எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 08, 2021

சௌந்தர்ய லஹரி! 2 நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

சங்கரரின் காலம் பற்றி  ஓரளவுக்குக் கூறுகிறேன். திருச்சூர் வடக்கு நாதர் கோயிலில் பஜனம் இருந்த ஆர்யாம்பாளுக்கும், சிவகுருநாதருக்கும் கனவில் வடக்குநாதர் தோன்றிக் குறைந்த வயதுள்ள புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா? அல்லது அதிக வருடம் உயிர் வாழும் சாதாரணக் குழந்தைகள்போதுமா எனக்கேட்க இருவருமே புத்திசாலிப் பிள்ளையைக் கேட்டுப் பெற்றுக் குழந்தை கர்ப்பத்தில் தோன்றிப் பிறந்தும் ஆயிற்று. குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும். சங்கரன் எனப் பெயரிடுகிறார் குழந்தையின் தகப்பனார். இது எப்படித் தீர்மானிக்கப்பட்டது என்பதை இங்கே நம் பரமாசாரியாள் கூறுவதைப் பார்ப்போம்; சங்கரர் ஒரு அவதார புருஷர் எனவும் சாக்ஷாத் ஈசனின் அம்சம் என்பதும் தெரிந்ததே. ஆனால் பெயர் வைக்கப்பட்ட காரணம் அதுவல்ல.

அவர் பிறந்த மாதம், திதி, நக்ஷத்திரம், பக்ஷம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டும் விதமாகவே பெயர் வைக்கப்பட்டது. மேலும் கேரளாவில் அந்தக் காலம் தொட்டே ஒருவர் பிறக்கும் மாசம், திதி, பக்ஷம் போன்றவற்றைக் கடபயாதி சங்க்யை என்னும் எண்ணிக்கைக் குறிப்பின்படி குறிப்பிட்டே நாமகரணம் செய்வார்கள் என்றும் பரமாசாரியாள் கூறுகின்றார். இதற்கு உதாரணமாக நாமும் கேரளத்து அரசர்களுக்கு அவர்களின் நக்ஷத்திரத்தைச் சேர்த்துச் சித்திரைத் திருநாள், சுவாதித் திருநாள் என்றெல்லாம் அழைப்பதைப் பார்க்கிறோம். ஆசாரியாள் பிறந்ததாக பரமாசாரியார் கூறுவது நந்தன வருஷம். கி.மு. 509 என்கிறார். பிறந்த மாதம் வைகாசி. சுக்ல பக்ஷம். வைகாசி இரண்டாவது மாதம், சுக்லபக்ஷம் முதல் பக்ஷம். அதாவது மாதம் 2, பக்ஷம் 1, திதி பஞ்சமி ஐந்தாம் திதி. ஆக திதி 5. இதை 2-1-5 என எடுத்துக்கொண்டு இதைத் தலைகீழாக்குவது கடபயாதி சங்க்யை முறையில் அக்ஷரங்கள் குறிப்பிடப்படும்.

5-1-2 இது எவ்வாறெனில் கடபயாதி சங்க்யையில் மெய்யெழுத்துக்கு எந்தவிதமான பொருளும் இல்லை என்பதால் “ங்” என்னும் எழுத்தை நீக்க வேண்டும். இப்போது பார்த்தால் 5 ஆம் எண்ணுக்குரிய எழுத்து “ச” 1-ஆம் எண்ணுக்குரிய எழுத்து “க” இது சம்ஸ்கிருதம் முறையாகக் கற்றிருந்தாலே புரியக்கூடும். கசடதபற என நமக்குத் தமிழில் வருவது போல் சம்ஸ்கிருதத்தில் யாத்யஷ்ட பிரகாரம் ய-ர-ல-வ-ச என வரும்போது ச எழுத்து ஐந்தாம் எண்ணைக் குறிக்கும். பஞ்சமித் திதியைக் குறிக்கும் 5-ஆம் எழுத்தை முதலில் “ச” என்றும், அடுத்து பக்ஷத்தைக் குறிக்கும் எண்ணான 1-ஆம் எழுத்தை அடுத்தும் எடுத்துக்கொண்டு “க” என்றும், அடுத்த இரண்டாம் மாதமான வைகாசியின் எண் 2-ஆம் எண்ணைக் குறிக்கும் எழுத்து “ர”வை ச் சேர்த்தும் சகர சேர்த்து சங்கரர் ஆயிற்று என்று பரமாசாரியாள் கூறுகிறார். தமிழிலேயும் எண்களைக் குறிக்க எழுத்தைப் பயன்படுத்துவது உண்டல்லவா?? அதே போல் தான் இங்கேயும். இதற்குத் தமிழ் எண்கள் பரிச்சயம் இருந்தால் புரியும்.

