எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 08, 2020

திப்பிசக் காராவடை!

நானும் அண்ணாவும் சின்ன வயசில் அதிகம் தாத்தா வீட்டிலேயே இருந்தோம். அப்பாவுக்கு அப்போ நிரந்தரமான வேலை ஏதும் இல்லை. கொஞ்ச நாட்கள் பெரியப்பா வீடு, பின்னர் தாத்தா வீடு என மாறி மாறி இருந்தோம். அப்பா எப்போதோ வருவார், போவார். ஆகையால் நாங்க அவரை "மாமா" என்றே கூப்பிட்டு வந்தோம். ஆச்சு, தம்பியும் பிறந்துட்டான். அப்பாவுக்கு சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் நிரந்தரமான வேலையும் கிடைத்துவிட்டது. ஆகவே அப்பா அம்மாவுடன் எங்களையும் அழைத்துக்கொண்டு கழுதை அக்ரஹாரம் எனப்பட்ட மேலப்பாண்டியன் அகழித் தெருவில் (ராஜா பார்லிக்கு நேர் எதிரே) குடித்தனம் வைத்தார். எங்களைப் பள்ளியிலும் சேர்த்தாச்சு. ஆனாலும் நானும் அண்ணாவும் "மாமா"எனக் கூப்பிடுவதை நிறுத்தவில்லை. அப்பா எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். தம்பியும் மாமானே கூப்பிட ஆரம்பிப்பான் என்றெல்லாம் சொன்னார். அக்கம்பக்கம் எல்லோரும் சொன்னார்கள். ஆனாலும் எங்களுக்கு மாமா என்றே வந்தது.

அப்போதெல்லாம் மதுரையில் மாலை மூன்று மணி ஆனால் தவலை வடை, போண்டா, வெள்ளை அப்பம், காராவடை, போளி போன்றவைகள் போட்டுச் சூடாகக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு வருவார்கள். வீடு வீடாகப் போய்க் கேட்பார்கள். அதில் ஒருத்தர் போடும் காராவடை நன்றாக இருக்கும். நாங்க காராவடை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டவும் அப்பா எங்களிடம் அந்த நபரிடம் (அவர் பெயர் நரசிம்மன்) காராவடை  வேண்டும் எனில் நீங்க இரண்டு பேரும் என்னை அப்பானு கூப்பிடணும் என்றார். இந்த டீல் நன்றாக இருக்கே என நாங்களும் ஒத்துக் கொண்டோம். இதிலே ஒரு பிரச்னை என்னன்னா, என் அம்மாவோட அத்தை பையர் பெயரும் நரசிம்மன். அவர் மதுரை முனிசிபாலிடியில் சுகாதார அதிகாரியாக வேலை செய்து வந்தார். அவர் தான் எனக்கும், என் தம்பிக்கும் அப்போ வீட்டுக்கு வந்து அம்மைப் பால் வைத்துவிட்டுப் போனார். நரசிம்மா என அம்மாவும் அப்பாவும் கூப்பிட்டுப் பேசவே நான் அவரைப் பார்த்து, "காராவடை ஏன் கொண்டு வரலை?" நு கேட்டு வைக்க அவர் திருதிரு. அம்மாவும் அப்பாவும் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவரிடம் விவரித்தனர். பின்னர் அவரும் சிரித்துக் கொண்டே என் கன்னத்தைத் தட்டிவிட்டுப் போனார். மீ அப்போ ரொம்பச் சின்னக் குழந்தை தானே! எனக்கு என்ன தெரியும்? அதுக்கப்புறமாக் காராவடை நரசிம்மனைப் பிடித்க்டுக் காராவடை வாங்கித் தந்து, நாங்கள் அப்பானு கூப்பிட்டதெல்லாம் தனிக்கதை.

இப்போ இது எதுக்குனு கேட்கறீங்களா? நானும் பல வருஷங்களாகக் காராவடை பண்ண நினைச்சு முடியாமலே போயிட்டு இருந்தது. கடைசியாக் காராவடை வீட்டில் பண்ணிச் சாப்பிட்டது என்பது எங்க பையர் பிறந்தப்போ என நினைக்கிறேன். அதுக்கப்புறமா யாரானும் பண்ணிக் கொடுத்து எப்போவானும் சாப்பிட்டிருக்கலாம். இங்கே நம்ம புக்ககத்தில் இதெல்லாம் தெரியாது. காராவடையா என்று கேட்டுவிட்டுச் சிரிப்பார்கள். இப்போச் சிரிக்கவும் யாரும் இல்லை, நாங்க ரெண்டு பேர்தானே! காராவடை ஆசையை எப்படித் தீர்த்துக்கறதுனு யோசிச்சேன். நேத்திக்கு இட்லிக்கு மாவு அரைத்தேன். வழக்கம் போல் உளுந்து மாவு பொங்கிப் பொங்கி நிறைய வர அதில் கொஞ்சம் எடுத்து வைச்சேன். நேற்றே முருங்கைக்கீரை போட்டு வடை தட்டலாமானு நினைச்சேன். அப்போத் தான் மூளையில் பளிச்! ஆஹா காராவடைக்கும் உளுந்து மாவை இப்படித் தான் அரைச்சுக்கணும். மற்றதெல்லாம் ஊற வைச்சு அரைச்சுச் சேர்த்தால் போதுமே எனப் பளிச், பளிச் என எண்ணங்கள். ஆனால் நேற்றுச் சாயங்காலமா அரைச்சதால் காராவடை பண்ண நேரம் ஆகிவிட்டது. ஆகவே இன்னிக்குப் பண்ணினேன்.



அரைச்ச உளுந்து மாவு, ஊற வைச்ச கடலைப்பருப்பு, ஊறிக்கொண்டிருக்கும் அரிசி, பருப்பு வகைகள் மிளகாய் வற்றலோடு. மிளகாய் வற்றலை இப்படிச் சேர்ப்பதால் நல்ல நிறம் கொடுக்கும்.

காராவடைக்கு ஒரு கிண்ணம் புழுங்கலரிசியை நன்கு கழுவிட்டு அதோடு காராவடைக்குத் தேவையான மிளகாய் வற்றலைப் போட்டு ஊற வைக்கணும். அரைக்கிண்ணம் துவரம்பருப்பு, அரைக்கிண்ணம் கடலைப்பருப்புத் தனித்தனியாக ஊற வைக்கணும். கடலைப்பருப்பு ஊறியதில் ஒரு கைப்பிடி எடுத்துத் தனியாக வைக்கணும். இங்கே நான் கொஞ்சமாகவே பண்ணப் போவதால் ஒரு கரண்டி புழுங்கலரிசியில் அரைக்கரண்டி துவரம்பருப்பும் அரைக்கரண்டி கடலைப்பருப்பும் சேர்த்தே கழுவி ஊற வைச்சு மிளகாய் வற்றலையும் அதோடு ஊற வைச்சேன். கைப்பிடி கடலைப்பருப்பைச் சின்னக் கிண்ணத்தில் தனியாக ஊற வைச்சிருக்கேன். உளுத்தமாவு இட்லி மாவுக்கு அரைக்கும் பதத்தில் எடுத்தது தனியாக ஒரு பாத்திரத்தில் இருக்கு. காராவடைக்கு என அரைக்கும்போதும் இப்படித் தான் அரைச்சுச் சேர்க்கணும்.


அரிசி, பருப்பு அரைச்சது

எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சி ஜாரில் போட்டு நன்றாக நைஸாக அரைக்கவேண்டும். கொஞ்சமாக அரைப்பதால் சேர்த்துப் போட்டு அரைப்பது சுலபம். நிறையப் பண்ணினால்   தனித்தனியாகவே அரைத்துச் சேர்க்கணும். அரைக்கும்போதே தேவையான உப்பைச் சேர்க்கலாம். உளுந்து மாவில் நாம் உப்புச் சேர்க்கலை என்பதால் எல்லா மாவையும் ஒன்றாகக் கலக்கும்போது நான் உப்புச் சேர்த்தேன். பெருங்காயம், மிளகாய் வற்றலோடு சேர்த்தே அரைக்கலாம். ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு வடிகட்டி இந்த மாவில் சேர்க்கணும். கருகப்பிலை போட வேண்டும். மாவை நன்றாகக் கலக்க வேண்டும். கெட்டியாக அப்பம் ஊற்றும் பதத்தில் இருக்கும்.



கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு கரண்டியால் எடுத்து ஊற்றினால் ஊற்றியதுமே மேலே உப்பிக் கொண்டு வரும். நன்கு வெந்ததும் மெதுவாகத் திருப்பி மறுபுறமும் வேக வைக்க வேண்டும். இரு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுத்துத் தேங்காய்ச் சட்னி அல்லது அப்படியே அல்லது தக்காளி, கொத்துமல்லிச் சட்னிகளோடு சாப்பிடலாம்.



நம்ம நெல்லை இது என்ன கொஞ்சம் தான் வரும் என்பார். நான் கலந்த மாவில் எனக்கு 4 அவருக்கு 4 பண்ணினது போக மிச்சம் மாவு இருக்கு. அதை நாளைக்குச் செலவழிக்க என்ன செய்யலாம்னு இன்னிக்கே யோசிச்சு வைச்சுட்டேன். அது நாளை அது வரை சஸ்பென்ஸ்.






37 comments:

  1. இப்போவும் திப்பிசம்தானா? ஒரிஜினல் ரெசிப்பி போட்டால் என்ன? ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ஒரிஜினல் செய்முறையும் இது தானே நெல்லை. என்ன, உளுந்தமாவுக்கு மட்டும் அரைக்கிண்ணம் உளுந்து ஊற வைச்சுத் தனியாக் கொடகொடனு அரைச்சுச் சேர்க்கணும். நான் முன்கூட்டியே உளுந்துமாவு தயார் பண்ணிண்டேன். அம்புடுதேன்!

      Delete
  2. சிறு வயது மலரும் நினைவுகள் படிக்க சுவாரஸ்யமாக இருந்தன. மனதில் இவை தானே எப்போதும் பளிச்சென்று இருக்கின்றன‌! என் அக்கா மருமகள் என்னை அத்தை என்று அழைப்பதை அக்கா பேரன் கவனித்து மழலையில் அத்தை என்று என்னை அழைக்க ஆரம்பித்து, இப்போதும் பிளஸ் டூ படிக்கும்போதும் நான் அவருக்க்கு அத்தை தான்! நான் மட்டுமல்ல, என் அனைத்து ஓரகத்திகளும் அத்தை தான்!
    கார வடை சூப்பர்! ஒரு கிண்ணம் புழுங்கலரிசிக்கு அரைத்த உளுந்து மாவு எவ்வளவு சேர்க்கணும்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ, என் அண்ணா மனைவி அனைவருக்கும் மன்னி! அதே என் தம்பி மனைவியை எல்லோரும் மாமி என்பார்கள்! ::))))) ஒரு கிண்ணம் புழுங்கல் அரிசிக்கு அரைக்கிண்ணம் உளுந்து போட்டு ஊற வைச்சுக் கொடகொடனு அரைச்சுச் சேர்க்கணும். மிக்சியை விட கிரைண்டரில் உளுந்து விழுது நல்ல கெட்டியாகக் கைகளால் எடுக்கிறாப்போல் வரும் என்பதால் நான் பெரும்பாலும் இட்லிக்கு அரைக்கும்போதே எடுத்து வைச்சுப்பேன். போண்டாவோ, வடையோ, காராவடையோ எதுவானாலும் உப்பிக் கொண்டு வரும். மேலே மொறு மொறு , உள்ளே ஓட்டை போட்டுக்கொண்டு ஸ்பாஞ்ச்!

      Delete
    2. அளவு சொன்னதற்கு அன்பு நன்றி!!

      Delete
  3. இது என்ன.... குனுக்கு செய்முறை போலவே இருக்கு. என்ன ஒண்ணு, குனுக்குக்குக் கர கரன்னு அரைக்கணும். இங்க நைஸா அரைச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

    ஆளுக்கு ரெண்டு பண்ணினாலும் அதையும் பாராட்டறேன். நான் பண்ணும்போது நிறையப் பண்ணிடுவேன். கொஞ்சமா சாப்பிட்டால், சாப்பிட்ட திருப்தி, எஞ்சாய் செய்தமாதிரி இருக்கும். ரொம்ப நிறைய பண்ணினால், இனி ஒரு மாதத்துக்கு அதைத் திரும்பவும் செய்யமுடியாது.

