எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 04, 2020

ஆடி ஆடிக்கொண்டு பண்டிகைகள் வரும் மாதம்!




படத்துக்கு நன்றி சஹானா இணைய இதழ்

ஆடி மாதம் தக்ஷிணாயனம் ஆரம்பிக்கும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயன புண்ய காலம் ஆடி ஒன்று வரை நீடிக்கும். ஆடி ஒன்றாம் தேதி அன்று தான் சூரியன் தன் தேரைத் தெற்கு நோக்கி (சரியாச் சொன்னால் தென்கிழக்கு)த் திருப்புகிறான். ஆடி மாதத்தில் இருந்து மார்கழி வரை தக்ஷிணாயனம் ஆகும். தேவர்களின் மாலை நேரம். மார்கழி மாதம் தேவர்களின் உதய காலம் என்பார்கள். ஆகவே இப்போது தொடங்குவது அவர்கள் மாலை நேரம். பொதுவாகவே புண்ய காலங்களில் நதிகளில் ஸ்நானம் செய்வது உகந்ததாய்ச் சொல்லப்பட்டாலும் ஆடி மாதம் விசேஷமானது. ஆனால் ஆடி மாதம் முதல் நாலைந்து நாட்களுக்கு எந்த நதியிலும் நீராட மாட்டார்கள். ஏனெனில்  முதல் 3 நாட்களுக்குப் பெண்களுக்கு ஏற்படும் மாத விடாய் போல "ரஜஸ்வலா" என்னும்  தீட்டு ஏற்படுவதால் அந்த நாட்களில் புண்ணிய நதிகளில் நீராடுவது இல்லை.  அதன் பின்னரே நீராடலாம்.

ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பாகச் சொல்லப்படும். அந்தக் கால கட்டங்களில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளித்துவிட்டு ஔவையார் விரதம் இருப்பார்கள். இந்த விரதத்தில் ஆண்கள் பங்கேற்க முடியாது. பெண்களுக்கு மட்டும் எனத் தனித்துச் சொல்லப்படும் விரதம். ஆனாலும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்காகவும், குழந்தைகள் பிறக்கவும், கன்னிப் பெண்களுக்குத் திருமணம் ஆகவும் சிறப்பாகப் பிரார்த்தித்துக் கொள்வார்கள். இதைத் தவிரவும் மங்கல கௌரி விரதமும் கடைப்பிடிப்பார்கள். பொதுவாகப் பெண்கள் திருமணம் ஆகிக் கருவுற்றால் ஐந்தாம் மாதம் வளைகாப்புச் செய்வது உண்டு. அந்த வழக்கப்படி பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம் காணும் அம்பிகையருக்கு ஆடி மாதம் வளையல் அலங்காரம் செய்து இன்புறுவதும் வழக்கம். அன்றைய தினம் அனைத்துக் கோயில்களிலும் உள்ள அம்பிகையருக்குச் சிறப்பு வளையல் அலங்காரம் வெகு விமரிசையாக நடைபெறும். ஆண்டாள் திரு நக்ஷத்திரம் ஆன ஆடிப்பூரத்தன்றும் பெரும்பான்மையான கோயில்களில் வளையல் அலங்காரம் நடைபெறும்.

ஆடி மாதத்தைக் கணக்கிட்டே பண்டிகைகள் தொடங்குகின்றன. ஆடி அழைத்து வரும், யுகாதி ஓட்டும்" என்பார்கள். ஏனெனில் பெரும்பாலான பண்டிகைகள் தக்ஷிணாயனத்திலேயே கொண்டாடப்படுகின்றன. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறக் காவல் தெய்வங்களான கருப்பண சாமி, ஐயனார், மதுரை வீரன், மாடசாமி,, மாரியம்மன், திரௌபதி அம்மன், காளி அம்மன் போன்றோருக்கான சிறப்பு விழாக்கள் எடுக்கப்படும். கும்பகோணம் மடத்துத் தெரு காளி அம்மன் கோயிலில் பச்சைக்காளி, சிவப்புக்காளி வேஷமிட்டுக்கொண்டு காளி ஆட்டம் ஆடுவார்கள். அப்போது பெண்கள் இதற்கெனச் சிறப்பாகத் தனியாக விரதம் இருந்து வேஷம் கட்டுவார்கள். உக்கிரமாகவும் இருப்பார்கள்.  நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் கோமதி அம்மன் ஆடி மாதம் தபஸ் இருந்து ஈசனை மணந்தாள் எனச் சொல்வதால் அங்கே ஆடித் தபஸு உற்சவம் விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

எல்லாவற்ரையும் விடச் சிறப்பானது என்னவெனில் நம் நாட்டைப் போன்ற பருவ மழையை எதிர்பார்த்திருக்கும் விவசாய நாட்டில் இந்தச் சமயங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவமழையால் எல்லா நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். தமிழ்நாட்டுக்கெனச் சிறப்பாக இருக்கும் காவிரி ஆற்றில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் வெள்ளம் நிறைவாக இருக்கும். இந்தப் புது வெள்ளம் வருவதை வைத்து ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று "ஆடிப் பெருக்கு" எனப் பண்டிகையாகக் கொண்டாடிக் கலந்த சாதங்கள் செய்து நதிக்கரையில் அமர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக உண்பார்கள். அப்போது நதிகளுக்குக் காணிக்கையாகப் புடைவை,, மலர் மாலைகள், கருகமணி பிச்சோலை போன்றவை போட்டு தீப ஆராதானை காட்டி நதித் தாய்க்குப் பூஜை செய்வார்கள். பெண்கள் தங்கள் தாலிச் சரடைப் பிரித்துக் கட்டிக்கொள்வார்கள். ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளில் இருந்து நீர் பெருகும் என்பது நம்பிக்கை. ஆகையால் தங்கள் மணவாழ்விலும் பெருகி மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிக் கொண்டு மங்கல நாணை மாற்றிக் கொள்வார்கள்.

புதிதாகத் திருமணம் ஆன புதுமணத் தம்பதிகள் தலை ஆடிக்கு மாப்பிள்ளை தன் மனைவியுடன்  மாமியார் வீட்டிற்குச் சிறப்பான விருந்துக்குச் செல்வார்கள். மாப்பிள்ளைகளுக்குச் சிறப்பான பரிசுகள், புதுத்துணிகளாகவும், நகைகளாகவும் வெள்ளிப் பாத்திரங்களாகவும் வழங்கப்படும். இதைத் தவிர அன்று தேங்காய்ப்பாலில் வெல்லம் போட்டுக் காய்ச்சி வெள்ளி டம்பளரில் மாப்பிள்ளைக்குக் கொடுப்பார்கள். "ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப் பிடித்துச் செருப்பால் அடி!" என்பது சில வட்டார வழக்கில் விளையாட்டாகச் சொல்லுவார்கள். இன்னும் சிலருக்கு ஆடி மாதம் புதிதாய்க் கல்யாணம் ஆன கணவன், மனைவி சேர்ந்து இருந்தால் அடுத்த சித்திரையில் கடுங்கோடையில் குழந்தை பிறக்கும் என்பதால் கணவன், மனைவியைப் பிரித்து வைப்பது உண்டு. மாமியார் தன் மருமகளை (பெண்ணை)ப் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.  பெண் திரும்பிப் புக்ககம் வரும்போது சிறப்பான சீர் வரிசைகளும் கூட வரும்.

ஆண்டாளின் அவதாரத் திருநாளான "ஆடிப்பூரம்" இந்த மாதமே வரும். ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் அம்மனின் சக்தி பரிபூரணமாக இருக்கும் என்பது ஐதிகம் என்பதோடு கண்கூடாகவும் காணலாம். தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில் தான் பொறுமையின் சிகரமான பூமாதேவியின் அவதாரம் என்பது ஆண்டாளின் அவதாரத்தோடு பொருந்தியும் போகிறது அல்லவா?  மேலும் சொல்லவேண்டுமெனில் விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியைத் தரும் ஆடி மாதத்தில் "ஆடிப்பட்டம் தேடி விதை" என்பதற்கொப்ப விவசாய வேலைகள் ஆரம்பிப்பார்கள்.  ஆடியில் விதை விதைத்தால் தை மாதம் அறுவடை செய்துவிடலாம். நல்ல மகசூல் வரும் என்பது நம்பிக்கை.

ஆடீ மாதத்தில் காவல் தெய்வங்கள் குடி இருக்கும் கோயில்களில் "ஆடிக் கூழ்" காய்ச்சி அனைவருக்கும் கொடுப்பார்கள். பல்வேறு தானியங்களும் போட்டுத் தேங்காய்கள், காய்கள் மற்றும்  மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சப்படும் இந்தக் கஞ்சிப் பிரசாதம் உடலுக்கு நல்லது எனச் சொல்லப்படுகிறது.  ஆடி மாதம் சுவாதி நக்ஷத்திரத்தில் கருடன் பிறந்ததாகவும் ஆடிப் பௌர்ணமிக்கு ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்ததாகவும் சொல்வார்கள். ஆடி மாதம் முழுவதுமே அம்பிகைக்கு உகந்த  மாதம் என்றாலும் ஆடிக் கிருத்திகையில் முருகனும், ஆடிப் பௌர்ணமியில் ஹயக்ரீவரும், ஆடி சுவாதியில் கருடாழ்வாரையும் தரிசித்தல் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அதோடு இல்லாமல் ஆடி மாதத்தின் அனைத்துச் செவ்வாய்க்கிழமைகள், வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யலாம். ஆடி மாதம் முழுவதும் பக்திபூர்வமாக இருந்து அம்பிகையின் அருளைப் பெற்று உய்வோம்.


