இந்தச் சுட்டியில் வையாளி சேவையை மட்டும் பார்க்கலாம். நம்பெருமாளைக் க்ளோஸ் அப்பில் காட்டுகையில் அவர் முகத்தைப் பார்த்தால் அதில் காணும் சிரிப்பு நம்மை பரவசப்படுத்தும். உண்மையில் அவரை ஓர் விக்ரஹமாக எண்ணத் தோன்றாது. நிஜம்மாகவே எதிரே நின்று பார்த்துச் சிரிப்பது போலவே இருக்கும். இந்த யூ ட்யூபிலும் க்ளோஸ் அப்பில் காட்டும்போது பாருங்கள்! பரவசம் அடையுங்கள்!
வையாளி நடையும், ஒய்யாரக் கொண்டையும் மெய்யாகவே சிறு பையனைப் போல் ஒய்யாரமாகவே ஐயன் வருகிற உல்லாச சேவை என் சொல்லுவேனடி”

இந்த வையாளி சேவைப்படம், சேர்த்தி வைபவத்தின் போது உள்ளது. இப்போதைய படம் கிடைத்தால் போடறேன். ஆனாலும் வையாளி சேவை என்றால் தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் ஏறிக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவார். நான்கு திசைகளிலும் சுற்றி வருவார். அதன் பின்னர் ஓர் இடத்தில் பெருமாளை நிறுத்திவிட்டு ஶ்ரீபாதம்தாங்கிகள் பல்லக்கைச் சுமந்து கொண்டு நிற்பார்கள். இனி அடுத்து வேடுபறி. இது திருமங்கை ஆழ்வாரைப் பெருமாள் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி. ஓர் திருடனாக வழிப்பறிக்கொள்ளை செய்து அதன் மூலம் அன்னதானம் செய்து வந்த திருமங்கை மன்னன் ஓர் கல்யாண கோஷ்டி காட்டிலே கடந்து கொண்டிருப்பதை அறிந்து அவர்களைக் கொள்ளை அடிக்க வருகிறான். கல்யாணப் பெண்ணும், மாப்பிள்ளையும் வேறு யாரும் இல்லை. பெருமாளும், மஹாலக்ஷ்மியும் தான்! அவர்களின் ஆடை, ஆபரணப் பெட்டிகளைக் கொள்ளை அடித்துத் தன் கூட வந்தவர்களிடம் கொடுத்தனுப்பிய திருமங்கை மன்னன் மணமக்கள் அணிந்திருந்த ஆபரணங்களையும் கழட்டித் தரச் சொல்ல தாயார் அனைத்து நகைகளையும் கழட்டிக் கொடுத்துவிட்டு நின்றாள்.
நாராயணனும் கழட்டுகிறார். ஆனால் காலில் உள்ள மெட்டி மட்டும் கழட்ட வரவில்லையாம். அந்தக் காலங்களில் மாப்பிள்ளைக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதைக்குறிக்கக் காலில் மெட்டி அணிவிப்பார்கள். இதைத் தான் கால்கட்டு என்றார்களோ என்னமோ. அந்த மெட்டியைத் தான் கழட்ட முடியாதது போல் நம் பெருமாள் நடிக்க திருமங்கை மன்னனுக்குக் கோபம் வருகிறது. பெருமாள் கிட்ட வந்து அவனும் கழட்டப் பார்த்துக் கழட்ட முடியாமல் அவர் காலைத் தூக்கித் தன் பல்லால் அதைக் கழட்ட முயல்கிறான். கொடுத்து வைத்தவன். இந்தத் தருணத்திற்காகத் தானே காத்திருந்தார் பெருமாள்! உடனே குனிந்து அவன் காதில் ஓம் நமோ நாராயணாய! என்று ஓத திருமங்கை மன்னனுக்கு வந்தது யார் எனப் புரிகிறது. தான் இத்தனை பாக்கியம் செய்தவனா என்னும் எண்ணமும் ஏற்பட்டு அன்றில் இருந்து ஓர் ஆழ்வாராக மாறி ஊர் ஊராக எல்லா திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளைப் போற்றித் துதிக்கிறார். இந்நிகழ்ச்சி தான் இங்கே ஶ்ரீரங்கத்தில் இராப்பத்து உற்சவத்தின் போது நடித்துக் காட்டப்பட்டது.
