எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 16, 2018

மாதங்களில் நான் மார்கழி!

Madurai  பதிவின் சுட்டி!

மார்கழி பிறந்து விட்டது. எங்கும் கோயில்களில் தனுர் மாத வழிபாடுகள் சிறப்பாய் ஆரம்பித்து விட்டன. ஸ்ரீரங்கத்திலும் வருகிற 18 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசித் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டன. மார்கழி மாதம் குறித்தும், திருப்பாவை, திருவெம்பாவை குறித்தும் ஏற்கெனவே பல பதிவுகள் எழுதி விட்டபடியால் அவற்றையே மீண்டும் இங்கே மீள் பதிவாக இட விருப்பம் இல்லை. எனக்குத் தெரிந்தவரை நான் மதுரையில் சிறுபெண்ணாக இருந்தபோது நடந்த சில மார்கழி மாத நினைவுகளை முன்னம் ஓர் காலத்தில் 2008 ஆம் ஆண்டில் மதுரைக்காரர்களால் சேர்ந்து நடத்தப்பட்ட வலைப்பதிவில் பகிர்ந்திருந்தேன். அந்த நினைவுகளை இப்போது எல்லோரும் அறியத் தருகிறேன்.

மீள் பதிவு கீழே!

Monday, December 29, 2008
மதுரையும், மார்கழி மாசமும்
மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தைப் போன வருஷம் டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும். எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது.

உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.

பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார்.

மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.

எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம்.

சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதுவும் ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! :(( கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((


திருப்பாவை விளக்கம் 2010

திருப்பாவைக்கோலங்கள் 2014

திருவெம்பாவை விளக்கம் 2011

76 comments:

 1. அப்போது விழாக்களைக் கண்ட அனுபவம் என்பது என்றும் நினைவில் நிற்பதுதான்.

  ReplyDelete
 2. மார்கழியின் அந்தக் காட்சிகள் இப்போது வெகுவாகக் குறைந்து விட்டன. கோவில்களுக்கு அருகில் இருக்கும் வீடுகளில் இப்படிநிகழலாம். பல இடங்களில் பார்க்க முடிவதில்லை. வாசலிலே கோலத்தில் பூசணிப்பூ /பரங்கிப்பூ வைக்கும் வழக்கம் எங்கள் தஞ்சைக்காலங்களில் பார்த்தது!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், சென்னையில் இருந்தப்போ எங்க வீட்டு வாசலில் பெரிய கோலம் போட்டுத் தோட்டத்துப்பூஷணிப்பூ அல்லது பறங்கிப்பூ வைப்பேன். உள் வாசலில் சாயங்காலமாகவே பெரிய கோலமாய்ப் போட்டுடுவேன். காலை எழுந்து வெளி வாசல் தெளித்து அங்கேயும் கொஞ்சம் சின்னக் கோலமாக (பதினைந்து புள்ளிக்குள் வரும்படி) போட்டுப் பூக்கள் வைப்பேன். பால்காரர்/காரியிடம் சொல்லு பசுஞ்சாணம் வாங்கி வைச்சுப்போம். பின்னால் இருந்த நாட்களில் அவங்கல்லாம் மாடுகளை விற்றுவிட்டார்கள்! கோலம் மட்டும் விடாமல் போட்டு வாசலில் விளக்கும் ஏற்றி வைப்பேன். இங்கேயும் வாசலில் விளக்கு ஏற்றி வைக்கிறேன். கோலமெல்லாம் பெரிசாப் போடுவது இல்லை! :(

   Delete
  2. நாங்கள் கூட! சென்னைக்கு வந்த புதிதில் பாஸ் கோலத்தில் பரங்கிப்பூ வைத்திருக்கிறார்.

   Delete
  3. உங்க ஏரியாவில் பூஷணிக் கொடி போடலாம். போட்டால் பூ தினம் தினம் கிடைக்கும். ஆனால் பசுஞ்சாணி கிடைப்பது கஷ்டம்.

   Delete
 3. என் மகன்களிடமும் எனக்கு இருக்கும் மிகப்பெரிய குறை இதுதான். அவர்கள் எழவேண்டிய நேரத்தில் நாம்தான் அவர்களை எழுப்பவேண்டும். அவர்களாக எழமாட்டார்கள். அதுவும் அதிகாலை எழும் பழக்கமே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், எங்க வீட்டில் (அதாவது கல்யாணம் ஆகி வந்த பின்னர்) அவங்க பள்ளிக்கோ, அலுவலகத்துக்கோ போகணும்னா குறிப்பிட்ட நேரம் நாம் தான் எழுப்பி அவங்களைத் தயார் செய்ய உதவணும். இது எழுதப்படாத சட்டம்! ஆகவே எங்க குழந்தைங்களைப் பள்ளிக்குப் போக தினம் எழுப்ப வேண்டும். பிள்ளை ஒரு தரம் எழுப்பினாலே எழுந்து கொள்ளும் ரகம். பெண் எழுந்திருக்கவே மாட்டாள். கொஞ்சம் அதட்டியும் எழுப்பக் கூடாது! அப்புறமா எனக்கு டோஸ் விழும்! கெஞ்சிக் கொஞ்சி தான் எழுப்புவோம். :)))))

   Delete
  2. என் பையனும் அப்படித்தான் இருந்தான் ஸ்ரீராம், கீதாக்க்கா..அவன் கல்லூரி வந்ததும் அவனே என்னை எழுப்பச்சொல்லுவான் எழுப்பினால் கொஞ்சம் கஷ்டப்படுவான் ராத்திரி லேட்டாகத் தூங்குவான் படிப்பு அவ்வளவு எழுத்து வேலை ரெக்கார்ட்...16 சப்ஜெக்ட்ஸ்...அவனால் குறைபாட்டினால் எல்லாம் மேனேஜ் செய்ய முடியாமல் இருந்ததே அப்போது...ஆனால் சென்னையில் க்ளினிக்கில் வேலைக்குப் போகத் தொடங்கியதும்....காலை இரவு என்றில்லை....ட்யூட்டி அப்படியானது இல்லைஅய அதனால் அவனே எழுந்து விடுவான். இப்போது அம்பேரிக்காவில் அவனே தானே எழுந்திருக்கனும் அதுவும் ராத்திரி 2 மணியானாலும் அடுத்த நாள் 6 மணிக்கு ஓடனும் என்பதால் ட்யூட்டி கான்ஷியஸ்னஸ் வந்துவிட்டது...லீவு என்பதும் இல்லையே....பரவால்ல ஸ்ரீராம் நெசசிட்டி என்று வரும் போது ஆகிடும் ஸ்ரீராம்...

