எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 29, 2008

தெரியாத் தனமாய்க் கேட்டதுக்கு உஷாவுக்கு ஒரு தண்டனை!


நாவல்களோடு உங்கள் அனுபவம்

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

முதலில் படிச்சது நாவல் என்ற வகையில் பார்த்தால் கல்கியின் "பொன்னியின் செல்வன்" தான். ஆனால் முதல் பாகம் மட்டுமே படிச்சேன்.


.2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?

சொன்னால் நம்ப மாட்டீங்க, ஆனால் மூன்றாவது படிக்கும்போது ஆரம்பித்தேன். 7 வயசு தான் அப்போ. :))))))), தமிழ் பழகினதுமே கொஞ்சம் கொஞ்சமாய்ப் படிக்க ஆரம்பிச்சு, நல்ல சரளமாப் படிக்கப் பழக்கம் வந்ததுக்கு அப்போது வந்த தரமான வாரப் பத்திரிகைகள் தான் காரணம்.


3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

சரித்திரம், நகைச்சுவைக்கு எப்போவும் முதலிடம்.


4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அநேகமாய் எழுத்தாளர் யாருனு பார்த்தே!5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

நாவல்களுக்குப் பெரும்பாலும் ஒரு முடிவு சொல்லப் பட்டு விடுகின்றது. சிறுகதை என்றால் முடிவு தொக்கி நிற்கும். நாமாய்ப் புரிஞ்சுக்கணும்.

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

கதையின் மையக்கரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தைச் சுற்றியே பின்னப் படுமே!

7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

கதையின் தன்மையைப் பொறுத்தும் நடக்கும் கால கட்டத்தைப் பொறுத்தும், கதைக்களத்தைப் பொறுத்தும் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

பக்கங்கள் இருக்கும் அளவுக்கு விஷயம் சுவையாக இருக்கணுமேனு கவலை வரும்.


9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

அப்படி எல்லாம் போனதில்லை. நடப்பது நடக்கும். எப்படி நம் வாழ்க்கையில் விதி விளையாடுமோ அதே தானே நாவலின் பாத்திரங்களுக்கும். விதிப்படி நடந்தே தீரும். :))))) முடிவை முன்னேயே தெரிஞ்சுக்கறதிலே சுவாரசியமும் குறையுமே. அதை இழக்க விரும்ப மாட்டேன்.10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?

இதுக்கெல்லாம் நாள், நட்சத்திரம் எதுக்கு? வேலை எதுவும் இல்லாத எல்லா நேரமும் நல்ல நேரமே! ஆனால் வேலையை முடிச்சுட்டு நிதானமா உட்காரணும். இல்லைனா ரசிக்க முடியாது.


11. பாதி வரைப் படித்து,முடிக்காமல் போன நாவல்கள் எவை?

வம்பு எதுக்கு?


12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

அது இருக்கு நிறையவே.13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?

விஷ்ணுபுரம்- ஜெயமோகன். கையிலே கிடைச்சது. கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாங்க ஹூஸ்டன் மீனாட்சி கோயில் நூலகத்தில். இன்னும் அந்த வருத்தம் அடங்கலை! வாங்கிப் படிக்க முடியும்னு தோணலை! :(


14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

1.அமரதாரா - கல்கி

2.பொன்னியின் செல்வன் -கல்கி

3.ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்

4. மிஸ்டர் வேதாந்தம் - தேவன்
5.லட்சுமி கடாசம் - தேவன், தேவனின் அனைத்து நாவல்களுமே பிடிக்கும்.
6.அமுதமாகி வருக - ராஜம் கிருஷ்ணன்
7. மலர்கள் - ராஜம் கிருஷ்ணன்
8.குறிஞ்சித் தேன், வளைக்கரம், கரிப்பு மணிகள் -ராஜம் கிருஷ்ணன்

9.திரைக்குப் பின் - ஆர்வி, மிக சமீபத்திலேயே ஆர்வி அவர்களைப் பார்க்க நேர்ந்தது. அவர் கதைகள் பற்றிப் பேசியதும், ரொம்பவே சந்தோஷம் அடைந்தார். இயல்பாகவே உற்சாகமான மனிதர் :(

நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், பொன் விலங்கு. சித்தப்பா வீட்டில் முதல்முறை அவரைப் பார்த்தப்போ ரொம்பவே சந்தோஷமாயும், ஆச்சரியமாயும் இருந்தது.

தி.ஜானகிராமனின் மலர்மஞ்சம், அம்மா வந்தாள். அம்மா வந்தாளைச் சித்தப்பா மொழிபெயர்த்து இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் போடும்போது தட்டச்சு செய்து கொடுத்திருக்கின்றேன் சிலமுறைகள். சித்தப்பாவின் நாவல்களில் முக்கியமாய் பதினெட்டாவது அட்சக் கோடும், இப்போ சமீபத்தில் கொடுத்த மானசரோவரும் பிடித்தது.

