அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். இந்த நன்னாளில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேச ஒற்றுமைக்கும், முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துப்போம். அதோடு நாடு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கவும் முயற்சிகள் எடுப்போம். எதற்கெடுத்தாலும் அரசாங்கம் வரணும்னு சொல்லாமல் நம் தேவைகளைக் கூடியவரை நாமே முயன்று செய்து கொள்வோம். மற்றவர்க்கு முன்மாதிரியாக இருக்க முயற்சி செய்வோம்.
இந்தியாவில் வாழத் தக்கச் சிறந்த நகரங்களில் ஒன்றாகத் திருச்சியும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதன்மை இடத்தில் உள்ளது. தேசிய அளவில் பனிரண்டாம் இடம்! எனினும் சென்னை, மதுரை ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் திருச்சி முன்னே நிற்கிறது. சுத்தமான நகரங்களில் ஒன்றாகத் திருச்சி இரண்டாண்டுகளுக்கு முன்னர் தேசிய அளவில் முதலிடமும் பெற்றிருந்தது. ஆனால் இப்போது மைசூர் முன்னே நிற்கிறது. சென்னைக்குத் தமிழக அளவில் 25 ஆவது இடமும் மதுரைக்கு 28 ஆம் இடமும் கிடைச்சிருக்குனு நினைக்கிறேன். மாத்திச் சொல்றேனோ? தெரியலை! ஆனால் மதுரை ஒரு காலத்தில் நன்றாகத் தான் இருந்தது. இப்போது எப்படி இருக்குன்னா காலில் கொலுசும், மெட்டியும் போட்டுக் கொண்டு ஒற்றைப்பின்னலில் பூ வைத்துக் கொண்டு ஜீன்ஸும் டீஷர்டும் போட்டுக் கொண்டு போகும் பெண்ணைப் போல் சம்பந்தமே இல்லாமல் இருக்கு! மீனாக்ஷியோடு முன்னர் இருந்த நெருக்கம் இப்போ எங்கே போச்சு? :( மீனாக்ஷி கூட அந்நியப்பட்டுப் போனாளா?
எனக்குத் திருச்சியோடு நான் பிறந்ததில் இருந்து சம்பந்தம்! எப்படினு கேட்கறீங்களா? என் அப்பா இங்கே உள்ள ஹிந்தி பிரசார சபாவில் தான் ஹிந்தி கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார். இங்கே உள்ள ஆண்டார் தெருவில் தான் ஒரு ஸ்டோரில் அம்மாவும், அப்பாவும் அண்ணாவோடு குடி இருந்திருக்கின்றனர். அப்போத்தான் அம்மா என்னை உண்டாகிப் பின்னர் நான் பிறந்திருக்கிறேன். அதன் பின்னர் இங்கே அருகிலுள்ள காட்டுப்புத்தூர் என்னும் ஊரில் நான் குழந்தையாய் இருக்கையில் அப்பா அங்கே பள்ளியில் வேலை செய்ததால் அங்கேயும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கின்றனர். அதன் பின்னரே மதுரை சென்றிருக்கிறார்கள்.
அதன் பின்னர் சில முறை திருச்சி சமயபுரம் கோயிலுக்குப் பிரார்த்தனைக்காகவும், ஶ்ரீரங்கம்கோயிலுக்கும் வந்திருக்கோம். இதெல்லாம் நான் பள்ளி மாணவியாய் இருக்கும்போது நடந்தவை! அதன் பின்னர் திருச்சியோடு தொடர்பு என்பது சென்னை--மதுரை பயணத்தின் போது தான். அதுவும் வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகம் ஆனதும் திருச்சியிலிருந்து சென்னை வரை நூலகம் இயங்கும்! சென்னையிலிருந்து வரும்போது திருச்சி வரை நூலகம் இயங்கும். சில ஆண்டுகளில் இங்குள்ள ஸ்டேட் வங்கியின் ரீஜனல் அலுவலகத்துக்கு என் தம்பி மாற்றல் ஆகி வந்தார். அப்போது பல முறை இங்கே வந்து இருந்திருக்கிறேன். இருந்தது திருச்சி கன்டோன்மென்ட் என்றாலும் அங்கேயும் நல்ல குடிநீர்,காய்கள் வாசலுக்கே வரும், எல்லா வசதிகளும் நிறைந்து இருந்தது. வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் பஸ் ஸ்டாப். ஏறினால் சில நிமிடங்களில் போகவேண்டிய இடம் போகலாம். அவசரம் இல்லாமல் நிதானமாகப் போகலாம். இந்த வசதி மதுரையில் நாங்க மேலாவணி மூலவீதியிலும், மேலமாசி வீதியிலும் இருந்தப்போ அனுபவித்தவை. எதுக்கும் அவசரம் இல்லாமல் கிளம்ப முடியும். ஆனால் சென்னையில் அப்படி இல்லை!