நம்ம ஏடிஎம் (புவனா கோவிந்தன் என்ற அப்பாவி தங்கமணி) பதினெட்டாம் பெருக்கன்னிக்கு இந்த இணைய இதழை ஆரம்பிச்சிருக்காங்க. அதில் ஆன்மிகப் பக்கம் போடுவதற்காக என்னை ஆடி மாதச் சிறப்புப் பத்தி எழுதித் தரச் சொன்னாங்க. அவங்க கேட்டுப் பல நாட்கள் கழிச்சு ஒரு வழியா எழுதி அனுப்பினேன். நல்லவேளையா இணைய இதழ் ஆரம்பிக்கலை! அந்தச் சுட்டியை மேலே கொடுத்திருக்கேன். அங்கேயும் போய்ப் படிக்கலாம். அதோடு அங்கே உள்ள மற்ற கதை, கட்டுரைகள், சமையல் குறிப்பு (ஆதி வெங்கட்) ஆகியவற்றையும் படிக்கலாம்.  இங்கேயும் அந்தத் தொகுப்பையே மறுபடி எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காகப் பகிர்ந்திருக்கேன்.  

இன்னிக்கு இதுக்கு மேலே இணையத்திலே உட்கார மனம் இல்லை. இனிமேல் நாளைக்குத்தான். வேறே பதிவுகள் எழுத உட்கார்ந்தேன். ஆனால் முடியலை.  முடிஞ்சால் மொபைல் மூலமாக மொபைல் பார்க்கலாம். 

25 comments:

  1. நிறைய தகவல்களுடன்
    பக்தி மணம் கமழ்கின்றது...

    நலமே வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை. இன்னும் இருக்கு. ஆனால் அவங்க சுருக்கமாகக் கேட்டிருந்தாங்க.

      Delete
  2. ஆடி வாழ்த்துகள். சஹானா சென்றும் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, மெதுவாப்போய்ப் பாருங்க.

      Delete
  3. வாழ்த்துகள்.  சுட்டியை க்ளிக் செய்து அங்கேயும் போய்ப்பார்த்தேன்.  

    ReplyDelete
  4. வேக வேகமா இடுகைகள் இப்போல்லாம் வருது.

    ஆடி மாதச் சிறப்பை நன்றாகச் சொல்லியிருக்கீங்க.

    நெல்லை வழக்கப்படி 'கலந்த சாதம்'னு எழுதியிருப்பதைக் கவனித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, எழுதி வைச்சிருந்ததை வெளியிடுவதில் தாமதம் எதுக்கு? ஆடிமாசம் முடியும் நேரம் வந்தாச்சே.

      Delete
  5. சஹானா இணைய இதழிலும் உங்கள் பதிவினைப் பார்த்தேன். அப்பாவி தங்கமணிக்கும் உங்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஆதியோட முருங்கைக்கீரை பகோடாவும் வந்திருக்குனு பார்த்தேன். அவங்களுக்கும் பாராட்டுகள்.

      Delete
  6. ஆடி மாசம்னாலே நம்மூர் களை கட்டுமே  அதிகாலையில் பாட்டு இசை ஆரவாரம்  கூழ் ஹம்ம்ம்ம்ம் எல்லாம் மிஸ் பண்றேன் .ஆடிமாதம் பற்றிய விளக்கம் அறிந்துகொண்டேன் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், எங்க பக்கம் ஆடிச் செவ்வாயன்று கன்னிப் பெண்களுக்குத் துவரம்பருப்பில் மஞ்சள் பொங்கல் பண்ணிச் சாப்பிடக் கொடுப்பார்கள். விநியோகமும் உண்டு. என் அம்மா இருந்தவரைக்கும் எங்க பெண்ணிற்குத் தவறாமல் கொடுத்து விடுவாங்க. இல்லைனா அம்மாவே எடுத்துட்டு வருவாங்க!

      Delete
  7. வணக்கம் சகோதரி

    ஆடி மாதத்தைப் பற்றிய சிறப்புக் கட்டுரை நன்றாக இருந்தது. ஆடி மாதத்திற்குரிய பண்டிகைகளையும், பழமொழிகளையும் அழகாக தொகுத்து அருமையான ஆன்மிகப் பதிவாக தந்துள்ளீர்கள். படிக்கும் போதே ஆடியைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிவதால், கட்டுரை மிக சுவாரஸ்யமாக உள்ளது. தங்களது உழைப்புக்கும், அற்புதமான நினைவாற்றலுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    முதலில் நுங்கும் நுரையுமாக வரும் நதி தீரங்களை பார்த்து எங்கள் பாட்டியும் அந்த சமயத்தில் அப்படித்தான் சொல்வார்கள். ஆடிக்கு கணவன் மனைவியை பிரிப்பதாக அதன் உண்மை காரணத்தை அறியாமல் அது குறித்து எத்தனை ஜோக்குகள் வந்திருக்கின்றன. வீட்டுப் பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதை விபரமாக புரிந்து கொள்ள முடியாமல் போகும் இளைய தலைமுறைகள்.

    கட்டுரையில் பழமொழிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. கட்டுரை சஹானா இதழில் வெளி வந்ததற்கும் பாராட்டுகள். அங்கும் உங்களைப் பற்றி சிறப்பாக சொல்லியிருப்பதையும் படித்து மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் திறமைகளுக்கு பாராட்டுடன் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, ஆடி மாதம் காவிரிக்கரையில் தான் சிறப்பு என என் மாமியார் சொல்வாங்க. எல்லா நதிக்கரைகளிலும் (தமிழ்நாட்டில்) சிறப்புத் தான் என நான் சொல்லுவேன். எல்லா நதிகளிலும் அப்போது புது வெள்ளம் சிவந்து சுழித்து ஓடிக் கொண்டிருக்கும். கட்டுரையை அங்கேயும் போய்ப் பார்த்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

      Delete
  8. நிறைய தகவல்கள்.
    சுட்டிக்கு சென்றேன் வாழ்த்துகள்.

    //ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப் பிடித்துச் செருப்பால் அடி//

    மாமியார் இல்லாவிட்டால் மாமனாரை அடிப்பார்களோ...?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, சுட்டிக்கும் சென்று பார்த்ததுக்கு நன்றி. ஹாஹாஹா, அதென்னமோ மாமனார் செலவு செய்தாலும் மாமியாரைத் தான் அடிப்பாங்களாம்! :))))))

      Delete
  9. ஆடி மாதம் பற்றியும் பண்டிகைகள் பற்றிய தகவல்கள் சிறப்பு. அடுத்து ஓணம் வந்துவிடும் எங்களுக்கு. ஒசுட்டி சென்று பார்க்கிறேன்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன். முன்னொரு காலத்தில் ஓணம் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் முன் கூட்டிய ஓணம் திருநாள் வாழ்த்துகள்.

      Delete
  10. கீதாக்கா ஆடி பிறந்தாலே அப்புறம் ஒவ்வொரு பண்டிகையாக வந்துவிடும்.

    ஊரில் இருந்தவரை ஆடி என்றாலே களை கட்டும். கோலாட்டம், ஆடிச்செவாய், வெள்ளி என்று...

    வாழ்த்துகள் கீதாக்கா சஹானா இணைய இதழில் உங்கள் பதிவிற்கு. ஆதியும் இதைப் பத்தி எழுதியிருந்தாங்க. அப்பாவிதங்கமணி இணைய இதழ் தொடங்கியது பற்றி.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, ஆடி வந்தால் அழைத்துவரும் பண்டிகைகளை என்பார்களே. வாழ்த்துகளுக்கு நன்றி.

      Delete
  11. ஆடி மாதத்தின் சிறப்பை சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லியிருகிறீர்கள்.
    சஹானா பத்திரிகையும் பார்த்தேன். சிறப்பாக இருக்கிறது.
    இந்த ஒளவையார் நோன்பு தஞ்சை மாவட்டத்தில் கிடையாதோ? நான் கேள்விப் பட்டதே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, தென் தமிழ்நாட்டில் தான் ஔவை நோன்பு. முக்கியமாகத் திருநெல்வேலி, நாகர்கோயில்ப் பக்கம் கட்டாயமாய் இருக்கும். மதுரையிலும் ஒரு சிலர் செய்வார்கள். முக்கியமாய் நாயக்கர்களில் ஒரு சில குழுவில் இந்த நோன்பு ரொம்பவே ஆசாரமாகக் கொண்டாடப்படும்.

      Delete
  12. ஆடி மாதச்சிறப்பு பதிவு அருமை.
    அம்மன் படம் அழகு.
    ஒளவையார் அம்மன் விரதம் திருவெண்காட்டில் இருக்கும் போது வீட்டுக்கார அம்மாவுடன் சேர்ந்து இருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, இப்போத் தான் உங்களை நினைச்சேன், காணோமேன்னு! வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete