நேற்றுக் கார்த்திகைத் தீபத் திருநாள். நேற்றே எழுதி இருக்க வேண்டியது. முடியலை. எல்லார் வீட்டிலும் கார்த்திகைத் தீபம் ஏற்றிக் கொண்டாடி இருப்பீங்க, சிலர் இன்னிக்குக் கொண்டாடுவாங்க, எல்லார் வீட்டிலும் தீபங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிற மாதிரி எல்லார் மனதிலும் அந்த ஒளி சுடர் விட்டுப் பிரகாசிக்கட்டும். "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி"யான அந்த இறைவனின் உடலில் ஒருபாதி கேட்ட உமையவளின் சக்திச் சுடர் எல்லார் இல்லங்களையும், மனதையும் நிறைக்கட்டும். சிவசக்தி ஐக்கியமே இந்த உலகில் மாறாத உண்மை, தத்துவம். அந்தப் பெரும் உண்மையைப் புரிந்து கொள்ளும் திறனை இந்தக் கார்த்திகைத்திருநாள் நம் எல்லாருக்கும் அளிக்கட்டும்.
"வானமெங்கும் பரிதியின் சோதி,
மலைகள் மீதும் பரிதியின் சோதி,
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின்மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி,
மானவன் தன் உள்ளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!" என்று தன் உள்ளத்து இருளைச் சுட்டிக் காட்டுகிற அதே பாரதிதான் பின்னொரு நாளில்,
"அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
ஆங்கோர் காட்டிடைப் பொந்தினில் வைத்தேன்!
வெந்து தணிந்தது காடு- தழல்
மூப்பினில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?" என்று கேட்டுக் கொண்டு மேற்கொண்டு "தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்" என்றும் ஆடிப் பாடுகிறார். நம் மனமாகிய இருண்ட காட்டிற்கும் அது போல் ஒரு ஞான ஒளி தோன்ற வேண்டும். காட்டில் ஏற்படும் தீயானது எப்படிக் காட்டை அழித்துப் பொசுக்குகிறதோ, அது போல் நம் மனத்தில் தோன்றும் இந்த ஒளியானது நம் மனமாகிய காட்டில் உள்ள இருண்ட பாகங்க்ளில் ஒளியைத் தோற்றுவிப்பதோடு நில்லாமல், காட்டில் உள்ள வேண்டாத செடி, கொடி, மரங்களான ஆசை, பொறாமை, தீயவை நினைத்தல், தீயவை செய்தல், தீயவை பார்த்தல் போன்றவற்றையும் அழித்துப் பொசுக்க வேண்டும். பாரதியின் உள்ளத்தில் சக்தியானவள் அந்தப் பொறியை ஏற்படுத்தினாள். அவர் உள்ளத்தில் உள்ள கெட்ட எண்ணங்களால் ஆன காடு அழிந்து ஒழிந்ததை அவர் கூறி ஆனந்தக் கூத்தாடுகிறார். ஆகவே நம் உள்ளத்திலும் சிறு பொறி போல பக்திச் சுடரை ஏற்றினோமானால் அந்த ஒளியானது நம் உள்ளமெங்கும் பரவிப் பிரகாசிக்கும்.
தீயிலே எங்காவது சின்னது, பெரிசு என்று உண்டா? தீ, தீதானே? ஆனால் அதையும் முறையாகப் பயன்படுத்த வேண்டும். நமக்கு உள்ளே ஒளி தருவதோடு இல்லாமல் வேண்டாதவற்றையும் அழித்து ஒழிக்க வேண்டும். அதற்கு நம்முள் இருக்கும் உள்ளுணர்வை, உள்ளொளியை நாம் பக்தி என்னும் பொறியால் ஏற்றினோமானால் நமக்குள்ளும் ஞானம் என்னும் உள்ளொளி பரவும்.நம்மைச் சுற்றியே நாம் பிரகாசத்தை உணர்வோம். அப்புறம் என்ன? நமக்கும் தத்தரிகிட, தத்தரிகிட, தித்தோம்னு குதிக்கத் தோணும். மதுரை ஜில்லாக்காரப் பெண்கள் இந்தக் கார்த்திகைத் திருநாளைத் தங்கள் இல்லம் ஒளிருவது போல் தங்கள் சகோதரர்கள் வாழ்விலும் ஒளி ஏற்றும்படி பிரார்த்தித்துக் கொண்டு கொண்டாடுவார்கள். இன்றளவும் என் சகோதரர்கள் எனக்குக் கார்த்திகைச் சீர் செய்யத் தவறியதில்லை. அது போல எல்லாரும் பிரார்த்தித்துக் கொள்வோம், இவ்வுலகில் உள்ள எல்லாச் சகோதரர்கள் வாழ்விலும் ஒளி வீசும்படிப் பிரார்த்திப்போம்.
"ஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு
பயனுண்டு பக்தியினாலே-நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை."
சகோதரி,
ReplyDeleteநல்ல பதிவு....இந்த திருநாள் சகோதரர்களது நலனுக்காக, மணமான பெண்கள் தங்களது இல்லத்தில் விளக்கேற்றி பிறந்த வீட்டின் நலனுக்காக செய்வதாக ஒரு வழக்கம்....இதனையும் சேர்த்துக்கொள்ளுங்க....
மெளல்ஸ், பங்களூரில் இருந்து கேட்டுக் கொண்டதுக்கு இணங்க எங்க வீட்டு வழக்கத்தையும் சேர்த்து இருக்கிறேன். தெரியாதாவங்க இனிமேல் தெரிந்து கொண்டு தங்கள் சகோதரர்களுக்காகவும் பிரார்த்தித்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDelete