எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 26, 2021

அம்மன் அருளாலே!

தீபாவளிக்கு இன்னமும் எத்தனையோ மாதங்கள் இருக்கின்றன. ஆனால் என்னோட டாஷ்போர்டில் தீபாவளி சம்பந்தப்பட்ட கேள்விகள். அதைக்குறித்து எழுது என்கிறது ப்ளாகர். முதல் வருஷம் பி.காம் படிப்பவர்களுக்கு தீபாவளி விடுமுறை முடிந்து வகுப்புகள் ஆரம்பித்துவிட்டனவா என்றொரு கேள்வி. இன்னொன்று உன்னோடு தீபாவளி கொண்டாட யாரையேனும் கூட அழைப்பாயா?  என்பது. தீபாவளிக்குனு பெண், மாப்பிள்ளையைத் தான் அழைப்போம். வேறே யாரை அழைப்பாங்கனு தெரியலை. அடுத்தது இன்னும் விசித்திரமானது. தீபாவளிக்கான விளக்கு அலங்காரங்களை இந்தியத் தபால் துறை மூலம் அனுப்ப முடியுமா? நான் அனுப்பி வைக்கலாமா? என்பது. இந்தக் கேள்விகளை வைத்துப் பதிவு  எழுது என்கிறது போல ப்ளாகர்! இதைத் தவிரவும் பொங்கல் பற்றிய கேள்விகள், அதற்கான பரிசுப்பொருட்கள்/அரசு என்ன கொடுத்தது, என்பதெல்லாமும் கேட்டிருக்கு. கூடவே வழக்கமான கேள்வியாகக் கம்சனின் குரு யார்? தளபதி யார்னும் கேள்விகள்! எல்லாத்தையும் விடச் சிரிப்பு வர வைச்சது என்னன்னா சபரிமலை ஐயப்பன் பற்றிய சீரியல் ஏசியாநெட் தொலைக்காட்சியில் எத்தனை மணிக்கு ஆரம்பிக்கும் என்பதே! 

எனக்குத் தோன்றினாற்போலவே சென்னை ஹைகோர்ட்டுக்கும் தோன்றி இருக்கிறது. இந்த முறை கொரோனா பரவலுக்கு முழுக்காரணம் தேர்தல் கமிஷன் தான் என ஹைகோர்ட்டும் சொல்லுகிறது. குறைந்த பட்சம் பிரசாரங்களிலாவது கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கணும். தேர்தல் கமிஷன் தான் அதைச் செய்யலைனா, நம்ம அரசியல் தலைவர்களும் எதைப் பத்தியும் கவலைப்படாமல் ஓட்டுச் சேகரிக்க மட்டுமே செய்தார்கள்.  யாருக்குமே கொரோனா பற்றிய கவலையே இல்லை.  தேர்தல் கமிஷன் தான் இம்முறை தமிழ்நாட்டில் கொரோனா பரவியதற்கான முக்கியக் காரணம் என்கிறது ஹைகோர்ட். அடுத்து வட மாநிலங்களில்/(இப்போதெல்லாம் தென் மாநிலங்களிலும் தான் !) கொண்டாடிய ஹோலிப் பண்டிகை. கோயில்களில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் திருவிழாக்களுக்கு ஏகக் கட்டுப்பாடு விதித்த/இன்னமும் விதிக்கும் மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.  அப்புறமாக் கொரோனா பரவிடுச்சே என்றால் என்ன செய்ய முடியும்? எதுக்குக் கட்டுப்பாடு விதிச்சாலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குக்கு முதல்நாள் திறக்கும் மீன் சந்தைக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்க முடியாது. அரசாங்கங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தாகணும்.

ஒரு சிலருக்கு தில்லி, குஜராத், மஹாராஷ்ட்ரா மாநிலங்கள் எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லையே அங்கே மட்டும் கொரோனா பரவாமலா இருக்கு என்பது! அங்கேயும் கூட்டங்கள், நெருக்கடிகள், பேருந்துப் பயணங்கள், மற்ற எதையும் மக்கள் தவிர்க்கவில்லை. தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க மஹாராஷ்ட்ராவில் குறிப்பாக மும்பையில் வாய்ப்பே இல்லை/கொடுக்கவும் இல்லை. எங்க உறவினர் ஒருவர் இருக்கும் குடியிருப்பு வளாகத்தையே மூடி விட்டார்கள். அங்கே இருப்பவர்கள் வேறு இடங்களுக்குப் பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். கொத்துக் கொத்தாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பதும் நேர்ந்திருக்கிறது. எப்போது கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளதோ அப்போதே ஆக்சிஜன் தேவையும் அதிகம் என்று உணர்ந்து மருத்துவமனையின் அதிகாரிகள் தேவையான ஆக்சிஜனைக் கேட்டுப் பெற்றிருக்கலாமோ? ஒரு சிலர் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்துக் கொண்டு படுத்திருக்கும் நோயாளிக்கு திடீரென ஆக்சிஜன் வருவது நின்று விட்டதால் மரணம் நேரிட்டது/நேரிடுகிறது என்கிறார்கள். ஆக்சிஜன் சிலின்டரில் இருக்கா இல்லையா என்பது கூடத் தெரியாமலா சுகாதாரத் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்! என்னவோ போங்க!

ஒரு வழியாக வெளிநாடுகளெல்லாம் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன. அம்பேரிக்காவும் மருந்துக்கான மூலப்பொருள் ஏற்றுமதியைத் தடை செய்திருப்பதைக் குறித்து யோசித்து இந்தியாவுக்கு அந்தத் தடையை நீக்கலாமா என ஆலோசிப்பதாகச் சொல்லி இருக்கிறது. இந்தியாவுக்கு யாரும்/இந்தியாவிலிருந்து யாரும் அம்பேரிக்காவுக்குப் போக முடியாது. பல நாடுகளும் இந்தியாவுக்கான வருகை/இந்தியாவிலிருந்து செல்தல் ஆகியவற்றை நிறுத்திவிட்டன. எங்க பையர் இந்தியா வரணும்னு துடிச்சுட்டு இருந்தார்! பாவம்! கோவிட் இல்லை எனில் 2020 டிசம்பரிலேயே வந்திருப்பார். இப்போது நைஜீரியாவில்.  அங்கிருந்து வரமுடியுமா என்பதும் தெரியவில்லை. நேர் வழி இல்லை. ஐரோப்பா வந்து தான் வரணும்னு நினைக்கிறேன். முன்னெல்லாம் விசா கிடைக்காமல் குடும்பத்தினர் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்க முடியலையேனு வருத்தமா இருக்கும். இப்போ அந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லை. இந்தக் கொரோனா வந்து மனிதர்களை ஒருவர் முகத்தை ஒருவர் காணவிடாமல் தடுத்துவிட்டது. அதுவும் இந்த இரண்டாம் முறை மிக அதிகம். ஆனாலும் மக்கள் இன்னமும் உணரவே இல்லை.  இந்தப் பிரச்னைகள் எல்லாம் எப்போது தீர்ந்து நாம் பழைய மாதிரி வாழ ஆரம்பிப்போம் என்பதே தெரியலை/புரியலை.

இன்னிக்குச் சித்ரா பௌர்ணமி. இன்று தான் இங்கே ஶ்ரீரங்கத்தில் கஜேந்திர மோக்ஷம் நடக்கும். அம்மாமண்டபத்திற்கு நம்பெருமாள் வருவார். போன வருஷம் பார்க்கலாம்னு நினைச்சிருந்து பார்க்க முடியலை. கொரோனாவால் தடை. இந்த வருஷமும் அதே தடை நீடிக்கிறது. பெருமாளைப் பார்க்க முடியலை. கோயிலுக்கும் போக முடியலை. எங்க குலதெய்வம் கோயிலை நல்லவேளையாப் போன வாரம் பார்த்துட்டு வந்தோம். கொஞ்சம் தள்ளிப் போட்டிருந்தால் போயிருக்க முடியாது. எல்லாம் மாரியம்மன் அருள் தான்.



பக்கத்துக் கல்யாணச் சத்திரத்தில் அடுத்தடுத்துக் கல்யாணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. எந்தக் கொரோனாவுக்கும் அவங்க நிறுத்துவது இல்லை. உணவு சமைக்கின்றனர். ஒரே சப்தம்/மிச்ச உணவைக் கொட்டுகின்றனர். யாரையானும் கூப்பிட்டுக் கொடுக்கக் கூடாதோ? அந்த உணவு அங்கேயே கிடந்து நாற ஆரம்பித்து விடுகிறது. எங்க வீட்டில் திறந்த பால்கனி வழியாக அந்த துர்நாற்றம் வந்து முன் ஹாலில் உட்காரவே முடிவதில்லை. இங்கே எங்க அசோசியேஷன் தலைவரும், இன்னும் சிலரும் புகார் கொடுத்ததன் பேரில் இப்போச் செண்டை மேளம் வைக்கும் கல்யாணங்களுக்கு இடம் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். அப்படியே செண்டை மேளம் வைத்தாலும் வெளியே தெருவிலேயே அடக்கி வாசிக்கும்படி சொல்லி இருக்காங்க போல! சமீபத்திய கல்யாணங்களில் செண்டை மேளமே இல்லை. நாதஸ்வரம், தவில் தான். ஆனால் உணவு வீணாவது தான் மனதை வருத்துகிறது. பெரிய பெரிய பாத்திரங்களில் சமைக்க வேண்டாமோ! எத்தனையோ பேர் உணவில்லாமல் தவிப்பவர்களுக்குக் கொடுக்கலாமோ? அல்லது அநாதை ஆசிரமங்களுக்குக் கொடுக்கலாமோ? கீழே கொட்டுகின்றனர். பாத்திரம் தேய்க்கும் நீரில்/கழுவும் நீரில் அவை ஊறி நாற்றமெடுக்கின்றன. இதை எங்கே போய்ச் சொல்லுவது?  இந்தியாவில்/தமிழ்நாட்டில் தான் இவை எல்லாம் நடக்கும்! மக்களும் பொறுத்துப் போயாக வேண்டும்.

34 comments:

  1. கலந்துகட்டி எழுதிய பதிவு. உங்கள் எண்ணங்களை பதிவாக்கியிருக்கீங்க. நன்று.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. தேர்தல் கமிஷன் சுதந்திரமாக ஏதேனும் தடை போட்டிருந்தால் அரசியல் கட்சிகள் சும்மா விட்டிருக்காது.

    பரப்புரை, பணம் கொடுத்தல், தேர்தல் சம்பந்தப்பட்ட வியாபாரங்கள் எல்லாம் இல்லாமல் என்ன தேர்தல்? ஆனால் வாக்களிக்க நல்ல அரேஞ்மெண்ட் நன்றாக இருந்ததுன்னு படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தேர்தலைத் தள்ளிப் போட்டிருந்தாலும் மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வசை மாரி பொழிந்திருக்கும். இந்த நேரத்தில் எதைச் செய்தாலும் அது பிரதமர் மோதி என்பதால் தவறான கோணத்திலேயே பார்க்கப்படும்! வந்ததையும் அனுபவித்துத் தானே ஆகணும். இதோ வெளிநாட்டு உதவிக்கரங்கள் நீண்டிருக்கின்றன. யாரும் பாராட்ட மாட்டார்கள். அலட்சியமாகப் பேசுவார்கள்.

      Delete
  3. குலதெய்வம் படம் - கர்ப்பக்ருஹப் படத்தையும் எடுத்திருக்கீங்களே. நன்று.

    ReplyDelete
    Replies
    1. நிறையத் தரம் எடுத்துப் போட்டிருக்கேனே நெல்லை! நீங்க முதல் முறையாப் பார்க்கிறீங்களோ?

