எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 06, 2019

செப்பறை/தாமிரசபை என்பது உண்மையில் எது?

சிதம்பர ரகசியம்


நெல்லையப்பர் கோயில் தாமிரசபைக்குப் பின்னால் கல்லால் ஆன மண்டபத்தில் காட்சி அளிக்கும் சந்தன சபாபதி!


சிதம்பர ரகசியம் தொடர் எழுதுவதற்காகப் பல புத்தகங்கள் படித்ததோடு இணையம் மூலமும் பல்வேறு தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது தான் இந்தத் தாமிரசபை பற்றிய குறிப்புக்களுக்காகத் தேடியபோது உண்மையான தாமிர சபை எங்கே இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் கிட்டின. உடனே அதைப் பற்றி மேலும் தகவல்கள் சேகரித்தேன். எப்படிச் சேகரித்தேன் என்று கேட்டால் இப்போது சொல்லத் தெரியாது. அப்போது அதே வேலையாக இருந்தேன். இதற்காகச் சிதம்பரமும் 4,5 முறை போய் எங்க குடும்ப தீக்ஷிதர், இன்னும் சில தீக்ஷிதர்களைக் கண்டு பேசி இருக்கேன். அப்போத் தான் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருப்பது உண்மையான தாமிரசபை இல்லை என்பதும் அங்கே நடராஜர் பிரதிஷ்டையே இல்லை என்றும் அந்த தாமிரசபை மண்டபத்துக்குப் பின்னாலேயே நடராஜர் காட்சி அளிப்பதையும் புரிந்து கொண்டேன். முதல்முறை திருநெல்வேலி போனப்போ இதை எல்லாம் கவனித்திருந்தாலும் இந்தத் தகவல்கள் கிட்டவில்லை என்பதால் இது தான் தாமிரசபை என்றே நினைத்துக் கொண்டேன்.

நெல்லையப்பர் கோயில் பிரகாரத்தில் காணப்படும் தாமிர சபை இது தான், இங்கே உள்ளே நடராஜர் பிரதிஷ்டை செய்யப்பட வில்லை. மாறாக இதற்குப் பின்னால் ஓர் மண்டபத்தில் தனித்துக் காணப்படுகிறார்.


மேலே கொடுத்திருக்கும் சந்தனசபாபதி தான் தாமிர சபை எனப்படும் இடத்தின் பின்னே காணப்படுகிறார். நடுவில் உள்ளே எவரையும் பிரதிஷ்டை செய்யவில்லை. ஆகவே இது தாமிரசபை இல்லை என்னும் என் கருத்து உறுதியானது. இப்போ உண்மையான தாமிர சபையை எங்கே எனப் பார்ப்போமா?
***************************************************************************

நட்சத்திரங்களிலே திருவோணத்துக்கும், திரு ஆதிரைக்கும் மட்டுமே திரு என்ற அடைமொழி. இரண்டுமே முறையே மகாவிஷ்ணுவுக்கும், சிவனுக்கும் உரிய நட்சத்திரங்கள். உடனே அவங்க அந்த நட்சத்திரத்திலே தான் பிறந்தாங்களா என்ற கேள்வி எழும். அப்படி எல்லாம் இல்லை. இந்த மார்கழி மாதப் பெளர்ணமி தினத்தன்று ஈசன் ஆனந்தத் திருநடனம் புரிந்ததாகவும், சிரவண மாதத்துத் திருவோணத்தன்று பெருமாள் தன் விஸ்வரூபத்தை மஹாபலிக்குக் காட்டியதாயும் ஐதீகம். அதனாலேயே இருவருக்கும் இந்த இரு நட்சத்திரங்கள் விசேஷமாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. மேலும் மார்கழி மாதப் பௌர்ணமி அன்று விண்ணில் விடிகாலையில் பிரம்ம முஹூர்த்தத்தில் தெரியும் திருவாதிரை நக்ஷத்திரக்கூட்டத்தின் ஒளி அந்தத் தில்லைக்கூத்தனின் ஆடலையே நினைவூட்டுவதாகவும், அதைப் பார்க்கையில் ஆடவல்லான் லீலைகள் நமக்கெல்லாம் புரிய வரும் என்றும் சொல்கின்றனர். ஆனால் எல்லோராலும் அந்தக் குறிப்பிட்ட நேரம் அந்த நக்ஷத்திரக் கூட்டத்தைப் பார்த்துப் புரிந்து கொள்வது என்பது கஷ்டம். ஆகவே நம் போன்ற சாமானியர்களுக்காகக் கோயில்களில் குடி கொண்டிருக்கும் நடராஜர் விக்ரஹங்களுக்கு அபிஷேஹாதிகள் செய்து கற்பூர ஆரத்தி காட்டி நம்மைத் தரிசிக்க வைக்கின்றனர்.


 பரிபாடல் என்னும் சங்ககால இலக்கிய நூலிலேயே இந்த ஆதிரைத் திருநாள் சிறப்பு பற்றியும், விழா பற்றியும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. பொதுவாக ஆதிரைத் திருநாள் அன்று சிவனைடியாரான சேந்தனாருக்கு அருள் புரிய ஈசனே அடியாராக வந்து சேந்தனாரிடம் களியும், குழம்பும் வாங்கிச் சாப்பிட்டதாயும், அந்தக் களி ஈசன் மேல் சிந்திக் கிடக்க, கோபம் கொண்ட தீட்சிதர்களுக்குச் சேந்தனாரின் பக்தியை வெளிப்படுத்த வேண்டி ஈசன் தன் தேரை ஓடாமல் தடைப்படுமாறு செய்கின்றார். அப்போது சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி ஓடாது கிடந்த தேரை நிலைக்குக் கொண்டு வருகின்றார் என்று சொல்லுவார்கள். இந்தப் பல்லாண்டு திருவிசைப்பா என்ற பெயரில் ஒன்பதாம் திருமுறையில் கடைசி 29-வது சேர்க்கையில் கோயில் என்ற தலைப்பில் காணக் கிடைக்கின்றன.

"மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1


மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2

நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3

சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4

புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்டகோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5

இந்தக் கதை எல்லாரும் அறிந்த ஒன்று. ஆனால் நடராஜர் திருமேனி சிதம்பரத்துக்கு வந்தது எப்படி? அதற்கு முன்னால் வரை திருமூலட்டானேஸ்வரர் குடி இருந்த கோயிலில் நடராஜர் பிரதான இடம் பெற்றது எப்படி? இவற்றை அறிய வேண்டியே  நாம் காணப் போவது இந்த ஆதிரைத் திருநாளுக்கு உரிய நடராஜரின் திருமேனி சிதம்பரத்துக்கு வந்த கதை. அதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம். தில்லையம்பதி தில்லை வனமாக இருந்த காலகட்டங்களில் மன்னன் ஹிரண்யவர்மன்(சிம்மவர்மன் என்றும் அழைக்கின்றனர்.) தன் தோல் நோயை சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் நீராடியதால் போக்கிக் கொண்டான் என்று ஒரு சாராரும், தற்சமயம் உள் பிரகாரத்தில் காணப்படும் கிணறான பிரம்மானந்த கூபம் என்னும் தீர்த்தம் மூலம் போக்கிக் கொண்டான் என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். இந்த பிரம்மானந்த கூபம் இப்போது கிணறு வடிவில் உள்ளது. எது எப்படியோ கெளட தேசத்தில் இருந்து வந்த மன்னன் ஹிரண்ய வர்மன், (சிம்ம வர்மன் என்றும் பெயர் உண்டு). இவன் தான் பல்லவ வம்சத்தை இங்கே நிறுவினான் என்றொரு கூற்றும் உண்டு. இவன் தான் தில்லையம்பதியை இப்போது இருக்கும்படி கட்டினான் எனச் சொல்வதுண்டு. ஆனால் அதற்கும் முன்னரே இங்கே கோயில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  இது பற்றி விரிவாக நாம் சிதம்பர ரகசியம் என்னும் நூலில் ஏற்கெனவே பார்த்தோம்.

இந்த மன்னன் நடராஜர் பால் பக்தி மிகக் கொண்டு, நடராஜரைச் சிலை வடிவில் வடிக்க எண்ணம் கொண்டான். சிற்பிகளிடம் பத்தரை மாற்றுப் பசும்பொன்னிலே, துளிக்கூடச் செம்பு கலக்காமல் சிலை வடிக்கச் சொல்கின்றான். சிற்பிகளும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் முடியவில்லை. சிறிதாவது செம்பு கலவாமல் சிலை வடிக்க முடியவில்லை.அப்போது நமசிவாய முத்து ஸ்தபதி என்றொருவரை விட்டு வடிக்கச் செய்த செப்புச் சிலையின் வடிவழகு மன்னனின் கண்ணையும் கருத்தையும் மிகக் கவர்ந்தது. எனினும் அது செப்பு என்பதால் சிதம்பரத்தில் அதைப் பிரதிஷ்டை செய்யவேண்டாம் என எண்ணிய மன்னன் தூய பொன்னால் நடராஜத் திருமேனியை வடிக்கச் சொன்னான். இந்த முதல் சிலையை என்ன செய்யலாம் என யோசித்த வண்ணம் இருந்த மன்னனுக்கு இரண்டாவதாய் வடித்துக் கொண்டிருக்கும் சிலையைக் காட்டுவதற்காகச் சிற்பிகள் வந்து அழைத்தனர். சிற்பிகள் முகமோ குதூகலமாய் இல்லை. ஒரே கலவரம் கூத்தாடியது அவர்கள் முகங்களில். என்றாலும் தங்கள் குருநாதர் ஆணை! மன்னனை அழைத்துவர! ஆகவே மன்னனை சிலையைக் காண வருமாறு அழைத்தனர்.

சிற்பசாலையில் சிற்பியோ குழம்பிப் போயிருந்தார். நல்ல சுத்தமான பசும்பொன்னை உருக்கி எடுத்துச் சிலை வார்க்கும்போது எங்கிருந்தோ வந்தார் ஒரு முதியவர். பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேச்சில் கவனமாய் இருக்கையிலே தன் கையிலிருந்த செப்புக் காசுகளை பொன்னைக் குழம்பாய் உருக்கிக் கொண்டிருந்தவற்றில் போட்டுவிட்டு, இவற்றைச் சேர்த்துச் சிலை வடியுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார். செப்பு உருகித் தங்கக் குழம்போடு கலந்து, அதை சிலையாகவும் வார்த்தாயிற்று. ஆனால் மன்னனுக்குத் தெரிந்தால்?? மன்னனிடம் சொல்லுவதா வேண்டாமா?? சிற்பி குழம்பிப் போய் இருந்தார். மன்னனும் வந்தான். சிலையைக் கண்டான். தூக்கிய திருவடியையும், ஊன்றிய திருவடியையும் கண்டான். கண் முன்னே அந்தக் கூத்தனே நடனம் ஆடுவதையும் உணர்ந்தான். சிலையைக் கைகளால் தொட்டுத் தடவிப் பார்த்தான். விரிந்த செஞ்சடை, அபய ஹஸ்தங்கள் என அனைத்துமே அவன் மனதில் பதிந்தன. என்றாலும் முழுக்க, முழுக்கப் பொன்னால் ஆனதா? சந்தேகம் கொப்பளிக்கச் சிற்பியை நோக்கினான்.


சிற்பி செய்வதறியாது மன்னனிடம் நடந்ததைச் சொன்னார். மன்னனுக்குக் கோபம் மூண்டது. தலைமைச் சிற்பியையும், உடனிருந்து உதவிய சிற்பிகளையும் சிறையில் இட்டான். சிற்பிகளைச் சிறையில் அடைக்கச் சொன்ன மன்னன் மீண்டும் ஒருமுறை சிலையைப் பார்த்தான். சுத்தச் சொக்கத் தங்கத்திலே செய்யச் சொன்ன சிலை இப்போது செம்பின் சிவந்த நிறத்திலேயே காட்சி அளித்தது. அன்றிரவு தூக்கம் இன்றித் தவித்த மன்னன் ஒருவழியாய்க் கண்ணயரும் தருணத்திலே அவன் முன்னே தோன்றியது ஓர் பேரொளி. கண்ணைக் கூசும் ஒளியைக் காணமுடியாமல் கண்ணை மூடித் திறந்த மன்னனின் கண்ணெதிரே நடராஜத் திருமேனி காட்சி அளிக்க, மன்னனுக்கு ஓர் அசரீரி போன்றதொரு ஒலி கேட்டது. "மன்னா! இது எம் விருப்பம். நாம் இங்கே செப்புத் திருமேனியாகவே காட்சி அளிக்க எண்ணம் கொண்டோம். உன் கண்களுக்கு மட்டுமே நாம் பொன்மேனியாகக் காட்சி அளிப்போம். இந்தச் சிலையை இங்கேயே பிரதிஷ்டை செய்வாய். முன்னால் செய்த செப்புத் திருமேனியை இந்தச் செந்தமிழ் நாட்டின் தென் பாகத்துக்குக் கொண்டு போகச் சொல்! எந்த இடத்திற்கு அருகே வந்ததும், சிலையின் கனம் அதிகம் ஆகித் தூக்க முடியாமல் போகின்றதோ, அந்த இடத்தில் சிலையை இறக்கி வைக்கச் சொல்! மற்றவை எம் பொறுப்பு!" என்று ஆணை இடுகின்றார் கூத்தபிரான்.