நீல.பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள். இதிலே தலைமுறைகள் படிக்கும்போது 20 வயசு, முதல்முதலாய்த் திருமணம் ஆகி மூன்றுவருஷச் சென்னை வாசத்துக்கு அப்புறம் ராஜஸ்தானுக்குப் போயிருந்தப்போ பொழுதுபோக்கு என எடுத்துச் சென்ற இந்தப் புத்தகம் படிச்சுட்டு, பலநாள் தூங்காமல் நான் பட்ட அவஸ்தை! மனவேதனை தாளாமல் பலநாட்கள் ராத்திரி எழுந்து உட்கார்ந்து அழுதிருக்கேன். இப்போக் கூட கதையின் முடிவு மனதை உலுக்கும். :((((

கி.ராஜநாராயணன் அவர்களின் கோபல்ல கிராமம். பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

10.சுஜாதாவின் சில நாவல்கள். குறிப்பாய் 24 ரூபாய் தீவு ( பெயர் இம்முறை சரியா எழுதி இருக்கேனில்லை லதா??? :P., அப்புறம் இன்னொரு கதை, சுஜாதா எழுதியதே, பெயர் நினைவில் இல்லை. கதாநாயகன் வெளிநாடு சென்றிருக்கும்போது மனைவியும், அவன் ஒரே பெண்ணும் விபத்தில் இறக்க, அவர்கள் பிரிவில் தவிக்கும் நாயகன், பல முயற்சிகளுக்குப் பின்னர் ஊரை விட்டுச் செல்ல நினைத்து ரயிலில் ஏறும்போது அவன் பெண் வயதே ஆன ஒரு பிச்சை எடுக்கும் குழந்தையைப் பார்த்து விட்டு அந்தக் குழந்தையை எடுத்து வந்து வளர்க்க ஆரம்பிப்பான். கதையின் மையக்கருவே இதுதான் என்றாலும், எடுத்த எடுப்பில் இதைச் சொல்லாமல் கடைசியில் சொல்லி இருக்கும் உத்தி நன்றாய் இருக்கும். )இன்னும் பல நாவல்கள் இருக்கின்றன. எழுத்தாளர்களும் இருக்கின்றனர்.

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

தாகூரின் நாவல் ஆன "புயல்", சரத்சந்திரரின் நாவல்கள், முக்கியமாய் சாவித்திரி, பங்கிம் சந்திர சட்டர்ஜியின் நாவல்கள், யுகாந்தர் குறிப்பாய், வி.எஸ்.காண்டேகரின் யயாதி 1, யயாதி- 2, கருகிய மொட்டு, இன்னும் த.நா.குமாராசாமி, த.நா.சேனாபதி இருவரும் மொழி பெயர்த்து வெளியிட்ட பல நாவல்கள் இருக்கின்றன. மலையாளத்தில் தகழியின் செம்மீன், நாலுகெட்டு வீடு, (வாசுதேவன் நாயர்), கன்னடத்தில் மாதவையா, (மொழிபெயர்ப்பு கி.சரஸ்வதி??), Manohar Malgoankar. R.K.Narayanan's all novels. Especially Guide, Read in both Tamil and English. Wuthering Heights.


டிஸ்கி: சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிறதுனு சொல்றது இதுதான்னு இப்போ நுனிப்புல் உஷாவுக்குப் புரியும்னு நம்பறேன். இன்னும் இருக்கே!! நாளைக்கோ அல்லது நாளன்னைக்கோ தொடருமே! என்ன செய்வீங்க??

20 comments:

 1. ஒரு முக்கியமான இலக்கியக் கட்டுரை எழுதி இருக்கோமே தமிழ்மணத்திலே சேர்க்கலாம்னு போனால் காலம்பர நீ எழுதினது எதுவுமே புதுசு இல்லைனு சொல்லிடுச்சு, இப்போத் திருப்பி பப்ளிஷ் கொடுத்துட்டுப் போனா இந்த மெசேஜ் வருது! ஏன்??? என்ன செய்யணும் இதுக்கு? இது முதல் முறை அல்ல.

  Can't create a new thread (errno 12); if you are not out of available memory, you can consult the manual for a possible OS-dependent bug

  ReplyDelete
 2. கீதா, சித்தப்பாவைப் பற்றி விவரமாய் எழுத வேண்டும்.ஆனால் ஏற்பட போகும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை :-)
  தலைமுறைகள் வாசித்தப்பொழுது வயது பதினைந்து இருக்கலாம். ஆனால் இன்னும் நினைவில் இருக்கு. படித்ததில் பிடித்தது வரிசையில் டாப் டென்னில் வரும்.
  நன்றி, தொடருங்கள்

  ReplyDelete
 3. 'Niramatra Vanavil' is the Sujatha novel that you have mentioned in your post. It is one of my favourites too.

