எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 26, 2019

சாமவேதீஸ்வரர் கோயில் படங்கள் தொடர்ச்சி!

தம்பி வந்திருந்தபோது அவருடனும் அவர் மூத்த மகன், மனைவி ஆகியோருடனும் லால்குடி அருகே உள்ள சாமவேதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயிலின் சிறப்பு உலகிலேயே வேதத்திற்கென உள்ள ஒரே கோயில் அதுவும் சாமவேதத்துக்கான கோயில் என்றார்கள். இங்கே பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொள்ள இங்கே வந்து வழிபட்டிருக்கிறார்.  ஹிஹிஹி, அவரும் சாமவேதம் தானே!  பரசுராமேஸ்வரம் என்னும் பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டதாய்ச் சொல்கின்றனர். இங்குள்ள தீர்த்தமும் பரசுராமர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. தன் தாயைக் கொன்ற மாத்ரு ஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ளப் பரசுராமர் இங்கே வந்ததால் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இங்கே வந்து சாமவேதீஸ்வரர் சந்நிதியிலும், உலகநாயகி சந்நிதியிலும் நெய்யால் பதினோரு விளக்கேற்றி வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயில் பிரகாரத்தின் தென் திசையில் பரசுராமர் வழிபட்ட லிங்கம் இருக்கிறது.  முருகப் பெருமான் இங்கே வள்ளி, தெய்வானையுடன், ஆறு முகங்கள், ஆனால் நான்கு கைகளோடு காட்சி கொடுக்கிறார். வள்ளியை மணந்த பின்னர் முருகன் இங்கே வந்ததாகவும், அதனால் வள்ளி மட்டும் தனியாக மயில் வாகனத்திலும், முருகனும் தெய்வானையும் நின்ற கோலத்திலும் காட்சி கொடுப்பதாய்ச் சொல்கின்றனர். ஆனாய நாயனாருக்கு இங்கே தான் முக்தி கிடைத்ததாகவும் சொல்கின்றனர்.  ஆனாய நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. இவருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும், அம்பிகையும் தனிச் சந்நிதியில் அருள் பாலிக்கின்றனர்.

இந்தக் கோயிலில் அதிசயத்திலும் அதிசயமாக மகாமண்டபத்தைத் தாண்டி உள்ள அர்த்த மண்டபத்தில் கருவறைக்கு ஏறும் படிக்கட்டுகளின் அருகேயே வலப்பக்கமாகச் சண்டேஸ்வரர் வீற்றிருக்கிறார்.இதன் சிறப்பு குறித்து குருக்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. இதைத் தவிரவும் வடக்குப் பிரகாரத்தில் தனிச் சந்நிதியில் சண்டேஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். நவகிரஹங்களும்  வடகிழக்கு மூலையில் காணப்பட்டாலும், சூரிய, சந்திரர்கள், சனைசரனோடு  தனியாகவும் கோயில் கொண்டிருக்கின்றனர்.  சனைசரனின் காக வாகனம் வடக்கு நோக்கி அமைந்திருப்பதை விசேஷமாகச் சொல்கின்றனர். சனி ப்ரீதி செய்பவர்களும் இங்கே வந்து செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.  சனிப்பெயர்ச்சியின் போது இந்தக் கோயிலுக்கும் சனி பகவானுக்குப் ப்ரீதி செய்ய வேண்டி மக்கள் கூட்டமாக வந்து வழிபடுவார்கள் எனச் சொல்கின்றனர். பைரவர் இங்கே தனியாக இருக்காமல் கால பைரவருடன் காட்சி தருகிறார். இரவு நேரத்தில் பைரவர் பாதத்தில் வைத்து வழிபட்ட விபூதி தீராத பிரச்னைகளைத் தீர்க்கும் எனச் சொல்லப்படுகிறது. கோஷ்டத்தின் தென் திசையில், பிக்ஷாடனர், தக்ஷிணாமூர்த்தி, உதங்க முனிவர் ஆகியோர் காணப்படுகின்றனர். தக்ஷிணாமூர்த்தி சின் முத்திரை காட்டாமல் அபய ஹஸ்தத்தோடு காணப்படுகிறார்.  தல விருக்ஷம் பலா மரம். தேனில் ஊறிய பலாச்சுளைகளை நிவேதனம் செய்து மக நக்ஷத்திரத்தன்றும்,  சனிக்கிழமையன்றும்  இக்கோயிலைப் பதினோரு பிரதக்ஷிணம் வந்து நிவேதனம் செய்து விநியோகம் செய்வது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

இது தேவார வைப்புத்தலமாகச் சொல்லப்படுகிறது.  தேவார வைப்புத் தலம் எனில் தனியாகப் பதிகங்கள் மூலம் குறிப்பிடப் படாமல் வேற்றூர்ப் பதிகங்களின் இடையிலும் பொதுவான பதிகங்களிலும் குறிப்பிடப்படும் தலங்கள் தேவார வைப்புத் தலங்கள் எனப்படும்.  தேவாரத் தலங்கள் 276 தலங்களில் இருந்து இவை வேறுபட்டவை ஆகும். வைப்புத் தலங்கள் மொத்தம் 147 இருப்பதாகச் சொல்கின்றனர்.  திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும்  இந்தக் கோயில் ஈசனையும், அம்பிகையையும் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர்.


ஞானசம்பந்தப் பெருமானின் இடர் களையும் திருப்பதிகம்


திருநாவுக்கரசரின் போற்றிப் பதிகம். (மாணிக்க வாசகரின் போற்றித் திரு அகவலுக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு.)


நாவுக்கரசப் பெருமானின் பஞ்சாக்கரத் திருப்பதிகம்






கோயிலில் சாமவேதீஸ்வரர் சந்நிதியின் வெளியே



முன் மண்டபத்தில் தூணில் வீற்றிருக்கும் நம்மாளு




அம்பிகை லோக நாயகி



கோயில் வெளிப்பிரகாரம். எதிரே தெரிவது வாகன மண்டபம். இந்தக் கோயிலுக்கு 300 ஏக்கர் நிலங்கள் உள்ளனவாம். ஆனால் இருபது ஏக்கரில் இருந்து கொடுத்தாலே பெரிய விஷயம் என்கின்றனர். குருக்கள் பரம்பரையாக வந்தவர் என்பதால் இறைவன் மேல் உள்ள பக்தி காரணமாக இதை ஒரு தொண்டாகச் செய்து வருகிறார். மேலும் அவர் மகன், மாப்பிள்ளை ஆகியோர் வெளிநாட்டுக் கோயில்களில் குருக்களாக இருப்பதால் அவர்கள் அனுப்பும் பணத்தில் இருந்தும் தேவையானபோது சாமவேதீஸ்வரருக்கும் செலவு செய்து கொள்கிறார். கோயிலில் ஊழியர்களும் உள்ளனர். அறநிலையத் துறை அலுவலகம் இயங்குவதாய்த் தெரியவில்லை. 



வெளிப்பிரகாரத்தின் இன்னொரு பகுதி


வெளிப்பிரகாரம்



வெளிப்பிரகாரம்


முன் மண்டபத்தில் காணப்பட்ட அம்பிகையின் ஓவியம்





தெருவில் இருந்து கோயிலின் ராஜ கோபுரம். தெரு சுத்தமாக இருக்கிறது. எங்கும் குப்பைகளோ, ப்ளாஸ்டிக், பேப்பர்களோ பறக்கவில்லை. இருபக்கமும் வீடுகள் இருந்தாலும் எல்லா இடங்களும் பெருக்கிச் சுத்தமாக வைத்திருக்கின்றனர். 




தெருவின் இன்னொரு பகுதி. கோபுரத்துக்கு எதிரே காணப்படும் பகுதி. இங்கேயும் சுத்தமாக இருப்பதைக் காண முடியும்.




68 comments:

  1. படங்கள் அருமை அம்மா...

    ReplyDelete
  2. கோயில் பற்றி பக்கா விளக்கங்கள்! எப்படி அத்தனையும் நினைவில் அழகா வைத்துக் கொண்டு சொல்லறீங்க...வட கிழக்கு, சனைஸ்வரன் காக வாகனம் வடக்கு நோக்கி, முருகன் ஆறுமுகன் ஆனால் நான்கு கைகள் என்றெல்லாம்!!! செம மைன்யூட் டிடெய்ல்ஸ்!! நல்ல அப்சர்வேஷன் கீதாக்கா...

    நான் எல்லாம் போனா பாதத்தை முதல்ல பார்த்திடுவேன் கண்ணை மூடி பாதத்தை நினைத்து அம்புட்டுத்தான்...கொஞ்ச நேரம் மனதை அமைதியா வைத்துக் கொண்டுவிட்டு அம்புட்டுத்தான்...

