எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 16, 2016

புளிவிட்ட கீரையும், பொரிச்ச குழம்பும்!

நெல்லைத் தமிழன் புளிவிட்ட கீரையைப் பத்தி ஏக்கத்துடன் சொல்லி இருப்பதைப் படிச்சதும், இங்கே அதைக் குறித்துப் பகிரலாம்னு நினைச்சேன். ஆனால் பாருங்க, என்னமோ தெரியலை, எழுத மனசே வரலை! ரொம்பவே தள்ளிப் போட்டுட்டு இருந்தேன். அப்புறமா ஒரு வழியா எழுதறதுக்கு மனோநிலை ஒத்துழைக்க, இப்போ எழுத வந்தேன்.

புளிவிட்ட கீரை எங்க வீட்டிலே இரண்டு விதமாப் பண்ணுவாங்க. ஒண்ணு சாப்பாட்டுக்கு சைட் டிஷாகத் தொட்டுக் கொள்ள. அதுக்கு முக்கியமா சாதத்தோடு பிசைந்து சாப்பிடப் பொரிச்ச குழம்பு பண்ணணும். பொரிச்ச குழம்பும், புளிவிட்ட கீரையும் அருமையான காம்பினேஷன், தென் மாவட்டங்களிலே! இன்னொரு விதமான புளிவிட்ட கீரை சாதத்திலேயே போட்டுப் பிசைந்து சாப்பிடுவது. இரண்டுக்கும் வித்தியாசம் துவரம் பருப்புச் சேர்ப்பது மட்டுமே!

கீரை முளைக்கீரையா இருந்தால் நல்லா இருக்கும். இல்லைனா அரைக்கீரையும் பரவாயில்லை. சிறுகீரையில் பண்ணியதில்லை. பாலக்கில் கொஞ்சம் பரவாயில்லை ரகம். மற்றக் கீரைகளில் மணத்தக்காளிக்கீரையில் பொரிச்ச குழம்பு தான் நல்லா இருக்கு. ஆகவே முளைக்கீரை அல்லது அரைக்கீரை எடுத்துக்குங்க! கட்டு பெரிதாக இருந்தால் கீரை நிறைய இருக்கும். ஆகவே வீட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்றாற்போல் கீரையைத் தயார் செய்துக்கணும். நான்கு பேருக்கான சாமான்கள்:

சின்னக் கீரைக்கட்டு ஒன்று நன்கு ஆய்ந்து பொடியாக நறுக்கவும். கீரைத்தண்டுகள் இளசாக இருந்தால் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். கீரை இலைகளும் பெரிசாக இருந்து தண்டும் கனமாக இருந்தால் தண்டைத் தனியாக வைச்சுடவும், அப்புறமா ஒரு நாள் சாம்பாரிலே போடலாம் அல்லது பொரிச்ச குழம்போ, மோர்க்கூட்டோ, மிளகூட்டல் மாதிரியோ செய்துக்கலாம். இப்படி நறுக்கிய கீரை சுமார் மூன்று அல்லது நான்கு கிண்ணம் வரும்.
அரைக்கீரை க்கான பட முடிவு
இதற்குத் தேவையான உப்பு, சாம்பார்ப் பொடி, பச்சைமிளகாய் ஒன்று, பெருங்காயம் சிறிதளவு. தொட்டுக்கப் பண்ணும் புளிக்கீரைனால் அதற்குப் பருப்புப் போட வேண்டாம். பிசைந்து சாப்பிடுவது எனில் பருப்புத் தேவை. ஒரு சின்னக் கிண்ணம் குழைய வேக வைத்த துவரம்பருப்பு. புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக் கரைத்துச் சாறு எடுத்துக் கொள்ளவும். அரைக்கிண்ணம் புளிச் சாறு இருக்கலாம்.
முளைக்கீரை க்கான பட முடிவு


கீரையை நன்கு கழுவி அலசி வடிகட்டிக் கல்சட்டி அல்லது உருளி அல்லது உங்கள் வழக்கமான நான் ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு அரைக் கிண்ணம் நீர் விட்டு வேக வைக்கவும். வேகும்போதே பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கீரையில் சேர்க்கவும்.  கீரையை வேக வைக்கையில் மேலே தட்டுப் போட்டு மூடக் கூடாது! கீரை நன்கு வெந்ததும் மத்தால் மசிக்கவும். இன்னும் சிறிது நேரம் வேகவிடவும். மீண்டும் மத்தால் நன்கு மசிக்கவும். கீரை நன்கு மசித்ததும் புளிச்சாறைச் சேர்த்து உப்பு, சாம்பார்ப் பொடி, பெருங்காயம் சேர்க்கவும். நன்கு கொதிக்கட்டும். கெட்டிப்பட்டு வருகையில் வெந்த துவரம்பருப்பைச் சேர்க்கவும். கீரை ரொம்பவே நீர்க்க சாம்பார் மாதிரியும் இல்லாமல் அதே சமயம் ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும்.  பின்னர் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம், உபருப்பு, ஒரு மிவத்தல் தாளிக்கவும். குழம்புக் கருவடாம் இருந்தால் அதையும் எண்ணெயில் நன்கு வறுத்துச் சேர்க்கலாம். பொரிச்ச குழம்புக்குத் தொட்டுக்கப் பண்ணினால் துவரம் பருப்புத் தவிர மற்றவை சேர்த்துப் பண்ணி இதே போல் தாளிக்கலாம்.

பொரிச்ச குழம்பு: இதற்குப் பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு அல்லது இரண்டும் கலந்து தேவைப்படும். குழைந்த பருப்பு அரைக்கிண்ணம்.  காய்கள், புடலை, முருங்கை, கொத்தவரை, அவரை, கத்திரிக்காய், கீரைத்தண்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்த காய்களாக நறுக்கியது இரண்டு கிண்ணம். கலந்த காய்களில் அவரை+காரட் சேர்க்கலாம். புடலை+காரட் சேர்க்கலாம். கத்திரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றைத் தனியே சமைத்தால் தான் ருசி நன்றாக இருக்கும். கலக்கப் பிடிக்கும்னா கலந்துக்கலாம். ஒரு சிலர் சௌசௌவையும் காரட், பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்துப் பொரிச்ச குழம்பு செய்வார்கள்.

எல்லாவற்றுக்கும் அரைத்து விடும் முறை ஒன்றே தான். தே எண்ணெயில் காய்களுக்குத் தகுந்தாற்போல் ஒன்றிலிருந்து இரண்டு மி.வத்தல் ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, முக்கால் டீஸ்பூன் மிளகு, பெருங்காயம் தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை நன்கு வறுத்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

மேற்சொன்ன காய்களைக் கொஞ்சம் போல் எண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு வேக விடவும். தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்கு காய்கள் வெந்ததும் வேக விட்ட பருப்பைச் சேர்த்து அரைத்த விழுதையும் போட்டுக் கலக்கவும். ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு கொதி வந்ததும் கீழே இறக்கிக் கொண்டு, தே. எண்ணெயில் கடுகு, உபருப்பு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, கருகப்பிலை, ஒரு மிவத்தல் போன்றவற்றைத் தாளிக்க வேண்டும். இதில் கொண்டைக்கடலையைக் காய் வேகவிடும்போதே எண்ணெயில் வறுத்துச் சேர்க்கலாம். வேர்க்கடலையையும் காய்கள் வேகும்போதே சேர்த்து வேக விடலாம். இதற்கு ஜீரகம் வைத்து அரைக்கக் கூடாது. அரைத்தால் ருசி மாறும் என்பதோடு மொளகூட்டலுக்கும் இதுக்கும் வேறுபாடு தெரியாமல் போயிடும்! :)  இதுக்குத் தொட்டுக்கத் தான் பருப்புப் போடாத புளிவிட்ட கீரை! இதிலும் குழம்புக்கருவடாம் வறுத்துச் சேர்க்கலாம்.

15 comments:

  1. நல்ல குறிப்புகள். குறிப்பாக கீரை வேகும்போது தட்டு போட்டு மூடக் கூடாது என்பது போன்ற குறிப்புகள். ஆனால் ஏன்?

    குழம்பு கருவடாம் சேர்த்து செய்ததில்லை. ஒருமுறை செய்து பார்க்க வேண்டும்.

    அதே போல பொரிச்ச குழம்பில் கொண்டைக்கடலை, போன்றவை தாளித்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. கீரை வேகும்போது ஒரு விதமான மணத்துடன் நச்சுக்காற்று ஒன்று வெளியாகும், அது முழுவதும் வெளியேற வேண்டும். அப்போது தான் கீரை ருசியுடன் இருக்கும். இல்லை என்றால் ஒருவிதக் கசப்பு அல்லது துவர்ப்புடன் இருக்கும். பொரிச்ச குழம்பு மட்டுமா? இங்கே மாமியார் வீட்டில் கொட்டுக்குழம்பு என்று ஒன்று செய்வாங்க. சேனைக்கிழங்கு போட்டு கடுகு, வெந்தயம், மிவத்தல் தாளித்து அதிலேயே கொ.கடலை, மொச்சையும் வறுத்துக் கொண்டு சேனைக்கிழங்கையும், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கிக் கொண்டு புளிகரைத்துவிட்டுப் பொடி(சாம்பார்ப் பொடி) போடுவாங்க.உப்புச் சேர்த்துக்கொஞ்சம் போல் வெல்லம் கடைசியில் போடுவாங்க. இந்தக் கொட்டுக்குழம்பு கொண்டைக்கடலையோ மொச்சையோ இல்லாமல் பண்ணியதில்லை.