    நாளை திப்பிச அடையா?

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு என்னனு நாளைக்குச் சொல்றேன் நெல்லை. குணுக்கு வேறே, இது வேறே! முற்றிலும் வேறே. இதைத் தவிரவும் புழுங்கலரிசி வடைனு ஒண்ணு இருக்கு! அது இன்னும் போடலை! சீக்கிரம் போடறேன். இதெல்லாம் தென் தமிழகச் சிறப்பு உணவுகள். அதிலும் காராவடை மதுரையில் ரொம்பவே பிரபலம்.

      Delete
  4. //நாளை வரை சஸ்பென்ஸ்// - பாவம் மாமா. ப்ளாக்லாம் படிக்கறதில்லை. படிச்சிருந்தார்னா, இத்தனை நாள் மனசுக்குள்ள, தினம் தினம் வித்தியாசமா ஏதாவது செய்யறாங்களே என்று பாராட்டிக்கொண்டிருந்தது தவறு, திங்கள் கிழமை ப்ரிபரேஷன் வித வித வடிவத்தில் அடுத்த ஞாயிறு வரை வருதுன்னு புரிஞ்சுண்டிருப்பார். ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. மாமாவுக்கு என்னோட திப்பிசம் எல்லாம் அத்துபடி. சாமான் வீணாகாமல் இருக்கேனு சந்தோஷப்படுவார். அதோட ருசியில் ஒண்ணும் குறை இருக்காதே!

      Delete
  5. இரண்டு காரவடை தேவகோட்டை பார்.......சல்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! சுடச் சுட எடுத்துக்குங்க!

      Delete
  6. வணக்கம் சகோதரி

    திப்பிச பதிவு அருமை. காராவடை நல்ல காரசாரமாய் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது, காராவடை தோன்றிய கதைகளையும் சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள். இன்னமும் அதில் ஒரு தனிக்கதையாக சொல்வதற்கென்று வைத்திருக்கிறீர்கள். ஹா.ஹா.ஹா.

    உளுத்தமாவை இட்லிக்கு அரைப்பது போல் தனியாக விழுமென அரைப்பதால்,காராவடை இந்த மாதிரி உப்புதலுடன் வருகின்றதோ? மிகவும் பொறுமையாக எல்லா படங்களையும் அழகாக எடுத்து செய்முறைகளையும் அருமையாக விளக்கியிருக்கிறீரகள். நானும் இந்த மாதிரி ஒரு நாள் செய்து பார்க்கிறேன். அழகான உங்கள் படங்களைப் பார்த்ததும் செய்து பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் வந்து விட்டது.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, வாங்க கமலா, காராவடை வாசனையும் நிறமும் உங்களைச் சீக்கிரமே இங்கே இழுத்துவிட்டது. சூடாகச் சாப்பிடுங்கள். சட்னி எல்லாம் வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். ஒரு முறை செய்து பாருங்கள். புழுங்கலரிசியை ஒரு கிண்ணம் தனியாக மிளகாய் வற்றலோடு ஊற வைங்க. துவரம்பருப்பு+கடலைப்பருப்புச் சேர்த்தே நனைக்கலாம். ஆனால் வடை மாவில் போட ஊறிய கடலைப்பருப்பு ஒரு கைப்பிடி வேண்டும் என்பதால் அதைத் தனியாக நனைச்சுக்கணும். உளுந்தை அரைக்கிண்ணம் தனியாக நனைக்கணும். உளுந்தை முதலில் கொடகொடவென இட்லி மாவு பதத்துக்கு அரைச்சு எடுத்த பின்னர் புழுங்கலரிசி+மி.வத்தல் போட்டு நன்கு நைசாக அரைக்கணும். பின்னர் துவரம்பருப்பு+கடலைப்பருப்பை அரைக்கணும். எல்லா மாவையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். தேவையான உப்புச் சேர்க்கவும். கைப்பிடி நனைத்து வைத்த கடலைப்பருப்பைச் சேர்க்கவும். கருகப்பிலை, பெருங்காயம் (பொடியாகவோ, அல்லது ஊற வைச்சோ அல்லது அரைக்கும்போதேயோ சேர்த்தோ) சேர்க்கவும். மாவை நன்கு கலந்து விட்டு அரை மணி நேரம் வைத்த பின்னர் கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கைகளாலேயே போண்டா மாதிரி உருட்டிப் போடலாம். எனக்குக் கைகளால் போடுவது கொஞ்சம் அலர்ஜி என்பதால் கரண்டியைப் பயன்படுத்தினேன்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      ஹா ஹா ஹா . ஆமாம் சகோதரி. தங்கள் பதிவின் காராவடை வாசனை உடனடியாக என்னை இழுத்து வந்து விட்டது. இங்கு இரவு சாப்பாட்டுதான். மதியம் செய்த காய்கறிகள் கூட்டும், அப்பள குழம்புந்தான் நிறைய உள்ளது அதற்கு தொட்டுக் கொள்ள ஏதேனும் காரசாரமாக (வடை போண்டா, பஜ்ஜி வகையறாக்கள்) இருக்காவென வீட்டில் கேட்பார்களே என எண்ணிக் கொண்டே பதிவுலகம் வந்தால், தங்கள் பதிவு காரசாரமாக இருக்கவும் இழுத்து விட்டது. நான் மட்டும் சூடாக எடுத்துக் கொண்டேன். இந்த சமயத்தில் இங்கு மழை வேறு பெய்கிறது. மழைக்கும் இந்த மாதிரி காரசீரமான நொறுக்கு தீனிக்கும் எப்போதும் ஜோடிதான் இல்லையா?

