எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 20, 2020

நவராத்திரி ஐந்தாம் நாள்:




படத்துக்கு நன்றி விக்கி சோர்ஸ்

காத்யாயினி! காத்யாயன மஹாமுனிவர் உலகாளும் அம்பிகையே தனக்கு மகளாய்ப் பிறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அவர் எண்ணம் ஈடேறும்படி அன்னை இவருக்கு மகளாய்ப் பூவுலகில் பிறந்தாள். காத்யாயன மஹாமுனிவரின் மகள் என்பதால் காத்யாயினி என்னும் பெயரைப் பெற்றாள். கோகுலத்து கோபியர் கண்ணனை அடைய இருந்த விரதமான பாவை நோன்புக்கு இவளே தேவி ஆவாள். இவளை நினைத்தே அவர்கள் விரதம் இருந்து நோன்பு நூற்றார்கள். கன்னியர் மனம் மகிழும்படியான கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அருளும் இவளுக்கான ஸ்லோகம் மிகவும் பிரபலமானது. பெண்கள் தினம் இதைச் சொல்லுவதால் நல்ல கணவன் கிடைப்பான் எனவும் கிடைத்த கணவனுடன் நல்வாழ்வு வாழ வழி செய்யும் என்றும் கூறுவார்கள். அந்த ஸ்லோகம்:

காத்யாயினி மஹா மாயே மஹா யோகிந் யதீஸ்வரி

நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ!

என்பதாகும். இந்த ஸ்லோகத்தை தினம் தினம் முழு மனதுடன் தேவியை நினைத்துச் சொல்லும் பெண்களுக்கு நல்ல கணவன் கிட்டுவான் என்பதில் சந்தேகமே இல்லை.  நவராத்திரி புதன்கிழமைக்கான இந்த தேவியை வழிபடுவதன் மூலம் புத்தியும், ஞானமும் கிட்டுவதோடு கல்வி, கேள்விகளில் சிறந்தும் விளங்குவார்கள். திருமணப் பேறும் அளிப்பாள் இந்த தேவி. பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்துத் தாளம் கொட்ட ஈசன் ஆடிய தாண்டவம் முனி தாண்டவம் எனப்படும். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணிலே இருந்து தோன்றியவளே காத்யாயினி. இன்றைய தினம் மஹாலக்ஷ்மி அஷ்டகம், அல்லது ஷோடசி துதிகளால் அம்பிகையை வணங்கலாம். 



இன்றைய தினம் அம்பிகையை துர்கையாக அலங்கரிக்கலாம். இன்றைய தினத்துக்கான தேவி “காளிகா” ஆறு வயதுக்குட்பட்ட பெண் குழந்தையை “காளிகா” வாகப் பாவித்து வழிபடுதல் நன்று. குழந்தைக்குப் பிடித்தமாதிரி  சிவந்த நிறமுள்ள ஆடைகளாகக் கொடுக்கலாம். இன்றும் சிவந்த மலர்களாலேயே அர்ச்சிக்க வேண்டும். எனினும் செந்தாமரைப்பூக்கள், செவ்வரளிப் பூ விசேஷமானது. ஒரு சிலர் அம்பிகையை வைஷ்ணவியாகவும் பாவித்து சங்கு, சக்கரத்துடன் அலங்கரித்து வழிபடுவார்கள். கடலை மாவில் மஞ்சள் பொடி கலந்த மயில் அல்லது பறவைகள் கோலம் அல்லது பாவைகள் கோலமாகப் போடலாம். 

பால் சாதம் விசேஷமானது. நிவேதனம் பண்ணலாம். சர்க்கரைப் பொங்கலும் ஏற்றது. குழைய வடித்த சாதத்தில் சுண்டக்காய்ச்சிய பாலை விட்டுக் கலந்து ஏலப்பொடி, முந்திரிப்பருப்பு நெய்யில் வறுத்தது சேர்த்துக் கலந்து ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரம் சேர்த்து நிவேதனம் பண்ணிக் குழந்தைக்குக் கொடுக்கலாம். 

கடலைப்பருப்புச் சுண்டல் இன்று பெரும்பாலும் கடலைப்பருப்புச் சுண்டலே விசேஷம். கடலைப்பருப்பைக் காலையிலோ அல்லது மத்தியானம் பனிரண்டு மணி அளவிலோ கழுவி ஊற வைக்கவும். சுமார் 3 மணி சுமாருக்கு வாயகன்ற பாத்திரம் அல்லது கடாயில் கடலைப்பருப்பை வேக வைக்கவும். அரை வேக்காட்டில் உப்புச் சேர்க்கவும். கடலைப்பருப்பு நன்கு நசுங்கியதும் அடுப்பை அணைத்துச் சிறிது நேரம் சூட்டோடு வைத்திருந்து பின்னர் வடிகட்டவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காய்த் தூள், பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்த்துத் தாளித்துக் கடலைப்பருப்பைக் கொட்டிக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்க்கவும். காரம் வேண்டுமெனில் பச்சை மிளகாய் அதிகம் சேர்க்கலாம். அல்லது 3,4 பச்சை மிளகாய் தாளித்துவிட்டுக் கடலைப்பருப்பைக் கொட்டிக் கிளறுகையில் இரண்டு தேக்கரண்டி சாம்பார்ப் பொடியைச் சேர்க்கலாம். காரம் அவரவர் விருப்பம்/வசதிப்படி சேர்க்கவும். கட்டாயமாய்ச் சர்க்கரையும் சேர்த்துத் தேங்காய்த் துருவலோடு கிளறவும். இருந்தால் பச்சைக் கொத்துமல்லி போட்டுக் கலந்து விநியோகிக்கலாம். நவராத்திரி இல்லாத நாட்களில் இந்தச் சுண்டலோடு பச்சைக் கொத்துமல்லி, வெங்காயம் பொடியாக நறுக்கியது, துருவிய காரட், புதினா இலைகள் பொடியாக நறுக்கியது சேர்த்துக் கிளறிச் சாப்பிடலாம். இதோடு மிக்சர், ஓமப்பொடி கலந்தும் சாட் மாதிரிச் சாப்பிடலாம்.


Cooking for Youngsters  என்னுடைய இந்த ஆங்கிலத்தில் சமையல் குறிப்புகள் எழுதப்பட்ட மின்னூல் கின்டிலில் இன்று மதியம் பனிரண்டு மணியில் இருந்து அக்டோபர் 25 ஞாயிறன்று மதியம் 12-29 வரை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விரும்பியர் தரவிறக்கலாம்.


For America  Those who lived in America can go to this link and can download the book for free from today 20-10-2020 till 25-10-2020 Sunday Timings from today noon to Sunday noon, Thank You.


14 comments:

  1. அதற்குள் ஐந்தாவது நாள்!  

    இப்போது நல்ல கணவன்கள் நிறைய இருக்கிறார்கள்.  பெண்ணைத்தான் காணோம்.  யுவன் நோன்பு ஏதும் உண்டா?!!

    ReplyDelete
    Replies
    1. பிரமச்சாரிகளுக்குனு இருக்கு ஸ்ரீராம், சங்கல்பம் செய்து கொண்டு சொல்ல வேண்டும். வேணுமா?

      Delete
    2. கொடுங்க. சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

      Delete
    3. அனுப்பிட்டேன்.

      Delete
    4. கிடைத்தது. நன்றி.

      Delete
  2. நவராத்திரி விடயங்கள் அறிந்து வருகிறேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  3. நானும் ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அல்லிராணி!

      Delete
  4. ஐந்தாம் நாள் முக்கியத்துவம் அறிந்தோம்.

    ReplyDelete
  5. நேற்று வரமுடியவில்லை. இன்று வந்தேன் அம்பிகையைக் கண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. முடிஞ்சப்போ வாங்க முனைவர் ஐயா. எனக்கும் உடனுக்குடன் பதில் சொல்ல முடியலை.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    நவராத்திரி ஐந்தாம் நாள் தேவியை பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். காத்யாயிணி தேவி உலக மக்களை காத்தருளட்டும். இன்றைய பூஜைகள் பற்றிய விபரமும், அம்மனுக்கு பிடித்தமான பிராசாதங்களும் பற்றியும்,அறிந்து கொண்டேன். நவராத்திரி அம்மன் மகிமைகள் குறித்து நன்றாக சொல்லியுள்ளீர்கள். ஒவ்வொரு பதிவிலும், படங்களும் நன்றாக உள்ளன. தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete