இந்த வருடம் தென்மேற்குப் பருவ மழை போல் எந்த வருடமும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பதவி ஏற்றபின்னர் ரங்கநாதரைக் காண வந்த கர்நாடக முதலமைச்சர் திரு குமாரசாமி எந்த நேரம் அரங்கன் அருள் இருந்து இந்த வருடம் மழை பொழிந்தால் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் என்றாரோ தெரியவில்லை. கர்நாடகத்தில் நாங்க தண்ணீரே கொடுக்க மாட்டோம் என்றிருந்த நிலை போய் இப்போ எங்களுக்குத் தண்ணீரே வேண்டாம், போதும்னு சொல்றாப்போல் ஆயிடுத்து! காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இன்னமும் கனமழை பெய்து வருகிறது என்பதை இங்கே வீசி வீசி அடிக்கும் காற்றே உறுதிப் படுத்துகிறது. மேட்டூர் அணை நிரம்பி வழிந்து, காவிரியிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு அதுவும் போதாமல் தினம் ஒரு லட்சம் கன அடிகள் என லட்சக்கணக்கில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இங்கே அம்மா மண்டபம் படித்துறை மூடி விட்டார்கள். வடக்கே கொள்ளிடக்கரையிலும் மூடி விட்டதாகப் பால்காரர் சொன்னார். எங்கும் போலீஸ் பாதுகாப்பு! அம்மாமண்டபம் பக்கம் யாரையும் விடறதில்லை என்று சொல்கின்றனர்.
எதுக்கும் சாயங்காலம் மறுபடி அங்கே போய்ப் பார்க்க முடியுமா எனப் பார்க்கணும். நேற்று, இன்று திறக்கப்பட்டிருக்கும் நீர் இங்கே வந்து சேர நாளை வரை ஆகலாம். ஆகவே நாளைக்குப் போயாவது பார்க்கணும். அதற்குள்ளாகப் பலரும் இங்கே காய்கறி, பால்னு கிடைக்குதா, சமையல் செய்ய முடியுதா என்றெல்லாம் கேட்டிருக்கின்றனர். இங்கே ஒரு பிரச்னையும் இல்லை. இன்னிக்குப் போய்க் காய்கறி, விநாயகருக்கு அருகு, மல்லிகைப்பூ உதிரி எல்லாம் வாங்கிட்டு வந்தார். வடக்கே கொள்ளிடம் பாலம் நேற்றே மூடியாச்சு! நேற்றே மாலை அம்மா மண்டபம் படித்துறையும் மூடியாச்சு. ஆகவே அங்கே போய்ப் படம் எடுக்க முடியாது. காவிரிப்பாலம் போகணும்னா தனியாப் போக முடியாது! மொட்டைமாடியில் தான் சில படங்கள் எடுத்தேன். பார்த்தவரையில் சிந்தாமணிப் பகுதியில் நீர் உட்புகுந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால் யாரும் அது பற்றி எதுவும் சொல்லவில்லை. இங்கே சகஜமான வாழ்க்கைக்குப் பங்கம் ஏதும் ஏற்படவில்லை. கீழே நான் இன்னிக்கு வாங்கிய பூவைத் தொடுத்து வைச்சிருக்கேன் பாருங்க. எல்லாப்பொருட்களும் கிடைக்கின்றன. சகஜமாக மக்கள் நடமாடிக் கொண்டு இருக்கின்றனர்.
இன்று எடுத்த படங்கள். மொட்டைமாடியிலேயே எடுக்கறீங்க எனச் சொல்வதால் நான் அதிகம் பகிரவில்லை.
இன்னைக்குத் தொடுத்த மல்லிகைப் பூ. விலை ஜாஸ்தி. ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருப்பதால் வரத்துக் கம்மியாம். அதனால் விலை அதிகம். ஆனால் நல்ல பூவாக இருக்கிறது.
கொஞ்ச நாட்கள் முன்னர் ப்ரெட் சான்ட்விச் பத்திப் பேச்சு வந்தப்போ மானுவல் டோஸ்டர் பத்திச் சொல்லி இருந்தேன், பலரும் அப்படி இருப்பது தெரியும் என்பதாகச் சொல்லவில்லை. என்னிடம் இருக்கும் மானுவல் டோஸ்டர் படம் எடுத்துப் போட்டிருக்கேன். இது நான் ஸ்டிக் என்பதால் நான் அதிகம் (அநேகமாய்) பயன்படுத்துவதே இல்லை. இதற்கு முன்னர் இருந்தது இரும்பு! வெண்ணெய், அல்லது நெய்யை நன்கு தடவி விட்டு ப்ரெட் சான்ட்விச் செய்யலாம். ஒட்டாமல் வந்துடும். இதில் ஒட்டாது என்றாலும் அவ்வளவு பிடிக்கலை. அதோடு சீஸ் வைத்து சான்ட்விச் செய்தால் எந்த மானுவல் டோஸ்டராக இருந்தாலும் சரி, அல்லது எலக்ட்ரிக் டோஸ்டர் என்றாலும் சரி சீஸெல்லாம் வழிந்து விடும். ஆகவே சீஸ் சான்ட்விச் என்றால் நான் தோசைக்கல்லிலேயே செய்துடுவேன். சீஸ் போடலைனாத் தான் இதெல்லாம்.
ஆனால் கேரளாவில் வெள்ளத்தினால் பயங்கரமான சேதம்! வீடுகள் அப்படியே பிஸ்கட் நொறுங்குவது போல் விழுகின்றன. வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்த மக்கள் கதறும் ஒலி மனதைப் பிழிகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மதத் தலைவர்கள் பலரும் பல விதங்களில் சொல்லுகின்றனர். ஒருத்தர் இது சாத்தானின் வேலை என்கிறார். அப்படி எனில் கடவுளால் சாத்தானை அடக்க முடியாதா? பேத்தலாக இருக்கிறது. இன்னொருத்தர் ஐயப்பனின் சபரிமலைக்குப் பெண்கள் வரலாம் என உச்சநீதிமன்றம் சொன்னதால் ஐயப்பன் கோபம் கொண்டு யாருமே வரவேண்டாம் என் இடத்துக்கு என்று சொல்லிவிட்டதாய்ச் சொல்கிறார். சபரிமலைக்கு மட்டும் இப்படி நடந்திருந்தால் ஓரளவுக்கு ஏத்துக்கலாமோ என்னமோ! ஆனால் இதற்காக ஐயப்பன் ஒட்டுமொத்தக் கேரள மக்களைப் பழிவாங்க அவர் என்ன சீரியலிலா நடிக்கிறார்! ரொம்ப மோசமாக இருக்கிறது. இன்னொருத்தர் சிவன் மலையில் வில்லையும் அம்பையும் வைத்துப் பூஜிக்கவேண்டிப் பிரச்னம் வந்ததாகவும் அது கேரளம் முன்னாட்களில் சேர நாடு என இருந்ததால் வில்லும் அம்பும் உள்ள கொடி அவர்கள் கொடி என்பதால் இப்படி வந்திருப்பதாய்ச் சொல்கின்றனர். ஒரு வாதத்துக்காக இதைச் சரி என எடுத்துக் கொண்டால் கூட வில்லையும், அம்பையும் வழிபாடு தானே செய்கின்றனர். அப்போக் கடவுள் இப்படிப்பழி வாங்குவாரா என்ன? சாமானிய மக்களுக்கு உள்ள குணங்களை எல்லாம் கடவுள் மேல் ஏற்றிச் சொல்லலாமா? இயற்கைக்கு மாறாக நாம் நடந்து கொள்வதால் மழையும் இயற்கைக்கு மாறாகப் பெய்கிறது!
காட்டை அழித்து வனவிலங்குகளின் வாழ்விடத்தை அழித்து என எல்லா அக்கிரமங்களையும் செய்தால்! என்ன சொல்ல! ஆனால் இத்தனை களேபரங்களிலும் கேரள மக்கள், மத்திய, மாநில அரசைப் பழித்துப் பேசவில்லை. என்னை வந்து காப்பாற்றவில்லை. அங்கே வரலை, இங்கே வரலை என்ற புகார்கள் இல்லை. வந்திருக்கும் ஆபத்தை திடமனதோடு எதிர்கொள்கின்றனர். காப்பாற்றி அழைத்துச் செல்ல வந்திருப்பவர்களிடம் எவ்விதமான கத்தலும் கூப்பாடும் இல்லாமல் அமைதியாக ஒத்துழைக்கின்றனர். இது நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம். எதிர்க்கட்சிகளும் இந்த நேரத்தில் எதிரிக்கட்சியாக இல்லாமல் ஒத்துழைக்கின்றன என்பதும் கேரள அரசுக்கு மிகப் பெரிய பலம். கேரள முதல்வரும் மத்திய அரசின் நிதி உதவி பத்தாது என்றே சொல்லி இருக்கிறார். மற்றபடி மத்திய அரசு கேரளத்தை வஞ்சித்துவிட்டது. மலையாளம் பேசும் மக்களை அலட்சியம் செய்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கிறது என்றெல்லாம் சொல்லவில்லை. அங்குள்ள அரசியல் தலைவர்கள் அனைவருமே வந்திருக்கும் ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்றே கலந்து ஆலோசிக்கின்றனர். மத்திய அரசை எப்படித் தாக்கலாம் என்று அல்ல!
