சிதம்பர ரகசியம்
நெல்லையப்பர் கோயில் தாமிரசபைக்குப் பின்னால் கல்லால் ஆன மண்டபத்தில் காட்சி அளிக்கும் சந்தன சபாபதி!
சிதம்பர ரகசியம் தொடர் எழுதுவதற்காகப் பல புத்தகங்கள் படித்ததோடு இணையம் மூலமும் பல்வேறு தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது தான் இந்தத் தாமிரசபை பற்றிய குறிப்புக்களுக்காகத் தேடியபோது உண்மையான தாமிர சபை எங்கே இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் கிட்டின. உடனே அதைப் பற்றி மேலும் தகவல்கள் சேகரித்தேன். எப்படிச் சேகரித்தேன் என்று கேட்டால் இப்போது சொல்லத் தெரியாது. அப்போது அதே வேலையாக இருந்தேன். இதற்காகச் சிதம்பரமும் 4,5 முறை போய் எங்க குடும்ப தீக்ஷிதர், இன்னும் சில தீக்ஷிதர்களைக் கண்டு பேசி இருக்கேன். அப்போத் தான் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருப்பது உண்மையான தாமிரசபை இல்லை என்பதும் அங்கே நடராஜர் பிரதிஷ்டையே இல்லை என்றும் அந்த தாமிரசபை மண்டபத்துக்குப் பின்னாலேயே நடராஜர் காட்சி அளிப்பதையும் புரிந்து கொண்டேன். முதல்முறை திருநெல்வேலி போனப்போ இதை எல்லாம் கவனித்திருந்தாலும் இந்தத் தகவல்கள் கிட்டவில்லை என்பதால் இது தான் தாமிரசபை என்றே நினைத்துக் கொண்டேன்.

நெல்லையப்பர் கோயில் பிரகாரத்தில் காணப்படும் தாமிர சபை இது தான், இங்கே உள்ளே நடராஜர் பிரதிஷ்டை செய்யப்பட வில்லை. மாறாக இதற்குப் பின்னால் ஓர் மண்டபத்தில் தனித்துக் காணப்படுகிறார்.
மேலே கொடுத்திருக்கும் சந்தனசபாபதி தான் தாமிர சபை எனப்படும் இடத்தின் பின்னே காணப்படுகிறார். நடுவில் உள்ளே எவரையும் பிரதிஷ்டை செய்யவில்லை. ஆகவே இது தாமிரசபை இல்லை என்னும் என் கருத்து உறுதியானது. இப்போ உண்மையான தாமிர சபையை எங்கே எனப் பார்ப்போமா?
***************************************************************************
நட்சத்திரங்களிலே திருவோணத்துக்கும், திரு ஆதிரைக்கும் மட்டுமே திரு என்ற அடைமொழி. இரண்டுமே முறையே மகாவிஷ்ணுவுக்கும், சிவனுக்கும் உரிய நட்சத்திரங்கள். உடனே அவங்க அந்த நட்சத்திரத்திலே தான் பிறந்தாங்களா என்ற கேள்வி எழும். அப்படி எல்லாம் இல்லை. இந்த மார்கழி மாதப் பெளர்ணமி தினத்தன்று ஈசன் ஆனந்தத் திருநடனம் புரிந்ததாகவும், சிரவண மாதத்துத் திருவோணத்தன்று பெருமாள் தன் விஸ்வரூபத்தை மஹாபலிக்குக் காட்டியதாயும் ஐதீகம். அதனாலேயே இருவருக்கும் இந்த இரு நட்சத்திரங்கள் விசேஷமாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. மேலும் மார்கழி மாதப் பௌர்ணமி அன்று விண்ணில் விடிகாலையில் பிரம்ம முஹூர்த்தத்தில் தெரியும் திருவாதிரை நக்ஷத்திரக்கூட்டத்தின் ஒளி அந்தத் தில்லைக்கூத்தனின் ஆடலையே நினைவூட்டுவதாகவும், அதைப் பார்க்கையில் ஆடவல்லான் லீலைகள் நமக்கெல்லாம் புரிய வரும் என்றும் சொல்கின்றனர். ஆனால் எல்லோராலும் அந்தக் குறிப்பிட்ட நேரம் அந்த நக்ஷத்திரக் கூட்டத்தைப் பார்த்துப் புரிந்து கொள்வது என்பது கஷ்டம். ஆகவே நம் போன்ற சாமானியர்களுக்காகக் கோயில்களில் குடி கொண்டிருக்கும் நடராஜர் விக்ரஹங்களுக்கு அபிஷேஹாதிகள் செய்து கற்பூர ஆரத்தி காட்டி நம்மைத் தரிசிக்க வைக்கின்றனர்.
