச்சியும் சற்றும் செயற்கையாக இருக்காத ஒன்று. ரொம்பவே இயல்பான ஒன்று.கவிதை!
3.ரேமாண்ட்ஸ் விளம்பரத்தில் வரும் இளம் தந்தை. குழந்தையைக் கொஞ்சும்போது, "feeling heavens. Isn"t it?" என்ற கேள்வி வருவது. இன்னும் ஹட்ச் நாய்க்குட்டியும், தாரா பையனின், "ஜிலேபி?" என்ற ஆச்ச்சரியமான கேள்வியும் கவிதைகள்.
ம்ம்ம்ம்ம்ம், படம்னு கேட்டிருக்கிறதாலே சில கார்ட்டுன் படங்கள் சொல்றேன். நான் சின்னப் பொண்ணுதானே. அதனாலே கார்ட்டூன் படங்கள் ரொம்ப விரும்பிப் பார்ப்பேன்.
1.Tom and Jerry இதை அடிச்சுக்க ஆள் கிடையாது இன்னி வரைக்கும்.
2.Finding Nemo அப்பா மீனின் தவிப்பும், அழுகையும் திரும்பத் திரும்பப் பார்க்கும். உணர்ச்சி வசப்படும் மீன்களின் கவிதை இது. எத்தனை முறை வேணுமானாலும் பார்க்கலாம்.
3.MR.Bean: இவர் செய்யும் எது நமக்குப் பிடிக்காது? எல்லாமே பிடிக்கும். இருந்தாலும் சமீபத்தில் பார்த்தது ஒன்று. ஒரு குழந்தையைத் தவறுதலாகப் பிராம்புலேட்டருடன் தள்ளிக் கொண்டு வரும் திரு பீன் அந்தக் குழந்தையின் அழுகையைச் சமாதானப் படுத்தும் அழகு இருக்கிறதே! குழந்தையைச் சமாதானப் படுத்த நிறையப் பலூன்கள் வாங்கிப் பிராமில் கட்டுவதும் பலூன்கள் கட்டப் பட்ட பிராம் மேலே எழும்புவதும், திகைத்துப் போன திரு பீன், உடனேயே வில்லும் அம்பும் வாங்கி ஒவ்வொரு பலூனாக உடைப்பதும் பலூன்கள் உடைபட்ட பிராம் கீழே இறங்குவதைப் பார்த்துப் பயப்பட்டுக் கண்ணை மூடிக் கொள்ளும் பீன் கண் திறக்கும்போது பிராம் குழந்தையின் அம்மா போலீஸ் புகார் கொடுக்கும் சமயம் சரியாகப் போய் இறங்கி விட்டதையும்,. தாயைப் பார்த்தக் குழந்தை சிரிப்பதைப் பார்த்து அவர் சிரிப்பதும் ரொம்பவே நல்லா இருக்கும்.

மறக்க முடியாத நினைவுகள்: மதுரையில் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மறக்க முடிந்ததில்லை. தினம் காலை கோயிலில் இருந்து வரும் கோடி அர்ச்சனைப் போற்றி மந்திர வழிபாடும், (எனக்குத் தெரிந்து மதுரையில் தமிழில்தான் வழிபாடு நடந்து வருகிறது.) ஆடி வீதி திருப்புகழ் மண்டபத்தில் நடக்கும் திருப்புகழ் பஜனைகளும், மார்கழி மாதம் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன் நடத்தும் திருப்பாவை வகுப்பில் சேர்ந்து, விடிகாலை மூன்று மணிக்கே எழுந்து மதன கோபால ஸ்வாமி கோவிலில் இருந்து கிளம்பும் பஜனையில் கலந்து கொள்ளும் சுகமும், பஜனை முடிந்து திரும்பும் போது கொடுக்கும் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் போன்றவற்றின் சுவையும், ஹரிதாஸ் ஸ்வாமிகளின் பஜனையும், வாரியார் ஸ்வாமிகளின் கந்தபுராணச் சொற்பொழிவும், சந்தான கோபாலாச்சாரியாரின் வீணையில் வாசிக்கும் சாம கானமும், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் நாராயணீயமும், சிவானந்த விஜயலட்சுமியின் ஹரிகதா காலட்சேபமும், கொத்தமங்கலம் சுப்புவின் வில்லுப்பாட்டில் காந்தி மஹான் கதையும் இன்னும் எத்தனையோ இருக்கிறது. எதை விட, எதைச் சொல்ல? கல்யாணம் ஆகி வந்த புதிசில் தண்ணீரில் இருந்து எடுத்து விட்ட மீனைப் போல இது எல்லாம் இல்லாமல் ரொம்பவே தவித்திருக்கிறேன். இப்போவும் அந்த நாட்களை ரொம்பவே இழந்திருக்கிறேன் என்று தோன்றும்.
அப்புறம் எங்க கல்யாணம் ஆனதும் நாங்க நசீராபாத்தில் கழித்த் 7, 8 வருடங்கள். பொற்காலம்னு சொல்லலாம்.

செயல்: மறக்கமுடியாத செயல்னு ஒண்ணும் செய்யலை. வேணும்னா இப்போ கைலை போயிட்டு வந்ததைக் குறிப்பிடலாம். யாருக்காவது ஏதாவது செய்யணும்னாலோ, கொடுக்கணும்னாலோ உடனே கொடுத்துடுவேன், செய்துடுவேன், தள்ளிப் போட மாட்டேன்.

மறக்க முடியாத உணவு: நிறைய இடங்களில் நிறைய விதமான உணவுகள் சாப்பிட்டிருக்கிறேன். அநேகமாய்க் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை எல்லாவிதமான சாப்பாடும் சாப்பிட்டிருக்கிறேன். கிழக்குப் பகுதிக்கு மட்டும் இன்னும் போகலை. இருந்தாலும் சாப்பாடுன்னு வரும்போது, நாங்க கல்யாணம் ஆன புதிசிலே ஒரு முறை டவுனுக்கு வந்துட்டுத் திரும்ப நேரம் ஆகவே, அங்கேயே ஆர்மெனியன் வீதியில் உள்ள "பாலிமார்" ஹோட்டலை ஒருத்தர் சொல்ல அங்கே போய்ச் சாப்பிட்டோம். அது மாதிரிச் சாப்பாடு இதுவரை சாப்பிட்டதில்லை. மறுபடி எத்தனையோ முறை டவுன் பக்கம் போனாலும் அங்கே போக முடிந்ததில்லை. அப்புறம் ஹைகோர்ட் எதிரே உள்ள என் அண்ணாவின் பாங்கிற்குச் சென்றால் பக்கத்தில் உள்ள ஈரானியன் கடையில் தேநீரும்,. சமோசாவும் வாங்கிக் கொடுப்பார். சில சமயம் அங்கே பக்கத்தில் உள்ள "ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம்"ல் சாப்பிடுவோம். அதுக்கும் பக்கத்தில் உள்ள"காதி கிராப்டில்" சாயங்கால நேரத்தில் சுண்டலும், சுக்குக் காபியும் கிடைக்கும். இப்போ காதி அதே இடத்தில்தான் இருக்கு. சுண்டலும், சுக்குக் காபியும் இருக்கா தெரியலை.

விரும்பும் இடம்: எங்கே போனாலும் திரும்ப இங்கே தான் வரவேண்டி இருக்கிறது. அதனாலே விரும்பும் இடம்னு எல்லாம் வச்சுக்க முடியலை. இருந்தாலும் மதுரையின் அருகே உள்ள எங்க ஊர் வராக நதிக்கரை ஓரம் உள்ள மேல்மங்கலம் பிடிக்கும். சின்ன வயசிலே சின்னமனூரில் சித்தி வீட்டில் இருந்தப்போ அங்கே உள்ள ஆற்றங்கரையும், சிவன் கோவிலும், பிள்ளையாரும் ரொம்பவே பிடிக்கும்.

அழ வைத்த விஷயங்கள்: நிறையவே இருக்கிறது. நிறையப் பேர் அழ வைத்திருக்கிறார்கள். காரணம் தெரியாமலும் அழுதிருக்கிறேன். ஏமாத்தறது தெரிஞ்சும் ஏமாந்து அழுதிருக்கிறேன். நட்புன்னு சொல்லி முதுகில் குத்தி இருக்காங்க, சொந்தங்களிலும் ஒரு பலி ஆடு ஆக்கப் பட்டிருக்கிறேன். அதெல்லாம் எல்லார் வாழ்விலும் உண்டு. அதனாலே அது வேண்டாம்.

சீர்காழி கோவிந்த ராஜன் பாடும் "சின்னஞ்சிறு பெண்போலே" பாட்டு. அழ வைக்கும் பாட்டு அது. அதுவும் ஒரு முறை ஆடி வீதியில் பாடும்போது, "சிவகங்கைக் குளத்தருகே" என்பதைப் "பொற்றாமரைக் குளத்தருகே" என்றும் "அன்னை சிவகாமி"யை "அன்னை மீனாட்சி" என்றும் பாடினார். அப்போது கிடைத்த standing ovationஐ சமீபத்தில் அருணா சாயிராமிற்குக் கிடைத்ததோடு ஒப்பிடலாம்.

