இன்றைய தேவதை மஹா கௌரி! திங்கட்கிழமைக்கு உகந்த தேவதையான இவள் சிறுமி வடிவில் இருந்தாலும் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டாள். இதனால் இவளுக்கு ஏற்பட்ட உடல் சோர்வில் இவள் பொன்னிறம் மங்கவே ஈசன் கங்கை நீரினால் அவள் உடலைச் சுத்தம் செய்ய உதவுகிறார். கசடுகள் நீங்கி மீண்டும் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்த மஹா கௌரியான இவள் மன நலம் பாதிக்கப்பட்டோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் வணங்கும் தெய்வம் ஆவாள். திங்கட்கிழமைக்கு உகந்த தேவதை இவளே! தண்டகாரண்யத்தின் முனிவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் தீர ஈசன் ஆடிய சுத்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் இந்த மஹா கௌரி.
மூன்றாம் நாளான இன்று பூக்களால் கோலம் போடுவது சிறப்பு. அல்லது அரிசியை ஊற வைத்து அரைத்த மாவினால் நக்ஷத்திரக் கோலமும் போடலாம். இன்றைய தினம் அம்பிகையை நான்கு வயதுள்ள பெண் குழந்தையாக, “கல்யாணி” என பாவித்து வழிபட வேண்டும். சிவப்பு அல்லது சிவப்பும்,மஞ்சளும் கலந்த நிறத்தில் ஆடைகளைக் கொடுக்கலாம். அர்ச்சனைக்குச் செம்பருத்திப்பூக்கள், தாமரைப்பூக்கள், செண்பகப்பூக்கள், குங்குமம் ஆகியனவற்றால் வழிபடலாம். லலிதா நவரத்னமாலை, துர்காஷ்டகம் போன்ற துதிகளால் வழிபடலாம். அம்பிகையைக் கல்யாணியாக அலங்கரித்து கொலுவில் வைக்கலாம்.
படங்களுக்கு நன்றி கூகிள்
இன்றைய தினம் காலை கோதுமை மாவில் உருண்டை பண்ணி நிவேதனம் செய்யலாம். அல்லது முழு கோதுமை அல்லது ரவையில் சர்க்கரைப் பொங்கல் பண்ணலாம். தயிர் சாதமும் பண்ணலாம்.
கோதுமை உருண்டை கடாயில் நெய்யைக் காய வைத்துக் கொண்டு முந்திரிப்பருப்பைப் போட்டு வறுத்துத் தனியாக வைக்கவும். மீதமிருக்கும் நெய்யோடு இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துக் காய்ந்ததும் அதில் ஒரு கிண்ணம் கோதுமை மாவைப் போட்டு வறுக்கவும். மாவு நன்கு வறுபட்டு வாசனை வரும் சமயம் ஒரு கிண்ணம் சர்க்கரை அல்லது வெல்லத்தூள் சேர்க்கவும். இனிப்பு அதிகம் வேண்டுமெனில் ஒன்றரைக் கிண்ணம் சேர்க்கலாம். இந்த மாவில் ஏலக்காய்த் தூள் சேர்த்து வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கலாம்..
கோதுமைப் பொங்கல் கோதுமையை வறுத்துக் கொண்டு வறுத்த பாசிப்பருப்போடு சேர்த்துப் பாலில் வேக வைத்துக் கொண்டு வெந்ததும் தேவையான வெல்லம் சேர்த்துக் கரைய விடவும். சேர்ந்து வந்ததும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களைச் சேர்க்கலாம். நெய்யில் வறுத்த தேங்காய்த் துண்டுகளையும் சேர்க்கலாம். இது அரிசி சேர்த்த சர்க்கரைப் பொங்கல் மாதிரிக் குழையாது. கோதுமை பிடிக்கவில்லை எனில் கோதுமை ரவையில் இதே மாதிரிப் பண்ணலாம். இதெல்லாம் முடியாதவர்கள் சாதத்தைப் பாலில் குழைய வேகவைத்துக் கொண்டு அதில் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய், உப்புச் சேர்க்கவும். இரும்புக்கரண்டியில் நல்லெண்னெய் சேர்த்துக் கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயம் தாளித்துச் சாதத்தில் கொட்டி விட்டு ஒரு சின்னக் கிண்ணம் தயிரை விட்டு நன்கு கலந்து கரண்டியால் மசிக்கவும். இதையும் நிவேதனம் பண்ணலாம்.
மாலை சிவப்புக் காராமணிச் சுண்டல். இதை வெல்லம் போட்டு அல்லது காரம் போட்டுப் பண்ணலாம். காராமணியை முதல் நாளே ஊற வைத்துக் கொண்டு மறுநாள் கழுவிக் குக்கரில் அல்லது வாயகன்ற பாத்திரத்தில் போட்டு உப்புச் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, கருகப்பிலை, மிளகாய் வற்றல் தாளித்துக் கொண்டு பெருங்காயப் பொடியும் சேர்த்துக் கொண்டு வெந்த காராமணியைக் கொட்டித் தேங்காய்த் துருவலும் போட்டுக் கிளற வேண்டும். தேவையானால் மிளகாய் வற்றல்+கொத்துமல்லி வறுத்துச் செய்த பொடியைச் சேர்க்கலாம்.
