எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 28, 2007

உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு நாள்

ஏப்ரல் 28-ம் தேதி உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு நாள் என்று நாகை பாலமுரளி செய்தி அனுப்பி இருக்கிறார். உண்மையில் அவர் சொல்ல வில்லை என்றால் எனக்கு நினைவில் இருந்திருக்காது. ஹிஹிஹி போஸில் மூழ்கி இருக்கேனே அதான், தவிர இங்கே தமிழ் நான் மட்டும் தான் படிக்க வேண்டி இருக்கு. மற்றவர்கள் எல்லாம் தமிழ் எங்கே படிக்கிறாங்க? இப்போ நாட்டுப் பற்றைப் பற்றித் தமிழ்த் தாத்தா சொன்னதை இங்கே கொஞ்சம் எடுத்துப் போடுகிறேன். இப்போது எழுதி வரும் தொடருக்கும் கொஞ்சம் ஏற்புடையதாய் இருக்கும். எல்லாமே தாத்தா சொன்னது. அதனால் பாராட்ட வேணும்னா அவரைப் பாராட்டவும். இதோ தாத்தாவின் வார்த்தைகள்:

"பெற்ற தாயைப் போலவே பேசும் மொழியையும், பிறந்த நாட்டையும் போற்றிப் பாராட்டுவது மக்கள் கடமையாகும்.மொழிக்குத் தெய்வமான கலைமகளைத் தாயாகவே கருதி வழிபடுவது பெரியோர்கள் இயல்பு. அப்படியே நிலமகளையும் அன்னையாக வணங்கி வருவதும் நம் நாட்டினர் வழக்கம். பண்டைக்கால முதற்கொண்டே தம் தம் நாட்டினிடத்தே அன்பு கொள்ள வேண்டுமென்ற கொள்கை மக்களும்மு இருந்து வருகின்றது. காப்பியங்களில் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு நாட்டுப் படலம் சொல்லப் படுகிறது. அதனால் நாட்டைப் பற்றிய செய்தியின் தலைமை விளங்கும். மனிதராய்ப் பிறந்த யாவருக்கும் தாய் நாட்டின் மீது அபிமானம் இருத்தல் இயல்பு. திருக்குறளில்,
"சிறை நலனுஞ் சீரு மிலரெனினு மாந்தர்
உறைநிலத்தோடொட்டல் அரிது." என்பதன் விசேடவுரையில் பரிமேலழகர் பலத்திற் குறைந்த வீரர்களூம் தம்முடைய நாட்டினிடத்திலேயுள்ள பற்றினால் பகைவரை எதிர்த்து வெற்றி பெறுவார்கள். அவர்கள் தம்முடைய நாட்டை விட்டுப் பிரிவதைக் காட்டிலும் சாவதற்குத் துணிந்திருப்பார்கள்" என்று தெரிவிக்கிறார்.

நக்கீரர் சிலகாலம் மதுரையை விட்டுச் செல்ல நேர்ந்த போது அவர்,
"என்றினி மதுரை காண்பேன்
எப்பகல் சவுந்தரேசன்
தன்றிருவடிகள் காண்பேம்
தாயையெஞ்ஞான்று காண்பேம்"
என்று வருந்தினாரென சீகாளத்திப் புராணம் கூறுகிறது. (என்னை மாதிரி போலிருக்கு :D)
தமிழ்ப்பிரபந்தங்களில் ஒருவகையாகிய குறவஞ்சிகளில் குறத்தி தான் பிறந்த நாட்டுவளம் கூறுவதாக ஒரு பகுதி உண்டு. அதிலிருந்து குறமகளிரின் தாய் நாட்டன்பு சிறப்பாக அமைந்திருந்தது என்பதைப் புலவ்ர்கள் சிறப்பாகப் புலப்படுத்திச் சொல்லி இருப்பது வெளிப்படும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற விர்ந்த அன்புடைய பெரும்புலவர்களும் தம்முடைய தாய்நாட்டின் கண் தனி அன்பை வைத்திருந்தார்கள். தாய் நாட்டைப் பிரிந்திருத்தல் மிக்க துயரத்தை உண்டாக்கும். திருவிளையாடல் புராணம் இயற்றிய பாண்டிநாட்டுப் புலவர் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் நாட்டு வணக்கப் பாடலில் சொல்கிறார்:

"ஆவியந் தென்றல் வெற்பின்
அகத்தியன் விரும்பும் தென்பால்
நாவலம் தீவம் போற்றி
நாவலந் தீவந்தன்னுள்
மூவர்கட் கரியான் நிற்ப
மூத்தமிழ்த் தெய்வச் சங்கப்
பாவலர் வீற்றிருக்கும்
பாண்டி நன்னாடு போற்றி!" என்று பாடுகிறார். இதிலிருந்து தாய் நாட்டுப் பற்று அனைவருக்கும் பொதுவானது என்று அறிகிறோம். அதனால் தான் ஒருவனை நாட்டை விட்டு ஓட்டி விடுதல் பெரிய தண்டனையாக விதிக்கப் பட்டு வருகின்றது. " இவை தாய் நாட்டுப் பற்றைப் பற்றித் தாத்தா எழுதிய கட்டுரையில் இருந்து தொக்குப் பட்ட சில பகுதிகள். படிக்க வசதிக்காகத் தமிழ் நடை சற்றே மாற்றப் பட்டிருக்கிறது.

இப்போ எனக்கும் தாய்நாடு நினைப்புத் தான். இன்று (இங்கே வெள்ளிக்கிழமை) மீனாட்சி பட்டாபி்ஷேஹம். நாளை திக்விஜயம். ஞாயிறன்று மீனாட்சி திருக்கல்யாணம்.இந்தியாவில் இருந்தால் தொலைக்காட்சித் தரிசனமாவது கிடைக்கும். இப்போ நினைப்பு மட்டும் இருக்கு. புதன் கிழமை மே 2-ம் தேதி அழகர் ஆற்றில் இறங்குகிறார்னு நினைக்கிறேன். இந்த வருஷம் அழகர் என்ன கலர் உடை உடுத்தப் போகிறாரோ? அழகருக்கே வெளிச்சம்!

3 comments:

 1. ரொம்ப நல்ல பதிவா போட்டிருக்கீங்கம்மா!
  தமிழ்த்தாத்தாவின் பிறந்த நாள் பற்றி நீங்க எழுதினப்போ படிச்சேன். அவரது நினைவுநாளிலும் அவரைப்பற்றி உங்க எழுத்துக்களில் படிக்க விரும்பினேன்.
  படிச்சுட்டேன்.

  ReplyDelete
 2. அழகான பதிவு கீதாம்மா...
  தமிழ்த் தாத்தா உவேசா நினைவு நாளில் நினைவு கூர வைத்தீர்களே - அதற்கே முதல் நன்றி.

  இன்று எல்லாரும் தமிழ் இலக்கியத்தில் இருந்து மேற்கோள்களாக அள்ளி வீசுகிறோம்...இப்படித் தமிழால் வாழ்பவர் நாம். தமிழுக்காக வாழ்ந்தவரை நினைவில் போற்ற வேண்டாமா?

  ReplyDelete
 3. //இப்போ எனக்கும் தாய்நாடு நினைப்புத் தான். இன்று (இங்கே வெள்ளிக்கிழமை) மீனாட்சி பட்டாபி்ஷேஹம்.இந்தியாவில் இருந்தால் தொலைக்காட்சித் தரிசனமாவது கிடைக்கும். இப்போ நினைப்பு மட்டும் இருக்கு//

  ஆகா...
  கீதாம்மா...வுட்டா மதுரைக்கே பொடி நடையா ஓடிடுவீங்க போல இருக்கே!
  dinamalar.com -இல் பாருங்களேன், ஒவ்வொரு நாளும் அன்னை அலங்காரத்தில் ஜொலிக்கிறாள்!

  ReplyDelete