நாங்க அம்பத்தூரை விட்டு விட்டு இங்கே வந்ததும் பலரும் கேலி செய்தாங்க. அங்கே என்ன இருக்கு, கிராமம் என்றார்கள் சிலர். மருத்துவ வசதியே இல்லை எனச் சிலர். எங்கே போகணும்னாலும் கஷ்டம் எனச் சிலர்! ஆனால் இங்கே கிராமம் மாதிரி இருந்தாலும் நகரத்தில் கிடைக்கும் அனைத்தும் கிடைத்து வருகிறது. மருத்துவ வசதியில் தமிழ்நாட்டில் முன்னணியில் இருப்பது திருச்சி நகரம், சென்னைக்கு அடுத்தபடி! எல்லாவிதமான தரமான அறுவை சிகிச்சைகளும் இங்கே வெற்றிகரமாக நடத்தப்படுகின்றன. சென்னையில் பிரபலமாக இருக்கும் ஃப்ரன்ட்லைன் மருத்துவமனை, வாசன் மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, அகர்வால் மருத்துவமனை ஆகிய அனைத்தும் இங்கேயும் உள்ளன. தில்லை நகர் முழுவதும் சென்னை கீழ்ப்பாக்கம் போல் மருத்துவர்களால் நிறைந்தது!
அடுத்து எங்கே போகணும்னாலும் முக்கிய நகரங்களுக்கு இங்கே ஶ்ரீரங்கத்திலேயே ரயில் ஏறலாம். பெண்களூர்,மங்களூர், திருவனந்தபுரம், மதுரை, திருநெல்வேலி, கன்யாகுமரி, ஹைதராபாத், மும்பை, தில்லி, கல்கத்தா, புவனேஸ்வர் ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்தே ரயில் ஏறிச் செல்லலாம். இங்கிருந்து மும்பைக்கும், மும்பை வழியாக தில்லிக்கும் விமானப் பயணம் மேற்கொள்ள முடியும். சென்னை-திருச்சி விமான சேவை எப்போதும் உண்டு. துபாய், சிங்கப்பூர் , மலேசியா, இலங்கை போன்ற கிழக்கு நாடுகள், மத்தியதரைக்கடல் நாடுகள் போன்றவற்றிற்கும் நேரடி விமான சேவை உண்டு. சென்னை போன்ற இடங்களில் கிடைக்கும் ஐபாகோ ஐஸ்க்ரீம் கேக் இங்கே ஶ்ரீரங்கத்தில் எங்க வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே கிடைக்கிறது. இந்த ஐஸ்க்ரீம் பற்றி எனக்குத் தெரியாது. முதலில் சொன்னவர் பானுமதி! அதன் பின்னர் தான் வீட்டுக்கு அருகேயே ஐஸ்க்ரீம் பார்லர் இருப்பதைப் பார்த்தேன். பக்கத்திலேயே பிட்சா கடை! என்ன ஒரு பிரச்னைன்னா இது வேக வேகமாக நகரமயமாக இல்லை, இல்லை நரகமயமாகிக் கொண்டு வருகிறது. அதான் பிடிக்கலை! இந்த அமைதியும், காற்றும், நீரும் தேவைனு தான் இங்கே வந்தது. கூட்டம் வந்தால் பகிர்ந்து கொள்ளக் கூட முடியாமல் போயிடுமோனு கவலை! :))))))
காற்று என்றால் அப்படி ஒரு காற்று. வீட்டுக்குள் சமையலறை ஜன்னல் வழியாக் காத்து கொட்டும். பால்கனியில் உட்கார்ந்தால் காற்று அள்ளும். கணினி அறை ஏசி போட்டாப்போல் எப்போதும் சிலுசிலு! மொட்டை மாடிக்குப் போனால் காற்று ஆளைத் தள்ளுகிறது. சுண்டைக்காயை வைச்சுட்டு வந்துட்டேன். காற்று ஆரம்பிச்சுடுச்சேனு எடுக்கப் போனால் தட்டோடு தூக்கிக் கொண்டு சுண்டைக்காய்கள் பறக்க, முதலில் போன ரங்க்ஸ் அதோடு ஓடிப் போய்க் களைத்துத் திரும்பி வர பின்னர் இரண்டு பேருமாப் போனால் காற்று என்னையும் அலைக்கழித்து விட்டது. பின்னர் சுண்டைக்காய்களோடு ஓடிப் பிடிச்சு விளையாடி எல்லாத்தையும் பொறுக்கிக் கொண்டு வந்தோம்.
கீழே உள்ள மைசூர்ப்பாகு படம் 2012 ஆம் ஆண்டு தீபாவளிக்குப் பண்ணினது போட்டிருக்கேன். பொரபொரனு வந்திருப்பதால் வீணாகி இருக்காது! எடுத்துக்குங்க! அதோடு இன்னிக்கு சுதந்திர நாளாச்சே. ஸ்வீட் எடு! கொண்டாடு! கீழுள்ள சுட்டியில் க்ளிக்கினால் அந்தப் பதிவுக்கும் போகலாம்.
மைசூர்ப்பாகு
ஆமாம்... இடுகை சுதந்திர தின நல்வாழ்த்துகள் பற்றியதா?
ReplyDeleteஇல்லை 'எனக்கும் மொர மொரப்பா மைசூர் பாக்' வந்திருக்கு என்று காண்பிக்கப் போட்ட இடுகையா?
இல்லை ஸ்ரீரங்கம் ரியல் எஸ்டேட் விற்பனை அலுவலகம் ஏதோ ஒன்றில் சேர்ந்துட்டீங்களா?
ஒரே குழப்பமா இருக்கு.
hihihihi எல்லாம் தான்! அப்படியே வைச்சுக்கோங்களேன்! :))))))
Deleteஆண்டார் தெரு, அதிலும் 'ஸ்டோர்' என்றவுடனே எனக்கு பழம்பெரும் (அப்படீன்னா என்ன? நாம கொடுக்கற பழங்களை எல்லாம் அவர் வாங்கிப்பார்னு அர்த்தமா?) பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஞாபகம்தான் வந்தது. ஒருவேளை நீங்கள் இருந்த ஸ்டோர்தான் இப்போ அவர் குடியிருக்கற பில்டிங் ஆக மாறியிருக்கா? அவர் பில்டிங், ஸ்டோர் பற்றி மிக விஸ்தாரமா அவர் எழுதியிருந்த ஞாபகம்.