தமிழில், “க” என்றால் எண் 1, “உ” என்றால் எண் 2, “’ரு” என்றால் எண் 5 எனக்குறிக்கப்படும். நம் தமிழ் மூதாட்டியான ஒளவை, எட்டேகால் லக்ஷணமே எனத் தொடங்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளாள் என்பதை அறிவீர்களா?? எட்டேகாலைக் குறிக்கும் எண்கள் “அ” என்பது எட்டையும் கால் என்னும் பின்னத்தொகையைக்குறிக்க “வ” என்னும் எண்ணும் பயன்படுத்தப்பட்டது. அவ இரண்டு எழுத்துக்களையும் லக்ஷணமே என்பதோடு சேர்த்தால் அவலக்ஷணமே என்று வரும் இல்லையா? இதைத் தான் மறைமுகமாய் ஒளவை எட்டேகால் லக்ஷணமே என்றாள். அதுபோலவே இங்கேயும் சங்கரரின் பெயருக்குப் பயன்படுத்தப்பட்டது. இது காலத்தை எப்படிக் குறிக்கிறது என்பதற்கான ஆதாரம் ஆதி சங்கரர் உட்பட குரு பரம்பரையின் ஆசாரியர்கள் சித்தி அடைந்த தினம் குறித்த “புண்ய ஸ்லோக மஞ்சரி” என்னும் குறிப்புக்களிலிருந்து ஆசாரியாளின் முக்தி தினம் குறித்த குறிப்பைப் பரமாசாரியாள் மேற்கோள் காட்டுகிறார். 

அதில் ஆசாரியாள் ஸித்தி அடைந்த தினம் குறித்த ஸ்லோகம் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்.

 மஹேசாம்சாத் ஜாத: மதுரம் உபதிஷ்டாத்வய நய: மஹா-மோஹ-த்வாந்த ப்ரசமந ரவி: ஷண்மத குரு: பலே ஸ்வஸ்மிந் ஸ்வாயுஷி சரசராப்தே (அ) பிசகலேர் விலில்யே ரக்தாக்ஷிண்-யதிவ்ருஷ ஸிதைகாதசி-பரே 

மேற்கண்ட ஸ்லோகம் ஆசாரியர் ஷ்ண்மதங்களையும் ஸ்தாபித்து ஸநாதன தர்மத்தை நிலை நாட்டியதைக் குறிப்பிட்டிருப்பதோடு, ரக்தாக்ஷி வருஷம் வைகாசி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசியில் ஸித்தி அடைந்ததாயும் சொல்லி உள்ளது. ரக்தாக்ஷி வருஷம் எப்போது வந்த ரக்தாக்ஷி என்பதற்கான அத்தாட்சி மூன்றாவது வரியில் கூறி இருப்பதாய்க் கூறுகிறார். அதாவது ஆசாரியாள் ஸித்தி அடைந்த போது அவர் வயதை கடபயாதி ஸங்க்யையில் வார்த்தைகளாய்க் கொடுத்திருப்பதாய்க் கூறியுள்ளார்.மேற்கண்ட ஸ்லோகத்தில் வரும் சரசராப்தே எனும் வார்த்தைதான் கலியில் எத்தனாம் வருஷம் என்ற எண்ணிக்கையைச் சொல்வது எனப் பரமாசாரியார் கூறுகிறார். இதை saracharaabde என்றே உச்சரிக்க வேண்டும். உச்சரிப்பில் கொஞ்சம் பிழை ஏற்பட்டாலும் பொருள் மாறும். “சர”(sara) என்றால் அம்பு, அல்லது போவது என்று பொருள் கொண்டாலும் பரமாசாரியார் இதற்கென உள்ள “காதிநவ” என்னும் ஸூத்ரத்தைத் துணை கொண்டு கணக்கிடவேண்டும் என்கிறார்.