திருமங்கை மன்னனின் வம்சாவளியைச் சேர்ந்தோர் இப்போதும் தெப்பக்குளம் நெடுந்தெருவிலிருந்து வாண வேடிக்கை, மேள,தாளத்துடன் ஓர் குழந்தையைத் திருமங்கை மன்னனாகப் பாவித்து வேடம் கட்டி அழைத்து வருகின்றனர். நம்பெருமாளைக் கம்புகளுடனும், வேல்களுடனும் சுற்றிச் சுற்றி வந்து கொள்ளை அடிப்பதாகப் பாவனை செய்து பின்னர் பெரும்பெட்டிகளைத் தூக்கிச் செல்கின்றனர். அதன் பின்னர் கால் மெட்டியைக் கழட்டும் காட்சி. திருமங்கை மன்னனைப் பெருமாள் ஆட்கொள்ளும் காட்சி. அதன் பின்னர் ஒவ்வொரு ஆழ்வாராக மரியாதைகள் செய்யப்பட்டுச் சென்றனர். அரையர்கள் வந்து சேவை சாதிக்க ஆரம்பித்தனர். அப்போது கொஞ்சம் நேரம் ஆகிவிட்டபடியால் நான் தூங்கச் சென்று விட்டேன்.
நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில்நம்ம ரங்க்ஸுக்கு ஒரு சந்தேகம். அது ஏன் பெருமாளின் பல்லக்கைத் தூக்கி வைத்துக் கொண்டே அவரைத் தாலாட்டிக் கொண்டே நிற்கின்றனர்? கீழேயும் வைப்பதில்லை. எத்தனை நேரம் தூக்கிக் கொண்டே நிற்கின்றனர்? ஆயக்கால் போட்டாவது நிறுத்தலாமே! என்பது. அப்போத் தான் எனக்கு ஒரு சமயம் திருவேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் சொன்னது நினைவில் வந்தது. அதோடு சமீபத்தில் வாட்சப்பிலோ, முகநூலிலோ கூடப் பகிர்ந்திருந்தனர். பெருமாளைத் தூக்குவது பாரம் என ஶ்ரீபாதம் தாங்கிகள் (பல்லக்குத் தூக்குபவர்கள்) நினைக்க மாட்டார்களாம். அப்படி நினைத்தால் அது அபசாரமாம். அதோடு இல்லாமல் அவர்கள் இந்தப் பல்லக்குத் தூக்க வேண்டிப் பயிற்சி எல்லாம் எடுத்துப்பாங்களாம். அது எப்படி எனில் முதலில் வலுவான உடல் கட்டமைப்பு உள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு எந்தத் தோள்பக்கம் வசதி என்பதைக்கண்டறிவார்களாம். அவர்கள் உயரங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் பெருமாளின் பல்லக்கான "தோளுக்கு இனியானை"க் கொடுத்து அதைத் தூக்கிக் கொண்டு கொள்ளிடம்/காவிரி மணலில் நடக்கச் சொல்லிப்பயிற்சி! அப்போதே ஒவ்வொரு கதிக்கும் எவ்வாறு நடக்கவேண்டும் என்பதும் சொல்லிக் கொடுப்பார்களாம். அது என்ன கதி எனக் கேட்கிறீர்களா?
நம்பெருமாள் அதிகம் ஆரோகணிப்பது தோளுக்கு இனியானிலே தான். பல்லக்குத் தூக்குபவர்களையும் ஶ்ரீபாதம் தாங்கிகள் என்றே அழைப்பார்கள். புறப்பாட்டின் ஆரம்பத்தின் போது கருடன் எப்படிச் சிறகை விரித்துப் பறக்க ஆரம்பிக்கிறதோ அப்படி நடப்பார்களாம். இதை கருட கதி என்பார்களாம். சரி, புறப்பட்டுச் சட்டெனெ வெளியே வந்துவிடுவாரா? முடியாது அல்லவா? அப்போது ஒரு சிங்கம் எப்படி குகையில் இருந்து வெளியே வந்து எதிரிகள் இருக்கிறார்களா என்பதைக் கவனித்துவிட்டு சிங்கநடை போட்டு குகையில் இருந்து வெளியேறுகிறதோ அது போல இருபக்கங்களிலும் பார்த்துவிட்டு சிங்க கதியில் நடப்பார்கள். அநேகமாய் கர்பகிரஹத்தில் இருந்து வெளியே எடுக்கைய்ல் சிம்ம கதியில் இருக்கும் என்பார்கள். இதை அடுத்து மேலும் கவனமாகச் செல்ல வேண்டும். வேட்டைக்குச் செல்லும் புலி முதலில் இரண்டு, மூன்று அடி எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் தயங்கி நிற்கும். மறுபடி முன்னே செல்லும். நிற்கும். பின்னர் செல்லும். அதன் பின்னர் வேட்டையின் மீது ஒரே பாய்ச்சல் தான். அது போல பெருமாள் இங்கே ஶ்ரீபாதம் தாங்கிகளால் சுமக்கப்பட்டு முதலில் கொஞ்ச தூரம் செல்வார்கள். நிற்பார்கள். பின்னர் மறுபடி செல்வார்கள். நிற்பார்கள். இதை வியாக்ர கதி என்பார்கள்.
இதை அடுத்துப் பெருமாள் மேலும் உலாவில் துரிதமாகக் கிளம்புவதை ரிஷப கதி எனவும் நடுவே யானை போல் நடப்பதை கஜகதி எனவும் சொல்லுவார்கள். இப்படி எல்லாம் நடந்து கொண்டு தான் ஶ்ரீபாதம் தாங்கிகள் பெருமாளைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். இது பெருமாளோடு மட்டும் நிற்காது. கூடவே அரையர் ஸ்வாமிகளும், அந்த ஆட்டத்திற்கு ஏற்றாற்போலவே பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் செல்ல, ஆலவட்டம் சுமப்போர், தீவர்த்தி சுமப்போர், குடை பிடிப்போர், வெள்ளித்தடி ஏந்துவோர் அனைவருமே இம்மாதிரியான கதிகளில் ஆடிக்கொண்டு தான் செல்வார்கள். செல்ல வேண்டும். புறப்பாடு முடிந்து திரும்பி வந்ததும் கர்பகிரஹத்தினுள் நுழைகையில் பாம்பு தன் புற்றுக்குள் திரும்பும்போது தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டுச் சட்டென உள்ளே நுழைவதைப் போல் நுழைவார்களாம். இதை சர்ப்பகதி என்பார்கள். உள்ளே நுழைந்ததும் பெருமாளை அவர் இருப்பிடத்தில் அமர வைப்பதை ஹம்சகதி என்பார்கள். அவ்வளவு அழகான நடையில் இருக்குமாம் அது.
இதே போல் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் வீதி உலா வரும்போதெல்லாம் அதற்கேற்ப நடைகள் மாறும். சேஷ வாஹனம், ஆனை வாஹனம், கற்பக விருக்ஷம், பசு வாஹனம் என ஒவ்வொரு வாஹனத்தின் போதும் ஶ்ரீபாதம் தாங்கிகள் அந்த அந்த வாஹனங்களுக்கு ஏற்ற நடையில் நடக்க வேண்டும். அதனால் தான் வையாளி சேவை நடக்கும் குதிரை வாஹனத்தில் பெருமாள் வீற்றிருக்கையில் முதலில் இரண்டு நடை வேகமாகக் குதிரையைப் போல் செல்வார்கள். பின்னர் இடப்பக்கம் ஒரு சுற்று, அதன் பின்னர் வலப்பக்கம் ஓர் சுற்று, பின் மீண்டும் இரண்டு நடை வேகமான நடை! இப்படிச் செல்வார்கள். இத்தனைக்கும் உண்டான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு இவர்கள் ஶ்ரீபாதம் தாங்கிகளாக நல்லபடி சேவை செய்வார்கள் என்பது நிர்வாகத்திற்குத் திருப்தி உண்டானால் தான் அவர்கள் ஶ்ரீபாதம் தாங்கிகளாக நியமனம் ஆவார்கள்.






