எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 05, 2017

கீழடியில் என்ன குழப்பம்? - Dr. Santhalingam Chockaiah

இன்னிக்குக் காலையில் எப்போதும் போல் தான் எழுந்தேன். எழுந்து கொண்டு அன்றாடக் கடமைகளை முடித்துக் கொண்டு மோடத்தை செயலுக்குக் கொண்டு வந்தேன். காஃபி கலக்கையில் ரங்க்ஸ் நெட் வரலை, என்னனு பாரு என்றார். போய்ப் பார்த்துட்டு மோடத்தைத் திரும்பவும் செயல் நீக்கி, செயலுக்குக் கொண்டு வந்துனு எல்லாம் செய்துட்டு என் அலைபேசியைத் திறந்து பார்த்தால் வாட்ஸப்பில் 2 செய்திகளே முதல்நாள் இரவு வந்திருந்தவை காணப்பட்டன. ஆச்சரியத்துடன் அலைபேசியைத் தொடர்ந்து இயக்கினால் "இணையம் இல்லை! இணைய இணைப்பை ஏற்படுத்தவும்." என்று செய்தி!

இத்தனைக்கும் இடையில் காஃபியைக் குடித்துவிட்டு மடிக் கணினியைத் திறந்து பார்ப்போம்னு பார்த்தால் கணினியிலும் இணையம் வரலை. சரி மறுபடி போட்டுப் பார்க்கலாம்னு போட்டால் கணினி அப்படியே செயலற்று நின்று விட்டது.  அதை மிக முயற்சி செய்து செயலுக்குக் கொண்டு வரப் பார்த்தும், ம்ஹூம்! அசையவே இல்லை! கணினியை மூடுவது என்றாலும் அது கொஞ்சமானும் நகர்ந்து மூடுவதற்குத்  தேர்ந்தெடுக்கும் நிலைக்குப் போக மறுத்தது.  வேறே வழியில்லாமல் தலையில் மானசிகமாக அடித்துக் கொண்டு அதிலேயே இருக்கும் பொத்தானை அமுக்கி மூடினேன். மீண்டும் திறந்தால்! ஹையோ, ஹையோ! அதே நிலை! சுமார் பத்து முறையாவது பத்துப் பத்து நிமிட இடைவெளியில் மூடி மூடித் திறந்தாலும் அசைந்து கொடுக்கலை!

சரி, வீட்டு வேலையையாவது கவனிக்கலாம்னு போயிட்டேன். ஐபாட் திறக்காத ரங்க்ஸ் அன்றைய தினசரிகளை மனப்பாடம் பண்ண முடியாத சோகத்தோடு குளிக்கப் போயிட்டார். சாதாரணமா இந்த நேரத்திலே எல்லாம் அவரைக் குளிக்க வைக்க முடியுமா? உலக, இந்திய, தமிழ்நாட்டு அரசியல் நிலவரத்தைச் சரி செய்யும் மாபெரும் பொறுப்புத் தன் தலையில் சுமந்திருப்பதாக எண்ணிக் கொண்டு தினசரிகளில் மூழ்கி இருப்பார். நான் வீடு சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அடுத்த பிரச்னை தலை தூக்கியது. வீடு துடைக்கும் துணியிலான துடைப்பம் அதன் பிடியிலிருந்து கழன்று விழுந்து விட்டது. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேலாகிறது. துணியிலிருந்து நூல் நூலாக வராமல் நன்றாக உழைத்துக் கொண்டிருந்தது. இப்போது அது அப்படியே இருக்கு! அதைக் கைப்பிடிக் கம்புடன் சேர்க்கும் இடத்தில் துருப் பிடித்துக் கழன்றிருக்கிறது. இனி அதை எதுவும் செய்ய முடியாத நிலை!

இன்னிக்கு இவ்வளவு தானா? இன்னும் இருக்கானு யோசித்துக் கொண்டே வேறே ஒரு துடைப்பானால் வீட்டைத் துடைத்து முடித்துவிட்டுக் குளித்து விட்டு இணைய இணப்பு ஒருங்கிணைப்பாளருக்குத் தொலைபேசித் தகவல் தெரிவித்து அவங்க வந்து பார்த்துட்டு மாடியில் இணைப்பை இணைக்கும் இடத்தில் ஏதோ கருவி பழுதாகிவிட்டதாகச் சொல்லிச் சரி செய்துட்டுப் போனாங்க. அரை மணிக்கெல்லாம் மறுபடி நோ இணையம்! நொந்து நூலாகி விட்டோம். இதுக்கு நடுவில் கணினி மருத்துவர் வேறே வரட்டுமானு கேட்டுத் தொலைபேச அவரை 3 மணிக்கு வரச் சொல்லி விட்டோம். பழைய கணினியை எடுத்துச் சார்ஜில் போட்டு விட்டு அதைத் திறந்து அதன் மூலம் முக்கியமான மின் மடல்களைப் பார்த்துக் கொண்டேன். பின்னூட்டங்களையும் அதன் மூலமாகவே வெளியிட்டேன். ஆனால் அதை என்னால் தொடர்ந்து உபயோகிக்க முடியாமல் அதன் மவுஸை அம்பேரிக்காவிலேயே விட்டு வந்திருக்கேன். மவுஸ் இல்லாமல் கையால் எல்லாம் எனக்கு சரிப்பட்டு வரலை!