இனிப்புச் சுண்டல் எனில் காராமணியை உப்புச் சேர்க்காமல் நன்கு வேக வைத்துக் கொண்டு நெய்யில் கடுகு தாளித்துக் காராமணியை வடிகட்டி அதில் சேர்த்து ஏலக்காய்த்தூளுடன் வெல்லத்தூள்+தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி விநியோகம் பண்ணலாம்.
நல்லா எழுதியிருக்கீங்க.
ReplyDeleteஎன்னவோ...சுண்டல்ல ரொம்ப ஆர்வம் வரலை. நேற்று மனைவி எனக்கு இனிப்பு சுண்டல் பண்ணித்தந்தாள். அது மட்டும் ரொம்பப் பிடித்திருந்தது.
பேசாம நவராத்திரிக்கு ஒவ்வொரு நாளும் லட்டு, அதிரசம், ஜாங்கிரி, கை முறுக்கு என்று இருக்கப்படாதோ?
வாங்க நெல்லைத்தமிழரே, என் மாமியார் வீட்டில் முறுக்கு, தட்டை, சேவை, மிக்சர், குணுக்கு எல்லாம் பண்ணிக் கொடுப்பாங்க நவராத்திரிக்கு. நான் குணுக்குப் போடுவேன் என்றாவது ஒரு நாள். அப்பம் கூடக் கொடுக்கிறாங்க சிலர். பொட்டுக்கடலை உருண்டை கொடுப்பது, கடலை உருண்டை கொடுப்பது உண்டு.
Deleteமஹா கௌரியை வணங்குவோம்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteமிக அழகாக மூன்றாவது நாளான நாளைய தினம் பூஜிக்கும் முறைகளை தெளிவாக எழுதியுள்ளீர்கள். மஹா கெளரி லோகத்திலுள்ள அனைவரையும் காத்தருள பிரார்த்தனை செய்கிறேன். நாளைய காலை,மாலை நிவேதனங்கள் நன்றாக உள்ளன. கோதுமை குருணையை வறுத்த பின் கொஞ்சம் மிக்ஸியில் பொடித்துக் கொண்டால், ச.பொங்கல் குழைந்து வராதா? காராமணி உப்புச்சுண்டல் நன்றாக இருக்கும். இன்றைய இரு பிராசாதங்களும், செய்முறைகள் நன்றாக உள்ளன. சென்ற வருடம் நீங்கள் பதிந்த லலிதா சோபனமும் விடாமல் படித்தேன். உங்களின் தெய்வீக பதிவுகள் சிறப்பாக உள்ளது. தொடர்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, கோதுமை ரவை உப்புமாவே எனக்குத் தெரிஞ்சு குழைவதில்லை. அதே ரவையை இன்னமும் பொடித்தால் ஒரு வேளை குழையலாம். பண்ணிப் பார்க்கணும். பழைய பதிவுகளையும் படிச்சதுக்கு நன்றி.
Deleteநவராத்திரியை நினைக்கும் போது நல்லோர்கள் நினைவும் சேர்த்தே வருகிறது.
ReplyDeleteஅன்னை கௌரியின் அருளில்
அனைவரும் நலம் பெற வேண்டும்.
மிக அழகான படம்.
காராமணி சுண்டலும், தயிர்சாதமும்
பாட்டி செய்வார்.
கோதுமை உருண்டை நல்ல சத்து வாய்ந்தது.
சக்தி கொடுக்கும் தாய்க்கு நம்மால ஆன
நைவேத்யம்.
எப்பொழுதும் போல் அருமையான வழிகாட்டல்.
நன்றி கீதாமா.
வாங்க வல்லி, கோதுமை உருண்டை சாப்பிடவும் ருசியாகவே இருக்கும். உங்கள் பாராட்டுகளுக்கும் அன்பான விசாரிப்புக்கும் நன்றி.
Deleteஎனக்கு இனிப்பு சுண்டல் பிடித்தமானது.
ReplyDeleteதொடர்கிறேன்...
வாங்க கில்லர்ஜி, எனக்கு இனிப்புச் சுண்டல் அவ்வளவாப் பிடிக்காது. :)
Deleteமூனறாம் நாள். மஹா கௌரியின் பெருமை அறிந்தேன். மன நிறைவடைந்தேன்.
ReplyDeleteநன்றி முனைவர் ஐயா.
Deleteமஹா கெளரி எல்லா நலங்களும் எல்லோருக்கும் தரட்டும். மஹா கெளரியை வணங்கி கொள்கிறேன். பதிவு அருமை.
ReplyDeleteநன்றி கோமதி!
Deleteநன்று.வழிபடும் முறைகள் அறிந்தோம்.
ReplyDeleteநன்றி மாதேவி.
Delete