      Delete
  4. திருமணமண்டப உணவு வீணாதல் - அதைப்பற்றிய கவலை அப்புறம். மத்தவங்களுக்கு சுகாதாரக் கேடாக தெருவில் கொட்டுவது மிக அநீதியானது. புகார் கொடுத்தால்தான் இது சரியாகும். அதுவும்தவிர திருமண மண்டபத்துக்கு அருகில் என்பதால், சப்தத்தைத் தவிர்க்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை! தெருவில் கொட்டி இருந்தால் கார்ப்பரேஷன் ஊழியர்கள் பார்த்திருப்பார்களே! இது மண்டபத்துக்கு உள்ளேயே உள்ள வெட்ட வெளியில். அது எங்களோட இரண்டு அறைகளின் ஜன்னல்கள் பக்கமாக வருவதால் பார்த்தாலே எங்களுக்குத் தெரியும், என்பதோடு துர் நாற்றத்தால் பாதிக்கப்படுவதும் முதலில் நாங்கள் தான்!

      Delete
  5. ஆம் கொரோனா பரவியதற்கு முக்கிய காரணம் தேர்தல் பிரச்சாரங்களே...

    எந்த தலைவர்களுக்கும் மக்களைப்பற்றிய கவலை கிடையாது. தேர்தல் கமிஷனும் ஓர் வறம்புக்கு மேல் மத்திர அரசுக்கு கட்டுப்பாடு போடமுடியாது.

    பிரச்சாரங்களை ஊடகங்கள் வாயிலாக பேச சொல்லி இருக்கலாம். இம்முறை நிறைய கூத்தாடிகள் பிரச்சாரத்துக்கு வந்ததால் மக்களும் அவர்களைக் கண்டு மோட்சம் பெறத் துடித்தார்கள்.

    அதன் விளைவாக கொரோனா தமிழகத்தில் பத்து லட்சம் கடந்து விட்டது. சமீபத்தில் மதுரையில் உலக்கை நாயகன் வருவதால் தெருவை அடைத்து வைத்தார்கள். ஸ்கூட்டியில் சென்ற நான் காத்திருக்கவில்லை அடுத்த சந்து வழியாக போய் விட்டேன்.

    எல்லாம் இறைவன் செயல் கடந்தே போகட்டும். வாழ்க நலம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! தேர்தல் சமயத்தில் எல்லோரும் எந்தவிதக் கவலையுமின்றி சுற்றித் திரிந்தார்கள். இப்போ லபோ திபோ என அடிச்சுக்கறாங்க. தொலைக்காட்சி மூலம் பிரசாரம் செய்திருந்தாலே போதுமானது. அதிலும் சினிமா நடிக, நடிகைகளைப் பார்ப்பது நம் மக்களுக்குக் கடவுளைப் பார்ப்பதை விட மேலானது!

      Delete
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ப்ளாக்கர் கேட்கும் கேள்விகள் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது பதிவு எழுதுவதற்கு ஐடியாவெல்லாம் கொடுக்கிறதே ....!

    அரசை சொல்லவா,மக்களை சொல்லவா... ஆனால், கொரோனா பெருகி விட்டது என்கிறார்கள். சிலர் கொரோனா என்று ஒன்றுமே இல்லை என்கிறார்கள். மறுபடியும் லாக்டவுன் என ஆங்காங்கே மாநில அரசுகள் அறிவிக்கின்றன.ஒன்றும் புரியவில்லை. மொத்தத்தில் மன அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. பழைய நிலைக்கு எப்போது வரப்போகிறோம் என்று கவலையாக இருக்கிறது. காலம் வேகமாக ஓடுகிறது.

    மாரியம்மன் படங்கள் நன்றாக உள்ளன. உண்மைதான்... நீங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்த வேளை அந்த கடவுள் அளித்த அனுகிரஹத்தில்தான்..! அந்த அம்மன்தான் சீக்கிரமாக மனிதர்களுக்கு ஏற்ப்பட்ட இந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

