எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 28, 2013

டோலி சஜாகே ரக்னா!


கல்யாணப் பெண்ணுக்கு உடைகள் வாங்குகையில், திருமணம் ஆகிச் செல்லும் பெண் குறைந்தது ஆறு மாதத்துக்காவது புகுந்த வீட்டில் இருந்து எதையும் கேட்டு வாங்கும் வண்ணம் விட மாட்டார்கள்.  ஆறு மாதத்துக்கான உடைகளோடு, மற்ற அத்தியாவசியப்பொருட்களையும், வாங்கிக் கொடுப்பார்கள்.  இதில்பவுடர், சோப்பு, சீப்பு, குங்குமம், மற்ற அழகு சாதனப்பொருட்கள் போன்றவையும் அடங்கும். எல்லாத்துக்கும் முதல்லே துணி எடுக்கக் கடைக்குப் போனதும் முதலில் வாங்க வேண்டியது பிள்ளையார் வேஷ்டி.  அப்புறமா அவங்க அவங்க குல தெய்வத்துக்குச் சாத்த வேண்டிய துணிகளை வாங்கி விட்டுப் பின்னரே மணப்பெண்ணுக்கும், மற்றவர்களுக்கான துணிமணிகளும் வாங்க வேண்டும்.  அதே போல் பாத்திரங்கள்.  திருமணம் ஆகித் தனிக்குடித்தனம் போகும் பெண்ணாக இருந்தால் அதற்கேற்றாற்போல் பாத்திரங்கள் வாங்கிவிடலாம்.  ஒரு சிலர் பின்னர் தனிக்குடித்தனம் போவார்கள்.  அப்போத் தனியாகச் செய்ய வேண்டும் என சில பிள்ளை வீட்டினர் கேட்பார்கள்.  அப்படியான இடமாக இருந்தால் கல்யாணத்துக்கு வைக்கும் பாத்திரங்களிலேயே சிலவற்றைத் தனியாக எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் கொடுக்கலாம்.  அதோடு புகுந்த வீட்டுப் பழக்கங்கள், பூஜை முறைகள் போன்றவற்றிற்கு ஏற்ற மாதிரியான சில பாத்திரங்களும் வாங்கும்படி இருக்கும்.

உதாரணமாகப் பூஜை சாமான்கள் மணி, சூடத்தட்டு, தீபக்கால், தூபக்கால் போன்றவையும் வாங்குவார்கள்.  சமையல் பாத்திரங்கள் அந்த அந்தக் காலத்துக்கு ஏற்றாற்போல் வாங்குவார்கள்.  இப்போது எல்லாம் மிக்சி, கிரைன்டர் போன்றவை, மைக்ரோவேவ் அவன், குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவையும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. வெளிநாட்டில் அவரவர் சக்திக்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் வாங்கவென கிஃப்ட் வவுச்சராகக் கொடுப்பார்கள்.  திருமணம் ஆன தம்பதியர் அந்த வவுச்சரின் தொகைக்கேற்பத் தாங்கள் வாங்க வேண்டிய தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வார்கள்.  நம் நாட்டிலும் இம்முறையைக் கடைப்பிடிப்பது நல்லது.  இதனால் பெண் வீட்டினருக்குப் பெருமளவில் சுமை குறையும். மஹாராஷ்டிரா திருமணங்களிலும், குஜராத்தியர் திருமணங்களிலும்  திருமணத்துக்கு நாம் கொடுப்பது பரிசோ பணமோ பொதுவிலே தான் கொடுக்க வேண்டும். பெண் வீட்டினருக்குத் தனியாக, பிள்ளை வீட்டினர் தனியாக என வாங்கும் வழக்கம் அங்கில்லை.  இது தெரியாமல் ஒரு முறை குஜராத்தியர் திருமணத்தில் நீங்க பெண் வீட்டினரா, பிள்ளை வீட்டினரா எனக் கேட்க, அவர்கள் சிரித்ததோடு அல்லாமல்,


