எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 11, 2019

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்!

 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன் 2008ஆம் வருடம் எழுதிய (மீள்) பதிவு இங்கே பார்க்கலாம்.

கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா! க்கான பட முடிவு

முதன் முதல் நோன்பு ஆரம்பிக்கும் போது "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்" ஆரம்பிக்கும் கோதை நாச்சியார், பின்னர் 2-வது பாடலில் இந்த வையத்தில் எல்லாம் வாழ்வோர்களை அழைத்து, நோன்பைப் பற்றியும் அதற்கான விதிமுறைகளையும் கூறுகிறாள். அதற்கான அழகான தமிழ் வார்த்தை "செய்யும் கிரிசைகள்" என்று குறிப்பிட்டு விட்டுப் பின் நோன்பு நூற்குங்காலையில் தாங்கள் மேற்கொள்ளப் போகும் விரதத்தையும் கூறுகிறாள் இவ்வாறு:
"நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!" என்று உறுதி எடுத்துக் கொள்ளுகிறாள் அவ்வாறே உறுதி எடுத்துக் கொண்டு தன் தோழிகளையும் அழைத்துக் கொண்டு, நந்தகோபன் வீட்டு வாயில் காப்போனை அழைத்து மணிக்கதவம் தாள் திறக்கச் சொல்லிப் பின்னர், நந்தகோபனையும் யசோதையையும் எழுப்பிப் பின்னர், அவர்தம் மருமகளாம், திருமகள் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பிக் கண்னனையும் எழுப்பச் சொல்லி வேண்டுகிறாள். அதுவும் எப்படி?
"உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்!" என்று சொல்லுகிறாள். பொதுவாகக் காலையில் எழுந்து கொள்ளும்போது முதன் முதல் பார்க்க வேண்டிய விஷயங்களில் ஒன்று மனைவியின் முகம். நப்பின்னை பால் கொண்ட காதலால், ஏழு எருதுகளை அடக்கி அவளைத் திருமணம் செய்து கொண்டிருக்கும் கண்ணன் அவளை எவ்வாறு பிரிவான்? மனம் வருந்தும் அல்லவா? அதனால் நப்பின்னையையே வேண்டுகின்றாள் ஆண்டாள், "நப்பின்னாய், நீ உன் மணாளனைத் துயில் எழுப்பு! உன் அழகான செந்தாமரை போன்ற முகத்தைக் காட்டி, அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உன் வளையல் கரங்களால், வளையலில் இருந்தி இன்னிசை எழுப்பிப் பள்ளி எழுச்சி பாடு, அவனைத் திருப்திப் படுத்தி எங்களுடன் நீராட்டலுக்குத் தயார் செய்து அனுப்பி வை!"
"பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவோய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!"

இவ்வாறு நப்பின்னையை வேண்டிக் கொண்ட ஆண்டாள், பின்னர் கண்ணனைத் திங்களும், ஆதித்யனும் ஒரு சேர எழுந்தாற்போல் எங்கள் சாபம் தீர நீ எங்களை உன் அருட்கண்ணால் நோக்குவாய்!" எனக் கேட்டுக் கொள்கின்றாள். மழைக்காலத்தில் குகைக்குள் பதுங்கி இருக்கும் சிங்கத்துக்கு ஒப்பானவன் கண்ணன் எனச் சொல்லும் ஆண்டாள் தன் 24-வது பாடலில் கண்ணனின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம், ராம அவதாரம் இரண்டையும் குறிப்பிட்டுப் பாடிப் பின்னர் அடுத்த பாடலில் கண்ணன் பிறந்த கதையை வர்ணிக்கின்றாள். ஒருத்தி மகனாய்ப் பிறந்து, அந்த ஓர் இரவிலேயே ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்க்கப் பட்ட கண்ணனைப் பாடும் போது
"திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து ,மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!" எனச் சொல்கின்றாள். மாலுக்கு, மணிவண்ணனுக்கு, கோல விளக்குக்குப் பல்லாண்டு பாடும் விதமாய்
"சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே!" என்று சொல்லிப் பின்னர் 27-வது பாடலுக்கு வருகின்றாள் ஆண்டாள்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் அருளிச் செய்த இந்தத் திருப்பாவையின் 27-வது பாடல் இது. இது வரையிலும் "பாவை நோன்பு" நூற்றுக் கொண்டிருந்த நாச்சியார் ஆனவள் தன் நோன்பை முடிக்கிறாள். அதுவும் எப்படி? "கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா!" என்று கண்ணனைக் கூப்பிடுகிறாள். இங்கே கூடார் எனத் தீயவர்களைச் சொல்லும் சொல் மிக அழகாய் ஆண்டாளால் சொல்லப் பட்டிருக்கிறது. சாதாரணமாய்க் கெட்டவங்க என்று சொல்லுவதில் உள்ள கடுமை இங்கே குறைக்கப் பட்டுக் கூடார் என்று அவர்களைக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் தன் மென்மையான போக்கையும், நாகரீகத்தையும் ஆண்டாள் வெளிப்படுத்தி இருக்கிறாள். இப்படிக் கூப்பிட்டு இறைவனைப் பாடிப் பணிந்து நோன்பு நூற்றுத் தாங்கள் அடையப் போகும் அணிகலன்களையும் அந்நாளைய வழக்கப் படி குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.
இந்த 27-ம் நாளிலே தாங்கள் கொண்ட பாவை நோன்பை முடிக்கும் விதமாய் இந்தப் பாடலை ஆண்டாள் பாடி இருக்கின்றாள். அது வரை நெய் உண்ணாமல், பால் உண்ணாமல்,மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல் இருந்த வந்த பெண்கள் அன்று முதல் நல்ல ஆடை அணிகலன்கள் மட்டுமில்லாமல் :
""அதன் பின்னே பால்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!" எனச் சொல்கின்றாள். சொல்லின் திறம் மட்டுமில்லாமல் கூடி இருந்து அனைவரும் உண்ணும் பாங்கையும் எடுத்து உரைக்கும் இந்தப் பாடல் இன்று அதாவது ஜனவரி 12-ம் நாளான இன்று.

இன்று மதுரை மாநகரில் அனைவர் வீட்டிலும் பால் பொங்கும், நெய் மணக்கும், பொங்கல் உண்ணும் மக்கள் அனைத்து இல்லங்களிலும். அனைத்துப் பெருமாள் கோவிலிலும் இன்று நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாய்க் கொடுக்கப் படும். முக்கியமாய் அழகர் கோயில் அழகருக்கு இன்று செய்யப் படும் நைவேத்தியம் ஆண்டாள் அவள் காலத்திலே வாய்மொழியாக வேண்டிக் கொண்ட ஒன்று ஆகும்.

"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?"

திருமாலிருஞ்சோலை நம்பியான அழகருக்கு நூறு தடா வெண்ணெயை உருக்கிக் காய்ச்சி, பதமாய் நெய்யாக்கி, அந்த நெய்யால் நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்து வைப்பதாயும், அழகரை அதை ஏற்றுக் கொள்ளுமாறும் தன் வேண்டுகோளை நிறைவேற்றுமாறும் கேட்டுக் கொள்கிறாள் ஆண்டாள். அவள் செய்கின்றாளோ இல்லையோ, அவள் பாமாலையால் மகிழ்ந்த எம்பெருமான் அவள் வேண்டுகோளை நிறைவேற்றுகின்றான். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருடன் ஐக்கியம் ஆகின்றாள் ஆண்டாள். வருஷங்கள் பறக்கின்றன. நூற்றாண்டுகள் செல்கின்றன. வைணவத்தை உய்விக்க வந்த எம்பெருமானாக ராமானுஜர் தோன்றி, வைணவத்தை மட்டுமில்லாமல் கோயில் வழிபாட்டு முறைகளையும் செம்மைப் படுத்தி வந்த சமயம் அது.

அப்போது ஆண்டாள் பாசுரத்தைப் படித்து வந்த ராமானுஜர், தற்செயலாகப் பாண்டிய நாட்டுக்குச் சென்றார். அழகனைக் கண்டார். அவன் அழகில் மெய்ம்மறந்தார். அன்று இரவு அவருக்கு ஆண்டாளின் வேண்டுகோளும், அவள் அதை நிறைவேற்றாததும் நினைவுக்கு வந்தது. ஆண்டாள் செய்யவில்லை என்றால் என்ன? அதை நாம் நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டு கோயிலில் சொல்லி ஆண்டாளின் விருப்பம் போலவே நூறு தடா நிறைய வெண்ணெய் வாங்கிக் காய்ச்சி, நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்ய்ச் சொல்லி அழகனுக்குப் படைக்கின்றார். அழகன் மனம் மகிழ்ந்தானோ இல்லையோ, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் மனம் மகிழ்ந்தாள். அழகர் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றார் ராமானுஜர். ஆண்டாளின் திருக்கோயிலினுள் நுழைந்தார். நுழையும்போதே, ஒரு குரல், "என் அண்ணாரே!" எனக் குயில் போலக் கூவியது. சுற்றும் முற்றும் பார்த்தால் அழகிய ஆண்டாள் விக்ரகம் அசைந்து, அசைந்து வந்து ராமானுஜரைப் பார்த்து, " என் அண்ணாரே, தங்கையின் வேண்டுகோளை ஒரு அண்ணன் தான் நிறைவேற்றுவான். என் வேண்டுதலை நிறைவேற்றிய நீர் என் அண்ணார்!" எனச் சொல்லி மறைந்தாள். அன்று முதல் தென் மாவட்டங்களில் "கூடாரவல்லி" என்று செல்லமாய் அழைக்கப் படும் கூடாரவல்லித் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது. இப்போ எப்படினு தெரியாது!

37 comments:

  1. அருமை மா..எத்துனை முறை படித்தாலும் தெவிட்டாத வைபவங்கள் ..

    ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்.....

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுராதா, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. இப்பவும் இப்படி தான்... பழமை மாறவில்லை அம்மா... (எங்கள் ஊரில்)

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி. திண்டுக்கல்லில் பழமை மாறவில்லை என்பதில் மகிழ்ச்சி. ஆனால் மதுரை? ம்ஹூம்! முகமே மாறி விட்டதே! :(

      Delete
  3. எங்கள்புளொக்கில்.. கீதா சொன்ன கூடாரையைப்பற்றிக் கேட்க நினைப்பதற்குள் உங்கள் தலைப்புக் கண்ணில் பட்டதும் இங்கு ஓடி வந்தேன்.. கூடாரை.. புதிசு எனக்கு கேள்விப்பட்டதில்லை...

    இவ்விரதம் எதுக்காகப் பிடிப்பார்கள் கீசாக்கா?

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, அமுதசுரபி, அதிரா! இந்த விரதம் இன்னைக்கு முடிப்பார்கள். மார்கழி மாதம் முழுவதும் சிறுபெண்கள் கன்னிப் பெண்கள் காத்யாயனி விரதம் இருப்பார்கள். நல்ல கணவனை வேண்டி. முன் காலங்களில் மார்கழிப் பௌர்ணமி அன்று இது ஆரம்பிக்குமாம். நம் ஆண்டாள் காலத்தில் மார்கழி மாதம் முதல் தேதி ஆரம்பித்திருக்கலாம். கண்ணனுக்காக விரதம் இருந்தாள் ஆண்டாள். அவனோடு ஐக்கியம் ஆக வேண்டித் தன் தோழிப் பெண்களோடு விரதம் இருந்து சரியாக 27 ஆம் நாள் அதை முடித்தாள். விரதம் இருக்கும் நாட்களில் நெய், பால் போன்றவை உண்ணாமல் தலையில் மலர் சூடாமல், கண்களுக்கு மை தீட்டாமல் மிகவும் சிரத்தையோடு விரதம் இருந்து பின்னர் இன்று கண்ணனைக் கண்ட மகிழ்வில் நெய்யாலும், பாலாலும் வேக வைத்த அக்கார அடிசில் செய்து நிவேதனம் செய்து தோழிப் பெண்களோடு கூடி இருந்து உண்கிறாள். என்ன அமிர்தமாக இருந்தாலும் அதைக் கூடி இருந்து தான் உண்ண வேண்டும் அல்லவா? அதுவும் இங்கே சொல்லப்படுகிறது!

      Delete
    2. அக்கார அடிசில் செய்முறையை இந்தச் சுட்டியில் காணலாம். ஏழு வருடங்கள் முன்னர் மரபு விக்கியில் சேர்த்தேன். https://tinyurl.com/o8cpt9v

      Delete
    3. திருவெம்பாவையும் .. நல்ல கணவனை அடைவதற்கான விரதம்தானே...

      Delete
    4. ஆமாம் அதிரா, ஆனால் அதிலே மாணிக்கவாசகர் தன்னைப் பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டு பாடிய பாடல்கள். இதில் ஆண்டாளே கண்ணனை அடைய வேண்டிப் பாடியவை! ஆண்டாள் கதை தெரியும் தானே!

      Delete
    5. https://tinyurl.com/y9dfghha இந்தச் சுட்டிக்குப் போனால் திருவெம்பாவை விளக்கங்கள் எளிமையா எழுதிய பதிவுகளைப் படிக்கலாம். 2011 ஆம் ஆண்டில் எழுதியவை! தத்துவம் கிட்டே எல்லாம் போகலை!

      Delete
  4. வணக்கம் சகோதரி

    மிகவும் அழகாக கூடாரவல்லியைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.கூடாரம் என்பதற்கு தாங்கள் அளித்த விளக்கமும் நன்று. இறைவன் மேல் என்ன ஒரு காதல்,அன்பு,பாசம்.. இது இந்த பூவுலகில் எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுமா என்ன? ஆண்டாண்டு காலம் தவமிருந்தாலும், பூர்வ ஜென்ம புண்ணியங்கள், கொடுப்பினைகள் இவை செய்திருக்க வேண்டுமே.! அத்தகைய சுவையான வரலாறு நிகழ்வினை ரசித்துப் படித்தேன். தாங்கள் தந்த மீள் பதிவு சுட்டிக்கும் சென்று மற்றொரு முறை ஆசை தீர ஆண்டாளின் அற்புத பக்தியை பரவசத்துடன் படித்தேன். அதற்கு வந்த கருத்துக்களில். வந்த சுட்டியொன்றில் அண்ணன் தங்கை பாசத்தை விளக்கிய அழகான ஒரு பதிவையும் ரசித்துப் படித்தேன். இப்படி இன்றைய தினத்தில் மூன்று பதிவுகளில் இணைந்து சூடிக் கொடுத்த சுடர் நாச்சியாரின் பக்திபபெருக்கை படிக்க வைத்தமைக்கு தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, உங்களுக்கு இரு முறை பதில் எழுதியும் மின்சாரக்கோளாறால் போகவில்லை. எழுதியதைச் சேமிக்கவும் முடியலை! ஏற்கெனவே இணையம் வேறே செர்வர் டவுன் என்று சொன்னார்கள். :)))) இப்போ மூன்றாம் முறையாக் கொடுக்கிறேன்.

      Delete
    2. இதில் என்னோட திறமை ஏதும் இல்லை. இந்த மார்கழி மாதமும் பாவை நோன்பும் பற்றிப் பரிபாடலிலேயே சொல்லப்பட்டிருக்கிறது, காத்யாயனி நோன்பு என்றும் அம்பா நீராடல் என்றும் பெண்கள் வைகைக்கரையில் செய்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தான் காலமாற்றத்தில் மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளில் ஆண்டாள் ஆரம்பித்து வைத்திருக்கிறாள். அதன் பின்னர் ஏற்பட்ட் இன்னும் அதிகக் காலமாற்றத்தில் நாம் மார்கழி மாதம் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கிறோம். இங்கே சில விபரங்கள் இந்தச் சுட்டியில் காணலாம். பழைய நண்பர். இப்போது முகநூலில் ஐக்கியம். ஆகையால் பதிவு
      எழுதுவதில்லை. நல்ல தேர்ந்த ஆன்மிக எழுத்தாளர். http://maduraiyampathi.blogspot.com/2007/12/blog-post_12.html சக்தி உபாசகரும் கூட! இது போன்று பல பதிவர்கள் அப்போதெல்லாம் 2005-2010 வரை எழுதிக் கூடிக்களித்த காலம் இப்போது மறைந்து விட்டது! :( யாருமே இப்போது எழுதுவது இல்லை. இந்தக்குழுவில் தொடர்ந்து எழுதுவது நான் ஒருத்தி தான் என நினைக்கிறேன். :( என்றாலும் எழுத்து இணையத்தில் என்றென்றும் நிலைபெற்றிருக்குமே! உங்களைப் போன்ற இப்படியான பலரின் சேர்க்கை தான் என்னையும் கொஞ்சமானும் எழுத வைக்கிறது. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. அன்பின் மிகுதியால் பாராட்டி உள்ளீர்கள்.

      Delete
  5. ////" என் அண்ணாரே, தங்கையின் வேண்டுகோளை ஒரு அண்ணன் தான் நிறைவேற்றுவான். என் வேண்டுதலை நிறைவேற்றிய நீர் என் அண்ணார்!" ////

    ஓ நம் வேண்டுகோளை நிறைவேற்றினால் அவர் நம் அண்ணனாவாவோ?.. ஆவ்வ்வ்வ் இதை வச்சே நிறைய விசயங்களை இங்கின சாதிச்சிடுறேன் பாருங்கோ.. ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. அமுதசுரபி, இந்த அண்ணன்கள் எல்லோருமே பாசமலர் ஜிவாஜிக்குச் சவால் விடக்கூடியவங்களாக்கும்! என்னனு நினைச்சீங்க? ஹாஹாஹா! நீங்க என்ன சாதிக்கப் போறீங்கனு பார்ப்போம். :) முதல்லே உங்க வேண்டுகோள் என்ன? அதை நிறைவேற்றித் தரப்போகும் அண்ணன் யார்? நினைப்பில் இருக்கட்டும். நீங்க தான் எல்லோருக்கும் பெரியவங்க! எல்லோரும் உங்களை விடச் சின்னவங்க! ஆகவே எல்லோருமே தம்பிங்க தான்! இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? :))))

      Delete
    2. ///நீங்க தான் எல்லோருக்கும் பெரியவங்க! எல்லோரும் உங்களை விடச் சின்னவங்க! ///

      இது என் அறிவுக்குத்தானே ஜொள்றீங்க?:) நேக்கு ஷை ஷையா வருதூஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா:))..

      என் குழை:) ஜாதம் செய்து காட்டச்சொல்லிச் சொல்லப்போறேன்ன் அண்ணன்மாரிடம்:))

      Delete
    3. அதிரடி, குழை "ஜா"தமா? சரியாப் போச்சு! :)))))

      Delete
  6. கூடாரவலித் திருநாள் என்றே வைத்திருக்கலாமோ. பெண்களுக்கும் பெருமை சேர்ந்திருக்கும்:).. இது வல்லியை எடுத்துப் போட்டு ரை போட்டிட்டினமே கர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மறுபடி தமிழிலே "டி" வாங்கினேன்னு சொல்லாதீங்க! அது கூடாரவலி இல்லை. கூடாரவல்லி! கூடாரவல்லித் திருநாள்னு தான் பேரே! பெண்களுக்குப் பெருமை சேர்த்துத் தானே சொல்லி இருக்காங்க! ஒழுங்காப் படிக்கிறதில்லை. அங்கே கூடாரவல்லினு எழுதாம "கூடாரை"னு எழுதினதுக்குக் காரணம் பதிவிலே இருக்கே! கூடாரை! நாம் சேரக் கூடாத்வரைச் சொல்லும் வார்த்தை அது! அர்த்தம் புரிஞ்சு படிச்சால் தானே! அக்கார அடிசிலை நினைச்சுட்டுப் படிச்சால்? :)))))))

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
    3. இஃகி, இஃகி

      Delete
  7. // "என் அண்ணாரே!" //

    மனம் ஏனோ நெகிழ்ந்து அழுது விட்டேன் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. டிடி, உண்மை. ஶ்ரீவில்லிபுத்தூரில் பட்டாசாரியார் இதைச் சொன்னபோது எனக்கும் அழுகை வந்தது. இப்போதும் படிக்கையில் கண்களில் கண்ணீர் கசியும். இதைத் தவிர்த்து இன்னொரு பாசுரம் பெரியாழ்வார் பாடியது,
      ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்
      திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்
      பெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை
      மருமக ளைக்கண்டு கந்து மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ

      இதைப்படிக்கையில் ஒவ்வொரு முறையும் பெண்ணைப் பெற்று வளர்த்துத் திருமணம் செய்து கொடுத்து அவள் பிரியும் நேரத்தை நினைத்துக் கண்களில் கண்ணீர் வந்துடும்.

      Delete
  8. கூடாரவல்லியைப்பற்றி அறிந்தேன் நன்று நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! நன்றி.

