எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 06, 2018

கலியுக வரதராஜப் பெருமாள் கோயில்! தொடர்ச்சி!

மூலவருக்கு அறங்காவலர் முன்னிலையில் வழிபாடுகள் முடித்துக் கற்பூரம் காட்டி அவருக்குப் பரிவட்டம் கட்டிப் பின்னர் உற்சவருக்கு வந்தார்கள். அந்த ஊர் வழக்கம் எப்படி எனில் அர்ச்சனையோ, அபிஷேஹமோ, சிறப்பு வழிபாடோ மூலவருக்கு மட்டுமின்றி உற்சவருக்கும் சேர்த்தே செய்ய வேண்டுமாம். எங்களுக்கு அது தெரியாது. மூலவர் வெறும் கம்பத்திலேயே குடி கொண்டிருக்கிறார். ஆஞ்சநேயர் தாங்குவதாகச் சொல்கின்றனர். ஆனாலும் ஆஞ்சநேயர் உருவம் தெரியவில்லை! மூலவர் கம்பத்தில் இருப்பதால் தாயாருக்குத் தனி சந்நிதி கிடையாது. தாயாரும் கம்பத்தில் பெருமாளுடன் இருப்பதாக ஐதீகம். கோவிலில் தசாவதார சந்நிதியில் தசாவதாரங்களும் சிற்ப வடிவில் உள்ளன. கோயிலே சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து காணப்பட்டாலும் படம் எடுக்க முடியவில்லை. ஏற்கெனவே எங்களை விரோத பாவத்துடன் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கப் படத்தை வேறே எடுத்து அர்ச்சனையே செய்ய முடியாமல் போயிடுமோனு பயமா இருந்தது.

இந்தக் கோயிலில் கால்நடைகள், பயிர்கள் போன்றவை செழிப்பாக இருக்கத் தனியான பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். கோயிலைச் சுற்றிலும் பெரிய பெரிய கொள் கலன்களும், தானியக் கிடங்குகளும் இருக்கின்றன. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் அதில் சேர்க்கப்பட்டு உரிய நேரத்தில் நிவேதனமாகச் செய்யப்படுகிறது. கால்நடைகளின் நோய் தீரவும் ஆடோ, மாடோ கன்று ஈன்றால் முதல் ஈற்றுக் கன்றைக் கோயிலுக்குக் காணிக்கையாகவும் கொடுக்கிறார்கள். இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் திறப்பு இல்லை. மாறாக உற்சவர் கலியுக வரதராஜப் பெருமாளே புறப்பாடு கண்டருளுகிறார்.  உற்சவர் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி அளிக்கிறார்.

இந்தக் கோயிலின் தலவரலாறு வருமாறு: அரியலூருக்கு அருகில் உள்ள சிதளவாடியில் கோபாலன் என்னும் வன்னியருக்கு மங்கான் என்னும் பெயருள்ள மகன் ஒருவர் இருந்தார். இவர் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார்.  அவர் மந்தையில் கருவுற்ற பசு ஒன்று நிறை மாதத்தில் கன்றை ஈனும் தருவாயில் திடீரெனக் காணாமல் போக மனம் வருந்திய மங்கான் பசுவைத் தேடி அலைந்தார். இரண்டு நாட்கள் சென்ற பின்னர் மூன்றாம் நாள் இரவு அவர் கனவில் காணாமல் போன பசு மேற்கே உள்ள காட்டில் மகாலிங்க மரத்துக்கும் ஆலமரத்துக்கும் இடையே சங்கு இலைப்புதர் அருகே உள்ளதாகவும், காலையில் சென்று பசுவோடு கன்றையும் கொண்டு செல்லலாம் என்றும் இறைவனால் கூறப்பட்டது.  காலையில் பசுவைத் தேடி அங்கே சென்றதும் பசு அவரைக் கண்டதுமே "அம்மா" என்று அலறியபடி ஓடி வந்தது. கூடவே அதன் கன்றும் வந்தது. பசு இருந்த இடத்தினருகே ஓர் நீண்ட கல் கம்பம் சாய்ந்து கிடந்ததைக் கண்டார் மங்கான். பசு அந்தக் கம்பத்தின் மீது பாலைச் சொரிந்து இருந்தது.