    அருகிலுள்ள கல்யாண மண்டப கலாட்டாக்கள் மனதை வருத்துகின்றன. முன்பெல்லாம் நிறைய மிகுதியாவதை ஆசிரமத்தில் கொண்டு தருவார்களே... அதற்கு அங்கும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்தால்தான் ஏற்றுக் கொள்வார்களோ என்னவோ..?
    இல்லை, இந்த கொரோனா கலவரத்தில் வெளி உணவுகள் ஏற்கப்பட மாட்டாது போலும்..!
    எல்லாவற்றையும் விபரமாக எழுதியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, இங்கும் மக்கள் அலட்சியமாத் தான் திரிகின்றனர். இப்போதைய நிலைமையில் வீட்டுக்குள் கூட மாஸ்க் போட்டுக்கச் சொல்லுகின்றனர். வெளியே போட்டுப் போனாலே அதிகம். அதைக் கூட ஒழுங்காய்ச் செய்வதில்லை.
      ஆம், உண்மையில் குலதெய்வம் அனுகிரஹம் இருப்பதால் தான் அன்று கோயிலுக்கே செல்ல முடிந்தது.
      கல்யாண மண்டபத்தில் உணவு வீணாவது அநேகமாய் அனைவருக்கும் தெரிந்ததே! எல்லோருமே ஆசிரமங்களுக்குக் கொடுப்பதில்லை. இங்கே அம்மாமண்டபம் வாசலில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்குக் குறைந்த பட்சமாகப் பத்து முதல் இருபது ரூபாய் வரை தர வேண்டும். அதையும் கொடுத்து சாப்பாடையும் கொடுத்தால் வாங்கிப்பாங்க. ஆனால் சாப்பிடுவது சந்தேகமே!

      Delete
  7. அன்பு கீதாமா,
    அருமையான நிகழ்காலத்துக்கான பதிவு.
    தொற்று இரண்டு சுற்றுடனா நிற்கப் போகிறது?

    தடுப்பூசி அனைவரையும் காக்க வேண்டும். எல்லோரும் போட்டுக் கொண்டால் தான் பலன் என்று செய்திகள் கதறுகின்றன. அதையும் வேண்டாம் என்று சொல்பவர்களும் இந்த ஊரில் இருக்கிறார்கள்.

    அரசியல்வாதிகள் பேசிவிட்டுச் சென்றும் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் .போன உயிர்கள் திரும்புமா.
    சென்னையிலிருந்து வரும் பத்திரிக்கைகளையோ வாட்ஸாப் செய்திகளையோ
    கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
    உலக்மே அழிவுப் பாதையில் தன்னைத்தானே
    செலுத்திக் கொள்கிறதா...புரியவில்லை.

    ஆமாம் திருமணப் பத்திரிக்கைகள் வருகின்றன. சிலர் 50 நபர்களுடன்
    பூர்த்தி செய்வதாகவும் எழுதி இருக்கிறார்கள்.

    உங்கள் பக்கத்துத் திருமண மண்டபத்தை
    நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
    இப்படிக் கூட செய்வார்களா. மனித தர்மத்துக்கே
    இழிவு ஆகுமே.
    மாரியம்மன் படங்கள் அருமை. நல்ல மனம் வைத்து உங்களை
    வரவழைத்துப் பிரார்த்தனை நிறைவேற்றிக் கொண்டாள்.
    குழந்தைகள் நலமாக இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, சுமார் நான்கு நாட்கள் கழித்து இன்று உடம்பு கொஞ்சம் பரவாயில்லை. அடுத்த டோஸ் இன்னும் கடுமையாக இருக்கும் என்று சிலரும், இருக்காது என்று பலரும் சொல்கின்றனர். அதுக்கு இன்னமும் ஒரு மாசம் இருக்கே! போகப் போகப் பார்த்துக்கொள்ளலாம். எங்களுக்கும் ஒரு சில பத்திரிகைகள் வந்தன. ஆனால் எந்தக் கல்யாணத்துக்கும் போவதாய் இல்லை. பக்கத்துத் திருமண மண்டபத்திற்கு வாய் இருந்தால் அழும். ஓய்வோ, ஒழிச்சலோ இல்லை. அம்மன் அருளால் பிரார்த்தனைகள் நிறைவேறின.

      Delete
  8. டாஷ்போர்டில் கேள்விகள் வியப்பாக இருக்கே!