   கீதா

   Delete
  3. எங்க குழந்தைங்களும் ஆரம்பத்தில் எழுப்பி விட்டுக் கொண்டிருந்தேன். பின்னால் அவங்களாகவே எழுந்திருக்க ஆரம்பிச்சுட்டாங்க! :)

   Delete
  4. //நெசசிட்டி என்று வரும் போது ஆகிடும் ஸ்ரீராம்...//

   அது என்னவோ உண்மைதான் கீதா... அது ..!.

   Delete
  5. ///நெசசிட்டி என்று வரும் போது ஆகிடும் ஸ்ரீராம்...//

   அது என்னவோ உண்மைதான் கீதா... அது ..!.//

   ​grrrrrrrr..... "எப்ப வருமோ அது!" என்றிருக்க வேண்டும்!!!​

   Delete
  6. ஶ்ரீராம், நாங்க இப்போவும் சீக்கிரம் எழுந்திருப்பதை எங்க உறவினர்கள் எல்லோருமே ஏன் இப்படினு கேட்கிறாங்க! குறைந்த பட்சமாக ஆறு மணி ஆறரை மணிக்கு எழுந்திருப்பதைத் தான் எல்லோரும் வழக்கமா வைச்சிருக்காங்க!

   Delete
 4. வடக்கு கிருஷ்ணன் கோவில் என்றால் எது என்று தெரியவில்லை. (சினிமாத் தியேட்டர் என்றால் தெரியும்!!!) புதிய நினைவலைகள் தொடரா?

  ReplyDelete
  Replies
  1. தொடரெல்லாம் இல்லை ஶ்ரீராம். இது ஒரு பதிவு தான் மார்கழி மாசம் பத்தி அந்த வலைப்பக்கம் எழுதினேன். வடக்குக் கிருஷ்ணன் கோயில் நேரு பிள்ளையார் கோயிலில் இருந்து நேரே வடக்கு மாசி வீதியில் நடந்து வந்தால் தானப்ப முதலித் தெருவுக்குச் செல்லும் பிரிவுச் சாலையையும் தாண்டி வரணும். ராமாயணச்சாவடி தெரியுமா? அதுக்குப் போகும் முன்னரே இந்தக் கோயில் வந்துடும். பார்த்திருப்பீங்க! பெயர் தெரிஞ்சிருக்காது! படிகள் நிறைய! மேலே ஏறிப் போகணும். கோபுரங்கள் உண்டு. உள்ளே தூணுக்குத் தூண் அருமையான சிற்பங்கள்! இப்போ நவீனப்படுத்துதலில் அவை எல்லாம் இருக்கா இல்லையானு தெரியலை! கிருஷ்ணன் கோயிலை ஒட்டியே ஒரு தெரு உள்ளே போகும். அது தான் வடக்குக் கிருஷ்ணன் கோயில் தெரு! அந்தத் தெரு உள்ளே போய் மேலாவணி மூல வீதி+வடக்காவணி மூலவீதி சேரும் முனையில் போய் முடியும். என் கல்யாண சமயம் அந்தப் பக்கம் தான் குடி இருந்தோம். வடக்குக் கிருஷ்ணன் கோயிலில் தெரு முனையில் இரண்டாவது வீட்டில்!

   Delete
  2. ஆ... ஞாபகம் வந்துவிட்டது. சைக்கிளில் எவ்வளவு இடம் சுற்றி இருக்கிறேன்!

   Delete
  3. ம்ம்ம்ம், கோயிலும் பார்த்திருக்கலாமே!

   Delete
 5. முடிவில் தங்கள் மனதின் வேதனை புரிகிறது அம்மா...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் டிடி. இப்போதெல்லாம் மீனாக்ஷியைப் பார்க்கவே முடியறதில்லை! :(

   Delete
  2. மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று வழிபடுவதில் இப்போதெல்லாம் ஏகப்பட்ட சிரமங்கள், கெடுபிடிகள்.

   Delete
  3. ஆமாம், :( அதிலும் ஆக்கிரமிப்புகள்! :(

   Delete
 6. ஆரம்பத்தில் உதவி என்று ஆரம்பித்து நாமே அவர்களுக்கு அலார்ம் கிளாக்காகிப் போவது எங்கும் நடப்பதுதான்.

  கீசா மேடத்தின் அப்பாவின் மெதட் அருமையான வழக்கம். பாராட்டத்தக்கது. நாம கையைப் பிடித்துக் கூட்டிப்போக ஆரம்பித்தால் அதுக்கு முடிவே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழரே, எங்க வீட்டில் எழுந்துக்கலைனாலோ, எழுந்துக்க தாமதம் ஆனாலோ முகத்தில் தண்ணீர் தெளிச்சுடுவாங்க! எங்க பாட்டி வீட்டிலும் அப்படித் தான்! ஆனால் எங்க புக்ககத்தில் அவங்களா இஷ்டப்பட்டு எழுந்தால் தான்! நாமெல்லாம் எழுப்ப முடியாது அவங்களுக்குப் பள்ளியோ அலுவலகமோ இருந்தால் தவிர! அப்போக்கூட எட்டரை மணிக்குக் கிளம்பணும்னா அநேகமா எட்டு வரை தூங்குவாங்க! அப்புறம் எழுந்தால் நாம் தான் அவங்களோட பை தயார் செய்வதிலிருந்து உடைகள் மாற்ற, கையில் கொண்டுபோகும் துவாலைனு எல்லாமும் கொடுத்து உதவி சாப்பாடும் பிசைந்து ஸ்பூன் போட்டுக் கொடுக்கணும்.

   Delete
  2. என் குழந்தைகளை நான் அப்படிப் பழக்கவில்லை! அவங்களாகவே தயார் ஆகலைனா அன்னிக்கு ஸ்கூல் அவ்வளவு தான். கே.வி. ஸ்கூல் சட்டப்படி மாதம் 3 தினம் தாமதம் ஆனால் திரும்ப மறுபடியும் பள்ளியில் சேரணும். டிசி கொடுத்துடுவாங்க! முதல் முறை தாமதம்னா வீட்டில் சரியான காரணம் எழுதிக் கொண்டு வரவேண்டும். இல்லைனா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க! ஒரு முறை ரயில் நேரத்துக்கு வராமல் எங்க குழந்தைகள் பள்ளிக்கு தாமதம்! வாசலிலேயே திருப்பி அனுப்பிட்டாங்க ஸ்கூல் டைரியில் எச்சரிக்கையுடன். மறுநாள் என் கணவர் நேரில் போய்ச் சொன்னப்புறம் தான் சரியாச்சு!

   Delete
 7. இனிய நினைவுகள். மார்கழி சமயங்களில் எங்கள் வீட்டின் அருகில் இருந்த பிள்ளையார் கோவிலில் பஜனைகள் நடக்கும். காலையில் எழுந்து விடுவது வழக்கம் என்றாலும் அப்போது கோவிலுக்கெல்லாம் சென்றதில்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், மதுரையில் இருந்தப்போ நினைச்ச வேளையில் கோயில், பஜனை, காலட்சேபம் என இருந்தது. அப்புறம் கல்யாணம் ஆகி வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைஞ்சு போய் இப்போல்லாம் பஜனைனா என்னனு ஆகி விட்டது! :)))) இப்போப் போகவோ கலந்துக்கவோ ஆர்வம் இருந்தாலும் தடுக்கவும் யாரும் இல்லைனாலும் உடல் நலம் இடம் கொடுப்பதில்லை! அங்கெல்லாம் போய்க் கீழே உட்கார முடியாது!

   Delete
 8. இன்றைய விழாக்கள் காலமாற்றம் என்ற பெயரில் அலங்கோலமாகி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கில்லர்ஜி!

   Delete
 9. //சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல// - கண்டருளப்பண்ணும் கோவில் பிரசாதத்தின் சுவை எப்போதுமே அதிகம்தான். இரண்டு நாட்களாக ஏகப்பட்ட கோவில்களில் பிரசாதம் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. சுவையைச் சொல்லி மாளாது (ஒன்றிரண்டு அவ்வளவு சிறப்பாக இல்லாதிருந்தபோதும்). தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதார ஸ்தலத்தில் கொடுத்த தயிர் சாதம், எங்கள் ஆஸ்ரமத்தில் கொடுத்த தயிர்சாதம் - உண்மையாகவே சுவை சொல்லி மாளாது.

  ReplyDelete
  Replies
  1. நெ.த. நீண்ட பயணம் போல! திருவையாறில் ஆண்டவர் கடை அசோகா சொல்லிட்டே இருந்தீங்களே? வாங்கினீங்களா? சகிக்காது! :)))) அசோகாவெல்லாம் குஜராத்தில் சாப்பிடணும்! ஸ்வீட்னாலே வடமாநிலங்கள் தான்! :))))

   Delete
  2. கீசா மேடம்.... தியாகராஜர் அதிஷ்டானத்துக்குப் போனப்பிறகு ஆண்டவர் கடைலதான் ஐக்கியம். நேரமில்லாததால் (ஏகப்பட்ட கோவில்கள் சேவிக்கணும் என்ற திட்டம் என்பதால்) அங்கேயே சாப்பிடலை (சாப்பிட்டிருக்கலாம்). அதனால் 2 கால் கிலோ அசோகா அல்வாவும், 2 கால் கிலோ அல்வாவும் (பெரிய துண்டங்களாகப் போட்டிருந்தது அழகாகவும் ஆசையாகவும் இருந்ததால்) வாங்கிவந்தேன். சாப்பிடவே நேரமில்லை. சென்னை வந்துதான் சாப்பிட்டேன்.

   //சகிக்காது! :))))// வழிமொழிகிறேன் கீசா மேடம். ஒரே எண்ணெய் (நெய்யாகவும் இருக்கலாம்). எனக்குப் பிடிக்கலை. அல்வாவை இன்னும் சாப்பிடலை. அப்புறம் அதைப்பற்றியும் தெளிவாத் தெரிஞ்சுடும். என் ஹஸ்பண்ட் என்னிடம் இனி இப்படி இனிப்பு வாங்கிவரக்கூடாதுன்னு சொல்லிட்டா. சாப்பிட ஆள் கிடையாது (எனக்கு ரொம்ப நல்லா இல்லைனா திரும்ப சாப்பிடமாட்டேன்)

   Delete
  3. //ஸ்வீட்னாலே வடமாநிலங்கள் தான்! :))))// - படிக்கிறது இராமாயணம்.... இடிக்கறது....... கர்ர்ர்ர்ர்ர்ர். மதுரை கோபு ஐயங்கார் ஸ்வீட்ஸ் கடை, நெல்லை அல்வா, பழனி பஞ்சாம்ருதம், இந்த தடவை சாத்தியப்படாத மன்னார்குடி அல்வாக்கள் என்று ஏகப்பட்டது தமிழகத்தில் இருக்கு. ஸ்வீட்ஸ்னா வட மாநிலங்களாமே......

   இந்தத் தடவை கும்பகோணம் முராரி ஸ்வீட்ஸ்ல இனிப்பு பூந்தி வாங்கினேன் (அவங்கள்ட ஜிலேபி செய்யும் மைதாவில் செய்த பூந்தியும் இருந்தது). அட்டஹாசம்.

