இங்கே தமிழ் இளங்கோ அவர்களின் பதிவுக்கான சுட்டி!
திரு தமிழ் இளங்கோ அவர்கள் பதிவில் அவர் சொல்லி இருந்தவற்றுக்கு என்னுடைய கருத்து! இவற்றை அங்கே சொல்லி இருக்கேன் என்றாலும் திரு ஜோதிஜி பதிவு மாதிரி இருக்கிறது என்று சொல்லவே பதிவாகவே போடலாம் என்னும் எண்ணத்திலும் அவர் பதிவைப் படிக்காதவர்களும் இருப்பார்களே அவங்களும் தெரிஞ்சுக்கலாம் என்பதாலும் இங்கே கொடுக்கிறேன். ஆகமங்கள் குறித்து நான் தேடித் தெரிந்து கொண்டவை பற்றி என்னுடைய "சிதம்பர ரகசியம்" நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். அது பற்றிய சுட்டிகள் கீழே!
இங்கே
இங்கே
இங்கே
இங்கே
ஆகமம் கற்காமல் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது. மேலும் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்களுக்கும் எங்களைப் போன்ற சாதாரண பிராமணர்களுக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. சிவாசாரியார்கள் வேதம் மட்டும் கற்காமல் ஆகமம், கோயில் வழிபாட்டு முறைகள் போன்றவற்றோடு சிவ தீக்ஷையும் பெற்றிருப்பார்கள். அத்தகையோரே பெரிய கோயில்களில் கருவறைக்குச் சென்று வழிபாடுகள் நடத்த முடியும். மற்றவர்கள் அவருக்குத் துணையாக உதவிகள் செய்யலாம். இந்தப் படிப்பும் சுமார் பனிரண்டு வருடங்கள் படித்தாக வேண்டும். அப்படிப் படித்துக் கோயிலில் உள்ளே சென்று வழிபாடு செய்யும் தகுதி படைத்த நாடார் குல இளைஞர் ஒருவர்தென் மாவட்டத்தில் இருக்கிறார்.
பெரும்பாலும் சரியான புரிதல் இல்லாமலேயே உங்கள் பதிவு எழுதப் பட்டிருக்கிறதோ என எண்ணுகிறேன். இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். வேறு யார் எழுதி இருந்தாலும் இப்படிச் சொல்லி இருப்பேனா என்பது சந்தேகம். இங்கே சொல்லலாம் என்று தோன்றியதாலேயே சொல்லி இருக்கேன்.
கட்டண தரிசனங்கள் கோயில்களில் எந்த அர்ச்சரகராலும் ஏற்படுத்தப்படவில்லை. அது அறநிலையத் துறை அதிகாரிகளால் செயல்படுத்தப்படுகிறது, பெரும்பாலான மக்கள் அதை எதிர்க்கிறார்கள். தென் மாவட்டங்களான நாகர்கோயில், சுசீந்திரம், கன்யாகுமரி, திருவட்டாறு ஆகிய இடங்களில் இந்தச் சிறப்பு தரிசனம் என்பது இல்லை. மக்கள் சாதாரணமாகச் சென்று போய்ப் பார்த்து வரலாம். கூட்டம் நிறைந்திருந்தாலும் மக்கள் தரிசனத்துக்கு இடையூறாகவோ தடங்கலாகவோ இல்லை. மாலை வேளையில் கன்யாகுமரியின் தரிசனம் செய்தோம். இரவு ஏழு மணிக்கு சுசீந்திரத்தில்! எல்லாம் நன்றாகவே பார்க்க முடிந்தது.
வைணவர்களிலும் மாற்று இனத்தைச் சேர்ந்த அந்தணரல்லாத ஒருவர் வைணவ ஆசாரியர்களில் ஒருவரான பட்டராக ஆகி உள்ளார். இது அவரவர் விருப்பம், படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்தது. வைணவ ஆகமங்களில் வைகானசம், பாஞ்சராத்ரம், முனித்ரயம் எனப் பிரிவுகள் உள்ளன. வைகானசம், பாஞ்சராத்ரம் குறித்து விளக்கங்களை என்னுடைய சிதம்பர ரகசியம் நூலில் நானும் கேட்டறிந்து விளக்கம் கொடுத்திருக்கிறேன். ஆகமவிதிகளைக் கற்றுக் கொடுக்கவெனச் சென்னையிலும் ஓர் பள்ளி உள்ளதாக அறிகிறேன். பெரும்பாலான சிவாசாரியார்கள் இங்கே திருச்சியில் உள்ள ஓர் பள்ளியிலேயே கற்கின்றனர் என்றும் அறிந்தேன். வெறும் வேதம் கற்பதோடு எதுவும் முடிந்து விடாது. எந்த வேதத்திலும் ஆகமங்கள் பற்றிக் குறிப்பிடவும் இல்லை. ஆகமப் படிப்பு தனி! வேதம் படித்தல் தனி! அதர்வ வேதத்தில் ஒரு சில குறிப்பிட்ட யாகங்கள், யக்ஞங்கள், பரிகார பூஜைகள் குறித்தும் சில தேவதைகளின் வழிபாட்டு முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத வைத்திய முறை பெரும்பாலும் அதர்வ வேதம் சார்ந்தவை என்றே சொல்லப்படுகின்றன. சம்ஸ்கிருதப் புலமை இருந்தால் தவிர ஆயுர்வேதம் படிக்கவும் முடியாது!
கோயில் விளக்கு விஷயம். அந்தக் காலங்களில் கோயில்களில் இலுப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய் கலந்தே தீபங்கள், தீவட்டிகள் ஏற்றுவார்கள். கோயில்களுக்கு என உள்ள நிலங்களில் இலுப்பை மரங்கள், ஆமணக்கு மரங்கள்(கொட்டைமுத்துச் செடி என்பார்கள், சின்ன மரமாகக் காணலாம், வேலியோரங்களில் பெரும்பாலும் காணப்படும்.) எள் விதைப்பு போன்றவை நடைபெற்றுப் பெரும்பாலும் அந்த அந்தக் கிராமம் அல்லது கோயிலைச் சேர்ந்த கணக்குப் பிள்ளை, தர்மகர்த்தா ஆகியோர் முன்னிலையில் எண்ணெய்க்குத் தேவையானவை சேகரிக்கப்பட்டு எண்ணெய் எடுக்கப்பட்டுக் கோயில்களில் கொடுக்கப்படும். இப்போதெல்லாம் எல்லாமும் மாறி விட்டன. கோயில் சொத்துக்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியதாய் இருக்கிறது.
அப்புறமா இந்த கே.கே.பிள்ளை சொல்லி இருப்பது குறித்து!
ஹூம், எந்த அரசன் வடக்கே இருந்து பிராமணர்களை வரவழைத்தான் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டச் சொல்லுங்கள் அவரை!
அவருக்குப் "பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி" பற்றித் தெரியுமா? அறிந்திருக்கிறாரா? ஆயிரக்கணக்கான யாகங்களைச் செய்தவன் என்பார்கள். க்டைச்சங்க காலத்துக்கும் முந்தினவனாகக் கருதபப்டுகிறவன். "சின்னமனூர்ச் செப்பேடு" இவனைக் குறித்துக் குறிப்பிடுகிறது. இவன் தான் கடல் வடிவலம்ப நின்ற பாண்டியனாக இருக்குமோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இவன் காலத்தில் தான் கடலை வற்றச் செய்த வேல் எறிந்ததாகவும், பின்னர் பிரளயம் ஏற்பட்டதாகவும் இவன் வாரிசே உயிர் பிழைத்து அடுத்த மனுவாக ஆனதாகவும் சொல்வார்கள். இந்த முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிப் பல புலவர்கள் பாடல்கள் புனைந்திருக்கின்றனர். வேள்விக்குடிச் செப்பேடு,
"கொல்யானை பலஓட்டிக்
கூடாமன்னர் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி"
என்று சொல்கிறது.
இன்னும் மாங்குடி மருதனார், இவனைக் குறித்து, பல்சாலை முதுகுடுமித்
தொல்ஆணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால்
சிறப்பின்" என்று மதுரைக் காஞ்சியில் சொல்லி இருக்கிறார்.
https://tinyurl.com/y9hydqhs விக்கியின் இந்தச் சுட்டிக்குச் சென்றால் மேலும் இவனைக் குறித்த தகவல்களை அறியலாம். வடமொழியாகட்டும், தமிழாகட்டும் ஒன்றுக்கொன்று துணையாகவே இருந்து வந்திருக்கின்றன. வடமொழிப் புலவர்கள் வட நாட்டை விடத் தென் தமிழ்நாட்டில் தான் மிகுதி! வடமொழி அறியாமலா கம்பனும், வில்லி புத்துராரும் ராமாயணமும், மஹாபாரதமும் தமிழில் எழுதினார்கள்? ஆகவே தமிழ் பிராமணர்கள், வடக்கே இருந்து வந்தவர்கள் என்றெல்லாம் இல்லை. வடக்கே இருந்தும் வந்திருக்கிறார்கள் பிராமணர்கள் உள்படப் பெருவாரியான மக்கள் என்ற பொதுவான பொருளிலே தான் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிலர் குறிப்பிட்ட வழிபாடுகளுக்கென வடக்கே இருந்து வரவழைத்திருக்கலாம். ஏனெனில் அதர்வ வேதம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. சாமவேதிகள் குறைவு. அப்படி நேரும் சந்தர்ப்பத்தில் வரவழைத்திருக்கலாம். காளிதாஸன் இயற்றாத வடமொழி நூல்களா? காளிதாஸன் பிராமணனே அல்ல என்பது எல்லோரும் அறிந்தது தானே!
சிதம்பரத்தில் ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறவில்லை. வைதிக முறைப்படியே நடைபெறுகின்றன. சிதம்பரம் தீக்ஷிதர்கள் தங்களுக்குள்ளேயே மணவினை கொள்வார்கள், கொடுப்பார்கள். எங்களைப் போன்றவர்கள் அவர்களுடன் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம். அவர்களும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி இல்லாமல் மாற்றுச் சம்பந்தம் வைத்துக் கொண்டால் கோயிலுக்கு அவர்கள் வழிபட வரலாமே தவிர்த்து வழிபாடுகளில் பங்கெடுக்க முடியாது. கோயிலில் இருந்து அவர்கள் பங்கும் அவர்கள் குடும்பத்திற்குப் போய்ச் சேராது. இது அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கும் பாதிப்பாக இருக்கும். அவர்களுக்குள்ளேயே சம்பந்தம் வைத்துக் கொண்டால் தான் கோயிலில் வழிபாடு செய்ய முடியும். அதற்கும் திருமணம் ஆகி இருக்க வேண்டும். திருமணம் ஆகாத பிரமசாரிகள் சிதம்பரம் கோயிலில் வழிபாடுகள் செய்ய முடியாது. ஆனால் மற்றச் சிவன் கோயில்களில் அப்படி இல்லை. பிரமசாரியான சிவாசாரியார்கள் உண்டு.
ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு முதலில் என் நன்றி. ஆதங்கம் இருப்பது என்னமோ உண்மை தான்! ஆனால் பிராமணர்களைக் குற்றம் சொல்லுவதால் மட்டும் இல்லை. அதற்கேற்றாற்போல் பெரும்பான்மையானவர்கள் நடந்து கொள்ளுவதாலும் தான். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு வருகிறது. என்றாலும் பிராமணர்கள் தங்கள் நிலையை அவர்களாகவே தாழ்த்திக் கொண்டு விட்டார்கள் என்பதிலும் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. மாற்றங்கள் பெரும்பாலும் பிராமண சமுதாயத்திலேயே ஏற்பட்டும் வருகிறது என்பதும் உண்மை.
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்! அனைத்தும் கண்ணனுக்கே! என்னும் மனப்பாங்கு என்னிடம் இருப்பதால் மனோபலத்தை மட்டும் கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.
ஜோதிஜி திருப்பூர், நான் "தரம்பால்" அவர்களின் பரம ரசிகை. ஆங்கிலத்தில் "ப்யூட்டிஃபுல் ட்ரீ" என்னும் பெயரிலேயே வந்திருக்கும் புத்தகத்தைத் தரவிறக்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது படித்து வருவதோடு பலருக்கும் சிபாரிசும் செய்திருக்கிறேன். பெரியவர் ஜிஎம்பி ஐயா அவர்கள் பிராமணர் தவிர மற்றவர்க்குக் கல்வி மறுக்கப்பட்டது என்னும் பொருள்பட ஓர் பதிவு எழுதினபோது அதன் சுட்டியும் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். திறக்க முடியவில்லை என்று சொல்லி இருந்தார்! திரு மகாதேவன் எழுதியவற்றைப் பற்றிய விமரிசனம் "தமிழ் இந்து" தளத்தில், (ஹிந்தி ஆங்கிலப் பத்திரிகையின் தமிழ் த இந்து இல்லை) படித்திருக்கிறேன். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்திருப்பதைப் படிக்க வேண்டும் என்னும் தணியாத ஆவலும் இருக்கிறது. ஃப்ரெஞ்ச் இந்தியா படித்ததில்லை என்றாலும் அது குறித்துக் கேள்விப் பட்டிருக்கேன்.
பிராகிருத மொழியிலும் கலப்புத் தமிழிலும் பேசி ஆட்சி புரிந்த மகேந்திர பல்லவன் காலத்தில் தமிழ் புத்துணர்ச்சி பெற்று பக்தி இலக்கியம் உருவானது. தமிழுக்கு பக்தி இலக்கியத்தை விட வேறு யாரும் தொண்டு செய்யவில்லை! வடமொழியைப் பேசியதால் நாட்டுக்குடிமக்களைத் தமிழில் பேசக் கூடாது என மகேந்திர பல்லவன் சொல்லியதாகவும் தெரியவில்லை. மன்னன் சைவ சமயம் திரும்பியதும் திருநாவுக்கரசர் அப்போது மாபெரும் சிறப்புடனேயே இருந்து வந்தார். ஞானசம்பந்தரும் அப்போது தான் தன் சிவத் தொண்டை தீந்தமிழில் பாமாலைகளாகப் புனைய ஆரம்பித்திருந்தார். அப்போது ஆரம்பித்து பாரதி, உ.வே.சா.வரை அனைவரும் சம்ஸ்கிருதம் அறிந்த தமிழ்ப்பண்டிதர்களே. தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார்கள்.
மேலும் தமிழ்நாட்டில் பூணூல் தரித்தவர்கள் அனைவருமே பிராமணர்கள் என நினைக்கின்றனர். ஒரு சில ஸ்தபதிகள், பொன் ஆசாரிகள், தச்சர்கள் ஆகியோர் விஸ்வகர்மா எனப்படும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் சம்ஸ்கிருத அறிவு இருந்தே வந்தது. அதிலும் ஸ்தபதிகள் எனப்படும் கல் தச்சர்களுக்கும், உலோக விக்ரஹங்கள் வடிப்பவர்களுக்கும் சம்ஸ்கிருத அறிவு இல்லை எனில் உளி பிடிக்க முடியாது. இவர்களும் செட்டியாரில் குறிப்பிட்ட இனத்தவரும் பூணூல் போட்டுக் கொள்வார்கள் என்பதோடு பிராமணர்களான எங்களைப் போல் ஆவணி அவிட்டத்தன்றும் பூணூல் மாற்றுவார்கள். இன்னும் வடநாடு போனால் க்ஷத்திரியர்களுக்கும் கட்டாயமாய்ப் பூணூல் உண்டு. சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாருக்குமே உபநயனமும் இருந்து வந்தது என்பதை என்னுடைய "உபநயனம்" என்னும் நூலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
பிராமணர்களை வடக்கே இருந்து வந்தவர்கள் எனில் சோழர்களை என்ன சொல்வது? சோழர்களின் பூர்விகம் வடநாடு தான். சூரிய வம்சம் எனத் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள். முன் காலத்தில் வடக்கே இருந்த நாடுகளைத் தவிர்த்துத் தெற்கே பாண்டிய நாடு மட்டுமே பரந்து விரிந்திருந்ததாகச் சொல்வார்கள். இந்தச் சோழர்கள் சிபியின் வம்சம் என்றும் சொல்லிக் கொள்வார்கள் அந்த சிபி யார் தெரியுமா?
அந்த சிபி புறாவுக்காகத் தன்னையே அர்பணித்தப் பெருமை உடையவன். அவன் வழியில் வந்தவர்களே சோழ மன்னர்கள்.
ஆனால் அவன் ஆண்ட இடம் தமிழகப் பகுதி அல்ல.
அவன் ஆண்ட இடமே அவன் பெயரால் சிபி என்று அழைக்கப்படலாயிற்று. அவன் வம்சத்தில் வந்தவர்கள் சிபி, சிவி, சௌவிரர், சௌரதர் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர்.
அவன் வம்சாவளியில் பிறந்தவர்கள் எல்லாம் ஆங்காங்கே பரவி ஆட்சி அமைத்திருக்கின்றனர்.
அப்படி தமிழ் நாட்டுப் பகுதிக்கு வந்து ஆட்சி அமைத்தவன் சோழ வர்மன். அவனை முன்னிட்டு அவன் சந்ததியர் சோழர்கள் என்றழைக்கப்பட்டனர்.
சிபி என்னும் பெயரில் வேறு பெயர்கள், மஹாபாரதம், புராணங்களில் வந்தாலும், உசீனரன் மகனான, புறாவுக்காகத் தன் தசையை ஈந்த சிபி ஆண்ட இடம் சிந்து நதிப் பகுதி!!
சிபி என்னும் பெயரில் ஒரு இடம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது.
அங்குள்ள மக்கள் சிபி வம்சத்தினர் என்று கூறிக்கொள்கின்றனர்.
ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் அவர்கள் இந்த இடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.
புறாவுகாகத் தன் தசையைக் கொடுத்த அரசனான சிபி இந்த நாட்டை ஆண்டான் என்றும் எழுதியுள்ளார்.
ஆகச் சோழர்களே வடக்கே இருந்து வந்தவர்கள் என்றிருக்க அவர்களைத் தமிழர்கள் இல்லைனு சொல்ல முடியுமா?