எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 11, 2018

காவிரியில் மேலும் நீர் வரத்து!

காவிரியில் நீர் வரத்து இன்னமும் அதிகரித்திருக்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் அடைமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. உபரி நீர் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். அவங்க கொடுக்க வேண்டிய டிஎம்சி அளவுக்கு மேல் தண்ணீர் இந்த வருஷம் வந்திருக்கு போல! கர்நாடக முதல்வர் அடுத்த வருஷத்துக்கும் சேர்த்து இந்த வருஷமே தண்ணீர் கொடுத்துவிட்டதாய்ச் சொல்லிவிட்டார். நாளைக்கும் சேர்த்து இன்றைக்கே சாப்பிடுவார் போல! எனக்கெல்லாம் அடுத்த வேளைக்குச் சேர்த்துக் கூடச் சாப்பிட முடியாத வயிறு! என்னத்தைச் சொல்றது! ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் இது இல்லை.காவிரியில் நீர் வரத்து என்றதும் எல்லோரும் உடனே உபரிநீர் கொள்ளிடம் வழியாக சமுத்திரத்தில் போய்க் கலக்கும்! தேக்கி வைக்க முடியாது! தமிழ்நாட்டில் மேட்டூருக்குப் பின்னர் அணைகளே கட்டவில்லை என்பார்கள். என்று சொல்லிக் கொண்டும் இருக்கின்றார்கள். ஈரோடு தாண்டிக் கிழக்கே வந்தால் முழுக்க முழுக்க சமவெளிப்பகுதியான தமிழகம்! அதுவும் திருச்சியிலிருந்து ஆரம்பித்துக் காவிரியின் கடைமடை வரை சமவெளி தான். அந்தக் காலத்தில் காவிரியில் கல்லணை என்னும் பெயரில் கரிகாலன் கட்டியது கூட அணைக்கட்டு இல்லை. கல்லணையை இன்று வரை பார்க்காதவர்கள் அதை அணைக்கட்டு என நினைத்துக் கொண்டால் அந்த நினைப்பைத் தவிருங்கள். அந்தக் காலத்திலேயே கரிகாலன் அங்கே அணை கட்ட முடியாது என்பதைப் புரிந்து கொண்டே காவிரியின் உபரி நீரைக் கொள்ளிடத்துக்கும் காவிரியின் நீரை மற்ற உபநதிகளுக்கும் பிரிந்து செல்லும்படியான ஒரு ரெகுலேட்டரைத் தான் கல்லும், களிமண்ணையும் சேர்த்துக் கட்டி இருக்கிறான்.

மணலிலேயே அடித்தளம் அமைத்து சாதாரண காலங்களில் ஆழமாகவும், வேகமாகவும் ஓடும் காவிரி நீர் வெள்ள காலங்களில்  பாதுகாப்பாகக் கல்லணையில் இருந்து கொள்ளிடத்துக்குத் திருப்பி (இது இந்தப் பகுதியில் உள்ளாறு என அழைக்கப்படும்.) பின்னர் கடலில் கொண்டு சேர்ப்பதே இந்த அணையின் முக்கிய வேலை! இதை வெகு திறமையாக விநோதமான வடிவில் வண்டல் மண் அடியில் படிந்து விடாமல் வெள்ளத்தோடு அடித்துக் கொண்டு செல்லும்படி கட்டி இருப்பது அந்தக் கால கட்டத்தின் பொறியியல் திறமைக்கு ஒரு சான்றாகும். பாறைகளுக்கு மேல் பாறைகளை மணல் அடித்தளத்தில் வைத்து இரு பாறைகளையும் ஒட்டும் சக்தி இருக்கும் ஒருவிதக் களிமண்ணால் ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் இந்த அணை சமவெளிப்பகுதியில் தான் இருக்கிறது. உபரி நீர் இம்மாதிரி முறைகளினால் கொள்ளிடம் போகவில்லை எனில் தஞ்சை ஜில்லா முழுவதும் பாசன நிலங்கள் வெள்ளத்தில் முழுகிவிடும்.  வெள்ளம் வந்து நீரெல்லாம் வீணாகிவிட்டால் அடுத்து வறட்சி தானே! இவற்றை எல்லாம் தடுக்கத் தான் உபரி நீர் கொள்ளிடம் செல்கிறது.