   திருச்சி அஸ்வின்ஸ்ல இந்தத் தடவை (சென்றமுறை) வாங்கின புளியோதரை, தயிர் சாத பாக்கெட்டும் என்னை மிகவும் கவர்ந்தது. நல்ல குவாலிட்டி. நாயுடு ஸ்வீட்ஸ்ல வாங்கின இனிப்பு பூந்தியும் பரவாயில்லை.

   Delete
  4. நெல்லைத் தமிழரே! நீங்க என்ன கிண்டல் செய்தாலும் வடமாநிலங்களின் இனிப்பு வகைகள் கிட்டேக் கூட நாம் போக முடியாது! கோபு ஐயங்கார் கடையிலே ஸ்வீட்டெல்லாம் ஒண்ணும் சொல்லிக்கும்படி கிடையாது (நான் அறிந்தவரையில்) அந்தக் கடை அந்த நாட்களில் மதியம் பஜ்ஜி, சட்னிக்குப் பெயர் போனது. சட்னி அது மாதிரி சாப்பிட்டிருக்க மாட்டீங்க! தூள் பஜ்ஜியும் போடுவாங்க! (வடக்கே அதை பஜியா என்பார்கள். நான் அடிக்கடி பண்ணுவேன்.) அப்புறமா வெள்ளையப்பம், தவலை வடை! இது தான் அப்போல்லாம் கோபு ஐயங்கார் என்றால் பிரபலம். அஸ்வின்ஸிலே நாங்க ஸ்நாக்ஸ் மட்டும் வீட்டில் பண்ண முடியாத சமயங்கள் வாங்குவோம். சாப்பிடும்படி இருக்கும். ஜி.டி.நாயுடு கடைப்பக்கமே போனதில்லை. சென்ற மாதம் தெற்கு வாசல் பக்கம் ஏதோ வேலையாப் போனப்போ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் ஸ்பெஷல் மிக்சர்னு சொல்லிக் கொடுத்தாங்க, வாங்கினோம்! சவுக், சவுக்!:( அப்படியே தூக்கிப் பறவைங்களுக்குப் போட்டால் அதுங்களும் பிடிக்கலைனு கத்துதுங்க! :))))

   Delete
  5. கோபு ஐயங்கார் கடை வரிசையிலேயே மேலக்கோபுர வாசலுக்கு நேரே நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய்மிட்டாய்க் கடை இருக்கு பாருங்க! எனக்குப் பிறந்தகம், புக்ககம் இரண்டு பக்கத்திலும் சொந்தம். ஆனால் பெரியவங்க யாரும் இல்லை இப்போ! சுத்தமான நெய்யில் அல்வா, ஜிலேபி தயாரிப்பாங்க. போட்டதுமே தீர்ந்துடும். காராசேவு அருமையா இருக்கும். மத்தியானம் பதினோரு மணிக்கு உருளைக்கிழங்கு மசாலா போடுவாங்க! பனிரண்டுக்குள் தீர்ந்துடும். இப்போவும் அப்படித் தான் என்று சொன்னாங்க! ஆனால் அல்வாவும் ஜிலேபியும் பழைய தரத்தில் இல்லை. அப்போ இதைத் தயாரித்த மொட்டை மாமா இப்போ இல்லை! (

   Delete
  6. கோபு அய்யங்கார் கடை வெள்ளையப்பம்பிரசித்தம். ஆனால் எனக்கு அங்கே பிடித்தது சீவல் தோசை.

   நாகப்பட்டினம் ஒரிஜினல் நெய் மிட்டாய்க்கடை... இந்த முறை மதுரை போகும்போது சென்று பார்க்கவேண்டும். வாங்க வேண்டும்! ரொம்ப நாளாச்சு...

   Delete
  7. கீசா மேடம்... நீங்க சொல்றதுலயும் ஒரு உண்மை இருக்கு. நான் தில்லில பிகானீர்வாலா ல மதியம் தாலி மீல்ஸ் சாப்பிட்டேன். அதோட கொடுத்த ரசமலாய் போன்ற ஸ்வீட் ரொம்ப நல்லா இருந்தது. அங்க பனீர் பேஸ்டு இனிப்புகள் மிக அருமை. அதே மாதிரி அலஹாபாத்தில் சாப்பிட்ட லஸ்ஸியும் மனதில் தங்கிடுத்து. சும்மா வட இந்திய இனிப்புகள் பல இடங்களில் சாப்பிடாமல், தமிழக இனிப்புதான் அருமை என்று சொல்வது தவறுதான்.

   Delete
  8. ரசமலாய் மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தானிலே ரொம்ப நல்லா இருக்கும். பாச(சு)ந்தியும் அப்படியே! லஸ்ஸிக்குப் பெயர் போனது பஞ்சாப் தான்! அதுக்குஅடுத்து ஹரியானா, மற்ற மாநிலங்கள். பூஜ்ஜில் கராச்சி ஹல்வா கிடைக்கும். பாகிஸ்தான் வெள்ளி ஆபரணங்கள் கிடைக்கும். டபேலி இப்போத் தான் கொஞ்ச காலமா இங்கெல்லாம் பிரபலமாயிட்டு இருக்கு! நாங்க 90 களிலேயே டபேலி புஜ்ஜில் சாப்பிட்டோம். அந்த ருசி இங்கே கிடைப்பதில் இல்லை.

   Delete
 10. உங்கள் நினைவுகளைப் படிக்கும்போது, நான் சிறு வயதில் (1ம் வகுப்பு கூட இல்லை) திருவாடானைக் கோவிலுக்குச் சென்று திருவெம்பாவை, திருப்பாவை பிரசாதம் வாங்கிவந்து வீட்டில் சகோதரர்களுக்கும் கொடுத்தது நினைவுக்கு வருகிறது (அப்பாலாம் எழுப்பிப் போகச்சொன்னதில்லை). எனக்கு இப்போது நினைக்கும்போது, அப்படி பக்தி என்ற எண்ணம் எப்படி வந்திருக்கும் எனக்கு என்று தோன்றுகிறது.