    உங்கள் விவரணம் செம அக்கா!! பாராட்டுகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, குறிப்புக்கள் தான் உதவின. மற்றபடி நினைவெல்லாம் ஓரளவுக்குத் தான்! ஆறுமுகன் வள்ளி தனியாய் இருந்ததால் நினைவில் இருக்கிறான். சனைச்வரனுக்கு எல்லாக் கோயிலிலும் தனிச் சந்நிதி கிடையாது. ஆகவே இம்மாதிரியான விஷயங்கள் சட்டென்று மனசில் நிற்கும்.

      Delete
    2. எனக்கும் அதே தோன்றியது கீதா க்கா...எப்படி இவங்க இவ்வோளோ நியாபகம் வச்சி இருகாங்க ன்னு ...

      செம்ம

      Delete
    3. @அனுராதா, உடனே எழுதினால் நினைவில் எல்லாம் அநேகமாய் வந்துடும். அப்படியும் சில விடுபட்டும் போகும். எல்லோரும் மனிதர்கள் தானே!

      Delete
  3. தேனில் ஊறிய பலாச்சுளைகளை நிவேதனம் செய்து மக நக்ஷத்திரத்தன்றும், சனிக்கிழமையன்றும் இக்கோயிலைப் பதினோரு பிரதக்ஷிணம் வந்து நிவேதனம் செய்து விநியோகம் செய்வது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.//

    ஆஹா இதுதான் நம்ம கண்ணுல பளிச்சுனு படுது!!! ஹிஹிஹிஹி...அருமையான பிரசாதம்!!

    கீதா


    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, இஃகி, இஃகி, முதல்லேயே தெரிஞ்சிருந்தால் வாங்கிட்டுப் போயிருக்கலாம். நாங்க போனது சனிக்கிழமை தான். பிரசாதம் குருக்களே பெருமாள் கோயில் பட்டாசாரியாரிடம் சொல்லிப் பண்ணிக் கொண்டு வந்துட்டார். :))))

      Delete
  4. இது தேவார வைப்புத்தலமாகச் சொல்லப்படுகிறது. தேவார வைப்புத் தலம் எனில் தனியாகப் பதிகங்கள் மூலம் குறிப்பிடப் படாமல் வேற்றூர்ப் பதிகங்களின் இடையிலும் பொதுவான பதிகங்களிலும் குறிப்பிடப்படும் தலங்கள் தேவார வைப்புத் தலங்கள் எனப்படும். //

    இது இப்பத்தான் இந்த மாதிரி விஷயமே தெரிந்து கொள்கிறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பலருக்கும் தேவாரத் தலங்களுக்கும், வைப்புத் தலங்களுக்கும் உள்ள வேறுபாடு புரியறதில்லை. ஆகவே இங்கே முன் கூட்டியே சொல்லிடலாம்னு சொல்லிட்டேன். :)))))

      Delete
  5. நம்ம தோஸ்து பளிச்சுனு சூப்பரா இருக்கிறார். சுத்தமாகவும் இருக்கிறது அந்த இடமும் கோயிலும் கூட.

    பிராகாரம் எல்லாம் பெரிதாகவே இருக்கிறது கோயிலும் பெரிதுதான் இல்லையா?

    //மேலும் அவர் மகன், மாப்பிள்ளை ஆகியோர் வெளிநாட்டுக் கோயில்களில் குருக்களாக இருப்பதால் அவர்கள் அனுப்பும் பணத்தில் இருந்தும் தேவையானபோது சாமவேதீஸ்வரருக்கும் செலவு செய்து கொள்கிறார்.//

    மிக மிக நல்ல விஷயம்.

    //அறநிலையத் துறை அலுவலகம் இயங்குவதாய்த் தெரியவில்லை. //

    அதான் நம்ம ஊரு!!!!!!!!!!!! புதுக் கோயிலாகவும் இல்லையே பழைய கோயிலாகத்தானே இருக்கிறது!! ஏன் அறநிலையத் துறை இல்லை?

    தெருக்களும் மிக மிக சுத்தமாக இருக்கிறது. கோயிலும் அப்படியே!!

