எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 20, 2018

மழை, வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட கதை! மீள் பதிவு! படிக்காதவங்களுக்காக!

ரயில் க்கான பட முடிவு


கேரள, கர்நாடக மக்கள் எல்லோரும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறாங்க. ஃபேஸ்புக்கில் மத்யமர் குழுமத்தில் அவரவர் வெள்ள அனுபவங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டிருந்தாங்க. அதிலே போட வேண்டி நாங்க முதல் முதலா மும்பை போன அனுபவத்தைத் தேடி எடுத்தேன். ஆனால் அங்கே எல்லோரும் அநேகமாப் போட்டு முடிச்சுட்டாங்க! அதோட நம்மோடது அப்படி ஒண்ணும் ருசிகரமா இருக்காது. அங்கே நம்மை விடப் பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் எழுதிட்டாங்க! அதுக்கு முன்னே இது எந்த மூலை! ஆகவே இங்கேயே மொக்கை போட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டுப் போட்டுட்டேன். ஏற்கெனவே படிச்சவங்க அடிக்க வராதீங்க! :))))
*********************************************************************************
இது நடந்தது 1990 ஆம் வருஷம். நாங்க அப்போத் தான் ராஜஸ்தான் நசிராபாதில் இருந்து குஜராத் ஜாம்நகர் மாற்றல் ஆகிப் போயிருந்தோம். ஜூன் மாசம். தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்கும் நேரம். சென்னையில் என் அப்பா வீட்டில் ஒரு விசேஷம் என்பதால், நானும் குழந்தைகளும் ஜாம்நகரில் இருந்து சென்னை ஒரு 2 நாளில் போவதாக ஏற்கெனவே முடிவு செய்யப் பட்டிருந்தது. இப்போது தான் வந்ததாலும், ஜாம்நகர் அலுவலகத்தைத் தவிர கட்சில் உள்ள "புஜ்" ஜில் உள்ள அலுவலகமும் என் கணவரின் கீழ் இருந்ததால் அவர் நாடாறு மாதம், காடாறு மாதம் தான் இங்கிருந்து மாற்றல் வரும் வரைக்கும். ஆகவே அவர் எங்களுடன் சென்னை வரவில்லை. நாங்கள் சென்னை போகும் திட்டம் என் கணவரின் முதல் தம்பிக்குத் தெரியும் ஆதாலால் அவர் எங்களை பம்பாய் வந்து விட்டுப் பின் சென்னை போகும்படிக் கூறி இருந்தார். நாங்கள் அதுவரை பம்பாய் போனது கிடையாது. ஒவ்வொரு லீவிலும் போக முடியாமல் ஏதாவது தடை இருக்கும். இப்போ அவருக்குக் குழந்தை வேறே பிறந்திருந்தது. நாங்கள் இன்னும் அந்தக் குழந்தையைப் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உத்தேசித்தும் பம்பாயில் என் கணவரின் தாய்வழி உறவினர்கள் நிறைய இருந்ததாலும் அங்கே போய்விட்டே சென்னை போவதாக முடிவு செய்து அதற்குத் தகுந்தாற்போல் டிக்கெட் எடுக்கப் பட்டிருந்தது. செளராஷ்ட்ரா மெயில் துவாரகா அருகே இருக்கும் "ஓகா" என்னும் ஊரில் இருந்து ஜாம்நகர், ராஜ்கோட் வழியாகத் தான் அஹமதாபாத் வந்து பரோடா, சூரத் வழியாக பம்பாய் வரும். என் மைத்துனர் "போரிவிலி"யில் இருந்தார். அவர் அலுவலகக் குடியிருப்பு. அங்கே இருந்து "சர்ச் கேட்" பகுதியில் உள்ள அவர் அலுவலகத்துக்கு நேரே ரெயில் இருந்தது. அவர் மனைவியும் அதே அலுவலகத்தில் வேலை பார்த்தாள். இந்த செளராஷ்ட்ரா மெயில் காலை 6-20 மணி அளவில் "போரிவிலி" வரும். ஆகவே அவருக்கு ஸ்டேஷன் வந்து கூட்டிப் போகவும் வசதி. இதற்கு முன்னால் என்றால் நாங்கள் அமர்க்களத்தோடு ஜாம்நகர் வந்தோமே அந்த
"ஹாப்பா ஜனதா" வண்டி தான். அது ஹாப்பாவில் இருந்து கிளம்புவதோடு இல்லாமல் போரிவிலிக்குக் காலை 4-30-க்கே போய்விடும். அவங்க தூக்கத்துக்கு இடைஞ்சல். எல்லாருக்கும் வசதியாக இந்த வண்டி ஏற்பாடு செய்து குறிப்பிட்ட நாளில் கிளம்பினோம்.