  'யாரையும் எழுப்பக்கூடாது' மிக மிக நல்ல அறிவுரை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நெல்லை என் அப்பா யாரையுமே எழுப்ப மாட்டார்! நாலு மணிக்கு எழுந்துக்கலைனால் முகத்தில் தண்ணீர் தான்! வீசிக் கொட்டுவார். ஆனால் என் புக்ககத்தில் எழுப்பணும்! குழந்தைகளையும் ஆரம்பத்தில் எழுப்பலைனாக் கோவிப்பாங்க! மெல்ல மெல்லத் தான் பழக்கத்தில் கொண்டு வந்தேன்.

   Delete
  2. பிரசாதம் நாங்களும் வாங்கி வந்து வீட்டில் எல்லோருக்கும் கொடுப்போம்.

   Delete
 11. கீதாக்கா உங்கள் மார்கழி முதல் பதிவு என் பழைய நினைவுகளை மீட்டுவிட்டது.

  எங்கள் வீட்டில் எல்லோரும் சீக்கிரம் எழுந்திருக்கணும் இல்லைனா அம்மாவின் அம்மா - பாட்டி - எல்லாரையும் ஒரு அதட்டு அதட்டி எழுப்பிவிடுவார் மார்கழி என்றில்லை தினமுமே காலையில் 5 மணிக்குள் எல்லோரும் எழுந்திருக்கணும். நாங்கள் கூட்டுக் குடும்பம் வேறு எல்லா கஸின்ஸும் என் அம்மா உட்பட எல்லோரும்.

  நான் மட்டும் பாட்டியுடன் 4 மணிக்கு எழுந்திருக்கணும். ராத்திரி படித்துவிட்டு எத்தனை மணிக்குப் படுத்தாலும்க் சரி....நானும் காலை 4 மணி என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டே படுத்து விடுவேன். பாட்டியுடன் தினமும் 4 மணிக்கு கோயிலுக்குப் போகணும். கோயில் வாசல் மற்றும் கொடிமரத்தின் கீழ் உள்ள பெரிய இடம் இரண்டிலும் தண்ணீர் தெளித்து கழுவி விட்டு கோலம் போடனும். அது போன்று புரட்டாசி சனிக் கிழமிய, சொர்க்க வாசல் எல்லாம் முந்தைய நாளே கோயில் முழுவதும் மாக்கோலம் போடனும்...உள் சன்னதி முன் வரை கோலம் போடனும். மாக்கோலம். வாசல் மட்டும் கொடிமரம் கீழ் மட்டும் கோலப்பொடி அரிசிமாவு ட்ரை கோலம் போட வேண்டும்...தினமும் கோயில் இரு இடத்திலும் போட்டுவிட்டு வீடு வந்து வாசலில் சாணம் கலந்து தெளித்து பெருக்கி கோலம் போடனும். இது எனக்கு மட்டும் எழுதப்படாத சட்டம். மற்ற கஸின்ஸை அழைத்துச் செல்ல மாட்டார்.

  மார்கழியில் கிராமத்து வீடு என்று பொதுவான இடம் உண்டு அங்கு சென்று எல்லாரும் பஜனை செய்து கொண்டு தெருவில் வருவார்கள் பின்னர் பொங்கல் பிரசாதம் ஒவ்வொரு நாலூம் ஒவ்வொரு வீட்டு உபயமாக இருக்கும். கார்த்திகையில் அந்தி சாயும் நேரம் சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டு வருவார்கள் அப்போதும் ஒவ்வொரு வீட்டு உபயம் ஏதேனும் ஒரு பிரசாதம் ஓரோரு நாள் என்று இருக்கும்...

  அப்புறம் ஆடிப் பூரம் மற்றும் மார்கழியில் கூடாரை - 27 வது தினத்தன்று கோயிலில் பாட்டி அரவணைக்குக் கொடுத்துவிடுவார். கோயிலில் செய்து சுவாமிக்கு வைத்து பிரசாதமாக வீட்டுக்கு வரும் அப்புறம் நாங்கள் ஊர் முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்துவிட்டு வருவோம். இது என் அம்மா வழிப் பாட்டி விட்டில் 7 ஆம் வகுப்பிலிருந்து வாசம் என்பதால்.

  அது வரை அப்பா வழிப் பாட்டி வீட்டில். அப்பா வழிப் பாட்டி எனக்கு பேச்சு வந்ததுமே திருப்பாவை சொல்லிக் கொடுத்து மனப்பாடம் செய்யச் சொல்ல்விட்டார். அப்புறம் அத்தைகள் எனக்கு பாட்டு டான்ஸ் என்று கத்துக் கொடுத்தனர். ஆனால் முறையாகக் கற்றுக் கொள்ளவில்லை. பாட்டி ஏற்பாடு செய்தாலும் நான் அப்போது சிறு வயது என்ப்தால் கற்றுக் கொள்ளாமல் விளையாட்டாய் இருந்தேன்..ஆனால் செவி வழி கேட்டு மனதில் பதிந்ததுதான்.

  அம்மா பாட்டி வீட்டிற்கு வந்ததும் அந்தப்பாட்டிக்குப் பாட்டு என்றாலே பிடிக்காது..ஆனால் எனக்கு அப்போதுதான் கற்கும் ஆர்வம் வந்தது. பாட்டு சோறு போடாது என்று சொல்லி கற்கவைக்கவில்லை. எது செய்தாலும் அதில் ஒரு வரும்படி இருக்கனும் என்ற ஒரு எண்ணம் இந்தப் பாட்டிக்கு. என் எண்ணமோ வேறு...ஆத்ம திருப்தி என்று.....ஸோ பாட்டு கற்க முடியாமலே ஆனது...கேட்டு கேட்டுக் கற்றதுதான்..ஏகலைவன் போல..ஹா ஹா ஹா....அப்புறம் ஒரு 12 வருடம் முன்பு ஜலதரங்கம் மாமி சீதாலஷ்மி மாமியிடம் கற்றுக் கொண்டென் ஒரு வருடம் கூட ஆகவில்லை அவரது கணவர் இறந்ததும் அதுவும் முடங்கிப் போனது...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அருமையான நினைவுகள். என் அம்மாவழிப்பாட்டியும் எங்களை எல்லோரையுமே வேலை வாங்குவார். ஆனால் பிரித்துக் கொடுத்துடுவார். பாட்டுக் கத்துக்க எனக்கு ஆசை தான்! ஆனால் அப்பா ஔரங்கசீப்! பாடினாலே வாயில் போடுவார்! சாப்பிடத் தான் வாயைத் திறக்கணும். இத்தனையையும் மீறிக்கொண்டு தான் என் அப்பாவின் பார்வையில் நான் ஒரு rebellion ஆகத் தெரிய ஆரம்பித்தேன். :))))

