அதிசயம் ஆனால் உண்மை. பனிரண்டு வருடங்கள் முன்னர் இதை எழுதிய மறுநாள் காலை பொதிகைத் தொலைக்காட்சியில் 6-30 மணிக்கு சிக்கல், எட்டுக்குடி, எண்கண் மூன்று கோயில்களையும் அதன் வரலாற்றையும் கூறிக் காட்டினார்கள். இத்தனை வருஷங்கள் இல்லாமல் திடீர்னு இப்போ நான் எழுத ஆரம்பிச்சதும், இன்று இந்தக் கோயில்களைக் காட்டியதும், அதுவும் சில்பா சிற்பியின் கதையை ஓவியமாய் வரைந்துள்ளதையும் காட்டியதும் பார்த்தால், நேற்று நான் தரவெல்லாம் இல்லைனு சொன்னதால், தரவை அந்த முருகனே காட்டிக் கொடுத்திருக்கின்றான் என்று என் மனதில் தோன்றுகின்றது. சில்பா சிற்பியை சில்பா முனிவர் என்றும் சித்தர் என்றும் போற்றி அவருக்குத் தனிக் கோயில் எழுப்பி வழிபாடுகள் நடப்பதாயும் தெரிய வந்தது. இது எனக்குப் புதிய செய்தி! போயே பார்க்காத கோயில்களைப் பற்றி எழுத வேண்டாம் என நினைத்திருந்த எனக்கு எழுத வேண்டும் என்று தோன்றியதும், தொலைக்காட்சியில் பார்த்துவிடு என்று முருகன் காட்டிக் கொடுத்திருக்கின்றான். சீக்கிரமாய் நேரே போய் தரிசனம் செய்யவும் அவனருள் துணை நிற்கும். இந்த நினைப்பும், இன்றைய நிகழ்வும் அவன் செயலாலே! இனி கதை தொடரும்.! கதை தெரிந்தவர்கள் நான் செய்யும் தப்பைத் திருத்தவும். தெரியாதவர்கள் பொறுத்துக்கொள்ளவும், வேண்டுகின்றேன். பின்னர் நாங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றதும் எட்டுக்குடியில் நம்மவர் கீழே விழுந்ததும், பாதியில் திரும்பியதும் அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து எண்கண் போனதும் தனிக்கதை! *********************************************************************************** கனவில் வந்த கந்தன் கலகலவெனச் சிரிக்கின்றான் சில்பியைப் பார்த்து. முருகா, குமரா, என் கதியைப் பார்த்தாயா எனச் சிற்பி அழுது வேண்ட வேண்டும் என நினைத்தால் கைகளோ தொழுகின்றன. குமரன் சொல்கின்றான். "சில்பா சிற்பியே! உளியைக் கையில் எடு. இன்னும் இரு சிலைகள் நீ செய்யவேண்டுமே? இப்படி உறங்கினால் என்ன அர்த்தம்? நானே வியக்கும் வண்ணம் என் சிலையை வடித்த நீ அதேபோல் இன்னும் இரண்டு செய்யவேண்டும் அல்லவா?? என்னை நினை! எடு உளியைக் கையில்! ம்ம்ம்ம்., சீக்கிரம்!, சீக்கிரம்!" என்று அவசரப் படுத்துகின்றான். சில்பிக்குத் தூக்கிவாரிப் போட விழிப்பு வந்துவிட்டது. உடலெல்லாம் வியர்வை வெள்ளம். திகைத்து அமர்ந்தார் சில்பி. கண்டது கனவா? இல்லை நனவா? கட்டை விரல் போய்விட்டது அந்த முருகவேளுக்குத் தெரியாதா? இது என்ன சோதனை! என் அப்பனே, கந்தா, குமரா, கடம்பா, கார்த்திகேயா?? இதுவும் உன் ஆணையா?? முயல்கின்றேன். என்றவாறு ஏதோ ஒரு நம்பிக்கையில் அடுத்த நாள் பகலில் கல்லைத் தேர்ந்தெடுத்து உளியைக் கையில் எடுக்கின்றார் சில்பி.
"தாத்தா, தாத்தா!" என்ற குரல்கேட்க திரும்பிப் பார்க்கின்றார். ஒரு சிறு பெண் ஏழு வயதிருக்கும் நின்று கொண்டிருக்கின்றாள். "நீ யாரம்மா?" எனக் கேட்க," என்ன தாத்தா? என்னைத் தெரியவில்லை? நான் உங்கள் பேத்தி!" என்று சொல்கின்றாள் அந்தச் சிறுமி. "அப்படியா? இந்தத் தாத்தாவிடம் உனக்கு என்னம்மா வேண்டும்?" என்று சிற்பி கேட்க, " நீங்கள் வேலை செய்யுங்கள் தாத்தா, நான் உதவுகின்றேன்." என்று அந்தப் பெண் சிற்பிக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய ஆரம்பிக்கின்றாள். சிலை உருவாகத் தொடங்குகின்றது, முத்தரசனுக்குத் தெரியாமல். அவன் கட்டளையை மீறி உருவாகும் சிலை மட்டுமின்றி, சிற்பியும் உயிர் பிழைப்பாரா?? குழப்பம் மேலிடுகின்றது சிற்பிக்கு. ஆனால் அவரால் சிலை வடிப்பதை நிறுத்தவும் முடியவில்லை. அழகன் முருகன் அவர் கைகளில் மெல்ல, மெல்ல உயிர் சிற்பமாய் வடிவெடுக்கின்றான்.
படங்களுக்கு நன்றி கூகிளார்
"பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணியாட" முருகனின் அழகு பார்ப்பவர் கண்களை விட்டுப் பிரிய மறுக்கின்றது. தோள் கண்டார், தோளே கண்டார் என்பது போல் இந்த முருகன் சிலையப் பார்த்தவர்கள் அதன் அழகில் மயங்கி நின்றனர். ஆயிற்று, கொஞ்சம் கொஞ்சமாய் சிலை உருப்பெற்று வந்தது. இனி நல்ல நாள் பார்த்துக் கண் திறக்கவேண்டும். கண் திறந்தால் முருகன் எதிரே வந்து பேச ஆரம்பித்து விடுவான் போல் ஜீவ களை ததும்பிற்று முகத்தில். கண் திறந்தால் அவன் கருணை அந்தக் கண்களில் சொட்டுமே, அதை நம்மால் தாங்க முடியுமா என நினைத்தார் சிற்பி. அது வரையிலும் முத்தரசனுக்குச் செய்தி போகவில்லை. அவனும் தற்சமயம் வேறொரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் இருந்தான். அவன் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சிரங்குடி என்னும் ஊரில் (தற்சமயம் எட்டுக்குடி என அழைக்கப் படுகின்றது) ஊர் மக்கள் அனைவரும் முத்தரசனிடம் வைத்த விண்ணப்பம் என்னவென்றால், சிக்கலில் முருகன் சந்நிதியை ஏற்படுத்தி, முருகன் விக்கிரஹத்தையும் பிரதிஷ்டை செய்த மாதிரி எங்கள் ஊரிலும், ஆனந்தவல்லி சமேத செளந்தரேஸ்வரர், இருவரும் தங்கள் மகன் ஆன குமாரன் இல்லாமல் தனியே குடி இருக்கின்றனர். அவரையும் குமாரனோடு குடி அமர்த்த வேண்டும். என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.
வேறு வழியில்லாமல் சில்பா சிற்பியை வரவழைக்கின்றான் முத்தரசன். அவனுக்குச் சிற்பி சிலை வடித்திருக்கும் விஷயம் தெரியாது. ஆகவே அவரிடம் உங்கள் வழிகாட்டுதலுடன் மற்ற சிற்பிகள் சிலை வடிக்கட்டும், தாங்கள் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்க, ஆவலை அடக்க முடியாத சிற்பியோ தான் ஏற்கெனவே செதுக்கிய சிற்பத்தைப் பார்வையிடுமாறும், அந்தச் சிலையைக் காஞ்சிரங்குடி என்னும் எட்டுக் குடியில் பிரதிஷ்டை செய்து கொள்ளலாம் எனவும் கூற, மன்னனுக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. "என்ன? உங்கள் கட்டை விரலை நான் எடுத்தும், சிற்பம் செதுக்கி இருக்கின்றீர்களா?" என திகைத்துப் போய்க் கேட்ட மன்னன், உடனேயே சிற்பியின் குடிலுக்குச் சென்று சிலையைப் பார்க்கின்றான். "ஆறிரு தண்புயத்தழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமும் தரித்து" நின்ற அழகிய வேலன், சிங்காரவேலனையும் தோற்கடிக்கும் அழகோடு நின்றான். கண்கள் திறக்கவேண்டியதுதான் பாக்கி. சிற்பியைப் பார்த்து, முத்தரசன், சிலைக்கு விழி திறந்து காஞ்சிரங்குடியில் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகத்துக்கும் ஏற்பாடு செய்யுமாறு கூறுகின்றான். சிற்பியோ கையைப் பிசைந்தார். "மன்னா, சிலையில் ஜீவ ஓட்டம் ததும்பி நிற்கின்றது. கண் திறப்பது என்பது சாமானியமான வேலை இல்லை. மயிலோடு முருகன் பறந்துவிடுவானே? எனவே நான் சிலைக்குக் கண் திறக்கும் முன்னர் தாங்கள் சிலையைச் சங்கிலி போட்டுப் பிணைத்துக் கட்டுங்கள்." என்று வேண்டுகின்றான்.
முத்தரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. "என்ன சிற்பியாரே? என்ன நினைத்துக் கொண்டீர்கள்? சிலையாவது? பறப்பதாவது?? நீங்கள் என்ன உங்களை அவ்வளவு பெரிய ஆளென நினைத்துக் கொண்டீரோ?? சிற்பக்கலையில் வல்லுனர் என்றால் நீங்கள் வடித்த சிலைக்கு உயிர் வந்து ஓடிவிடும் என்று சொல்லுவதெல்லாம் அதிகம் என உங்களுக்கே தோன்றவில்லை?" என்று ஏளனம் செய்தான் முத்தரசன்.. சிற்பியும் இதற்கு மேல் மன்னன் ஆணையை மீற முடியாமல் சிலைக்குக் கண்கள் திறக்க அருகில் சென்றார். கண்களைத் திறக்கும் முன் செய்யவேண்டிய முறைப்படி, சிலையின் உடல்பாகத்தின் ஒன்பது இடங்களில் வழிபாடுகள் முறையாக நடத்தி பொன் ஊசியால் ஒளி மண்டலம், விழி மண்டலத்தை விளங்கச் செய்து, முறைப்படி கண்களைத் திறக்க ஆரம்பித்தார் சில்பா சிற்பி. முருகன் சிலை திடீரெனக் குலுங்க ஆரம்பித்தது. மயில் தன் தோகையை விரிப்பதை அனைவரும் காண முடிந்தது. உயிரோட்டம் மிகுதியாக மயிலுடன் ஆறுமுகன் விண்ணில் பறக்கத் தொடங்கினார். முத்தரசனோ செய்வதறியாது, "எட்டிப் பிடி, எட்டிப் பிடி, எட்டிப் பிடி!" எனக் கூவினான்.
கதையை மிக அருமையாக சொன்னீர்கள்.
ReplyDeleteஎழுத நினைத்தால் இறைவன் உதவி செய்கிறார்.
எண்ணிய எண்ணத்தை முடித்து வைப்பவன் அல்லவா!
சிலையின் கண் திறப்பது என்பது பெரிய விஷயம்
நீர்படை என்று சொல்வார்கள், நெல்லும் தண்ணீரும் தொட்டியில் கட்டி அதில் சிலைகளை போட்டு வைத்து இருப்பார்கள். கண் திறக்கும் போது வேறு யாரும் அருகில் இருக்க கூடாது என்பார்கள்.
வாங்க கோமதி, வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி. நீங்கள் சொல்லி இருக்கும் விஷயம் எனக்கு இப்போத் தான் தெரியும். மேல் அதிகத் தகவலுக்கு நன்றி.
Deleteசிலிர்க்க வைக்கும் கதை.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்!
Deleteஅறியாத கதை. நீங்கள் சொல்லும் விதமும் அருமை. தொடர்கிறேன்.
ReplyDeleteதுளசிதரன்
(கீதாக்கா துளசியின் கருத்தைப் போட்டுவிட்டு இப்போ போகிறேன் நான் கதையை வாசித்துவிட்டு வருகிறேன் - கீதா.)
நன்றி துளசிதரன், மெதுவா வாங்க கீதா!
Deleteசில சமயங்களில் ஒரு கோயிலைப் பற்றிய கட்டுரையைப் படிக்கும்போது எப்படியும் அக்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் எழும். இறையருளால் எப்படியும் அக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்துவிடும். அவன்தானே நம்மை இயக்குகிறான் என அறிவேன். அந்த அனுபவம் கிட்டத்தட்ட பதிவெழுதுவதற்கு உங்களுக்கும் வந்துள்ளது என நினைக்கிறேன்.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா, இம்மாதிரிச் சிலிர்க்கவைக்கும் அனுபவங்களை நிறையவே கிடைக்கப் பெற்றிருக்கிறேன். மிக்க நன்றி.
Deleteமுருகன் திருவருள் முன்னின்று காக்க...
ReplyDeleteநன்றி துரை!
Deleteசில நாட்களுக்கு முன் தாங்கள் எட்டிக்குடி, சிக்கல், எண்கண் தலங்களைப் பற்ரிச் சொல்லியிருந்த போது நானும் ஏதோ சொல்லியிருந்தேன்...
ReplyDeleteமறுநாள் காலையில் கிடைத்தது ( Fb ல்) கந்தன்குடி முருக தரிசனம்...
வேலும் மயிலும் துணை...
விரைவில் எங்களுக்கும் கந்தன்குடி வேலவன் தரிசனம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
Deleteசஷ்டிக்கு முதல் நாள் கிடைத்த கந்தன்குடி முருகன் படத்தை அடுத்து வந்த பதிவில் இணைக்க முடியவில்லை..
ReplyDeleteஇணையம் படுத்துகிறது.. கண்னாடி மாற்ற வேண்டும்... கைத் தொலைபேசியில் பதிவு ஒழுங்கு செய்வது பரபரப்பான சூழ்நிலையில் சிரமமாக இருக்கிறது...
உங்கள் பிரச்னைகளை எல்லாம் அந்த முருகனே சரியாக்கிவிடுவான். கவலை வேண்டாம். நிதானமாகப் போடுங்கள்.
Deleteகதை சுவாரசியமாக இருக்கிறது. நீங்கள் சொல்லியிருக்கும் விதம் உட்பட.
ReplyDeleteகீதா
நன்றி கீதா!
Deleteகந்தன் பற்றி அதிகம் வாசித்ததில்லை, வாசிக்க கொடுத்தமைக்கு நன்றி
ReplyDeleteநன்றி ஏடிஎம். முந்தைய பதிவுகளையும் நேரம் இருக்கையில் வாசித்துப் பாருங்கள். மீண்டும் நன்றி. தீபாவளிக்கு மறுநாளில் இருந்து ஆரம்பித்திருப்பேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகதை ஸ்வாரஸ்யமாக உள்ளது. முருகனின் துணை அவருக்கு பரிபூரணமாக இருக்கிறது.எல்லாவற்றையும் நடத்தி வைப்பதும் அவனல்லவா..! பேத்தியாய் வந்தவள் கந்தனின் தாயோ..? அன்னை பரமேஸ்வரி தன் மகனுக்காக வந்திருக்கிறாளோ ? கதை படிக்கும் போதே நெஞ்சம் நெகிழ்கிறது. இதை உண்மையாய் அனுபவித்த அந்த சிற்பியின் மனநிலை எப்படியிருந்திருக்கும்.? நீங்களும் பக்தியின் பரவசத்தில் மிக அழகாக கண்ணெதிரே காண்பது போல் எழுதியிக்கிறீர்கள். பாராட்டுக்கள்..
நேற்று என்னால் வலைத்தளம் வர முடியவில்லை. இன்றைய அடுத்தப் பதிவையும் இதனுடன் ஒரு சேர படித்து விட்டேன். இதோ..! அதனை மீண்டும் படித்துணரப் போகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.