 ஏற்கெனவே நாம் பார்த்தோம், ய-ர-ல-வ-ச என்று “ச” ஐந்தாவதாக வருவதை. “ர” இரண்டாவதாய் வருகிறது. ச என்னும் எழுத்து 5 என்றால் ர என்னும் எழுத்துக்கு 2. இதிலே சரசர என்பதில் வரும் கடைசி ர வும் 2 என்னும் எண்ணைக் குறிக்கிறது. “ச” என்பது ‘காதிநவ”வில் 6 என்னும் எண்ணையும் கொடுப்பதாய்ச் சொல்கிறார். (இந்த இடத்தில் கொஞ்சம் தெளிவாய் இல்லை; புத்தகம் இல்லை என்னிடம். பிடிஎப்பில் எழுத்துக்கள் ஒன்றன்மேல் ஒன்று வந்துள்ளதால் படிக்க முடியவில்லை) ஆக சேர்த்துப் பார்த்தால் 5262 என்று ஆகும் என்கிறார். அதைத் தலைகீழாக்கினால் 2625 என்று வரும். எனில் கலி பிறந்து 2625 வருஷத்திற்குப் பின்னர் வந்த ரக்தாஷியில் வைகாசி சுத்த ஏகாதசியில் ஆசாரியார் ஸித்தி அடைந்துள்ளார் என்கிறார். எழுத்துக்களை எண்களாக்கும் வழக்கம் மேலை நாடுகளிலும் உண்டு என்பதை அறிவோம் அல்லவா. அதே போல் தான் இங்கேயும். கலியுகம் பிறந்தது கி.மு. 3102 எனச் சொல்கின்றனர். கலி பிறந்து 2625-வது வருடம் என்பது கி.மு. 477 ஆகும். 

அடுத்து ஆசாரியார் ஸித்தி அடையும்போது அவரின் வயசைச் சொல்லும் கணக்கு. மேற்கண்ட ஸ்லோகத்தில் வரும் “பலே” என்பது ஒரு சிலேடை வார்த்தை என்கிறார் பரமாசாரியார். ‘ப’, ‘ல’ என்னும் இரண்டு எழுத்துக்களைக் கொண்டு பார்த்தால் அது ஆசாரியாரின் ஸித்தி அடைந்த வயதைக் குறிக்கும் எனவும் ‘பல’ என்று சேர்த்து எடுத்துக்கொண்டால், காரியத்தில் வெற்றி அடைந்ததை அதாவது ஆசாரியாளின் அவதாரப் பூர்த்தி அடைந்து பரமேச்வரனிடம் ஐக்கியமடைந்ததைக் குறிக்கும் எனவும் கூறுகிறார். ‘ப’, ல’ என்னும் எண்ணிக்கையில் ‘ப’ என்பது 2ஆம் எண்ணையும் ஏற்கெனவே பார்த்தபடி ‘ல’ என்பது 3 ஆம் எண்ணையும் குறிக்கிறது. இரண்டும் சேர்த்தால் வரும் 23 என்னும் எண்ணை மாற்றிப் போட்டால் வரும் 32 ஆசாரியார் ஸித்தி அடைந்தபோது அவரின் வயசைக் குறிக்கிறது. கி.மு. 477-ஆம் ஆண்டு 32 வயதில் ஸித்தி அடைந்தார் எனில் கி.மு. 477+32=509 என்பதால் ஆசாரியரின் அவதார வருடம் கி.மு. 509 என வருகிறது. மேலும் ஆசாரியார் ஸித்தி அடைந்தது ரக்தாக்ஷி வருடம் எனவும், அவதாரம் செய்தது நந்தன வருடம் எனவும் இருப்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் கி.மு. 477-ஆம் ஆண்டில் ரக்தாக்ஷியும், கி.மு. 509இல் நந்தனவும் வருகிறது. ஆகவே ஆசாரியார் அவதரித்தது கி.மு. என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

அபிநவ சங்கரருக்குப் பின்னர் வருகிறேன். இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் சங்கரர் காலத்தில் புத்தமதம் பரவி இருந்ததை அறிந்து கொள்ளலாம். அப்போது பக்தி மார்க்கம் துவங்கவில்லை என்பதும் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் த்ரவிட சிசு என முருகனைக் குறித்து சங்கரர் கூறி இருக்க இயலாது.  ஞானசம்பந்தரைச் சொல்லி இருந்தால் அதற்கேற்ற ஆதாரங்கள் எதுவும் இல்லை. தன் காலத்துக்கு முன்னர் தோன்றிய சம்பந்தரைத் தான் புகழ்ந்திருக்க முடியும் என்பது ஆய்வாளர்கள் கூற்று எனில் சங்கரரும் கவிதை மழை பொழிந்து கவிகளுக்குள் கவியாகத் தான் இருந்திருக்கிறார். மேலும் வேறு எந்த நாயன்மார்களையும் சங்கரர் குறிக்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. சம்பந்தரை மட்டும் வியந்து பாராட்டினார் என்று சொல்வதற்கில்லை. அவருக்கு முன்னரே காரைக்காலம்மையார், அப்பர், சிறுத்தொண்டர் போன்ற பலர் இருந்திருக்கின்றனர் அல்லவா? இவர்களில் யாரையும் ஏன் சொல்லவில்லை?? ************************************************************************************* மேற்கண்ட விளக்கத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும்படி  விண்ணப்பித்துக்கொள்கிறேன். அல்லது படிக்கும் வேறு யாரேனும் விளக்கமோ, தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும்படியோ கூறலாம். நன்றி.




12 comments:

  1. கீதாக்கா நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டாலும் இந்தக் கணக்கு வழக்கு மண்டையில் படிவது கஷ்டமாகத்தான் இருக்கிறது.

    சங்கரர் கவிதை மழை பொழிந்தார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. எனக்குப் புரிகிறதோ இல்லையோ அவர் இயற்றிய பலவற்றையும் பாடல்களாக, ராகத்துடன் கேட்கும் போது காதிற்கும் மனதிற்கும் இனிமையாக இருக்கிறது. ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, எனக்கு மட்டும் மண்டையில் பதிந்ததா என்ன? மண்டையில் ஏற்றிக் கொண்டேன். எழுத்தும் , எண்ணும் சொல்லும் கணக்கு ஓரளாவுக்குப் புரிஞ்சதால் சமாளிச்சிருக்கேன். :)

      Delete
  2. நல்ல பதிவு. நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்

    ReplyDelete
  3. படித்து விட்டேன்!

    ReplyDelete
  4. இதுவரை அவ்வளவாக அறிந்திராத விஷயங்கள். அப்போதே புத்தம் பரவத் தொடங்கியிருந்தது என்று சொல்லியுஇருப்பதைப் பார்க்கும் போது, புத்தர் அவருக்கும் முன்பே பிறந்திருக்க வேண்டும். ஆனால் புத்தரின் காலகட்டம் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் என்றும் சொல்லப்படுகிறதே. ஆனால் அதிலும் ஒவ்வொருவரும் சொல்வது வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன். ஆய்வுக்குரிய விஷயங்கள் இவை எல்லாம். :)

      Delete
  5. இதுவரை அவ்வளவாக அறிந்திராத விஷயங்கள். அப்போதே புத்தம் பரவத் தொடங்கியிருந்தது என்று சொல்லியுஇருப்பதைப் பார்க்கும் போது, புத்தர் அவருக்கும் முன்பே பிறந்திருக்க வேண்டும். ஆனால் புத்தரின் காலகட்டம் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் என்றும் சொல்லப்படுகிறதே. ஆனால் அதிலும் ஒவ்வொருவரும் சொல்வது வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

    துளசிதரன்

    ReplyDelete
  6. நல்ல விளக்கமான பதிவு. இதில் சந்தேகம். வரும் அளவுக்கு. ஞானம் போதாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. நன்றி.

      Delete
  7. நிறைய விஷ்யங்களை சொல்கிறது பதிவு.
    நிறைய படித்து பகிர்ந்து இருக்கிறீர்கள்.
    அருமை.


    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, நன்றி.

      Delete