   Delete
  2. ஆ11 கீதாக்கா நானும் எங்க வீட்டில் ரிபெல்லியன் தான்...வளர்ந்ததும் பாட்டியை மீறி கேள்விகள் கேட்டது எனக்குப் பிடித்ததைச் செய்யத் தொடங்கியது என்று வந்த போது அதே என் பாட்டி அம்மாவின் பார்வையில் நான்...என் அப்பா வழிப்பாட்டி தாத்தா எனக்கு நல்ல கதைகள் சொல்லி என் கலைகளை வளர்க்க ஆசைப்பட்டனர். நடக்கவில்லை ...

   கீதா

   Delete
  3. நான் எல்லாப் பக்கமும் எல்லோர் கண்களுக்கும் ரிபெலியன் என்னும்படி ஆக்கிட்டாங்க/ ஆக்கினாங்க/ இப்போவும், எப்போவும்! :)))))

   Delete
 12. மலரும் நினைவுகளில் மார்கழி மாதம்!..

  அருமை.. இனிமை..

  நானும் பழைய நினைவுகளின் மூழ்கிப் போனேன்...

  அப்புறம் -
  >>> திருவையாறில் ஆண்டவர் கடை அசோகா சொல்லிட்டே இருந்தீங்களே?
  வாங்கினீங்களா? சகிக்காது! :)))) .. <<<

  அதென்னமோ தெரியலை.. அதுக்குத்தான் மகத்தான விளம்பரம்!..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதுக்கு பயங்கரமான விளம்பரம்! நெய்யிலேயே செய்வதில்லை. எண்ணெயோ டால்டாவோ! :( குமட்டல் வந்துடுச்சு எனக்கு!

   Delete
  2. முகநூலில் ஒருத்தர் இந்த அசோகாவுக்காகத் தாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்ததையும் கடைசியில் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருக்க நேரிட மொத்த அசோகாவையும் சாப்பிட்டதையும் குடும்பம் மொத்தமும் அசோகாவுக்காக அழுதது எனவும் வேடிக்கையாகவும் ஹாஸ்யம் ததும்பவும் எழுதி இருந்தார். பதிவாகக் கூட வந்த நினைவு. இப்போது எல்லோருக்குமே நீரிழிவு என்பதையும் ஹாஸ்யமாகவே சொல்லி இருப்பார்.

   Delete
  3. நான் ருசி அறிந்தவன். நான் இந்த முறை வாங்கிச் சாப்பிட்டேன். ஒரே எண்ணெய். நன்றாக இல்லை. நன்றாக இருக்குன்னு சொல்றவங்க, அல்வா இதுவரை சாப்பிட்டுப்பார்த்திராதவர்களாக இருக்கும்.

   Delete
  4. நெல்லை, அவருக்கு இப்போது வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும்னு நினைக்கிறேன். :)))) ஆனால் ஒன்று! இப்போதெல்லாம் கொஞ்சம் உப்பு, புளி, காரம் போட வந்துட்டாலே சமையல் நன்றாகச் செய்வதாகச் சொல்லிக் கொள்ளுவதோடு சாப்பிடுகிறவர்களும் புகழ்ந்து தள்ளுகின்றனர். எங்க வீட்டிலேயே இதைப் பார்க்கிறேன். சேவை ரெடிமேட் வாங்கிச் சேவை கலந்ததைப் பெருமையாகச் சொல்லிக்கிறாங்க. ))))

   Delete
  5. https://groups.google.com/forum/#!topic/panbudan/KyzqWGFqjA8 இங்கே போய்ப் படிச்சுப் பாருங்க! ))))

   Delete
  6. @ நெல்லைத்தமிழன்..

   >>> ஒரே எண்ணெய். நன்றாக இல்லை. நன்றாக இருக்குன்னு சொல்றவங்க, அல்வா இதுவரை சாப்பிட்டுப்பார்த்திராதவர்களாக இருக்கும்.. <<<

   தஞ்சையிலிருக்கும்போது அடிக்கடி திருவையாறு செல்வேன்..

   பத்தாண்டுகளுக்கு முன் ஒருசமயம் அந்தக் கடையில் அசோகா வங்கியது.. அத்தோடு சரி...

   வீட்டிலேயே அசோகா அவ்வப்போது செய்து விடுவதால் -
   கடைகளில் விற்கப்படும் அசோகா மீதெல்லாம் ஈர்ப்பு இருந்ததில்லை...

   தஞ்சாவூரில் சில கடைகளில் அசோகா ஓரளவுக்கு நன்றாக இருக்கும்...
   இருந்தாலும் உறுதியாக சொல்ல முடிவதில்லை...

   இருந்தாலும்
   தஞ்சாவூர் அசோகா என்று தான் பெயர்..

   அது - திருவையாறு அசோகா ஆனது ஏன்?.. எப்படி?... தெரியவில்லை...

   அப்புறம் -
   தஞ்சாவூர் சந்திரகலா சுவைத்ததுண்டா!.. - இதுவும் இனிப்பு தாங்க!...

   இதுக்கெல்லாம் சுவை நிரந்தரமா இருக்கணும்..ன்னா
   பாரம்பர்ய கைப்பக்குவத்துல இருந்து தவறவே கூடாது....