எங்கும் வெள்ளம்.,... என்ன சொல்ல. கேரளம் - வேதனை.
ReplyDeleteவாங்க வெங்கட், கேரள நிலையும் குடகு நிலையும் வயிற்றைக் கலக்குது.
Deleteகேரள நண்பர் துளசிதரன் நலமாக இருக்கிறாரா அவர் வாழும் இடம் நிலாம்பூர் வெள்ள்த்தால் பாதிக்கப்பட்ட ஒன்றுஎன நினைக்கிறேன்
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா, துளசிதரன் நலமாக இருப்பதாக அவரின் வலைப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
Delete>>> இதற்காக ஐயப்பன் ஒட்டுமொத்தக் கேரள மக்களைப் பழிவாங்க அவர் என்ன சீரியலிலா நடிக்கிறார்!..<<<
ReplyDeleteஐயப்பன் நடிக்கவில்லை...
இங்குள்ள மனிதர்கள் தான் ஐயப்பனின் முன் நடித்துக் கொண்டிருக்கின்றனர்...
@Durai Selvaraj, மனிதர்கள் இயற்கைக்கு மாறாக நடந்து கொண்டதன் விளைவே இது. இதில் இறைவன் எங்கிருந்து வந்தான்? மண்ணைத் தாங்கி நின்ற பல மரங்களையும் வெட்டி விட்டு மலைநாட்டைச் சமவெளியாக்கியதன் விளைவு இது. பணப் பயிர்களாக ஏலக்காய் எஸ்டேட், டீ எஸ்டேட், காஃபி எஸ்டேட் என மலைவளத்தை அழித்ததன் விளவு. மண்ணின் தன்மை மாறிப்போய் இப்போது வீடுகளைத் தாங்கும் பலம் இல்லாமல் மண் சரிவு ஏற்படுகிறது. இதை உணர்ந்தால் போதும். தன்னைத் தானே தண்டித்துக் கொண்டு கடவுளைக் குறை சொல்ல மாட்டார்கள். மக்கள் தங்கள் தவறை உணராமல் அடுத்தவர் மேல் பழியைப் போடுவதிலேயே நாட்டம் செலுத்துகின்றனர். :( என்ன செய்வது!
Delete>>> எதிர்க்கட்சிகளும் இந்த நேரத்தில் எதிரிக்கட்சியாக இல்லாமல் ஒத்துழைக்கின்றன என்பதும் கேரள அரசுக்கு மிகப் பெரிய பலம்..<<<
ReplyDeleteஉண்மை.. நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது...
சென்னை தத்தளிச்சப்ப தான் நம்ம ஆளுங்களோட அடாவடிகளப் பார்த்தோமே!...
ஆமாம், துரை , மக்கள் அங்கே ஒத்துழைப்புக் கொடுக்கின்றனர். அதே போல் அங்குள்ள ஊடகங்களும் மக்களிடம் சொல்லிக் கொடுத்து பேசச் சொல்லுவதில்லை.
Deleteகுடிக்கத் தண்ணீர் வேண்டும் என்பதை "வெள்ளம் வேணும்" என்றே சொல்வார்கள். இங்கு வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்களைக் காட்டிலும் நிலச்சரிவில் வீடு இடிந்து இறந்தவர்களே அதிகம்.
ReplyDeleteநிலச்சரிவு எங்கே எப்போது ஏற்ப்படும் என்று சொல்ல முடியாது.
வாங்க ஜேகே அண்ணா, நிலச்சரிவுக்குக் காரணமே மண்ணின் வளத்தைத் தாங்கி நின்ற பெரிய பெரிய மரங்களை வெட்டிச் சாய்த்து அங்கே தேயிலையும், காஃபியும், ஏலமும் பயிரிட்ட ஆங்கிலேயரும் அதைத் தொடர்ந்த நம்மவரும் தான் காரணம். :( அதற்கு முன்னர் ஏலம் பயிரிடாமல் இருந்ததா? ஏற்றுமதி ஆகாமல் இருந்ததா? அப்போதெல்லாம் இம்மாதிரிப் பெரிய அளவில் நிலம் சரிந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் ஏதும் இல்லை.
