நவராத்திரி இரண்டாம் நாள்: இன்றைய தினம் அம்பிகையை சைலபுத்ரியாக ஆராதிக்கலாம். சைலம் என்றால் மலை. மலையரசன் மகளான அம்பிகையையே இது குறிக்கும். பார்வதி, பர்வத ராஜகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப்படும் தேவி இவளே! தேவர், பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகிய மூவர் என அனைவரிலும் நிறைந்து நிற்கும் சக்தியானவள் இவளே! இவளன்றி ஓரணுவும் அசையாது. தமிழில் இவள் மலைமகள் என அழைக்கப்படுகிறாள். மஹாமேருவை தினந்தோறும் வலம் வந்து கொண்டிருக்கும் சூரியன் இவளின் பக்தர்களுக்கு அருள் புரிவான். நவராத்திரி ஞாயிறன்று இவளை வழிபடுதல் உசிதம். இன்றைய தினம் நவராத்திரி ஞாயிறு மேலும் இரண்டாம் நாள் ஆகையால் சைலபுத்ரியை வணங்குதல் சிறப்பானது. ஆரோக்கியம் பெருகி மனம் விசாலமடையும் இந்த தேவியைத் துதிப்பதால் மனம் மகிழ்வுறும்.. ஈசன் வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடிய ஆனந்தத் தாண்டவத்தின் ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவள் இந்த சைலபுத்ரி ஆவாள்.
படத்துக்கு நன்றி கூகிளார்.
அரிசிமாவினால் பூக்கள் வரைந்து போடும் கோலம் சிறப்பானது. இன்றைய தினமும் லலிதா நவரத்னமாலையும், லலிதா சஹஸ்ரநாமமும் சொல்லலாம்.
படத்துக்கு நன்றி விக்கி பீடியா
இன்றைய தினம் மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிபுரை/திரி மூர்த்தி என பாவித்து வணங்கி வழிபடுதல் வேண்டும். கொலுவில் அம்பிகையை இன்று ராஜராஜேஸ்வரியாக அலங்கரிக்கலாம். இன்றும் மஞ்சள் நிறம் உகந்தது என்றாலும் சிவப்புக் கொன்றையும், துளசியும், முல்லையும் கூட ஏற்றது. மஞ்சள் நிறத்தில் ஆடைகளும், சிறு குழந்தைக்கு ஏற்ற தின்பண்டங்களும் கொடுக்கலாம் என்றாலும் காலை நிவேதனத்தில் எள் சாதம், புளியோதரை சிறப்பானது.
எள் சாதம் 50 கிராம் எள்ளைக் கல்லரித்துக் கொண்டு வெறும் வாணலியில் நான்கு அல்லது ஐந்து மிளகாய் வற்றல், உப்பு தேவையானது சேர்த்து வறுத்து மிக்சி ஜாரில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும். சமைத்த அன்னத்தில் கால் தேக்கரண்டி உப்புச் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறவும். கொஞ்சம் உதிர் உதிராகச் சாதம் ஆனதும் தேவையான எள்ளுப் பொடியைப் போட்டுக் கிளறவும்.