   ஊத்தப்பம் மேல தக்காளிய வெட்டிப் போட்டு பிஸ்ஸா..ன்னு சொல்ற மாதிரி
   புதுசா ஏதோ ஒரு வேசத்தைப் போட்டு உட்டுட்டு
   அந்தப் பலகாரம்.. இந்தப் பலகாரம் ..ன்னு ஒரே இரைச்சல்!...

   இலுப்பை எண்ணெய், கடலை எண்ணெய் - இதுகளை கைவிட்டுட்டு

   ஏதோ மசகு எண்ணெ, மண்டி எண்ணெ - அப்படின்னு வர்றதுல பலகாரம் செஞ்சா
   அதுல சுவை எங்கேயிருந்து வரும்!?...

   இப்போ இங்கே - ஏதோ ஒரு அரிசி மாவைக் கரைச்சி ஊத்தி
   அவிச்சு எடுத்து இட்டெலி....ங்கறானுங்களே...
   அந்த மாதிரிதான் இருக்கும்!...

   Delete
  7. கீசா மேடம்.... அவர் எழுதினதுல ஒரு அர்த்தம் இருக்கு. எனக்கு கல்லூரி வயதில் பாளையங்கோட்டை அன்னபூர்ணாவில் பரோட்டா சாப்பிடணும்னு ஆசை (வாய்ப்பு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை). பிறகு மதுரையில் காலேஜ் ஹவுஸ், இரயில் நிலைய அருகில் கற்பகம் போன்ற இடங்களில் ஆசையாக சாப்பிட்டிருக்கேன். ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் அவற்றைப் பார்த்தபோது, இதையா ஆசைப்பட்டு சாப்பிட்டோம் என்று தோன்றிவிட்டது. வயது, அனுபவம் ஒரு முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.

   இப்போ ஆண்டவர் கடை அல்வாவை சாப்பிட்டோம். (கொஞ்சம்தான்). நல்லாத்தான் இருந்தது. அசோகா அல்வாதான் சுத்தமாப் பிடிக்கலை.

   Delete
  8. //வயது, அனுபவம் ஒரு முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.//

   இல்லை நெல்லை... ஆட்கள் மாறி, கைப்பக்குவம் மாறியிருப்பதும் ஒரு காரணம்.

   Delete
  9. ஸ்ரீராம்.... ஒரு வியாழன் (அல்லது இரண்டு வியாழன்) இந்த டாபிக்குக்கு ஒதுக்கிடுங்க. அதில் எந்த ஊர், என்ன இனிப்பு, எந்தக் கடைல நல்லா இருக்கும் அப்படின்னு விவரத்தோட சொல்லுங்க. கீசா மேடம், வெங்கட், துரை செல்வராஜு சார் என்று பலரும் பின்னூட்டம் மூலமும் சொல்லலாம். அது என்னைப்போன்ற ரசிகர்களுக்கு மிக உபயோகமா இருக்கும்.

   இப்போ பாருங்க.... தஞ்சை போயிட்டு வந்தப்பறம், துரை செல்வராஜு சார் மெதுவா தஞ்சை சந்திரகலா என்று சொல்கிறார் (அவர் இனிப்பைச் சொல்கிறாரா இல்லை சந்திரகலா என்ற பேருடைய பெண்ணைச் சொல்கிறாரான்னு தெரியலை....ஹிஹி)

   Delete
  10. சூரிய கலா, சந்திரகலா இரண்டுமே மராட்டிக்காரங்க கொண்டு வந்தது. தஞ்சையை அவங்க ஆண்டதாலே அங்கே ஒரிஜினல் மராட்டிக்காரங்க செய்யும் சந்திரகலா கிடைக்கும். அரைவட்ட வடிவில் மாவாவினால் செய்யப்பட்டது. இதைத் தவிர்த்து லவங்க லதிகா என்று ஒன்றும் உண்டு. அதுவும் மராட்டி ஸ்பெஷலே!

   Delete
  11. சூரியகலா முழுவட்டம். ஓரங்களில் அழகாக நெளிவான வேலைப்பாடுகளால் மடித்து விடுவார்கள். சந்திரகலா அரை வட்ட வடிவம். அதுவும் ஓரங்களில் மடிப்பு இருக்கும். லவங்க லதிகா சுண்டக்காய்ச்சிய பாலில் சர்க்கரை, தேங்காய்த் துருவல், பாதம்,பிஸ்தா வகைகள் சேர்த்துப் பூரணமாக்கி மைதாவில் செய்த அப்பளத்தில் நடுவில் வைத்து ஒரு கிராம்பால் மூடுவார்கள். அதைப் பொரித்துப் பின்னர் சர்க்கரைப் பாகில் முக்கி எடுக்க வேண்டும்.

   Delete
  12. ஆ அக்கா சூரியகலா சந்திரகலா பத்தி சொல்லிட்டீங்களே வடிவமே அழகு என்றால் அதன் சுவையும் செம....அது மஹாராஷ்ட்ராதான் பூனாவில் ஒரு கடை பெயர் மறந்து போச்சே..அப்புறம் லவங்க லதிகா டேஸ்டோ டேஸ்டு.....அங்கு நன்றாக இருந்தது.

   கடையில் சாப்பிட்டுவிட்டு அங்கு வீட்டில் செய்தும் பார்த்து சாப்பிட்டோம்...

   கீதா

   Delete
  13. நான் வீட்டில் செய்தது இல்லை. ரொம்ப நாள் நிற்காது. உடனே செலவு செய்யணும். அது முடியாது.

   Delete
 13. /தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? தெரிந்தால் சரி ஒரு தமாஷுக்குச் சொன்னேன்

  ReplyDelete
 14. மார்கழி நினைவுகள் அருமை.
  சிறு வயதில் மார்கழி மாதம் அம்மாவுடன் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு போய் வந்த நினைவுகள் வருகிறது.
  சுடச்சுட வெண்பொங்கல் வாங்கி வந்த நினைவுகள் அழியாதவை.
  மார்கழிமாதம் சிறு வயதில் கொடுத்த மகிழ்ச்சியை இப்போது அனுபவிக்க முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி. நாங்க பெரும்பாலும் நகருக்குள் இருக்கும் கோயில்கள் தான் போவோம். வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் நிகழ்வு வடக்குக் கிருஷ்ணன் கோயில், அதன் பின்னர் பெருமாளைப் பார்க்கக் கூடலழகர் கோயில். கூடாரவல்லித் திருநாளன்றும் கூடலழகரைப் பார்த்துட்டு வருவோம்.

