எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 18, 2015

நாளைய தேவி அம்பா சாம்பவி! சரஸ்வதி ஆவாஹனம் நாளை!

நேற்றைய அப்பத்துக்கு அமோக ஆதரவு! வராதவங்க எல்லாம் வந்தாங்க. அதோடு பதிவுக்கும் பார்வையாளர்கள் நிறைய இருக்காங்க! :) எல்லோருக்கும் அப்பம் பிடிக்கும் போல இருக்கு! இன்னிக்குச் சுண்டல் கொஞ்சமா நனைச்சு வைச்சிருக்கேன். யார் வராங்கனு தெரியாது. நேற்று பதிவர் ஆதி வெங்கட் தன் மகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.  அதைத் தவிரவும் இங்கே குடியிருப்பு வளாகத்திலேயே சிலர் வந்தனர். இன்னும் சிலர் இன்னிக்கு வரலாம். ஆகச் சுண்டல் போணியும் ஆகும்னு நினைக்கிறேன். சுப்புத் தாத்தா சுண்டலைப் பத்தி விளக்கம் வேணும்னு கேட்டிருக்கார். பார்க்கணும். பதிவை + செய்ததும் நிறையப் பேர். இப்போ இதை எல்லாம் அதாவது யார் வந்திருக்காங்க என்றெல்லாம் பார்ப்பது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது. நிறுத்தணும்! மறுபடி யார் வராங்களோ, யார் வரலையோனு அதிகம் எதிர்பார்ப்பில்லா மனோநிலைக்குப் போகணும். :)  நம் கடன் பதிவு எழுதிக் கிடப்பதேனு இருக்கணும். :)

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியது. ஆதி லக்ஷ்மியே சரஸ்வதி என்று சொல்லப்பட்டாலும் ஏழாம் நாள் சரஸ்வதி ஆவாஹனம் செய்வார்கள். அநேகமாக இது தமிழ்நாட்டிலே மட்டும் காணப்படுகிறது என நினைக்கிறேன். இன்றைய தினத்துக்கான தேவி காலராத்ரி அல்லது காளராத்ரி! சனிக்கிழமைகளிலும் இவளை வழிபட்டாலும் நவராத்திரியின் ஏழாம் நாள் வழிபடுவது சிறப்பு.

கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள். யோக முறையில் சஹஸ்ராரத்தை அடைய இவளே உதவுகிறாள் என்பது யோகிகளின் நம்பிக்கை. கழுதையை வாகனமாகக் கொண்டு இவள் வருவது எதையும், எவரையும் இழிவாக நினைக்கக் கூடாது என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது.



படத்துக்கு நன்றி விக்கி பீடியா!

இன்றைய தினம் அம்பிகையை "சாம்பவி" யாக அலங்கரிக்கலாம். எட்டு வயதுப் பெண் குழந்தையை சாம்பவியாக வழிபட வேண்டும். பொதுவாக கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியின் நாட்கள் என்பதால் வெண்ணிற மலர்கள், ஆடைகள், முத்தால் ஆன ஆபரணங்களைக் கொடுக்கலாம். வெண் தாமரையாலும், பன்னீர் இலைகளாலும் அம்பிகையை அர்ச்சிக்கலாம். தாமரை மலரில் வீற்றிருந்து வீணை வாசிக்கும் கோலத்தில் அம்பிகையை அலங்கரிப்பார்கள்.

இன்றைய தினம் நிவேதனமாக வெண் பொங்கல் அல்லது தேங்காய்ச் சாதம் செய்யலாம். ஒரு கிண்ணம் அரிசிக்கு கால் கிண்ணம் பாசிப்பருப்பைச் சேர்த்து வறுத்துக் கொண்டு,  அரைக்கிண்ணம் பாலுடன் நீரும் சேர்த்துக் கொண்டு உப்புப் பெருங்காயம் சேர்த்துக் குழைய வேக வைத்துப் பின்னர் நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சி, கருகப்பிலை தாளித்து முந்திரிப்பருப்பும் சேர்க்கலாம்.

தேங்காய்ச் சாதம்: சாதத்தை உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளவும். ஒரு மூடி தேங்காய்த் துருவல், இரண்டு பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு, சர்க்கரை ஒரு டீஸ்பூன், நெய் ஒரு டீஸ்பூன், தாளிக்க தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், தாளிக்கும் பொருட்கள் கடுகு, உபருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்பு, கருகப்பிலை, பெருங்காயப் பொடி.

தேங்காய் எண்ணெயைக் கடாயில் ஊற்றிக் கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை என வரிசையாகத் தாளித்துக் கொண்டு வேர்க்கடலை வறுபட்டதும் பெருங்காயப் பொடியைச் சேர்த்துப் பச்சைமிளகாய், கருகப்பிலையும் சேர்த்துக் கொண்டுத் துருவிய தேங்காயைப் போட்டு வறுக்கவும். தேங்காய் வறுபட்டதும் அதை ஆற வைத்த சாதத்தில் போட்டுத் தேவையான உப்பும், ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கொண்டு நன்கு கிளறவும். நெய்யையும் சேர்க்கவும். சற்று நேரம் வைத்துவிட்டுப் பின்னர் பரிமாறவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

இன்னிக்கு இங்கேப் பச்சைப்பயறைச் சுண்டலாகச் செய்திருக்கேன். நேற்றிரவு பயறைக் கழுவி விட்டு ஊற வைத்திருந்தேன். காலையிலேயே லேசாக முளை கட்டி விட்டது. இப்போது அதைக் குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைத்தேன். குக்கருக்கு வெயிட் (குண்டு) போடக் கூடாது. நன்கு ஆவி வெளியேறியதும், குண்டைப் போட்டு உடனே அடுப்பை அணைக்கவேண்டும். சேப்பங்கிழங்கு வேக விடறாப்போல்! :) அப்போது தான் பயறு குழைவாகவும் அதே சமயம் தனித்தனியாகவும் வரும். இதெல்லாம் சமையல் ரகசியங்கள்! பின்னர் அதே ப்ரஷர் பானில்  இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டுக் கடுகு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை என வரிசையாகத் தாளித்துப் பயறையும் கொட்டி இரண்டு ஸ்பூன் சாம்பார்ப் பொடியைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் தேங்காய்த் துருவலைச் சேர்த்தா சுண்டல் ரெடி, ரெடி, ரெட்ட ரெடி!



17 comments:

  1. இந்த சமையல் ரகசியமெல்லாம் அனுபவத்தில் வருவது! ம்.... சுண்டல் திருவிழா பதிவுகளை அள்ளித் தருகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், என்னதான் இந்துத்வா பேசினாலும், நாத்திகம் பேசினாலும், கடவுளே இல்லைனாலும் இத்தகைய பதிவுகளுக்கு மதிப்புக் குறையவே இல்லை. முதல்லே எதுவுமே போட வேண்டாம்னு இருந்தேன். அப்புறம் ஒரு சிலர் கேட்டதால் போட ஆரம்பிச்சேன். இதை விரிவாகக் கடந்த ஐந்து வருடங்களில் எழுதி இருக்கேன். எல்லாவற்றையும் தொகுத்து மின்னூலாக்கி முதலில் ஏடிஎம்முக்கு அனுப்பணும். :)

      Delete
    2. அதுக்குள்ளே 3+ வந்தாச்சு, பார்வையாளர்களும் அதிகரிச்சிருக்காங்க! :)

      Delete
  2. இந்த வாரம் சுண்டல் வாரம் ஸூப்பர்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! ஆனால் பயறுச் சுண்டலுக்கு நேத்திக்கு வீட்டுக்கு ஆட்கள் வந்த அளவுக்குப் பதிவுக்கு வரலை! பிடிக்கலை போல! :)

      Delete
  3. அட! சகோ ரொம்ப பிசி நவராத்திரி இல்லையா...பார்த்துக் கொண்டு வருகின்றோம் தங்கள் பதிவுகளை....

    கீதா: அதே சமயல் ரகசியங்கள்!!! ஸோ ரகசியங்கள் அம்பலம்!!ஹ்ஹஹ...குறிப்புகளும் சேம்...சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க, நிதானமா வாங்க!

      Delete
  4. 7th day/moola nakshthram, saraswathi awaganam is common in Karnataka also....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? தமிழ்நாட்டில் மட்டும்னு நினைச்சிருந்தேன்.

      Delete
  5. A small suggestion - after cooking, for naivethayam, you may please keep the sundal etc in a pithalai/velli bowl....I mean pls avoid keeping the whole cooker, container as is....

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்ம், அம்மா வீட்டில் ஒரு சின்னத் தட்டில் அல்லது பாத்திரத்தில் தான் வைப்பாங்க. மாமியார் வீட்டு வழக்கம் பண்ணின பாத்திரத்தோடு தான் வைக்கணும்னு சொன்னதாலே அப்படியே செய்துட்டு வரேன். இனிமேல் மாத்திக்கிறேன். :) அதுவும் நீங்களே சொன்னப்புறமா மாத்திக்காமல் இருந்தால் எப்பூடி! :)

      Delete
    2. சாதம் அதாவது மஹாநிவேதனம் கூட அம்மா வீட்டில் ஒரு பாத்திரத்தில் தான் வைப்போம். இங்கே வெண்கலப்பானையோடு வைக்க வேண்டும். :)

      Delete
  6. சில இடங்களில் சில பரம்பரைப் பழக்கங்கள் எப்படி வைத்தாலும் வயிற்றுக்குள் போவதுதானே

    ReplyDelete
    Replies
    1. அதென்னமோ இந்தப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதில் என் மாமியாரும் சரி, என் அப்பாவும் சரி ரொம்பக் கண்டிப்பு! கொஞ்சம் கூட மாறக் கூடாது என்பார்கள். :)

      Delete
    2. வயிற்றுக்குள் போவதையும் நல்லெண்ணத்துடன் சமைத்து, நல்லெண்ணத்துடன் இறைவனுக்குக் காட்டி உன் இன்றைய பரிசு இது எனச் சொல்லிச் சாப்பிடுவது நன்மை தானே தரும். உணவு உண்ணும் முன்னரும் உண்ட பின்னரும் செய்ய வேண்டிய பல வழக்கங்கள் உள்ளன. யாரும் இப்போது அதைக் கடைப்பிடிப்பதில்லை. குறைந்த பட்சம் இறைவனுக்குக் காட்டிவிட்டாவது சாப்பிடலாமே!

      Delete
  7. இன்னிக்குத் தான் பெண்டிங் எல்லாம் முடிச்சேன் :))!. எல்லா பதிவும் வழக்கம் போல் அருமை.. சுண்டலும் சூப்பர்... இங்கே (பெங்களூர்) இன்னிக்கு தான் சரஸ்வதி பூஜை... நாங்க புஸ்தகம் வைக்கிறது மட்டும் இன்னிக்கே வச்சிடுவோம்.. பூஜை நம் வழக்கப்படி புதன் கிழமை தான்.

    அம்மா, ஒரு சந்தேகம். சில சுண்டலுக்கு மாத்திரம் ஏன் சோடா உப்பு சேர்த்து ஊற வைக்கறீங்க.. இது வரைக்கும் எனக்கு அது தெரியாது..அது மாதிரி, பச்சைப் பயறு குழையும்னு குக்கரில் வேக வைக்காமலே தான் இருந்தேன்.. இந்த ஐடியா இப்ப தான் தெரிஞ்சிக்கிட்டேன்.. இது மாதிரி நிறைய ரகசியம் சொல்லித் தரணும் நீங்க..

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி! சில சுண்டலுக்கு மட்டும் சோடா உப்புச் சேர்ப்பதில் ரகசியம் இது தான். வெ.கொ.க. க.கொ.க. வெ.ப. மொச்சை, வேர்க்கடலை ஆகியன வேக நேரம் எடுக்கும். அதோடு பல சமயங்களில் வேகாமலும் பழி வாங்கும். ஆகவே ஊற வைக்கையிலேயே சோடாவைச் சேர்த்துவிடலாம். பின்னரும் கழுவுவதால் சோடாவின் பாதிப்பு இருக்காது. இது வட மாநிலத்தில் வசிக்கையில் அங்குள்ள சிநேகிதிகள் சொன்னது! பச்சைப்பயறு, காராமணி எல்லாவற்றையும் இம்மாதிரிச் செய்யலாம். பச்சைப்பட்டாணிக்கு மட்டும் சோடா வேண்டாம். அது இல்லாமலேயே குழையும்! :)

      Delete