      Delete
  9. திருப்பாவை தமிழின் பொக்கிஷம் நல்ல இறை இலக்கியங்களில் ஒன்று நோன்பு நோற்கிறார்களோ இல்லையோ 27ம் நாள் அக்கார வடிசில் மட்டும் தவறாது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா. கருத்துக்கு நன்றி. அக்கார அடிசில் எல்லோரும் செய்வதில்லை என்றே நினைக்கிறேன். எங்க வீட்டில் உண்டு. இந்த வருஷம் ரொம்பக் கொஞ்சமாச் செய்தேன்.

      Delete
  10. தங்கையின் வேண்டுகோளை நிறைவேற்றிய அண்ணன். ஏதோ நம் இல்லத்தில் நடப்பதைப் போல இருந்த நிகழ்வு. இத்தகு அன்னியோன்னியம்தான் நம்மை இறை சக்தியிடம் அணுக்கமாக்குகிறது. மனம் நெகிழ்ந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவரே. விரிவான கருத்துக்கு நன்றி.

      Delete
  11. எங்கள் வீட்டிலும் பொங்கல் மாதிரி ஒன்று செய்து அதற்கு அகாரஅடிசில் என்று பெயரிட்டோம்!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ஸ்ரீராம், பொங்கல் இன்று செய்வதில்லை. அக்கார அடிசில் தான். சேர்க்கும் சாமான்கள் ஒன்றாக இருந்தாலும் இது கொஞ்சம் தளர இருக்கும். முழுக்க முழுக்கப் பாலிலேயே வேக வைக்கணும். ஒரு கிண்ணம் அரிசியும், அரைக்கிண்ணம் பருப்பும் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்குப் போதுமானது. மேலும் குக்கரில் வைக்கக்கூடாது. நேரிடையாகவே வேக வைக்கணும். பால் நல்ல தரமான பால் எனில் ஒரு லிட்டர் வேண்டும். வெல்லம் அவரவர் சுவைக்கு ஏற்ப. நெய் கால் கிலோ தேவை! (இன்னும் சேர்த்தால் தான் நல்லா இருக்கும். என்றாலும் குறைந்த பட்ச அளவைச் சொல்கிறேன்.) அரிசி, பருப்புப் பாலில் கரைந்து வெல்லம் சேர்த்த பின்னர் நெய்யை விட்டுக் கிளறிக்கொண்டே இருக்கணும். :)))))

      Delete
  12. அக்கார அடிசில் போல
    அருமையான பதிவு...

    கோதை நாச்சியாரின் நல்லருள்
    எல்லாருக்குமாகட்டும்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, ஸ்ரீரங்கம் வந்ததில் இருந்தே எங்கள் வேண்டுகோள் எல்லாம் ஆண்டாளிடமே சமர்ப்பிக்கிறோம். அவளும் அருள் பாலிக்கிறாள். ஆண்டாள் திருவடிகளே சரணம்!

      Delete
  13. கூடாரை நேற்று உங்க பதிவு வந்திருக்கும்னு தோணவே இல்லை பாருங்க...அப்ப இன்று கற்றுக்கறவை வரும்னு பார்க்கிறேன்

    நேற்று அக்காரைவடிசல் செஞ்சு உம்மாச்சிக்கு வைச்சு சாப்பிட்டாச்சு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மார்கழி மாதப்பதிவுகள் தினம் தினம் எல்லாம் இப்போப் போடுவதில்லை தி/கீதா. நேற்றுத் திடீரென நினைத்துக் கொண்டு கூடாரவல்லிக்காகப் பதிவைப் போட்டேன். வருகைக்கு நன்றி. இங்கேயும் அக்கார அடிசில் செய்தேன். இரண்டு கரண்டி அரிசி+அதற்கேற்ற பருப்புச் சேர்த்து. அதைச் சாப்பிடவே ஆள் இல்லை. :)

      Delete
  14. மிக அருமையான பதிவு கீதாமா. ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ராமானுஜர்
    அண்ணன், தங்கையானது.
    தனியனிலேயே வருகிறது. பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே என்றூ.

    எத்தனையோ உலக அதிசயங்கள் சொல்கிறார்கள்.
    எங்காவது விக்கிரகம் நகர்ந்து கேள்விப்பட்டது உண்டா.
    எத்தகைய பரிபூர்ணானுபவம் இது.

    பகவத் சங்கல்பம் நமக்குத் தெரிய வந்ததே நம் பாக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, தாமதமாய் வந்தாலும் அருமையான கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

      Delete