   Delete
 15. அம்மா காலை மூன்று மணிக்கு எழுந்து விடுவார்கள் மார்கழி மாதம். எங்களை நாலுமணிக்கு எழுப்பிவிடுவார்கள். குளித்து திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 30 பாட வேண்டும் அப்புறம் கோவில் அழைத்து போவார்கள் . கோலம் போட்டு விளக்கு வைப்பது எல்லாம் நாலுமணிக்கே முடிந்து விடும்.
  வீட்டில் தினம் சுவாமிக்கு பிரசாதமும் உண்டு. அது போலவே நானும் செய்வேன்.
  குழந்தைகள் எழுப்பினால் இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம் என்று கேட்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டிலும் அப்பா, அம்மா எழுந்துப்பாங்க. அப்பா தனுர்மாத பூஜை தினம் செய்வார். அதன் பின்னர் கோயிலுக்குப் போவார். அம்மா வேலைகளை முடித்துவிட்டு ஆறு மணி போலப் போவார். நாங்களும் அப்போதே போய்விட்டுப் பின்னர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் பள்ளிக்குப் போனது உண்டு.

   Delete
 16. ///அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது.//

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:).

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, என்ன ஹாஹாஹா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்? எதுக்காம்?

   Delete
 17. // ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது//

  இப்பழக்கம் என்னிலும் உண்டு, காலையில் இத்தனை மணிக்கு எழும்போணும் என எலாம் வச்சிட்டுப் படுத்தாலும் எலாம் அடிக்க ஓரிரு நிமிடங்களுக்கு முன்பே முழிப்பு வந்துவிடுமெனக்கு..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரடி, ஶ்ரீராம்.பலருக்கும் இந்தப் பழக்கம் இருக்கு!

   Delete
  2. ஹைஃபைவ் உங்க எல்லோருடனும்......எனக்கும் சிறு வயதிலேயே பழகி இப்போது வரை தொடர்கிறது....என் அப்பாவுக்கும் இந்தப் பழக்கம் உண்டு...அலார்ம் வைப்பது இல்லை என்றாலும் வைச்சாலும் அதுக்கு முன்பெ முழித்துவிடும் பழக்கம்...ஆனால் படுக்கும் முன் மனதில் அந்த நேச்சுரல் உடம்பு சிஸ்டம் க்ளாக்கில் செய் செய்து கொள்ள வேண்டும்..

   கீதா

   Delete
 18. திருவெம்பாவை, முதல்நாளே மாலை கட்டி வச்சுப்போட்டு விடிய எழும்பி ஜில்லெனத்தண்ணியில் குளிச்சு விட்டு, மாலையுடன் கோயிலுக்குப் போய் வரும் பத்து நாட்களும் வாழ்வில் மறக்க முடியாதவை... எதை நினைச்சாலும் கவலை கவலையா வருது.. இப்போ இதோ 18 ஆம் ஆண்டு முடியப்போகுதே இனி நம் வாழ்நாளில் இந்த ஆண்டைக் காண மாட்டமே என நினைச்சேன்ன்.. தேவையில்லாமல் அழுகை வருது கர்ர்ர்ர்ர்ர்ர்:(..

  ReplyDelete
  Replies
  1. /இதோ 18 ஆம் ஆண்டு முடியப்போகுதே இனி நம் வாழ்நாளில் இந்த ஆண்டைக் காண மாட்டமே என நினைச்சேன்ன்.. தேவையில்லாமல் அழுகை வருது கர்ர்ர்ர்ர்ர்ர்:(..//

   ஹிஹிஹி.... டிஸம்பர்ப் புலம்பல்கள்!

   Delete
  2. ஹா ஹா ஹா எவ்ளோ ஸ்பீட்டா ஓடுது காலம்...

   Delete
  3. ஆமாம், அதிரடி, நாட்கள் பறக்கின்றன. நான் மனதளவில் இன்னமும் 2006 இலேயே இருக்கேனோனு தோணுது! இத்தனை வருடங்கள் கடந்தது ஏதோ விட்டுட்டுப் போனாப்போல் ஒரு எண்ணம். :( என்னனு புரியலை!

   Delete
  4. ஆமாம் நானும் அப்பாவின் வழி பாட்டி வீட்டில் இருந்தப்ப தினமும் மார்கழி மாதம் என்றால் பவழ மல்லி பூத்துக் குலுங்குமே அதைப் பொறுக்கி மாலை கோர்த்து கோயிலில் கொடுக்கனும்...

   மாமியார் வீட்டுக்கு வந்தப்புறம் வீட்டில் தோட்டத்தில் பவளமல்லி இருந்தது அப்போது வீட்டு ஸ்வாமிக்கு மாமனாருக்குக் கோர்த்துக் கொடுப்பேன் நானும் மாமனாரும் விழுந்த பூவை எடுத்துவிட்டு மீண்டும் மரத்தை உலுக்கி எடுப்போம்...மாமனார் ஸ்வாமிக்கு நான் கோர்த்த மாலையைப் போடுவார்...இப்போது அந்த மரம் இல்லை...எனக்கும் என்னவோ பலதும் விட்டுப் போயிற்றே என்று ஓர் எண்ணம் மீண்டும் கோல்டன் டேய்ஸ் வராதோ என்ற எண்ணமும்...ம்ம்ம்

   கீதா

   Delete
  5. அம்பத்தூர் வீட்டில் பவளமல்லி மரம் இருந்தது. பின்னர் நாங்க எண்பதுகளில் வடக்கே மாற்றல் ஆகிப் போனதும் கவனிப்பு இல்லாமல் பட்டுப் போய்விட்டது. முல்லைக்கொடியும் அப்படியே!

   Delete