படத்துக்கு நன்றி கூகிள் வாயிலாக விக்கி பீடியா
பர்வதராஜன் மகளாய்ப் பிறந்த தேவி பார்வதி என்றும் பர்வத ராஜகுமாரி எனவும் அழைக்கப்பட்டாள். அவள் ஈசனையே தன் கணவனாக அடைய விரும்பி கடும் தவம் இருந்தாள். ஈசன் அவள் முன் தோன்றி ஈசனைக் கணவனாக அடைவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை எனவும் இன்னமும் கடுமையான தவம் இயற்ற வேண்டும் என ஓர் கிழவன் வடிவில் வந்து சொல்ல அப்படியே ஊண், உறக்கம் துறந்து தேவி கடும் தவத்தில் ஈடுபடுகிறாள். அகில உலகையும் படைத்து, காத்து, அழிக்கும் வல்லமை பெற்ற பரப்பிரும்மம் ஆன தேவியே தவம் இருந்ததால் அவள் “பிரமசாரிணி” என அழைக்கப்பட்டாள்.
படத்துக்கு நன்றி கூகிள்
மாங்காட்டில் ஈசனை நினைத்து தவம் செய்த காமாட்சியும் இவள் வடிவே என்பார்கள். இவள் நவராத்திரி வியாழக்கிழமைக்கு உரிய தேவி ஆவாள். குரு பகவான், வியாழன் எனவும் அழைக்கப்படுவார் அல்லவா! அந்த குருவானவர் நாம் இவளை வழிபடுவதன் மூலம் அனைவருக்கும் ஞானம், கல்வி, அமைதியான நிலையான வாழ்க்கை கிட்டச் செய்வார். திரிபுர சம்ஹாரத்தின்போது ஈசனின் இடக்கால் கட்டை விரலால் வரையப்பட்ட அஷ்டவகைக் கோலத்திலிருந்து தோன்றியவளே “பிரமசாரிணி” ஆவாள். இன்றைய தினம் அம்பிகையை சாகம்பரியாகவும் வழிபடுவார்கள். கொலுவில் அம்பிகையை சாகம்பரியாக அலங்கரித்துக் காய், கனிகளால் அலங்கரிக்கலாம்.
இன்றைய தினம் ஏழு வயதுப் பெண் குழந்தையைச் சண்டிகா தேவியாக நினைத்து ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும். சர்ப்ப ராஜனை ஆசனமாய்க் கொண்ட சண்டிகாதேவி தூம்ரலோசனன் என்னும் அசுரனை வதம் செய்தாள் தன் கரங்களில் அக்ஷமாலை, கபாலம்,தாமரைப்பூ, தங்கக்கலசம் ஆகியவற்றை ஏந்திய வண்ணம் காட்சி தருவாள். ஆறாவது நாள் சஷ்டி தினமான இன்று அம்பிகையின் பல்வேறு நாமங்களை அரிசிமாவினால் அல்லது மஞ்சள் பொடி கலந்த கடலை மாவினால் கோலமாக வரைதல் நல்லது. அர்ச்சனைக்குப் பவளமல்லிப் பூக்கள் சிறந்தவை. எனினும் செம்பருத்தி மலர்களும் உகந்தவையே! ரோஜாப்பூக்களும் உகந்தவை. இன்றும் சிவந்த நிறமுள்ள ஆடைகளையே குழந்தைக்குக் கொடுக்கலாம். கல்கண்டு சாதம் நிவேதனம் பண்ணலாம். இயலவில்லை எனில் தேங்காய்ப் பால்ப் பாயசம், தேங்காய்ச் சாதம் எனத் தேங்காய் சேர்த்த உணவுகளைச் சமைத்துக் கொடுக்கலாம். பச்சைப்பயறு அல்லது பாசிப்பருப்பில் சுண்டல் பண்ணலாம்.
பச்சைப்பயறுச் சுண்டல்: பயறை நன்கு களைந்து அதில் கல் போன்றிருக்கும் பயறுகளைக் களைந்து அரித்துவிட்டு முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் 2,3 முறை கழுவி விட்டுப் பின்னர் ஓர் வாயகன்ற பாத்திரம் அல்லது கடாயில் வேக வைக்கவும். பாதி வெந்ததும் உப்புச் சேர்க்கவும். பின்னர் நீரை வடிகட்டி எடுத்துக் கொண்டு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டுக் கடுகு,பெருங்காயம், மிளகாய் வற்றல், கருகப்பிலை தாளித்து வெந்த பயறோடு தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கிளறவும்.
இனிப்புச் சுண்டல் எனில் பயறை ஒரு அரைத் தேக்கரண்டி உப்புப் போட்டு வேக வைத்து எடுத்துக் கொண்டு வடிகட்டி வைக்கவும். கடாயில் நெய்யை ஊற்றிக் கடுகு, மிளகாய் வற்றல் தாளித்துக் கொண்டு வெந்த பயறைக் கொட்டி வெல்லத்தூள் சேர்த்துத் தேங்காய்த் துருவலோடு கலந்து நன்கு கிளறவும். மி.வத்தல் போடுவதால் ஏலக்காய் தேவை இல்லை. ஏலக்காய் தேவை எனில் மிளகாய் வற்றல் தாளிக்க வேண்டாம்.
கல்கண்டு சாதம் ஒரு கிண்ணம் அரிசியோடு அரைக்கிண்ணம் பாசிப்பருப்பையும் சேர்த்து வறுத்துப் பாலில் குழைய வேக விட வேண்டும். இந்த அளவு அரிசிக்கு அரை லிட்டர் பாலாவது தேவைப்படும். குழைந்த சாதத்தில் கட்டிக்கல்கண்டைக் கால்கிலோ சேர்த்துக் கல்கண்டு சாதத்தோடு சேர்ந்து கெட்டிப்படும் வரை கிளற வேண்டும். பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்து ஏலக்காய், ஜாதிக்காயை நெய்யில் பொரித்துப் பொடித்துச் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களால் அலங்கரிக்க வேண்டும்.
தேங்காய்ப் பால்ப் பாயசம்: அரைக்கிண்ணம் அரிசியை நன்கு வறுத்துக் களைந்து கொண்டு மிக்சி ஜாரில் போட்டுக் குருணையாகப் பொடிக்க வேண்டும். ஒரு நடுத்தர அளவுத் தேங்காயை உடைத்துத் துருவிக் கொண்டுப் பால் எடுக்க வேண்டும். முதல் பாலைத் தனியாக வைத்து விட்டு இரண்டாம், மூன்றாம் பாலில் அரிசியை நன்கு குழைய வேக வைக்கவும். இந்த அளவுக்கு 200 கிராம் வெல்லத்தூள் தேவை. அரிசி குழைந்ததும் வெல்லத்தூளைச் சேர்த்துக் கொதிக்க விடவும். வெல்ல வாசனை போகக் கரைந்ததும் முதல் பாலைச் சேர்த்து ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைக்கவும். முதல் பாலைச் சேர்த்துக் கொதிக்க விட்டால் திரிந்து விடும். நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்து அத்துடன் தனியாக எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப் பால் பிழிந்த சக்கையையும் வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.
தேங்காய்ச் சாதம். இரண்டு கிண்ணம் சமைத்த சாதம். உதிர் உதிராக இருக்க வேண்டும். ஒரு நடுத்தர அளவுத் தேங்காயை உடைத்து ஒரு மூடியைத் துருவிக் கொள்ளவும். துருவல் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்துத் தேங்காய் எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி ஊற்றவும். கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை/முந்திரிப்பருப்பு (இரண்டில் ஏதேனும் ஒன்று) போட்டு ஒவ்வொன்றாகத் தாளித்துப் பருப்புச் சிவந்ததும் பச்சை மிளகாய் இரண்டு, கருகப்பிலை, பெருங்காயம் போட்டுத் தேங்காய்த் துருவலையும் அதில் போட்டுக் கிளறவும். சிவக்க வறுத்தால் பிடிக்குமெனில் சிவப்பாக வறுக்கவும். இல்லை எனில் போட்டு இரண்டு நிமிஷம் வறுத்த பின்னர் அடுப்பை அணைத்துவிடலாம். இதில் இரண்டு கிண்ணம் சமைத்த சாதத்தைச் சேர்த்துத் தேவையான உப்புடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு சாதம் உடையாமல் கிளறவும். சுவையான தேங்காய்ச் சாதம் தயார். சர்க்கரை சேர்ப்பதால் தேங்காயின் ருசியை எடுத்துக் காட்டும் என்பார்கள்.
ஆஹா. அருமையான பதிவு.