ReplyDeleteஎன் அப்பா இருந்தது பத்திச் சொல்லித் தான் தெரியும்! வைகோ இருந்த ஸ்டோர் பத்தி எல்லாம் எனக்குத் தெரியாது! அதுவும் இதுவும் ஒண்ணானும் தெரியாது! :)
Deleteஉங்க வீட்டு மொட்டைமாடில அவ்வளவு காத்து வருது, கணிணி அறை ஏசி போட்டமாதிரியே இருக்கு - ஐயோ பில்டப் தாங்கலை. ஒருவேளை 'வீடு விற்பனைக்கு' போர்ட் ஏதேனும் வைக்கும் ஐடியாவா? ஹா ஹா. (இருந்தாலும் உங்க வீட்டு மொட்டை மாடியை பலர் பாராட்டியிருக்காங்க - ஒருவேளை உங்களோடு வீட்டுல இருந்து பேசறதுக்குப் பதிலா, பேசாம மொட்டைமாடியில் ரெண்டு நடை நடந்துட்டு வரலாம் என்பதினாலா)
ReplyDeleteஇங்கே இருந்து பார்த்தால் தான் தெரியும் காற்று அடிப்பதைப் பற்றி நான் சொல்வது ஒண்ணுமே இல்லைனு! பில்ட் அப் எதுக்குக் கொடுக்கணும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புழுங்கற சென்னையிலே இருக்கிறவங்களுக்கு இப்படித் தான் தோணும்! :)))) காற்றடிப்பதை முன்னர் வீடியோவாக எடுத்தும் போட்டிருக்கேன். இங்கே காற்றுக் குறைந்தால் மழை குறையும் என அர்த்தம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகக் காற்று அடிக்கிறதோ அத்தனைக்கு மழைப்பொழிவு இருக்கும். ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்னு சொல்வாங்க கேட்டதில்லையா? இரு சக்கர வாகன ஓட்டிகள் காற்றடிக்கும்போது திணறுகின்றனர்.
Deleteஉங்க அப்பா ஹிந்திப் ப்ரச்சார சபாவில் பணிபுரிந்தார் என்று படித்தவுடனே, வாய்ப்புகள் இருந்தபோதெல்லாம் ஹிந்தி கற்காமல் இருந்த ஞாபகம் வருது. நிச்சயம் ஹிந்தி ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கவேண்டும் (தமிழகத்தைவிட்டு வெளியில் செல்பவர்களுக்கு.... சமீப வருடங்களாக தமிழகத்திலேயே இருப்பவர்களுக்கும்-கடைகள்லலாம் பீஹாரிகள் உ.பிரதேச ஆட்கள்தான் அதிகமா இருக்காங்க தமிழகத்துல)
ReplyDeleteஅப்பா பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்திலும் படிச்சார். அங்கிருந்து படிப்பை விட்டுட்டு லாகூர் காங்கிரஸுக்குப் போயிட்டதாய்ச் சொல்வார் என் பெரியப்பா! அதன் பின்னர் அவர் மதுரை சேதுபதிப் பள்ளியில் ஓர் இந்தி ஆசிரியராகத் தான் தமிழ்நாட்டு இந்திக் கலவரம் வரை இருந்து வந்தார். அதன் பின்னர் அரசே (அப்போ பக்தவத்சலம் அரசு) மேலூர் ஆசிரியப் பள்ளியில் ஒரு வருஷம் படிக்க வைத்துப் பின்னர் வகுப்பாசிரியராக அதே சேதுபதி பள்ளியில் இருந்தார். அப்போல்லாம் இந்திப் பாடம் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சையில் கணக்கில் எடுத்துப்பாங்க. பரிட்சைப் பேப்பர் திருத்துவதற்கு அப்பாவிற்கு வரும். அதற்குத் தனியாகச் சம்பளம்! அதன் பின்னர் வந்த நாட்களில் இந்தி வகுப்பையே முற்றிலும் எடுத்துட்டாங்க! நான் எட்டாம் வகுப்பு வரை இந்தி படிச்சிருக்கேன்.
Delete//படத்திலே இன்னிக்கு எடுத்துண்டேன்...
ReplyDeleteநாளைக்கு இல்லைன்னா நாளை மறுநாள் நேரில் வந்துடறேன்! :)
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.// - இப்படி ஒருவர் அப்போவே எழுதியிருக்காரே... மீதி எங்க இருக்கும் இப்போ?
எல்லாம் சாப்பிட்டாச்சு! :))))
Deleteஅவர் தான் ரிஷபனோடு வந்தார் என்றேனே!
Deleteஎன்ன திடீரென நினைவுகள் ஊர் ஊரா சுற்றுகிறது? சுதந்திர தினம் என்பதால் சுதந்திரமாக சுற்றுகின்றனவோ....