அருணா சாயிராமின் "அபங்க்" கேட்டவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும். அந்த husky voiceல் அவர் தன்னை மறந்து இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு கண்ணை மூடிக் கொண்டு பாடும்போது, அதுவும் மராட்டி நன்கு தெரியுமாதலால், நன்கு பாவத்தோடு பாடுவார். அப்போது வரும் உணர்ச்சிப் பிரவாகத்தை வடிக்க வார்த்தைகள் கிடையாது.

அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை, வதன் கி சிட்டி ஆயி ஹை" எப்போ கேளுங்க, எத்தனை முறை கேளுங்க, எங்கே கேளுங்க, பெருகி வரும் கண்ணீருக்கு அணை போட முடியாது. சீக்கிரம் பப்ளிஷ் செய்யறேன். இதுவும் போயிடப் போகுது. திரும்பிக் கூடப் பார்க்கலை. அப்படியே போடறேன். தப்பு இருந்தா நான் பொறுப்பு இல்லை.

8 comments:

 1. தலைப்பு எல்லாம் நாளைக்குக்கொடுக்கிறேன். சில திருத்தங்களும், பிழைதிருத்தம் தான் வேறே ஒண்ணும் இல்லை. சில இடங்களில் வார்த்தைகள் விழவில்லை. அது எல்லாம் சரி பண்ணணும். நாளைக்குத் தான் இப்போ விடு, ஜூட், டாக்டர் கிட்டேப் போகணும்.

  ReplyDelete
 2. முதல் கமெண்ட் போட்டுட்டு புளியோதரையும் கேசரியும் கேக்குறாங்கன்னு இப்போவெல்லாம் நீங்களே முதல் பின்னூட்டம் நீங்களே போடுறது ரொம்பவே டூ மச் தலைவியே!!!

  ReplyDelete
 3. //இப்போ கார்த்திக் கேட்டது மூன்றாவது முறையாக எழுதுகிறேன்.//

  நான் மூணு மூணா பதிவு போடச் சொன்னா, நீங்க உடம்பு சரி இல்லாத நேரத்துல கூட ஒரே பதிவை மூணு தடவை முயன்று போட்டு இருக்கீங்க..தலைவியே..

  உங்க கடமை உணர்ச்சியையும் இடைவிடா முயற்சியையும் என்னான்னு சொல்லுவேன்

  ReplyDelete
 4. //கல்யாணம் ஆகி வந்த புதிசில் தண்ணீரில் இருந்து எடுத்து விட்ட மீனைப் போல இது எல்லாம் தவித்திருக்கிறேன்//

  நல்ல உவமை மேடம்.. மூணு பதிவுக்கு மூணு பின்னூட்டம் போடனும்ங்கிறது எழுதாத விதி.. அது தான் இத்தனை பின்னூட்டம்..ஹிஹிஹி

  ReplyDelete
 5. என்ன அழகாக(திரும்பிப் பார்க்காமலே ஒரு தவறுமின்றி!!)எழுதி தள்ளீட்டீங்க.உங்களை நான் விமர்சிக்க முடியாது.அனைத்தும் அருமையான தேர்வு.--SKM

  ReplyDelete
 6. சில விடுபட்டுப் போன வார்த்தைகளைச் சேர்த்து இருக்கிறேன். இப்போ கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும்னு நினைக்கிறேன். என்ன ஆச்சு எல்லாருக்கும், நான் திரும்ப வந்தது தெரியலையா? கார்த்திக்கும், SKM-ம் தான் கடமை உணர்ச்சி தவறாம வராங்க. மத்தவங்களுக்கு என்ன ஆச்சு? ம்ம்ம்ம்ம், இருக்கட்டும் ஒரு கை இல்லை, 2 கையும் பார்க்கலாம். வேறே என்ன புதுசாப் பதிவு எழுதறது தான்! :D

  ReplyDelete
 7. நான்..நான்..கேட்டது இதுவே தான்..தான்..மேடம்..


  தலைப்புல என் பேர..பார்த்துட்டு வார்த்தையே வரமாட்டேங்குது சந்தோசத்துல

  ReplyDelete
 8. பதிவுகளின் தலைப்பில் 168, 169, 170, என்று தொடர் எண்களைப் போடவில்லையே ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா ? ( மண்டபத்திலிருந்து யாரேனும் எழுதிக் கொடுக்கிறார்களா ?:-)

  ReplyDelete