Deleteகேரள அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மக்களும் அரசியல் தெளிவு பெற்றவர்கள் இதையும், அரசியலையும் இணைத்துப்பேசி அரசியல் ஆதாயம் காண்பதற்கு அவர்கள் தமிழர்கள் அல்ல!
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, தமிழர்கள் தான் தனித்தன்மை வாய்ந்தவர்கள் ஆயிற்றே!
Deleteவிதவிதமான மூடநம்பிக்கைகள்... என்று தீருமோ...?
ReplyDeleteஆமாம், டிடி. மூடநம்பிக்கைகள் அதிகம் தான்!
Deleteமேனுவல் பிரெட் டோஸ்டர் என்கிட்ட முன்ன இருந்துச்சு...
ReplyDeleteநலமாய் இருப்பது மனதுக்கு நிறைவாய் இருக்கு. துளசியண்ணா, கீதாக்க நிலைதான் தெரில
வாங்க ராஜி, துளசிதரன் நலமாக இருப்பதாக அவர் வலைப்பக்கம் தெரிவித்திருக்கார். தி.கீதாவுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். அவங்க நலம். ஒரு சில முக்கியமான வேலைகளில் மும்முரமாக இருப்பதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் வரமுடியும் என்றும் சொன்னார்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகாவரியாற்றின் அருகில் இருப்பதால் தங்கள் குடியிருப்புகெல்லாம் ஏதும் பிரச்சனை இல்லாமல், இருக்கிறதா?
பாலம் முட்ட நீர் நிறைந்திருப்பதை தங்கள் புகைப்படங்களில் பார்க்கும் போது வெள்ளத்தின் நிலைமை புரிகிறது. அங்கெல்லாம் நீர் நிலைகள் நிரம்புவதாக திருச்சி,ஸ்ரீரங்கம் பக்கம் இருக்கும் உறவுக்கள் கூறினார்கள். அதனால்தான் கேட்கிறேன்.
. /அங்குள்ள அரசியல் தலைவர்கள் அனைவருமே வந்திருக்கும் ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்றே கலந்து ஆலோசிக்கின்றனர்./
நிலைமையை தெளிவாக எழுதியிருக் கிறீர்கள்.மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தில், கேரள மக்களின் நிலைமையை நினைத்தால் வருத்தம் மேலிடுகிறது. அவர்களுக்காக நாமும் பிரார்த்திப்போம்.
நிலைமை சீரடைய இயற்கையை வேண்டுவோம். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஶ்ரீரங்கம் நகருக்குள் பிரச்னை ஏதும் இல்லை கமலா. எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன. ஒண்ணும் பிரச்னை இல்லை.
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... காலைல இருந்து வாட்சப்ல எ.பி குரூப் நீங்க நலமான்னு கேட்டா கி.போ.க மாதிரி இருக்கவேண்டியது. அப்புறம் பதிவு வெளியிடவேண்டியது. பா.வெ அம்மா மண்டபமே தண்ணிக்குள்ள என்பதுபோல் எழுதியிருந்தாங்க. நீங்கவேற, எங்க வீட்டுலேர்ந்து எட்டிப் பார்த்தா அம்மா மண்டபம் என்று ரெண்டு இடுகைக்கு ஒருதடவை சொல்லிக்கிட்டே இருப்பீங்க. நிலைமையை அவ்வப்போது மாடிக்குப் போய் பார்த்துக்கொள்ளுங்கள். ஹா ஹா.
ReplyDeleteநெ.த. எ.பி வாட்சப் குழுவில் நேற்றே நான் நலம் எனத் தெரிவித்து அதற்கு பதில்களும் வந்தன. பானுமதி சொல்லி இருப்பது இங்கிருந்து கொஞ்சம் மேற்கே கீதாபுரம் என்னும் காலனி. அங்கே படம் எடுக்க வசதியாக இருக்கும். நான் இதுக்குனு கிளம்பிப் போய்ப் படம் எடுக்கணும். :)
Deleteஅம்மாமண்டபமெல்லாம் முழுகலை. ஆனாலும் அங்கிருந்த கடைகள், வைதிகர்கள் ஆகியோர் வெளியேற்றப்பட்டுவிட்டனர், மேல் படியைத் தொட்டுக் கொண்டு வெள்ளம் போவதாகச் செய்தி. யாரையும் அருகில் நெருங்க விடவில்லை. அங்கே போகனு கிளம்பினால் போகாதே என அனைவரும் தடுக்கின்றனர். மற்றபடி ஶ்ரீரங்கம் தெருக்களோ வீடுகளோ வெள்ளத்தில் எல்லாம் மிதக்கலை. நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும் எங்க குடியிருப்பு வளாகத்தில் இருந்து அம்மாமண்டபம் கூப்பிடு தூரம் தான். வளாகத்தின் வாசலில் இருந்தும் பார்க்கலாம். மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்தும் பார்க்கலாம். மொட்டைமாடியில் இருந்து தான் வெள்ள நிலவரங்கள் தெரிந்து கொள்கிறேன். :)
Deleteஎப்போதும்போல, காவிரி வெள்ளம், சாண்ட்விச் மேக்கர், கேரளா வெள்ளம் என்று கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க. ஒண்ணை எழுதும்போதே ஏன் உங்கள் எண்ணம் அலை பாய்கிறது?
