எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 16, 2015

இன்னிக்கு என்ன சுண்டல்?

முன்பெல்லாம் சுண்டல் செய்ய ஒரு கிலோ பருப்பு வகைகள் வாங்கி இருக்கேன். அப்படியும் போதாமல் போகும். பின்னர் சென்னையில் இருந்தவரை அரை கிலோ பருப்பு வகைகள் வாங்கிக் கொண்டிருந்தேன். செய்த சுண்டல் அங்கேயே மிஞ்ச ஆரம்பித்து விட்டது. வருபவர்கள் மெல்ல மெல்லக் குறைந்து போய்விட்டனர். இப்போது கால் கிலோ அல்லது அதை விடக் கொஞ்சம் கூடப் போடுகிறேன். அது செலவாக வேண்டுமே என்று கவலைப்பட வேண்டி இருக்கு. அதோடு இப்போதெல்லாம் நவராத்திரிக்கு நேரில் சென்று அழைப்பதும் குறைந்து விட்டது.

சென்னையில் இருக்கையிலேயே ஒரு சிலர் கடிதங்கள் மூலம் அழைப்பு அனுப்புவார்கள். ஆச்சரியமாக இருக்கும். அதன் பின்னர் தொலைபேசியில் அழைப்புகள் வர ஆரம்பித்தன. இப்போது வாட்ஸ் அப்பில் அழைப்பு வருதாம். இன்று முகநூலில் பார்த்தேன். நல்லவேளையா என்னிடம் வாட்ஸ் அப்பும் இல்லை! மேலேயும் எதுவும் இல்லை! காலி! :)



படத்துக்கு நன்றி விக்கி பீடியா


நவராத்திரி ஐந்தாம் நாளான நாளைய தினத்துக்கான தேவி ஸ்கந்தமாதா ஆவாள். ஒரு சிலர் வைஷ்ணவி என்றும் சொல்கின்றனர். ஆறு வயதுப் பெண் குழந்தையைக் "காளிகா" என்றும், "சண்டிகா" என்றும் அழைத்து அமரச் செய்து வழிபடுவார்கள். கடலையினால் பறவைகள் ஏதேனும் ஒன்றைக் கோலமாகப்போடுவார்கள். இன்றும் சிவந்த நிறத்து மலர்களே உகந்தவை ஆகும். குழந்தைக்கு சிவந்த நிறத்தில் ஆடைகள், வளையல்கள் கொடுத்து  உபசரித்துப் பால் சாதம் உண்ணக் கொடுக்கலாம். ஒரு சிலர் இன்றும் தயிர் சாதம் கொடுப்பார்கள்.

குழைவாக வடித்த சாதத்தில் சர்க்கரை சேர்த்துச் சுண்டக் காய்ச்சிய பாலைவிட்டுக் கலந்து நெய்யில் முந்திரி, திராக்ஷை வறுத்துப் போட்டு ஏலப்பொடி சேர்க்க வேண்டும். குழந்தைகள் பிரியமாகச் சாப்பிடுவார்கள்.

இன்று தேவியை சாகம்பரியாக அலங்கரிக்கலாம். அல்லது சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் துர்கையாகவும் அலங்கரிக்கலாம்.  சரஸ்வதி என்றும், மகாலக்ஷ்மி என்றும், பூமாதேவி என்றும், மலைமகளான பார்வதி என்றும் அழைக்கப்படுபவள் சாக்ஷாத் துர்காமகாலக்ஷ்மியே ஆவாள்.  அனைத்தும் ஆதிபராசக்தியின் வடிவங்களே ஆகும். ஸ்கந்தனைப் பெற்றெடுத்ததால் ஸ்கந்தமாதா என அழைக்கப்படுகிறாள். சரஸ்வதியின் அம்சமாகத் திகழ்கையில் வாகீஸ்வரி என அழைக்கப்படுகிறாள். ஆக ஒரு பெண்ணே வெவ்வேறு உறவுகளைப் பூண்டு இருப்பது போல் ஒரே ஆதிபராசக்திக்கே ஒவ்வொரு சமயங்களில் ஒவ்வொரு பெயரில் அழைக்கிறோம்.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமையாக இருப்பதால் அரிசிப் புட்டு வெல்லம் சேர்த்துச் செய்யலாம். இயலாதவர்கள் கடலைப்பருப்புச் சுண்டல் செய்யலாம். நம்ம வீட்டில் புட்டுச் செய்தால் விநியோகம் போக மீதம் இருப்பதைச் சாப்பிட இயலாது என்பதால் இனிப்பைத் தவிர்க்கிறோம். கடலைப்பருப்புச் சுண்டலே செய்யப் போகிறேன்.

