எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 12, 2018

ஏழுமலையானுக்கு கோவிந்தா! கோவிந்தா! பயணம் 1

புதுசாப் பதிவு எழுதணும்னு முயற்சித்தால் எரர் காட்டுது கூகிள். இந்தப் பக்கத்துக்கு சப்போர்ட் இல்லைனு சொல்லிட்டு இருக்கு. இத்தோட நான்காம் முறையா ஆரம்பிக்கிறேன். எழுதி வைச்சுட்டுக் காப்பி, பேஸ்ட் பண்ணினால் வருமோ! தெரியலை! நான் அப்படியே நேரடியாகவே எழுதிட்டு வருவதால் என்னிடம் வேர்ட் டாகுமென்டில் எல்லாம் இது வராது. தொடர்களாக எழுதினால் அவற்றை மட்டும் வேர்டில் எழுதிக் கொண்டு இங்கேயோ அல்லது குறிப்பிட்ட பதிவிலேயோ காப்பி, பேஸ்ட் பண்ணுவேன்.  இது தொடராக எழுதினாலும் சின்னத் தொடர் தானே! ஆகவே நேரடியாகவே தட்டச்சுகிறேன்.



ஃபெப்ரவரி மாதம் 25 ஆம் தேதி போலக் காணாமல் போனேன் அல்லவா! அப்போத் திருமலைக்குப் போயிருந்தோம். சுமார் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன திருமலைக்குப் போய்! பையர், அவர் மனைவி இருவரும் போனாலும் அப்போ இருந்த கூட்டத்தில் எங்களால் வெகுநேரம் நிற்க முடியாது எனக் கூட்டிச் செல்லவில்லை. நாங்களும் கொஞ்சம் தயக்கத்துடனேயே இருந்தோம். ஆனால் இப்போது சந்திரபாபு நாயுடுவின் அரசு மூத்த குடிமக்களுக்காகத் தனியான தரிசன சேவை ஏற்படுத்தியதும் அதைக் குறித்த விபரங்களைப் படித்ததும் செல்லும் ஆசை ஏற்பட்டது என்னமோ உண்மை. ஆனால் மாமியாரின் ஆப்திகம் முடியக் காத்திருந்தோம். முதலில் குலதெய்வம் கோயிலுக்குத் தானே செல்லணும். அங்கே போயிட்டு வந்தோம். அப்புறமாப் பெரிய ரங்குவையும் பார்த்தோம். மதுரையும் செல்ல நினைத்திருந்தோம். முடியவில்லை. அதற்குள்ளாகத் தான் ஆயிரக்கால் மண்டபத்தில் தீ விபத்து.

ஆனால் திருப்பதி செல்லப் பயணச்சீட்டு இங்கிருந்து பல்லவனிலும், சென்னை சென்றதும் அங்கிருந்து சப்தகிரியிலும் முன் பதிவு செய்திருந்தோம். தெரிந்த நண்பர் மூலமாக மலையில் ஓர் மடத்தில் அறைக்கும் ஏற்பாடு செய்திருந்தோம். 26 ஆம் தேதி காலை பல்லவனில் கிளம்பினோம். எழும்பூர் சென்று அங்கிருந்து சென்ட்ரல் போய் சப்தகிரியைப் பிடிக்கணும். நல்லவேளையாக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிட்டது சப்தகிரி! ஒரே ஒரு பெட்டி மட்டுமே குளிர்சாதனப் பெட்டி! நல்லவேளையா அதிலே இடம் கிடைத்திருந்தது. மாலை சுமார் ஆறு மணி அளவில் கீழத்திருப்பதி போய்ச் சேர்ந்தோம். எனக்கு அங்கேயே தங்கிட்டுக் காலை மேலே ஏறலாம் என்று எண்ணம். ஆனால் நம்ம ரங்க்ஸ் இரவே அங்கே போயிடணும் என்று முயன்றார்.



சோதனை போலக் கீழத்திருப்பதி போனதுமே என்னோட அலைபேசியும் அவரோட அலைபேசியிலும் நெட்வொர்க் வேலை செய்யவில்லை. அங்கிருந்த ஒரு அலைபேசிக் கடைக்காரரிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டதில் சரி செய்து கொடுத்தாலும் எங்களால் அழைக்க முடியவில்லை. அழைப்பவர்களுக்கு மட்டும் பதில் கொடுக்க முடிந்தது. ஒரு மாதிரியாக மேலே போய் வியாசராஜ மடத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருப்பதைத் தெரிந்து கொண்டு மேலே ஏறினோம். அதற்குள்ளாக இரவு ஆகிவிட்டபடியால் அனைவரும் அரசுப் பேருந்திலேயே பயணிக்கும்படி ஆலோசனை சொன்னார்கள். ஆகவே பேருந்திலேயே போனோம்.  பேருந்தில் நாங்க இரண்டு, மூன்று பேர் மட்டுமே! மேலே சாமான்கள் வைக்கும் பகுதியில் ரங்க்ஸ் சாப்பாடு கொண்டு வந்த பாத்திரங்கள் உள்ள பையை வைத்திருந்தார். வண்டி மேலே ஏறும் இடம் வந்ததும் பயணிகள் அனைவரும் கீழே இறங்கி பாதுகாப்புச் சோதனையை மேற்கொண்டு மீண்டும் வண்டிக்கு வந்தோம்.