      மாலையென்றால் கூட ஏதாவது தயாரித்து விடலாம். இரவு சாப்பிடும் போது எண்ணெய் பலகாரங்கள் செய்து சாப்பிடுவதென்றால் கடினம் என்பது என் எண்ணம். ஆனால் உங்கள் பதிவில் படித்ததை சொன்னால் அந்த மாதிரி ஏதாவது தயாரிக்க கூடாதோ என என் மகன் கேட்பார். ஹா ஹா. ஹா.

      எனக்காக மறுபடியும் செய்முறைகளை அழகாக விவரித்து எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி. கண்டிப்பாக ஒரு நாள் செய்து விடுகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. இரவுக்கு இங்கே என்னிக்கானும் தான் சாதம். அதுவும் சூடாக வடித்து சூடாக மிளகு ரசம் வைத்து அரிசி அப்பளமோ அல்லது இலைவடாமோ பொரித்துக் கொண்டு சாப்பிடுவோம். அநேகமாக இரவில் ஏதேனும் டிபன் தான். கொஞ்சம் சாதம் மிச்சம் இருக்கும். அதை மோர் விட்டுப் பிசைந்து பகிர்ந்து கொண்டு விடுவோம். எனக்கு உணவுப் பொருள் அதுவும் சமைத்தது வீணாகக் கூடாது. கூடியவரை கொஞ்சமாகப் பண்ணுவேன். அப்படியும் மிஞ்சினால் வேலை செய்யும் பெண்ணுக்குக் கொடுப்பேன்.

      Delete
  7. மதுரையில் என் பெரியம்மா ஜெய்ஹிந்த் நகரில் இருந்தார்..அப்போ நாங்கள் சென்ற போது ஆட்டுக்கல்லில் அரைத்து காராவடை பண்ணிக் கொடுத்தார்..சாப்பிட்டு விட்டு மீனாட்சியை புஷ்ப பாவாடையில் பார்த்து வந்தோம்..அப்போ நான் சின்னப் பொண்ணு..இன்னும் நினைவில் இருக்கு..இப்போ பெரியம்மா, பெரியப்பா, அம்மா, அப்பா யாரும் இல்லை..:(

    எனக்கு ஐந்து மாமிகள்..அதில் பெரிய மாமியை எல்லோருமே மன்னி என்று கூப்பிட்டதால் நானும் என் தம்பியும் மன்னி என்று தான் கூப்பிடுவோம்..இப்போதும்...:) இவரும் அவர்களை மன்னிம்மா என்று தான் சொல்கிறார்..:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதி, காராவடை உங்களைக் கூடக் கூட்டி வந்துவிட்டதே! ஆமாம், என் அம்மாவும் கல்லுரலில் அரைத்துத் தான் பண்ணுவார். அப்போ நாங்க ஐந்து பேர் இருந்தோம். எங்க 3 பேருக்கும் சின்ன வயசும் கூட. அதனால் செலவாகிவிடும். மிஞ்சினால் ராத்திரி ரசம் சாதத்துக்குத் தொட்டுக்கொள்வோம். இப்போ எல்லாம் எண்ணித் தான் பண்ண வேண்டி இருக்கு.