கடலைப்பருப்பு கால் கிலோ நன்கு கழுவி நான்கு மணி நேரமாவது ஊற வைக்கவும். பின்னர் வாணலியில் நீரைக் கொதிக்க வைத்துக் கடலைப்பருப்பை மீண்டும் கழுவி நீரில் போட்டு வேக வைக்கவும். மேலே நுரைத்துக் கொண்டு வரும் என்பதால் கொஞ்சம் மிதமான தீயிலேயே வேக வைப்பது நல்லது.

பின்னர் உப்புச் சேர்த்து வேக வைத்த கடலைப்பருப்பை நீரை வடிகட்டி வைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை என வரிசையாகத் தாளித்துக் கொண்டு கால் ஸ்பூன் மஞ்சள் பொடியும் சேர்க்கவும். பின்னர் வெந்த கடலைப்பருப்பைக் கொட்டி 2 டீஸ்பூன் சாம்பார்ப் பொடி சேர்க்கவும். நன்கு கிளறவும். பொடி வாசனை போகக் கிளறியதும் தேங்காய்த் துருவல் சேர்த்து இரண்டு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கிளறவும். பின்னர் கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். நவராத்திரி இல்லாத நாட்களில் புதினாவும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். பச்சை வெங்காயமும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நவராத்திரிக்கு இவை எல்லாம் சேர்க்க மாட்டோம் என்பதால் அவை இல்லாமல் செய்ய வேண்டும்.




10 comments:

  1. அருமை சகோ விஞ்ஞான வளர்ச்சி சுண்டலுக்கு கூட பாதிப்பை உண்டாக்கி விட்டது 80தை அழகாக உணர்த்தி விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எல்லோரும் இந்தத் தொ(ல்)லைக்காட்சியிலே மூழ்கிடறாங்க! :(

      Delete
  2. தேவி வைஷ்ணவியை மட்டும் வணங்கிச் செல்கிறேன். சுண்டல் வேண்டாம். சுரேஷ் கோச்சுக்கறார்!! :)))))

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நீங்க கேட்டிருந்தால் கூடக் கிடைச்சிருக்காது. நேத்திக்கு நல்ல கூட்டம்! சுண்டல் கலெக்‌ஷனும் ஆச்சு! போணியும் ஆச்சு! :)

      Delete
  3. Red color pathi ellam sonnathukku thanks, all new to me. Idhu varai goou vechadhilla. Sahana konjam valandhadhum seyya aasai irukku. If u cud compile all this in an ebook, including all rules for golu, it wud be very useful 4 beginners like us. Thank u maami

    ReplyDelete
    Replies
    1. ஏடிஎம், ஏற்கெனவே மின்னூலாகப் போடும் எண்ணம் இருக்கு. நவராத்திரி குறித்துக் கடந்த பத்து வருடங்களாக நிறைய எழுதி இருப்பதால் அனைத்தையும் ஒன்று சேர்த்துத் தொகுக்க வேண்டும். எப்படியும் அடுத்த நவராத்திரிக்குள் மின்னூலாகப் போட்டுடறேன். யோசனைக்கு நன்னி ஹை!

      Delete