ReplyDeleteதெரியலை ஶ்ரீராம், நினைவலைகள் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. எது மேலே மிதந்து வருதோ அது எழுத்தாக வருது! :))))
Deleteமைசூர்பாகு நல்லாயிருக்கு. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கொஞ்சம் மைசூர்பாகு எடுத்துக் கொண்டேன்.
ReplyDeleteஅதுக்குத் தான் மைசூர்ப்பாகு கொடுத்தேன். :)
Deleteவீட்டுக்கு அருகில் இருக்கும் கடைகளை வேறு யாராவது சிவந்து சொன்னால்தான் தெரிகிறது என்பது அநியாயம்.
ReplyDeleteஅவங்க வீட்டுக்கு அருகே இருக்குனு சொல்லலை. ஐபாகோ பத்திப் பதிவு போட்டிருந்தாங்க. அப்போ நான் கேட்டதுக்கு அங்கேயே இருக்கேனு சொன்னாங்க அவ்வளவு தான். அப்புறமாத் தான் நான் அந்தக் கடையையே பார்க்க நேர்ந்தது. அதிகம் வெளியே போவதில்லை. போனாலும் அந்தப்பக்கமாப் போகாமல் திருச்சிப் பக்கமாவே போயிட்டு இருந்ததால் தெரியலை! :)))))
Delete//யாராவது சிவந்து சொன்னால்தான் தெரிகிறது//????????????
Delete//யாராவது சிவந்து சொன்னால்தான்//
Deleteசி தேவை இல்லாமல் வந்திருக்கிறது!!!!
ஆடிக்காற்று அலைக்கழிக்கிறதோ! ஆற்றங்கரையோரம் வேறு.. சில்லுனு வீசும்!
ReplyDeleteஆமாம், ஶ்ரீராம், சில்லென்று காற்று வந்ததோ எனப் பாடத் தோணும்!
Deleteஅனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteசுதந்திர தின வாழ்த்துகள் ம்மா
ReplyDeleteநன்றி தம்பி
Deleteசுதந்திர தின வாழ்த்தில் ஆரம்பித்து திருச்சி புராணத்தில் தொடர்ந்து, மொர மொர மைசூர்பாகில் முடித்திருக்கும் உங்கள் திறமையை மெச்சுகிறேன். Happy independence day!💐
ReplyDelete@ பானுமதி, இதிலே ஒரு சாமர்த்தியமும் இல்லை. :) நெ.த.வுக்காக இந்தப் படத்தை எடுத்து வைச்சிருந்தேன். அதையும் போடணும், சுதந்திர தின வாழ்த்தும் சொல்லணும், அதே சமயம் திருச்சி முதலிடம் பெற்றதுக்கு மகிழ்ச்சியும் தெரிவிக்கணும். அதான்! மெது மெது மைசூர்ப்பாகு முந்தாநாள் போட்டுட்டேன். நீங்க வரலை, தீர்ந்து போச்சு! :))))))))))
Deleteஎனது வாழ்த்துக்களும்..மா
ReplyDeleteஆமா மா, தில்லைநகர் முழுவதும் மருத்துவமனை தான்...
சாஸ்திரி ரோடு லும் ஒரு ஐபாகோ ஐஸ்க்ரீம் கடை இருக்கு..
வாங்க அனு, எனக்கு இந்த ஐபாகோ பத்தியே பானுமதி சொல்லித் தான் தெரியும். ஐஸ்க்ரீம் கேக்கெல்லாம் அம்பேரிக்காவில் நிறையச் சாப்பிட்டிருக்கேன். இங்கே இன்னும் வாங்கிப் பார்க்கலை! எங்களுக்குனு வாங்கத் தோணலை! குழந்தைங்க யாரானும் வந்தால் வாங்கணும்.
Delete2012ல செஞ்ச மைசூர் பாகை கொடுத்து ஏமாத்த பார்க்குறீங்களாம்மா?!
ReplyDeleteஹாஹாஹாஹா! ராஜி, அதான் புத்தப் புதுசா முந்தாநாள் கொடுத்தேனே!
