எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 22, 2020

நவராத்திரி ஏழாம் நாள்

படத்துக்கு நன்றி விக்கி சோர்ஸ்

நவராத்திரி வெள்ளிக்கிழமைக்குரிய தேவி கூஷ்மாண்டா ஆவாள். கூஷ்மம் என்பது முட்டை, அண்டம். அண்டம் என்பது இந்தப் பிரபஞ்சத்தைக் குறிக்கும். கூஷ்மம் ஆகிய முட்டை வடிவில் இந்தப் பிரபஞ்சம் தோன்றியது இந்த தேவியிடம் இருந்தே என்பதால் இவளைக் கூஷ்மாண்டா என அழைக்கிறோம். தீவினைகளைப் போக்கி நல்வினைகளை உருவாக்கும் இந்த தேவியைத் துதித்தால் கண் திருஷ்டிகளை நீக்கித், தீய சக்திகளைத் தன் பக்தர்களை அணுகாமல் பாதுகாக்கிறாள். இதை வைத்தே பூஷணிக்காயில் குங்குமம் தடவி நட்ட நடு ரோட்டில் போட்டு திருஷ்டி கழிய என உடைக்கிறோம். இதன் மூலம் தெருவில் நடமாடும் அனைவர் கால்களையும் கூட உடைக்கிறோம் என்பது தெரியவில்லை நமக்கு. திருஷ்டிப் பூஷணிக்காயை ஓர் ஓரமாக உடைத்துப் போட்டு விட வேண்டும். பூஷணிக்காயையும் கூஷ்மாண்டம் என்பார்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்குரிய நாளான இன்று நமக்குச் சுக்கிரதசை அடிக்க வேண்டுமெனில் இந்த தேவியைத் துதிக்க வேண்டும். சுக்கிரன் மகிழ்ந்து எல்லாச் செல்வங்களையும் அருளுவார். தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துப் பாதுகாப்பாள். பகலும் இரவும் சந்திக்கும் அற்புத வேளையில் தன் இடக்கால் விரலால் ஈசன் வரைந்த கோலம் சப்த ஒலிக் கோலம். தாண்டவம் சந்தியா தாண்டவம். இந்தச் சமயம் தோன்றியவளே கூஷ்மாண்டா ஆவாள்.

நவராத்திரி ஏழாம் நாள் என்பதோடு கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்குரிய நாட்கள் என ஏற்கெனவே பார்த்தோம். ஆகையால் இன்றைய தினம் கொலுவில் அம்பிகையை மஹாசரஸ்வதியாக அலங்கரிக்கலாம்.



படத்துக்கு நன்றி கூகிளார்

 ஸ்ரீவித்யா பீஜாக்ஷரியான அன்னை சண்டமுண்டர்களை அழித்த கோலத்தோடு மிகவும் வீரியம் கொண்டு காட்சி அளிப்பாள். இவளைத் தங்க சிங்காதனத்தில் வீணையைக் கையில் ஏந்தி அமர்ந்திருக்கும் “சாம்பவி”யாக வழிபட வேண்டும்.  வெண் தாமரை மலரில் வீணை வாசிக்கும் கோலத்தில் அமர்ந்திருக்கும் இவளை வெண்ணிற மலர்களால் அர்ச்சிக்கலாம்.    

எட்டு வயதுப் பெண் குழந்தையை “சாம்பவி”யாக நினைத்து ஆவாஹனம் செய்து வெண்பட்டு வஸ்திரம், வெண்ணிற மல்லிகை மலர்கள், வெள்ளியில் ஆன ஆபரணங்கள் கொடுத்து உபசரித்து வெண் தாமரைப்பூ, மல்லிகை, முல்லை, தாழம்பூ ஆகிய வெண்ணிறம் அல்லது பழுப்புக் கலந்த வெண்ணிறப் பூக்களால் அர்ச்சித்து வழிபடலாம். இவளாலேயே மழை பொழிந்து நீர் வளம், நிலவளம் ஏற்படும்.

திட்டாணிக் கோலம் போடலாம். செண்பகப்பூக்கள், ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நறுமணம் மிக்க மலர்களால் வட்டவடிவமான கோலமும் போடலாம். அபிராமி அந்தாதி, சரஸ்வதி துதி ஆகியவற்றால் அன்னையைத் தொழுது வணங்கலாம். 

இன்றைய தினம் வெண்பொங்கல் குழைய வேகவைத்துப் பண்ணி நிவேதனம் செய்யலாம். அல்லது காய்கள்+பருப்பு+அரிசி கலந்த கதம்பச்சாதமும் பண்ணலாம். இன்றைய தினம் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டல் பண்ணலாம். ஆனாலும் நவராத்திரி வெள்ளிக்கிழமைகளில் புட்டுப் போடுவதே விசேஷம்.

வெண் பொங்கல்: ஒரு கிண்ணம் அரிசியோடு அரைக்கிண்ணம் பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்துக் கொள்ளவும். வேகும்போது ஒரு கிண்ணம் பால் சேர்க்கலாம். வெந்து வரும்போது தேவையான உப்புச் சேர்த்து மஞ்சள் பொடியும் சேர்க்கவும். பின்னர் பக்கத்தில் இன்னொரு அடுப்பில் ஒரு கடாயில் இரண்டு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றிக் கொண்டு மிளகு இரண்டு தேக்கரண்டி, ஜீரகம் இரண்டு தேக்கரண்டி, இஞ்சி பொடியாக நறுக்கியது இரண்டு தேக்கரண்டி போட்டுக் கருகப்பிலையும் போட்டுப் பொரித்துப் பொங்கலில் ஊற்றவும். முந்திரிப்பருப்பு இருந்தால் அதையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம். சுவையான வெண்பொங்கல் தயார். 

கதம்பச் சாதம்: அரிசியையும் பருப்பையும் நன்கு வேக வைத்துக் கொண்டு ஓரளவுக்குக் குழைந்து வரும்போது ஒரு கிண்ணம் புளியைக் கரைத்து எடுத்த சாறை வெந்து கொண்டிருக்கும் அரிசியில் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். இன்னொரு அடுப்பில் எல்லாக் காய்களையும் கொஞ்சம் வதக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். காய்கள் வெந்ததும் வெந்து கொண்டிருக்கும் சாதத்தில் சேர்த்துக் கிளறவும்.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அதில் மிளகாய் வற்றல், கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக் கொண்டு வறுத்த தேங்காய்த் துருவலோடு சேர்த்துப் பொடிக்கவும். தேவையான பொடியை வெந்து கொண்டிருக்கும் சாதத்தில் போட்டுக் கலக்கவும். பச்சை மொச்சை, மற்றும் பருப்புகள் கிடைத்தால் அவற்றைச் சாதம் வேகும்போது சேர்க்கலாம். கீரை வகைகளையும் சேர்க்கலாம். எல்லாம் சேர்த்து நன்கு கிளறிக் கீழே இறக்கி வைத்து நெய்யில் கடுகு, மிளகாய் வற்றல் ஒன்று, கருகப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொண்டு சாதத்தில் சேர்க்கவும். பிடித்தமானால் கொத்துமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். ஏதேனும் ஒரு தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.

வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டல்: கொண்டைக்கடலையை முதல் நாளே ஊற வைத்துவிட்டு மறுநாள் மாலை 3 மணி அளவில் நன்கு கழுவிக் குக்கரில் உப்புச் சேர்த்துக் குழைய வேக வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கருகப்பிலை சேர்த்துக் கொண்டைக்கடலையையும் போட்டுக் கிளறவும். மிளகாய் வற்றல்+கொத்துமல்லி விதைப் பொடி இருந்தால் அதையும் போட்டுத் தேங்காய்த் துருவலோடு சேர்த்துக் கிளறவும். சிலருக்குத் தேங்காய்ப் பல்லுப் பல்லாகப் போட்டால் பிடிக்கும். இது அவரவர் வழக்கப்படி செய்யவும். பின்னர் சுண்டலை அடுப்பிலிருந்து எடுத்து விநியோகம் செய்யலாம். 