வண்டியின் வேகத்தாலும் கொண்டை ஊசி வளைவுகளாலும் மேலே உள்ள பையிலிருந்து சாமான்கள் சிதறத் தேடித் தேடிப் பொறுக்கிக் கொண்டோம். மலைக்குப் போனதும் பேருந்து நிலையம் வரும் முன்னரே பேருந்துகள், தனிப்பட்டவரின் கார்கள், வான்கள் போன்றவை வழி இல்லாமல் நிறுத்தப்பட்டிருக்க நாங்க வந்த வண்டியும் நின்றது. நீண்ட நேரம் ஆகும் எனத் தோன்றியதால் அங்கே இருந்து இறங்கிக் கொஞ்ச தூரம் போனதும் ஒரு டாக்சி வர அந்த டாக்சி ஓட்டுநரிடம் நாங்க போகவேண்டிய மடம் பெயரைச் சொல்லிக் கோயிலுக்குப் பின்னால் இருப்பதாகவும் கூற அவர் 50 ரூ வாங்கிக் கொண்டு எங்களை மடத்தின் வாயிலில் இறக்கி விட்டார். என்றாலும் உடனே செல்லாமல் எங்களுக்கு அறை கிடைக்கிறதா எனப் பார்த்துத் தெரிந்து கொண்டு சாமான்களையும் இறக்கி உதவி விட்டுச் சென்றார். அறைக்குச் சென்றோம். மாலை கொஞ்சம் டிஃபன் சாப்பிட்டிருந்ததால் அந்த நேரம் இரவு ஒன்பது மணிக்கு உணவு வேண்டாம் எனத் தீர்மானித்துக் கொண்டு ஃப்ளாஸ்கைக் கொடுத்துப் பால் வாங்கி வரச் சொன்னோம். விடுதி ஊழியர் வாங்கி வந்தார். பாலைக் குடித்துவிட்டுப் பழங்களைச் சாப்பிட்டு விட்டுப் படுத்தோம். காலை மூன்று மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. ஆனால் நாலரைக்கு அப்புறமாத் தான் விடுதியில் வெந்நீர் கொடுப்பார்கள் என்று சொல்லி இருந்ததால் காத்திருந்தோம்.

Sunday, April 08, 2018

குஞ்சுலு ஊருக்குப் போயாச்சு!

நீண்ட தூக்கத்திலிருந்து முழிச்சாப்போல் இருக்கு! பதினைந்து நாட்களாக ஒரே ஓட்டம் தான். கிடைச்சதைச் சாப்பிட்டுக் கொண்டு, நேரம் இருக்கும்போது சமைத்துக் கொண்டு! என் வாழ்க்கையில் இப்படி ஒரு ஓட்டம், பாட்டம் இல்லை.  அன்றாட வேலைகளை எப்படியோ முடிச்சுடுவேன். ஆனால் இந்த முறை அது முடியலை! எல்லாம் குஞ்சுலுவால் தான்!

 குட்டிக் குஞ்சுலு வரப்போகும் செய்தி தெரிந்ததில் இருந்தே பரபரப்புத் தான்! ஓட்டம் தான். இதிலே பிப்ரவரி மாதம் திருப்பதி வேறே போக வேண்டி இருந்தது. மார்ச் மாதம் மாத்ருகயா செல்ல வேண்டி குஜராத் பயணம். அங்கே இருந்து வந்ததும் ஶ்ரீராமநவமி முடிச்சுட்டுக் குட்டிக் குஞ்சுலுவை வரவேற்கச் சென்னை பயணம்.  சென்னையில் குட்டிக் குஞ்சுலுவின் காதுகுத்து விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. குஞ்சுலு தான் அழுதது! என்றாலும் விடாமல் குத்தியாச்சு! அப்புறமா ஶ்ரீரங்கம் வந்தது குட்டிக் குஞ்சுலு! வந்ததிலே இருந்து கொட்டம் தான். எங்களை எல்லாம் நல்லா நினைவும் வைச்சுக் கொண்டிருந்தது. மறக்கலை! ஆனால் தூக்கக் கூடாது! தூக்கிக் கொஞ்சக் கூடாது!

வந்ததுமே கீழே இறங்கி வீட்டை எல்லாம் அதுவாவே தனியாப் போய் ஒவ்வொரு அறையாப் பார்த்துக் கொண்டது. அது பாட்டுக்கு ஏதோ பழகிய இடம் மாதிரி விளையாட ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு நிமிஷமும் போனது தெரியலை. அதோடு இல்லாமல் குட்டிக் குஞ்சுலுவுடன் ஊர் சுற்றல் வேறே. குலதெய்வம் கோயில் மட்டுமில்லாமல் மற்றப் பிரார்த்தனைக் கோயில்களும் செல்ல வேண்டி இருந்தது. வீட்டில் இரவு படுக்கத் தான் வருகிற மாதிரி ஆயிடுத்து! எப்படியேனும் தினசரி மின்மடல்கள் இருக்கானு கணினியில் பார்ப்பேன். அது கூடப் பார்க்க முடியலை. யாருங்க, அது செல்ஃபோன் இல்லையானு கேட்கிறது? செல்ஃபோன் இருக்கு! அதில் ஒரு ஐடிதான் சேர்த்திருக்கேன். மற்ற ஐடிகள் முக்கியமாய் பிரைம் ஐடி எனப்படும் முக்கிய ஐடி சேர்க்கலை! வேண்டாம்னு தான்! :)))) ஆகவே கணினி கிட்டேயே போக முடியலை. மொபைல் டாட்டா மூலம் வாட்சப்கள், முகநூல் மட்டும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன்.

வெள்ளிக்கிழமை வரை நேரம் சரியாகப் போய்விட்டது. நேரம் போனது தெரியாமல் குஞ்சுலுவே எங்களை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது.  குஞ்சுலு வந்து எங்களைத் தொடும், விளையாடும், ஆனால் நாங்க அதைத் தொடக் கூடாதாம். வீட்டில் இப்போ சாமான்கள் எல்லாம் வைச்ச இடத்தில் இருக்கின்றன. சேப்பங்கிழங்குக் கூடை குஞ்சுலு இல்லாமல் சோகத்தில் இருக்கு. உ.கி.யும். வெங்காயமும் விளையாடப் பட்டுக் குஞ்சுலு எங்கே என்று கேட்கின்றன. குஞ்சுலு தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தி விட்டுத் தானே ஏதோ பேசும். தொலைபேசி இப்போ வைச்ச இடத்திலே இருக்கு. என் அலைபேசியில் குஞ்சுலுவுக்காக "வந்தே குருபரம்பராம்" யூ ட்யூப் தரவிறக்கிக் குஞ்சுலுவுக்குப் போட்டுக் கொண்டிருப்பேன். பிபரே ராமரசம் பாட்டும், ஹனுமான் சாலீஸாவும் குஞ்சுலுவின் மிக விருப்பமான பாடல்கள். இப்போ அதை எல்லாம் போடவே தோணலை. எங்கே பார்த்தாலும் குஞ்சுலு நின்று கொண்டு கைகளால் முகத்தை மூடிக் கொண்டு விரல் இடுக்கு வழியே எங்களைப் பார்த்துச் சிரிப்பது போலவே இருக்கு!

இல்லைனா சுவரில் மறைந்து கொண்டு எட்டிப் பார்த்துச் சிரிக்கும். கொஞ்சம் ஏமாந்தால் வாசல் கதவு வழியாக வெளித்தாழ்வாரத்துக்குப் போய் மாடிப்படிகள் கிட்டே போக ஆரம்பிக்கும். அதைக் கண்காணிப்பதே வேலையாக இருக்கும். இப்போ அதெல்லாம் இல்லை. நேரம் நிறையவே இருக்கு. மிக மிக மிக அதிகமாக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நேரம்! :(  இப்போதைக்கு சென்னையில் அவங்க பாட்டி வீட்டில் குஞ்சுலு இருக்கு. அப்புறமா நாலு நாட்கள் கழிச்சு அம்பேரிக்கா போயிடும். அங்கே போய் எங்களை எல்லாம் காணோமேனு நினைச்சு ஏங்குமோ? தெரியலை! இங்கே எல்லோரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு விளையாட அழைக்கும். பட்டுப்பாவாடை கட்டிவிட்டால் தட்டாமாலை சுற்றும்! அதுக்குப் பட்டுப்பாவாடை ரொம்பவே பிடிச்சிருக்கு!  நாங்க அம்பேரிக்காவில் குஞ்சுலுவை விட்டுட்டு வரச்சே ஒன்பது மாசம் ஆகி இருந்தது. இப்போ ஒன்றரை வயசு! இனி எப்போப் பார்ப்போமோ தெரியலை. ஸ்கைபில் பார்ப்போம் தான்! என்றாலும் நேரில் குஞ்சுலுவைத் தொட்டு விளையாடிக் கொஞ்சுவது போல் வருமா? :(

Sunday, March 25, 2018

ஶ்ரீராமநவமிக்கு ஓர் மீள் பதிவு!