பரிபாடல் என்னும் சங்ககால இலக்கிய நூலிலேயே இந்த ஆதிரைத் திருநாள் சிறப்பு பற்றியும், விழா பற்றியும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. பொதுவாக ஆதிரைத் திருநாள் அன்று சிவனைடியாரான சேந்தனாருக்கு அருள் புரிய ஈசனே அடியாராக வந்து சேந்தனாரிடம் களியும், குழம்பும் வாங்கிச் சாப்பிட்டதாயும், அந்தக் களி ஈசன் மேல் சிந்திக் கிடக்க, கோபம் கொண்ட தீட்சிதர்களுக்குச் சேந்தனாரின் பக்தியை வெளிப்படுத்த வேண்டி ஈசன் தன் தேரை ஓடாமல் தடைப்படுமாறு செய்கின்றார். அப்போது சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி ஓடாது கிடந்த தேரை நிலைக்குக் கொண்டு வருகின்றார் என்று சொல்லுவார்கள். இந்தப் பல்லாண்டு திருவிசைப்பா என்ற பெயரில் ஒன்பதாம் திருமுறையில் கடைசி 29-வது சேர்க்கையில் கோயில் என்ற தலைப்பில் காணக் கிடைக்கின்றன.
"மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2
நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3
சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4
புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்டகோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5
இந்தக் கதை எல்லாரும் அறிந்த ஒன்று. ஆனால் நடராஜர் திருமேனி சிதம்பரத்துக்கு வந்தது எப்படி? அதற்கு முன்னால் வரை திருமூலட்டானேஸ்வரர் குடி இருந்த கோயிலில் நடராஜர் பிரதான இடம் பெற்றது எப்படி? இவற்றை அறிய வேண்டியே நாம் காணப் போவது இந்த ஆதிரைத் திருநாளுக்கு உரிய நடராஜரின் திருமேனி சிதம்பரத்துக்கு வந்த கதை. அதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம். தில்லையம்பதி தில்லை வனமாக இருந்த காலகட்டங்களில் மன்னன் ஹிரண்யவர்மன்(சிம்மவர்மன் என்றும் அழைக்கின்றனர்.) தன் தோல் நோயை சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் நீராடியதால் போக்கிக் கொண்டான் என்று ஒரு சாராரும், தற்சமயம் உள் பிரகாரத்தில் காணப்படும் கிணறான பிரம்மானந்த கூபம் என்னும் தீர்த்தம் மூலம் போக்கிக் கொண்டான் என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். இந்த பிரம்மானந்த கூபம் இப்போது கிணறு வடிவில் உள்ளது. எது எப்படியோ கெளட தேசத்தில் இருந்து வந்த மன்னன் ஹிரண்ய வர்மன், (சிம்ம வர்மன் என்றும் பெயர் உண்டு). இவன் தான் பல்லவ வம்சத்தை இங்கே நிறுவினான் என்றொரு கூற்றும் உண்டு. இவன் தான் தில்லையம்பதியை இப்போது இருக்கும்படி கட்டினான் எனச் சொல்வதுண்டு. ஆனால் அதற்கும் முன்னரே இங்கே கோயில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது பற்றி விரிவாக நாம் சிதம்பர ரகசியம் என்னும் நூலில் ஏற்கெனவே பார்த்தோம்.
