எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 13, 2008

அக்னிப் பிரவேசத்தில் சீதை! கம்பரும், வால்மீகியும்!

அக்னிப் ப்ரவேசத்துக்குத் தயார் ஆவது சீதைதான் என்றும், அவளே லட்சுமணனிடம் அக்னியை மூட்டும்படிச் சொல்லுகின்றாள் எனவும், ராமர் அதற்கு மறுப்புச் சொல்லாததில் இருந்து அவருக்கும் இது சம்மதமே எனவும், வால்மீகி எழுதி இருக்கின்றார். கம்பரும் அதை ஒட்டியே எழுதி இருக்கின்றார். எனினும் வால்மீகி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றையும் சீதை சொல்வதாய்ச் சுட்டிக் காட்டி இருக்கின்றார். ஆனால் கம்பர் இங்கே என்ன எழுதுகின்றார் எனில், மீட்சிப் படலம்: சீதையின் துயர நிலை: பாடல் எண்: 3976

கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்
சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா என்றாள்
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்
"


என்று சொல்கின்றார். ஆனால் கம்பரோ எனில் சீதையை, ராவணன் தூக்கிச் செல்லும்போது, அந்தப் பர்ணசாலையையே பெயர்த்தெடுத்ததாய்த் தான் சொல்லுகின்றார். வால்மீகி, ராவணன் தொட்டுத் தூக்கித் தன் தொடையில் இடுக்கிக் கொண்டு சென்றதாகவே சொல்லிவிடுகின்றார். இவ்வாறு இருக்கும்போது வால்மீகி சொல்லும்போது, சீதை, மனம், வாக்கு, காயம் என்ற மூன்றையும் குறிப்பிட்டுச் சொல்லுவதாயே சொல்லுகின்றார். ஆனால் கம்பரோ எனில், "மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்" என்று சீதை சொல்லுவதாய்ச் சொல்கின்றார். இந்த வாக்கே பெரும்பாலும் நம் தமிழறிந்த நல்லோர்களால் ஏற்கப் பட்டிருப்பதால் இது என்ன? இவ்வாறு சீதை சொல்லி இருப்பதால் உடலால் சீதை கெட்டிருப்பாள் என்றல்லவோ எண்ண நேரிடுகின்றது? என மனதுக்குள்ளாகவாவது எண்ணுகின்றனர் அல்லவா?

ஆனால் இந்தப் புதிரைத் தான் பேராசிரியர் அ.சீனிவாச ராகவன் அவர்கள் விடுவித்ததாய், நீதிபதி திரு மகாராஜன் கூறுகின்றார். அவர் கூறுவதாவது:
"சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் அதுவரை விடுபடாத ஒரு புதிரை பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் அவர்கள் விடிவித்தார். அதுவரை பண்டிதமணி, சோமசுந்தரபாரதி போன்றவர்களால் கூடத் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட புதிர் அது. அக்னி பிரவேசத்தின்போது சீதை தீயை வலம் வந்து,
"மனத்தினால் வாக்கால், மறுவுற்றேனெனில்
சினத்தினால் சுடுதியால் தீச்செல்வா" என்கின்றாள். அவள் ஏன் மெய்யால் என்று சொல்லவில்லை என்பதுதான் புதிர்.
If I have been sullied
In mind or speech,
Burn me, Oh, Fire-God,
With all thy ire" என்பது பேராசிரியரின் ஆங்கில ஆக்கம். விடை காண முடியாமல் அறிஞர்கள் திணறிய இந்தப் புதிருக்குத் தீர்வை அந்தக் கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் சொன்னார் பேராசிரியர்.

ஷேக்ஸ்பியரின் நாடகமான ஒதெல்லோவில் வில்லன் இயகோ ஒதெல்லோ மனதில் சந்தேகத்தைத் தோற்றுவித்து விடுகின்றான். அதைக் கேட்டுவிட்டு ஒதெல்லோ டெஸ்டிமோனோவைச் சொல்லத் தகாத வார்த்தையால் திட்டுகின்றான். அப்பொழுது ஒன்றும் தெரியாதவன் போல் இயாகோ வருகிறான். அவனிடம் டெஸ்டிமோனா கேட்கிறாள்:
"எனக்கு அந்தப் பெயரா இயாகோ?"
எந்தப் பெயர் ராணி?"
இதோ இவள் சொல்கிறாளே நான் அது என்று அவர் சொன்னாரென்று."