ReplyDeleteவாய்ப்பு கிடைச்சா உருளை, சேம்பு போன்ற கிழங்குகள் ஸ்டாக் வச்சுக்கோங்க (அப்பளாம் போன்றவையும்தான்). பாலத்தில் போக்குவரத்து தடை பட்டால் முக்கிய பொருட்கள் கிடைப்பது பாதிக்கும்.
அவ்வப்போது நா.இ.ந.கு என்று எ.பி வாட்சப்பில் தலையைக் காட்டிட்டுப் போங்க.
எண்ணங்கள் அலையும் பாயலை, ஒண்ணும் இல்லை. அதைத் தனியாக் கொடுத்திருந்தேன் ஹைலைட் செய்து, பப்ளிஷ் செய்கையில் அது என்னமோ வரலை. 2,3 தரம் மறுபடி மறுபடி சரி செய்து பார்த்தும் சரியாகலை. விட்டுட்டேன். :)))) கிழங்கு வகைகள் எதுவும் நாங்க அதிகம் சாப்பிடுவதில்லை. உ.கி. மட்டும் சப்பாத்திக்கு சப்ஜி செய்கையில் ஒன்றோ இரண்டோ போடுவேன். அது எப்போதும் கைவசம் இருக்கும். இப்போதைக்கு இங்கே எல்லாக் காய்களும் கிடைக்கின்றன. இது என்ன சென்னையா? பதுக்கி வைக்க? வாட்சப்பில் வந்துட்டுத் தான் இருக்கேன். நீங்க தூங்கிட்டுப் பார்க்காமல்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteகேரளா நம்பர் ஒன். இரண்டாவது கர்நாடகா. பொது விஷயங்கள்ல ஒண்ணு சேர்ந்துடுவாங்க.
ReplyDeleteநம்ம ஊர்ல இருக்கற அரசியல்வாதிகள் அ.பதர்கள். இவங்கள்லாம், 800 வருஷத்துக்கு முன்னால இருந்த பாண்டிய வம்சம். உடன் பிறந்தவனைக் கொல்ல வெளி மாநிலத்தை நாடுபவர்கள்.
பாண்டியர்கள் பத்திச் சொல்றீங்களேனு வருத்தமா இருந்தாலும் உண்மை அது தான். பார்க்கப் போனால் பாண்டியர்கள் தான் தமிழ்நாட்டின் மூத்த தமிழ் அரசப் பரம்பரையினர். சோழர்களோ, பல்லவர்களோ அல்ல. சரித்திர ஆசிரியர்கள் யாரும் பாண்டியர்கள் பற்றி அதிகம் ஆய்வு செய்யறதில்லை என்னும் வருத்தம் எனக்கு உண்டு. சின்னமனூர் செப்பேடுகள் மட்டும் ஓரளவுக்குப் பாண்டியர்கள் பத்திச் சொல்லும். தமிழர்கள் மாற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சுயநலம் தவிர்த்துப் பொதுநலம் குறித்தும் சிந்திக்கணும். :(
Delete//ஐயப்பன் கோபம் கொண்டு யாருமே // - இதெல்லாம் அதீத கற்பனைகள். தவறு செய்பவர்கள் எல்லாரும் மனிதர்கள். தங்களுக்கு ஏற்றபடி வாதம் செய்யறாங்க. இவங்க தவறு செய்துவிட்டு (அதாவது நீர் நிலை அருகிலேயே ஆக்கிரமிப்பு செய்துவிட்டு) அப்புறம் கடவுள் கொடுக்கிற தண்டனை என்று சொல்றாங்க (ஆனா இப்போ உள்ள வெள்ளம், அதீத மழை, அபூர்வம்தான். அதற்காக தயார் நிலையில் இருக்கமுடியாது. சென்னையில் நடந்ததைவிட 6 மடங்கு அதிகமாம்.. பாவம்)
ReplyDeleteஆமாம், எதிர்பாராமல் நடந்தவற்றுக்கு யாரும் பொறுப்பாக முடியாது. ஆனால் மலைவளங்கள் அழிக்கப்பட்டதும் முக்கியக் காரணம்.
Deleteமழை இல்லை என்றாலும் அழுகிறார்கள், பெய்தாலும் அழுகிறார்கள்:) இது என்ன சாபமோ..
ReplyDeleteராஜ ராஜ சோளன் சிலையை திரும்ப வைத்தமையாலேதான் ஆறெல்லாம் அருவியா ஓடுது எனவும் சொல்கிறார்களே இது உண்மையா கீசாக்கா?
அதிரடி, அதெல்லாம் சும்மா! இந்தவிதமான மூட நம்பிக்கைகளால் தான் கடவுளிடம் உள்ள உண்மையான நம்பிக்கையே ஆட்டம் காண்கிறது. கடவுள் நமக்கு தண்டனை எல்லாம் கொடுக்க மாட்டார். இது நமக்கு நாமே செய்து கொண்டது என்பதைப் புரிஞ்சுக்கணும்.
Deleteமொட்டை மாடியில் இருந்து எடுத்த படங்கள் அழகு... ஆறைப் பார்த்தாலே மனம் அமைதி பெறும்.
ReplyDeleteமொட்டுமாலை நீங்களோ கட்டினீங்க?
அதிரடி, ஆம், இது நான் தொடுத்தது தான். அநேகமாய் உதிரிப்பூக்கள் வாங்கித் தான் தொடுப்பேன். எப்போவானும் தான் பூக்காரர்களிடம் வாங்குவது. முன்னெல்லாம் தினம் தினம் பூக்கடை போய்ப் பூ வாங்கி வருவார். இப்போப் போக முடியறதில்லை. என்றாலும் வாரம் நான்கு நாட்கள் உதிரிப்பூ வாங்கிடுவோம். விசேஷ நாட்களில் பச்சை, மரு, மருக்கொழுந்து,அரளி, விருட்சி,ஜவந்தி போன்ற பூக்கள் வாங்கிக் கதம்பமும் கட்டிடுவேன்.
Deleteஇப்போத் தான் முகநூலில் படிச்சேன். கேரளத்தின் தற்போதைய நிலைமைக்குத் தமிழ்நாட்டுக்கும் பயன்படும் முல்லைப்பெரியாறு அணை தான் காரணம் எனச் சொல்கின்றனராம். பூகோளமே தெரியாதவங்க சொல்லுவது இது முல்லைப்பெரியாறு அணை மேலே உள்ளது. இடுக்கி அணை கீழே உள்ளது. இடுக்கி அணை முல்லைப்பெரியாறு அணையை விடப் பல மடங்கு கொள்ளளவு கொண்டது. கொஞ்சமும் யோசிக்காமல் அதைத் திறந்து விட்டது தான் காரணம் கேரள நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இது பற்றிப் பின்னர்!
ReplyDeleteமொட்டை மாடியிலேயே எடுக்கறீங்க என்று சொன்னதால்....
ReplyDeleteஇன்றைய நிலையில் அதுதான் நல்லது.
தடுப்பணை மூடிக் கொண்டு நீர் வழிகிறது! :(
Deleteநானும் இந்த டோஸ்டர்தான் வைத்திருந்தேன். உடைந்து விட்டது. மேலும் இங்கு சாண்ட்விச் அதிகம் செய்யப்படுவதும் இல்லை
ReplyDeleteஶ்ரீராம், நாங்களும் எப்போவாவது தான் சான்ட்விச் பண்ணுவோம். வெண்ணெய் என்னமோ இருந்துட்டே இருக்கும். வீட்டில் எடுப்பது தானே! ஆனால் காலை கஞ்சி என மாறிய பின்னர் ப்ரெட் வாங்குவது எப்போதாவது தான். இம்முறை சீஸ் சான்ட்விச் பண்ணணும்னே வாங்கினேன்.
Deleteவீடு ஒன்று மைசூர் பாகு துண்டம் போல விழுந்து மிதப்பது குடகு ஏரியாவில். எனக்கு வாட்ஸாப்பில் கேரளாவில் என்று சொல்லி வந்தது. நேற்று செய்திகளில் அதை குடகு பகுதி என்றார்கள்
ReplyDeleteபல வீடுகள் கேரளாவில் விழுந்ததைக் காட்டிக் கொண்டே இருக்காங்களே ஶ்ரீராம், அதை எல்லாம் பார்க்கலையா? நேற்று ஒருத்தர் குடகு பகுதியை லைவாக வீடியோவில் காட்டி இருந்தார். முகநூலிலும் வந்தது.
Delete//ஆனால் இதற்காக ஐயப்பன் ஒட்டுமொத்தக் கேரள மக்களைப் பழிவாங்க அவர் என்ன சீரியலிலா நடிக்கிறார்! //
ReplyDeleteநானும் இதையேதான் சொன்னேன். அரசியல் தலைவரா அவர் என்று கேட்டேன்!
ஶ்ரீராம், ஆமாம், நம் கடவுளரை நாமே எவ்வளவு கீழ்த்தரமாகக் காட்டுகிறோம் என்பதை அறியாமல் பேசுகின்றனர். :(
Delete//ஆனால் இத்தனை களேபரங்களிலும் கேரள மக்கள், மத்திய, மாநில அரசைப் பழித்துப் பேசவில்லை.//
ReplyDeleteஆனால் மற்றவர்கள் முகநூலில் அதைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஶ்ரீராம், இன்று தான் நண்பர் ஒருவரின் முகநூல் பதிவில் பார்த்தேன். தமிழ்நாடு முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் அவரைக் கேவலமாக மலையாள சகோதர, சகோதரிகள் திட்டி இருப்பதாகவும் கேரள வெள்ளத்திற்கு அவரே பொறுப்பு என்று சொல்லி இருப்பதாயும் பார்த்தேன். ஆக மொத்தம் மக்கள் மாற மாட்டார்கள். கேரள மக்கள் மீது கொண்டிருந்த நல்ல அபிப்பிராயம் இப்போது மாறி விட்டது! :(
Deleteகேரள வெள்ளம் தொடர்பான செய்தியைப் படிக்கும்போதும், படங்களைப் பார்க்கும்போதும் மிகவும் வேதனையாக உள்ளது. கேரளா இயல்பான நிலைக்குத் திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteஆம், முனைவர் ஐயா, அவங்க எப்படி இருந்தாலும் நம்மால் ஆன உதவிகளைச் செய்து அவர்களை இந்தத் துன்பத்திலிருந்து மீட்போம்.
Deleteதில்லையகத்து துளசீதரன் பற்றி ஏதாவது விஷயம் அறிந்தீர்களா? காணவில்லை.மலம்புழா அணை திறப்பினால் வெள்ளம்.
ReplyDeleteஜேகே அண்ணா, இன்னிக்குத் தகவல் தெரியலை! தி/கீதாவிடம் தான் கேட்கணும். இன்னிக்கு ஃபேஸ்புக்கிலும் துளசிதரன் ஏதும் பகிரவில்லை. :(
Deleteதுளசிதரன் அவர்கள் நலமாய் இருப்பதாய் கீதா சொன்னார்கள்.
ReplyDeleteபாதுகாப்பான இடம் அவர் இருக்கும் இடம் என்றார் கீதா.
வாங்க கோமதி, துளசிதரன் நலமே என கீதா என்னிடமும் சொன்னார்.
Deleteஎங்கள் ஊரிலும்(மதுரை) வகை அணையை திறந்து விட போகிறார்கள்.
ReplyDeleteஅதனால் கரை ஓரத்தில் இருப்பவர்களை பாதுகாப்பான இடத்திற்கு போக சொல்கிறார்கள்.
ஆமாம், வைகை பற்றிய செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. இதுக்கு நடுவில் முல்லைப்பெரியாறு அணை நீரை இடுக்கி அணைக்குத் தமிழ்நாடு திறந்துவிட்டதால் தான் இடுக்கியில் வெள்ளம்னு புரளி கிளம்பி இருக்கு! :( இடுக்கி அணை முல்லைப்பெரியாறைப் போலப் பலமடங்கு பெரிது. அதன் வெள்ளம் இப்போது பெய்த மழையில் வந்தது. அது புரியாமல் இடுக்கி அணையைத் திறந்ததும் தமிழ்நாட்டைத் திட்டிட்டு இருக்காங்க! :(
Deleteநீங்கள் நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
ReplyDeleteகன்னியக்குமரி மக்கள் எல்லோரும் சேர்ந்து தினம் 10,000 சப்பாத்தி செய்து தருகிறார்கள் கேரள மக்களுக்கு. மூன்று நாள் செய்து கொடுக்கலாம் என்று இருக்கிறார்கள்.