இதுவரை நான் தனியாகப் பிரயாணம் செய்தது என் பையன் பிரசவத்துக்கு மதுரை போகும் போதும், அங்கே இருந்து திரும்ப நசிராபாத் வரும்போதும் தான். மதுரை போகும்போது என் தம்பியும் ,அம்மாவும் நசிராபாத் வந்திருந்தார்கள் என்றாலும் தம்பி ரொம்பவே சின்னப் பையன். மொழிப் பிரச்னை. ஆகவே கிட்டத் தட்ட நான் தான் கூட்டிப் போனேன் என்று சொல்ல வேண்டும். திரும்ப வரும்போது அண்ணாவும், மன்னியும், என் சிறிய நாத்தனாரும் வந்தார்கள் என்றாலும் அதே பிரச்னைதான். அப்பவும் நான் தான் கூட்டி வந்தேன். இப்போ ரொம்ப நாள் கழிச்சு நாங்க 3 பேரும் தனியாகப் போகிறோம். அதுவும் முதல் முதல் பம்பாய்க்கு. என் மைத்துனன் வீட்டிலும் சரி, எங்களுக்கும் சரி அப்போ ஃபோன் வசதி இல்லை. ஆஃபீஸ் நம்பரில்தான் முக்கியமான விஷயம் இருந்தால் அண்ணா, தம்பி பேசிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் கடிதம் தான். ஆகவே என் மைத்துனர் போரிவிலியில் CWC க்வார்டர்ஸில் "தத்தபாடா ரோட்"டில் இருக்கிறான் என்று தெரியும். மற்றபடி அவர் அலுவலகம் சர்ச்கேட்டில் இருக்கிறது என்றும் தெரியும். வேறு ஒன்றும் தெரியாது. என் கணவரிடம் எதற்கும் ஸ்ரீதர் விலாசம் கொடுங்கள் என்றதற்கு அவர், உன்னை ரெயில் ஏற்றிவிட்டு அவர் ஆஃபீஸுக்கு ஃபோன் செய்து விடுகிறேன். மத்தியானம் 2-200க்கு ஏறினால் காலையில் போரிவிலி 7 மணிக்கு வீடு போயிடலாம் என்றார். என் மாமனார், மாமியார் வேறு அப்போ அங்கே தான் இருந்தார்கள். அதனாலும் நாங்கள் கட்டாயம் போக வேண்டி இருந்தது. வண்டியில் ஏறினோம். வண்டியும் கிளம்பியது. அப்பா வராமல் குழந்தைகளுக்குள் ஒரு வெறுமை, இருந்தாலும் வேறு வழி இல்லை. ராஜ்கோட் ஒரு மணி நேரத்தில் வந்தது. ராஜ்கோட்டில் ஒரு குடும்பம் ஏறியது. அவங்க வீட்டையே காலி செய்து இந்த ஸ்லீப்பர் க்ளாசில் ஏற்றினார்கள். எங்களுக்குக் கால் வைக்க மட்டும் இல்லை, கை வைக்கவும் இடம் இல்லை. பாத்ரூம் போகப் பச்சைக் குதிரை தாண்டிப் போகவேண்டி வந்தது. அவங்ககிட்டே சொன்னால் குஜராத்தியில் சண்டை மாதிரி ஏதோ சொல்கிறார்கள். ஏற்கெனவே வெறுப்பில் இருந்த நான் இன்னும் வெறுப்பில் ஆழ்ந்தேன். ஒரு வழியாகக் காலை வந்தது. 5-00 மணி இருக்கும். நான் தான் கொட்டக் கொட்ட முழிச்சுக் கொண்டு இருப்பேனே, அது போல எழுந்து உட்கார்ந்திருந்தேன். வண்டி "பால்கர்" என்னும் ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது. டீ வந்தது சாப்பிட்ட படி கேட்டேன், "போரிவிலிக்கு இன்னும் எத்தனை தூரம்?" சாய்வாலா சொன்னார்: "யே காடி டீக் ஸே ஜாதே தோ ஏக் கண்டே மே ஜாயேகி" (சரியாகக் கிளம்பினால் இந்த வண்டி ஒரு மணி நேரத்தில் போரிவிலி போய்விடும்.)என்றார். "என்ன இது இப்படிச் சொல்றாங்க!" என்று நினைத்தேன். வண்டி நின்று கொண்டிருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது.