    உங்க படங்களும் அருமையா இருக்கு அக்கா

    கீதா



    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தி/கீதா, கோயிலைப் பார்த்தாலே மிகப் பழமை என்று தெரிந்தது. அதோடு ஜேஷ்டா தேவியும் பார்த்த நினைவு! ஜேஷ்டா தேவி இருந்தால் அந்தக் கோயில் மிகப் பழமையான கோயில். ஊரே பளிச்சென்று சுத்தமாக இருந்தது.

      Delete
  6. சாமவேதீஸ்வரர் கோவிலுக்கு எப்படிச் சென்றீர்கள் (டாக்சியிலா?). உணவுக்கு குருக்கள்ட சொன்னீர்களா இல்லை தயார் செய்து எடுத்துக்கொண்டு சென்றீர்களா?

    ReplyDelete
    Replies
    1. நெ.த. எங்க வீட்டிலிருந்து லால்குடி கிட்டே என்று ஏற்கெனவே முந்தைய பதிவில் சொல்லி இருந்தேனே!லால்குடியே அரை மணி நேரம்தான்! குருக்கள் கிட்டே எதுக்குச் சாப்பாட்டுக்குச் சொல்லணும். பிரசாதம் கொடுத்தார். டப்பாக்கள் எடுத்துச் சென்றிருந்தோம். வாங்கிட்டு வந்து அக்கம்பக்கம் விநியோகித்தோம். :))) சர்க்கரைப் பொங்கல்(நிஜம்மாவே சர்க்கரை போட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வெல்லம் போட்டால் அந்தச் சுவையே தனி!) வெண் பொங்கல்! நெய் ஒழுக நன்றாகவே இருந்தது. இங்கேருந்து ட்ராவல்ஸ் வண்டியில் போயிட்டு வந்தோம். ரெட் டாக்சியில் பெரிய வண்டி கிடைக்கலை!

      Delete
  7. கோவிலும் சுத்தமா இருக்கு. படங்களும் (கைநடுக்கமில்லாமல்) நல்லா வந்திருக்கு.

    பஞ்சாக்கரம் - என்பது தட்டச்சுப் பிழை என்று நினைத்தேன். கல்வெட்டைப் பார்த்தால், பாடல் அமர்க்களமாக ஆரம்பிக்கிறது.

    துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் (தூங்கும் போதும், தூங்காதபோதும்)
    நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் (தினமும் நெஞ்சம் கசிந்து நினையுங்கள்)
    வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற் (நெஞ்சத்தை ஒருமுகப்படுத்தி அந்த இறைவனையே நினைந்திருந்ததால்-மார்க்கண்டேயன், உயிரை எடுக்க வந்த கூற்றுவன்)
    றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே. (நடுங்கும்படியாக அவனை உதைத்தது ஐந்தெழுத்து).

    ஆமாம்... ஐந்தெழுத்து என்பது 'நமசிவாய' என்பதா? 'ஓம் நமசிவாய' என்றுதானே சொல்வது வழக்கம்?

    ReplyDelete
    Replies
    1. நெ.த. கை நடுக்கம், கை நழுவல் எல்லாம் உங்களுக்குத் தான்! நமக்கெல்லாம் இல்லை. பஞ்சாக்கரம் என்றே சைவ சித்தாந்தங்களில் சொல்லுவார்கள். ஐந்தெழுத்து நாமம் தான் உண்டு. ஓம் கணக்கில் எடுப்பதில்லை. நமசிவாய, சிவாயநம, என்பதையே மாற்றி மாற்றி ஜபிக்கையில் எழுத்துக்கள் மாறி வாசிவாயநம என்றெல்லாம் வரும். குரு மூலம் கேட்டு ஜபிக்க வேண்டும். முன்னால் அண்ணாமலையார் குழுமம் என்று ஒன்று இருந்தது. அதில் இதைப் பற்றி எல்லாம் நன்றாக விபரமாகச் சொல்லுவார்கள் கலந்து பேசி இருக்கோம்! இப்போது அம்மாதிரி ஆன்மிகக் குழுமமே இல்லை! :( பக்தி இல்லை! ஆன்மிகம்!