அது போலவே மறுநாள் காலையில் சிற்பிகளை விடுதலை செய்த மன்னன், முதலில் செய்த செப்புத் திருமேனியை ஒரு அழகிய பல்லக்கில் வைத்துக் கூடவே சிற்பிகளையும் அனுப்பித் தெற்கே பயணம் ஆகச் செய்கின்றான். தெற்கே போகப் போக எதுவும் அடையாளம் தெரியவில்லையே எனக் கலங்கிய வீரர்களுக்கு தாமிரபரணியின் வடகரைக்கு வரவும் சிலையின் கனம் அதிகரித்து வந்தது தெரிய வருகின்றது. சிலையைக் கீழே வைக்கின்றனர். அசதி மிகுந்து போய்த் தூங்கிப் போகின்றனர் வீரர்களும், சிற்பிகளும். விழித்து எழுந்து பார்த்தால் சிலை அங்கே இல்லை. பதறிப் போனார்கள் அனைவரும்.
அந்தப் பகுதியின் அரசன் யார் என விசாரித்தார்கள். ராமபாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்து வந்ததாய்த் தெரிய வந்தது. சிவபக்தியில் சிறந்தவன் என்றும், தினமும் நெல்வேலி நெல்லையப்பரைத் தரிசனம் செய்யாமல், வழிபடாமல் உணவு உட்கொள்ள மாட்டான் எனவும் தெரிந்து கொண்டனர்.இந்நிலையில் இச்சிலை தாமிரபரணிக் கரைக்கு வருவதற்கு முன்னர் ஓர் நாள், மன்னன் கனவில் நெல்லையப்பர் தோன்றினார். ஏற்கெனவே பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் நெல்லையப்பரைத் தரிசிக்கச் செல்ல முடியாமல் மன்னன் மனம் நொந்து வேதனையில் ஆழ்ந்திருந்த சமயம் அது. அப்போது தோன்றிய மன்னன் கனவில், நெல்லையப்பர் வந்து, "மன்னா வனத்துக்குப் போ. சிலம்பொலி கேட்கும். அந்தச் சிலம்பொலி கேட்கும் இடத்துக்கு எறும்புகள் சாரை, சாரையாய் ஊர்ந்து போவதும் தெரிய வரும். அந்த எறும்புகளைப் பின் தொடர்ந்து செல்வாயாக! அங்கே காணும் என் வடிவைப் பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் எழுப்பு!" என்று சொல்கின்றார்.

விழித்தெழுந்த மன்னனுக்குக் கனவில் கண்டது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. யோசனையில் ஆழ்ந்திருந்த சமயம் வடக்கே இருந்து வந்த சிற்பிகளும், வீரர்களும் வந்து தாங்கள் கொண்டு வந்த அதி அற்புத நடனச் சிலையைக் காணோம் எனவும், ஈசனின் ஆனந்த நடன வடிவம் அது எனவும், சொல்லவே, மன்னன் மேலும் திகைத்தான். அவர்களையும் அழைத்துக் கொண்டு வனத்திற்குச் சென்றான். வனத்தினுள்ளே, உள்ளே, உள்ளே, சென்
றான். திடீரென ஓர் இடத்தில் மத்தளம், கொட்டியது. பேரிகை முழங்கியது. தேவதுந்துபி முழங்கும் சப்தம் கேட்டது. தாளம் போடும் ஒலி, அத்தோடு யாரோ ஆடும் சிலம்பொலியும் கேட்டது. மன்னனுக்கு நினைவு வந்து கீழே பார்த்தால் எறும்புகள் சாரை, சாரையாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. எறும்புகளைப் பின் தொடர்ந்தான் மன்னன். குறிப்பிட்ட ஓர் இடத்தில் நடராஜரின் திருமேனி வைக்கப் பட்டிருந்ததைக் கண்டான். மன்னன் ஆனந்தக் கூத்தாடினான்.

ஆனந்தக் கூத்தாடும் அழகிய கூத்தனான இறைவனுக்கு அங்கேயே கோயில் எழுப்பவேண்டும் என்பதை அவர் குறிப்பால் அறிவுறுத்தியதையும் நினைவு கூர்ந்தான். அந்த இடத்திலேயே தில்லைக் கூத்தனுக்கு ஓர் அற்புதக் கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை அழகிய கூத்தரான ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். திருநெல்வேலிக்கு வடகிழக்கே, 9 கி.மீ தூரத்தில் உள்ள ராஜவல்லிபுரத்துக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். முழுக்க முழுக்கச் சிதம்பரம் கோயில் பாணியிலேயே கட்டப் பட்ட கருவறையோடு, கோயிலின் முகப்பில் காளிக்காகவும் ஒரு கோயில் இருக்கின்றது. சிதம்பரத்தின் எல்லையில் இருப்பது போல இங்கேயும் காளி குடி கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றனர். இது மட்டுமா?? இதே போல் இன்னும் இரண்டு நடராஜர்கள் அதே சிற்பியால் செய்யப் பட்டு, இதே திருநெல்வேலி மாவட்டத்தில் வைக்கப் பட்டுள்ளது. அதைப் பற்றிய விபரங்களையும் தொடர்ந்து காண்போம். அதற்கு முன்னால் செப்பறை அல்லது தாமிரசபை குறித்த படங்களும் கோயில் இருக்கும் இடம் பற்றிய குறிப்புக்களும் நாளை!

இது பற்றிச் சிதம்பர ரகசியம் எழுதும்போதும் எழுதி உள்ளேன். அவற்றையே சில மாற்றங்கள் செய்து இங்கே வெளியிட்டுள்ளேன். மேலே கொடுத்திருக்கும் சிதம்பர ரகசியம் என்னும் சுட்டிக்குப் போனால் இதைக் குறித்த விபரங்களைக் காணலாம். 

62 comments:

  1. விவரங்களுக்கு நன்றி. உங்கள் உழைப்பு போற்றத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம். சுருக்கமான கருத்து.

      Delete
  2. என் பதின்ம வயதில் செப்பறை எதேச்சையாகச் சென்றதைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். எங்கே சென்றோம் என்பது மறந்துவிட்டது.

    நெல்லையப்பர் கோவிலில் தாமிரசபை எனக்கு அந்த நினைவலைகளைத் தோற்றுவித்தது. தாமிரசபையில் ஒன்றுமே இல்லையா, வெறும் மூடிய மண்டபமாக உள்ளதே என நினைத்தேன். என் மனைவி, அது செம்பு மாதிரியே இல்லையே என்றும் சொன்னாள்.

    இந்த இடுகை சந்தேகங்களைத் தெளிவிக்கிறது. தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. நெல்லையப்பர் கோயிலில் இருப்பது தாமிரசபையே அல்ல. இதைஅப்போதே எழுதினேன். பின்னர் சில, பல காரணங்களால் அதிகம் விவரிக்கவில்லை. தாமிரசபையில் உள்ளே ஒன்றுமே இல்லை. வெறும் பீடம் மட்டுமே உள்ளது.