அதோடு இல்லை கடலில் காவிரி நீர் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள காவிரி நீரால் சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதோடு, நீரின் தன்மையும் மாறாமல் இருக்கும். காவிரி நீர் மட்டுமல்ல, எந்த நதியாக இருந்தாலும் முகத்துவாரத்தில் உள்ள நீர் கடலில்கலக்கவில்லை எனில் சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர் பயனற்றதாகி விடும். கடல் நீர் உட்புகுந்து நீர் உப்பு நீராகும். அதோடு இல்லாமல் பாசன வசதிகளுக்கான  நிலத்தடி நீர் வளம் இல்லாமல் போவதால் நீர் வளம் குன்றி பாசன வசதிகள் இல்லாமல் நிலங்கள் பாலைவனமாகிவிடும்.  ஆகவே உபரி வெள்ள நீர் கடலுக்குப் போகத் தான் வேண்டும்.

அதோடு கூட இன்னும் சிலர் தமிழகத்தில் அணைகளே இல்லை என்கின்றனர். அணைகளைச் சமவெளிப் பிரதேசத்தில் எப்படி அமைப்பது? சாத்தியமே இல்லாத ஒன்று. மேட்டூர் உயரத்தில் அமைந்திருப்பதால் அங்கே அணை கட்டுவது சாத்தியமானது. அதை விட்டால் காவிரி பாயும் தமிழகப் பகுதிகள் சமவெளியிலேயே அமைந்திருப்பதால் அங்கெல்லாம் அணைகள் கட்ட முடியாது. தடுப்பணைகள் கட்டிக் குடிநீருக்கான நீரைச் சேமிக்கலாம்.  அதற்கு மேல் முடியாது! ஆகவே உபரி நீர் கடலில் கலக்கிறது என்பதையோ, அணைகள் கட்டவே இல்லை என்பதையோ பற்றிப் புலம்பாமல் இருக்கும் நீரைச் சிக்கனமாகச் செலவு செய்து காவிரிக் கரைகளை உயர்த்தி, காவிரியில் இருக்கும் பார்த்தீனியச் செடிகளை அகற்றி, நாணல் புதர்களை  அகற்றி, மணலை அள்ளாமல் காவிரியின் இதயத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்காமல் அவளை எந்நாளும் இதே அழகோடும், வேகத்தோடும், ஆர்ப்பரிப்போடும், சந்தோஷத்தோடும் ஓடுவதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்வோம். 

33 comments:

 1. சென்ற மாதம் பஸ்சில் செல்லும் போது வழிந்தோடும் காவிரியையும் கொள்ளிடத்தையும் பார்த்ததுதான். உங்கள் பதிவின் வழியே இப்போது நிறைந்த காவிரியை மீண்டும் பார்க்கும்போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது.

  யாருக்கும் பயன்படாமல் கடலில் சென்று வீணாகும் காவிரி நீரைப் பற்றிய ஆதங்கத்தை அருமையாகச் சொன்னீர்கள். தண்ணீர் இல்லாத காலங்களில் 'தண்ணீர் வேண்டும் ... தண்ணீர் வேண்டும்..'என்று குரல் எழுப்பபவர்கள் யாரும், கடலுக்குசென்று வீணாகும் காவிரி தண்ணீருக்கு குரல் கொடுப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா. காவிரியின் உபரி நீர் கடலுக்குச் சென்று தான் ஆகவேண்டும் என்பதே என் கருத்து! அதைச் சரியாகச் சொல்லவில்லையோ?

   Delete
  2. உங்கள் கருத்தை நீங்கள் சரியாகத்தான் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஆதங்கத்தையும் தங்கள் பதிவு தொட்டுச் சென்றதால் அவ்வாறு எழுதினேன்.

   Delete
  3. நன்றி ஐயா. சந்தேகம் வந்துடுச்சு! :)

   Delete
 2. அழகாக சொல்லியிருக்கிறீர்கள். டிவிட்டரில் அணை கட்டாத ஆதங்கங்களை நானும் படித்தேன். சரியான பதில்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மிகிமா, ஃபேஸ்புக்கில் இன்றும் கூடச் சிலர் சொல்லி இருக்காங்க. இந்தப் பதிவின் சுட்டி கொடுத்திருக்கேன். பார்ப்பாங்களானு தெரியாது! :))))

   Delete
 3. கர்நாடக முதல்வர் நிஜமாகவே அப்படிச் சொல்லியிருக்கிறாரா என்ன! அவ்வளவு குழந்தையா அவர்!

  ReplyDelete
  Replies
  1. தொலைக்காட்சியிலும் அவர் சொன்னது செய்தியாக வந்திருக்கிறதே ஶ்ரீராம், பார்க்கலையா?

   Delete
  2. அடுத்த வருடம் வறட்சி வரும்போது, காவிரித் தண்ணீர் பகிர்வு பற்றிய பிரச்சனை வரும். அப்போது நீதிமன்றத்தில், போன வருடம் கொடுக்கவேண்டியதைவிட அதிகமாகக் கொடுத்தோம், தண்ணீர் இருந்தால் கொடுப்போம் என்ற பஜனை பாடுவார்கள். 'தண்ணீர் பகிர்வு' என்பதுதான் உரிமையே அன்றி, இவ்வளவு தண்ணீர் கொடுக்கணும் என்பது உரிமையல்ல. 100 லிட்டர் தண்ணீரில், 40 லிட்டர் தமிழகத்துக்கு என்பதுபோன்ற பகிர்வுதான் நடக்கணும். (இந்த வாதம், நான் பெங்களூருக்குச் சென்றால் மாற்றிவிடுவேன். முதலின் எங்களுக்குத் தண்ணீர் வேண்டும் பிறகுதான் தமிழகத்துக்கு. ஹா ஹா ஹா)

   Delete
  3. நெ.த. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் இந்தக் காரணத்துக்காகவே பெண்களூரில் பத்து லட்சத்துக்கு வந்த அருமையான வீட்டை வேண்டாம் என நிராகரித்தேன். சர்சிவி.ராமன் நகரில்! வாங்கி இருந்தால் இருபது வருடம் ஆகி இருக்கும். நானும் ஒருவேளை பெண்களூர் வாசியாகி இருப்பேன். உங்களைப் போல் பச்சை, சிவப்பு.மஞ்சள் கலர் துரோகியாக ஆகி இருப்பேன்! :)))))))

   Delete
 4. மொட்டை மாடியிலிருந்தே படங்கள் எடுக்காமல் வேறு இடங்களிலிருந்தும் எடுத்துக் போடலாமே..

  ReplyDelete
  Replies
  1. இந்தப் படங்கள் இன்னிக்கு எடுக்கலை. முன்னரே எடுத்துப் பகிராமல் விட்டவற்றில் சில. வேறு இடங்களில் இருந்து எடுப்பது எனில் ஒரு கிலோமீட்டராவது போகணும்! யார் கூட்டிண்டு போவாங்க? :) கிழக்கே ஒரு கிமீ போனால் பாலத்தில் இருந்து எடுக்கலாம். மேற்கே போனால் காவிரி திரும்பும் அழகை ரசித்துப் படம் எடுக்கலாம்! ஆசை இருக்கு தாசில் பண்ண! :)))))

   Delete
 5. காவிரியைப்பற்றி நிறைய தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. திருச்சி தஞ்சை சாலையில் அநேக இடங்கள் குளம் என்னும் பெயரில் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. நாங்க கல்லணை வழி செல்வதால் தஞ்சைச் சாலைக்குப் போக அவசியம் நேரவில்லை ஐயா!

   Delete
 7. தண்ணீரைச் சேமிக்க நீங்கள் சொல்லி இருக்கும் வழிகளைப் பின்பற்றினால் நன்றாக
  இருக்கும். அடுத்தாற்போல் காவிரியில் வெள்ளம் தில்லை நகரில் புகுந்தது என்று செய்தி வராமல் இருக்கணும். இவர்கள் கட்டிவிட்டுப் பிறகு குறை சொல்வார்கள்.
  //காவிரியின் இதயம் புண்படாமல்// இந்த வரிகள் சோகத்தைக் காட்டுகின்றன.
  நல்லதொரு பதிவு கீதா மா.

  ReplyDelete
  Replies
  1. எழுபதுகளிலோ அல்லது எண்பதுகளிலோ வெள்ளம் இப்போ நாங்க இருக்கும் குடியிருப்புப் பகுதி வரை வந்ததாய்ச் சொல்வார்கள். ஆனால் அங்கே இந்தக் குடியிருப்பு அப்போ இல்லை. தோட்டமாக இருந்திருக்கிறது. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ரேவதி!

   Delete
 8. do you really need help to walk just one km?

  ReplyDelete
  Replies
  1. வாங்க முகம் தெரியாதவரே! நெ.த. அல்லது ஜேகே அண்ணா? ஒரு கிலோ மீட்டர் முழுசும் நடப்பது என்பது இப்போ எனக்குக் கொஞ்சம் சிரமம் தான்! என்றாலும் நடக்கிறேன். ஆனால் இந்தச் சாலை முக்கியச் சாலை ஏற்கெனவே. இதிலே திருவானைக்கா போகும் நெடுஞ்சாலையில் பாலம் கட்டுவதால் எல்லாப் பேருந்துகளும் இந்தச் சாலை வழி தான் செல்ல வேண்டும். ஆகவே போக்குவரத்து அதிகம். எங்க குடியிருப்பு இருக்கும் பகுதியில் காவிரி வளைவதால் சாலையும் வளைந்து செல்லும். அந்த இடத்தில் எதிரே இருந்தும் பின்னால் இருந்தும் பக்கவாட்டில் இருந்தும் வரும் வண்டிகளின் மேல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் கவனிச்சுப் பார்த்துத் துணையோடு போவதே நல்லது! வெறும் ஒரு கிலோ மீட்டருக்கு முடியலையா என்றால் ஆமாம் என்பதே பதில்! இது உடல்நிலையைப் பொறுத்தது!

   Delete
 9. when anyone complains about dams they mean check dams only. These will link excess river to various tanks through canals. Thus we can store more water and also increase the water table. TN does not do a good job of storing excess water. i agree that some water HAS to go to se to maintain the estuaries.

  ReplyDelete
  Replies
  1. யாரும் தடுப்பணைகள்னு குறிப்பிட்டு எல்லாம் சொல்லலை. காமராஜருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அணைகளே கட்டப்படவில்லை என்றே சொல்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான பதில் தான் இது. இருக்கும் நீரை சேமிக்கும்படி தான் என் வேண்டுகோளும் அமைந்துள்ளது.

   Delete
 10. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். உபரி நீர் கடலில் கலக்கத்தான் வேண்டும்.

  ஆனாலும், முடிந்த அளவு எல்லா இடங்களிலும் தடுப்பணை (கல்லணை போல்) கட்டி நீரைச் சேமிக்கலாம். அதைவிட முக்கியமான விஷயம், ஆற்றில் மணல் கொள்ளையடிக்காமல் இருந்தால், பாயும் தண்ணீர் பூமிக்குள்ளும் செல்லும்.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழரே, நாங்கள் சென்ற மாதம் காவிரியில் நீர் வரும் முன்னர் ஊர்ப்பக்கம் போவதற்குக் கல்லணை வழியாகப் பயணம் செய்தோம். காலை ஐந்தேகால் மணி கல்லணையைத் தாண்டும் போது! வழியெங்கும் இரு புறங்களிலும் கல்லணையில் மணல் வாருவதற்காக மாட்டுவண்டிகள் அணிவகுத்துச் செல்கின்றன. ஆற்றில் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் அணிவகுத்து நிற்கின்றன. இம்முறை பதினைந்து நாட்கள் முன்னர் சென்றபோது தான் அந்தக் காட்சியைக் காணவில்லை. இல்லை எனில் கல்லணை வழி சென்றாலே பேருந்துகளும், மாட்டு வண்டிகளும், சின்ன ஆனை எனச் சொல்லப்படும் ட்ரக்குகளும் அணி வகுத்து நிற்கும். போக்குவரத்தே கடினமாக இருக்கும்.