அந்தக் கம்பத்தைத் தொட்டு வணங்கிய மங்கானும் அவருடன் சென்றவர்களும் வீடு திரும்பினர். ஏழாம் நாள் இரவு மீண்டும் மங்கானின் கனவில், " பொய்ப் பொருளாம் பசுவை அழைத்துச் சென்று மெய்ப்பொருளான என்னைக் கைவிட்டாயே! பேதையே! எத்தனையோ ஆயிரம் பேர் காத்துக் கிடந்தாலும் கிடைக்காத ஓர் தரிசனம் உனக்குக் கிடைத்துள்ளது.  அறியாமையால் நீ என்னை விட்டுச் சென்று விட்டாய். எனக்கும் உன் முன்னோர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதே சீதளவாடியில் வாழ்ந்து கொண்டு என்னை வணங்கி வந்த உன் முன்னோர் எனக்குக் கோயில் எழுப்பும்போது கல் கம்பம் கொண்டு வந்தனர்.  வண்டியில் என்னை ஏற்றி வரும்போது அச்சு முறிந்து அங்கேயே நான் விழுந்து விட்டேன். என்னை எடுக்க முடியாமல் அங்கேயே விட்டுச் சென்றார்கள். அந்தக் கம்பத்தில் தான் நான் குடி இருக்கிறேன். என்னை நிலை நாட்டுவது உன்னுடைய உரிமை!" என்று இறைவன் கூறினார்.

மேலும் தொடர்ந்து, "இந்தக் கம்பத்தை நிலை நிறுத்தி நீ தொடர்ந்து என்னை வழிபடவே உன் பசுவை மறைத்து வைத்தேன். இந்தக் கலியுகத்தில் மக்கள் படும் பெரும் துன்பத்தையும், துயரத்தையும் தீர்க்கவே நான் தோன்றினேன். உன்னுடைய குலதெய்வமாக இருந்து உன்னை வழிநடத்தவும் தோன்றினேன். என் பெயர் கலியுக வரதராஜப் பெருமாள்!" எனக் கூறி மறைந்தார். அந்த இடத்தில் தான் மங்கான் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்து இப்போது அவர் சந்ததிகள் வழிபட்டு வருவதாகச் சொல்கின்றனர். இந்த ஊரின் பெயர் இப்போது கல்லங்குறிச்சி என அழைக்கப்படுகிறது.

சித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பு, அக்ஷய திரிதியை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் (உற்சவர்) எழுந்தருளுகிறார். இதைத் தவிரவும் ஆடி பதினெட்டு, கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி, விஜயதசமி,  திருக்கார்த்திகை, மார்கழி மாத பூஜைகள், அனுமன் ஜயந்தி, போன்ற நாட்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஶ்ரீராமநவமிக்கு உற்சவர், தாயாருக்கும், ஆஞ்சநேயருக்கும் சேர்த்து இரண்டு தேர்கள் இழுத்துத் தேர்த்திருவிழாக் கொண்டாடுகின்றனர். பங்குனி உத்திரமும் இங்கே சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.      

28 comments:

 1. ஆஹா... அருமையான கோவில் தலவரலாற்றுடன். ஆனால் படங்கள்தான் மிஸ்ஸிங். உங்க பயமும் புரிந்துகொள்ளக்கூடியதே.

  ReplyDelete
  Replies
  1. படங்கள் எடுக்கவில்லை. வெளியே எடுக்கலாமெனில் குரங்கார் ஆட்டம்! உள்ளே இவங்க! :( இம்முறை தான் கோயில்களுக்குப் போயும் படமே எடுக்காமல் வந்திருக்கேன்! :(

   Delete
 2. தல வரலாறு அறிந்து கொண்டேன். அருமையான தலவரலாறு.
  பல வருடங்கள் ஆகி விட்டது இந்த கோவில் போய்.

