புரந்தரதாசருக்கு அருளிய விட்டலன் முந்தைய பதிவின் சுட்டி.
அப்பண்ணா முகத்தில் புரந்தரதாசர் வெந்நீரை ஊற்றியது வரை சென்ற பதிவில் பார்த்தோம். அப்பண்ணா அங்கிருந்து அகன்று விட்டான் போலும். அதன் பிறகு சப்தமே இல்லை. புரந்தரதாசருக்கோ தான் செய்தது தவறு எனப் புரிந்து விட்டது. பொறுக்க மாட்டாத கால்வலியால் தனக்கு இவ்வளவு கோபம் வந்தது எனப் புரிந்தாலும். அப்பண்ணாவின் மேல் வெந்நீரைக் கொட்டியது மாபாவம் என்பதை உணர்ந்தார். இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்தார். விடிகாலை வேளையில் எழுந்து அப்பண்ணா படுத்து இருக்கும் இடம் சென்று அப்பண்ணாவை எழுப்பித் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். எழுந்து புரந்தர தாசர் சொன்னதைக் கேட்ட அப்பண்ணாவுக்கோ எதுவும் புரியவில்லை. தான் இரவு படுத்தது தான் தெரியும் என்றும், இப்போது தாசர் எழுப்பித் தான் எழுந்திருப்பதாகச் சொன்னான். தாசருக்கும் ஏதும் புரியவில்லை. அப்போ இரவில் வந்த அப்பண்ணா யார்?
பீமா நந்தியில் நீராடிவிட்டுப் பாண்டுரங்கனைக் காணச் சென்றார் தாசர். பாண்டுரங்கன் சந்நிதியில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. என்ன விஷயம் என விசாரித்த தாசருக்குத் தூக்கி வாரிப் போட்டது. பாண்டுரங்கன் முகம் முழுவதும் தீக்கொப்புளங்கள். தீப்பட்டாற்போலவோ அல்லது கொதிக்கும் வெந்நீரோ, எண்ணெயோ கொட்டியது போல் முகம் முழுவதும் காயங்கள்! அதைக் கேட்ட தாசர் கதறி விட்டார்! "என்னப்பா! பாண்டுரங்கா! இரவில் நீ தான் அப்பண்ணாவாக வந்தாயா? உன்னையா நான் காயப்படுத்தினேன்! இது என்ன லீலை அப்பா! நீ யாரென அறியாத பாபியான என் கோபத்தை அடியோடு ஒழிக்க நீ செய்த திருவிளையாடலோ? உன் அழகான முகத்தை என்னால் பார்க்க முடியாமல் போய் விடுமோ! இந்தப் பாபியை மன்னித்துக்கொள் பாண்டுரங்கா! நான் செய்தது மாபெரும் தவறு! அது நீயானால் என்ன? அப்பண்ணாவானாலென்ன? கொதிக்கும் வெந்நீரைக் கொட்டியது நான் செய்த தவறு தானே!" எனப் புலம்ப ஆரம்பித்தார். "உன் அழகுத்திருமுகத்தை எங்களுக்குக் காட்டு!" எனக் கதறி அழ ஆரம்பித்தார்.
கண்ணன் முகமும் புரந்தரதாசரின் உருக்கமான வேண்டுகோளில் முன்போலானது. அந்த அழகிய முகத்தைக் கண்டு மயங்கிய புரந்தரதாசர் அந்தத்தூணருகேயே உட்கார்ந்து கொண்டு பாண்டுரங்கன் மேல் பல்வேறு கீர்த்தனைகளைப் பாடினார். அந்தத் தூணுக்குப் புரந்தர தாசர் தூண் என்றே பெயர் என்பதோடு வருபவர்கள் அனைவரும் அதைக் கட்டிப்பிடித்து ஆசிகளை வாங்கிக் கொண்டே செல்கின்றனர். மஹாவிஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளும் மஹாபாரதக் கதைகளில் சிலவும் இந்தத் தூணில் சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றன. இந்தத் தூணைத் தாண்டிச் சென்றால் சில படிகள் மேலேறிச் சென்றால் கருவறை செல்லும் சிறிய பாதையில் துவாரபாலகர்களான ஜய, விஜயர்களுக்குச் சற்று முன்னால் வேத நூலும் துகாராமின் பாதுகைகளும் கண்ணாடிப்பேழையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் தான் கருவறைக்குள் நுழைய வேண்டும்.
இங்கே ஜாதி, மதம், இனம், குலம் , கோத்திரம் போன்ற எவ்விதமான வேறுபாடுகளும் இன்றி அனைவரும் பண்டரிநாதனைக் கிட்டே இருந்து தொட்டு வணங்க அனுமதிக்கப்படுகின்றனர். அன்று புண்டரீகன் போட்ட செங்கல்லின் மீது நின்ற பாண்டுரங்கன் அப்படியே சுயம்புவாக ஆவிர்ப்பவித்திருப்பதாக ஐதிகம். ஆனால் இப்போதுள்ள சிற்பம் மணற்கல்லால் உருவானதாகச் சொல்கின்றனர். எனக்கே நான் முன்னர் பார்த்ததற்கு இப்போ (பத்து வருஷங்கள் முன்னர் பார்த்தது) பாண்டுரங்கன் தேய்ந்து இளைத்தாற்போல் தோன்றினான்.காலின் கீழ் இருக்கும் பீடமும் மணல் கல் என்றே சொல்கின்றனர். தலையில் சிவலிங்க வடிவத்தில் கிரீடம் எனச் சொன்னார்களே எனத் தலையை உற்றுப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்குள்ளாக அப்புறப்படுத்தப்பட்டேன் என்பதே உண்மை! பாதங்களில் கைகளை வைத்துத் தலையை அவன் பாதத்தில் கிடத்திவிட்டு நிமிரும் முன்னரே காவல்துறைப் பெண்மணி ஒருவர் அங்கிருந்து என்னை அப்புறப்படுத்தினார். என்னை மட்டுமல்ல. எல்லோரையும் அப்படித் தான் அப்புறப்படுத்துகிறார். கோலாப்பூரில் காலை வேளையில் கருவறையில் பத்து நிமிஷங்களுக்கும் மேல் நிற்க முடிந்தது. ஆனால் இங்கே நிற்க முடியவில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்தேன். மெதுவாக நம்மவரும் அவனுக்குக் கொண்டு போன கார் அவலைச் சமர்ப்பித்துவிட்டு வந்து சேர்ந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து ருக்மாயியின் சந்நிதி சென்று அங்கே தரிசனம் செய்தோம். ருக்மாயிக்குப் பெண் அர்ச்சகர் ஒருவரே எல்லா வழிபாடுகளையும் செய்து வருகிறார். ரெகுமாயிக்குக் குங்கும அர்ச்சனை விசேஷம். குங்குமப் பிரசாதம் கேட்டோம். அவருக்கு என்னமோ அவர் தலையில் ஓர் பெரிய கிரீடத்தைச் சுமந்து கொண்டிருப்பதாக எண்ணம். யாரையும் லட்சியமே செய்யாமல் விரட்டிக் கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்து ராதா சந்நிதி, சத்யபாமா சந்நிதி போன்ற கோயிலின் மற்ற பாகங்களையும் பார்த்துக் கொண்டே மறுபடி முக்கிய வாயில் வழியாக வெளியே வந்தோம். வெளியே வந்ததும் தான் ஆட்டோக்காரப் பையரை எங்கே பிடிப்பது என்னும் கவலை வந்தது! ஆனால் என்ன ஆச்சரியம்! நாங்கள் அந்த வாசல் வழியாகத் தான் வெளியேறி வரவேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருந்த அந்த ஆட்டோக்காரப் பையர் அங்கே வந்து காத்திருந்தார். இப்போ எங்க செருப்புக்களைக் கண்டு பிடிக்க வேண்டும். வழி தெரியவில்லை. ஆட்டோக்காரரிடம் கேட்டுக் கொண்டு, ஏனெனில் ஆட்டோ அங்கே வராது! நாங்களே நடந்து சென்றோம். ஒருவழியாகத் தேடிக் கண்டுபிடித்துச் செருப்புக்களோடு ஆட்டோவுக்கு வந்தோம்.
இப்போ நம்மவருக்கு வேறு ஒரு எண்ணம் உதித்திருந்தது. கோயிலில் தரிசனத்துக்கு நின்றபோது காலை எத்தனை மணிக்கு தரிசனம் ஆரம்பம் எனக் கேட்டிருந்தோம். எல்லோருமே காலை எட்டரைக்குத் தான் தரிசனம் ஆரம்பிக்கும் என்றனர். எங்களுக்கோ எட்டரைக்குக் கிளம்பவேண்டும். அப்போக் கிளம்பினாலே சோலாப்பூர் போகப் பதினோரு மணி ஆகிடும்.அங்கிருந்து பதினோரு மணி இருபது நிமிடத்திற்குக் கிளம்பும் புனே வண்டியைப் பிடிப்பது கடினம். ஆகவே காலை தரிசனம் செய்யாமல் அன்றிரவே புனே கிளம்பிச் சென்று விடலாம் என்னும் எண்ணம் தான் அவருக்குத் தோன்றியது. ஆகவே வண்டியில் ஏறியதும் ஆட்டோக்காரரிடம்முதல்வேலையாக அங்கிருந்து புனே செல்லும் தனியார் பேருந்தில் இடம் இருக்கானு பார்க்கலாம்னு சொல்லவே அந்த ஆட்டோக்காரரும் சரினு அங்கே இருந்த பிரபலமான ட்ராவல்ஸ் கம்பெனிக்கு வண்டியை விட்டார். அங்கே கேட்டதுக்கு இரவு தினசரி வண்டி இருப்பதாகவும் அன்றைய வண்டி முழுவதும் நிரம்பிக் கிளம்பப் போகிறது எனவும் இனி மறுநாள் இரவு தான் தங்கள் வண்டி எனவும் சொல்லிவிட்டார்.
மறுபடி குழப்பம். அப்போ அங்கே இருந்த இன்னொரு ட்ராவல்ஸ்காரரின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் ஏதேனும் கார் கேட்கலாம் என நினைத்து நம்மவரும், அந்த ஆட்டோக்காரரும் என்னை வெளியே நிறுத்திவிட்டுச் சென்றனர். அங்கே போனவங்க திரும்பி வர முக்கால்மணிக்கும் மேல் ஆகிவிட்டது! என்னனு புரியாமலேயே நின்று கொண்டே இருந்தேன். கடைசியில் ஒருவழியாகத் திரும்பி வந்து மறுநாள் விடிகாலை ஆறு மணிக்கு அந்த ட்ராவல்ஸ்காரரின் ஒரு பேருந்து புனே செல்வதாகவும் அதில் எங்கள் இருவருக்கும் பயணச்சீட்டு முன்பதிவு செய்து விட்டதாகவும் சொன்னார். முதலில் அங்கே அலுவலகத்தில் இருந்தவர் மறுத்து விட்டாராம். ஆனால் அந்த ட்ராவல்ஸைச் சேர்ந்த இன்னொருவர் நேரே கம்பெனிக்காரருக்கே தொலைபேசி எங்கள் நிலைமையைத் தெரிவிக்கவே அவரும் இரண்டு இடம் இருப்பதால் அதை எங்களுக்குக் கொடுக்கச் சொல்லி இருந்திருக்கார். இதை எல்லாம் நம்மவர் என்னிடம் விளக்கினார். என்றாலும் என் மனம் என்னமோ நிறைவாக இல்லை.
அவ்வளவில் அங்கிருந்து கிளம்பிப் பேருந்து நிலையத்தருகே அந்த ஆட்டோக்காரர் சொன்ன உணவு நிலையத்துக்குச் சென்றோம். அங்கே குஜராத்தி தாலி நன்றாக இருக்கும் என்று சொல்லி இருந்தார். ஆனால்! என்ன துரதிருஷ்டம்! சுமார் ஐம்பது படிகள் தான்! அதிகம் இல்லை! ஐம்பது படிகள் மேலே ஏறவேண்டும் என்பதோடு ஒவ்வொரு படிக்கும் ஒன்றரை அடி உயரம்! அதைப் பார்த்த நான் சாப்பாடே வேண்டாம். லங்கணம் பரமஔஷதம் எனச் சொல்லிவிட்டுக் கீழேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விட்டேன். அதை அந்த ஆட்டோ ஓட்டுநர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் மனசில் நான் சும்மாவானும் ஏற முடியாதுனு சொல்கிறேன். சாப்பாடுனாஏறிடுவேன் என்னும் நினைப்பு இருந்திருக்கு. திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்த்தார். நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டு நம்ம ரங்க்ஸை நீங்க போய்ச் சாப்பிட்டு வாங்கனு சொல்லிட்டு உட்கார்ந்துட்டேன். கூட்டமான கூட்டம். பண்டரிபுரத்து மக்கள் அத்தனை பேரும் அன்று அந்த ஓட்டலுக்கு வந்து விட்டார்களோ என்னும்படிக்குக் கூட்டம். சாட், தஹி சாட்,மசாலா பூரி, சமோசா, பாவ் பாஜி, பாவ் வடா எனக் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவற்றின் நிறமே என் வயிற்றைக் கலக்கியது. கொஞ்சம் யோசித்த நம்மவர் அங்கே தோசை போட்டுக் கொண்டிருந்தவரிடம் எங்களுக்கு ஆளுக்கு ஒரு தோசை சொல்லிவிட்டு வந்தார். மருந்து எடுத்துக்கணுமே! ஆகையால் அந்த தோசை என்னும் முறுக்கை நொறுக்கிச் சாப்பிட்டுவிட்டு மன ஆறுதலுக்கு ஒரு ஃபலூடாவும் சாப்பிட்டோம். ஃபலூடா இங்கே ரொம்பவே நன்றாக இருந்தது இன்னொரு ஆறுதல். பின்னர் அங்கிருந்து கிளம்பி அறைக்கு வரப் பத்து மணிக்கும் மேல் ஆகி விட்டது. ஓட்டல் கிட்டத்தட்டப் பூட்டி இருந்தது. எல்லோரும் தூங்கி விட்டார்கள். ஏசிக்கு என்னடா செய்யறதுனு நினைக்கும்போதே உள் அறையிலிருந்து எழுந்து வந்த பார்த்த ஓர் ஓட்டல் ஊழியர் எங்க அறைக்கான ஏசி கன்ட்ரோல் ஸ்விட்சை ஆன் செய்து விட்டுப் போனார்.