இன்று காந்திக்கு மட்டுமில்லாமல் நேருவுக்குப் பின்னர் பிரதமராக இருந்த திரு லால்பஹாதூர் சாஸ்திரி அவர்களுக்கும் பிறந்த நாள். யாருமே நினைவு கூரவில்லை. அவரைப் பற்றிய பேச்சே யாரிடமும் காணமுடியவும் இல்லை. இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தத்துக்கு உழைத்தவர். மர்மமான முறையில் ரஷ்யாவின் தாஷ்கென்டில் உயிர் இழந்தவர். நேதாஜியின் மறைவைப் போல் இன்றளவும் இவர் மரணமும் ஓர் மர்மமாகவே நீடிக்கிறது.
இன்று பெருந்தலைவர் காமராஜர் உயிர் நீத்த நாள். இந்த நாளில் நாங்க புது தில்லி க்ரான்ட் ட்ரங்க் விரைவு வண்டியில் ராஜஸ்தான் செல்லவேண்டி ஆக்ராவிற்குப் பயணித்துக் கொண்டிருந்தோம். ரயிலில் கூட வந்த எவரோ வைத்திருந்த ட்ரான்சிஸ்டர் மூலம் கிடைத்த செய்தி மனதை வேதனைப் பட வைத்தது. சாப்பாடு சாப்பிட ஆரம்பித்திருந்த நேரம். இந்தச் செய்தியைக் கேட்டபின்னர் சாப்பிட மனம் வரலை. வருத்தமாக இருந்தது, நீண்ட நாட்கள் நீடித்த வருத்தம்.
***********************************************************************************
என் கணவரின் தங்கையும் என் இரண்டாவது நாத்தனாரின் இரண்டாவது பெண்ணுமான ஸ்ரீவித்யா வீரராகவன் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாகக் "கதை சொல்லி"யாக இருந்து வருகிறார். இதிஹாச, புராணங்களில் இருந்தும் பஞ்ச தந்திரக் கதைகளில் இருந்தும் தக்க நீதி போதனைக்கதைகளைத் தேர்ந்தெடுத்துச் சிறார்களுக்கு நம் கலாசாரம், இதிஹாசம் போன்றவற்றில் உள்ள நீதி, நேர்மை, உண்மை போன்றவற்றை எடுத்துக் காட்டிச் சொல்லி வருகிறார். இதற்காகச் சேரிகளுக்குக் கூடப் போய்ச் சொல்லுவதற்குத் தயங்கியதில்லை. அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என எல்லாப் பள்ளிகளின் சிறார்களுக்கும் இவரின் "ஸ்டோரி ட்ரெயின்" செல்லுகிறது. இதற்காக அம்பேரிக்காவில் கூடச் சென்று அங்குள்ள கதை சொல்லிகளைப் பற்றிக் கேட்டும், பழகியும், படித்தும் வந்தார். இவரின் தந்தை என் சித்தப்பா "அசோகமித்திரன்" அவர்களின் கூடப் பிறந்த தம்பியாவார்.
சென்னை, அடையார், கேந்திரிய வித்யாலயாவில் படித்த ஸ்ரீவித்யா தன் பட்டப்படிப்பை முடித்த பின்னர் Madras School of Social Works இல் சேர்ந்து பயிற்சியும் பட்டமும் பெற்றுச் சில காலம் டாடா கன்சல்டன்சியில் இருந்தபின்னர் திருமணம் ஆகிக் குழந்தை பிறந்த நிலையில் சமூக சேவையிலிருந்து ஒதுங்கி இருந்தார். இவர் பிள்ளைக்கு ஐந்து வயது ஆகும்போது அவனை ஒத்த குழந்தைகளுக்காக ஆரம்பித்த இவரின் பயணம் தொடர்ந்து நீடிக்கிறது. இப்போது பத்து வயது ஆகும் அவர் மகனும் படிப்பிலும், இசையிலும் திறமையுடன் விளங்குகிறான்.
இவரைப் பற்றி எதற்கு இத்தனை சொல்கிறேன் என்றால் கடந்த செப்டெம்பர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நம் பிரதமர் ஆற்றிய "மன் கி பாத்" பேச்சில் அவர் இந்தக் கதை சொல்லிகளையும் பெயர் சொல்லிக் குறிப்பிட்டுப் பாராட்டி உள்ளார். மற்ற இருவரையும் சொன்ன பிரதமர் சென்னையிலிருந்து ஓர் பெண்மணி ஸ்ரீவித்யா வீரராகவன் எனக் குறிப்பிட்டு எங்கள் நாத்தனார் பெண்ணையும் குறிப்பாகப் பாராட்டி அங்கீகாரம் செய்துள்ளார். இந்தச் செய்தி அன்றே உடனேயே தெரிந்து முகநூலிலும் இதைப் பற்றிப் போட்டுவிட்டேன். ஆனால் இங்கே கொஞ்சம் தாமதமாகச் சொல்லுகிறேன். ஶ்ரீவித்யா சின்ன வயதிலேயே ஆங்கிலக் கவிதைகள் எழுதுவதில் திறமை வாய்ந்தவர். அவருக்குப் பனிரண்டு வயதாய் இருக்கும்போது தந்தையை இழந்ததில் அவர் மேல் எழுதிய கவிதைகள் வெகுநாட்கள் வரை அடையார் கேந்திரியவித்யாலயாவின் நோட்டீஸ் போர்டில் தொகுக்கப்பட்டு விளங்கியது. வாய்ப்பாட்டு, வீணை ஆகியவற்றிலும் தேர்ந்த வித்யாவுக்குச் செல்லங்கள் எதாக இருந்தாலும் அவற்றின் மேல் அளவு கடந்த பிரியம். கொஞ்சம் கூடக் குரலை உயர்த்திப் பேசாத சுபாவம். அவருக்குப் பிரதமராக் கொடுக்கப்பட்ட இந்த கௌரவம் எல்லாவிதத்திலும் தகுதி வாய்ந்ததே ஆகும். மேலே கொடுத்துள்ள சுட்டியில் "தி ஹிந்து"வில் வெளிவந்த வித்யாவின் பேட்டியைப் பார்க்கலாம்.
தாய் மாமன், மாமி என்னும் முறையில் நாங்கள் இருவரும் வித்யாவின் குடும்பம் சீருடனும், சிறப்புடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
இந்த நாள் காந்திஜி பிறந்த நாள் மட்டுமல்ல - சாஸ்திரி அவர்களுடைய பிறந்த நாளும் - முகநூலில் சிலர் மட்டும் இதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். கூடவே காமராஜ் அவர்களின் மறைவு நாள்! இது குறித்தும் சில பதிவுகள் பார்த்தேன்.
ReplyDeleteஸ்ரீவித்யா வீரராகவன் அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நன்றி வெங்கட், தலைவர்கள் யாருமே சாஸ்திரிஜியின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியதாகத் தெரியவில்லை :(
Deleteஅன்பு கீதாமா, முக நூலில் சாஸ்திரிஜி பற்றி ஒவ்வொரு வருடமும்
ReplyDeleteபகிர்ந்து வருகிறேன்.
எளியவர்களின் தோழனாக இருந்தவர்.
அவர் திடீர் மரணம் அடைந்த அந்த நாள் இன்னும் நினைவில்
அவருக்காக ஆரம்பித்த திங்கள் கிழமை விரதம் வெகு நாட்கள் கடை
பிடித்தேன்.
காமராஜ் நம்மை விட்டுப் பிரிந்த தினமும்
மறக்கவில்லை.
நல்லவர்களை சுலபமாக இழந்துவிடுகிறோம்.
பிரதமர் மோதி ,பாராட்டிய தமிழ்ப் பெண் என்று
படித்தேன்.
உங்கள் உறவு என்று தெரியாது.
இன்னும் நல்ல பெயர் வாங்கி நல்ல தொண்டாற்ற
வேண்டும் இந்தக் குழந்தை . நல் வாழ்த்துகள் மா.
வாங்க வல்லி, முகநூலில் எந்த அடிப்படையில் என்னோட டைம்லனில் பதிவுகள் தெரிகின்றன எனத் தெரியவில்லை. நீங்க, ஸ்ரீராம், ரிஷபன் போன்றோரை நெருங்கியவர்கள் பட்டியலில் சேர்த்திருந்தும் உங்க பதிவுகள் எதுவும் எனக்கு வருவதில்லை. :( ஆகவே நான் பார்க்கவில்லை. என்றாலும் சிலர் குறிப்பிட்டிருந்ததை நானும் கவனித்தேன்.
Deleteவித்யா நாங்க அம்பத்தூரில் ராம்நகர் என்னும் பகுதியில் இருந்தப்போத் தான் பின்னால் இருந்த ஸ்டெட்ஃபோர்ட் மருத்துவமனையில் பிறந்தாள். நாங்க அப்போத் தான் செகந்திராபாதில் இருந்து சென்னை வந்திருந்தோம். அவள் பிறந்த தினம் இன்னமும் நினைவில் இருக்கிறது. அதுக்கப்புறம் அந்தமான் போயும் சென்னைக்கு வரும்போதெல்லாம் எங்களுடன் தான் தங்குவார்கள். அவள் ஒவ்வொரு வளர்ச்சியையும் நெருங்கி இருந்து பார்த்திருக்கேன்.
Delete//இருந்தப்போத் தான் பின்னால் இருந்த!// இருந்தப்போத் தான் வீட்டுக்குப் பின்னால் இருந்த
Deleteமகிழ்ச்சி எமது வாழ்த்துகளும் கூடி...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteலால் பஹதூர் சாஸ்திரியும் கர்மவீரர் காமராஜரும் என்றும் நினைவுகூரத் தக்கவர்கள்.
ReplyDeleteஸ்ரீவித்யா விஜயராகவன் அவர்களுக்குப் பாராட்டுகள்
எப்போதும் போல் பதிவை ஒழுங்காய்ப் படிக்காமல் ஸ்ரீவித்யா "விஜய"ராகவன் எனச் சொன்னதை வன்மையாய்க் கண்டிக்கிறேன். :)))))
Deleteவீரம் இருந்தால் அங்கு வெற்றிக்குத் (விஜயம்) தடையேது?
Deleteஅதானே! சமாளிப்ஸ்!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான பகிர்வு. உண்மைதான்.. அக்டோபர் இரண்டு காந்தி ஜெயந்தி என்ற விஷயத்தை மட்டும் முதலில் முக்கியத்துவம் தந்து நம் நினைவில் நிறுத்தி உள்ளோம். நீங்கள் இன்று சிறப்பான மனிதர்களை நினைவுபடுத்தி அவர்களைப் பற்றி குறிப்புகளும் தந்திருப்பது பதிவை சிறப்பிக்கச் செய்கிறது. பாராட்டுக்கள்.
உங்களது நாத்தனார் மகளைப் பற்றிய நல்ல செய்திகளை தந்தமைக்கும் அவர் நம் நாட்டு பிரதமரிடமிருந்து பாராட்டுரைகளை பெற்றதை, இந்த நன்னாளில் தெரிவித்தமைக்கும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு எங்களுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும். படிப்பிலும் இசையிலும் சிறந்து விளங்கும் அவர்கள் மகனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, பாராட்டுகளுக்கு நன்றி. சாஸ்திரி பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் படிக்கையில் படகில் செல்லக் காசு இல்லாமல் கங்கையில் நீந்திச் சென்று படித்தவர். சாஸ்திரங்களில் நிபுணத்துவம் பெற்றதால் சாஸ்திரி என்னும் பட்டம் பல்கலைக்கழகத்தால் பெற்றவர். எல்லோரும் நினைக்கும் வண்ணம் அவர் பிராமண சாஸ்திரி அல்ல. உடலால் குள்ளமானவர் என்றாலும் மனதால் உயர்ந்த மனிதர்.
Deleteஆமாம். கமலா, எங்கள் சுற்று வட்டாரங்களில் இப்போது வித்யாவைப் பற்றித் தான் பேச்சு. எல்லோருமே அதைத் தான் எழுதுகிறார்கள்.
Deleteலால் பகதூர் சாஸ்திரி அவர்களைப் பற்றி சிறந்த நினைவு கூரல்...
ReplyDeleteதன் குடும்பத்தை வறுமையில் விட்டுச் சென்றவர்...
இப்படையில் அமைச்சர்கள் இருந்தார்கள் என்பதே இந்தத் தலைமுறையினருக்கு ஆச்சர்யமாகும்..
பாடத்திட்டத்தில் லால் பகதூர் அவர்களைப் பற்றி இருக்கிறதா என்பதே சந்தேகம்...
வாங்க துரை, எனக்குத் தெரிந்த எந்தப் பாடத்திட்டத்திலும் சாஸ்திரிஜி அவர்களைப் பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. கொஞ்ச காலம் அவர் மகன் அனில் சாஸ்திரி பற்றிச் செய்திகள் வந்தன. பின்னர் அவர்கள் எல்லாம் இருக்கும் இடமே தெரியவில்லை. கடைசிவரை அவர் மனைவி லலிதா சாஸ்திரி கணவன் மரணத்திற்கான காரணம் தெரியாமல் வருந்தினார்.
Deleteஉங்க இரண்டு பேருக்கும் இந்திய வரலாறே தெரியலை. இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பாடுபட்டது நேருஜி. அவருடைய குரு மகாத்மா காந்தி (அவர் பதவிக்குப் போட்டி போட்டிருந்தால் அவர் பெயரே நமக்குத் தெரிந்திருக்காது). அதற்குப் பிறகு இந்தியாவை ஆண்டவர் நேருஜி. அவருக்குப் பின் இந்திரா மஹாத்மா காந்தி, ராஜீவ் மஹாத்மா காந்தி, சோனியா மகாத்மா காந்தி, ராகுல் மஹாத்மா காந்தி இவர்கள் இந்தியாவை ஆண்டனர். இவர்களை விட்டால் இந்திய அரசியல் சரித்திரத்தில் குறிப்பாகச் சொல்வதற்கு வேறு யாருமே இல்லை.
Deleteநெல்லைத் தமிழரே, தெரிந்தோ, தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ ஒருத்தர் மஹாத்மா காந்தி ராகுல் காந்தியின் கொள்ளுத்தாத்தா என முகநூலில்/ட்விட்டரில் எழுதி இருந்தார். தலையில் அடிச்சுக்காத குறை தான்! இதைப் படிக்கும் இன்றைய இளைய சமுதாயம் இதை உண்மை என நினைக்கும். ஏற்கெனவே கம்பராமாயணம் எழுதினது சேக்கிழார் என்றும் மணிமேகலை எழுதினது கீர்த்தனார் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
Deleteசாஸ்திரியின் மரண மர்மம் விடுவிக்கபபடவே இல்லை என்பார்கள். சாஸ்திரி போலவோ, காமராஜ் போலவோ அரசியல்வாதிகளை இந்து பார்க்க முடியுமா? இன்று அரசியல்வாதி என்றாலே அர்த்தம் வேறு என்னும் அளவுக்கு வந்து விட்டது.
ReplyDeleteமரண மர்மம் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா? பொதுவில் சொல்லப்படவில்லைனு நினைக்கிறேன். இன்றெல்லாம் அரசியல்வாதிகள் என்றாலே வேறே மாதிரி!
Deleteபிரதமாராலேயே பாராட்டப்பட்ட திருமதி ஸ்ரீவித்யா வீரராகவன் அவர்களுக்குப் பாராட்டுகள். நீங்கள் சொல்லி இருப்பதிலிருந்து அவர் திறமை புரிகிறது.
ReplyDeleteஉண்மை ஸ்ரீராம், ஆனால் பார்த்தால் வெகு சாதாரணமாக இருப்பாள்.
Deleteபாராட்டுகளும் வாழ்த்துகளும்...
ReplyDeleteநன்றி திரு தனபாலன்.
Deleteலால் பகதூர் சாஸ்திரி, காமராஜ் போன்ற எளிமையான, நேர்மையான தலைவர்கள் நம் நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்பது நினைத்துப் பார்க்கவே பெருமை தரக்கூடிய விஷயம். இனிமேல் அப்படிப்பட்ட தலைவர்கள் கிடைப்பார்களா? ஸ்ரீவித்யா வீரராகவன் பற்றி முகநூலில் நீங்கள் பகிர்ந்தித்திருந்ததை படித்தேன். அந்த நிகழ்ச்சியையும் பொதிகையில் பார்த்தேன்.
ReplyDeleteவாங்க பானுமதி, முகநூலில் நீங்க வித்யாவிற்கு வாழ்த்துச் சொன்னதும் நினைவில் இருக்கு! இன்னிக்கு அவள் அந்தமானின் செலுலர் சிறைச்சாலை போயிருக்கிறாள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளைத் திரட்டத்தான். இன்றைய குழந்தைகளுக்கு அவற்றைப் பற்றிய சரித்திர அறிவு என்பதே இல்லை அல்லவா! அதான்! அவள் குழந்தையாக இருந்தப்போ அந்தமானில் சுமார் 3,4 வருஷம் இருந்திருக்கிறாள். அங்கே கேந்திரிய வித்யாலயாவில் தான் ஒன்றாம் வகுப்புச் சேர்ந்தாள் என நினைவு.
Deleteபொதிகையில் சுப்பு ஆறுமுகத்தின் பேரன் காந்தி பற்றி பாடினார்.காந்திக்கு பிடித்த பாடல்களை பாடினார், அப்புறம் லால்பகதூர் சாஸ்திரி பற்றியும், காமராஜர் பற்றியும் பேசினார்கள்.
ReplyDeleteவஸந்த் தொலைக்காட்சியில் காமரஜர் பற்றி பேசினார்கள்.
ஸ்ரீவித்யா வீரராகவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். குழந்தைகளுக்கு இந்த மாதிரி அருமையான கதைச்சொல்லிகள் கிடைத்தால் அதிர்ஷ்டம்.