      Delete
  3. உங்கள் இடுகை நிறைய தகவல்களோடு இருக்கிறது. உங்கள் ஆர்வம் உழைப்பைப் பாராட்டறேன். தொடர்ந்து நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. கீழே கோமதி அரசு இன்னமும் பல அரிய தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். எனக்குத் தெரிந்த தகவல்களை நானும் பகிர்ந்துள்ளேன்.

      Delete
    2. // தொடர்ந்து நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறேன்.//
      எதுபற்றியாக்கும்:)

      Delete
    3. செப்பறை பற்றி. அடுத்த முறை அங்கு செல்வேன்.

      கோவில்கள் பற்றி எழுதினால், அவற்றில் முக்கியமானது என நான் கருதுபவைகளைச் சேவிக்கச் செல்வது என் வழக்கம் (உணவும், ஹோட்டல்களும் அப்படியே). நான் சென்ற கோவில்களில் பார்க்காத ஏதேனும் இருந்தால், அதனையும் குறித்துக்கொள்வேன்.

      Delete
    4. ஓஓஓ நான் என்னமோ ஏதோ என நினைச்சுட்டேன் ஹா ஹா ஹா:)

      Delete
  4. அரிய தகவல்கள் தந்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  5. நீங்கள் மிக அழகாய் , விரிவாய் இந்த கோவில் வரலாறு எழுதி இருக்கிறீர்கள்.
    சிதம்பர ரகசியம் பதிவுகளை படிக்கிறேன்.

    இறைவன் நிறைய அற்புதங்களை காட்டி அருளிய வரலாறை சொல்ல வந்த நீங்கள் முன்பு அடியார்கள் பட்ட துன்பங்களை போல் பட்டு விட்டீர்கள் போன பதிவில் துன்பம். இந்த பதிவில் அழகான படங்களுடன் அருமையான பதிவை கொடுத்து விட்டீர்கள்.



    மணவூரில் ஆட்சி செய்த முழுதுங்க்கண்ட இராம்பாணிடியனின் பக்திக்கு கிடைத்த பரிசு இந்த செப்பறை நடராஜர்.
    தினம் நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும், நாள் தவறாமல் காலையும் , மாலையும் கால்ந்டையாக வந்து வழிபட்ட பின்னரே உணவு உண்பார். தாமிரபரணியில் வெள்ளம் வந்த போது அவரால் தரிசனம் செய்ய முடியவில்லை அதனால் உணவு உண்ணவில்லை. பரமபக்தருக்கு இறங்கி இனி நீ உன் மாளிகைக்கு முன் என்னை பிரதிஷ்டை செய்து வணங்கு என்று வரம் அளித்த கோவில்.

    இறைவன் கருணவடிவானவன் என்பதை உணர்த்தும் கோவில்.

    ஆனால் மன்னன் கட்டிய செப்பறை ஆலயம் இன்றில்லை, இப்போது உள்ள கோவில் அழகப்ப முதலியார் கட்டிய கோவில்.

    தாமிரபரணியில் வெள்ளம் வந்து செப்பறை கோவிலை இருந்த சுவடு இல்லாமல் அடித்து சென்று விட்டது. பிழைத்த ஒருவர் அழகியகூத்த தேசிகர் அவர்தான் அந்த கோவில் குருக்கள் அவர் பழைய முறையிலேயே அப்படியே கட்ட வைத்த கோவில்.

    அழகிய கூத்தர் கோவில் நிறைய அற்புதங்களை இறைவன் செய்து காட்டிய கோவில். செப்பறை கோவில் சென்று வந்து அந்த கோவிலைபற்றி நிறைய குறிப்புகள் எழுதி வைத்து இருந்தேன்.

    என் கணவரின் அண்ணா இராஜவல்லிப்புரத்தில் படித்து கொண்டு இருந்த போது ( அப்போதே வீடு எடுத்து தங்கி படித்த காலம்) அவர்கள் ஆச்சி உடன் இருந்து சமைத்து போட்டார்களாம். இராஜவல்லி கோயில் பக்கம் வீடு.
    இராஜவல்லியில் உள்ள கோவில் மிக அழகாய் இருக்கும் அதை பார்த்தீர்களா?

    சிறப்பு வாய்ந்த ஊர். அழகிய ஊர்.



    சொல்லின் செல்வர், ரா.பி சேதுப்பிள்ளை இந்த ஊரை சேர்ந்தவர், செப்பறை மடத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை படித்தவர்கள் உ.வே சுவமினாதய்யர், கா.சுப்பிரமணியபிள்ளை, துரைசாமி பிள்ளை, சிவஞான் சுவாமிகள் ஆகியோர்.

    சாகித்ய அகதமி பாராட்டுப் பெற்றோர் இந்த ஊர்க்காரர்கள்.




    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, சிதம்பர ரகசியம் மின்னூலாகவும் வந்திருக்கு. கூகிள் புக்ஸிலேயே (விலை இல்லாமல்) கிடைக்கும். இல்லை என்றாலும் பெயரை கூகிள் தேடலில் போட்டால் வரும். பதிவுகளில் போய்க் கஷ்டப்பட வேண்டாம்.

      Delete
    2. செப்பறை குறித்த மேல் அதிகத் தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி கோமதி. முன்னர் கட்டிய கோயில் இல்லை என்பதையும் அறிந்திருந்தேன். ஆனால் பின்னால் கட்டியவர் யாரெனத் தெரியாது. இப்போது உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். உ.வே.சா. அவர்கள் செப்பறை குறித்து எழுதி இருக்கிறாரா? நான் அறிந்ததில்லை. உங்கள் மூலமே பூம்பாறையைத் தெரிந்து கொண்டு போனோம். இப்போவும் திருநெல்வேலி போகும் முன்னர் உங்களைக் கேட்டிருக்கணும். அதிரடியோ, அஞ்சுவோ கூடச் சொல்லி இருக்காங்க! என்னமோ உங்களைக் கேட்டுக்கணும் என்றே தோன்றவில்லை. :(

      Delete
    3. கோமதி அரசு மேடம்... ரொம்பவும் உபயோகமான தகவல். நன்றி.

      நெல்லையப்பர் காந்திமதி கோவிலில் பார்க்கத் தவறவிடக்கூடாதவற்றையும், அங்கிருக்கும் புகழ் வாய்ந்த கோவில்களைப் பற்றியும் எழுதியிருக்கீங்களா?

      Delete
    4. பார்த்து இருக்கிறேன் எழுதவில்லை, நவதிருப்பதி போய் வந்தோம் படங்கள் எடுத்தேன் போடவில்லை பதிவு.
      நவகைலாயம் போகவில்லை.

      Delete
    5. நவதிருப்பதி, நவ கைலாயம் இரண்டுக்கும் போய் வந்து எழுதி இருக்கேன். ஆனால் அப்போப் படங்கள் எதுவும் எடுக்கலை. காமிரா இல்லை. சுமார் பனிரண்டு வருஷங்கள் முன்னர்!

      Delete
    6. நெல்லைத் தமிழரே, தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் போயிருக்கீங்களா? பாபநாசம்? குற்றாலம்? சித்திரசபை பார்த்திருக்கீங்களா? நாங்க திறக்கச் சொல்லிப் பார்த்தோம். மோசமான நிலையில் இருந்த்து. இப்போது சரி பண்ணியாச்சுனு சொன்னாங்க! ஆனால் இம்முறை போகவில்லை. இலஞ்சியும் ஓர் அழகான முருகன் கோயிலைக் கொண்டது. எழுத்தாளர் எல்லார்வி என்பவர் இலஞ்சி ஊரைச் சேர்ந்தவர். அவர் கதைகளில் இலஞ்சியும் அங்கு நடக்கும் கோலாட்ட ஜாத்திரை பற்றியும் அடிக்கடி வரும். பக்கத்திலேயே இருக்கும் திருமலைக்கு நாங்க போக முடியவில்லை. இருட்டி விட்டது என்பதால் மலை ஏற முடியாது என வண்டி ஓட்டுநர் சொல்லிவிட்டார். தென்காசிப் பக்கம் கடையநல்லூர், செங்கோட்டை கிருஷ்ணன் கோயில் எல்லாமும் பார்க்க ஆசை தான். செங்கோட்டை வழியா ஆரியங்காவு போகவும் ஆசை! நடக்கும்போது நடக்கட்டும்! :)))) பேராசை தான் இதெல்லாம்.

      Delete
    7. கீசா மேடம்.... பக்தியோட தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு இன்னும் போகலை. பாபநாசம் போகமுடியலை (புஷ்கரம் சமயம், 1 1/2 கி.மீட்டர் நடக்கணும்னு டிரைவர் சொன்னதால). சித்திரசபை பார்க்கலை. வாய்ப்பு வரும்... உடல் நிலைதான் எல்லா இடங்களுக்கும் போகும்படியா இருக்க அவன் அருள் வேண்டும். (எனக்கு, ஹரித்வார் லேர்ந்து, மேல மேல நடந்து சென்று கேதார்நாத்.... போன்ற பஞ்ச கோவில்களையும் கங்கோத்ரி, யமுனோத்ரி, கோமுக் வரையிலும் முடிந்தால் அது தாண்டியும் போகணும்னு ரொம்ப ஆசை. இப்போ காலுக்கு வந்த சோதனைல, எங்கயும் போகமுடியாது போலிருக்கு)

      Delete
  6. நேற்று போய் தம்பியின் பேரனை பார்த்து வந்தேன் அவன் திருவாதிரை நடசத்திரத்தில் பிறந்து இருக்கிறான்.
    ஆதிரையான் என்று பேர் வைக்க போகிறான்.

    சாரின் அண்ணன் மார்கழி திருவாதிரை நடசத்திரத்தில் பிறந்தவர்கள். அவர்கள் தாத்தா ஆதிரையான் என்று பேர் வைக்க ஆசை பட்ட போது அவர்கள் பேரை வைக்க ஆசை பட்டு வைத்து விட்டார் என் அத்தை. திருப்புடைமருதூர் சாமி பேரும் தாத்தாபேரும் ஒன்று.நாறூம்பூநாதர் அந்த பேரை வைத்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆதிரையானுக்கு எங்கள் ஆசிகள். ராஜவல்லிபுரம் ஊருக்குள் போகலை! ஆகவே அந்தக் கோயிலுக்குச் செல்லவில்லை.

      Delete
  7. தாமிரசபை போட்டோ, நடராஜர் போட்டோ எல்லாம் அழகு.
    அந்த ஆயிரங்கால் மண்டப போட்டோ எடுக்கவில்லையா? மிக அழகாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆயிரங்கால் மண்டபம் படம் எடுக்கலை. இதுவே திருட்டுத் தனமா எடுத்தது! :))) நல்லவேளையா அப்போ யாரும் இல்லை. நம்மவர் காவல் காக்க நான் அவசரம் அவசரமா எடுத்தேன். காமிராவைப் பார்த்தாலே கத்தறாங்க! :)

      Delete
    2. கோமதி அரசு மேடம்... எனக்கும் நெல்லையப்பர் கோவில் சிற்பங்களைப் பற்றி எழுதணும்னு எண்ணம்.

      அந்தக் கோவிலைச் சுற்றி, வீர சைவர்கள் இருக்கிறார்கள் (அதாவது வைணவம் பிடிக்காதவர்கள், அவர்களுக்கு சிவனே பெரிய தெய்வம்). நெல்லையப்பர் சன்னிதியை அடுத்து (அதே அறையில்) மிகப் பெரிய ரங்கநாதர் சிலை இருக்கு. அதனை முன்பு சுவர் வைத்து மறைத்திருந்தார்கள். பிறகு பரமாச்சார்யார் 50 வருடங்களுக்கு முன்னால் அந்தக் கோவிலுக்கு வந்தபோது, இது தில்லை கோவில் போல் இருக்கு இங்கு பெருமாள் சன்னிதி இருக்கணும்னு சொல்லி, பிறகு இந்தச் சுவரை இடித்துப் பார்த்தார்கள். இப்போ அங்கு ரங்கநாதரைச் சேவிக்க முடியும் (ஆனாலும் முக்கியத்துவம் நெல்லையப்பர் சன்னிதிக்குத்தான். இந்தச் சன்னிதியில் அர்ச்சகர் இல்லை).

      மண்டபச் சிற்பங்களில், நிறைய வைணவ அடியார் சிற்பங்களைப் பார்த்தேன் (படங்களும் எடுத்திருக்கிறேன்). இது ஆச்சர்யத்துக்குரியது.

      Delete
    3. பெரிய ரங்கநாதரை தரிசிக்க 2 ரூபாய் கட்டணம் உண்டு. உள்ளே போய் தரிசிக்கலாம் நெல்லையப்பர் கோவில் போய் இரண்டு மூன்று வருடங்கள் ஆகி விட்டது. சிவன் கோவில் என்பதால் பட்டர் இல்லை போலும்.

      நெல்லையப்பர் கோவிலில் இருப்பது போல் பள்ளி கொண்ட ரங்கநாதர் திருச்செந்தூரில் பள்ளி கொண்ட பெருமாளுக்கு பூஜைக்கு பட்டர் இருக்கிறார்.

      உங்கள் தகவல்களுக்கு நன்றி மீண்டும் போனால் பார்க்கிறேன்.

      Delete
    4. நெல்லையப்பர் கோவில் சிற்பங்களைப் பற்றி எழுதணும்னு எண்ணம் எழுதுங்கள் படிக்கிறோம்.

      Delete
    5. நெல்லை தமிழன், நீங்கள் திருவண்ணாமலை சென்றிருக்கிறீர்களா? அங்கு இருக்கும் சிற்பங்கள் முழுக்க முழுக்க ராமாயணம் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான். ஏன் அங்கிருக்கும் பெரிய கால பைரவர் கூட சக்கரத்தாழ்வாரைப் போலவே இருப்பார்.

      Delete
    6. திருவண்ணாமலையில் எங்களுக்குக் கிடைத்தது 2 மணி நேரமே! ஆகையால் அதிகம் பார்க்க முடியவில்லை. பாதாள லிங்கம் கூடப் பார்க்க முடியலை! அங்கே தான் ரமணர் தவம் இருந்ததாகச் சொன்னார்கள்.

      Delete
    7. திருவண்ணாமலையிலேயே ஓரிரு மாதங்கள் இருந்திருக்கிறேன். (எங்க அப்பா அங்க வீடு எடுத்து தங்கியிருந்தார்-அம்மாவோட. நாங்க ஹாஸ்டல்ல). அண்ணாமலையார் கோவிலுக்குப் போயிருக்கிறேன். ரமணாஸ்ரமம் போயிருக்கிறேன். (ஒரு சில முறை). ஆனாலும் பக்தி கண்ணோட்டம் அதிகமானபிறகு அங்கெல்லாம் போனதில்லை.

      நம்ம காமாட்சி அம்மா அந்த ஊர்ல இருந்தாங்க போலிருக்கே (அதைப்பற்றி முன்பொருமுறை எழுதியிருந்தாங்க). ரமணரின் ஆரம்பகால தியானம் பாதாள லிங்கம் முன்புதான் என்று படித்திருக்கிறேன்.

      Delete
  8. செப்பறையில் மகளிர் வார வழிபாடு நன்றாக நடக்கிறது, உழவார பணி மன்றம் சிறப்பாக நடக்கிறது.
    நாங்கள் போன போது தேர் செய்ய இருந்தார்கள் அதற்கு பணம் வசூல் செய்து கொண்டு இருந்தார்கள் அதற்கு தலவரலாறு புத்தகம் , மற்றும் தேர் வெள்ளோட்டம் பத்திரிக்கை அனுப்பினார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா கோமதி! இந்தத் தகவல்கள் எல்லாம் குருக்கள் சொல்லவில்லை. அவரே நாங்க திரும்பத் திரும்ப தொலைபேசி அழைத்ததால் வந்தார்! :( வந்ததும் உடனே கிளம்பும் எண்ணத்தில் இருந்தார் போல!

      Delete
  9. தங்களின் தேடல் அசர வைக்கிறது அம்மா... அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி. இப்போது தேடல் குறைஞ்சிருக்கு. ஆனால் இன்னிக்குச் சந்தித்த ஒரு நபர் எப்போவும் உங்களுக்குள் ஒரு தேடல் இருந்துட்டே இருக்கு என்றார். :))))

      Delete
  10. ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை !

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, கோயில் பற்றிய வரலாற்று உண்மைகள்!

      Delete
  11. இதுதான் இதுதான். என்னவோ நேரில் பார்த்த மாதிரி, கிரிக்கெட் மேட்ச் வர்ணனை போன்ற நடை. அதுதான் உங்கள் பதிவை மெருகூட்டுகிறது.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜேகே அண்ணா. உங்கள் பாராட்டுக்குத் தகுதி உள்ளவளாகத் தொடர்ந்து இருக்கணும்.

      Delete
  12. இதுதான் சிதம்பர ரகசியக் கதையோ கீசாக்கா.. நான் கொஞ்சம் பொறுமையாக இருந்து படிச்சு கிட்னியில் ஏத்துறேன்ன்..

    ReplyDelete
    Replies
    1. சிதம்பர ரகசியம் மிக நீண்ட தொடர் அதிரடி. உங்களுக்குப் படிக்கப்பொறுமை இருக்குமா தெரியலை! மின்னூலாகவும் கொண்டு வந்திருக்கோம். இலவசம் தான்! ஆனாலும் கூகிளிலும் கிடைக்கும். சிதம்பர ரகசியம்/கீதா சாம்பசிவம் என கூகிளில் தட்டச்சினாலே சுட்டிகள் வரும்.

      Delete
  13. //செப்பறை/தாமிரசபை என்பது உண்மையில் எது?//
    புதுப்புதுப் பெயர்களெல்லாம் உங்களிடம் இருந்துதான் தெரிஞ்சு கொள்றேன்ன்...

    ReplyDelete
    Replies
    1. தாயே டமிள் டி - மொத்தம் ஐந்து சபைகள் நடராசப் பெருமானுக்கு உண்டு. சித்ர சபை (குற்றாலம்), பொற்சபை, ரத்தின சபை, வெள்ளி சபை, தாமிர சபை (நெல்லை) என்பவை மற்றவை.

      தாமிரம் என்பதற்கு தமிழில் செப்பு என்ற பெயர் உண்டு (செப்புப் பாத்திரங்கள் என்றுதான் சொல்வார்களே தவிர தாமிரப் பாத்திரம் என்ற சொல்வழக்கு இல்லை). தாமிர அறை = செப்பு அறை = செப்பறை.

      என்னத்த மார்க் தமிழ்ல போடறாங்களோ.....ம் ம் ம்

      Delete
    2. ஹா ஹா ஹா ஓ இவ்ளோ விசயம் இருக்கோ நடராஜருக்குள்....
      அல்லோ ....அவர் இத்தனை அறைகள் ஒளிச்சு வச்சிருக்கிறார் இந்தியாவில எண்டு, எங்கட சிமியோன் றீஈஈச்சருக்கு எப்பூடித் தெரியும்?:)...
      சே சே டமில்ல சுட்டிப்பிள்ளைகளாக அதிராவைப்போல:) இருந்தாலும் கயிட்டம்தான்:) போல கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

      Delete
    3. ஒவ்வொரு சபைக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகசியமும் உண்டு அதிரடி. ரத்தினசபை திருவாலங்காடு எனச் சொல்லப்பட்டாலும் பலரும் திரு உத்தரகோசமங்கையே ரத்தினசபை என்றும் சொல்கின்றனர். அங்குள்ள நடராஜர் மிகப் புராதனமானவர். முழுக்க முழுக்க ரத்தினத்தால் செய்யப்பட்டவர். ஆகையால் அவரைச் சாதாரணமாக எப்போதும் சந்தனக்காப்பிலேயே வைத்திருப்பார்கள். திருவாதிரை அன்று மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு அபிஷேஹாதிகள் நடந்து பின்னர் மீண்டும் சந்தனக்காப்புச் செய்யப்படும். இவர் வீதி உலா வரமாட்டார். உள்ளே அறையிலேயே இருப்பார். அறையில் இருப்பது அம்பலத்துக்கு வந்தது மற்ற சபைகளில் தான்! சிதம்பரத்தில் பொற்சபை என்னும் பொன்னம்பலத்திலும், மதுரை வெள்ளியம்பலத்தில் பாண்டியனுக்காகக் கால் மாறி ஆடியதும்,நடந்தது. இரத்தினசபை என இப்போது அழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் திருவாலங்காட்டில் காளியை நடனத்தில் வென்ற கோலத்தில் வலக்காலை ஊன்றி இடக்காலால் காதில் குழை அணிந்த கோலத்தில் காட்சி கொடுப்பார். தாமிர சபையில் காளிகா தாண்டவம் எனப்படும் இடக்காலை ஊன்றி வலக்காலைத் தூக்கி ஆடி உள்ளார். சித்திர சபையில் மார்க்கண்டேயனுக்குக் காட்சி அளித்தவராக சித்திர வடிவிலே காணப்படுவார். இங்கே ஆடியது திரிபுரா தாண்டவம். இவர் ஆடுவதைக் கண்டு வியந்த பிரம்மா அந்தக்காட்சியை ஓவியமாகத் தீட்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்த சபையின் கூரை செப்புத்தகடுகளால் ஆனது. இவை தான் ஐந்து சபைகளின் வரலாறு. உத்தரகோசமங்கையின் வரலாறு தனி! அது பின்னர்!

      Delete
  14. உங்கள் உழைப்பு அளவில்லாதது. மனம் நிறைந்த பாராட்டுகள் கீதா ம.
    அன்பு கோமதியும் விரிவாக இத்தனை செய்திகள் கொடுத்திருக்கிறார்.
    நீங்கள் என் தோழிகள் என்று நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

    கோவில் படங்கள் அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரேவதி. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  15. அருமையான தகவல்கள். மிக்க நன்றி!

    நாங்கள் திருநெல்வேலிக்கு சென்ற பொழுது, நெல்லையப்பர் கோவிலில் தாமிரசபை காலியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தேன். யாரிடமாவது விளக்கம் கேட்கலாம் என்றால், அருகில் யாரும் இல்லை. தவிர, நான் ஒரு பக்கமும், என் கணவர் ஒரு பக்கமும் பிரிந்து சென்று விட்டதால் ஏற்பட்ட குழப்பம், நவ கைலாச கோவில்களில் சிலவற்றை தரிசிக்க செல்ல வேண்டும் நேரமாகிக் கொண்டிருக்கிறதே என்னும் அவசரம் ஆகையால் வந்து விட்டேன். ஆனால், உள்ளுக்குள் இந்த கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. இன்று தெளிய வைத்ததற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பானுமதி! அந்தப் பிரகாரமே வெறிச்சோடிக் கிடக்கும். முதல் முறை பார்த்தப்போவும் அப்படித்தான். கோயில் ரொம்பப் பெரியது என்பதால் சேர்ந்தே போக வேண்டும். நாங்க நின்று நின்றே போனோம். அதுக்கே நடக்க முடியலை!

      Delete
  16. வணக்கம் சகோதரி

    நல்ல விளக்கமாக செப்பறை கோவிலைப்பற்றியும், தில்லை கோவிலைப்பற்றியும் இறைவனின் பிரதிஷ்டை விபரங்கள் பற்றியும் மிக அழகாக விவரித்துள்ளீர்கள். சிதம்பர ரகசியமும் படித்துப் பார்த்து அறிந்து கொண்டேன். இந்த கதைகள் எனக்கு ஒரளவுதான் தெரியும். ஆனால் அதை விவரித்து தாங்கள் கூறியதை படிக்கும் போது நன்றாக இருந்தது. மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து. தகவல்கள் தேடித்தேடி வரலாற்றின் உண்மைகளை எங்களுக்கும் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. தில்லைக்கும் ஒரு தடவைதான் சென்றுள்ளேன். தி.லியில் சிறு வயதிலிருந்தே இருந்தாலும் கூட இந்த கோவிலுக்கெல்லாம் நான் போனதேயில்லை. இனி செல்லும் போது நானும் சென்று தரிசித்து வர ஆவலாய் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா ஹரிஹரன். உங்களைக்காணோமே கேட்கணும்னு நேற்றுத் தான் நினைத்தேன். பின்னர் எங்கள் ப்ளாக் மூலம் உடல்நலக்குறைவு எனப் புரிந்து கொண்டேன். தற்சமயம் பரவாயில்லையா? தில்லைக்கு இன்னொரு முறை சென்றால் சொல்லுங்கள். எங்கள் கட்டளை தீக்ஷிதர் மூலம் தரிசனம் பண்ணி வைக்கச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறோம்.

      நானும் மதுரையிலேயே பிறந்து வளர்ந்தாலும் திருப்பரங்குன்றம் முதல் முறை போனப்போப் பதினேழு, பதினெட்டு வயசு ஆகிவிட்டது. எங்க தாத்தா வீடு அப்போ டிவிஎஸ் நகரில் இருந்ததால் பெரியம்மாவுடன் நடந்தே போய் கிரிவலம் வந்திருக்கோம். அப்பாவுக்கெல்லாம் தெரியாது. தெரிந்தால் அனுமதி கிடைக்காது. அழகர் கோயிலுக்குக் கல்யாணம் ஆகித் தான் போனேன். என் கணவருக்கே ஆச்சரியம் நிஜம்மாவே போகலையா என! அதன் பின்னர் நாலைந்து முறைகள் சென்றோம். கடைசியாக 2013 ஆம் ஆண்டில் சென்றோம்.அது போல் உங்களுக்கும் திருநெல்வேலிக் கோயில்கள் தரிசனம் விரைவில் கிட்டும்.

      Delete
  17. மிக மிக அருமையான தகவல்கள். இதை எல்லாம் தேடிப் பகிர உங்களின் உழைப்பும் தெரிகிறது. வியப்புடன் வாசித்தேன். பாராட்டுகள். மிக்க நன்றி சகோதரி.

    துளசிதரன்

    அக்கா நான் நேற்று வாசித்தேன். மீண்டும் ஒரு முறை வாசிக்கனும்..மனதில் இன்னும் உள்வாங்கவில்லை... வாசித்துவிட்டு வரேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன். சிதம்பரம் கோயில் கிட்டத்தட்ட என்னோட பிறந்தகம் மாதிரி ஆகிவிட்டது. தீக்ஷிதர்களும் தகவல்கள் கொடுத்து உதவி செய்தார்கள். இல்லை என்றால் என்னால் தனியாக எந்தத் தகவலும் திரட்ட முடியாது. பலரும் புத்தகங்கள் கொடுத்துத் தகவல்கள் கொடுத்து சுட்டிகள் அளித்து உதவி செய்தார்கள். தனி முயற்சி அல்ல! உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி/

      கீதா, மெதுவாப் படிச்சுட்டு வாங்க

      Delete
  18. செப்பறை கோயில் பல வருடங்களுக்கு முன்னர் சென்றது. அழகான கோயில்... இப்போது எப்படி இருக்கு என்று தெரியவில்லை அதற்குப் பிறகு போகாததால். ஆனால் வரலாறு எதுவும் அறிந்ததில்லை அக்கா. உங்க மூலம் இப்ப அதன் வரலாறு தெரிந்து கொண்டேன்.

    நெல்லையப்பர் கோயிலுக்குப் பல முறை சென்றிருக்கிறேன் ஆனால் தாமிரசபை தகவல்கள் அறிந்ததில்லை....இப்பத்தான் அதுவும் அறிகிறேன்.

    கோமதிக்காவின் கூடுதல் தகவலும் பார்த்தேன்.

    சிதம்பர ரகசியம் சுட்டி போய்ப் பார்க்கிறேன் அக்கா.....

    செப்பறை கோயில் படங்கள் வரும் இல்லையோ?!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, செப்பறையில் உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இல்லை. தாமிர சபை என்பதோடு அழகிய கூத்தர் தான் சபாநாயகர். அவரைப் படம் எடுக்க அனுமதி இல்லை. திருவாதிரை அன்று வெளியே வருவார். மேலும் சிதம்பரம் போல் இங்கேயும் ஆனித்திருமஞ்சனமும், திருவாதிரை அபிஷேஹத்தின் போதும் நடராஜர் வெளியே வருவார்.

      Delete
  19. அக்கா நிறைய தகவல்கள் திரட்டியிருக்கீங்க. செம! எவ்வளவு ரெஃபெர் பண்ணியிருப்பீங்க!!!!ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்த! பாராட்டுகள் அக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அப்போது கொஞ்சம் சுறுசுறுப்பும் அதிகம். இப்போ முடியறதில்லை. அநேகமாய்ப் பதிவுகளே போட தாமதம் ஆகின்றன. இப்போ அலையவே முடியலையே!

      Delete
  20. இன்று காலையில் முதல் கமென்ட் போட்டுட்டு ... மீண்டும் வாசித்துவிட்டு கருத்து போடும் போது கரன்ட் போயிடுச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....அப்புறம் இன்று தங்கையின் பெண், அவள் கணவர், குழந்தைகள், மற்றொரு கசின் என்று விருந்தினர் வருகை....அதற்கான ஏற்பாடுகள் செஞ்சுட்டு கரன்ட் இப்ப வரவும் வர முடிந்தது....2.30க்கு அவங்க எல்லாரும் வந்துருவாங்க...அதுக்குள்ள கொஞ்சம் வலை உலா,....

    நாளை மீண்டும் சென்னை நோக்கிப் பயணம். செவ்வாய் மாலை ஆகிடும் இங்கு வர....அப்புறம்தான் வலை மீண்டும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க, எங்களுக்கும் அடுத்தவாரம் விருந்தினர்/உறவினர்கள் வராங்க! ஆகவே 2,3 நாட்கள் கொஞ்சம் பிசியா இருக்கும்.

      Delete
  21. நேற்றே பதிவை வாசித்து விட்டேன்.. ஆயினும் கருத்தைச் சொல்ல முடியவில்லை..

    செப்பறை நடராஜர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றிக் கூறும் இணைப்பு ஒன்றில் இந்த தலவரலாற்றைப் படித்துள்ளேன்..

    தாங்கள் வழங்கியுள்ள சிதம்பர ரகசியம் இணைப்புக்குச் செல்ல வில்லை...அநேக மாக அந்தப் பதிவை - நான் தஞ்சையில் இருந்தபோது வாசித்திருக்கக் கூடும் என்றே நினைக்கின்றேன்.. வலைப்பதிவு ஆரம்பிக்கும் முன்பே தங்களது தளத்தை நான் அறிந்திருக்கின்றேன்...

    வாழ்க நலம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு உங்க கருத்தைப் பார்க்கிறேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நண்பரின் கேள்வி வந்ததால் இன்று இந்தப் பதிவுக்கு வந்து பார்க்கும்படி ஆனது. சிதம்பர ரகசியம் எனத் தட்டச்சினாலே ஃப்ரீதமிழ் வெளியீட்டின் சுட்டி வரும். இயன்றால் பாருங்கள். நன்றி.

      Delete
  22. கடந்த ஆண்டு நடைபெற்ற தாமிரபரணி புக்ஷ்கரத்திற்கு என்னுடைய அக்கா, என் மனைவி மற்றும் மகனுடன் நானும் திருநெல்வேலி நகருக்கு வந்தேன்.செப்பறைக் கூத்தரை மனங்குளிர தரிசித்தேன்.பல ஆண்டுகளுக்கு முன்னர் சுமாராக 40 ஆண்டுகளுக்கு முன்னர் என் பெற்றோர் எங்களை அழைத்துக் கொண்டு ராஜவல்லிபுரம் செப்பறைக் கூத்தரை தரிசிக்க வைத்தனர்.இக்கோயில் தான் உண்மையான தாமிரசபை என்று பலகாலமாக நான் பலரிடம் வாதிட்டு இருக்கிறேன். அதை ஒருவர் கூட நம்பவில்லை. எனக்கு மட்டும் நம்பிக்கை குறையவில்லை. இப்போது மீண்டும் ஶ்ரீ நடராஜப் பெருமானை தரிசிக்க அவர் அருள் புரிந்தார். தங்கள் செப்பறைப் பதிவை என்னுடைய நண்பர்களுக்கு நகல் எடுத்து அனுப்ப தாங்கள் அனுமதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இன்று தான் முதன் முதலாக தங்கள் பதிவைப் படிக்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மிக மிக ஆழமான அற்புதமான கட்டுரை அது (செப்பறை கோயில்) மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுவாமிநாதன். இது தான் தாமிரசபை என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இதை என் சிதம்பர ரகசியம் தொடரிலேயே சொல்லி இருப்பேன். முடிந்தால் படித்துப் பார்க்கவும். தாராளமாகத் தாங்கள் இந்தப் பதிவின் சுட்டியைத் தங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது, காப்பி, பேஸ்ட் செய்து என்னுடைய பெயருடன் அனுப்பி வைக்கலாம். மிக்க நன்றி.

      Delete
  23. ஏதோ என்னால் முடிந்த செயல்.....

    அழகிய கூத்தன் அருள்.



    https://photos.app.goo.gl/Utu3rUfoM9kkth5R6

    https://photos.app.goo.gl/eoGr5fFLs1pdXbX79

    https://photos.app.goo.gl/S4wP59CbwZbPWRRSA

    https://photos.app.goo.gl/ZSLX7dmD4Ss6KDnF8

    https://photos.app.goo.gl/ujMVydH1VmnqEP7fA

    https://photos.app.goo.gl/8xtRbAu17tBaeMxC8

    https://goo.gl/photos/zegxuGWVyuJV1PH68

    ReplyDelete