ReplyDeleteகண்முன் நடமாடும் அன்னையர்களின் வடிவங்கள் மனசுக்கு உற்சாகம்.
இந்த நைவேத்யங்களில் இரண்டையாவது செய்தால் நன்மை.
இங்கு சாயந்திர வேளைகளில் நாங்கள் ஒன்று கூடுவது
இறைவன் இறைவிகளைத் துதிக்க
நல் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
உங்கள் சுந்தரகாண்ட பாராயணமும்
அப்படியே எல்லோருக்கும் நன்மை கொடுக்கட்டும்.
இந்தப் பதிவுகள் கூட மின்னூலாக வரவேண்டும் என்பது என் ஆசை.
நன்றி மா.
வாங்க வல்லி, இந்தப் பதிவுகளை எடிட் செய்து மின்னூலாக வெளியிடணும்னு எனக்கும் ஆசை இருக்கு! மெதுவாப் பார்க்கணும். நன்றி பாராட்டுக்கு.
Deleteதேங்காய்ச் சாதம் சுவைத்தேன்.
ReplyDeleteதொடர்கிறேன் நன்றி.
நன்றி கில்லர்ஜி!
Deleteஆறாம் நாள் அலங்காரம், கோலம், பிரசாதம் என சிறப்பான பகிர்வு.
ReplyDeleteநன்றி மாதேவி
Deleteபிரம்மச்சாரிணி பர்வதராஜகுமாரி அகிலத்தைக் காக்க பிரார்த்தனைகள்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஆறாம் நாள் அம்பிகை விபரம் அறிந்து கொண்டேன். அன்னை பிரமசாரிணி அன்புடனே அகில உலகங்களையும் காக்கட்டும். இன்றைய பிரசாதங்களின் வகையும் அதன் செய்முறை விளக்கங்களும் நன்றாக உள்ளது. அழகான விபரங்களுடன் அருமையான பதிவுகளை இந்த நவராத்திரி நாட்களில், தரும் உங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். விடுபட்ட 4,5 பதிவுகளையும் அன்றே படித்து விட்டேன் ஆனால், கருத்தினை இடத்தான் நேரம் இல்லாமல் நகர்கிறது. விரைவில் அதையும் மற்றொரு முறை படித்து கருத்திடுகிறேன். நானும் காலை, மாலை எனக்குத் தெரிந்த ஸ்லோகங்களுடன், அம்மனை வழிபட்டு வருவதால், சமையல் மற்ற வேலைகளுடன் நேரம் சரியாக போகிறது. வேறு ஒன்றுமில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, நான்கு, ஐந்து பதிவுகளில் உங்கள் கருத்துகள் இல்லையேனு நினைச்சேன். பரவாயில்லை, மற்ற வேலைகளை முடித்துக் கொண்டே வாருங்கள்.
Deleteவணக்கம் சகோதரி
Deleteநான் இந்த நவராத்திரி பதிவுகளில், நான்காவது, ஐந்தாவது பதிவுகளுக்கு மட்டுந்தான் வரவில்லை. நான் போட்ட கருத்தில். விடுபட்ட 4,5 பதிவுகளில் என தவறாக குறிப்பிட்டு விட்டேன். நல்லவேளை..! நாலுக்கும், ஐந்துக்கும் நடுவில் கமா போட்டிருக்கிறேன்.. இல்லாவிடில் அது இணைந்து 45ஆகி இருக்கும். ஹா.ஹா.ஹா. வேலைகள் என்றும் இருக்கிறதுதான். இப்போது நவராத்திரி நாட்களில் கொஞ்சம் அதிகமாக உள்ளது அவ்வளவுதான். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹாஹாஹா, நானும் நான்காம், ஐந்தாம் நாளுக்கான பதிவுகளைத் தான் சொன்னேன். ஆனால் அதை எழுதுகையில் நான்கைந்துனு எழுதிட்டேன். இஃகி,இஃகி,இஃகி! :)))) உங்களுக்கு முடிஞ்சப்போ வாங்க.
Deleteஆறாம் நாள் வந்தேன். அம்பிகையைக் கண்டேன். மகிழ்ந்தேன். மலைமகள் என்றுகூட கூறப்படுகிறார் என நினைக்கிறேன்.
ReplyDeleteவாருங்கள் முனைவர் ஐயா! ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன? அதே போல் அம்பிகையையும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.
Delete