இதோ கீழே டெஸ்டிமோனாவின் வார்த்தைகளும், ஒதெல்லோ அவளைச் சொன்ன வார்த்தையும்.
Impudent strumpet!

DESDEMONA DESDEMONA
I cannot tell. Those that do teach young babes
Do it with gentle means and easy tasks:
He might have chid me so; for, in good faith,
I am a child to chiding.

IAGO
What's the matter, lady?

EMILIA
Alas, Iago, my lord hath so bewhored her.
Thrown such despite and heavy terms upon her,
As true hearts cannot bear.

DESDEMONA
Am I that name, Iago?

IAGO
What name, fair lady?

DESDEMONA
Such as she says my lord did say I was.

EMILIA
He call'd her whore: a beggar in his drink
Could not have laid such terms upon his callat.

ஒதெல்லோ சொன்னதாகச் சொல்லப் படும் அந்தச் சொல்லைக் கூடச் சொல்லுவதற்கு டெஸ்டிமோனோவின் உயர்குடிப் பிறப்பும், அவளுடைய கற்பும் தடுக்கின்றது. சீதைக்கும் அதே நிலைமைதான். "மெய்" தூய்மை பற்றிய களங்கம் மக்களால் கற்பனை செய்து பார்க்க இயலும். கதை கட்டிவிடவும் முடியும். எனவே அதைச் சொல்லக் கூசுகின்றாள் சீதை. இந்தத் தீர்வை அங்கே இருந்த பேராசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர். இது இலந்தை ராமசாமி என்பவரால் எழுதப் பட்ட "இலக்கியச் சீனி அ.சீ.ரா. வாழ்வும், வாக்கும் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது.

மேலும் சீதைக்கு ராமன் மனது தெரியாமலோ,ராமனுக்கு சீதையின் மனம் தெரியாமலோ, அல்லது அவள் கற்பிற் சிறந்தவள் எனத் தெரியாமலோ இல்லை. எனினும், உலகத்தார் கண் முன்னால் சீதை தன் கற்பை நிரூபிக்கவேண்டும் எனவே ராமன் விரும்பி இருக்கின்றான். சீதையும் தன் கணவனின் மனக் குறிப்பை அறிந்து அதை நிறைவேற்றத் துணிந்திருக்கிறாள். இதையே சீதை நெருப்பிலிருந்து மாசுபடாமல் வெளியே வந்தபோது ராமரும் தன்னிலை விளக்கமாயும் அளிக்கின்றார். எனினும் ஒரு மானுடனாகவே வாழ்ந்த ராமர் இந்த இடத்திலும் மானுடனாகவே, சாதாரண மனிதன் எவ்வாறு தன் மனைவியிடம் கோபத்துடனும், அதிகாரத்துடனும், கடுமையாகவும் நடப்பானோ அவ்வாறே நடந்து, தான் மனிதனாய் இருப்பதில் இருந்து சற்றும் மாறவில்லை என நிரூபித்திருக்கின்றார் என்றும் கொள்ளலாம்.

இலந்தை ராமசாமி எழுதிய இந்தப் புத்தகத்தின் மின்னாக்கத்தை எனக்குக் கொடுத்து உதவிய முத்தமிழ்க்குழும சகோதரருக்கும், ஒதெல்லோ நாடகப் பிரதியைக் கொடுத்து உதவிய முத்தமிழ்க் குழும சகோதரருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

6 comments:

  1. இராமாயண அக்னிப் பிரவேசம் சீதைக்கு மட்டுமல்ல கீதாம்மா!
    படிப்பவர் நம் அனைவருக்குமே அக்னிப் பிரேவசம் தான்!

    ஆயிரம் நியாயங்கள் இருப்பினும்....
    இளையவரை முன்பு அன்னை வாயினால் சுட்ட வடுவுக்கு, இப்போது தீயினால் சுட்ட புண், உள் ஆறுமா என்பது.....காலம் காலமாகப் பேசப்பட்டுக் கொண்டே தான் இருக்கும்!

    அண்ணலின் நிலவில் உள்ள சில கறைகளில் இதுவும் ஒன்றே!