புட்டுச் செய்யும் முறை

கால் கிலோ பச்சரிசி ஐ.ஆர். 20 எனில் நல்லது.

பாகு வெல்லம் கால் கிலோ

வேக வைத்த துவரம்பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன்.

உப்பு மொத்தமாக அரைத்தேக்கரண்டி

மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி

பிசைய வெந்நீர்

தேங்காய்த் துருவல் சின்னதாக ஒரு மூடி

முந்திரிப்பருப்பு ஒரு கைப்பிடி, ஏலக்காய்த் தூள் அரைத் தேக்கரண்டி

நெய் இரண்டு மேஜைக்கரண்டி, தேங்காய்த் துருவல் முந்திரிப்பருப்பு வறுக்க.

முதல் முறை: அரிசியைக் களைந்து ஊற வைத்துக் கொண்டு நீரை வடித்துவிட்டு வெறும் வாணலியில் சிவப்பாக வறுக்கவும். நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கொதிக்கவிடவும். அதிலேயே தேவையான உப்பையும், மஞ்சள் பொடியையும் சேர்க்கவும். இந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும். மாவைக் கையால் பிடித்தால் பிடிக்க வரவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும். நிதானமாய்ச் செய்து சுமார் இரண்டு மணி நேரம் இதை ஊற வைக்கவும்.

உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்து விட்டுப் பாகு காய்ச்சவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டுப் பார்த்தால் உருண்டையாக உருட்ட வரவேண்டும். உருட்டிப்போட்டால் “டங்”என்று சப்தம் வரும். இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்திருக்கும் மாவில் விட்டுக் கிளறவும். தேவையான பாகைச் சேர்த்ததும் மாவும் பாகும் நன்கு கலக்கும்படி கிளறவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, பொட்டுக்கடலை, தேங்காய் ஆகியவற்றைச் சிவக்க வறுத்து ஏலக்காய்த் தூளுடன் போட்டு நன்கு கலக்கவும்.

இன்னொரு முறை

அரிசியை நன்கு ஊற வைக்கவும். நீரை வடித்து விட்டு மிக்சி ஜாரில் போட்டு மாவாக்கவும். ஒரு மாவுச் சல்லடையில் சலித்தால் நைசான மாவு மட்டும் விழும். எல்லா மாவையும் சலித்து எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் நன்கு வாசனை வர வறுத்துக் கொள்ளவும். வெந்நீரைக் கொதிக்க வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு மாவில் கொஞ்சமாக விட்டுக் கலக்கவும். ஈர மாவு என்பதால் நீர் அதிகம் போனால் தளர்த்தியாகி விடும். சிறிது நேரம் மாவை வைத்து விட்டு ஓர் வெள்ளையான ஈரத்துணியில் மாவைப் பரப்பி இட்லித் தட்டில் துவரம்பருப்பு ஊற வைத்ததைக் கலந்து வைக்கவும். இட்லித்தட்டை மூடவும். மாவு வெந்துவிட்டதா எனப் பார்க்க ஒரு குச்சியால் கிளறினால் அதில் ஒட்டாமல் வரும். முன் சொன்ன மாதிரி உதிர்த்தால் உதிரும். பிடித்தால் பிடிக்கவும் வரும். பின்னர் மேலே சொன்ன மாதிரிப் பாகு வைத்துக் கொண்டு மாவில் விட்டுக் கலக்கவும். நெய்யில் வறுத்த சாமான்களைச் சேர்க்கவும். இந்தப் புட்டு முதலில் சொன்னதை விட மெதுவாக மிருதுவாக இருக்கும்.


17 comments:

  1. புட்டு செய்யும் முறை என்றுதானே எழுதணும்? பத்து நாட்கள் கழித்துச் செய்து பார்க்கிறேன்.

    உங்க பதிவு மிக உபயோகமானது.