    மாரியம்மன் அருளால் வேண்டுதலை நிறைவேற்றி வந்து விட்டீர்கள்.
    படங்கள் நன்றாக இருக்கிறது. அம்மனை தரிசனம் செய்து கொண்டேன். மாரியம்மன் இந்த கொரோனாவை ஒழித்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

    உணவு வீணாகி போவது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது பார்க்க. கல்யாணத்திற்கு 100 பேர்கள்தான் வர வேண்டும் என்று இருக்கிறது, அதைவிட குறைவாக வந்தார்களோ மக்கள்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, உங்களுக்கு வரலை என்பது எனக்கு ஆச்சரியம். ப்ளாகரின் தோற்றம் மாற ஆரம்பித்ததில் இருந்தே வந்து கொண்டிருந்தது. இப்போதும் வந்து கொண்டே இருக்கிறது. உணவை வீணடிப்பது மனதுக்கு வேதனை தான். கல்யாணத்திற்கு வந்திருந்த இரு சக்கர வாகனங்களே 50 எண்ணிக்கையைத் தாண்டும். எத்தனை பேர் வந்தார்களோ, தெரியலை. :)

      Delete
  9. பிளாக்கர் ஏதாவது ஐடியா கொடுத்துக் கொண்டே இருக்கும் போல..   ஆனால் அவை கொடுக்கும் ஐடியா நமக்கு அல்லது எனக்கு ஒத்து வருவதில்லை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், நானும் ப்ளாகர் சொல்வதை எல்லாம் கேட்பதே இல்லை.

      Delete
  10. அமெரிக்கா இப்போது மூலப்பொருள் கொடுக்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறது.  பல நாடுகள் ஆக்சிஜன் அனுப்புகின்றன.  நம்மால்தான் முன்யோசனையுடன் செயல்படமுடியவில்லை.  வருத்தம்தான்.  பட்டபிறகுதான், அதுவும் கொஞ்சம் தாமதித்தே புத்தி வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், பல வெளிநாடுகள் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன. நல்லபடி பயன்படுத்திக் கொள்வது நம் திறமை/சாமர்த்தியம்.

      Delete
  11. சித்ரா பௌர்ணமி...    அப்பா நினைவு நாள்.   நேற்று அப்பவே புதிய இல்லத்துக்குவ வரவழைத்த திருப்தி.  சென்ற வருடம் விட்டுப்போச்சு.

    ReplyDelete
    Replies
    1. நல்லபடியாக உங்கள் அப்பா ஸ்ராத்தம் நடந்ததுக்கு இறைவனுக்கு நன்றி ஶ்ரீராம்.

      Delete
  12. பக்கத்து கல்யாண மண்டப அட்டூழியங்கள் பற்றி என்ன சொல்ல...   அதுவும் வணவுப்பொருளை வீணாக்குகிறார்களே...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ரொம்பவே அக்கிரமம் தான்! யார் போய்ச் சொல்லுவது?

      Delete
  13. அன்புள்ள கீதாம்மா, உங்கள் தயவில் அம்மனின் தரிசனம் கிட்டியது.
    உணவை வீணாக்குவது வருத்தமாக உள்ளது.இந்த உணவில்லாமல் எத்தனையோ பேர். விசேஷங்கள் நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பா, அம்மாவின் திருமணநாளன்று அவர்களுடன் ஸ்ரீரங்கம் சென்று வந்தோம். பின் மாமியார் மாமனாருடன் , திருக்கடையூர், திருநள்ளாறு சென்று வந்தோம். ஒரு வருடம் எங்கும் செல்லவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தவறாமல்,பழனி, திருப்பதி செல்வோம்.சென்ற வருடம் செல்லவில்லை. இந்த வருடமும் செல்ல முடியும் என்று தோன்றவில்லை.
    பிள்ளைகளுக்கு பள்ளி திறந்து அவர்கள் மகிழ்ச்சியாக தங்கள் நட்புக்களை பார்த்து விளையாடுவது எந்நாளோ? அந்த நாளும் வந்திடாதோ என ஏக்கம் கொள்கிறது மனம். எல்லாம்வல்ல இறைவன் நுண்மியிலிருந்து இப்புவியை காத்து ரட்சிக்க பிரார்த்திக்கிறேன் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வானம்பாடி. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. விரைவில் உங்களுக்கும் திருப்பதி, பழனி சென்று வரும்படியான சூழ்நிலை அமையட்டும். குழந்தைகளை நினைத்தால் கவலையாய்த் தான் இருக்கிறது. எல்லோரையும் ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

      Delete
  14. உணவுப் பொருட்களை வீணாக்குவது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது...
    கொஞ்சமும் ஈவு இரக்கமற்ற செயல்...

    ReplyDelete
    Replies
    1. யார் சொல்லுவது அவங்க கிட்டே! காடரர் ஆட்கள் என்பதால் மண்டபத்து ஊழியர்களிடம் சொல்ல முடியாது. அதோடு மண்டபத்து ஊழியர்கள் அவங்க கொடுக்கும் சாப்பாடை வாங்கிக்கக் கூடாதுனு ஒரு சட்டம் அந்த மண்டபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இல்லைனா அவங்களாவது பிரிச்சு எடுத்துக் கொண்டு போயிருக்கலாம்.

      Delete
  15. அம்மனின் தரிசனம்
    ஆனந்தம் நிதர்சனம்..
    அல்லலும் அகன்றிடும்
    அருள்நிதி குவிந்திடும்!..

    ReplyDelete
    Replies
    1. அவள் அருள் நிதியை விட வேறென்ன வேண்டும். நன்றி துரை.

      Delete
  16. கொரொனா இம்முறை மிகவும் பரவுகிறது. எங்கள் வீட்டில் மனைவி, மகள் (கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதால் கொரோனா ஊசி போட்டாச்சு இரண்டுமே இரண்டாவது மகன் போட்டாச்சு அவனும் மருத்துவக் கல்லூரிய்ல். நானும் பெரிய மகனும் என் அக்காவும் தான் போட்டுக் கொள்ள வெண்டும். பெரியவனுக்கு எப்பொது ரஷ்யா செல்ல முடியுமோ தெரியவில்லை ஆகஸ்ட் ஆகிவிடும் போல. போனவருடம் ஏப்ரலில் வந்தவன். எல்லாமே ஆன்லைனில்தன

    கல்யாணங்களில் உணவு வேஸ்ட் ஆவது மனதிற்கு வேதனை. இக்கொரொனாவில் எத்தனை பேர் உணவின்றி இருக்கிறார்கள். கொடுத்திருக்கலாம்.

    மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை.

    துளசிதரன்

    ReplyDelete
  17. ஏன் நம்மால் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்க் முடியவில்லையோ? இத்தனை அடிபட்டும், எத்தனையோ வல்லுநர்கள், மருத்துவர்கள் நம் நாட்டில் இருந்தும் ஏனோ இப்படி? முன் யோசனை திட்டமிடல் இல்லை என்றே சொல்லலாம். டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் இன்னும் நன்றாக வளர வேண்டும்..

    கல்யாண மண்டப அட்ராசிட்டிஸ் என்னத்த சொல்ல? ஏன் இப்படி உணவை வீணாக்குறாங்க? நம்மூர்ல ஏழைகள் இல்லாமல் ஆகிவிட்டனரா என்ன? அல்லது இல்லங்கல் இல்லையா என்ன?


    கீதா

    ReplyDelete
  18. அக்கா அட ப்ளாகர் ஐடியா எல்லாம் கொடுக்குமா? எங்கு கொடுக்கிறது? நம் ப்ளாகர் டாஷ் போர்டிலா? ஹூம் என்னை அது முடுக்கு விடவெ இல்லையே இத்தனை மாதங்கள் ஏன் பதிவு போடலைனு என்னை கேட்கவே இல்லையே ஹிஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
  19. அம்மன் தரிசனம் வெகு அழகு! அன்று சென்றதன் ஃபோட்டோ இல்லையா?

    கீதா

    ReplyDelete