மறுபடி இப்போதைய மடிக்கணினியை எடுத்து வைத்துக் கொண்டு மறுபடி திறந்து மூடும் விளையாட்டை ஆரம்பிச்சால்! என்ன ஆச்சரியம்! திடீர்னு திறந்து கொண்டது! ஆஹானு சொல்லிட்டு கணினி மருத்துவரிடம் தொலைபேசி வரவேண்டாம்னு சொல்லிட்டு இப்போத் தான் கணினியைத் திறந்து இதோ உங்களோடு பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கேன்.

ஆகக் குழப்பம், நம்ம வீட்டிலே தான்! கீழடியிலே எல்லாம் இல்லை! இருந்தாலும் கீழடிக் குழப்பத்தைக் கீழே படிங்க! உண்மை புரியும்!
*********************************************************************************

மத்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத்துறை 2015ம் ஆண்டு முதல் மதுரைக்கு அருகில், சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்வான கதை : இங்கு 1980--81ல் சிலைமானில் இருந்த பாலசுப்பிரமணியம் என்னும் ஆசிரியரால் ஆய்வு செய்யப்பட்டது. அவர் மேற்பரப்பில் சேகரித்த கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் உருவங்களை மதுரையில் திருமலை நாயக்கர் மகாலில் உள்ள மாநில தொல்லியல் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார். அதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அப்போதைய தொல்லியல் துறை இயக்குனர் நாகசாமி தலைமையில் அதே இடத்தில் ஆய்வு செய்தனர். இதன் மூலம் கீழடி சங்ககாலத்திலேயே ஒரு வாழ்விடமாக திகழ்ந்தது என்பது உறுதிபடுத்தப்பட்டது. அதன் பின் இங்கு எவ்வித ஆய்வுகளும் நடைபெறவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அரசின் தொல்லியல் துறை, வைகை கரையோரம் உள்ள கிராமங்களில் மேற்பரப்பு ஆய்வு செய்தது. இதில் 293 கிராமங்களில் வரலாற்று எச்சங்கள் இருப்பதை கண்டறிந்தது. அதில் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடலை அகழாய்வுக்கு தேர்வு செய்தது. இதற்கு காரணம் ஏற்கனவே இந்த இடத்தில் செங்கல் சூளைக்காக மண் எடுக்க நிலத்தை தோண்டிய போது வெளிப்பட்ட ஒரு செங்கல் சுவரை கண்டதுதான். இதை தொடர்ந்து 2015 ல் இப்பகுதியில் நிலஉரிமையாளர்களிடமிருந்து உரிய அனுமதி பெற்று அகழாய்வுப் பணி துவக்கப்பட்டது.

ஆய்வுகள் துவக்கம் : முதல் ஆண்டில் (2015) 43அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. அவற்றின் மூலம் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றுள் சுடுமண் உருவங்கள், சதுரங்கக் காய்கள், தந்தத்தில் அலங்கரிக்கப்பட்ட தாயக் கட்டைகள், சூதுபவளம் போன்ற பொருட்கள் கிடைத்தன. பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளில் ஆதன், உதிரன், திஸன், ஸாதன், சரம் பொன்ற பெயர் சொற்கள் இடம்பெற்றிருந்தன. மேற்பரப்பு ஆய்விலேயே இராஜராஜன் காலத்து செப்புக்காசு ஒன்றும் கண்டறிப்பட்டது. மண்ணால் செய்து சுட்டு, உறைகளை ஒன்றன் மேல் ஒன்று அடக்கி கட்டப்படும் உறைகிணறுகளும் காணப்பட்டன. இது போல் ஏற்கனவே சங்ககால வாழ்விடங்களான கரூர், பூம்புகார், உறையூர், மதுரை மாங்குளம் போன்ற இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன.

திருப்பம் தந்த அகழாய்வு : 2016 ம் ஆண்டில் 2ம் கட்ட அகழாய்வு நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதில் 5,000 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றிலும் 'சேந்தன் அவதி' என்பன போன்ற பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தன. செங்கல் கட்டடப்பகுதிகள் பெரும் அளவில் வெளிப்பட்டதும், அவற்றின் அமைப்பு முறையும் ஆய்வாளர்களிடையே பெரும் விவாதத்திற்கு வழி வகுத்தன.

இது மற்ற சங்க கால வாழ்விடங்களில் வெளிப்பட்ட அளவுகளைக் காட்டிலும் பெரியது. 21 உறைகளை கொண்ட உறைகிணறும் கண்டறியப்பட்டது வியக்கத்தக்கது. இந்த பகுதியில் பெரிய நெசவுக்கூடம் அல்லது ஆபரண தொழிற்கூடம் இருந்திருக்கலாம். இங்கு மக்கள் வாழ்ந்த காலத்தை கி.மு.2000த்திலிருந்து கி.பி.10ம் நுாற்றாண்டு வரை இருக்கலாம் என தொல்லியலாளர்கள் கணித்திருந்தனர். ஒரு சில மாதிரிகளை வேதியல் பகுப்பாய்வுக்கு அனுப்பி அதன் முடிவை பெற்றுள்ளதின் அடிப்படையில் கீழடி அகழாய்வு பொருட்களின் காலம் கி.மு.200; 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எதிர்மறை விளைவு : இந்த அகழாய்வு தமிழக மக் களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. காரணம் சமீபகாலத்தில் இவ்வளவு பெரிய அளவிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட குழிகளில் அகழாய்வு மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் வேறு எங்கும் இத்தனை பெரிய கட்டடப்பகுதிகள் வெளிப்படவில்லை. இந்த செய்திகள் அதிகப்படியான மக்களிடம் சென்று சேர்ந்தன. அகழாய்வு மேற்கொண்ட அதிகாரிகளும் நல்ல நோக்கத்தில் பார்வையாளர்களை தடையின்றி அனுமதித்தனர். அவர்களது அந்த தாராள மனப்பான்மைதான் இறுதி யில் அவர்களுக்கு எதிராகவும் திரும்பி விடப்பட்டது. பார்வையாளர்கள், அலைபேசிகளில் படங்களை எடுத்து அதனோடு தங்களுக்கு தெரிந்த கட்டுக்கதைகளையும் அறிவுக்கு எட்டியவரையில் அவிழ்த்து விட்டனர்.

'கீழடி கட்டுமானங்கள் சிந்துவெளி பண்பாட்டிற்கு இணையானது' என்றெல்லாம் கற்பனைகளை உருவாக்கினர். இதில் ஒரு சில அரசியல் கட்சியினரும், 'உலகிலேயே தொன்மையான நாகரிகம் இது. இக்குழிகளை அப்படியே பாதுகாக்க வேண்டும். தமிழக பண்பாட்டு கூறுகளை மறைக்க மத்திய அரச முயல்கிறது' என முழங்கினர். இதன் காரணமாக மூன்றாம் கட்ட ஆய்விற்கு நிதி ஒதுக்கீடு தாமதம் மற்றும் பணியில் தொய்வும் ஏற்பட்டது. ஏற்கனவே அகழாய்வு பணியை தலைமையேற்று நடத்திய அலுவலர் பணிமாற்றம் செய்யப்பட்டார்.சில காலதாமதத்திற்கு பின் புதிய பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வு நிறைவடையும் தருவாயில் உள்ளது.

வரலாறு முடக்கப்படுகிறதா : கீழடியின் தொன்மை வரலாறு முடக்கப்படுகிறதா, உரிய கவனத்திற்கு கொண்டுவரப்படுமா என்ற கேள்வி பலரின் மனதிலும் கேட்கப்படும் கேள்வி. பொதுவாக
எவ்வூரிலும் அகழாய்வு பணி நிறைவு பெற்றதும் அங்குள்ள குழிகள் மூடப்படுவது மரபு.

ஏனெனில் அகழாய்வுக்கு உட்பட்ட நிலம் தனியாருக்கு சொந்தமானது. அவரிடம் பணி முடிந்த பின் நிலம் முன்னைப் போலவே ஒப்படைக்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலே பணி மேற்கொள்ளப்படும். பணி முடிந்த பின் நிலம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்பது போல கீழடியிலும் குழிகள் மூடப்பட்டன. நிலம், உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது போல சேகரிக்கப்பட்ட தொல்பொருட்கள், ஒளிப்படங்கள், வார்ப்புகள் செய்யப்பட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். அதே பாணியைத்தான் கீழடியிலும் அதிகாரிகள் பின்பற்றினர். இவற்றை தவறாக புரிந்து கொண்ட சிலர், மக்களை ஆய்வாளர்களுக்கு எதிரான மனநிலைக்கு திருப்பினர்.

ஆய்வுகளில் தெளிவு : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழடி நாகரீகம் எவ்வாறு அழிவுக்குள்ளாகியது என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. 11-12ம் நுாற்றாண்டு கால வரலாற்று ஆவணங்கள் கீழடி, கொந்தகை, மணலுார் பகுதிகளில் தொடர்ந்து கிடைத்து வருகிறது. கொந்தகை என்பது குந்தி தேவிச்சூர்வேதிமங்கலம் என்னும் பெயரில் இயங்கியுள்ளது.

கீழடி பண்பாடு எவ்வாறு அழிந்திருக்க கூடும் என்று ஆய்வோமானால் ஓரிரண்டு சாத்திய கூறுகள் தென்படுகின்றன. ஒன்று வெள்ளப்பெருக்கு. மற்றொன்று வேற்று நாட்டவரின் படையெடுப்பு.

அருங்காட்சியகம் : கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் ஒன்று  அமைக்கப்படவேண்டும் என்னும் வேண்டுகோள் பரவலாக எழுந்துஉள்ளது. அரசும் இசைந்து நிலமும் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த அருங்காட்சியகம் கீழடியிலோ, கொந்தகையிலோ அமைவதைக்காட்டிலும் மதுரை நகரத்திற்கு உள்ளேயோ அல்லது நகரத்தையொட்டியோ அமைவது தான் சிறந்தது. அப்போது தான் மக்களும், மாணவர்களும், ஆய்வாளர்களும் எளிதில் சென்று பார்க்க இயலும்.

இப்போதைக்கு கீழடியில் அமைய வேண்டும் என்று பரிந்துரைப்பவர்கள், எதிர்காலத்தில் அதை யாரும் சென்று காணமாட்டார்கள் என்பதை அறிய வேண்டும். அருங்காட்சியக அலுவலர்கள் மட்டுமே அதனை காவல்காக்க நேரிடும். தற்போது தமிழகத்தில் உள்ள பல அருங்காட்சியகங்களின் நிலை இதுதான். எனவே கீழடி போன்ற தொன்மையான வாழ்விடங்களை அறிவதிலும், அகழாய்வு செய்வதிலும், அவற்றை ஆவணப்படுத்தி பாதுகாப்பதிலும் நம்மக்கள் உணர்வுவயப்படாது, அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

-- சொ.சாந்தலிங்கம்
தொல்லியல் அறிஞர், மதுரை.
98946 87358

14 comments:

  1. இதில் அருங்காட்சியகம் மதுரையில் அமைக்கப்படுவதே சிறப்பு உண்மைதான் கீழடியில் அமைத்தால் காலப்போக்கில் மக்கள் மறந்து விடுவது உறுதி

    மருது பாண்டியர்களை தூக்கிலிட்ட இடம் திருப்பத்தூரில் பார்பாரின்றி கிடக்கிறது இதுவே சென்னையில் இருந்தால் மக்களும் மதிப்பார்கள் அரசும் கவனம் கொள்ளும்.

    அதற்காக தூக்கிலிட்ட இடத்தை தூக்கி கொண்டு போகமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! நீங்க சொல்வது சரி! கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடம் கேட்பாரின்றி இருப்பதாகச் சொல்கின்றனர். அது போல் மருது பாண்டியருக்கான நினைவிடமும் மாறி விடும்! :(

      Delete
  2. துறை சார்ந்த அலுவலரின் அரிய, பெரிய தொண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சோழநாட்டில் பௌத்தம், நன்றி.

      Delete
  3. இதை நானும் படித்தேன்.

    இணையம் எனக்கு வேறு வகைகளில் படுத்தும். நானும் தினசரிகளை மேய்வேன் - பாஸிட்டிவ் செய்திகளை வலைவீசிப் பிடிக்க!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், இணையம் படுத்தலைனாத் தான் ஆச்சரியம்!

      Delete
  4. இதிலெல்லாம் மற்ற நாடுகளில் கடைபிடிக்கும் வழக்கங்கள் என்ன என்று தெரிந்து கொள்வதில் ஆவல்.
    அகழ்வாராச்சிகளுக்கு உலகளாவிய சில கோட்பாடுகள் இருக்கும் இல்லையா?..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார், அந்த நெறிமுறைகளைத் தான் பின்பற்றுவதாக மேலே பேராசிரியர் சொல்லி இருக்கிறார். அப்படியும் நம் மக்கள் இப்படிச் சொல்கின்றனர். :(

      Delete
  5. சுவாரஸ்யமான செய்திகளை பகிர்ந்ததற்கு நன்றி!��

    ReplyDelete
  6. தெளிவான பகிர்வு நன்றி ஆமாம் அ .கா வைக்குமிடம் எல்லோரும் போக கூடிய இடமாகவும் கவனத்தில் வருமிடமாகவும் இருப்பது நல்லதுதான் பாதுகாப்புக்கும்
    கணணியுடன் இன்னைக்கி அக்கப்போரா

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூவிழி, தினமும் கணினியுடன் அக்கப்போர் தான்! நீங்கள் சொல்வது போல் மதுரை போன்ற ஊர்களில் அருங்காட்சியகம் அமைத்தலே சரியானது!

      Delete