எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 20, 2015

சரஸ்வதியின் கதை தெரியுமா?



நவராத்திரியின் கடைசி நாள் ஆன அன்று வழிபட வேண்டிய அம்பிகை சித்தாத்ரி அல்லது சித்தி தாத்ரி அவாள். தமிழ்நாட்டில் "சாமுண்டி"யாக விளங்குவாள். சும்ப நிசும்பர்களை வதம் செய்ய அவதரித்த காமேஸ்வரியாகவும் சக்தி தாசர்கள் வழிபடுவார்கள். இன்றைய தினம் பத்து வயதுப் பெண் குழந்தையை "சுபத்ரா"வாக வழிபட வேண்டும். பச்சைக்கற்பூரத்தால் ஏதேனும் ஆயுதம் ஒன்றைக் கோலமாக வரைய வேண்டும். நல்ல வாசனை மிகுந்த மரிக்கொழுந்து இன்றைய வழிபாட்டில் இடம்பெறும். இதைத் தவிர அடுக்கு மல்லிகை, நந்தியாவட்டை போன்ற வெண்ணிற மலர்களும் ஏற்றவை.
Saraswati.jpg
அம்பிகையை வெண்பட்டாடை உடுத்திய சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். இன்றைய தினம் சரஸ்வதிக்கே முக்கிய வழிபாடு. என்றாலும் தாமரை மலர் மீது நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் சித்தாத்ரி தேவியையும் வட மாநிலங்களில் வழிபடுவார்கள். சரஸ்வதி பிரம்மாவின் மனைவி எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இவளும் ஆதி பராசக்தியின் ஓர் அங்கமே ஆவாள். சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகிய பெயர்களிலும் வழிபடப்படுகின்றாள். சரஸ்வதி ஸூக்தம் இவளையே உலகின் ஆதி காரணி என்று சொல்கிறது. சக்தி தாசர்களின் தாரா வழிபாட்டில் வழிபடப்படும் சரஸ்வதியின் எட்டு வடிவங்கள் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர்கள் ஆவார்கள்.  கட சரஸ்வதியை தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை சாலிவாகன மன்னனும் சியாமளா தேவியைக் காளிதாசனும் வழிபட்டதாக சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.

நதியாக ஓடி அந்தர்யாமியாகக் காட்சி கொடுப்பவளும் இவளே ஆவாள். சரஸ் என்னும் பெயருக்கேத் தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள். கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தி இவளிடமே உள்ளதால் சரஸ்வதி என்ற பெயர் பெற்றாள். நதியாக ஓடியதற்கும் ஒரு காரணம் உண்டு. அது பின்னர் விளக்குகிறேன். ஏற்கெனவே எழுதி இருக்கேன். :) சுட்டி இங்கே!

இங்கே

யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான்.
சிருங்கேரி சாரதை க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி விக்கி பீடியா!
சகல கலைகளுக்கும் அதி தேவதையான இவளே சாரதை எனவும் போற்றப் படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப் படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

இவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு.

இன்றைய தினம் அக்கார அடிசில் செய்யலாம். ஒரு கிண்ணம் பச்சரிசியையும் கால்கிண்ணம் பாசிப்பருப்பையும் வறுத்துக் கொண்டு குறைந்தது ஒரு லிட்டர் பாலில் கரைய விடவும். நன்கு குழையக் கரைந்து உருத்தெரியாமல் ஆனதும் வெல்லம் சேர்க்கவும். வெல்லமும் சேர்ந்து கொண்டு கெட்டிப்பட்டதும், நெய்யை இரண்டு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொண்டு முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழம் வறுத்துச் சேர்க்கவும். ஏலப்பொடியையும் ஜாதிக்காயையும் பொடி செய்து போடவும். குங்குமப் பூக் கிடைத்தாலும் பாலில் கரைத்து விடலாம். சுத்தமான குங்குமப்பூவாக இருக்க வேண்டும்.

இன்றைய சுண்டல் அநேகமாக அனைவரும்  வடமாநிலங்களில் கூட இன்று கொண்டைக்கடலையே செய்வார்கள். கறுப்புக் கொண்டைக்கடலை தான் நல்லது. கடலையை முதல் நாளே முன்னர் சொன்னது போல் சோடா உப்புச் சேர்த்து ஊற வைக்கவும். பின்னர் மறு நாள் நன்கு கழுவிவிட்டுப் புதிய நீர் விட்டு வைக்கவும். அதன் பின்னர் குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், கருகப்பிலை, இரண்டு மி.வத்தல் போட்டு வெந்த கடலையைக் கொட்டிக் கிளறவும். மி.வத்தல், தனியா இரண்டும் வறுத்துப் பொடி செய்து அதைச் சேர்க்கவும். இதற்குச் சாம்பார்ப் பொடி போட்டால் நன்றாக இருக்காது/ தேங்காயைத் துருவலாகவோ, அல்லது பல்லுப் பல்லாகக் கீறியோ சேர்க்கவும்.

இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் "ஹரி ஓம்" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.

இன்றைய நிவேதனம் தயிர்சாதம். முன்னர் சொன்னாற்போல் தயிர்சாதம் செய்து நிவேதனம் செய்யவும். இன்றைக்குச் சுண்டல் செய்வதில்லை. இரவு படுக்கப்போகும் முன்னர் ஒரு பொம்மையைக் கிழக்கு, மேற்காகப் படுக்க வைக்கவேண்டும். பொதுவாக மறுநாள் பொம்மைகளைப் பெட்டியில் எடுத்து வைக்கும் வழக்கம் இருந்தாலும் இந்த வருஷம் மறுநாள் வெள்ளிக்கிழமையாக வருவதால் அன்று எடுத்து வைக்கக் கூடாது. மறுநாள் சனிக்கிழமை அன்று எடுத்து வைக்கலாம்.
22 ஆம் தேதி விஜயதசமி! அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.

இன்றைக்கு நான் மொச்சைக்கொட்டைச் சுண்டல் செய்தேன். கால்கிலோ மொச்சையை முதல் நாள் இரவே கழுவி ஊற வைத்தேன். பின்னர் இன்று குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயத் தூள், கருகப்பிலை சிவப்பு மிளகாய் இரண்டு சேர்த்துக் கொண்டு ஒரே ஸ்பூன் சாம்பார்பொடியும் போட்டு வெந்த மொச்சையைச் சேர்த்துக் கிளறிப் பொடி வாசனை போனதும் தேங்காய்த் துருவலைச் சேர்த்தேன். (தம்பிக்காக {வா.தி.} இன்று காரம் குறைச்சல்) :) அப்புறமா இன்னிக்குக் கொலுவோட படத்தையும் இணைக்கிறேன். அதிலே ஒரு மாறுதல், சின்ன மாறுதல் தெரியும். கண்டு பிடிக்கிறவங்களுக்கு ஒண்ண்ண்ண்ணும் கிடையாது! :) எனக்குப் பளிச்சுனு தெரியுதே!



11 comments:

  1. எத்தனைஒ தேவியர்கள் எத்தனை பெயர்கள் எத்தனைக் கதைகள் அப்பப்பா தலை சுற்றுகிறதுபேசாமல் பிரசாதம் பக்கம் மட்டும்போனால் போதுமென்று தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. Haahaahaahaa இதிலே "காகா"னு வருது. ஆகையால் ஆங்கிலத்திலேயே சொல்லிட்டேன். இந்த சுரதாவில் இதான் பிரச்னை! :)

      Delete
  2. நிறைய விடயங்கள் அறிந்து பிரசாதம் எடுத்துக் கொண்டேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி

      Delete
  3. நிறைய வீடுகளில் கொலு வைத்திருக்கிறார்கள். எல்லோரும் அந்தந்த நாட்களுக்குரிய பொருள் தெரிந்து அந்த வழிபாடுகள் செய்கிறார்களா என்று தெரியவில்லை.உதாரணமாக இன்று ஒரு பத்து வயதுப் பெண்ணை 'சுபத்ரா'வாக உருவகித்து கொண்டாட வேண்டும். எத்தனை பேர்கள் செய்திருப்பார்கள்? ஒரு சம்சயம்தான்! :)))))

    ReplyDelete
    Replies
    1. நவராத்திரி பூஜை செய்வதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை ஸ்ரீராம், இரண்டு வேளை பண்ணணும், இரண்டு வேளையும் நிவேதனம், ஒரு சுமங்கலி, ஒரு கன்னிப் பெண் அழைத்துச் சாப்பாடு போட்டுத் துணிகள், அதோடு கூடவளையல்கள், போன்ற அலங்காரப் பொருட்களும் கொடுக்கணும். பூஜை முடியவும் நேரம் எடுக்கும். ஆகையால் எல்லோரும் பண்ண மாட்டார்கள். ஸ்ரீவித்யா வழிபாட்டுக்காரர்கள் மட்டும் நிச்சயமாகப் பண்ணுவார்கள்.

      Delete
  4. நானு கண்டுபிடிச்சேன்.. நம்ம ரங்கா வந்திருக்கார் முதல் படியில் !!!!!...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பார்வதி, சரியாச் சொல்லிட்டீங்க! :)பார்க்கவும் ஆசையா இருந்தது! ரங்க்ஸும் என்னமோ உடனே சரினு சொல்லிட்டார். ஆனால் மண் பொம்மை இல்லை! ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்!

      Delete
  5. எங்க வீட்டில் நவராத்ரி இப்படி 9 நாட்களோடு முடிவதில்லை. விஜயதசமிக்குப்பின் வரும் வீக் எண்ட் வரை கொலு இருக்கும். ஒருமுறை ரெண்டுவாரங்கள் கூட கொண்டாடி இருக்கேன். வழக்கமா நம்ம வீட்டில் விஜயதசமிக்கு ஒரு பூஜை உண்டு. நண்பர்களை அழைத்துக்கூடி இருந்து கொண்டாடுவோம். எல்லோரும் வரத்தோதாக நேரம் கிடைக்கணுமுன்னால் வீக் எண்ட் வேணும்.

    இந்தமுறை பூஜை தினம் அக்டோபர் 25.

    ReplyDelete
    Replies
    1. எஞ்சாய் துளசி, இங்கே நவராத்திரி முடியறதுக்குள்ளே 3 நாட்களா மடிக்கணினி பிடிச்சுக் கொண்டு விடவே இல்லை இன்னிக்குத் தான் ஒரு வழியா மடிக்கணினி தயார்! ஆனால் இ கலப்பை தயார் இல்லை! :( வந்தவங்களுக்குப் பழைய வெர்ஷனைக் கண்டு பிடிக்க முடியலை! பாக் அப் பண்ணினதிலும் தேடிப் பார்த்தாச்சு! கணினியில் கொண்டு வந்துட்டேன். இதிலே முடியலை! :( ரெண்டும் ஒரே நேரம் பழி வாங்கிடுச்சு!

      Delete
  6. லேட்டாய் வந்தாலும் சரஸ்வதியின் கதையை அறிந்து கொண்டேன்! நன்றி!

    ReplyDelete