இந்த மன்னன் நடராஜர் பால் பக்தி மிகக் கொண்டு, நடராஜரைச் சிலை வடிவில் வடிக்க எண்ணம் கொண்டான். சிற்பிகளிடம் பத்தரை மாற்றுப் பசும்பொன்னிலே, துளிக்கூடச் செம்பு கலக்காமல் சிலை வடிக்கச் சொல்கின்றான். சிற்பிகளும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் முடியவில்லை. சிறிதாவது செம்பு கலவாமல் சிலை வடிக்க முடியவில்லை.அப்போது நமசிவாய முத்து ஸ்தபதி என்றொருவரை விட்டு வடிக்கச் செய்த செப்புச் சிலையின் வடிவழகு மன்னனின் கண்ணையும் கருத்தையும் மிகக் கவர்ந்தது. எனினும் அது செப்பு என்பதால் சிதம்பரத்தில் அதைப் பிரதிஷ்டை செய்யவேண்டாம் என எண்ணிய மன்னன் தூய பொன்னால் நடராஜத் திருமேனியை வடிக்கச் சொன்னான். இந்த முதல் சிலையை என்ன செய்யலாம் என யோசித்த வண்ணம் இருந்த மன்னனுக்கு இரண்டாவதாய் வடித்துக் கொண்டிருக்கும் சிலையைக் காட்டுவதற்காகச் சிற்பிகள் வந்து அழைத்தனர். சிற்பிகள் முகமோ குதூகலமாய் இல்லை. ஒரே கலவரம் கூத்தாடியது அவர்கள் முகங்களில். என்றாலும் தங்கள் குருநாதர் ஆணை! மன்னனை அழைத்துவர! ஆகவே மன்னனை சிலையைக் காண வருமாறு அழைத்தனர்.
சிற்பசாலையில் சிற்பியோ குழம்பிப் போயிருந்தார். நல்ல சுத்தமான பசும்பொன்னை உருக்கி எடுத்துச் சிலை வார்க்கும்போது எங்கிருந்தோ வந்தார் ஒரு முதியவர். பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேச்சில் கவனமாய் இருக்கையிலே தன் கையிலிருந்த செப்புக் காசுகளை பொன்னைக் குழம்பாய் உருக்கிக் கொண்டிருந்தவற்றில் போட்டுவிட்டு, இவற்றைச் சேர்த்துச் சிலை வடியுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார். செப்பு உருகித் தங்கக் குழம்போடு கலந்து, அதை சிலையாகவும் வார்த்தாயிற்று. ஆனால் மன்னனுக்குத் தெரிந்தால்?? மன்னனிடம் சொல்லுவதா வேண்டாமா?? சிற்பி குழம்பிப் போய் இருந்தார். மன்னனும் வந்தான். சிலையைக் கண்டான். தூக்கிய திருவடியையும், ஊன்றிய திருவடியையும் கண்டான். கண் முன்னே அந்தக் கூத்தனே நடனம் ஆடுவதையும் உணர்ந்தான். சிலையைக் கைகளால் தொட்டுத் தடவிப் பார்த்தான். விரிந்த செஞ்சடை, அபய ஹஸ்தங்கள் என அனைத்துமே அவன் மனதில் பதிந்தன. என்றாலும் முழுக்க, முழுக்கப் பொன்னால் ஆனதா? சந்தேகம் கொப்பளிக்கச் சிற்பியை நோக்கினான்.