  //பொய்ப் பொருளாம் பசுவை அழைத்துச் சென்று மெய்ப்பொருளான என்னைக் கைவிட்டாயே! பேதையே!//

  அப்படித்தான் ஆகி விடுகிறது.
  மாயை கண்ணை மறைக்கிறது.
  மெய்பொருளை பற்றிக் கொண்டால் நலம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு! அந்த மெய்ப்பொருள் தெரியாமல் தானே எல்லா ஆட்டமும்! :)

   Delete
 3. பாலக்காட்டில் எங்கள் கிராமத்திலும் ( கோவிந்தராஜபுரம் )மூலவர் வரதராஜ பெருமாள் தான்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா, நன்றி.

   Delete
 4. வரலாற்று நிகழ்வுகளை அறியத் தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. நல்ல தகவல்கள். அறியத் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 6. கோயிலின் வரலாற்றுப் புகழ் அறிஞ்சு கொண்டேன்...

  ReplyDelete
  Replies
  1. அதிராமியாவ், என்ன ஒரே வரியில் கருத்து? இதுக்கு முந்தின பதிவையும் படிக்கலை! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   Delete
 7. இப்போதுதான் தில்லை கோவிந்தராஜப் பெருமாளை பார்த்து வந்தேன். இவர் கலியுக வரதராஜரா? இந்தப் பசு பால் கொடுக்கும் கதை நிறைய சாமிகளுக்கு வருகிறது. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அது இருக்கட்டும். அங்கு சம்பாரமும் கொத்சும் சாப்பிட்டீர்களா? செய்முறை திங்கக் கிழமையில் எதிர்பார்க்கலாமா அல்லது 'புதன் பயணக் கட்டுரையா'?

   Delete
  2. வாங்க ஶ்ரீராம், ரகசியப் பயணமா தில்லை போயிருக்கீங்க போல! போகட்டும்! கோவிந்தராஜப் பெருமாளை நாங்க போனப்போப் பார்க்க முடியலை! நடை சாத்திட்டுப் போயிட்டாங்க! இங்கே நடராஜருக்குத் தான் மூன்றாம் கால அபிஷேஹ, ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

   Delete
  3. நெ.த. இத்தனை வருஷமாச் சிதம்பரம் போயும் நான் இன்னமும் சிதம்பரம் கொத்சுவும் சம்பா சாதமும் சாப்பிட்டதில்லை! :))) பல முறை தீக்ஷிதர்களிடம் கேட்டுட்டேன்! எப்போப்போடுவாங்கனு தெரியலை. ஆனால் கல்கண்டு சாதம், சர்க்கரைப் பொங்கல் போன்றவை சுடச் சுடச் சாப்பிட்டிருக்கோம். ஒரு பெரிய டப்பாவில்போட்டு வீட்டுக்கும் கொடுத்திருக்காங்க!ஒரு முறை திருவாதிரையில் கோயிலில் செய்யும் களியும், தீக்ஷிதர் வீட்டுக் களியும் சாப்பிட்டோம். ஶ்ரீராமுக்கு அதிர்ஷ்டம் அடிச்சதானு தெரியலை!

   Delete
  4. ஸ்ரீராம் எழுதியிருக்கறதைப் பார்த்தால், அவங்க பாஸுக்குத் துணையா இவர் போன மாதிரித்தான் தெரியுது. அதுனால அனுமார் கோவில், தில்லை கோவிந்தராஜப் பெருமாள்னு எழுதறாரே தவிர, தில்லை அம்பலத்தானைப் பற்றி எழுதலையே.

   எனக்கு எப்போதும் கோவில் பிரசாதங்களில் விருப்பம் அதிகம். என்ன என்னவோ பிரசாதங்கள் சொல்றீங்க. எப்போ எனக்கு இதெல்லாம் சாப்பிடக் கொடுத்துவச்சிருக்கோ.

   Delete
  5. // அது இருக்கட்டும். அங்கு சம்பாரமும் கொத்சும் சாப்பிட்டீர்களா? //

   நெல்லை... ஆசை இருக்கு... ஆனா அதற்கெல்லாம் எது நேரம்? ஓட்டம்... ஓட்டம்... கிடைத்த நேரத்தில் ஓடிஓடிப் பார்த்தோம்.

   Delete
  6. // ரகசியப் பயணமா தில்லை போயிருக்கீங்க போல! //

   கீதா அக்கா... எனக்கே நிகழ்ச்சி நிரல் சரியாகத் தெரியாத நிலை! கும்பாபிஷேகம் முடிந்து திரும்பி வரும் நிலையில் சிதம்பரம். எட்டு, ஒன்பது மணிக்குள் சென்னை சேர்ந்து விடலாம் என்று நினைத்திருந்தபோது இது தாமாதமாக்கி விட்டது. மறுநாள் பணிக்குச் செல்லவேண்டிய நிலையில் இரவு இரண்டு மணிக்கு வீடு சேர்ந்தோம்!

   Delete
  7. / நெ.த. இத்தனை வருஷமாச் சிதம்பரம் போயும் நான் இன்னமும் சிதம்பரம் கொத்சுவும் சம்பா சாதமும் சாப்பிட்டதில்லை! :))) //

   அப்பா... இப்போதான் லேஸா திருப்தியா இருக்கு! எஸ் வி சேகர் சொல்றது மாதிரி!

   Delete
  8. // ஸ்ரீராம் எழுதியிருக்கறதைப் பார்த்தால், அவங்க பாஸுக்குத் துணையா இவர் போன மாதிரித்தான் தெரியுது. //

   நெல்லை.. இந்தப் பயணத்தில் பாஸ் வரவில்லை. உடம்பு சரியில்லாமல் போன அவர் அம்மாவுக்காக வீட்டில். இல்லாவிட்டாலும் வரும் மூடில் இல்லை என் பாஸ்! ஒரு வரி கமெண்ட்டில் இவளவு யூகங்களா!!!!!

   Delete
  9. கும்பாபிஷேகம் முடிந்து திரும்பி வரும் நிலையில் சிதம்பரம். எட்டு, ஒன்பது மணிக்குள் சென்னை சேர்ந்து விடலாம் என்று நினைத்திருந்தபோது இது தாமாதமாக்கி விட்டது.// கும்பாபிஷேஹம்? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!

   Delete
  10. நெ.த. கல்கண்டு சர்க்கரைப் பொங்கல் நானே செய்து தரேன் உங்களுக்கு! :)))))

   Delete
  11. நீங்கதான் இதில் எக்ஸ்பர்ட் ஆச்சே கீசா மேடம். நான் கோவில் பிரசாதங்களைச் சொன்னேன். (ஆனால் திருவானைக்கா கோவிலில் பிரசாத ஸ்டால் பிரசாதங்கள் attractive ஆக இல்லை. ஸ்ரீரங்கமும் அப்படியே)

   Delete
 8. ஸ்ரீராம் எழுதியிருக்கறதைப் பார்த்தால், அவங்க பாஸுக்குத் துணையா இவர் போன மாதிரித்தான் தெரியுது. //

  ஹாஹாஹாஹா..நெல்லை தப்பு தப்பு...ஸ்ரீராமுக்குத் துணையா அவர் பாஸ் தான் செல்வது வழக்கம்...ஹிஹிஹி...ஸ்ரீராம் என்ன அடிக்க வரும் முன் பதிவு கமெண்டும் போட்உஓடனும்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. // தப்பு தப்பு...ஸ்ரீராமுக்குத் துணையா அவர் பாஸ் தான் செல்வது வழக்கம்...//

   ஹா.... ஹா... ஹா... கீதா... நைஸா இதை எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு இருக்கீங்க!!!

   Delete
 9. கலியுக வரதராஜாப் பெருமாள்.. தலவரலாறு தகவல் அனைத்தும் புதுசு....அழகான கோயில்னு தெரிஞ்சுக்க முடியுது....

  தலைப்பு வரதராஜன் நாளும்..கலியுக வரத பார்த்ததும்....கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்க் காட்சி அளிப்பது பழனியி லே... பாடல் டக்குனு நினைவுக்கு வந்தது...கீதாக்கா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், தி/கீதா, அது முருகன் மேலான பாடல்! கோயில் அழகு தான்! ஆனால் பட்டாசாரியார்கள்! :(

   Delete