Deleteஎன்ன ஒரு பிரச்னைன்னா இது வேக வேகமாக நகரமயமாக இல்லை, இல்லை நரகமயமாகிக் கொண்டு வருகிறது. அதான் பிடிக்கலை! இந்த அமைதியும், காற்றும், நீரும் தேவைனு தான் இங்கே வந்தது. கூட்டம் வந்தால் பகிர்ந்து கொள்ளக் கூட முடியாமல் போயிடுமோனு கவலை! :))))))//
ReplyDeleteஊரின் பெருமையை இவ்வளவு சொல்லிவிட்டு கூட்டத்தைபற்றி கவலை பட்டால் எப்படி.
நீர் இருக்கும் இடத்தில் தானே நாகரீகம் வளர்ந்தது.
அது தான் இங்கும் கூட்டம்.
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
@ கோமதி அரசு, கவலை நீரைப் பங்கிடுவதிலோ காற்றைப் பங்கிடுவதிலோ இல்லை. நெரிசல் மயமானால் பிடிக்கிறதில்லை. தீபாவளி சமயம் சாரதாஸ் போன்ற கடைகளில் கம்பி கட்டி வரிசையில் உள்ளே விடுவாங்க! அத்தனை கூட்டத்தில் போய்த் துணி எடுக்கணுமானு தோணும்! அது என்னமோ கூட்டம் என்றாலே அலர்ஜி! நகரத்தின் உள்முகம் போய்ப் பொய்முகம் வந்துடுமோனு அச்சம்! இப்போ மதுரை இருக்கிறாப்போல்! :(
Deleteமேல் ஆண்டார் வீதி, கீழ் ஆண்டார் வீதி, இப்போதைய என்.எஸ்.பி. ரோடின் பின், முன் சாலைகள் இவை எல்லா இடங்களில் இப்படியான ஸ்டோர்கள் உண்டு. என் அம்மா கூட இப்படி ஒரு ஸ்டோரில் இருந்திருக்கிறார் - அவரது சிறு வயதில்! என் பெரியப்பா குடும்பத்தினருக்கும் இங்கே நிறைய சொத்து இருந்தது என்று சொல்வார்கள். இன்னும் கூட என்.எஸ்.பி. சாலையின் பின்னால் ஒரு ஸ்டோர் இருக்கிறது! அதில் ஒரு உறவினர் குடும்பம் பல வருடங்களாக இருக்கிறார்கள்.
ReplyDeleteமைசூர் பா - பார்க்க நல்லாவே இருக்கு!
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
வாங்க வெங்கட், இன்னமும் சில ஸ்டோர்கள் இருக்கின்றன என்றே கேள்விப் பட்டேன். எங்க வீட்டுக்கு விசேஷங்களில் சமையலுக்கு உதவும் சில பெண்மணிகள் அத்தகைய ஸ்டோரில் வசிப்பதாகச் சொல்வார்கள்.
Deleteஇனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteபழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை.
வாங்க கில்லர்ஜி, கருத்துக்கு நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களுக்கு என் சுதந்திர தின நல்வாழ்த்துகள். அப்பாடா.. இன்றுக்குள் சொல்லிட்டேன். திருச்சியை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். பழைய பதிவிலும் போய், ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு மொற மொற மைசூர்பாகு எடுத்துக்கொண்டேன். சூப்பரா இருக்கு.. மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, திருச்சியும் மலைக்கோட்டையும் சரித்திரத்தில் இடம்பெற்றது அல்லவா? நான் சொன்னது கொஞ்சம் தான். மலைக்கோட்டையின் உள் வீதிகளில் இப்போவும் மக்கள் வசிக்கின்றனர். கோடை காலத்தில் பகலில் மட்டும் வெப்பம் தெரியும் என்றும் இரவில் தெரியாது என்றும் சொல்வார்கள். ஆனாலும் எங்களுக்கு என்னமோ அங்கே வசிப்பது ஆச்சரியமா இருக்கும். எல்லோருக்கும் தண்ணீர் மேலே உச்சியில் கட்டி இருக்கும் டாங்கில் இருந்து தான் அன்றாடத் தேவைகளுக்கே வரும் என்பார்கள். அப்படி எல்லாம் நம்மால் இருக்க முடியுமா என்றே நினைப்பேன். :)
Deleteமைசூர்ப்பாகு சாப்பிட்டதுக்கு நன்றி. திங்கட்கிழமை மிருதுவான மைசூர்ப்பாகும் சாப்பிட்டீர்கள் அல்லவா?