சிற்பி செய்வதறியாது மன்னனிடம் நடந்ததைச் சொன்னார். மன்னனுக்குக் கோபம் மூண்டது. தலைமைச் சிற்பியையும், உடனிருந்து உதவிய சிற்பிகளையும் சிறையில் இட்டான். சிற்பிகளைச் சிறையில் அடைக்கச் சொன்ன மன்னன் மீண்டும் ஒருமுறை சிலையைப் பார்த்தான். சுத்தச் சொக்கத் தங்கத்திலே செய்யச் சொன்ன சிலை இப்போது செம்பின் சிவந்த நிறத்திலேயே காட்சி அளித்தது. அன்றிரவு தூக்கம் இன்றித் தவித்த மன்னன் ஒருவழியாய்க் கண்ணயரும் தருணத்திலே அவன் முன்னே தோன்றியது ஓர் பேரொளி. கண்ணைக் கூசும் ஒளியைக் காணமுடியாமல் கண்ணை மூடித் திறந்த மன்னனின் கண்ணெதிரே நடராஜத் திருமேனி காட்சி அளிக்க, மன்னனுக்கு ஓர் அசரீரி போன்றதொரு ஒலி கேட்டது. "மன்னா! இது எம் விருப்பம். நாம் இங்கே செப்புத் திருமேனியாகவே காட்சி அளிக்க எண்ணம் கொண்டோம். உன் கண்களுக்கு மட்டுமே நாம் பொன்மேனியாகக் காட்சி அளிப்போம். இந்தச் சிலையை இங்கேயே பிரதிஷ்டை செய்வாய். முன்னால் செய்த செப்புத் திருமேனியை இந்தச் செந்தமிழ் நாட்டின் தென் பாகத்துக்குக் கொண்டு போகச் சொல்! எந்த இடத்திற்கு அருகே வந்ததும், சிலையின் கனம் அதிகம் ஆகித் தூக்க முடியாமல் போகின்றதோ, அந்த இடத்தில் சிலையை இறக்கி வைக்கச் சொல்! மற்றவை எம் பொறுப்பு!" என்று ஆணை இடுகின்றார் கூத்தபிரான்.
அது போலவே மறுநாள் காலையில் சிற்பிகளை விடுதலை செய்த மன்னன், முதலில் செய்த செப்புத் திருமேனியை ஒரு அழகிய பல்லக்கில் வைத்துக் கூடவே சிற்பிகளையும் அனுப்பித் தெற்கே பயணம் ஆகச் செய்கின்றான். தெற்கே போகப் போக எதுவும் அடையாளம் தெரியவில்லையே எனக் கலங்கிய வீரர்களுக்கு தாமிரபரணியின் வடகரைக்கு வரவும் சிலையின் கனம் அதிகரித்து வந்தது தெரிய வருகின்றது. சிலையைக் கீழே வைக்கின்றனர். அசதி மிகுந்து போய்த் தூங்கிப் போகின்றனர் வீரர்களும், சிற்பிகளும். விழித்து எழுந்து பார்த்தால் சிலை அங்கே இல்லை. பதறிப் போனார்கள் அனைவரும்.
அந்தப் பகுதியின் அரசன் யார் என விசாரித்தார்கள். ராமபாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்து வந்ததாய்த் தெரிய வந்தது. சிவபக்தியில் சிறந்தவன் என்றும், தினமும் நெல்வேலி நெல்லையப்பரைத் தரிசனம் செய்யாமல், வழிபடாமல் உணவு உட்கொள்ள மாட்டான் எனவும் தெரிந்து கொண்டனர்.இந்நிலையில் இச்சிலை தாமிரபரணிக் கரைக்கு வருவதற்கு முன்னர் ஓர் நாள், மன்னன் கனவில் நெல்லையப்பர் தோன்றினார். ஏற்கெனவே பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் நெல்லையப்பரைத் தரிசிக்கச் செல்ல முடியாமல் மன்னன் மனம் நொந்து வேதனையில் ஆழ்ந்திருந்த சமயம் அது. அப்போது தோன்றிய மன்னன் கனவில், நெல்லையப்பர் வந்து, "மன்னா வனத்துக்குப் போ. சிலம்பொலி கேட்கும். அந்தச் சிலம்பொலி கேட்கும் இடத்துக்கு எறும்புகள் சாரை, சாரையாய் ஊர்ந்து போவதும் தெரிய வரும். அந்த எறும்புகளைப் பின் தொடர்ந்து செல்வாயாக! அங்கே காணும் என் வடிவைப் பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் எழுப்பு!" என்று சொல்கின்றார்.