      Delete
  2. கீரை எல்லோருக்கும் பிடித்த வகைதான் கீழக்கரை எனது அம்மாவின் ஊர் அவ்ஊர் மக்கள் தினம் கீரை இல்லாமல் சாப்பிடமாட்டார்கள் ஏதாவது ஒரு கீரை வேண்டும் எனக்கும் கீரை பிடிக்கும் இங்கு வந்த பிறகு அந்த ஆசையும் போய் விட்டது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், என்னோட ஒரு பேத்திக்குக் கீரையே பிடிக்காது. சாப்பிடும்போது அவள் பக்கத்தில் உள்ள நாம் கீரை சாப்பிட்டால் கூட அவளுக்குப் பிடிக்காது! :)

      Delete
    2. என்ன சகோ ஏதும் கோபமோ... ?

      Delete
  3. புளிக்கீரையை நாங்கள் குழம்புக்குப் பதிலாகத் தான் பண்ணுவது (நாங்கள்-என் அம்மா, பெரியம்மா அவர்கள் வீட்டில்). செய்முறையைக் குறித்துக்கொண்டேன்.. பண்ணிப்பார்த்துவிட வேண்டியதுதான்.

    படம் இணையத்திலிருந்தா? கீரை பார்க்கவே அருமையாக இருக்கிறதே...

    சாதாரண கீரையை (உங்கள் புகுந்தவீட்டில் செய்வது என்று குறிப்பிட்டிருந்தீர்களே அது) மோர்க்குழம்பு சாதத்திற்குத் தொட்டுக்கொண்டோ, அல்லது கலந்து சாப்பிட்டாலோ நன்றாக இருக்கும். ஹஸ்பண்ட் இங்க இல்லாதபோதுதான் இதெல்லாம் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் இரண்டு முறையும் உண்டு. வெறும் மசித்த கீரையை சாம்பார், வத்தல் குழம்பு(உண்மையாக வற்றல் போட்டது) அல்லது மோர்க்குழம்பு இவை கலக்காமல் நான் சாப்பிட்டது இல்லை! வெறும் கீரை மசியல் எனக்குப் பிடிக்கிறதில்லை. மோர்க்கீரையும் வற்றல் குழம்பும் நல்ல காம்பினேஷன்.

      Delete
  4. என்னவோ தெரியவில்லை கீரை வகைகள் இப்போதெல்லாம் என் உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை

    ReplyDelete
    Replies
    1. செரிமானம் ஆக நேரம் எடுக்கும் ஐயா!

      Delete
  5. அருமையான பதிவு

    தொடருங்கள்

    ReplyDelete
  6. நல்ல குறிப்புகள்....

    ReplyDelete
  7. ரொம்பவும் ரசித்து சமையல் செய்வீர்கள் போலிருக்கிறது. உங்களது ரெசிப்பிக்களை படிக்கும்போதே ஒரு உற்சாகம் பிறக்கிறது. இத்தனை விதங்களில் நான் கீரை குழம்பு வகைகள் செய்ததே இல்லை.
    குழம்புக் கருவடாம் (நாங்கள் இதை கரிமீத்து (கறியமுது) வடாம் என்போம்) போட்டு ஒருமுறை செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊர்க் கீரையில் வெங்காயம், பட்டாணி, தக்காளி சேர்த்துச் சப்பாத்திக்குப் பண்ணுவதுண்டு. ரெஸ்டாரன்டில் செய்வது போலப் பாலக் பனீர், பாலக் மடர் போன்றவையும் செய்வதுண்டு. வெறும் உருளைக்கிழங்கைக் கீரையில் சேர்த்துத் தேங்காய், சீரகம் அரைத்துச் செய்ததும் உண்டு. :) சமையல் செய்யும் முன்னர் சும்மாக் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்துப்பேன். உடனே செயலில் இறங்கிடுவேன். சோதனை எலிகள் தான் வீட்டில் தயாராக இருப்பாங்களே! :)))))

      Delete