      Delete
  8. /.இதன் சிறப்பு குறித்து குருக்களுக்குச் சொல்லத் தெரியவில்லை./நல்லதாய்ப் போயிற்று என்ன தவறு செய்தாலும் பிராயச்சித்தங்கள் இருக்கிறது என்று சொல்வதால்தானோ குறைகள் குறைவதில்லை வேறுவேதங்களுக்கு கோவில்கள் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, வேறு வெதங்களுக்குக் கோயில் இருப்பதாகத் தெரியவில்லை. தவறே செய்யாதவர்கள் இந்த உலகிலேயே இல்லை. அதில் தெரிந்து செய்பவை, தெரியாமல் செய்பவை என இருக்கே!

      Delete
  9. கோயில்க் கதை அருமை... படங்கள் நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தீர்க்கதரிசி! என்ன வழக்கமான பேச்சைக் காணோம்? இன்னும் தூக்கம் தெளியலையோ? :))))

      Delete
    2. அது கீதாக்கா ..சாமீ கடவுள் விஷயம்னா நாங்க ரெண்டுபேரும் சகலமும் அடங்கி சுருட்டி ரொம்ப நல்ல பிள்ளைகளாகிடுவோம்

      Delete
    3. ஹாஹா, அதிரடி, ஸ்கூல்லே இருக்கிறச்சே இணையம் மட்டும் பார்க்கலாமாக்கும்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))

      Delete
    4. ஹாஹாஹா, ஏஞ்சல்! ஜூப்பரு! அப்படியானும் அதிரடி அடங்கி ஒடுங்கி இருக்குமே! ஜாலியோ ஜாலி! இனிமே உம்மாச்சி பெயரைச் சொல்லி பயமுறுத்தலாம்! :)))

      Delete
  10. ///இரவு நேரத்தில் பைரவர் பாதத்தில் வைத்து வழிபட்ட விபூதி தீராத பிரச்னைகளைத் தீர்க்கும் எனச் சொல்லப்படுகிறது. ///

    கீசாக்கா கொஞ்சம் அள்ளி வந்திருக்கலாமே:).. இங்கின பலபேருக்கு தேவைப்படுது:)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, பைரவரைப் பார்க்கும்போது உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். :)))))

      Delete
  11. மிக அமைதியான கிராமப்புற சூழலில் அமைந்திருக்கிறது போலும் கோயில்... இப்படி இடங்களுக்குப் போனால் மனதுக்கு அமைதி கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தீர்க்கதரிசி! கோயில் வயல்கள் சூழ இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வயல்கள் கொஞ்சம் தள்ளி இருக்கின்றன.

      Delete
  12. கோவில் விவரங்கள் மிக அருமை.
    படங்கள் எல்லாம் மிக அழகு.
    லோகநாய்கி லோகத்தை நன்றாக வைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு, உங்கள் பக்கமும் வரணும்! இங்கே நேரம் ரொம்பவே சரியாக இருக்கிறது.

      Delete
  13. வேதத்திற்கென கோவில் இருப்பது தெரியும். ஆனா விவரங்கள் தெரியாது. அழகிய படங்களுடன் தெரிந்துக்கொண்டேன். நன்றிம்மா!

    ReplyDelete
  14. அக்கா ஒரேயொரு டவுட் தந்தை சொல் மீறாமல் செய்தார் பரசுராமன் .அது பாவத்தில் சேருமா ? இல்லை பரசுராமருக்கு அம்மாவை கொன்றுட்டோமேன்னு மனசு கஷ்டப்பட்டிருக்குமா ?
    கோவில் வெரி க்ளீன் அப்படியே உக்காரலாம் ..அத்தனை சுத்தமா வைச்சிருக்காங்க ..ஊர் மக்களை பாராட்டணும் .
    உள்ளே ஒன்றிரண்டு மரங்கள் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், யாரைக் கொன்றாலும் தோஷம் வரத்தான் செய்யும். ராமருக்கு ராவணனைக் கொன்றதால் பாவம் ஏற்பட்டதே! ராமரை நாம் தெய்வமாக நினைத்தாலும் அவர் மனித உருவில் தானே இருந்தார். ஆகவே பாவம் செய்தது செய்தது தான். பரசுராமரும் விஷ்ணு அவதாரம் எனப்பட்டாலும் அவரும் மனுட வடிவிலே தானே இருந்தார். கோபம் நிறைய உண்டு. தந்தை சொல்லைத் தனயன் தட்டக் கூடாது என்பதற்காகத் தாயைக் கொன்றார். பின்னால் அதே தந்தையிடமே தாயின் உயிரைக் கேட்டு வாங்கவும் செய்தார். ஆகவே அன்னையிடம் அவருக்குப் பாசமும் இருந்திருக்கு என்பதும் தெரிகிறது இல்லையா? இதே பரசுராமர் தான் தன் பெற்றோரைக் கொன்றார்கள் என்பதற்காகக் கார்த்த வீர்யார்ச்சுனனைப் பழி வாங்கியதோடு அல்லாமல் 21 தலைமுறை க்ஷத்திரியர்களைக் கொன்றவர். இவருடைய இந்தப் பழிவாங்கும் கோபம் ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தின் போது தான் ஒரு முடிவுக்கு வந்தது. காச்யபரிடம் நிலத்தைக் கொடுத்துவிட்டு மேற்குக் கடற்கரையோரம் சென்றார். இப்போதைய கேரளா, கொங்கண் ஆகியவை பரசுராமரின் க்ஷேத்திரம் எனப்படுகிறது அல்லவா?