      என் தம்பியின் சிநேகிதர்கள் மட்டுமில்லாமல் என் வழி உறவுக்காரர்கள் பலருக்கும் நம்ம ரங்க்ஸ் "அத்திம்பேர்" தான்! :))))))) வயசில் பெரியவங்க கூட அத்திம்பேர் என்பார்கள்.

      Delete
  8. காரவடையா? காராவடையா?!

    ReplyDelete
    Replies
    1. தெரியலை ஸ்ரீராம், நாங்க காராவடைனே சொல்வோம்/சொல்கிறோம்.

      Delete
  9. இளவயது நினைவுகள் சுவாரஸ்யம். குப்பாச்சு குழப்பாச்சு மாதிரி இருந்தன நரசிம்ம காரவடைக் கதை!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, எனக்குக் காராவடை என்றால் இந்த நரசிம்மன் பெயர் நினைவில் வந்துடும். நானாகச் சிரிச்சுப்பேன். நல்லவேளையா யாரும் பார்த்திருக்க மாட்டாங்க போல! :)

      Delete
  10. லாக்டவுன் நாட்களுக்குப் பொருத்தமான ஒன்று! வகைவகையாய் செய்ய வசதி.

    ReplyDelete
    Replies
    1. லாக்டவுன் இல்லாட்டிக் கூடப் பண்ணலாமே!

      Delete
  11. அழகாய் வந்திருப்பது தெரிகிறது. ஆளுக்கு நாலுதான் என்று நிறுத்திக் கொள்கிறீர்களே... அந்தக் கட்டுப்பாட்டுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், நம்மவர் எப்போவுமே அளவு தான். எனக்கும் எண்ணெய்ப் பண்டம் நெஞ்சைக் கரிக்கும் என்பதால் கொஞ்சமாகவே எடுத்துப்பேன்.

      Delete
  12. செய்து பார்க்கிறோம் அம்மா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன். தனியாகச் செய்முறைக் கமலாவுக்குக் கொடுத்த பதிலில் இருக்கும். பாருங்கள். அது மாதிரித் தான் செய்யணும். நினைவாக மிளகாய் வற்றலைப் புழுங்கல் அரிசியோடு சேர்த்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் நிறம் கொடுக்கும்.

      Delete
    2. கீசா மேடம்... நான் எப்போவுமே, அடைக்கென்றால் மி.வற்றலை அரிசியோடு ஊறவைத்துவிடுவேன், பெருங்காயக்கட்டியை பருப்போடு ஊறவைப்பேன். இன்னும் சில நாட்களுக்குள் இதனைச் செய்துபார்த்துவிடுவேன்.

      Delete
    3. அன்பு கீதாமா, வடையை விட ,சிறு வயது நினைவுகள் பிரமாதம். அந்த வண்டியில் வைத்து விற்கப்படும் பலகாரங்களுக்கு ஈடு இணையில்லை.

      நானும் அனுபவித்திருக்கிறேன். சபாஷ்!!

      பெரிய மாமாவின் மனைவி எப்பொழுதும் மன்னிதான்.
      பிறகும் வேற்றுமை பாராட்டக் கூடாது என்று எல்லா
      மாமிகளையும் மன்னியாக்கி விட்டேன்:)

      என் மாமனாரும் மாமாதான் அவர் குழந்தைகளுக்கு.
      கூட்டுக் குடும்பத்தில் பென் களுக்கு முதலில் திருமணமாகி அவர் குழந்தைகள்
      மாமா என்று அழைக்கத் தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் மாமா ஆகிப் போனார்.
      திருமணம் ஆனபுதிதில் நான்கு மாமனார்களையும்
      மாமா என்றழைத்தாலும் நல்ல வித்தியாசம் தெரியும்.