    I liked the comparison from Othello! Right punch at Right time :-)

    //ஒதெல்லோ சொன்னதாகச் சொல்லப் படும் அந்தச் சொல்லைக் கூடச் சொல்லுவதற்கு டெஸ்டிமோனோவின் உயர்குடிப் பிறப்பும், அவளுடைய கற்பும் தடுக்கின்றது//

    டெஸ்டிமோனோவின் "நற்-குடிப் பிறப்பும்" என்று மாற்றி விட்டால் நலம்! சொற்களைப் பிடித்துக் கொள்வோர் இங்கு நிறைய! :-)

    ReplyDelete
  2. ஆமாம் கீதம்மா! ராமர் மானுடனாகவே வாழ்ந்தார் என்பதை கூறும் நிகழ்வகளில் இதுவும் ஒன்று,
    கம்பராமாயணத்திற்கும் வால்மிகி ராமாயணத்திற்குமுள்ள முக்கிய வேறுபாட்டை சொன்னது நன்று..

    ReplyDelete
  3. நல்ல விளக்கம்.

    மேலும் ஒரு பரிந்துரை.
    கம்பரும் வால்மீகியும்-ம.பொ.சி.

    படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  4. //ஒதெல்லோ டெஸ்டிமோனோவைச் சொல்லத் தகாத வார்த்தையால் திட்டுகின்றான். அப்பொழுது ஒன்றும் தெரியாதவன் போல் இயாகோ வருகிறான். அவனிடம் டெஸ்டிமோனா கேட்கிறாள்:
    "எனக்கு அந்தப் பெயரா இயாகோ?"
    எந்தப் பெயர் ராணி?"
    இதோ இவள் சொல்கிறாளே நான் அது என்று அவர் சொன்னாரென்று."//
    //ஒதெல்லோ சொன்னதாகச் சொல்லப் படும் அந்தச் சொல்லைக் கூடச் சொல்லுவதற்கு டெஸ்டிமோனோவின் உயர்குடிப் பிறப்பும், அவளுடைய கற்பும் தடுக்கின்றது.//

    மிகவும் ரசித்தேன். இதனை சீதையின் நிலையோடு ஒப்பிட்டு பார்த்த விதம் அருமை.

    ReplyDelete
  5. காலப் போக்கில் ,சீதா சிலகாலம் மாற்றான் நாட்டில் வசித்தவள் தானே என்ற இழி எண்ணம் மக்கள் மனதில் எழுவதை தவிர்க்கவும்,

    சீதை,காலம் முழுவதும் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ? என மனத்தீயால் வெந்துக்கொண்டிருப்பதை விட,இப்படி ஒரே ஒரு முறை அக்னிபிரவேசம் செய்து தன்னை நிருப்பிக்க எடுத்த முடிவு சரிதான்.

    அதன்பின் இப்படிப்பட்ட சந்தேகபேய்கள் உருவாகவே இடமில்லாமல் போனது இல்லையா?

    ReplyDelete
  6. //அக்னிப் ப்ரவேசத்துக்குத் தயார் ஆவது சீதைதான் என்றும், அவளே லட்சுமணனிடம் அக்னியை மூட்டும்படிச் சொல்லுகின்றாள் எனவும், ராமர் அதற்கு மறுப்புச் சொல்லாததில் இருந்து அவருக்கும் இது சம்மதமே எனவும்,//

    இராமன் சீதையை தடுத்திருந்தால்,தீ சீதையை சுட்டெரிக்கும் என நினைத்துதான் கருணையே உருவான இராமன் மன்னித்து தடுத்தான் எனவும் கூறுவர்.

    தன்னை நிருபிக்க(மக்களுக்கு)
    அக்னிப் ப்ரவேசத்துக்குத் தயார் ஆவது சீதைதான் எனும்போது, அவள் மனதில்,மற்றவர்கள் என்னென்ன நினைத்திருப்பார்களோ என்ற தர்ம சங்கடமான உணர்வு நீங்கவும், தன் சீதையின் கற்பிற்க்கு முன் தீநாக்குகள் தோற்றுப் போகும் என்ற சீதையின் மீதான அதீத நம்பிக்கையிலும்தான் ராமன் தடை சொல்லவில்லை என எடுத்துக்கொள்ளலாமே.

    ReplyDelete