புளியோதரை புளிக்காய்ச்சல் தயார் செய்யணும். சுமார் 150 கிராம் புளியை ஊற வைத்துக் கொஞ்சம் கெட்டியாக புளிச் சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி எள், ஒரு மேஜைக்கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி மிளகு, இரண்டு தேக்கரண்டி வெந்தயம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். தேவையானால் மிளகை மட்டும் தனியாகக் கொஞ்சம் நெய் விட்டு வெடிக்க விட்டு எடுத்துக் கொள்ளலாம். இவை ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும். நன்கு நைசாகவே பொடிக்கலாம். அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தைப் போட்டுச் சுமார் 100 கிராம் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பத்து மிளகாய் வற்றலைக் காம்பு ஆய்ந்து இரண்டு மூன்றாகக் கிள்ளி உள்ளிருக்கும் விதைகளை எடுத்த பின்னர் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போடவும். மிளகாய் வற்றல் கறுப்பாக ஆக வேண்டும்..அதன் பின்னர் கடுகு, ஊற வைத்த கொண்டைக்கடலை அல்லது கடலைப்பருப்புப் போட்டுவிட்டு ஒரு கைப்பிடி வறுக்காத வேர்க்கடலையும் சேர்க்கவும். பெருங்காயம் ஒரு துண்டு சேர்க்கவும். பெருங்காயம் பொரிந்ததும் கருகப்பிலை போட்டு மஞ்சள் பொடி சுமார் 3 தேக்கரண்டி சேர்க்கவும். அல்லது சின்னதாக விரலி மஞ்சள் துண்டை மிளகு வறுக்கையில் சேர்த்து வறுத்துவிட்டு அந்தப் பொடி செய்யும்போது சேர்த்துப் பொடித்துக் கொள்ளலாம். இப்போது கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தைச் சேர்த்து உப்புச் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது சுமார் ஐம்பது கிராம் வெல்லத்தூள் சேர்க்கவும். வெல்லத்தூள் கரையும்போது ஏற்கெனவே செய்து வைத்திருக்கும் பொடியில் தேவையானதைப் போட்டுக் கலக்கவும். மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு அடுப்புச்சூட்டோடு வைத்தால் இன்னும் கொஞ்சம் இறுகும். இதற்கு மிளகாய் வற்றலைப் போடாமல் மற்ற சாமான்களைப் போட்டுத் தாளித்துக் கொண்டு வறுத்துப் பொடிக்கும் பொடியில் மிளகைக் கூடுதலாகச் சேர்க்கலாம். கோயில் புளியோதரை போல் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்குக் காரம் தாங்காது.
சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு அரைத் தேக்கரண்டி உப்பு, அரைத்தேக்கரண்டி மஞ்சள் பொடி, அரைத்தேக்கரண்டி பெருங்காயப் பொடி சேர்த்து ஒரு சின்னக் குழிக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு சாதத்தை உதிர்க்கவும். செய்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலில் தேவையானதாகக் கொஞ்சம் எடுத்து இதில் போட்டு நன்றாகக் கலக்கவும். புளியோதரை தயார் ஆனதும் நிவேதனம் செய்துட்டு விநியோகிக்கலாம்.
இன்று மாலை வேர்க்கடலைச் சுண்டல் பண்ணலாம். வேர்க்கடலையை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் நன்கு கழுவி உப்புச் சேர்த்துக் குக்கரில் அல்லது வாயகன்ற கனமான பாத்திரத்தில் வேக வைக்கவும். பின்னர் நீரை வடிகட்டி விட்டுக் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கருகப்பிலை தாளித்துக் கொண்டு அதில் வடிகட்டி வைத்திருக்கும் வேர்க்கடலையைப் போட்டுச் சிறிது மிளகாய்வற்றல்+தனியாப் பொடியையும் சேர்த்துக் கிளறிவிட்டுத் தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறவும். சுண்டல் விநியோகத்துக்குத் தயார்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteஇரண்டாம் நாளான நாளைய கொலுவுக்கு தேவையான அம்மன் உபசாரங்கள், வழிபடும் முறைகள், காலை மாலை அம்மனுக்கு நிவேதனங்கள் என விரிவான செய்முறைகளுடன் கூறியிருக்கும் இந்தப் பதிவு மிக பக்தியுடனும், விளக்கமாகவும் உள்ளது. நீங்கள் சொல்லியிருக்கும் நடை மிகவும் நன்றாக உள்ளது.தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஒவ்வொரு வருடமும் போட்டுக் கொண்டு தான் இருக்கேன்! போன வருஷம் லலிதா சோபனம் போட்டேன்னு நினைக்கிறேன்.
Deleteரெசிப்பியுடன் பதிவு அருமை.... அப்போ 2 ம் நாளுக்கு நானும் புளிச்சாதம் குடுத்திடுறேன் அம்மாளாச்சிக்கு....
ReplyDeleteஆனால் நவராத்திரி எனில் மாலையில்தானே படைப்போம்... அதனாலதானே நவ- ராத்திரி... பகலில் யாரும் படைக்க மாட்டோமெல்லோ கீசாக்கா?
அல்லி ராணி, நவராத்திரி அம்பிகையை வழிபடுபவர்கள் இரு வேளையும் வழிபடுவார்கள். காலை வேளைகளில் விஸ்தாரமாகப் பூஜை செய்து அம்பிகையை ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு தேவியாக ஆவாஹனம் செய்து, (சிலர் குழந்தைகளை அழைத்தும் அம்பிகையாக வழிபடுவார்கள்) காலை ஒரு நிவேதனம், மாலை ஸ்தோத்திரங்கள், துதிகள் செய்து பாடல்கள் பாடி நிறைவு செய்வார்கள். ஒன்பது ராத்திரிகளுக்கும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு ராகத்தில் பாடல்கள் பாடுவார்கள். நவாவர்ணம் என்று பெயர்.