"இந்தப் பணம், பரிசு எல்லாம் பிள்ளை, பெண் இருவரையும் சார்ந்தது. நாங்க மொத்தமாய் வாங்கி அவர்களிடம் கொடுத்துடுவோம்.  ஒரு பைசா கூடப் பெண்ணின் அம்மா, அப்பாவுக்கோ, பிள்ளையின் அப்பா, அம்மாவுக்கோ போகாது.  திருமணத் தம்பதிகளிடம் அப்படியே ஒப்படைப்போம்.  அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், குடும்பம் நடத்தவும் இந்தப் பணம் பயன்படும். "அப்படினு சொன்னார்கள்.  ஆச்சரியமாவே இருந்தது.  அதோடு வாங்கிக் கொடுப்பவர்களும் ஒருத்தருக்கொருத்தர் கலந்து பேசிக் கொண்டு எந்தப் பொருளும் இரண்டாம் முறையாக டூப்ளிகேட் இல்லாமல் வாங்கியும் கொடுக்கின்றனர். அல்லது பணமாய்க் கொடுத்து விடுகின்றனர். மஹாராஷ்டிராவில் திருமணத்துக்குப் பெண் வீட்டில் ஐம்பது பேர் என்றால் ஐம்பது பேர் தான்.  அதே போல் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர் தான் வரலாம்.  மொத்தம் நூறு பேர்தான் அழைப்பே கொடுப்பாங்க.  அழைப்பிதழ் யாருக்கெல்லாம் கொடுக்கணுமோ அதை முன் கூட்டியே தீர்மானித்துவிட்டு அதற்கேற்றாற்போல் அழைப்பிதழை அச்சிட்டுக் கொடுப்பார்கள்.  சமையல், சாப்பாடு எல்லாமும் அதற்கேற்றாற்போல் கச்சிதமாகவே இருக்கும்.  ஒரு நபர் கூட வந்தாலும் சரி, முன் கூட்டியே சொல்லிவிட வேண்டும் என்பதோடு யார் தரப்பில் வருகிறாரோ அவர்கள் செலவுக்கான பணத்தைக் கொடுக்க வேண்டும்.

ஆனால் இப்போல்லாம் மாறி இருக்கிறதாவும் கேள்விப் படுகிறேன்.  எல்லாரையும் பார்த்துட்டு அவங்களும் ஆடம்பரத் திருமணத்துக்கு மாறி இருக்கலாம். ஆனால் இங்கே குடியேறிய மராட்டியர்கள் திருமணம் முன்னெல்லாம் பத்துப் பதினைந்து நாட்கள் நடந்ததாகவும், இப்போது மூன்று நாள் திருமணமாக ஆகி இருப்பதாகவும் கூறுகின்றனர்.  அதோடு மூன்று முறை தாலி கட்டுவார்கள் எனவும் சொல்கின்றனர்.  முதல் நாள் ஒரு கருகமணி வைத்த தாலி, பின்னர் இரண்டாம் நாள் இரண்டாம் தாலி மஞ்சள் கயிற்றில்.  இந்தத் தாலியைப் பிள்ளைக்குப் பெண்ணும் கட்டுவாராம்.  பெண்ணுக்குப் பிள்ளையும் கட்டுவாராம்.  இருவருமே ஒருவருக்கொருவர் கட்டிக் கொள்வார்கள் என்கின்றனர்.  மூன்றாம் நாள் மீண்டும் இன்னொரு கருகமணி வைத்த தாலி பிள்ளை கட்டுவாராம்.  அப்போது பிள்ளையின் அம்மா பார்க்கக் கூடாது என்றொரு சம்பிரதாயம் இருப்பதாகவும், தாலி கட்டி முடிந்ததும், பெண்ணின் அம்மா பிள்ளையின் அம்மாவைப் போய்த் திருமணப் பெண் போல் அலங்கரித்து அழைத்து வந்து மணமக்களை அவங்க மடியிலே உட்கார வைத்து, வேடிக்கை, விளையாட்டுனு நடக்கும் எனவும் சொல்கின்றனர்.  இதுக்குக் காரணம் இன்னொரு பெண் தன்னோடு பிள்ளையைப் பங்கு போட வந்துட்டாளேனு அவங்களுக்கு மனது சங்கடப்படும் என்று சொல்கின்றனர்.   அநேகமாய் இது குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கானதாகவும் இருக்கலாம்.  இது ஒரு பத்திரிகைச் செய்தியில் படித்தது.



ஆனால் பல வட இந்தியத் திருமணங்களில் பிள்ளையின் அம்மா சொந்தப் பிள்ளையின் திருமணத்தில் கலந்து கொள்வதில்லை.  பெரும்பாலானவர்கள் சொல்வது ஸ்ரீராமனின் திருமணத்திலும், அவர் தம்பியர் திருமணத்திலும் கோசலை, சுமித்ரை, கைகேயி மூவரும் கலந்து கொள்ளாததால் அதே நடைமுறையைக் கடைப்பிடிக்கிறோம் என்கின்றனர்.  பெண்ணைத் திருமணம் ஆனதுமே பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.  முன்பெல்லாம் பல்லக்குகளில் அனுப்பி வைத்திருக்கின்றனர்.  இப்போதெல்லாம் விளம்பரங்களில் பார்ப்பதோடு சரி.  :))))

19 comments:

  1. //இதுக்குக் காரணம் இன்னொரு பெண் தன்னோடு பிள்ளையைப் பங்கு போட வந்துட்டாளேனு அவங்களுக்கு மனது சங்கடப்படும் என்று சொல்கின்றனர். //

    ஆச்சர்யமாக உள்ளது. ;)

    எப்படியும், போகப்போக புதிதாக வருபவளுக்குத்தானே, அதிகமாகப்பங்கு கிடைக்கப்போகிறது.

    அப்போ என்ன செய்வாங்கலாம்?

    இருக்கவே இருக்கு முதியோர் இல்லம்.

    ReplyDelete
  2. வட இந்தியச் சம்பிரதாயங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன. கிஃப்ட் வவுச்சர் சமாச்சாரமும் அஃதே... அஃதே! பிள்ளையின் அம்மாவே திருமணத்துக்கு வருவதில்லை என்பதும் ஆச்சர்யம்! அப்போ என் கல்யாணத்துக்கு என் அக்கா வரவில்லை என்பதற்கு நான் வருத்தப் பட வேண்டாம் என்று சொல்லுங்கள்!:)))

    ReplyDelete
  3. ஒரு தபா கண்ணை மூடிகினா இன்னால்லாம் பாக்க முடீது!

    ReplyDelete
  4. அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் UPS + இன்வெர்ட்டர் ஆகியவை இல்லாததை கடுமையாக ஆட்சேப்பிக்கிறேன்... ஹிஹி... (இன்றைய உண்மை நிலை)

    மஹாராஷ்டிராவில் திருமணம் : பக்கா கொடுக்கல்-வாங்கல்...!

    ReplyDelete
  5. ஏன் கீதா. இப்ப ஸ்நேகா கல்யாணத்தில கூட டோலி வந்ததே:)
    நான் நிறைய இந்தி சீரியல்ல பார்க்கறேன்.
    அச்சோ அந்த அழுகையை..க்ரேட் ஆக்டர்ஸ்.!!!!!நேற்று என் தூக்கம் கெடவும் இது காரணமாச்சு. கல்யாணம் ஆனாட்டுப் பெண்வீட்டில் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாதாமே. எங்க சம்பந்தி சொல்வார்.எங்க அப்பா எனக்கு முப்பது கார்டும், முப்பது இன்லாண்ட் கவரும் கொடுத்தார். கார்ட் அப்பாவுக்கு,. கவர் அம்மாவுக்கு.
    சிரமம் வேண்டாம் என்று அட்ரஸும் எழுதிக் கொடுத்தார்:)இங்கே ராஜபாளையத்தில் கூடத் திருமணத்துக்கு பெண்ணின் அம்மா வரமாட்டார்.

    ReplyDelete
  6. வைகோ சார், இதிலே ஆச்சரியமே இல்லை. முக்கியமா மூத்த பிள்ளை திருமணம் செய்து கொண்டாலோ அல்லது ஒரே பிள்ளையாக இருந்தாலோ அம்மாமார்கள் மருமகளைப் படுத்தும் பாடு இருக்கே, சொல்ல முடியாது. மருமகளைப் படுத்துவதில் பிள்ளை சந்தோஷப் படுவான்னு நினைப்பாங்களானு எனக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே ஆச்சரியமா இருக்கும்.

    மூத்த பிள்ளையின் பாடு எத்தனை வருஷம் ஆனாலும் கஷ்டம் தான் ஐயா!

    புதிதாய் வருபவளுக்கு அதிகம் கிடைக்கிறது என்பதே அவர்களின் ஆற்றாமை. நமக்குக் கிடைக்காதது அவளுக்குப் போகிறதே எனப் பொறாமை! :))))))

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீராம், கல்யாணத்துக்கு அம்மா வரக் கூடாது என்பது அந்தப் பக்கம் சம்பிரதாயம். நம் பக்கம் அக்கா வரக்கூடாதுனு எல்லாம் சம்பிரதாயமே இல்லையே! அவங்க தானே தாலியே முடியணும்! :)))))

    ReplyDelete
  8. கிஃப்ட் வவுச்சர் பல ஆண்டுகள் முன்னரே பார்த்தேன். என் மாமா வீட்டுக் கல்யாணங்களில் முன் கூட்டியே கேட்டுட்டு வாங்கிக் கொடுப்பாங்க. கட்டில், பீரோ, சோஃபாசெட், பாய்லர் இம்மாதிரி! :))))

    சமீபத்தில் நடந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்தில் பெண்ணின் பெற்றோர் கொஞ்சம் கஷ்டப் படறவங்க. அதனால் பெண்ணின் அத்தைமார்கள் ஒருத்தர் சத்திரத்து வாடகை, ஒருத்தர் சாப்பாடுச் செலவு, ஒருத்தர் புடைவை, துணிமணிச் செலவு, இன்னொருத்தர் நகைகளின் செலவில் ஒரு பங்கு என ஏற்றுக் கொண்டு செய்தார்கள். இப்படியும் மனிதர்கள் உண்டு. :)))) அதே சமயம் நீ கஷ்டப்பட்டாலும் எனக்கு நல்ல பட்டுப்புடைவையாக விலை அதிகம் போட்டு வாங்கித் தரணும்னு சொல்லும் அத்தைகளும் உண்டு. :)))))

    ReplyDelete
  9. அப்பாதுரை, கண்ணைத் திறந்தா இன்னும் நல்லாவே தெரியுமே!:))))

    ReplyDelete
  10. டிடி, போட்டீங்களே ஒருபோடு, இதை எப்படி மறந்தேன்! :)))))

    ReplyDelete
  11. மஹாராஷ்டிரத் திருமணம் கொடுக்கல்--வாங்கல்னு சொல்ல முடியாது. கல்யாணத்துக்கு அதிகம் செலவு செய்ய வேண்டாம் என்ற எண்ணமாக இருக்கும்.

    ReplyDelete
  12. வாங்க வல்லி, சிநேகா கல்யாணம்?? சினிமா நடிகை?? தெரியலை. நான் நிஜம்மாவே பார்க்கலையே! :))))

    ஆமாம், முக்கியமா பஞ்சாப் மாநிலத்துக்காரர்கள் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்ததும் பெண் வீட்டில் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார்கள். அதே போல் பெண் கல்யாணத்தை விடப் பிள்ளை கல்யாணத்தில் தான் அவங்களுக்குச் செலவும். வரப் போகும் மருமகளுக்கு நகைகள், புடைவை துணிமணிகள்னு எல்லாம் வாங்கி அழகாய் எக்சிபிட் பண்ணி வைப்பாங்க

    ReplyDelete
  13. தண்ணீர் அருந்துவது மட்டுமல்ல, ஒரு நாள் கூட அங்கே தங்கவும் மாட்டார்கள். பெண்ணின் வீட்டிற்குச் செல்லும்படி ஆனாலும் சென்று “ஹாய், ஹலோ” சொல்லிவிட்டு திரும்பி விடுவார்கள்......

    இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது.

    கிஃப்ட் வவுச்சர் - நல்ல விஷயம். அவங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கலாமே!

    ReplyDelete

  14. Sometimes I get a doubt, that the informations in the posts are for information or whether they are being justified Not this post alone,but other posts on marriage and practices.

    ReplyDelete
  15. வாங்க வெங்கட், கிஃப்ட் வவுச்சர் நல்ல விஷயம் தான். ஆனால் இங்கே இதெல்லாம் வர இன்னும் பல்லாண்டுகள் பிடிக்குமோனு நினைக்கிறேன்.:)))

    நீங்க சொல்றாப்போல் வட மாநிலங்களிலும் இப்போது கலாசாரம் மாறியே வருகிறது என்பதை நானும் அறிவேன்.:(

    ReplyDelete
  16. வாங்க ஜிஎம்பி சார், உங்களோட தனிப்பட்ட கருத்துக்கு நான் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்??? :))))))))

    ReplyDelete
  17. உங்கள் சந்தேகம் எதனால் என்பதும் புரியவில்லை.

    ReplyDelete
  18. எங்கள் வழக்கத்தில் பணம்,பரிசுப்பொருட்கள் எல்லாமே தம்பதிகளுக்குத்தான்.

    இங்கு கிஃப்ட் வவுச்சர் முறை வந்துவிட்டது.

    ReplyDelete
  19. பிள்ளையின் அம்மாவுக்கு அலங்கரிக்கும் வழக்கமும் அதன் காரணமும் அருமை

    ReplyDelete