  - Ramya.

  ReplyDelete
 4. வாங்க உஷா, பொறுமையாப் படிச்சதுக்கு நன்றி. ஜெயமோகன் எழுதி இருப்பதை (சித்தப்பா மாட்டர்தான்) படிச்சேன் நானும். ம்ம்ம்ம்ம்????? எனக்கு 10 வயசில் இருந்து அவர் சித்தப்பா. அவ்வளவு தான் சொல்ல முடியும். மற்றபடி நீங்கள் எழுதுங்கள், படிக்கிறேன். வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. "நிறமற்ற வானவில்?" ம்ம்ம்ம்ம்??நினைவில் இல்லை, ரம்யா, இருக்கலாம், ஆனால் கதைக்கரு மட்டும் மனதில் தங்கி விட்டது. ரொம்ப நன்றி, வந்ததுக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 6. சித்தப்புவைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க கீதா.


  பூரணியின் மஞ்சள் பூசுன பாதங்களைப் புறாவாக வர்ணிச்சது படிச்சுட்டு காலெல்லாம் மஞ்சள் தடவி மகிழ்ந்தது, அது எல்லாப் பாவாடைக் கரைகளிலும் படிஞ்சுபோய்ச் சித்திகிட்டே திட்டு வாங்குனது எல்லாம் நினைவுக்கு வருது:-)

  ReplyDelete
 7. வாங்க துளசி, பூரணியைப் பத்தி மட்டுமில்லை, பொன்விலங்கு நாவலிலும் நா.பா. கதாநாயகியான மோகினியை வர்ணித்திருக்கும் விதம் அசர அடித்தது. "தின்பதற்கு மட்டுமல்லாமல், தின்னப்படுவதற்கென அமைந்த பற்கள்" என்றும், she walks in beauty like the night of cloudless nights and stary skies என்ற கவிதையின் உதாரணமும் இன்னும் மறக்க முடியவில்லை. அதுவும் ஆண்டாளின் வாசகம் ஆன "மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே" என்ற வரிகளை மோகினி அடிக்கடி பயன்படுத்துவதையும் கதையில் எழுதி இருப்பார். படிச்சுட்டு அப்பாடா! இப்படியும் இருக்க முடியுமா என்று நினைத்து மறுகினதும், "செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" என்ற சங்கப் பாடல் பற்றிய பாடம் தற்செயலாகப் பள்ளியில் தமிழ் வகுப்பில் வந்து சேர, அதன் அர்த்தத்தை ஆசிரியை விளக்கும் முன்னரே நான் எழுந்து விளக்க, வகுப்பே சிரிப்பில் அதிர!! அது ஒரு பொற்காலம்!!!!

  ReplyDelete
 8. http://jeyamohan.in/?p=712

  இது உஷா கொடுத்த சுட்டி, இங்கே ஜெயமோகன் எழுதி இருக்கார் சித்தப்பாவைப் பத்தி. உஷாவும் எழுதப் போறேன்னு மிரட்டி இருக்காங்க, பார்த்தீங்க இல்லை? அவங்க எழுதட்டும், நீங்களும் இங்கே போய்ப் பாருங்க, அப்புறமாய் நானும் ஏதோ கிறுக்கலாமானு பார்க்கிறேனே! ஆனால் உறவு என்ற அடிப்படையில் அமையும் என்பதே என் தயக்கம்.

  ReplyDelete
 9. அட!!!!!

  கம்பன் வீட்டு வழித்தோன்றல்களா?


  (கட்டுத்தறின்னு சொன்னா நல்லா இருக்காதுல்லெ)

  ஆஹா......

  எழுத்தோட வீச்சு இப்போக் கொஞ்சமாப் புரியுது!!!!

  ReplyDelete
 10. கீதா,

  தாமதமாக வருவதற்கு வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். புதுசா யானைக்குட்டி வேற வந்திருக்கே:)
  நாம்மெல்லாம் புத்தகம் பற்றி எழுதறோமே ,ஜாம்பவான்கள் எழுதலியேன்னு நினைத்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகலை.
  படித்தது ஒன்று, அதை அழகா விவரித்தது இன்னொன்று. இந்த எழுத்துக்கும் வணக்கம்.

  ReplyDelete
 11. ஜெயமோஹன்ன் ஏழுதி இருப்பதையும் படித்தேன். அசோகமித்திரன் சாரை நான் பீச்சோரமா நடை போகும்போதும் பார்த்திருக்கேன்.
  ஆனால் உடனே நெருங்க முடியாதபடி வெகு தயக்கமாக இருக்கும்.