ஶ்ரீராமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! :)

ராமருக்குப் பாவம் ரொம்பவே மிருதுவான பக்ஷணங்கள்! அதான் அவர் இப்படிச் சொல்றார்!
நீங்கல்லாம் கிருஷ்ண ஜயந்தின்னா எல்லாம் நொறுக், முறுக்னு தின்னப் பண்ணித் தள்ளறீங்க! இன்னைக்கு என்னோட பிறந்த நாளைக்கு எல்லாம் மிருதுவாத்தானே பண்ணணும்! அது கூடப் பண்ணலைன்னா எப்படினு கேள்வி மேல் கேள்வி! கண்ணனை இப்போத்தானே எழுதறேன், அதுக்கு முன்னாடியே உங்களைப் பத்தி எழுதியாச்சே! ரெண்டாவதா அவன் இன்னமும் குழந்தை தான்! உங்க மேலே முதல்லே மரியாதை தானே வருதுனு சொன்னேன்! ஏதோ சாக்குனு முகத்தைத் திருப்பினார் ஶ்ரீராமர்!  சரி இன்னிக்குத் தான் ராமருக்குப் பிறந்த நாள் வேறேயே! நேத்திக்கே ஜன்ம நக்ஷத்திரம் வந்தாச்சு! ஆனால் நாமெல்லாம் என்னமோ நவமி திதியிலே தானே கொண்டாடறோம்! ஆகவே இன்னிக்கு ஶ்ரீராமநவமிக்கு ஶ்ரீராமர் மனம் குளிரும்படி எல்லாமும் செய்துடலாம்னு முடிவு.

இந்த வருஷம் மல்லிகை மாலை போடலை. பூ சரியாக வர ஆரம்பிக்கலை. அதனால் கதம்பம் தான். படமும் முன்னால் எடுத்தது. இந்த வருஷம் எடுக்கலை! :)


என்ன பெரிசா? சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், வடை, பானகம், நீர்மோர்! அம்புடுதேன்! அதுக்கே இங்கே நாக்குத் தள்ளுது! :) போளியெல்லாம் பண்ணலை!  இந்த வெயில் வேறே இந்த வருஷம் பாடாய்ப் படுத்தி எடுக்குது. குளிச்சுட்டு வந்த உடனே மறுபடி குளிச்சாப்போல் வியர்வை வெள்ளம். அடுப்பு எரிஞ்சால் என்ன, எரியாட்டி என்னனு மெத்தனமா சமையலறையில் முழு வேகத்தில் மின் விசிறியைச் சுத்த விட்டுட வேண்டி இருக்கு!  பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வியர்வைக்குளியலைக் கழுவி நல்ல நீர் விட்டு முகம், கை,கால்களைக் கழுவிட்டு வர வேண்டி இருக்கு! இத்தனைக்கு நடுவே சமையல், சாப்பாடு. மூணு நாளாக் காலை நோ டிஃபன்! நம்ம ரங்க்ஸுக்கு அதுவே பாதி பலவீனமாயிடுச்சு. பசி தாங்கலை! காஃபி இரண்டு தரம், ஹார்லிக்ஸ் (மருத்துவர் தடை போட்டிருக்கார்) ஒருதரம்னு குடிச்சாலும் தாங்கறதில்லை. ஆகவே பத்து மணிக்குள்ளாகச் சமைக்கணும்.

வீடு சுத்தம் செய்துட்டுக் குளிச்சுட்டு வரவே எட்டரை மணி ஆயிடுது! :) அதுக்கப்புறமா இவை எல்லாம் செய்துட்டுச் சரியாப் பத்து மணிக்கு எல்லாம் முடிச்சுட்டேன். வெள்ளிக்கிழமையா, ராகுகால விளக்கு ஏத்துவேன். அதுக்காகப் பத்து நிமிஷம் காத்திருந்து நிவேதனம் பண்ணினேன். கீழே படங்கள்! ராமர் படத்தின் மேலே வெளிச்சம் பிரதிபலிக்காமல் எடுக்கணும்னு பார்த்தால் முடியலை. மின் விளக்கை அணைத்தால் படம் எடுக்க வெளிச்சம் போதலை. விளக்கைப் போட்டால் அது பிரதிபலிப்பு அதிகமா ஆகி ஶ்ரீராமரின் முகமே தெரியறதில்லை!



சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், பானகம், நீர்மோர், வடை, வெற்றிலை பாக்கு, பழம் நிவேதனம்!

கீழே கற்பூரம் காட்டியது தட்டில் எரிந்து கொண்டு இருக்கிறது.  பலகையில் ராகுகால விளக்கு ஏற்றியது எரிகிறது. :)

எல்லோரும் சீக்கிரமா வந்து சுடச் சுட வடை, பாயசம், சுண்டல் எடுத்துண்டு, பானகமும், நீர்மோரும் குடிங்கப்பா!

இது ஒரு மீள் பதிவு. மற்றபடி இந்த வருஷமும் பாயசம், சுண்டல், வடை, நீர்மோர், பானகம், சாதம், பருப்பு, வெற்றிலை, பாக்கு, பழம்!

Saturday, March 24, 2018

தோசை முகம் மாறிப் போச்சே!

அஹமதாபாதிலிருந்து சென்னை வந்ததும் எழும்பூரில் வழக்கமான சங்கீதா ஓட்டலில் சாப்பிடச் சென்றோம். முன்னே மாதிரி இல்லைனாலும் மனசு என்னமோ அங்கேயே சாப்பிடலாம் என்றது. நாங்க வந்த விமானத்திலே தாராளமாத் தண்ணீர் மட்டும் கொடுத்தாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! காலம்பர அஹமதாபாதிலிருந்து ஆறு மணிக்கே கிளம்பியாச்சு. தங்கி இருந்த ஓட்டலிலே காலை ஏழரைக்குத் தான் ப்ரெக்ஃபாஸ்ட் ஆரம்பம். அதுக்குத் தங்கினா இங்கே விமானம் போயிடும். நல்லவேளையா இப்போல்லாம் எல்லா ஓட்டல்களிலும் வைக்கிறாப்போல் காஃபி பொடி, பால்பவுடர், சர்க்கரை எல்லாம் வைச்சிருந்ததாலே காலங்கார்த்தாலேயே காஃபி கலந்து சாப்பிட்டோம். தமிழ்நாட்டிலே இன்னும் இப்படி இருக்கிறாப்போல் தெரியலை. மதுரை போனப்போத் தங்கின நக்ஷத்திர ஓட்டலிலேயே இல்லை! நறநற! ஆனால் கும்பகோணத்திலே ஓட்டல் ராயாஸில் வைச்சிருந்தாங்க. டீ, காஃபி, பால், சர்க்கரை எல்லாமும் இருந்தது.

சங்கீதாவிலே நம்ம ரங்க்ஸ் சாப்பாடு சாப்பிட்டார். எனக்குச் சாப்பாடு சாப்பிட பயம். வயிறு என்ன சொல்லுமோ! அதோடு மறுபடி ரயிலில் பயணம் இருக்கே! பாதி வழியில் வயிறு தகராறு செய்தால்! ஆகவே எளிமையா இருக்கட்டும்னு தோசை சொன்னேன். வெங்காய தோசை தான் இருந்தது. விட்டால் மசாலா தோசை! மசாலா தோசைல்லாம் ரொம்ப கனம் அதிகம் உள்ள உணவு. வெங்காயம் பரவாயில்லை ரகம்! ஆகவே வெங்காய தோசையே சொன்னேன்.  தோசை வந்தது பாருங்க! என் மூஞ்சியைப் பார்க்கச் சகிக்காமல் இருந்தது என்று கண்ணாடியைப் பார்க்காமலேயே என்னால் சொல்ல முடியும். பொதுவா தோசைனா ஓரங்களில் முறுகலாக அடுத்த ஒரு அங்குலத்திற்குக் கொஞ்சம் மெத்தென்றும் நடுவில் போகும்போது ஓரங்கள் மெலிதாக முறுகியும் நடுவே கொஞ்சம் மெத்தென்றும் இருக்கும். இதைத் தான் நாம் தோசை என்போம். இப்போல்லாம் முறுகல் தோசை என்னும் பெயரில் ஒடிக்கிறாப்போல் தோசையைக் கொடுக்கிறாங்க. விண்டால் தூள் தூளாக ஆகி விடுகிறது. அம்பேரிக்காவில் எல்லா ஓட்டல்களிலும் இப்படித் தான் தூள் தூளாகத் தோசை! அல்லது ரப்பர் போல் இழுக்கும் தோசை! அங்கேயாவது வார்க்கத் தெரியாமல் வார்க்கிறாங்கனு நினைச்சால் இங்கேயும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வெங்காய தோசை எனில் மாவில் வெங்காயத்தைக் கலந்து கொண்டு அதுவும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைக் கலக்கணும். தோசை வார்க்கும்போதும் ரொம்ப மெலிதாகவும் இல்லாமல் கனமாக ஊத்தப்பம் போலவும் இல்லாமல் சாதாரண தோசை மாதிரியே வார்த்துட்டு வெங்காயத்தை நன்கு வேகும்வரை திருப்பியும் போடணும்! இங்கே! ம்ஹூம்! மெலிதாகப் பேப்பர் மாதிரி! பேப்பர்னா "தமிழ் தி இந்து" அல்லது "தினமலர்" அல்லது "தினத்தந்தி" அல்லது "தினகரன்" மாதிரிப் பேப்பர் தாங்க! அவ்வளவு மெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லிசாக வார்த்துட்டு அதில் கரடு முரடாக நறுக்கிய வெங்காயத்தை உள்ளே கொட்டி வைச்சிருக்காங்க. தோசையை எடுத்தால் வெங்காயம் தனியாக் கொட்டுது! தோசை கையில் ஒரே சுருட்டாகச் சுருட்டலாம். அந்த மாதிரி இருக்கு!

இது வெங்காயம் தனி, தோசைங்கற வஸ்து தனியா இருந்தது. தோசையைப் பிய்ச்சா வெங்காயத்தோடு சேர்ந்து வரணும். ம்ஹூம், வெங்காயம் எங்கேயோ இருந்தது. தோசையை வார்த்துட்டு அதன் மேலே வெங்காயத்தை இஷ்டத்துக்கு நறுக்கி உள்ளே கொட்டி வைச்சிருக்காங்க! இதுக்கு வெங்காய தோசைனு பேராம்! இதுக்குப் போய்   75 ரூபாயாம். தண்டம்! அரைக்கரண்டி மாவு கூட எடுத்திருக்க மாட்டாங்க! ஆனாப் பாருங்க, எங்களுக்கு, முக்கியமா எனக்கு முதல் நாளிலே இருந்தே சந்திராஷ்டமம் ஆரம்பிச்சிருக்குப் போல! முதல் நாள் சாப்பாட்டிலே அன்னிக்கு 100ரூ தண்டம். அப்போவே உஷாரா இருந்திருக்கணும்! :)  எங்கே! புதன்கிழமை நல்லா மாட்டிக்கிட்டேன். நம்ம ரங்க்ஸ் சிரிச்சிருக்கணும். என்னைப் பார்த்தாப் பாவமா இருந்தது போல! ஒண்ணும் சொல்லாம விட்டுட்டார். இல்லைனா இம்மாதிரியான நிகழ்வுகளுக்கே நாங்க காத்திருப்போமே! மாட்டி விட்டிருக்க மாட்டோமா என்ன! :)))) அப்புறமா ஒரு லஸ்ஸி சாப்பிட்டுப் பசியை ஆத்திக் கொண்டேன். முதல்லேயே லஸ்ஸி சாப்பிட்டுட்டு தோசையைக் கான்சல் செஞ்சிருக்கணுமோ! தோசைன்னாலே இப்போ பயம்மாவும் இருக்கு! வாழ்க்கையும் வெறுத்துப் போச்சு! ஶ்ரீரங்கம் வந்து ஓர் அடை, அவியலோடு சாப்பிட்டதும் தான் வாழ்க்கை திரும்பக் கிடைச்சது.  பயத்திலே தோசை கிட்டேக் கூடப் போகலை. என்  பிரியமான தோசை முகமே மறந்துடுமோனு பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவும் இருக்கு! :)

இன்னிக்குப் பாருங்க, தோசைக்கு அரைக்கிறேன்னு சொன்னா ரங்க்ஸ் ஓட்டமா ஓடிட்டார். எங்கே அது போல வார்த்துடுவேனோ னு பயம் போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!




இது மங்களூரு நீர் தோசை வார்த்தப்போ எடுத்த படம்! நீர்த் தோசை

Friday, March 23, 2018

சித்தப்பாவுக்கு அஞ்சலி!



சித்தப்பா இறந்து இன்றுடன் ஒரு வருஷம் ஆகி விட்டது. இன்னமும் மனது ஏற்க முடியாத ஒரு விஷயம் உண்டெனில் அது இது தான்!  பல இடங்களில் நினைவஞ்சலி நடத்துவதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. நல்ல அற்புதமான மனிதர். எங்க குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமானவர். அவருக்கும் எல்லோரையும் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவரிடம் ஓர் ஈடுபாடு உண்டு எனில் அவரும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அன்பைக் காட்டி இருக்கிறார். மறக்க முடியாத மனிதர். 

Monday, March 19, 2018

"திங்க"ற கிழமைக்குப் பறங்கிக்கொட்டை அடை!

இதைப் போன மாசமே ஶ்ரீராமுக்கு அனுப்பி இருக்கணும். அவரும் மார்ச் மாதம் வெளியிடுவதாய்ச் சொன்னார். ஆனால் அடுத்தடுத்து ஏதேதோ பிரச்னைகள்! கவலைகள்! இதை மறந்தே விட்டேன். ஶ்ரீராமும் அப்பாடா!னு நிம்மதிப் பெருமூச்சு விட்டது இங்கே வந்து கேட்டது. பின்னே? வரிசையில் இருக்கிறதையே போட முடியலையாம்! இதிலே நான் வேறே அனுப்பினால் ஶ்ரீராமுக்கு என்ன பண்ணறதுனு கவலையா இருக்காதா?

கீழே செய்முறைகள் கொடுத்திருக்கேன். யாரும் உதவிக்கு இல்லை. தி/கீதா எப்படியோ எல்லோரையும் செய்யச் சொல்லி வேலை வாங்கிடறாங்க. நமக்கு வேலை வாங்கற சமத்து எல்லாம் இல்லை. ஆகவே நானே செய்தது தான் எல்லாமும்! 

அடைக்குத் தேவையான சாமான்கள்: பச்சரிசி அரைக்கிண்ணம், புழுங்கலரிசி ஒன்றரைக்கிண்ணம். பலரும் பச்சரிசியிலேயே அடை செய்யறாங்க. ஆனால் நான் புழுங்கலரிசி சேர்ப்பேன். ஏகாதசின்னா அன்னிக்குப் பச்சரிசி அடை!

துவரம்பருப்பு ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு அரைக்கிண்ணம், உளுத்தம்பருப்பு ஒரு கரண்டி, கறுப்பு உளுந்து இருந்தால் தோலோடு போடவும்.

மி.வத்தல் நான்கு, பச்சை மிளகாய் இரண்டு, உப்பு, பெருங்காயம்



புழுங்கலரிசி ஒன்றரைக்கிண்ணம்+பச்சரிசி அரைக்கிண்ணம் களைந்து ஊற வைச்சாச்சு!


துவரம்பருப்பு ஒரு கிண்ணம் (துவரம்பருப்பு கூடப் போட்டால் அடை மொறுமொறுப்பாக வரும்) கடலைப்பருப்பு அரைக்கிண்ணம்+உளுத்தம்பருப்பு ஒரு கரண்டி. கறுப்பு உளுத்தம்பருப்பு தோல் நீக்காதது எனில் ருசி அதிகம்.



மிக்சி ஜாரில் பச்சை மிளகாய் இரண்டும் நான்கு சிவப்பு மிளகாய் வற்றலும் உப்பு, பெருங்காயம் சேர்த்து முதலில் ஒரு ஓட்டு ஓட்டிக்கணும். பின்னர் அரிசியைப் போட்டு அரைக்கணும். ஜலம் அதிகம் விடக் கூடாது. நிதானமாக ஜலம் விட்டால் போதும். 



புழுங்கலரிசி+பச்சரிசிக் கலவை அரைத்த பின்னர்


அதில் பருப்புச் சேர்த்தாச்சு. பருப்புச் சேர்த்து அரைத்த கலவை கீழே!




கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்திருக்கேன்.


இளங்கொட்டை கிடைக்காததால் பச்சைப் பறங்கிக்காய் வாங்கினோம். 


பொடிப்பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கணும்.



தோசைக்கல்லில் வேகும் அடை!


திருப்பிப் போட்டு வேகும் அடை! சூடான பறங்கிக்கொட்டை அடை தயார். சாப்பிடலாம் வாங்க! 








Saturday, March 17, 2018

ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்!

எல்லோருக்கும் ஓர் நற்செய்தி!ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்.      நாளையிலிருந்து புதன் வரை இணையத்துக்கு வர மாட்டேன். குஜராத் போகிறோம். போயிட்டு வந்து விபரங்கள் சொல்றேன். என்ன ஒரு பிரச்னைன்னா இன்டிகோ விமானத்தில் மூணு மாசம் முன்னாடியே டிக்கெட் வாங்கியாச்சு. இப்போ நாங்க போகற நேரம் பார்த்து இன்டிகோ விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. அவங்க ரத்து செய்த விமானங்களில் நாங்க போற விமானம் இல்லைதான்! நேத்திக்கு ஏர்லைன்ஸ் வெளியிட்ட ரத்து செய்யப்பட்ட விமானங்களோடு நாங்க போக வேண்டிய ஊரோ, விமானமோ இல்லை என்பதையும் பார்த்தாச்சு.  முன்பதிவு செய்த ஏர்லைன்ஸ் ஏஜென்டிடமும் தொலைபேசிப் பேசி உறுதி செய்து கொண்டாச்சு! ஆகவே   நாளைக்கே அம்பத்தூர் போய் அங்கே சில, பல வேலைகள் முடித்துக் கொண்டு பின்னர் திங்களன்று மாலை அஹமதாபாதுக்கு விமானம் ஏறிப் பயணம்

செவ்வாயன்று அங்கே வேலையை முடித்துக் கொண்டு பின்னர் திரும்ப புதன் காலை அங்கிருந்து சென்னைக்குத் திரும்பணும். இந்தப் பதிவுக்கு நீங்க கொடுக்கும் கருத்துகளுக்கு இன்னிக்குச் சாயந்திரத்துக்குள்ளாகப் பதில் சொல்லப் பார்க்கிறேன். முடியலைனா வந்து தான். அதிரடி, இது முக்கியமா உங்களுக்குத் தான். ஊருக்குப் போறதாலே தான் முன்னர் போட்ட பதிவுகளுக்கு வந்த கருத்துகளுக்கு உடனே பதில் சொல்லிட்டேனாக்கும்.  (அதானே, பார்த்தேன்! இல்லைனா ஒரு மாசம் ஓட்டி இருக்க மாட்டீங்க?) ஹிஹிஹி, அது நெ.த.வோட ம.சா. போல! கொஞ்சம் சத்தமாப் பேசி இருக்கா! இங்கே வந்து கேட்குது!

சரி, சரி, போற வரைக்கும் ஏதானும் செய்து கொடுத்துச் சாப்பிட வைச்சுட்டுப் போகணும் இல்லையா? அதுக்காக நான் இன்னிக்குச் செய்து காட்டப்போவது பறங்கிக் கொட்டை போட்டு அடை! அடை தான் எல்லோருக்கும் தெரியுமேனு நினைக்காதீங்க! ஒவ்வொருத்தர் வீட்டில் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அடையில் வெங்காயம், முட்டைக்கோஸ், கீரை, முருங்கைக்கீரை, வாழைப்பூ போன்றவை போடலாம். பொடிப் பொடியாய்த் தேங்காய்க் கீற்றுகள் கூடப் போடுவாங்க! அது மாதிரிதான் பறங்கிக் கொட்டையும். பறங்கிக் கொட்டை சின்னதா இருக்கணும். பழுத்த மஞ்சள் பறங்கியோ, பச்சை நிறம் மாறி வருவதோ கூடாது. பச்சை நிறப் பறங்கியாக இருந்தால் பரவாயில்லை ரகம். அன்னிக்கு எனக்குக் கொட்டை கிடைக்கலை. இந்த இளம் பறங்கிக் கொட்டையில் இளங்கொட்டைக் கூட்டு என்று பண்ணுவாங்க. அதெல்லாம் இப்போதைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இளங்கொட்டைக்குப் படம் போடலாம்னு தேடினா கூகிளார் கையை விரிக்கிறார். அப்பாடா! கடைசியில் கூகிளாரால் கூடக் கொடுக்க முடியாத ஒன்று இருக்கே! சந்தோஷமா இருக்கு! வெளிர் பச்சை நிறத்தில் சின்னதாகப் பப்பாளிக்காய் போல் இருக்கும் இளங்கொட்டை. இது பறங்கிப் பிஞ்சு என்றும் சொல்லலாம்.  இதைத் தோல் சீவாமல் பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொண்டு தேங்காயை மட்டும் துருவிக் கொஞ்சம் போல் ஊற வைத்த அரிசியோடு அரைத்துக் கொண்டு வெந்த கூட்டில் கலக்க வேண்டும். உப்புப் போடுகையில் அவரவர் ருசிக்கு ஏற்ப வெல்லமோ, சர்க்கரையோ போட வேண்டும். தேங்காய் அரைத்துத் தேங்காய்ப் பால் சேர்த்தால் வெல்லமும்,வெறும் பால் சேர்த்தால் சர்க்கரையும் போடுவது என் வழக்கம். இதற்குத் தேங்காயைத் துருவிக் கொண்டு நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம்.

இந்தப் பறங்கிக்கொட்டையைத் துருவிக் கொண்டு துவையலும் அரைக்கலாம். துருவிய பறங்கிக்கொட்டை

மி.வத்தல் 4 அல்லது ஆறு வற்றல்கள் (காரத்துக்கு ஏற்றாற்போல்)

புளி சின்னச் சுண்டைக்காய் அளவு ஊற வைக்கவும்.

பெருங்காயம் ஒரு துண்டு

உப்பு தேவையான அளவு

எண்ணெய் வதக்கத் தேவையான அளவு சுமார் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, உ.பருப்பு.

கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு முதலில் கடுகு, உ.பருப்பை வறுத்து எடுத்துக் கொண்டு தனியாக வைக்கவும். பின்னர் பெருங்காயத்தைப் போட்டு எடுத்துவிட்டு மி.வத்தலை நன்கு கருகாமல் வறுத்து எடுக்கவும். கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயிலேயே துருவி வைத்த பறங்கிக்காயைப் போட்டு நன்கு வதக்கவும். சுருள வதக்கிய பின்னர் ஆற வைக்கவும். ஆறியதும் மி.வத்தல் ஊற வைத்த புளியோடு உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு வதக்கிய பறங்கிக்காயைப் போட்டு அரைக்கவும். நன்கு அரைபட்டதும் கடைசியில் கடுகு, உ.பருப்பைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு எடுக்கவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப்போட்டுப்பிசைந்து சாப்பிடவும். தொட்டுக்க டாங்கர் பச்சடி அல்லது மோர்ச்சாறு. அல்லது வெள்ளரிப் பச்சடி, காரட் பச்சடி போன்றவை.


ஹிஹிஹி, பறங்கிக்காய் அடைனு சொல்லிட்டு இது என்னனு பல்லைக் கடிக்கிறவங்களுக்கு! திங்கட்கிழமை வரமாதிரி ஷெட்யூல் பண்ணி  இருக்கேன். ஶ்ரீராமுக்குத் தான் அனுப்பறதா இருந்தேன். அவருக்கு வரிசை கட்டிச் செய்முறைகள் இருப்பதால் அனுப்பலை! :) திங்கட்கிழமைக்கு நான் இல்லைனாலும் "திங்க" போட்டி வேண்டாமா? அதான்!