    புட்டு உதிர் உதிரா வருவது வரை புரிந்துகொண்டேன். டங்கு பதப் பாகைக் கலக்கும்போது கொழகொழன்னு ஆயிடாதா?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, இங்கே ஒற்றெழுத்து வரும்னே நினைக்கிறேன். :))) டங்கு பாகு தான் சரியான பதம் . கொஞ்சம் போல் மாவில் விட்டுக் கலந்து பார்த்துவிட்டுப் பின்னர் மொத்த மாவிலும் கலக்கலாம். எடுத்த எடுப்பிலே மொத்தமாய்க் கலக்க வேண்டாம்.

      Delete
  2. வணக்கம் சகோதரி

    இன்றைய நவராத்திரி ஏழாம் நாள் பதிவாகிய கூஷ்மாண்டா தேவியை பற்றிய விளக்கங்களும் அற்புதம்.அன்னை உலகத்தில் உள்ள அனைவரின் நலன்களையும் பத்திரமாக காத்தருள வேண்டுகிறேன்.

    பிரசாதங்கள் செய்முறை விளக்கங்கள் நன்றாக உள்ளது. நவராத்திரி ஒவ்வொரு நாளும் அன்னைக்கு அன்புடன் செய்து வழங்கும் பிரசாதங்களை பற்றி நீங்கள் அழகுற கூறுவது ரசனையாக உள்ளது. நான் வருடந்தோறும் துர்காஷ்டமிக்கு தவறாமல் புட்டு செய்வேன். இந்த தடவை துர்காஷ்டமி சனிக்கிழமை வருகிறது. அம்பிகையை தினமும் தவறாது இந்த நவராத்திரி நாட்களில் ஆராதிப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி கமலா. நான் புட்டெல்லாம் பண்ணியே சில ஆண்டுகள் ஆகி விட்டன. அவர் சாப்பிடுவதில்லை. ஆதலால் இனிப்பே குறைவாகப் பண்ண வேண்டி இருக்கு! புட்டு ரொம்பப் பிடித்தது, ஆகையால் அவர் சாப்பிடுவதில்லை என்பதால் பண்ணுவதே இல்லை.

      Delete
  3. மிக ஆச்சர்யமான தகவல்கள். வெண்துகில்அணிந்த சரஸ்வதி தேவியை வணங்குவோம். மாமியார் காசி அல்வா செய்யச் சொல்வார். கொண்டக்கடலை சுண்டல்.. விசேஷமான நாட்கள் சிறக்க. அம்பிகை அருள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சரஸ்வதி ஆவாஹனம் அன்றும், சரஸ்வதி பூஜை அன்றும் கொண்டைக்கடலை தான் செய்வார்கள். அதுவும் கறுப்புக்கடலை! வடக்கே கூட அன்று கறுப்புக் கொண்டைக்கடலையை உப்புப் போட்டு வேக வைத்துத் தருவார்கள்.

      Delete
  4. கூஷ்மாண்டா தேவி சுக்கிரதிசையை அளித்து செல்வங்களையும் நலன்களையும் அருளட்டும்.

    ReplyDelete
    Replies
    1. சுக்ர தசை! திசை அல்ல! திசை/திக்கு!

      Delete
  5. நேற்றே இப்பதிவைக் கண்டேன் என்றாலும் இன்று தான் தரிசனம் பெற்றேன்..

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்..

    ReplyDelete
    Replies
    1. முடிஞ்சப்போ வாங்க துரை!ஒண்ணும் அவசரம் இல்லை.

      Delete
  6. அம்பிகையைக் கண்டேன். மனம் நிறைவு. கூஷ்மாண்டா..பூசணிக்காய் தொடர்பு அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  7. மஹாசரஸ்வதி உலகை காத்தருளட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  8. சென்ற வருடம் நீங்கள் போட்டிருந்த நவராத்திரி பதிவுகளையும் படித்திருக்கிறேன். இந்த வருடம் என்னிடம் நவராத்திரி பற்றி சுருக்கமாக வீடியோ பதிவு கேட்டார்கள். உங்களிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தேன். 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, உங்களுக்குத் தெரியாததா? ஆனாலும் உதவி கேட்டிருக்கலாமோ? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  9. நவராத்திரி தொடர்கிறேன்.

    ReplyDelete