      Delete
    2. தாங்க்ஸ்க்கா ..எந்த சம்பவம்னாலும் அந்தந்த கேரக்டர்ஸ் எப்படி உணர்வாங்கனு அப்பப்போ திடீர்னு தோணும் அப்போ நேத்து இந்த பரசுராமர் பற்றி நினைச்சி வந்ததுதான் இந்த சந்தேகம் .

      Delete
    3. ஏஞ்சல், அதுவே தெய்வங்களின் சம்ஹாரம் என்பது வேறே! மஹிஷாசுரனை வதைத்தது, ஹிரண்யனை சம்ஹாரம் செய்தது, திரிபுர சம்ஹாரம், சூர சம்ஹாரம் என வரும்போது அதனால் மக்களுக்கும் தேவாதி தேவர்களுக்கும் நன்மையே விளையும் என்பதால்!

      Delete
  15. ​படங்களை ரசித்தேன்.

    ReplyDelete
  16. சண்டேஸ்வரர் - சண்டிகேஸ்வரர் ஒருவர்தானா?

    ReplyDelete
    Replies
    1. சண்டேசுவர நாயனார் என்பவர் சிவபெருமானின் 63 நாயன்மார்களுள் ஒருவராவார். விசாரசருமா என்ற இயற்பெயருடைய இவர் சிவபெருமானுக்கு லிங்க பூசை செய்து கொண்டிருந்த போது அவருடைய தந்தையே அதற்கு இடையூறு செய்தார். அதனால் கோபம் கொண்டவர் தந்தையை மழுவால் வெட்டினார். அதன் காரணமாக சிவபெருமான் தன்னுடைய பூசைக்கு உரிய பொருட்களுக்கு உரியவராக சண்டேசுவர் எனும் பதவியளித்தார்.

      சண்டேசுவர பதவியைப் பெற்றமையால் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவரை சண்டேசர், சண்டிகேசுவர் என்றும் அழைக்கின்றனர்.

      நன்றி/ விக்கிபீடியா! அவசரத்துக்கு! :))))

      Delete
    2. அது சரி...

      விசாரசர்மர் - மண்ணியாற்று மணலில் சிவபூஜை செய்த போது அபிஷேக பால்குடத்தை காலால் எற்றிய தந்தையை நோக்கி அருகில் கிடந்த கோலை எடுத்து எறிந்தார்..

      அது மழுவாக மாறி தந்தையின் காலைத் துணித்தது...

      மற்ற படிக்கு மாடுகளுக்கு மேய்த்துக் கொண்டிருந்த அவரிடம் மழு எல்லாம் இல்லை...

      சிவபெருமான் விசாரசர்மனைத் தனது அனுக்கத் தொண்டராக மாலை சூட்டினார்...

      சண்டிகேஸ்வரர் வேறு..
      சண்டீசநாயனார் வேறு என்கிறார்கள்...

      சண்டீச நாயனார் திருநாவுக்கரசரால் தேவாரத்தில் குறிக்கப்படுகிறார்...

      Delete
    3. ஆமாம், இது குறித்து எனக்கும் சந்தேகங்கள் உண்டு. தெளிவிக்கும்படி யாருக்கும் சொல்லத் தெரியவில்லை துரை. நாவுக்கரசர் தேவாரத்தில் உள்ளவரும் சண்டிகேஸ்வரரும் வேறே என்பது தான் என்னோட எண்ணமும்.

      Delete
  17. வழக்கம் போல பழம் பெருமை வாய்ந்த கோவில்கள் ஜனநடமாட்டம் இல்லாமல் வெறிச்சென்று இருக்கின்றன போலும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நிறையப் பேருக்கு இந்தக் கோயில்கள் பற்றித் தெரியலை!

      Delete
  18. படங்கள் மூலம் நாங்களும் அங்கே சென்றோம். தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். மெயில் பாருங்க! எனக்கே விடை கிடைச்சது! :)))))

      Delete
  19. அழகான சுத்தமான கோவில். அற நிலையத்தினர் , 300 ஏக்கர்களை இருபது ஏக்கர்கள் ஆக்கிவிட்டுப் போயாச்சு. இந்த குருக்கள் நன்றாக இருக்கட்டும். சாம வேதத்துக்கென்று ஒரு கோவில் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
    பித்ரு தோஷம், மாத்ரு ஹத்தி எல்லாம் நடுக்கம் கொடுக்கும் பாவங்கள்.
    பரிகாரமும் சொல்லி இருக்கிறார்களே.
    படங்கள் எல்லாமே கச்சிதமாக வந்திருக்கின்றன. ஊரே அழகாக இருக்கிறது.

    இங்கே எல்லாம் தண்ணீர்க் கஷ்டம் இருக்காது இல்லையாம்மா.
    பதிகங்கள் எல்லாம் படிக்க இனிமை.நன்றி கீதா மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. இங்கே தண்ணீர்க் கஷ்டம் எல்லாம் இல்லை. எனக்கு இப்படி ஒரு கோயில் இருப்பது தெரியும். ஒரு முறை போக எண்ணிப் போக முடியலை! இப்போத் தான் நேரம் வாய்த்தது! அதுவும் தம்பி தயவில்!

      Delete
  20. மனக்கவலை நீக்கும் திருத்தலங்கள் அருமை....

    ReplyDelete
    Replies
    1. ஜட்ஜ்மென்ட் சிவா, கடைசியா கொடுத்த ஜட்ஜ்மென்ட் என்ன? :))))

      Delete
  21. நேற்றிரவு பதிவைவப் படித்தேன்...
    பதிவில் கருத்துரை இட முடியவில்லை...

    படங்களை எல்லாம் இன்று தான் கண்டேன்...

    இனிய தரிசனம்..
    மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை, உங்கள் பதிவுகளுக்கும் வரணும். மத்தியானமா வரேன்.

      Delete
  22. பெரும்பாலான சிவாலயங்களில் ஈசானிய மூலையில் ஸ்ரீ வைரவருக்கு அருகே மேற்கு முகமாக சனைச்சரன் விளங்குவார்.. இயல்பாகவே காக்கை வடக்கு முகமாக இருக்கும்....

    இதில் என்ன விசேசம் என்று எனக்குத் தெரியவில்லை..

    ஒருவேளை காக்கா தனியாக வடக்கு முகம் பார்த்து இருக்கிறதோ...

    இப்படித்தான் வைரவருடைய வாகனத்தின் வால் சுருண்டு இருந்தால் அதற்கும் ஒரு கதை சொல்கிறார்கள்....

    எப்படியோ எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும்....

    அந்தப்பக்கம் காலார வாருங்களேன்....
    பங்குனிச் சேர்த்தியை அவசியம் படிக்க வேணும்...

    வாழ்க நலம்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், துரை, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம், கதை சொல்லி விடுகின்றனர். பாமர மக்களும் நம்புவார்களே! உங்கள் பதிவுகள், கோமதியின் பதிவுகள் படிக்கக் காத்திருக்கின்றன. இன்னிக்கு எப்படியானும் வரணும். :)))))

      Delete
  23. தெரிந்த ஊர், தெரியாத விவரங்கள். நன்றி.

    ReplyDelete
  24. இந்த பதிவை வாட்ஸாப்பில் எங்கள் குடும்ப குழுவில் பகிர்ந்து கொள்ளலாமா? எங்கள் மாமியின் ஊர் இது, அவரும் பார்ப்பார்.

    ReplyDelete
  25. தாராளமாய்ப் பகிரலாம். இது பொதுவான விஷயம் தானே! அதோடு என்னுடைய பதிவுகளும் பப்ளிக் தான்! :))))) யார் வேண்டுமானாலும் படித்துக் கருத்துச் சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. யார் வேண்டுமானாலும் (தைரியமிருந்தால்) சமையல் செய்குறிப்பைப் படித்துப் பார்த்துவிட்டு கருத்தைச் சொல்லலாம். பயப்படவேண்டாம் (நான் கருத,துச் சொல்வதற்குச் சொன்னேன்)

      Delete
  26. அண்மையில் விக்கிபீடியாவில் 147 தேவார வைப்புத்தலங்களைப் பற்றிய பட்டியலை (விக்கிபீடியாவில் தேவார வைப்புத்தலங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை மற்றும் அதே தலைப்பில் அந்தந்த கோயில்களின் பதிவுகளின்கீழ் ஒரு வார்ப்புரு எனப்படும் template) உருவாக்கி, விக்கிபீடியாவில் இதுதொடர்பாக இல்லாத புதிய கட்டுரைகளைச் சேர்த்தேன். பழைய பதிவுகளை மேம்படுத்தினேன். பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியுள்ள (தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009) இக்கோயில் காணப்படவில்லை. ஆனால் http://templesinsouthindia.com என்னும் தளத்தில் அருள்மிகு சாமவேதீஸ்வரர் திருக்கோயில் (திருமங்கலம்) என்ற தலைப்பில் உள்ள பதிவில் இக்கோயில் வைப்புத்தலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து அதனை உறுதி செய்வதற்கு நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா. இந்தப் பதிவு உங்கள் ஆய்வுக்கு உதவுவது குறித்து மகிழ்ச்சி. உங்கள் ஆய்வின் முடிவைத் தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கேன். இது தேவார வைப்புத்தலம் என்றே நானும் பார்த்தேன். கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  27. இடமும், கோவிலும் , வரலாறும் , படங்களும் அனைத்தும் அருமை ...

    குறித்துக் கொள்கிறேன் ,...அந்த பக்கம் செல்லும் வாய்ப்பு அமையும் போது தரிசிக்கிறோம் ...


    கமெண்ட்ஸ் லும் நிறைய தகவல்கள் படிக்க வேண்டும் ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுராதா, கருத்துக்கு நன்றி. அவசியம் போய் வாருங்கள்.

      Delete
  28. புதிய தகவல்கள் படங்கள் அருமை சகோ.

    ReplyDelete
  29. வாங்க கில்லர்ஜி! இன்னமும் வேலை மும்முரத்தில் இருக்கீங்க போல! தாமதமான வருகை? :)))))

    ReplyDelete
  30. வணக்கம் சகோதரி

    அழகான கோவிலை பற்றிய அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொண்டேன். வேதங்களில் ஒன்றான சாம வேததிற்கென ஒரு கோவில் என இன்றுதான் தெரிந்து கொண்டேன்.முன்பு ஆன்மிக மலரில் படித்து, நானும் கேள்விப்பட்ட மாதிரியும் இருக்கிறது. ஆனால் நினைவில் மழுங்கலானதால் இன்று தங்கள் பதிவின் மூலம் தெளிவாக புரிந்து கொண்டேன் . படங்களும் மிக அருமையாக எடுத்துள்ளீர்கள்.அழகான படங்களின் மூலமாக இறைவனை தரிசித்துக் கொண்டேன். நேரம் அமையும் போது இக்கோவிலுக்கும் சென்று வர வேண்டும்.

    கோவில் நன்கு பெரியதாய் இருக்குமென்று தோன்றுகிறது. பராமரிக்க நேரமும், செலவும் மிகுதியாக வேண்டும். கோவிலுக்கு செல்லும் தெருக்கள் மிகவும் சுத்தமாக இருக்கின்றன. பொதுவாக கோவிலை ஒட்டினாற்போல இருபக்கமும் வீடுகள் அமைந்திருந்தால் கோவிலின் அழகும் மாசுபடாமல் அழகாக மின்னும். அழகான கோவில், அருமையான தரிசனம் என தங்கள் பதிவால் கண்டு, கிடைக்கப் பெற்றேன்.

    நான்தான் தாமத வருகை..மன்னிக்கவும். என்னவோ நேரமே கிடைக்க மாட்டேன் என்கிறது. அனைவர் பதிவுகளையும் இனிதான் படிக்க வேண்டும். இரண்டு நாளாய் நெட் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை என பொழுதுகள் பறக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  31. சாமவேதீஸ்வரர் பெயர்காரணம் சொல்லலாமே

    ReplyDelete