எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 25, 2020

விஜய தசமி:

 விஜய தசமி: பத்தாம் நாளான இன்று அம்பிகை ராஜராஜேஸ்வரியாக அலங்கரிக்கப்படுகிறாள். வெள்ளைப் பட்டாடை தரித்து வெண் தாமரையில் அமர்ந்திருக்கும் சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். மூன்று தேவியரும் ஒன்று சேர்ந்த விஜயா என்ற பெயரிலும் தேவி அலங்கரிக்கப்படுவாள். இன்றைய தினம் ஒன்பது நாட்கள் வழிபட்ட அனைத்துப் பெண் குழந்தைகளையும் அழைத்து அனைவருக்கும் வழிபாடு நடத்திப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றைக் கொடுக்கலாம். மஞ்சள் பொடி சேர்த்த வாசனை மலர்களைக் கோலத்தில் போட்டு அம்பிகையை அமர்ந்த திருக்கோலத்தில் அமர்த்தி அனைத்து வாசனை தரும் மலர்களாலும் அர்ச்சித்து, வெற்றித்துதிகள், மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம், லலிதா நவரத்ன மாலை, துர்கா சப்த சதீ ஆகிய ஸ்லோகங்களைச் சொல்லித் துதிக்கலாம். இன்றைய காலை நிவேதனத்தில் தயிர் சாதம் முக்கிய இடம் பெறும்.

விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கியஸ்வரூபிணியாகத் தோற்றமளிக்கும் அம்பிகை அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முஹூர்த்தத்திலேயே அம்பு போட்டு அசுரர்களை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தமாகவும் நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய முஹூர்த்தமாகவும் சொல்லப்படுகிறது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்ல நேரமே இன்றளவும் அம்பு போடுதல் என்னும் பெயரில் பத்தாம் நாளான விஜயதசமி அன்று ஒவ்வொரு வருடமும் எல்லாக் கோயில்களிலும் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி அனைவராலும் கொண்டாடப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதி தேவி, ஜின ஐஸ்வர்யா, ஜின வாணி, ஆகமஸ்வரூபி என அழைத்தால் பௌத்தர்களோ மஹா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணா தாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பௌத்தர்கள் சொல்லுவது உண்டு. சரஸ்வதி பூஜையன்று வழிபடும் புத்தகங்கள், இசைக்கருவிகள், ஆயுதங்களை விஜயதசமி அன்று எடுத்துப்பயன்படுத்துவது மிகவும் சிறப்பு. விஜய தசமி அன்று சின்னக் குழந்தைகளைப் பள்ளியிலே சேர்ப்பதும் உண்டு. ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப்பட்ட தரையில் நெல் பரப்பி, அதில் “ஹரி ஓம்” என எழுதுவதற்குக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ உதவக் குழந்தை எழுதிப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படும்.

ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞான சக்தி என்றெல்லாம் போற்றப்படும் சரஸ்வதியை சகல கலைகளுக்கும் அதிபதியான சாரதையாகவும் துதிப்பது உண்டு. ஆதி சங்கரர் சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்து சாரதையாகப் பிரதிஷ்டை செய்தார். அத்தோடு கூட ஸ்ரீசக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். மூன்று தேவிகளும் இவளே ஆவாள். கல்வி, ஞானம் தரும் சரஸ்வதி/சாரதை,  தனம் தரும் லக்ஷ்மியும் இவளே! வீரம் செறிந்த துர்கையும் இவளே! இவளைக் குறித்தே ஒவ்வொரு வருடமும் இந்த சாரதா நவராத்திரியைக் கொண்டாடுகிறோம்.

கொலு வைத்திருப்பவர்கள் இன்று இரவு அம்பிகைக்கு பால், பழம் வெற்றிலை பாக்குடன் நிவேதனம் செய்துவிட்டுப் பின்னர் ஆரத்தி எடுத்து முதல் படியில் அல்லது ஏதேனும் ஒருபடியில் உள்ள பொம்மையைப் படுக்க வைக்க வேண்டும். மறுநாள் செவ்வாய்க்கிழமையாக இருப்பதால் அன்றைய தினம் பொம்மைகளை எடுத்து வைக்கக் கூடாது. புதன்கிழமை எடுத்து வைக்கலாம்.


18 comments:

  1. விஜயதசமி வாழ்த்துகள்.

    கடைசியில் கிழமையை மாற்றி இருக்கலாமோ...

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம்,
      நாளை விஜயதசமி திங்கட்கிழமை வருவதால் மறுநாள் செவ்வாய்க்கிழமை பொம்மைகளை எடுத்து வைக்கக் கூடாது என்பதைத் தான் கடைசியில் சொல்லி இருக்கேன்.

      Delete
  2. எங்கள் கொலு வைத்திருந்தபோது, இவ்வாறாக பொம்மையை எடுத்து படுத்துவைத்த நினைவு வருகிறது.
    நவராத்திரி நாளின் பதிவுகளைத் தொடர்ந்து படித்து, பல செய்திகளை அறிந்தேன். மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படித்துச் சிறப்பித்தமைக்கு நன்றி முனைவர் ஐயா!

      Delete
  3. இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  4. அன்பின் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்...

    நலமே எங்கும் நிறையட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை. அம்பிகை அருளால் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீரட்டும்.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    இன்றைய விளக்கமும் நல்ல விளக்கம். பத்தாவது நாள் விஜயதசமியின் சிறப்புகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஒவ்வொரு கொலுவும் வைத்து முடித்து கொண்டாடி இந்த பத்தாவது நாள் பொம்மைகள் இரவு படுக்க வைத்து விட்டு நாமும் படுக்கச் செல்லும் போது அம்மா வீட்டிலிருந்த அந்த சிறுவயதிலிருந்தே ஒரு பிரிவு துயர் என்னை வாட்டும். இப்போதும் தங்கள் பகிர்வுகளை ஒன்பது நாட்களும், படித்து முடித்தப் பின் இந்தப் பத்தாவது நவராத்திரி நாளை படிக்கையில், அதே பிரிவு மனதில் வருகிறது. இனி வருடாவருடம் இந்த மாதிரி நவராத்திரி சிறப்புப் பதிவுகள் தொடரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நான் தொடர்ந்து ஒவ்வொரு வருட நவராத்திரிக்கும் போட்டு வருகிறேன். நீங்கள் இப்போது தான் வருவதால் தெரியவில்லை போலும்! உங்கள் மனம் இதில் ஆழ்ந்து லயித்துவிட்டதால் பிரிவுத் துயரும் உங்களை வருத்துகிறது. விரைவில் தீபாவளி வந்துவிடுவதால் எல்லாம் சரியாகிவிடும். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. விஜயதசமி பதிவு சிறப்பு.

    இந்த நவராத்திரிதான் யாரும் யார் வீட்டிற்கும் செல்லாத நவராத்திரியாக அமைந்துவிட்டதோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லைத்தமிழரே!

      Delete
  7. கீதாக்கா நான் ஆஜர். ஆனால் அவ்வப்போதுதான் வர இயலும். முடியும் போது எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறேன்!!

    இந்த வருஷமும் நவராத்திரி முடிஞ்சாச்சு வந்ததும் தெரியாமல் வந்து கட கட என்று போய்விட்டது போல இருக்கு. சென்னையில் தெரியவில்லை இந்த வருடம் நவராத்திரி ரவுன்ட்ஸ் இருந்ததா என்று. ஆனால் தி நகரில் கடைகளில் எல்லாம் கூட்டம் என்று மட்டும் தெரிய வந்தது.

    கொலு பொம்மை வழக்கம் போல சேல்ஸ் இல்லை என்றாலும் இப்போதும் சென்று வாங்கியவர்களும் உண்டு. தீபாவளி பர்ச்சேஸ் நடப்பதாகத் தெரிகிறது. கொரோனாதான் மக்களைக் கண்டு பயப்பட வேண்டும் போல!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, லேட்டா வந்தாலும் படிச்சுக் கருத்துச் சொன்னதுக்கு நன்றி. இந்த வருஷம் வெளியேயே போகாததால் கொலு பொம்மை எல்லாம் பார்க்கலை.

      Delete
  8. சிறப்பான பத்தாம் நாள் பற்றி நல்ல விளக்கம்.

    ReplyDelete
  9. விஜயதசமி பதிவு அருமை.மாயவரத்தில் பத்து நாளும் சிறப்பான அலங்காரங்களுடன் பார்ப்போம் விஜய தசமி அன்று எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் அருகில் தான் அம்மான் அம்பு போட வருவார்கள்.
    செவ்வாய்க்கிழமை எடுத்து வைக்க கூடாது என்றால் என் கணவர் விஜயதசமி அன்றே இரவு படுக்க வைத்து விட்டேம். பண்டிகை முடிந்து விட்டதாகத்தான் அர்த்தம் என்று செவ்வாய் எடுக்க வைத்து விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, நீங்கள் மாயவரத்தை நினைவு கூர்கிறாப்போல் நான் ஜாம்நகரை நவராத்திரி சமயம் நினைவு கூர்வேன். அங்கே நவராத்திரி பத்து நாட்களும் அருமையான சந்திப்புக்களுடன் இனிமையாகக் கழியும். அதைப் போல் அதன் பின்னர் கொண்டாடியது இல்லை. முன்னரும் இல்லை.

      Delete