ஆமாம், கோமதி, எதையும் பொருட்படுத்தாமல் உதவிகள் செய்வோர் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். மீட்புப்படையில் ஆர்.எஸ்.எஸ். இளைஞர் ஒருவரும் ராணுவ வீரர் ஒருவரும் கூட இறந்ததாகச் சொல்கின்றனர். :(
Deleteமழை குறைந்து விடும் என்று தற்போதைய வானிலை அறிக்கை கூறுகிறது.
Deleteஅக்கா, செய்திகளுக்கு நன்றி! நலமோடு இருப்பது மகிழ்வே ! , இங்கு பிரான்சிலும் பரவலாக அதிக மழை பெய்து , வெள்ளத்தின் பாதிப்பு இருந்தது. கேரளத்தில் ஐயப்பனிடம் ஆற்றுப் பெருக்குச் சென்றது போல், இங்கு பிரபல லூர்து (Lourdes) மாதா தேவாலயமும் நீரில் மூழ்கியது. ஆனால் எந்த விதமான முட்டாள் கருத்தும் அது பற்றி வரவில்லை. மனிதனின் பேராசையால் பூகோள உருண்டையில் செய்த அழிவுகளை அவனே அறுவடை செய்கிறான். இங்கு பாரிசில் கடந்த 2 மாதமாக ஒரு துளி மழையில்லை. பயிர் பச்சையெல்லாம் காய்கிறது. கேரள மக்கள் மீள வேண்டும். மீள்வார்கள். அரசியல்வாதிகளின் அணுகுமுறையைக் கேட்க மகிழ்வாக உள்ளது. ஒரு விடயம் புரியவில்லை. குடிநீருக்கே, தமிழருக்கு நீரை விடமாட்டோம் என அடம் பிடித்த கேரளாவும் ,கர்நாடகாவும் - தங்களுக்கு மிஞ்சி விட்டதென்றதும், ஏன்? தமிழகம் நோக்கித் திறந்து விடுகிறார்கள். புரியவில்லையே - தமிழர்கள் அழியலாமா? அழிக்கப்படவேண்டியவர்கள் எனக் கருதுகிறார்களா?
ReplyDeleteவாங்க யோகன், நீண்ட நாட்கள்/வருடங்கள் கழித்து வருகை தந்ததுக்கு இந்த மழை/வெள்ளத்துக்கு நன்றி. ஃப்ரான்ஸ் வெள்ளம் பற்றியும் தொலைக்காட்சி மூலம் அறிந்தோம். எல்லாம் இப்போது சரியாகி இருக்கும் என நம்புகிறேன். கேரள, கர்நாடக மக்கள், அரசு எல்லாம் அவங்க கஷ்டத்தில் இருந்து தப்பிக்கணுமே, அதுக்குத் தமிழ்நாட்டை விட்டால் வேறு மாநிலம் அவங்க வழியில் இல்லை அல்லவா? அதோடு கேரளா எப்போதுமே தமிழ்நாட்டைக் குப்பைத் தொட்டியாகவே நினைச்சு எல்லாக் குப்பைகள், மருத்துவமனைக்கழிவுகள் எல்லாவற்றையும் கேரள-தமிழ்நாட்டு எல்லைகளில் கொட்டிவிட்டுச் செல்லும். மக்கள் கையும் களவுமாகப் பிடித்தும் பலன் இருந்ததில்லை. அரசுகளும் தட்டிக் கேட்பதில்லை! எப்படியோ போகட்டும். அப்பாவி மக்கள் கஷ்டப்படாமல் இருந்தால் போதுமானது. கேரள மக்கள் துன்பத்திலிருந்து விரைவில் விடுதலை ஆகப் பிரார்த்திப்போம்.
Deleteஅம்மா மண்டபம் படித்துறைக்கு உள்ள யாரையும் விடலை யாம் அப்பாவும் சொன்னார்..
ReplyDeleteமேலூர் ட்ட இருக்கே மலட்டாறு அதிலயும் எல்லா படியும் மூழ்கியாம் ..
உங்க நலம் அறிந்து மகிழ்ச்சி மா.. அங்க ஊருக்குள்ள தண்ணி வர வாய்ப்பு கம்மி தானே ..
மல்லிகையும் டோஸ்ட்டர் ரும் சூப்பர்...
வாங்க அனு, நேத்திக்கு வாசல்லேருந்து பார்த்தப்போ அம்மாமண்டபம் மூடி இருப்பதை என் கணவர் சொன்னார். கீழே இறங்க முடியலை. கார் பார்க்கிங்கில் நேத்து வேலை செய்துட்டு இருந்தாங்க! மூக்கு வாசனையை எதிர்க்கும். :) இந்த மாசத்தோட வேலை முடிஞ்சா நல்லது! :(
ReplyDelete