Deleteகாட்டுப்புத்தூர் ஜமீந்தார் ஹைஸ்கூலில் அம்பா வேலை பாரத்தாரா? அவ்வாறெனில் அங்கு வேலை செய்த சுப்பிரமணியம் என்கிற சமூக பாட ஆசிரியரைத் தெரியுமா?
ReplyDeleteஅவ்வளவெல்லாம் அம்மா சொன்னதாக நினைவில் இல்லை ஜேகே அண்ணா! என் நினைவுகள் ஆரம்பிப்பது ஒரு நாள் அம்மா தோசை வார்த்துவிட்டு தோசைக்கல்லை அப்போத் தான் கீழே இறக்கி இருக்கார். நான் போய் அதை தோசையம்மா தோசை எனப் பாடிக்கொண்டே உள்ளங்கையால் தடவி விட்டேன். அழுததும் கையில் மையைக் கொட்டியதும் லேசாக நினைவில் இருக்கு! அப்புறமாத் தம்பி பிறந்து மருத்துவமனை போய்த் தம்பியைப் பார்த்தது நினைவில் வருது! நினைவுகள் ஆரம்பமே அங்கிருந்து தான்! :))))
Deleteஇவை எல்லாம் நடந்தது மதுரை காக்காத் தோப்புத் தெரு! என் நினைவுகள் அங்கிருந்தே ஆரம்பிக்கின்றன. :)
Deleteஆகா... மைசூர் பாகு அருமை!..
ReplyDeleteஇருந்தாலும் , இவ்வளவு சீக்கிரமா கொடுத்திருக்கப்படாது!...
இன்னும் நாலஞ்சு வருசம் ஆறப்போட்டிருக்கலாம்!...
கிக்..கிக்..கிக்..கீ!...
அது யாருங்க!.. அங்கே சிரிக்கிறது!?...
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் துரை, முந்தாநாள் புத்தம்புதுசாக மிருதுவான மைசூர்ப்பாகு கொடுத்தேனே! அப்போ வரலையாம்! இப்போ வந்து கிக் கிக் கீயா? இது பண்ணி ஆறு வருஷம் ஆச்சே! :)))))
Delete//கிக்..கிக்..கிக்..கீ!..//
Deleteஅடடே... இது புது மாதிரி சிரிப்பா இருக்கே.....
இஃகி இஃகி சிரிப்புக்கு இது பரவாயில்லை!!
இஃகி, இஃகி னு சிரிக்கிறது ஹிஹிஹி னு சிரிப்பதற்கு பதிலாய்! :)
Deleteநாம் வசிக்கும்/வசித்த இடங்கள் மேல் ஒரு அலாதி அன்பும்மதிப்பும் இருக்குமோ
ReplyDeleteதெரியலை ஐயா! பொதுவாக எந்த ஊரும் என்னை அதிகம் கவர்ந்தது இல்லை. ராஜஸ்தானின் நசிராபாதைத் தவிர்த்து. ஆனால் அங்கேயும் ராணுவக் குடியிருப்பில் இருந்தால் தான் வசதி! பணி ஓய்வு பெற்றபின்னர் அங்கே வசிக்க முடியாதே! அடுத்து ஜாம்நகர் கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும். பரோடா ரொம்பப் பிடிச்சது! பரோடா மாதிரி கட்டமைப்பு உள்ள நகரத்தைப் பார்ப்பது கடினம். மிக அருமை! எல்லா வசதிகளும் நிறைந்தது. இப்போ ஶ்ரீரங்கம்.
Deleteமற்றவருக்கு முன்மாதிரியாக இருக்க முயற்சி செய்வோம்.அருமை.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா! எங்கே! அடிக்கடி அடி பிறழ்கிறதே! :(
Delete