Deleteகீசாக்கா... அங்கு சகானாவில் ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊ ... பாமலை எனப் போட்டிருக்கிறீங்க...முடிஞ்சால் மாத்திவிடுங்கோ ... ஒரு மாதிரி இருக்குது.
ReplyDeleteஹாஹாஹா, அல்லி ராணி, நேற்றே பார்த்துட்டேன். அது சஹானா புவனா கோவிந்த் போட்டது. நான்போய் மாத்த முடியாது. அவங்களிடம் சொல்றேன்.
Deleteபாமாலை என்றால் பாட்டு என்ற அர்த்தத்தில் போட்டு இருக்கேன் மாமி. அப்படி போடலாம் தானே? Please let me know, will correct
Deleteசரியாத் தான் போட்டிருக்கீங்க ஏடிஎம். அவங்க சொன்னது எழுத்துப் பிழையை. பாமாலை என்பதைப் பாமலைனு இருந்ததைச் சொல்லி இருக்காங்க. அதைத் திருத்திட்டீங்க போல! சின்ன விஷயம்தான் அதான் நான் கண்டுக்கலை! :))))) பாமாலை சரியான பொருளில் தான் போடறீங்க!
Deleteஆ.... புளியோதரை!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், இம்முறையில் புளிக்காய்ச்சல் காய்ச்சி வைச்சிருக்கேன். எப்போதும் பண்ணுவதை விட நன்றாக உள்ளது. உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். மோர் சாதத்துக்குக் கூட அவ்வப்போது தொட்டுப்பேன்.
Deleteஇரண்டாம் நாள் நவராத்திரியின் சிறப்பு அருமை. சைலபுத்ரி என்ற பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா, அம்பிகையின் ஒவ்வொரு ரூபங்களுக்கு ஒவ்வொரு பெயர். அந்த வகையில் சைலபுத்ரி என்பது அம்பிகையைக் குறிக்கும்.
Deleteநவராத்திரி விளக்கம் அருமை...
ReplyDeleteம்... இன்று வீட்டுக்கு வந்தால் ஓசி சுண்டல் கிடைக்கும்...
சுண்டலை அனுப்பி வைச்சுடுங்க கில்லர்ஜி!
Deleteஇந்த வருடம் எழுதுவதற்கு ஏதுவான சூழல் அமையவில்லை அக்கா..
ReplyDeleteதங்களது பதிவின் வழி தரிசனம்...
ஓம் சக்தி ஒம்..
விரைவில் நல்ல சூழல் அமையப் பிரார்த்திக்கிறேன். உங்க மனைவி உடல் நலமாய் உள்ளார்களா? எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்திற்காக இன்று சுந்தரகாண்டப் பாராயணத்தின் போது பிரார்த்தித்துக் கொண்டேன். நலமே விளையட்டும்.
Deleteசகோ துரை செல்வராஜூ மனைவிக்கு உடல் நலமில்லையா?
ReplyDeleteஇறை அருளால் விரைவில் நலமாக நானும் வேண்டிக் கொள்கிறேன்.
நவராத்திரி வேலைகள் மற்றும் பேரன், உறவினர்கள் வீடியோவில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள், மாலை கூட்டு பிரார்த்தனை அதனால் இங்கு வரவே முடியவில்லை.
உங்கள் பதிவு அருமை.
வாங்க கோமதி, துரை மனைவிக்கு உடல் நலமில்லை என எங்கள் ப்ளாக் மூலம் தெரிய வந்தது, தற்சமயம் தேவலைனு சொன்னார். எனக்கும் இங்கே அதிகம் வரமுடியவில்லை.
Deleteநவராத்திரி யின் போது என்மனைவி தங்க முலாம்பூசிய தாமரை 20 பைசா(108) காசு கொண்டு அர்ச்சிப்பாள் இப்போதெல்லாம் கொலு வைப்பதே நின்று விட்டது
ReplyDeleteவாங்க ஐயா, ஆமாம், தெரியும், முன்னரே சொன்னீங்க!
Deleteஅருமை தொடர்கிறேன்.
ReplyDeleteநன்றி மாதேவி.
Delete