      தாத்தா முத்தண்ணா ஆனார்.
      ஓ காராவடை! எத்தனை நன்றாகச் செய்கிறீர்கள் கீதாமா.
      மஹா நறுவிசு. இங்கே உளுந்து ஒருவருக்கும்
      ஒத்துக் கொள்வதில்லை.
      என் ஆசைகளைக் கட்டுப் படுத்த வேண்டியதுதான்.

      வடை வாழ்க்கையை விட்டே போய் விட்டது:)
      திப்பிசம் என்ற பெயரில் ஒரிஜினல் பலகாரங்களைக் கொடுக்கும்
      பாங்கு உங்களுக்கு மட்டுமே வரும்.
      இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். மிக நன்றி கீதாமா.

      Delete
    4. என்ன வல்லிம்மா... வடை 'வாழ்க்கையை விட்டே போய்விட்டது' என்றெல்லாம் எழுதுகிறீர்கள். ச்ராத்தத்தில் வடை இருக்குமே... இல்லைனா, சென்னை வந்தால், டக் என்று தளிகை பக்கம் நடைகட்டினால் கிடைத்துவிடுகிறது.

      Delete
    5. வாங்க வல்லி, வடையே சாப்பிடுவதில்லையா? ஆசைக்கு ஒன்று எடுத்துக்கலாமே! முழு உளுந்து தால் மக்கனி பண்ணினால் ஒத்துக்கொள்வதில்லை. மற்றபடி வடை எல்லாம் நாங்க அவ்வப்போது சாப்பிடுவோம்.

      Delete
  13. மலரும் நினைவுகள் அருமை. காராவடையால் அப்பாவை(மாமா)அப்பா என்று அழைத்து மகிழ்ச்சி படுத்திவிட்டீர்கள்.

    காராவடைக்கு நீங்கள் சொன்னது போலத்தான். தனியாக பாசிப்பருப்பை ஊறவைத்து மாவுடன் கலந்து காராவடை செய்வோம். தேங்காய் பல் பலாக கீறி போடுவோம்.
    பார்ப்பதற்கு அழகு. காராவடை வாசம் மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! தாமதமான பதிலுக்கு நன்றி. காராவடை சாப்பிட்டும் அப்பா, மாமா என்று தடுமாறிவிட்டுப் பின்னர் தான் அப்பா என்றே கூப்பிட ஆரம்பித்தோம். நானும் தேங்காய்ப் பல்பல்லாகக் கீறிச் சேர்ப்பேன் தான். அன்று என்னமோ போடலை!

      Delete
  14. காரா வடை - பெயர் புதிதாக இருக்கிறது. சாப்பிட்ட நினைவில்லை. அம்மாவிடம் கேட்க வேண்டும் - அவர்கள் ஊரில் பழக்கம் இல்லையோ என்னமோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இது அநேகமாகத் தென் தமிழ்நாட்டுப் பலகாரம் என்பதால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் புக்ககத்தில் யாருக்கும் தெரியாது.

      Delete
  15. நீங்க குணுக்கு ரெசிபில சொன்னதிலிருந்து நான் இந்த காராவடை ரெசிப்பிக்காக வெயிட்டிங் ..சிலர் ரெசிபில வெள்ளைப்பட்டாணியும் சேர்க்கிறாங்க .எனக்கு கடலை பருப்பு பெரிசா விருப்பமில்லை கொஞ்சமா சேர்த்து செய்யப்போறேன் .பார்க்க நல்ல இருக்குக்கா திப்பிசை காரவடை 

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல். வெள்ளைப் பட்டாணியெல்லாம் இதிலே சேர்ப்பதில்லை. உங்களுக்குக் கடலைப்பருப்பு ஒத்துக்காது என்றால் பட்டாணிப்பருப்புச் சின்னதாக இருக்கும். அதைச் சேர்த்துப் பாருங்கள். உங்க நாரோயில் பக்கம் ரசவடைக்குப் பட்டாணிப் பருப்புத் தானே போடுவார்கள்? :))))))

      Delete