   Delete
 11. நானும் படிச்சேன்ப்பா. தமிழகத்தினுள் அணை கட்ட முடியாதுன்னுதான் எரி, குளம், குட்டைன்னு உண்டாக்கினாங்கன்னு..

  ReplyDelete
 12. உபரி வெள்ள நீர் கடலுக்குப் போகாவிட்டால், நிலைமை படுமோசமாகும்...

  மனிதனின் சுயநலத்திற்கு முன்...? என்னத்த சொல்ல...(!)

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி. ஆனாலும் மனிதனின் சுயநலத்திற்கு எல்லை இல்லாமல் தான் போகிறது! :(

   Delete
 13. வணக்கம் சகோதரி

  காவிரியின் நீர் நிலைகளைப் பற்றி மிக, மிக அழகாக விவரித்து உள்ளீர்கள். பல விஷயங்கள் விபரமாக புரிந்து கொண்டேன்.
  இயற்கையின் மாறுதலுக்கு முன் மனிதர்கள் எம்மாத்திரம்.. இந்த தடவை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை. இது அவளின் மன மகிழ்வு. இதுபோல், ஐந்தாறு வருடங்களுக்கு முன்பும் காவிரி அன்னை மிகவும் சந்தோஷ மெய்தினாள்.அவளின் மகிழ்வு எப்போது என நமக்கு தெரியாது. அவள் மனம் மகிழுபடி நாம் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும், அது ஒன்றுதான் நம் கடமை. ஆனாலும், அவள் சந்தோஷமடையாத போது எழும் விவாதங்கள், வேதனைகள் "உச்ச"த்திற்கு செல்லுகின்றன."தீர்ப்பு" என்றும் அவள் கைகளில் என்பதை யாரும் புரிந்து கொள்வதேயில்லை. அழகான, அருமையான பயனுள்ள கட்டுரை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கமலா ஹரிஹரன். நாங்க இங்கே ஶ்ரீரங்கம் வந்தப்புறமா இது இரண்டாம் முறை காவிரி நிறைந்திருப்பது! 2013 இல் ஒரு முறை அளவு கடந்த வெள்ளம் வந்து ஐந்து அடுக்குப் பாதுகாப்புப் போட்டார்கள். படம் எல்லாம் எடுக்க உள்ளேயே விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இப்போ அந்த அளவுக்கு இல்லைனாலும் பாதுகாப்பு எல்லாம் இருக்கு! அப்படியும் ஓர் கல்லூரி மாணவன் மேற்கே கீதாபுரம்பக்கம் குளிக்கப் போய் மூழ்கிவிட்டதாய் தினசரிகளில் வந்திருக்கு! :(

   Delete
 14. நல்ல பகிர்வு.

  தடுப்பணைகள் நல்ல வழி. மணல் கொள்ளை - சுரண்டி சுரண்டி பணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் சோகம்.

  ReplyDelete
 15. ஒரு கிராமத்தில் வண்டி வண்டியாக மண்ணை எடுத்து போகிறவர்களை மக்கள் சிறை பிடித்தார்கள்.

  மணல் தேவை அதிகமாகி கொண்டு இருக்கிறது கட்டுமான பணிகளுக்கு, தண்ணீரைப் பற்றி கவலை இல்லை அவர்களுக்கு பணம் ஒன்றே குறிக்கோள்.

  படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.

  ReplyDelete
 16. ஒரு கிராமத்தில் வண்டி வண்டியாக மண்ணை எடுத்து போகிறவர்களை மக்கள் சிறை பிடித்தார்கள்.

  மணல் தேவை அதிகமாகி கொண்டு இருக்கிறது கட்டுமான பணிகளுக்கு, தண்ணீரைப் பற்றி கவலை இல்லை அவர்களுக்கு பணம் ஒன்றே குறிக்கோள்.

  படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.

  ReplyDelete