  ஞானவான்.

  ReplyDelete
 12. அதெல்லாம் கம்பன் வீட்டு வழித் தோன்றல் எல்லாம் இல்லை துளசி, அம்மாவழிச் சித்தப்பா, அம்மாவின் தங்கை கணவர். அப்பா வழியிலே யாரும் எழுதினது இல்லை எனக்குத் தெரிஞ்சு இலக்கியம்???? ஹிஹிஹி, பின்னே நம்ம எழுதறது என்னவாம்?? எழுத ஆரம்பிச்சது பள்ளி நாட்களிலேயே நான் தான். அப்புறமா இப்போ எங்க அண்ணா பெண்ணு, நான் போட்ட கோட்டிலே பெரிய நால்வழிச் சாலையே போட்டுட்டு இருக்கா!

  ReplyDelete
 13. நான் போட்ட கோடு பள்ளி நாட்களிலேயே அப்பா கண்டிப்பால் அழிஞ்சு போக, இப்போ புதுசாப் போட முயல்கிறேன். :(((((

  ReplyDelete
 14. வாங்க வல்லி, ஜாம்பவானா?? யாரு அது கரடினு சொல்றீங்க?? :P::P

  சித்தப்பா ஒண்ணும் அப்படி எல்லாம் பேச மாட்டார்னு இல்லை, தாராளமாய்ப் போய்ப் பேசலாம். மீண்டும் பார்க்க நேரிட்டால் முயற்சி செய்யுங்க. யானைக்குட்டி நம்ம ஃபேவரிட் ஆச்சே?? துளசி வேறே உயில் எழுதிட்டாங்களே???

  ReplyDelete
 15. கீதா,

  தாமதமாக வருவதற்கு வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். புதுசா யானைக்குட்டி வேற வந்திருக்கே:)
  நாம்மெல்லாம் புத்தகம் பற்றி எழுதறோமே ,ஜாம்பவான்கள் எழுதலியேன்னு நினைத்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகலை.
  படித்தது ஒன்று, அதை அழகா விவரித்தது இன்னொன்று. இந்த எழுத்துக்கும் வணக்கம்.

  ReplyDelete
 16. அந்தச் சின்ன கார்டூன் படிக்க முடியலை. தேவன் புத்தகங்கள் பத்து வாங்கிட்டு வந்தேன் இந்த முறை! :))

  ReplyDelete
 17. //சுஜாதாவின் சில நாவல்கள். குறிப்பாய் 24 ரூபாய் தீவு ( பெயர் இம்முறை சரியா எழுதி இருக்கேனில்லை லதா??? :P., //
  உங்களின் நினைவாற்றலை வியக்கிறேன்.
  ;-)

  ReplyDelete
 18. //அப்புறமா இப்போ எங்க அண்ணா பெண்ணு, நான் போட்ட கோட்டிலே பெரிய நால்வழிச் சாலையே போட்டுட்டு இருக்கா! //

  யார் யார் யார் அவர் யாரோ?
  ஊர் பேர் தான் சொல்லக்கூடாதோ.....????

  இப்படிப் பொடிவச்சு எழுதறதே பழக்கமாப் போச்சே.......

  பட்னு தேங்காய் உடைக்கிறமாதிரி பளிச்சுன்னு சொல்லக்கூடாதா?

  யார் யார் யார்?

  ReplyDelete
 19. @லதா, வாங்க, எங்கே இருந்தாலும் வருவீங்கனு எதிர்பார்த்தேன், வந்ததுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  இ.கொ. சரியாப் போச்சு போங்க, இப்போத் தான் தேவனா?? இத்தனை நாள் என்ன பண்ணினீங்க? :P சின்ன கார்ட்டூன் உங்களாலேயே படிக்க முடியலை?? ஹிஹிஹி, ரொம்ப சந்தோஷமா இருக்கே!! :)))))

  ReplyDelete
 20. துளசி, ரகசியமெல்ல்லாம் ஒண்ணும் இல்லை, அதான் சிஃபியில் இருக்கீங்க இல்லை?? அதிலே எழுதிட்டு இருக்கா, ப்ளாக் ஒண்ணும் வச்சுக்கலை, கல்லூரியில் கடைசி வருஷம், ஜனனிங்கற பெயரிலே எழுதறாளே?? பரிசு கூட வந்திருக்கு! ஃபோட்டோவும் வரும். இப்போக் கூட ஒரு பேட்டி எடுத்து எழுதி இருந்தாளே??? பர்வீன் சுல்தானாவா??? ம்ம்ம்ம்ம்??? யாருனு நினைவில்லை!

  ReplyDelete