விழித்தெழுந்த மன்னனுக்குக் கனவில் கண்டது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. யோசனையில் ஆழ்ந்திருந்த சமயம் வடக்கே இருந்து வந்த சிற்பிகளும், வீரர்களும் வந்து தாங்கள் கொண்டு வந்த அதி அற்புத நடனச் சிலையைக் காணோம் எனவும், ஈசனின் ஆனந்த நடன வடிவம் அது எனவும், சொல்லவே, மன்னன் மேலும் திகைத்தான். அவர்களையும் அழைத்துக் கொண்டு வனத்திற்குச் சென்றான். வனத்தினுள்ளே, உள்ளே, உள்ளே, சென்
றான். திடீரென ஓர் இடத்தில் மத்தளம், கொட்டியது. பேரிகை முழங்கியது. தேவதுந்துபி முழங்கும் சப்தம் கேட்டது. தாளம் போடும் ஒலி, அத்தோடு யாரோ ஆடும் சிலம்பொலியும் கேட்டது. மன்னனுக்கு நினைவு வந்து கீழே பார்த்தால் எறும்புகள் சாரை, சாரையாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. எறும்புகளைப் பின் தொடர்ந்தான் மன்னன். குறிப்பிட்ட ஓர் இடத்தில் நடராஜரின் திருமேனி வைக்கப் பட்டிருந்ததைக் கண்டான். மன்னன் ஆனந்தக் கூத்தாடினான்.
ஆனந்தக் கூத்தாடும் அழகிய கூத்தனான இறைவனுக்கு அங்கேயே கோயில் எழுப்பவேண்டும் என்பதை அவர் குறிப்பால் அறிவுறுத்தியதையும் நினைவு கூர்ந்தான். அந்த இடத்திலேயே தில்லைக் கூத்தனுக்கு ஓர் அற்புதக் கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை அழகிய கூத்தரான ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். திருநெல்வேலிக்கு வடகிழக்கே, 9 கி.மீ தூரத்தில் உள்ள ராஜவல்லிபுரத்துக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். முழுக்க முழுக்கச் சிதம்பரம் கோயில் பாணியிலேயே கட்டப் பட்ட கருவறையோடு, கோயிலின் முகப்பில் காளிக்காகவும் ஒரு கோயில் இருக்கின்றது. சிதம்பரத்தின் எல்லையில் இருப்பது போல இங்கேயும் காளி குடி கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றனர். இது மட்டுமா?? இதே போல் இன்னும் இரண்டு நடராஜர்கள் அதே சிற்பியால் செய்யப் பட்டு, இதே திருநெல்வேலி மாவட்டத்தில் வைக்கப் பட்டுள்ளது. அதைப் பற்றிய விபரங்களையும் தொடர்ந்து காண்போம். அதற்கு முன்னால் செப்பறை அல்லது தாமிரசபை குறித்த படங்களும் கோயில் இருக்கும் இடம் பற்றிய குறிப்புக்களும் நாளை!
இது பற்றிச் சிதம்பர ரகசியம் எழுதும்போதும் எழுதி உள்ளேன். அவற்றையே சில மாற்றங்கள் செய்து இங்கே வெளியிட்டுள்ளேன். மேலே கொடுத்திருக்கும் சிதம்பர ரகசியம் என்னும் சுட்டிக்குப் போனால் இதைக் குறித்த விபரங்களைக் காணலாம்.