23 comments:

  1. எப்போதொ படித்தது போல் இருந்தாலும் நினைவுக்கு சரியாக வ்ரவில்லை படிக்கத் தொடங்கினால் பதிவுமுற்றுப் பெறாமல் தொடரும் போலிருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. @GMB Sir, ஆமாம், ஏற்கெனவே இருமுறை போட்டிருக்கேன். இரண்டாம் முறை போட்டது கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களுக்காக! :)

      Delete
  2. தொடருமா? ஆனால் நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. முதல் முறை படிச்சிருக்க வாய்ப்பில்லை. இரண்டாம் முறை படிச்சுக் கருத்தும் சொல்லி இருக்கீங்க ஶ்ரீராம்.

      Delete
  3. மழை அனுபவங்கள் - முன்னர் படித்த நினைவில்லை. தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வெங்கட், உங்க கருத்து இரண்டாம் முறை பகிர்ந்த அப்போது இல்லை.

      Delete
  4. கதை முடிஞ்சுதா? தொடருதா? ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஞானியால் இதைக் கூட யூகிக்க முடியலையாக்கும்?

      Delete
  5. அதுசரி தம்பியின் குழந்தைக்கு சங்கிலி போட்ட கதையைச் சொல்லவே இல்லையே கீசாக்கா?.. அதையும் மறக்காமல் ஜொள்ளிடுங்கோ எத்தனை பவுணில என்ன போட்டீங்க எனும் விபரமெல்லாம்:).

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா, நாங்க குழந்தை பிறந்த உடனேயே போட்டுடுவோம். போட்டுட்டோம். :) இப்போ அந்தப் பையருக்குக் கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆகுது! :))))

      Delete
  6. இப்போதைய வெள்ளப்பெருக்கை வைத்து பழசை நினைவுகூர்வதால், அப்பவும் வெள்ளமோ? ரெயின் ஓட முடியாமல் நிண்டிடுச்சா? கீசாக்காவுக்கு சாப்பாடு, ரீ போயிந்தி?:).

    ReplyDelete
    Replies
    1. ஞானி, முதல்லே மாட்டிக் கொண்டது எங்க பொண்ணு பிறந்து 45 நாட்களிலேயே நான் சென்னை திரும்பும்போது. அது அப்போக் கொஞ்சம் புதுசா இருந்தது. இதையும் எழுதி இருக்கேன். அப்புறமாப் பல வெள்ளங்களைப் பார்த்தாச்சு. கடைசியா 2011 ஆம் ஆண்டு எங்க வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்தது! அதைத் தொடர்ந்து தான் நாங்க வீட்டைக் காலி செய்துட்டு இங்கே காவிரிக்கரைக்கு வந்தோம். ஏழு வருடங்கள் ஆகின்றன. ரீ, சாப்பாடெல்லாம் போகலை. அந்த வெள்ளத்திலும் சமாளிச்சுட்டுச் சமைச்சுச் சாப்பிட்டிருக்கோம். :) விருந்தாளி வேறே.

      Delete
  7. முடிவில் தொடரும் போட்டு இருக்கலாமே...

    ReplyDelete
  8. படித்த நினைவு இருக்கு கீதா மா.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, 2006 இல் ஒரு தரம் (முதல் முறை) அப்புறமா 2014 இல் ஒரு தரம் போட்டிருக்கேன் வல்லி. :)

      Delete
  9. இவ்வாறாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு பக்கம் திரில்லாகவும் மற்றொரு புறம் சங்கடமாகவும் இருக்கும்.

    ReplyDelete
  10. பழைய அனுபவத்தையும் 'தொடரும்' போட்டு நிறுத்தணுமா? முன்னுரையே முக்கால் பாகத்தை எடுத்துக்கிட்டது.

    ReplyDelete
    Replies
    1. முழுக்கப் போட்டா ரொம்பப் பெரிசாப் போயிடுமே!

      Delete
  11. அம்பத்தூர் வீடு தண்ணீரில் மிதக்கும் படம் பார்த்த நினைவு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கோமதி, அதையும் போட நினைச்சேன். இதுக்கே அடி விழுது! பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு! :))))

      Delete
  12. முன்னொரு காலத்தில் மீள் பதிவே போடுவதில்லை என்னும் சங்கல்பம் இருந்தது. ஆனால் இப்போ ஶ்ரீரங்கம் வந்ததும் மீள் பதிவும் போட்டுட்டு இருக்கேன். :) மாறிட்டேனோ?

    ReplyDelete